அறிமுகம்

(pic courtesy: Manisha Raju) (poster courtesy: sivaraj, Thannaram noolveli)

1.

சங்ககாலம் முதல் இன்றைய காலகட்டம் வரையில் பெண்களால் எழுதப்பட்ட, எழுதப்படும் படைப்புகளுக்கான ரசனை, விமர்சனக் கட்டுரைகள் முதன்மையாக வெளிவரும் இதழாக நீலி மின்னிதழ் அமையப்பெறும். சங்ககாலம், சங்கம்மருவிய காலம், பக்தி இலக்கிய காலம், நவீன காலம் (விடுதலைக்கு முன், பின்) என காலகட்டங்களாகப் பிரித்து அதில் எழுதப்பட்ட பெண் படைப்புகளைப் பற்றிய ஒட்டுமொத்த சித்திரமும், ஒவ்வொரு பெண் படைப்பாளரின் ஒட்டுமொத்த படைப்புகள், தனித்தனிப் படைப்புகள் வாரியாக ரசனை, விமர்சனக் கட்டுரைகளையும் எழுதும் தளமாக நீலி அமையும்.

இன்றைக்கு நவீனச்சூழலில் எழுத வரும் பெண்களுக்கு ஒட்டுமொத்த இலக்கியத்தில் தங்கள் இடம் என்பதைத் தாண்டி சங்க காலத்திலிருந்து தற்போது வரை வந்த நிரையின் தொடர்ச்சியே நாம் என்ற பிரக்ஞை வேண்டும். இதுவரை என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது இனி எழுத வேண்டிய களங்களை அவர்கள் முன் திறந்து வைக்கும். கலை என்பது அப்படி தொடர்ச்சியைக் கண்டறிந்து எழுதுவதல்ல என்பதும் ஒரு தரப்பே. ஆனால் இவ்வாறு தொகுப்பது பெண் படைப்புகள் பற்றிய விமர்சனங்களை மேலும் செறிவாக்க உதவும். அதற்கு “நீலி” மின்னிதழ் பயன்படும்.

நீலி இதழ் காலாண்டு இதழாக அமையும். நண்பர்கள் இணைந்து இந்த தொகுக்கும் பணியை செய்கிறோம். தமிழ் பெண் எழுத்தாளர்கள் என்று குறுக்கிவிடாமல், உலக இலக்கியத்தையும் இணைத்துக் கொள்ளலாம் என்று எண்ணியுள்ளோம். புனைவுகளைத் தாண்டியும், அபுனைவுகளில், ஆய்வுகளில் இயங்கும் பெண்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கலை, பண்பாடு, செயற்களம் என இயங்கும் பெண்கள் பற்றியும் அவர்களின் செயல்பாடுகள் பற்றியும் கட்டுரைகள் எழுத வேண்டும் என்பது திட்டம். தொடர் செயல்பாடுகள் வழியாக நீலி மின்னிதழ் தன் பாதையை இன்னும் செறிவாக்கிக் கொள்ளும். எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள் என இவ்விதழில் பங்களிக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த நோக்கத்திற்குட்பட்டு அனைவரையும் பங்களிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

2

“நீலி” மின்னிதழை துவங்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ்விக்கி பணியில் சக்ரவர்த்தினி இதழ் பற்றிய பதிவு எழுதிக் கொண்டிருந்தபோது உருவானது. 1905-லேயே பெண்களுக்கான இதழ் கொணரப்பட்டிருந்தது வியப்பைத் தந்தது. பாரதி ஒரு வருடத்திற்கு மேலாக அதன் ஆசிரியராக இருந்திருக்கிறார். 1905-களுக்கு முன் இருந்த இதழ்களில் பெரும்பாலும் பெண்களுக்கு மரபான ஒழுக்கநெறிகளை உபதேசிப்பது, நோன்புகள் மற்றும் மதச்செய்திகளைச் சொல்வது போன்றவையே பிரதானமாக இருந்தன. தேசியச் செய்திகளுக்கும், பெண்கல்வி, பெண்விடுதலை போன்றவற்றுக்கும் இடமளிக்கும் ஓர் இதழைத் தொடங்குவதே பாரதியின் நோக்கமாக இருந்தது.

பொதுவாக தமிழ் விக்கி பணியில் ஒரு பதிவுக்குப் பின் எழுத்தாளர் ஜெயமோகன் அதை செறிவாக்கும் விதம் எங்களுக்கு பெரும் அறிதலாக அமையும். அவர் சேர்க்கும் தகவல்கள், அளிக்கும் பல இணைய இணைப்புகள், படங்கள் என ஒரு பதிவு முழுமையாவதை பார்ப்பதென்பது ஆசிரியரின் அருகமைந்து கற்றுக் கொள்வது போன்றதுதான். அங்ஙனம் அவர் சக்ரவர்த்தினி இதழைத் தொடங்குவதற்கான காரணமாக பாரதி முதல் இதழில் கூறியிருந்ததை இணைத்திருந்தார்.

“அறிவின்மை என்னும் பெருங்கடலில் தத்தளிக்கும் நமது பதினாயிரக் கணக்கான பெண்களை கரைசேர்ப்பதற்கு சில பெருங்கப்பல்கள் இருந்தபோதிலும், யாம் கொண்டுவரும் சிற்றோடம் அவசியமில்லை என்று யாவரே கூறுவார்?” என்ற வரி அது. சக்ரவர்த்தினி இதழ் மூலமாக அசலாம்பிகை அம்மாள், அலர்மேல்மங்கை அம்மாள், ராஜலஷ்மி அம்மாள், ஆர்.எஸ். சுப்பலஷ்மி அம்மாள், கஜாம்பிகை போன்ற எழுத்தாளர்கள் உருவாகி வந்தார்கள். 1920 -களுக்குப் பிறகு பெண்களுக்கான இதழ் தவிரவும் பல எழுத்தாளர்கள், இதழாசிரியர்கள், பதிப்பாளர்கள் நன்கு எழுதும் பெண்களைக் கண்டறிந்து ஊக்குவித்து மிகப்பெரும் பெண்ணெழுத்து நிரையை விடுதலைக்கு முன்னான காலகட்டத்தில் உருவாக்கினார்கள். இன்றைய பின்நவீனத்துவ காலகட்டத்தில் பெண்களை எழுத ஊக்குவிக்க என தனி இதழ் அவசியமில்லை. மாறாக இதுவரை எழுதப்பட்ட பெண் படைப்புகளுக்கான ரசனை, விமர்சனக்கட்டுரைகளுக்காக ஒரு தனி இதழ் வேண்டுமென்று தோன்றியது. இலக்கியம், கலை, பண்பாடு, செயற்களம் என பல தளங்களில் இயங்கும் பெண்களையும் உள்ளடக்கி, அவர்களை, அவர்களின் செயல்களை அறிமுகப்படுத்தும் தளமாக ஒரு மின்னிதழ் கொணர வேண்டுமென்று தோன்றியது.

இதழுக்கான பெயரை சிந்தித்தபோது இயல்பாகவே “நீலி” என்ற சொல் வந்தமைந்தது. உண்மையில் நீலி, எழுத்தாளர் ஜெயமோகனின் நீலிதான். பெண்களுக்கான உச்ச சாத்தியமான வெளிப்பாடு ஒன்று இருக்குமானால் அது நீலியாகவே இருக்க முடியும். இந்த நீலி விஷ்ணுபுரத்தின் நீலி, கொற்றவையின் நீலி என்பதைத் தாண்டி ஒரு உணர்வு நிலை. படைப்புகள் வழியாக, செயற்களங்கள் வழியாக தங்களை வெளிப்படுத்திய அனைத்து பெண்களும் தங்கள் வாழ்நாளில் ஒரு கணமேனும் சுவைத்திருக்கக்கூடிய நிலை “நீலி”. அந்த மெய் நிலையை தொட்ட, தொட முயற்சிக்கும் பெண்களை தொகுக்கும் முயற்சியாக நீலி மின்னிதழ் அமையும்.

பெருஞ்செயல்கள் மேலும் பெருஞ்செயல்களையே உருவாக்குகின்றன. தன் அறுபதாண்டு காலத்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலான காலத்தை இலக்கியம், எழுத்துப்பணியில் பெருஞ்செயல்கள் ஆற்றிய ஆசிரியர் ஜெயமோகனுக்கு நீலி மின்னிதழை சமர்ப்பிக்கிறோம். நீலி மின்னிதழ் பற்றிய எண்ணத்தை ஜெ-விடம் பகிர்ந்தபோது அவர் சொன்ன வரிகள் எப்போதும் எம்மோடு துணைவரும்.

//மகத்தான முயற்சி. வாழ்க! எந்தப் பெருமுயற்சியும் ‘என்ன வந்தாலும் இதை நிகழ்த்துவோம்’ என்னும் உறுதிப்பாட்டில் இருந்தே வெற்றிநோக்கி செல்லமுடியும். எதிர்ப்புகள் வந்தாலும், அனைவருமே விலகிச் சென்றாலும், இது நிகழவேண்டும். எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் ஒரு வரி உண்டு – ‘நான் என்னிடம் எந்த சாக்குபோக்கையும் சொல்லிக்கொள்ள மாட்டேன்”. //

நீலி

தொடர்புக்கு: (neeliemagazine@gmail.com)

***

நீலி குழு: ஆனந்த் ஸ்ரீநிவாசன், சுசித்ரா, சைதன்யா, ரம்யா, நரேன், சுரேஷ் பிரதீப், பார்கவி, இசை, கமலதேவி, கடலூர் சீனு, சாம்ராஜ், ஜெயராம், விக்னேஷ் ஹரிஹரன், அழிசிஸ்ரீநி, நந்தகுமார், பாலாஜி ப்ரித்விராஜ், சக்திவேல்

போஸ்டர்கள்: தன்னறம் நூல்வெளி, சிவராஜ், பூவன்னா சந்திரசேகர், கீதா

தொழில்நுட்ப உதவி: சந்தோஷ், விஜயபாரதி

***