நிலவறை மனிதனின் அன்னை – ஜார்ஜ் சாண்ட்

-சைதன்யா

”ஜார்ஜ் சாண்ட்’டின் சொல்லில் சிக்கா உன்னத மெல்லுணர்வுகளால் தூண்டப்பட்ட வசனங்களை அவள் முன் ஒப்பித்தேன்” என்று தஸ்தயெவ்ஸ்கி அவரது நிலவறைக் குறிப்புகளில் (Notes from Underground) ஓர் இடத்தில் பகடியாக குறிப்பிடுகிறார். லிஸா என்னும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட ஏழைப்பெண்ணை தன் பெருந்தன்மையால், அறிவால் உயர்த்தி அரவணைப்பதாக கற்பனை செய்யும் நிலவறை மனிதனின் மனவோட்டங்களைப் பற்றி கூறும் இடத்தில் இது வருகிறது. தன் இளமைக்காலத்தில் ஜார்ஜ் சாண்ட் எழுதிய நாவல்களை விரும்பி படித்து, அவற்றுள் ஒன்றை மொழிபெயர்க்கவும் முயற்சி செய்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.

ஜார்ஜ் சாண்ட் (1804-1876)

19ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய இலக்கியத்தில் விக்டர் ஹியூகோவிற்கு (Victor Hugo) அடுத்தபடியாக தான் வாழும் காலத்திலேயே பிரபலமாக அறியப்பட்ட எழுத்தாளர் ஜார்ஜ் சாண்ட் (George Sand). அரோர் டூபின் (Amantine Lucile Aurore Dupin de Francueil) என்பது இவரது இயற்பெயர். பிரெஞ்சு மொழியில் பல நாவல்கள், தன்வரலாற்று குறிப்புகள், நாடகங்கள் எழுதியுள்ளார். ஆண் பெயரில் நாவல்கள் எழுதிய ஜார்ஜ் எலியட், ஷார்லட் பிராண்டே போன்ற 19ஆம் நூற்றாண்டின் பெண் எழுத்தாளர் நிரையில் இவரும் ஒருவர். பல பிற்கால எழுத்தாளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியவை இவரது நாவல்கள். 

அரோர் டூபினின் முப்பாட்டியான மேடம் டூபின் தன் காலகட்டத்தில் (பொ.யு 1706-1799) ஒரு பிரபலமான விருந்தோம்புநர்(saloniste) இருந்தவர். அவரது மாளிகை முக்கியமான கலைஞர்கள், தத்துவவாதிகள் கூடும் இடமாக இருந்துள்ளது. ரூஸோ (Rousseau), வோல்ட்டைர் (Voltaire) துவங்கிய பல்வேறு அறிஞர்களை உபசரித்தும், அவர்களுடன் விவாதித்தும் அக்காலத்தின் பிரெஞ்சு அறிவுச்செயல்பாட்டின் ஒரு மையப்புள்ளியாக அவர் திகழ்ந்தார். இப்படி ஐரோப்பாவில் மறுமலர்ச்சி காலம், அதாவது 16, 17 ஆம் நூற்றாண்டு, முதலே கலைஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களை பிரபு குடும்பத்தினர் உபசரித்து, போஷிக்கும் மரபு ஒன்று இருபதாம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது. அரோரின் பாட்டி இசையிலும் தத்துவத்திலும் ஆர்வம் கொண்டவர். அவருடனேயே அரோர் வளர்ந்தார். இளமையிலேயே இசை, இலக்கியம், தத்துவம், வரலாறு, ஆன்மீகம் முதலியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். பிரெஞ்சு போர்ப்படையில் வீரராக இருந்த அரோரின் தந்தை ’ரெவ்வரீஸ்’ என்று அவரது கவித்துவ எண்ணங்களை தொகுத்து ஒரு நூல் எழுதியுள்ளார். அவர் தாழ்ந்தகுடியில் பிறந்த ஸோஃபி என்னும் பெண்ணை மணந்தார். அரோரின் அன்னை தன் கணவரின் குடும்பத்தினரால், முக்கியமாக அவர் பாட்டியால், ஒதுக்கி வைக்கப்பட்டார். இதனால் அரோருக்கு விவரம் தெரிந்து அன்னையுடன் செல்ல முடிவு எடுக்கும் வரை தன் பாட்டியிடம் ஃப்ரான்சில் நோஹாண்ட் என்னும் கிராமத்தில் (Nohant) வளர்ந்தார். 

ஜார்ஜ் சாண்டின் முன்னோர்மரபு முழுக்க நிலையில்லா அறிவுத்தேடல்கொண்டவர்கள் (dilettante), மரபு எதிர்ப்பாளர்கள் என்று உணர்வெழுச்சியும் பிடிவாதமும் கொண்ட பல பாத்திரங்களை காணலாம். உயர்குடித் தொடர்ச்சியும், அதனுடனேயே வரும் முறைமை சார்ந்த இறுக்கமான வாழ்க்கைமுறையும் இவர்களை தொடர் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

ஜார்ஜ் சாண்டும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த இரு எல்லைகளுக்கும் சென்றிருக்கிறார். பதினைந்து வயதில் பாரீஸில் கன்னியர் நடத்திய பள்ளியில் படிக்க சென்ற அரோர் “கன்னியாஸ்திரி ஆவேன்” என்று முடிவெடுத்தார். உடனடியாக நோஹாண்டிற்கு மூட்டைக்கட்டி பாட்டியால் அழைத்துவரப்பட்டதால் அவ்வெண்ணம் அப்படியே மாய்ந்தது. சிறிது காலம் ஆண் போல உடையணிந்து, சுருட்டு பிடித்துக் கொண்டு ஒருவித எதிர் மனநிலையுடன் நோஹாண்டில் சுற்றினார். பாட்டியின் இறப்பாலும், அன்னையின் சிறுமையைக் கண்டு அவரிடம் ஏற்பட்ட சிறிய விலக்கத்தாலும் அரோர் எதோ ஒரு உலகியல் பிடிப்பை, பாதுகாப்பை தேடியிருக்கலாம். இதனால் மிகவும் இளமையிலேயே மணந்தார். கணவர் முன்னர் பழக்கமில்லாதவர் எனினும்  பிரபு குடும்பத்தவர் என்பதனால் நிகழ்ந்த திருமணம். விரைவிலேயே வெறுமையும் கசப்பும் சூழ அது முடிவுக்கு வந்தது. பின் தன் வாழ்நாள் முழுக்க ஒரு உன்னதக் காதலையே தேடி அலைந்திருக்கிறார் அரோர். 

1831இல் கணவரை பிரிந்து பாரீஸுக்கு சென்றார். அங்கு ஃபிகரோ(Figaro) என்னும் இதழில் எழுதிக்கிடைத்த வருமானத்தில் வாழ்ந்தார். அப்போது அவருடன் வாழ்ந்த ஜூல்ஸ் சாண்டோவுடன் இணைந்து நாவல்கள் எழுத துவங்கினார். ’ஜார்ஜ் சாண்ட்’ என்ற பெயரில் அவர் எழுதி வெளிவந்த முதல் நாவல் ‘இண்டியானா’ (Indiana). இதன் பின்புலம் அரோரின் காதலற்ற திருமணமாக அமைந்தது. 

ஜார்ஜ் சாண்ட் தன்னிடமிருந்து இரு அம்சங்களை எடுத்துக்கொண்டு இந்நாவலின் மைய கதாபாத்திரங்களான இண்டியானாவையும் அவள் சேடிப்பெண்ணான நௌனையும் உருவாக்கியுள்ளார். திருமணம், முறைமைகள், மரபு ஆகிய அமைப்புகளுக்குள் மாட்டிக்கொண்டு துளியளவு காதலுக்காக ஏங்குபவளாக இண்டியானாவும்; எந்தக் கட்டுப்பாடும் அற்று, மூர்க்கமான பற்றுடன் உணர்வுகளுக்கு தன்னை முழுவதுமாக விட்டுக்கொடுக்கும் பெண்ணாக நௌனும் வருகிறார்கள். ஜார்ஜ் சாண்டின் குடும்ப வரலாற்றில் பிரபுகுல கொடிவழியும் சாதாரண மக்களின் கொடிவழியும் கலந்தேயுள்ளது. இந்த இரு உலகங்களிலும் வாழ்ந்த அவரது அனுபவங்களின் தாக்கம் அவர் நாவல்களில் பல்வேறு இடங்களில் வெளிப்படுகிறது.

தஸ்தயெவ்ஸ்கி (1821-1881)

தஸ்தயெவ்ஸ்கி  கேலி செய்யும் மெல்லுணர்வுகள் அடங்கிய நூலாக மேலோட்ட வாசிப்பில் தென்படும் நாவல் இது. ரேய்மண்ட் என்ற ஒருவனை விரும்பியதால் இண்டியானாவிற்கும் நௌனிற்கும் இடையில் நிகழும் விரிசல் உணர்வெழுச்சி கொண்ட நாடகமாக காட்டப்படுகிறது. ஆனால் சாண்டின் எழுத்தின் இறுக்கமும் ஆழமும் வெளிப்படும் தருணங்கள் பல இதில் உள்ளன. உதாரணமாக, இருவரையுமே ரேய்மண்ட் ஏமாற்றியிருக்கிறான் என்று நௌனும் இண்டியானாவும் உணர்ந்ததன்பின் நிகழும் நிகழ்வுகளை கூறலாம். 

நாம் இண்டியானாவின் மனவோட்டத்தையே தொடர்கிறோம். 

”நேற்று இதே நேரத்தில் அவள் இதுவரை அறியாத அந்த போதை தரும் அன்பின் புதுமையான பரவசங்களுக்கு தன்னைக் கையளித்துவிட்டு மகிழ்ச்சியாக இருந்தாள். இருபத்தி நான்கு மணி நேரத்தில் என்னென்ன அலைக்கழிப்புகள்!”

நௌன் எங்கே என்று தெரியவில்லை என்பதையும் மெல்ல உணர்த்தியவாறே கதை செல்கிறது. அன்று இரவு முழுக்க அழுது அடுத்த நாள் காலை ஒரு எடையின்மையை உணர்கிறாள் இண்டியானா. வீட்டின் அருகில் செல்லும் ஓடைக்கரையில் சென்று அமர்கிறாள். முந்தைய நாளின் உணர்ச்சிப்பெருக்கு ஒரு மெல்லிய பனிமூட்டமாக எஞ்சி நிற்கிறது. நிலையற்ற கொடும் எதிர்காலத்திலிருந்து தப்பியதாக உணர்கிறாள். ஓடையின் நீரோட்டத்தை தொடர்ந்து செல்லும் அவள் பார்வை கரையொதுங்கியிருக்கும் நௌனின் சடலத்தை கண்டுகொள்கிறது. ஓடை மென்மையாக நௌனின் உடலை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. 

ஓடும் புரவியை மூர்க்கமாக பற்றிக்கொண்டு செல்லும் இண்டியானாவின் சுயத்தில் ஒன்று அமிழ்ந்து அணையும் தருணம் இது. ஜார்ஜ் சாண்டின் வாழ்விலும் அப்படிப்பட்ட ஒரு தருணம் பின்னால் வருகிறது. ஆனால் அதன் பின்னும் ரேய்மண்டை மன்னித்து ஏதேதோ உள நாடகங்களுக்குள் சென்றபின்புதான் வெளிவருகிறாள் இண்டியானா. அது அப்படி தான் நிகழும் என்றும் நம்மால் உணரமுடிகிறது. 

ஜார்ஜ் சாண்ட் வாழ்வில் உணர்வின் இரு உச்சங்களுக்கும் திரும்ப திரும்ப அடித்து செல்லப்பட்டு பின் அவற்றை கடந்த ஒரு நிதானத்தை எட்டும் இடத்தில் அவரது ‘ஃப்ரான்ஸ்வா என்னும் அனாதை’ (Francois the waif) நாவலை பொருத்தி பார்க்கலாம். ஃப்ரான்ஸ்வாவிற்கு மேடலைன் என்னும் கனிவு மிகுந்த அன்னை கதாப்பாத்திரத்துடனான உறவு தஸ்த்யெவ்ஸ்கியின் கரமஸோவ் சகோதரர்களில் அல்யோஷாவிற்கும் அவன் அன்னைக்குமான உறவை நினைவுபடுத்துவதாக உள்ளது. 

தன் வயதைக்கூட சரியாக சொல்ல தெரியாத சிறுவனான ஃப்ரான்ஸ்வாவை வீட்டிற்கு அழைத்து சென்று உணவு, உடை அளிக்கிறாள் மேடலைன். சொல்லாமலே அவளுக்கு உதவிகளை புரியும் ஃப்ரான்ஸ்வாவை பார்த்து “ஆனால் இவ்வளவு மக்காக இருக்கிறானே” என்று வருந்துகிறாள். ஒரு இடத்தில் மேடலைனின் குழந்தையை குஷிப்படுத்த எண்ணி தன்னை கிள்ள அனுமதிக்கும் ஃப்ரான்ஸ்வாவிடம் “இப்படி மற்றவர்க்காக வாழ ஆரம்பித்தால் அதற்கு முடிவே இருக்காது” என்று கூறுகிறாள் மேடலைன்.

அவளுடன் இருந்த நான்கு வருடங்களில் அதுவரை ஒரு சில வார்த்தைகளுக்கு மேல் பேசியே இராத ஃப்ரான்ஸ்வா “தீமையை இழைப்பதை விட அதை நானே அனுபவிக்கவே விரும்புகிறேன்” என்று கூறுகிறான். இந்த இடத்தில் மேடலைன் அனுபவிக்கும் குற்ற உணர்வை மிகவும் உணர்வெழுச்சியுடன் ஜார்ஜ் சாண்ட் வருணித்துள்ளார். எல்லாவற்றையும் உணர்ந்தும்கூட அவன் எந்த மறுப்பும் எதிர்ப்பும் இல்லாமல், அல்லது வெளிக்காட்ட தெரியாமல் இருந்திருக்கிறான் என்பது அவளை கலங்க வைக்கிறது. 

தன் நலனையே பெரிதாக பார்க்கும் ஃப்ரான்ஸ்வாவின் வளர்ப்புத் தாயான இஸபெல் ஒருபுறம், தற்செயலாக ஒரு மகத்தான உயிரை பாதுகாத்து, புரக்கும் பொறுப்பை பெற்று தன் முழு உயிராற்றலாலும் அதை நிறைவேற்றும் மேடலைன் மற்றொரு புறம் என ஜார்ஜ் சாண்ட் அவரது நாவல்களில் அன்னை எனும் இயற்கையின் ஒரு அம்சத்தை வெவ்வேறு நிலைகளில் காட்டியிருக்கிறார். 

அவர் காலகட்டத்தில் மிகவும் பரவலாக வாசிக்கப்பட்ட நாவலாசிரியராக இருந்திருக்கிறார். ஜார்ஜ் சாண்ட் என்ற பெயரில் எழுதியும்கூட பலருக்கும் அவர் பெண் என்பது தெரிந்திருந்தது. விமர்சகர்கள் பலரும் ஐயமில்லாமல் இது ஒரு பெண்ணின் குரல்தான் என்று கூறமுடியும் என்றனர். விக்டர் ஹியூகோ, பால்சாக் என்று அவர் காலத்தின் முக்கியமான எழுத்தாளர்களால் தீவிர இலக்கியவாதியாகவே ஜார்ஜ் சாண்ட் மதிக்கப்பட்டார். பெரும்பாலும் நோஹாண்ட் போன்ற ஒரு சிறு ஃப்ரெஞ்ச் கிராமத்தில் நடப்பதாக அவர் கதைகள் உள்ளன. அவற்றில் உள்ள நாடகீய வசனங்களும், மெல்லுணர்வுகளும் அக்காலத்தில் பெரும் வாசக அலையை உருவாக்கி இருக்கலாம். ஆனால் இப்போது அவர் எஞ்சி நிற்பது அவர் எழுத்தில் வரும் அந்த சிறிய உலகம் மற்றும் வழிதவறி செல்லும் கதாபாத்திரங்களை கருணையுடன் அணுகும் அவரது அவதானிப்புகள் ஆகியவற்றுக்காக. இதற்காகவே அன்று அவர் பல விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டார். 

இண்டியானாவின் மறுபதிப்பின் முன்னுரையில் ”எழுத்தாளன் உன்னத உணர்வுகளை ஒரு மெக்கானிக்கின் வழியாக கூறினால் அது முதலாளித்துவத்தின் மீதான தாக்குதல்; வழிதவறிப் போன ஒரு பெண் தன் பாவத்தை கடந்து சென்று மறுவாழ்வு பெற்றால் அது நல்லொழுக்கமுள்ள பெண்கள் மீதான தாக்குதல்; ஒரு வஞ்சகர் பிரபுக்களின் பட்டங்களை பெற்றால் அது உயர்குடி மீதான தாக்குதல்; ஓர் அட்டூழியக்காரச் சிப்பாய் கதையில் வந்தால் அது இராணுவத்திற்கு அவமானம்; ஒரு பெண் தன் கணவனால் துன்புறுத்தப்பட்டால் அது முறைகேடான காதலுக்கு ஆதரவான வாதம்” என்று விமர்சகர்களின் அக்காலத்தைய பார்வையை பற்றி ஜார்ஜ் சாண்ட் கூறுகிறார். ஆனால் எக்காலத்திலும் அவர் எழுத்தை நிறுத்தவில்லை. மிகவும் சரளமாக நாவல்களை எழுதி குவித்திருக்கிறார். அவரது எழுத்தின் ஆழமும், அழகியலும் தொடர்ந்து பெருகியபடியே இருந்தன.   ஜார்ஜ் சாண்டின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது வளர்ச்சி தாய்மையை கண்டடையும் நிலையை நோக்கி செல்கிறது. எழுத்து வழியாக ஐரோப்பிய இலக்கியத்தில் ஒரு ஆழ் படிமத்தின் வெவ்வேறு நிறங்களை எழுதி நிலைநாட்டிய அவர் தான் சந்தித்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் அனைவருக்கும் ஒரு அன்னையின் துணையாகவும் இருந்திருக்கிறார். புகழ்பெற்ற இசை அமைப்பாளர் ஷோஃபானிற்கு (Chopin) ரசிகையாக, துணைவியாக, பின் அவர் உடல்நிலை குன்றியபோது அன்னையாக இருந்தார். ஷோஃபானின் இறப்பு அவரை பெரிதாக பாதித்தது. 

குஸ்டவ் ஃப்லாபர்ட் (1821-1880)

ஃப்ரெஞ்சு இலக்கியத்தின் நிலவறை மனிதனாக இருந்தவர் ஃப்லாபர்ட் (Gustav Flaubert). நாட்கணக்கில் மனிதர்களை காணாமல், எவருடனும் பேசாமல், தனிமையும் கசப்பும் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். ஜார்ஜ் சாண்டை விட பதினேழு வயது இளையவர் ஃப்லாபர்ட். ஒரு அன்னையிடமென தொடர்ந்து ஜார்ஜ் சாண்டிற்கு கடிதங்கள் எழுதி தொடர்பில் இருந்தார். கடைசி வரை ஜார்ஜ் சாண்ட் அனுதாபத்துடன் நன்மை, கனிவு, அழகுணர்வு ஆகியவற்றை பற்றி எழுத; ஃப்லாபர்ட் அவற்றிற்கு கசப்பு, மனச்சோர்வு மற்றும் எதிர்மறை அவதானிப்புகளுடன், பகடிகளுடன் பதிலளிக்கிறார். இயற்கையான நன்மையின் மீது ஜார்ஜ் சாண்ட் மனம் அமைந்திருக்கிறது; உள்ளார்ந்த சீரழிவின் மீதுள்ளது ஃப்லாபர்டின் மனம். கடைசி வரை ஃப்லாபர்ட் அவநம்பிக்கையை கொட்டியபடியே இருந்தார். ஜார்ஜ் சாண்டின் பற்றையும் அனுதாபத்தையும் துளிக்கூட அவை குறைக்கவில்லை.

”டியர் மாஸ்டர்..” என்று சிறிது எள்ளலுடனே கடிதங்களை ஆரம்பிப்பார் ஃப்லாபர்ட். ஆனால் அவர் எழுத்தில் உண்மையான மதிப்பையும் அன்பையும் உணர முடியும். கடிதங்களில் முழுக்க ஜார்ஜ் சாண்டின் கதாப்பாத்திரங்களை கேலி செய்து ஃப்லாபர்ட் எழுதினார். 

“இண்டியானா உண்மையில் எப்படி இருப்பாள் என்பதை நான் என் மேடம் போவரியில் (Madame Bovary) ‘எம்மா’ கதாப்பாத்திரமாக உருவாக்கியுள்ளேன்” என்றார். இண்டியானாவின் மெல்லுணர்வுகள் அனைத்தையும் பகடியாக்கி உருவாக்கப்பட்ட கதாபாத்திரமாக அவரது ’எம்மா’ இருந்தாள். 

இதே மனநிலையை தஸ்த்யெவ்ஸ்கியின் நிலவறை மனிதனிலும் உணரலாம். தனக்குள் ஒடுங்கி சென்று ஒரு அன்னையின் முழு அணைப்பில் உலகை மறந்து குழைந்து அமர்ந்திருக்க விழையும் மனம் ஒன்று இவர்கள் எழுத்தில் தெரிகிறது. அந்த அணைப்பிலிருந்து ஒரு கட்டத்தில் தருக்கியெழும் அகம் எள்ளல்களால் கசப்புகளால் தன் ஆணவத்தை மீட்டெடுக்க முயல்கிறது.

எழுத்தாளர் சைதன்யா

இருபதாம் நூற்றாண்டில் உலகபோர்களின் பேரழிவும் அதன் பின் எழுந்த இருத்தலியல் சார்ந்த எழுத்தின் கசப்பும் ஐரோப்பாவை நிறைத்தது. இந்த வரலாற்றின் புகைபடிந்த ஆடி வழியாக பார்க்கும் நவீன வாசகனுக்கு ஃப்லாபர்ட்டின், தஸ்தயெவ்ஸ்கியின் இருண்ட எழுத்து உண்மைக்கு அருகில் வருவதாக தெரிகிறது. ஜார்ஜ் சாண்ட் போன்றவர்கள் அரிதாகவே வாசிக்கப்படுகிறார்கள்.

ஆனாலும் இந்த நிலவறை மனிதர்களின் எழுத்தின் உச்சத்தில் வெளிப்படும் அன்னை உருவின் முன் மண்டியிடாமல் அவர்களால் கடக்க முடிவதில்லை. 

*

சைதன்யா: தமிழ்விக்கி

கட்டுரை எதிர்வினை:

4 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *