என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும் – மேரி கொரெல்லி

(மாஸ்டர் கிறிஸ்டியன் நாவலை முன்வைத்து நந்தகுமார்)

மேரி கொரெல்லி

மாஸ்டர் கிறிஸ்டியன் நாவல், அதன் சமகாலத்திலும், இன்றும் கூடக் கிட்டத்தட்ட மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்டப் பிரதியோ என்று தோன்றுகிறது. அதன் பேசு பொருளின் அல்லாடல் சாசுவதமானது, எல்லா மதங்களுக்கும். கிறிஸ்து எனும் மனிதன், கிட்டத்தட்டத் தனக்கான ஒரு பிரத்யேகமான ஆன்மீகத்தை உருவாக்குகிறான். அவன் அதற்காகத் தன் சொந்த உடலைப் பலியாக்குகிறான். தனக்குத் தருவிக்கப்பட்டச் சொல்லை அவன் எளியவர்களின் முன்னே வைக்கிறான். அது மனிதனைப் பற்றிப் பேசுகிறது. மனிதனுக்கான சாத்தியத்தை. ஆனால் அது நேரடியாகத் தீயில் விழுதலைப் போலத்தான். அதனால் எல்லா குருவினைப் போலக் கிறுஸ்துவும், நிலைக்கப்பட்டு அதிகார மையத்தின் அனைத்துத் தேவைகளுக்கும் மத்தியில் சிலுவையில் தொங்கவிடப்பட்டான். அங்கு கிறுஸ்துவின் சதையும், ரத்தமும் சந்தைப் பொருளாகியது. ஆனால் அவனது சொல். அதனை மறுதலிக்கவோ, மாற்றவோ இயலவில்லை. ஏனெனில் அச்சொல்லே அவர்களின் அடித்தளம். ஒருவன் அச்சொல்லைப் பிடித்து, அதன் வழி நடக்க முயல்கையில், அனைத்து விதமானத் தந்திரங்களுடனும், பாசாங்குகளுடனும் இவ்வமைப்பு அவனை இரையாக்கும், இல்லையேல் தன் வழிப்படுத்தும். ஆனால் கிறுஸ்து திரும்ப வருகையில், அவனது சொந்தக் கூடாரத்தைப் பார்க்கையில், என்னவாகும். உண்மையில் கிறுஸ்து திரும்பவும் அவனது சொல்லிற்காகச் சரியான முறையில், எல்லா சட்டங்களுக்கும் உட்பட்டு தன் சொந்த மக்கள் முன்னிலையில் சிலுவையில் வதையுடன் அறையப்படுவான். ஆம். கிறுஸ்துவை அறிதல் என்பது கிட்டத்தட்ட நம்மை பலியாக்குதலே.

புனிதத்தை வரித்துக் கொள்ளும் பாவனைகளுக்கும், மறுதலிக்கவே முடியாத பக்திக்கும் இடையிலான மோதலில், அதிகாரத்தின் நிலைத்த தன்மை, சடங்குகள், ஆடம்பரங்கள், சௌகரியம், அதற்கு எதிரான அனைத்தையும் நசுக்கி அழித்தல் முதலானது எல்லாவிதமான மத அமைப்புகளுக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. கிறுஸ்து அதற்கு எதிரானக் கலகத்தினாலேயும், மற்றமை என்று ஒன்றே இல்லாத, அனைத்து உயிர்களும் ஒன்றே ஆன சகோதரத்துவத்தையும், பிரதிபலன் பாராத அன்பையும், உதவியையும் மட்டுமே தன் ஆன்மீகமாக வைத்தார். அது தன்னுடல் போல அனைத்தையும் அறிதல். தனக்கான துன்பம் என்பது அனைத்துக்குமானது. அதனாலேயே கிறுஸ்துவை ஏற்றுக் கொள்வது அத்தனை எளிதானதும், கடினமானதும் கூட. அது தன்னிலையை முற்றிலுமாக அழித்தலிலிருந்து தொடங்குகிறது.

கிறுஸ்துவைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளத் தலைப்படுதலில் உருவாகும் இடர்பாடுகளில், ஒரு பாதிரியார் எதிர்கொள்ளும் எதேச்சதிகாரத்தையும், அதற்கு பதிலாகத் திரும்பத் திரும்ப அவனது சொல்லை மட்டுமே ஒளியாகப் பிடித்துக் கொண்டு செல்கையில்,  முன்பாகச் செல்வது அவனது ஸ்தூல வடிவமாகத் தான் இருக்க முடியும் என்று நம்பிக்கை கொள்கிறேன். திடமாகவும், எந்த சலனமுமற்று வாடிகனில், போப்பின் முன் அவனது சொல் ஒலிக்கையில், எவராலும் தவிர்க்கவோ, தடுக்கவோ இயலாத தன்மை இயல்பாகவே உருவாகி விடுகிறது.

ஆம். அதே கலகம். அது ஒட்டு மொத்த சந்தைக் கூட்டத்திற்கும் எதிராகத் தன் ஆன்மாவைப் பணயம் வைத்தவனின் சொல். 

பாதிரியார் போன்பரேவின் கேள்வியும், அதன் பதிலுக்கானத் தேடலில் அவரின் கண்டடைதலின் மூலம், கிறுஸ்துவின், கிறுஸ்துவத்தின் சாரத்தைக் கொண்டு ஒட்டு மொத்தமாக மதம் எனும் அதிகாரத்திற்கு எழுப்பப்படும் கேள்வியாக உருமாறி விடுகிறது.

“மனிதகுமாரன் திரும்ப வருகையில், உண்மையையும், விசுவாசத்தையும் இம்மண்ணுலகில் கண்டறிவானா?”

உண்மையில் கடையேனிலும், கடையனாகத் தானே அவன் வருவான். எல்லா விதமான அதிகாரங்களுக்கும் எதிரிடையாக அன்பை மட்டுமே கையில் ஏந்திக் கொண்டு.

மாஸ்டர் கிறிஸ்டியன் நாவல்

“ஆம்! நான் இங்கிருக்கிறேன். பயக்காதே!”
“என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்!”

எனும் சொல்லைக் கொண்டு வழி நடந்த தூரங்களை நினைத்துக் கொள்கிறேன். உண்மையானப் பிரார்த்தனை, அற்புதங்களை நிகழ்த்தும் என்பதன் தீர்க்கமான மனித ரூபம். ஆனால் அக்கேள்விக்கு பதில் இல்லைதானே. விசுவாசத்துடன், தேவனின் சொல்லிற்குத் தன் வாழ்வை அர்ப்பணிக்க விரும்புபவர்கள் யாருளர். அதிகாரத்திற்கும், ஒவ்வாமையான சடங்குகளுக்கும் எதிராக, தூயப் பிரார்த்தனையையும், நன்றியுரைத்தலையும் அல்லவா, அவன் கை காட்டினான். அது ஒருவகையில் தற்கொலைத் தன்மை தான்.

இன்று தேவனின் சொற்களை நாம் தூக்கிக் கொண்டு திரிகிறோம். ஆனால் அச்சொற்கள் நம் வாழ்வின் பகுதியில் சிறிதளவேனும் எதிரொளிக்க நாம் விடுவதில்லை. தூயது எப்பொழுதுமே ஏற்க இயலாதது. ஒன்று அதனை மறுதலிக்க அல்லது அதன் பரிசுத்தத்தின் மேல் காறி உமிழக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் அதனை முறையாகச் சிலுவையில் ஏற்றி வதைத்துக் கொல்ல வேண்டும். வரலாற்றின் எல்லாப் பக்கங்களிலும் உண்மை அவ்வாறே அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், உண்மை அதற்கே உரிய வெளிப்பாட்டுத் தன்மை கொண்டது. உங்களால் அதனை மூடி மறைத்தல் என்பது வெகுகாலம் இயலாதது. நம் எல்லா விதமான பாவனைகளின் ஊடாக, அது வேண்டி நிற்கிறது. ஆனால் நாம் தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் பொய்களின் உலகில், திளைக்கவும், அதனை உண்மை என நம்பவும் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

 மறுபுறம் உடலின் ஸ்தூலத் தன்மை. அதன் வலி மற்றும் வதையை உணர்தல். வலியினாலேயே நாம் வாழ்வதாக உணர்கிறோம். வலி எனும் உணர்வே போகம், திளைப்பு, எனும் மாற்றீடை உருவாக்கி ஆசுவாசப்பட்டுப் பின் திரும்பவும் வலியினில் ஊறிக் கொண்டிருக்கிறது. மனித குமாரன் அதன் உச்சத்தை பரிசோதனைக்குட்படுத்தினான். வலி! வலி! என இந்த உடல் அலறுகையில் அவன் அதனை உள் வாங்கிக் கொண்டு, எதிர்ச்சொல் ஏதுமற்று விசுவாசத்தின், பிரார்த்தனையின், நம்பிக்கையின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தான்.

அதுவே அவனது உயிர்த்தெழுதலை சாத்தியமாக்கியதா? முழுக்க ஏற்க இன்னுமே என்னால் முடியவில்லை. ஒரு உண்மையானப் பிரார்த்தனை அற்புதங்களை நிகழ்த்துமா, ஆனால் அதன் நிறைவு? அதற்கான பலன் என்பது அந்த நிறைவே. முடமான சிறுவன் போன்பரேவின் அப்பிரார்த்தனையின் மூலமே எழுந்து நடந்திருப்பான். அதற்கான சாத்தியமுண்டு என நம்பத் துடிக்கிறது. இருந்தும் உண்மை, பரிசுத்தம், தூயது என்பது கைகளுக்கு அப்பால் தலைக்கு மேலே எங்கேயோ, அந்தர வெளியில் தொக்கிக் கொண்டிருக்கும் ஒன்றினைப் போலவே மனம் ஏற்கிறது. அது கைக்கு எட்டும் தொலைவில் இல்லை.

என்னால் அதனை எட்டிப் பிடிக்க முடியும் என்றும் நினைக்கத் தோன்றவில்லை. அதற்கு எதிராக, வன்மம், குற்ற உணர்வு, பழி தீர்த்தல், ஏமாற்றுதல், பாவனைகளின் உலகில் வாழ்தல் எனும் இயல்புத்தன்மையை பூசிக் கொள்வதே சரியானதாக இருக்கும் என்று நம்பத் துடிக்கிறது.

ஆம்! ஒருவேளை மனித குமாரனின் வருகை, நமக்கு ஒவ்வாதது. நிச்சயமாக அவன் திரும்பவும் வதைபட்டே சாக வேண்டியிருக்கும். இல்லையேல் பைத்தியக்கார விடுதியில் அடைத்து விடுவர். அதிகாரத்திற்கு எதிரான தூஷணைகள், தேவ தூஷணைகள். அது அவ்வாறே ஒடுக்கப்படும். இருந்தும் அவனது சொற்கள், அது அழிவற்றது இல்லையா. எந்த இடத்திலும் அதன் களங்கமற்றத் தன்மைக்கு மேலே நம்மால் ஒன்றுமே செய்ய இயல்வதில்லை.

ஏற்பதும் மறுப்பதும் தவிர்த்து, அதன் சாத்தியமான வழிப்பாதை ஒன்று காலங்காலமாக யாருமற்றுக் காத்துக் கிடக்கிறது. அவ்வழிப்பாதையின் ஒளிப்படலங்களின் கீற்றினை சற்றே பிரதிபலித்துக் காட்டுகையில், எந்தத் துணைகளுமற்ற, நாதியற்ற சமயங்களைப் பற்றிக் கொள்ள, சமாதனப் பட அந்த ஒரு வழிதான் மனிதனுக்கு சாத்தியம் என்று அது சொல்லிக் கொண்டே இருக்கிறது.

மனிதனுக்கு சாத்தியமான ஒரே வழியினை, நிதர்சனமாக வாழ்ந்து காட்டியதன் மூலம்,  நம்மைப் போலவே வலியையும், நிராகரிப்பையும், அவமானத்தையும், வதையையும், நாட்பட்ட புண்ணின் சீழ் போலப் படிந்திருக்கும் சுயம் பற்றியப் பரிதவிப்பையும், அனுபவித்து அதற்கு பதிலீடாக, அன்பை சகோதரத்துவத்தைத் தருகிறான். அதுவே அவனது சொல்லாக பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் நம் முன்னே அதே ஆதுரத்துடனும், கருணையுடனும் அழைத்து நிற்கிறது.

அதே நேரம், அத்தேவனின் சொல்லே, வியாபாரமும் அதிகாரமும். அதுவே செல்வமும். அவனது ஸ்தூல உடலே சந்தைக் கடை. அதை வைத்தே உன்னிடம் பேரம் நடக்கிறது. இதில் அன்பும், பரிசுத்தமும் விலைக்குக் கிடைக்கும். பணத்தின் மூலமே அளக்கப்படும் உலகில், மனிதர்கள் விட்டில் பூச்சிகளாகக் கவரப்படுவர். அது உன் வலியைக் கடவுளின் பெயரால் காசாக்குதல். அதற்குத் திட்டவட்டமான எல்லாக் கொள்கைகளும், செயற்பாடுகளும், தீர்க்கமான விதிகளும் உண்டு. எவர் ஒருவர் அதனைத் தாண்ட நினைக்கிறார்களோ, அவர்கள் அழித்தொழிக்கப்படுவர்.

“மாட்டுத்தொழுவத்தில் பிறந்தாலும்
மன்னரின் மணி முடிகள் அவன் காலடியில் கிடந்தது!
காரணம், அவனது அன்பும் எளிமையும்!”

என் அப்பாவின் டைரியில் எப்பொழுதுமே இருக்கும் முதற் சொல்.

ஆனால் அன்பும், எளிமையும் கூடப் பாவனைகளாக்கப்பட்டப் பின், அவனது சொல் என்னை எங்கு கொண்டு செல்லும் எனும் பதைபதைப்பு. அது மண்ணிற்கு வரச் சொல்கிறது. நாம் எளியவர்கள். இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் சிறிய புள்ளிகள். நம்மால் என்ன செய்து விட முடியும். ஒரு நோய்மை, ஒரு மரணம், ஒரு விபத்து, ஒரு இயற்கைச் சீற்றம் நம் அனைத்தையுமே ஒன்றில்லாமல் ஆக்கி விடுமே.

ஆனால், ஒரு பிரார்த்தனை. எளிமையும், உண்மையுமானப் பிரார்த்தனை அதனை நேராக்கும். நேராக்கா விட்டாலும் கூட, அப்பிரார்த்தனையின் பிடிமானத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நிறைவுடன் இருக்கலாம்.

ஒருவகையில் நம்பிக்கையின் மேல், நம்பிக்கை கொள்வதுதானே! உண்மையாக நம்புவதன் சாத்தியத்தையே நம் தேவகுமாரனும் நமக்கு உரைத்திருப்பான்.

மேரி கொரேல்லி, அந்நம்பிக்கையின் வேர்களைப் பற்றிக் கொள்ளும் திடத்தை அளிக்கிறார். அதே நேரம் அதன் எதிரிடை அதிகாரத்தின் அனைத்து பாவனைகளிலிருந்தும் நம்மை விடுவிக்கவும், தேவனின் சொல்லைப் பற்றிக் கொள்வதற்கான, அதன் படி வாழ்வை நடத்த முயல்வதன் இடர்பாடுகளை ஆராய்ந்து பார்க்கிறார்.

“என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்!”

நந்தகுமார்

கிறுஸ்துவுடன் அருகிருக்கையில், மொழி வழி பால்சக்கரியா, நிகாஸ் கசன்ட்சாக்கிஸ், தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் சென்றடைந்த பாதையில் மேரிகொரெல்லியும் அமர்ந்திருப்பதை அணுக்கமாக உணர்கிறேன்.

*

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *