காமத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் ஆலயம் – வாஸவேச்வரம்

(கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலை முன்வைத்து சுரேஷ் பிரதீப்)

கிருத்திகா

இலக்கியத்தில் பெண்மையப் பார்வை என்று ஒன்று இருக்க முடியுமா? அப்படி ஏதும் இருந்தால் அதன் இலக்கிய மதிப்பு என்னவாக இருக்கும்? பெண்கள் எழுதுவது எல்லாம் பெண்மையப் பார்வை கொண்ட படைப்புகள் என்று வரையறுத்துவிடலாமா? இலக்கியத்துடன் பெண்களை இணைத்து யோசிக்கும்போது இதுமாதிரி ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன. படைப்பிலக்கியத்தில் இக்கேள்விகளை – அதிலும் சமகாலத்தில் – எதிர்கொள்வது சற்று சிக்கலானதாக மாறி இருக்கிறது. பெண் தன்னிலை என்ற ஒன்று வெறுமனே உடல் சார்ந்ததா? இல்லை அதுவொரு உணர்வா? என்ற கேள்விகள் உடற்கூறியல் தளங்களில் இருந்து இலக்கியம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே பெண் எழுத்தாளர், பெண் மையப் படைப்பு போன்ற சொற்களைப் பயன்படுத்தும்போது பெண் என்பதை உயிரியல் அடையாளமாக அல்லாமல் சமூகவியல் அடையாளமாக கையாள வேண்டி இருக்கிறது. உயிரியல் ரீதியாக நாம் எப்போதும் ஆண் பெண் என்ற பிரக்ஞையுடன் இருப்பதில்லை. சிற்சில சமயங்களைத் தவிர மிகப் பெரும்பான்மையான நேரங்களில் நம்முடைய உடல் பற்றிய பிரக்ஞையை கட்டமைப்பது சமூகமாகவே இருக்கிறது. ஆடைக்குள் இருக்கும் வரை மட்டுமே நாம் ஆணாகவும் பெண்ணாகவும் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆண் பெண் என்றெல்லாம் நாம் பேசத் தொடங்கும்போது அதுவொரு சமுகவியல் அடையாளம் என்ற பிரக்ஞையுடன் பேசுவதே தற்கால விவாதங்களுக்கு சரியான முறைமையாக இருக்க முடியும். எப்படி நாம் ஒரு குறிப்பிட்ட அலுவலகச் சூழலில் புழங்கினால் நம்முடைய உடல்மொழியில் அந்த அலுவலகம் படிந்து விடுகிறதோ அதுபோலவே இந்த ஆண் பெண் போன்ற தன்னிலைகளும் வெகுநாட்களான ‘புழக்க தோஷத்தால்’ கட்டமைக்கப்பட்டு விடுகின்றன.

பெண் மையப் படைப்பு என்ற லேபிளுடன் வரக்கூடிய பெரும்பாலான படைப்புகளின் பிரச்சினை சமூக அடையாளத்தை இப்படைப்புகள் நிரந்தரமான அடையாளமாக கற்பிதம் செய்து கொண்டு இல்லாத நிரந்தரத்தை எதிர்ப்பதுதான். பெரும்பாலான பெண் மையப் படைப்புகளில் ஆண் வில்லனாக, குரூரமானவனாக, சுயநலம் மிகுந்தவனாக, ஆதிக்க விழைவு நிறைந்தவனாக சித்தரிக்கப்படுவதும் அல்லது அப்படிப்பட்டவனை எதிர்ப்பதாக புனைவுப்பெண் பாவனிப்பதும் இந்த அடிப்படை புரிதலின்மையால்தான். அப்படியெனில் ஆண் நல்லவனா என்ற கேள்வி எழலாம். நல்லவன் தீயவன் என்ற இருமையைக் கடந்து புனைவு வெளியைக் கட்டமைக்கும்போதே பாவனைகளற்ற ஒரு விவாதம் உருவாகி முடியும்.

வாஸவேச்வரம் நாவல்

கிருத்திகாவின் வாஸவேச்வரம் அப்படியான ஒரு படைப்பு.  மாண்டவர் என்ற ஒரு முனிவரின் மனைவியின் மீது இச்சை கொண்டதால் சாபம் பெற்ற இந்திரன் வாஸவேச்வரருக்கு பூஜை செய்து சாப விமோசனம் பெறுகிறான். வாஸவேச்வரர் கோவில் அமைந்த ஊர்தான் வாஸவேச்வரம். இது ஒரு கற்பனையான ஊர். அவ்வூரிலிருக்கும் சில பிராமணக் குடும்பங்கள் குறித்த சித்திரப்புதான் நாவல். நாவலின் தொடக்கத்தில் இந்தப் புராணக் கதை சொல்லப்படுகிறது. இக்கதை சொல்லப்படும் நாளும் அந்த நாளின் முடிவில் நிகழும் உடலுறவுகளும் தொடக்கத்திலேயே கிருத்திகா விவாதிக்க விரும்புவது எதை என்று தெளிவாக உணர்த்தி விடுகின்றன. உண்மையில் புராணக் கதையில் சொல்லப்படுவது காமத்தினால் விழைந்த துன்பம்.‌ ஆனால் அக்கதை அவ்வூர்க்காரர்களை கிளர்த்தி விடுகிறது. கதை சொல்லும் சுப்புக்குட்டி, சுப்பைய்யா, சந்திரசேகரய்யர், சுந்தா என ஒவ்வொரு ஆண்களின் சுபாவமும் அவர்கள் கொள்ளும் காமத்தின் வழியாகவே நம்மிடம் சொல்லப்படுகிறது. மற்றொரு முக்கிய பாத்திரமும் இளைஞனுமான பிச்சாண்டிக்கு சந்திரசேகரய்யரின் மனைவியின் மீது மோகமிருக்கிறது. அவனுடைய இயல்பும் புராணக் கதை சித்தரிப்பின் வழியாக மிகக் கச்சிதமாக சொல்லப்பட்டு விடுகிறது.

முதலிலேயே ஆணின் ‘பலவீனம்’ நாவலில் சொல்லப்பட்டு விடுகிறது. பிச்சாண்டிக்கு அது பிறன்மனை விழைவு என்றால் சந்திரசேகரய்யருக்கு ஆணவமாகவும் சுந்தாவுக்கு பேராசை கலந்த வெறியாகவும் சுப்பைய்யாவுக்கு வன்மமாகவும் அந்த பலவீனம் இருக்கிறது. இவர்கள் ஒவ்வொருவரும் பெண்களைக் கூடிப் பிரியும் அந்த இரவுக்குப் பிறகு காமம் நாவலில் பெரிதாக இடம்பெறுவதில்லை. ஆனால் காமத்துடன் இணைந்த இந்த ஆண்களின் குண இயல்புகள் அவர்களுடைய பிற செயல்களிலும் பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது. உதாரணத்துக்கு சுப்பைய்யா. அவனுக்கு தன் மனைவியின் உடல் மீது மோகம் இருக்கிறது. அவளை அடைய நினைக்கிறான். ஆனால் பயந்து தயங்குகிறான். சுப்பைய்யாவின் வாழ்க்கை சீரழிந்து போவதும் இந்த பயத்தாலும் தயக்கத்தாலும்தான்.

தமிழ்ச் சூழலுக்கு இந்த நாவலின் முக்கியமான பங்களிப்பு என்று நான் நினைப்பது எடுத்த எடுப்பிலேயே காமத்தைப் பேசிவிட்டு அதன்பிறகு அப்பாத்திரங்களின் குணத்தை விவரிக்கும் இந்த தன்மைதான். இன்று பல புனைவுகளில் இந்த தன்மை இயல்பாக இடம்பெற்றாலும் அக்காலத்தைய படைப்புகளை ஒப்பிடும்போது இது கவனப்படுத்தப்பட வேண்டிய அம்சமாக இருக்கிறது. மோகமுள்ளில் பாபுவை நோக்கி யமுனா ‘இதற்குத்தானா’ என்று கேட்பது ஒரு உச்ச தருணம். அந்த உச்சம் கவனமாக வார்க்கப்பட்ட ஆணவம் நிறைந்த பாபுவின் ஆளுமை உடைவாக சித்தரிக்கப்படுகிறது. அதனாலேயே பாபு தங்கத்துடனும் பிறகு யமுனாவுடனும் கூடும் இடங்கள் அவ்வளவு அழுத்தமாக சித்தரிக்கப்படுகின்றன. ’சம்ஸ்காரா’ நாவலில் பிரஸேணாச்சாரியார் கொள்ளும் பிறழ் காமமும் அத்தகைய ‘மதிப்பீட்டு வீழ்ச்சி’ தன்மையைக் கொண்டிருக்கின்றன. ஆனால் வாஸவேச்வரம் ஆணின் காமத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் மதிப்பீட்டினை கேள்விக்கு உட்படுத்துகிறது. காமத்தின் மீது கட்டப்பட்டுள்ள ஆணின் பிற குணங்களான உழைப்பு(சந்திரசேகரய்யர்), லட்சியம் (பிச்சாண்டி), அதிகார விருப்பு(சுந்தா) எல்லாமும் சற்று மங்கலடைந்தவை போல நாவலில் தெரிகின்றன. அதேநேரம் பெண் தன் உடலை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்வதையும் நாவல் சொல்லத் தவறவில்லை. கோமு வெல்லும் இடமும் அத்தகைய ஒன்று. அதேநேரம் தங்கம் சீட்டு விளையாடிவிட்டு சலிப்புடன் வீட்டுக்கு வரும் டாக்டர் கணவனை நோயாளியைப் பார்க்க வைப்பதற்காக தன் உடலைப் பயன்படுத்தி அனுப்பி வைக்கும் இடம் அறம் வெளிப்பாடு கொள்ளும் இடம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

நாவலில் குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சம் ஆண் பெண் மோதல்கள் பல தளங்களில் நிகழ்ந்தாலும் எங்குமே உடல் ரீதியான வன்முறை இல்லையென்பது. எழுதப்பட்ட காலத்தை வைத்துப் பார்க்கும் போது வன்முறை என்பது இயல்பான ஒன்றாக இருந்த காலமே அது. மாறாக கிருத்திகா இந்த நாவலில் சித்தரிக்கும் வன்முறை மிக நுணுக்கமானது. அது பெண்ணை அடக்கிப் புணர்வதன் வழியாக நிகழ்கிறது. சுப்புக்குட்டி காலாட்சேபம் நிகழ்த்திவிட்டு அவசர அவசரமாக ஒரு பாழடைந்த வீட்டுக்கு ஓடி பெண்ணை அவசர அவசரமாக கூடுவது, தங்கம் மறுக்க மறுக்க சுனந்தா அவசரப்படுவது போன்ற நேரடி நிலைகளில் இருந்து சந்திரசேகரய்யரின் மிக நுண்மையான சொல்வன்முறை வரை பல்வேறு மாறுபாடுகளை கிருத்திகா இந்த நாவலில் காட்டி இருக்கிறார். இந்த நாவலில் இடம்பெறும் உடலுறவுகள் எல்லாமே மெல்லிய அக விளக்கத்தை தரும்படியே ஏன் தோற்றம் கொள்கின்றன? ஏனெனில் இவ்வுறவுகள் எதிலுமே காதலே இல்லை. ஆண்களின் உடலில் தூண்டப்படும் வெறியாக மட்டுமே காமம் இருக்கிறது. நாவல் எழுதப்பட்ட காலத்தை வைத்துப் பார்க்கும் போது கிருத்திகாவின் இந்த அவதானிப்பு தான் மிகச் சிறப்பாக அந்த காலத்தை பிரதிபலிக்கிறது என்று சொல்ல முடியும்.

அதிலும் பெண்களின் பாத்திர வார்ப்புகளில் அவர் காட்டியிருக்கும் அக்கறையும் நுண்மையும் வியக்க வைக்கின்றன. தங்கத்தின் குடும்பத்தின் மீதான உயிரோட்டம் நிறைந்த அக்கறை, நகரத்தில் பிறந்து கிராமத்தில் மணமுடித்து வைக்கப்பட்டதால் ரோகியிணிடம் தோன்றும் இரட்டை நிலையால் ஒவ்வொரு முறை சந்திரசேகரய்யரிடம் அவள் தோற்று விழும் தன்மை என நாவல் அக ஆழங்களை மிக நெருங்கிப் போகிறது. ஆனால் சமூக சித்தரிப்பு என்று வரும்போது நாவல் பல இடங்களில் பலகீனமாகத் தெரிகிறது. உதாரணமாக பிச்சாண்டியால் திருவிழாவின் போது ஊரில் ஏற்படும் கலவரம். அக்கலவரம் ஒரு சினிமா காட்சியை கவனமில்லாமல் எழுதி வைத்தது போல இருக்கிறது. இந்த சமூக சித்தரிப்புகள் சார்ந்த அக்கறை இன்மையாலேயே நாவலில் வரும் அரசியல் கணக்குகளும் விளையாட்டுகளும் அக உணர்வுகளால் பின்னப்பட்ட மற்றொரு வலுவான உலகுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சோகையாகத் தெரிகின்றன. சுப்பைய்யாவின் பாத்திரமும் அவன் மெல்ல மெல்ல மனநலிவு கொள்வதும் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் எதிர் முனையில் சந்திரசேகரய்யர் இறந்தபிறகு நடக்கும் சம்பவங்களில் நாடகத்தனம் ஏறிவிடுகிறது.

சுரேஷ் பிரதீப்

இக்குறையை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நாவல் முன்வைத்துப் பேச முற்படும் விஷயங்கள் இயல்பிலேயே விவாதத்தன்மை கொண்டவையாக உள்ளன. பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் சொல்லத் தொடங்காமல் இயல்பான சித்தரிப்புகளின் மூலமாகவே இந்த நாவல் நம் அமைப்பில் உறைந்திருக்கும் அநீதியைத் தீண்டிவிடுகிறது. புராணத்தில் தொடங்கி புராணத்திலேயே நாவல் முடிவடைகிறது. புராணம் காம விழைவால் ஏற்பட்ட சாபத்தைப் பேசுகிறது. ஆனால் எச்சரிக்கைக்கு பதிலாக அப்புராணம் வாஸவேச்வரர்களிடம் காமத்தையே தூண்டுகிறது. அதுவும் சரிதான். வாஸவேச்வரர் ஆலயமே இந்திரன் காமத்தால் உருவான ஒன்றுதானே!

-சுரேஷ்பிரதீப்

*

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *