தோற்கடிக்கப்பட்டவர் (சிறுகதை) – ஆஷாபூர்ணாதேவி

(மொழியாக்கம்: சுசித்ரா)

ஆஷாபூர்ணாதேவி

(புகழ்பெற்ற வங்க எழுத்தாளர் ஆஷாபூர்ணாதேவி (1909-1995) பிரதம் பிரதிஸ்ருதி (முதல் சபதம், தமிழில் புவனா நடராஜன்), சுபர்ணலதா, பாகுல் கதா என்ற நாவல்கள் வழியாகவே பெரிதும் அறியப்பட்டவர். மூன்று தலைமுறை வங்காளப்பெண்களின் கதைகளைச் சொல்லும் அந்நாவல்கள் நூறு வருட வங்க வறலாற்றை கடந்து வந்த உணர்வை அளிக்கக்கூடியவை.

அவர் சிறுகதையில் நிகழ்த்திய சாதனைகள் அதிகம் பேசப்படாதவை. ஆஷாபூர்ணாதேவியின் கைத்தேர்ச்சி அவர் மனித மனத்தையும் மனங்கள் உறவாடுகையில் கொள்ளும் மாற்றங்களையும் திரிபுகளையும் எழுதுகையில் நன்கு தெரிவது. இவற்றை தன் சிறுகதைகளில் நிகழ்த்தியிருக்கிறார். இவ்விடங்களில் பூதக்கண்ணாடி அணிந்த பொற்கொல்லரின் கூர்மையை அவர் அடைகிறார். நகைவார்ப்பின் நுணுக்கமான கலைவண்ணத்தை தன் மொழியில் வெளிப்படுத்துகிறார். 

ஆஷாபூர்ணாதேவியின் கதைகள் பெரும்பாலும் வங்காள நடுத்தரவர்க்கத்தின் அகம், அடுக்களை என்ற களத்திலேயே நிகழ்கின்றன. ஆனால் இவற்றை வெறும் அடுக்களைக்கதைகள் என்று ஒதுக்கிவிட முடியாது.  இக்கதைகள் வழியாக ஆசிரியர் காட்சிப்படுத்தும் மனித மனத்தின் எண்ணிலடங்கா வகைமைகளை நாம் நம் வாழ்க்கையில், அகத்திலும் புறத்திலும், அடையாளம் கண்டுகொண்டே இருக்கிறோம். அதுவே அவர் கலையின் வெற்றி. இந்தக் கதையில் வரும் பிரபாத்மோகனைப் போன்ற ஒருவரை நான் என் ஆய்வு வாழ்க்கையில் கடந்திருக்கிறேன். தன்னுடைய ஆராய்ச்சியை தன் மாணவருக்கு விட்டுக்கொடுக்க மனமில்லாமல் ஒரு விபரீத முடிவை எடுத்தவர். 

‘தோற்கடிக்கப்பட்டவர்’ என்ற இந்தக் கதையை அருணவா சின்ஹாவின் ஆங்கில மொழியாக்கம் வழியாக தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன்.)

-சுசித்ரா

*

தோற்கடிக்கப்பட்டவர் சிறுகதை – ஆஷாபூர்ணாதேவி

(தமிழில்: சுசித்ரா)

பிரபாத்மோகன் என்றுமே ஆஸ்ட்றிச் பறவையைப்போல் வாழ்ந்தவரல்ல. மாறாக எப்போதுமே தன்னுடைய கண்களைத் திறந்தே வைத்துக்கொண்டே உலகினில் நடமாடியவர். இதுவரை அவர் ஏமாற்றப்பட்டதே இல்லை. இப்போது வரை.

சுயமாக முன்னுக்கு வந்தவர். உலகம் அறிந்தது தான். 

பரம ஏழ்மையிலிருந்து தன் நிலையை ஏற்றி எழுந்துவந்தவர். ஒரு மனிதனுக்கு உயர்குடி வாழ்வில் வாழ என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் தனக்கென்று சம்பாதித்துக்கொண்டிருந்தார். தன்னுடைய மனைவின் இறப்பின் துக்கம் தன்னை அடித்துச்செல்ல விடாமல் வாழ்ந்தார். ஆனால் புதிய வாழ்வுக்கான நாட்டமும் இல்லை.  

அவர் மனைவி இறந்தபோது மூன்று வயதுக் குழந்தையை விட்டுச்சென்றிருந்தார். இதனாலும் அவர் உடைந்து போகவில்லை. தன்னுடைய விதவைத்தங்கையான அமலாவின் உதவியுடன் அந்தச்சிறுவனை வளர்த்தெடுத்தார். அவனை ஆளாக்கினார். ஜாதிக்கொள்கைகளின் அளவீடுகளின்படி தன்னுடைய மகனுக்கு திரிகோலசுந்தரியான ஒரு மணப்பெண்ணை பார்த்தமைத்தார். அதே சமயம் அவளுடைய அப்பா தேவனோ மன்னனோ அல்ல. வெறும் கிளார்க். ஆனால் பிரபாத்மோகனுக்கு அவ்வளவுதான் தேவையாக இருந்தது. தன்னுடைய ஒரே மகனை வீட்டோடு மாப்பிளையாக அனுப்பிவிடுவதற்கு எந்த எண்ணமும் இல்லை அவர்க்கு. 

இதுவரை பிரபாத்மோகன் மிகச்சூதானமான மனிதர் என்று கருத எல்லாவிதமான சான்றுகளும் இருந்தன. ஆனால் அவர் எதிர்பார்க்காத விதமாக ஒரு தாக்குதல் அவரை நோக்கி வந்துகொண்டிருந்தது. 

இப்படி ஒரு தாக்குதலை அவர் தன் மிக மோசமான கனவில் கூட எதிர்கொண்டதில்லை. 

இதனால் தான் அவர் அதற்கு முன்னால் கல்லாகவே மாறிப்போனார். சரியாகத்தான் கேட்டோமா என்று நிலைகுலைந்தார். 

ஆனால் கெட்ட செய்தி எப்போதுமே தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதில்லை. 

என்ன சொல்வதென்றுதெரியாமல் பிரபாத்மோகன் தன்னுடைய கண்ணாடியைக் கழற்றி திரும்ப மாட்டிக்கொண்டார். “என்னது”, என்றார். “என்ன பார்த்திருகிறாய்?”

“நான் கொல்ஃப் கிளப் ரோட்டில் ஒரு ஃபிளாட் பார்த்திருக்கிறேன்”, என்று பிரபால்பூஷன் அமைதியாகச் சொன்னான்.

“கோல்ஃப் கிளப் ரோட்டில் ஃபிளாட்டா? என்ன சொல்கிறாய்? ஃபிளாட்டா?”

அர்த்தம் தெளிவாகவே இருந்தது. 

“ஆம், ஒரு ஃப்ளாட் பார்த்திருக்கிறேன்”, என்று பிரபால் சொன்னான். “எல்லாம் பேசி முடித்துவிட்டேன். நாளை மறுநாள் காலை பால் காய்ச்சுவதாக இருக்கிறோம்”. 

நாளை மறுநாள் காலை.

இப்போது மாலை. தன்னுடைய மகன் தனக்குத்தரக்கூடிய நோட்டீஸ் காலமே இந்த லட்சணத்தில்.

இதற்கு மேல் சொல்ல என்ன இருந்தது? பிரபாத் மோகன் அமலா அல்ல. என்ன செய்துவிட்டாய் என் கண்ணே என்று அழுது கதற.

ஆம், பிரபாத் மோகன் அமலா அல்ல.

“சரி”, என்றார். 

ஒற்றை வார்த்தை மேலே சொல்லவில்லை.சரி. அவ்வளவுதான்.

இந்த உலகத்தில் எல்லாமே தலைகீழாகப் போகும்போது மனிதன் சொல்லக்கூடிய மிகச் சூட்சுமமான  வார்த்தையைத்தான் அவரும் சொன்னார்.

சரி.

அவருடைய மொத்த உலகமும் தன்னுடைய வட்டத்திலிருந்து வெளியேறிச் சுழலத்தொடங்கிய போது, அவர் தன் வாழ்க்கை முழுவதும் சேமித்து வைத்திருந்த நம்பிக்கை, உறுதிப்பாடு, ஞானம் எல்லாமே கலைந்து அறை முழுக்க சிதறிப் பறந்துக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன வார்த்தை இது.

பிரபால் அங்கே ஒரு நொடி நின்றான்.

அவன் அப்பா மேலே ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்திருக்கலாம். அல்லது இந்தச் செய்தியைச் சொன்ன உடனேயே கிளம்புவது கோழைத்தனம் என்று நினைத்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?

ஆனால் அவன் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் சற்று நேரத்திலேயே அறையிலிருந்து வெளியேறினான். 

அவன் செல்வதை பிரபாத் மோகன் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் கண்கள் ஒளி இழந்திருந்தன.

“கோக்கா நிஜமாகத்தான் சொல்கிறாயா? இது நீ சும்மா என்னிடம் விளையாடுவதற்காகச் சொல்லும் பேச்சு இல்லையே?” என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. தன்னுடைய மகன் தன்னுடன் விளையாடக்கூடும் என்ற சாத்தியமே அவர் மனதில் எழவில்லை.

ஆனால் அவர் இப்படியாவது கேட்டிருக்க முடியும். “பிளாட்டை விலைக்கே வாங்கிவிட்டாயா? அல்லது வாடகைக்குத்தான் எடுக்கிறாயா? வாடகை என்றால் அதை இப்போதே வேண்டாமென்று சொல்லிவிடு. வாங்கிவிட்டாய் என்றால் ஒரு நல்ல வாடகையாய்ப் பார். நஷ்டம் என்றாலும் பரவாயில்லை, மிச்சத்தை நான் ஈடு செய்கிறேன்.” இப்படிச் சொல்லியிருக்கலாம். 

அல்லது, “இங்கே வாழ்வதில் உனக்கு ஏதும் பிரச்சனை இருந்தால் முன்னமே என்னிடம் சொல்லியிருக்கலாமே”, என்றாவது கேட்டிருக்கலாம்.

எதுவுமே இல்லை.

சரி. அவ்வளவுதான்.

இப்படிச் சொன்ன பிறகு தன் மகன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் மனிதன் எத்தனை நேரம் தான் அந்த அறையிலேயே நின்றுகொண்டிருக்க முடியும்?

வெற்றுநோக்குடன் விழித்துக்கொண்டிருந்த பிரபாத் மோகனுக்கு அப்போது ஒரு எண்ணம் ஏற்பட்டது. விசித்திரமானது, என்று நினைத்தார். கோக்கா என்னிடமே வந்து நேருக்கு நேராக இதையெல்லாம் சொல்வது எல்லாம். அவன் அமலாவிடமே சொல்லியிருக்கலாமே? எப்போதும் போல?

இல்லை, என்னிடம் நேரடியாகச் சொல்வதில் அவன் ஏதோ பெரிய குரூரமான திருப்தியை அடைந்திருக்கவேண்டும். ஒரு வேட்டை மிருகத்துக்கு அதனுடைய இரை மரணத்தின் தறுவாயில் அடையும் வேதனையைப் பார்க்கும் போது ஏற்படும் திருப்தி. கொலையாளி நெஞ்சில் குத்தத்தான் பிரியப்படுவான். முதுகில் குத்துவதில் என்ன வீரம்?

ஆனால் பிரபாத்மோகன் தன்னுடைய மகனுக்குச் சற்றே அநீதி இழைத்துவிட்டார். மகன் முதுகில் குத்தவேண்டும் என்று தான் முதலில் திட்டமிட்டிருந்தான். உன்னிடம் சொல்லிவிட்டேன், என்று அத்தையிடம் சொல்ல நினைத்தான். நீயே அப்பாவிடம் சொல்லிவிடு.

ஆனால் அவள் இந்த விளையாட்டுக்கு ஒப்புக்கொள்ள மாட்டாள் என்றால் என்ன செய்வது?

தன்னுடைய அழகான முகத்தில் சற்றே கடுமையான புன்னகையை வரவழைத்துக்கொண்டு பரோமா, “நீ மிகவும் விசித்திரமாக நடந்துகொள்கிறாய். ஒன்றுமே விளங்கவில்லை. வேண்டுமென்றால் நான் அவரிடம் பேசுகிறேன். இந்த பூனைக்கு மணிகட்டியதும் என் கணக்கிலேயே சேரட்டுமே”, என்றாள். 

“தேவையில்லை”, என்று பிரபால் சொன்னான். “அது அத்தனைப்பெரிய வேலை ஒன்றும் இல்லை”.

அது அத்தனைப்பெரிய வேலையாக இருக்கக்கூடாது என்பதற்காக அந்த சந்தர்ப்பத்தை அவன் மீண்டும் மீண்டும் ஒத்திகை பார்த்தான்.

பிரபாத்மோகனுக்கோ அப்படி ஒத்திகை பார்க்கச் சந்தர்ப்பம் அமையவில்லை. வேஷம் இல்லாமல், முகச்சாயம் இல்லாமல், நாடகத்தின் பிரதியைக்கூடப் படிக்க வாய்ப்பளிக்கப்படாமல் அவர் மேடையேற்றப்பட்டிருந்தார். இருந்தாலும் அவர் அந்த கட்டத்தை வெற்றிகரமாகவே தாண்டிவிட்டார். சரி, என்று குரலில் நடுக்கமில்லாமல் சொல்லிவிட்டார்.

எதற்கு நான் இதையெல்லாம் நினைத்துக் கவலைப்பட வேண்டும், என்று பின்னால் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். கோக்காவுக்கு பணிமாற்றம் ஏற்பட்டிருக்கலாம். அப்போதும் கூட அவனும் சந்தனும் இல்லாமல் தான் நான் வாழ்ந்திருக்க வேண்டும். பரோமா இல்லாமலும் தான் வாழவேண்டுமே என்ற நினைப்பு அவருக்கு வரவில்லை. 

வேண்டுமென்றேவா, அல்லது அவர் மறந்துவிட்டிருந்தாரா? ஆனால் உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அவர்களுக்குத் திருமணமாகியிருந்த அந்த மூன்று-நான்கு வருடங்களில் பரோமா பிரபாத்மோகனை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றே பிரயத்தனப்பட்டாள். அது நடக்கவில்லை.

எண்ண்னக்கள் மேலும் மேலும் வந்துகொண்டிருந்தன.

எத்தனை மட்டமான எண்ணம்!

கோக்காவுக்கு பணி மாற்றம் நடந்திருந்தால் நான் மட்டுமே துக்கப்பட்டுக்கொண்டிருந்திருப்பேன். ஆனால் இப்போது என்னுடைய நண்பர்கள் சொந்தங்கள் சுற்றார் உறவினர் இந்த மொத்தச் சமூகமும் என்னைப்பார்த்து என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கும். 

நான் இந்த வட்டத்தில் தான் வாழ்ந்தாகவேண்டும். இந்த வீட்டில் தான் வாழ்ந்தாகவேண்டும். ஏனென்றால் இது என்னுடைய சொந்த வீடு. 

தனக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக்கொள்வதை விட மனிதன் ஒரு முட்டாள்தனமான வேலையை செய்ய முடியுமா என்ன? அதைச் செய்தவுடன் ஒரு மனிதன் தன்னை மண்ணின் மிகச்சிறிய வட்டத்திற்குள் கட்டிப்போட்டுக் கொள்கிறான். பிரபாத் மோகன் யோசித்தார். தான் வாடகை வீட்டில் வாழ்ந்திருந்தாலாவது இது நடந்தவுடன் அந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு எங்கேயாவது சென்று விட்டிருக்கலாம். இத்தனைப்பெரிய வீட்டை வைத்துக்கொண்டு ஒரு மகனை வீட்டோடு கட்டி வைக்க இவரால் முடியாமற் போனதே! மகனுக்கு அத்தனை தன்மானம். இரண்டு மாடிகள் இந்த வீட்டில் அவர்கள் தங்களுக்கென்று வைத்திருந்தார்கள். மேலும் கீழ்த்தளத்தை 700-800 ரூபாய் என்று வாடகைக்கும் விட்டிருந்தார்கள். 

இந்த வீட்டைத் துறந்து தான் கோக்கா தனிக்குடித்தனமாக ஃப்ளாட்டுக்கு செல்லப்போகிறானாம். எத்தனை விசித்திரமானது! இந்த மொத்த வீட்டுக்கும் ஒரே வாரிசு இவன். 

இதில் ஏதோ சரியாகப் படவில்லை. 

யார்யாருக்கு முன்னாலோ முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு நிற்கவேண்டாம் என்பதற்காக இப்போது பிரதாத்மோகன் தன் மகனிடத்தில் சென்று, “மகனே! மருமகளே! இப்போது என்ன ஆகிவிட்டதென்று நீங்கள் கிளம்பிச் செல்கிறீர்கள். இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னால் ஒரு நிமிடமாவது நீங்கள் சிந்திக்க வேண்டாமா? இத்தனைப்பெரிய வீட்டில் தன்னந்தனியாக நான் எப்படித்தான் வாழ்வது?” என்று கேட்க வேண்டுமா? 

பிரபாத்மோகனுக்கு அருவருப்பாக இருந்தது. தன்மானம் என்பது இந்தத் தலைமுறையின் ஏகோபித்த உரிமை ஒன்றும் இல்லை.

அமலா உள்ளே வந்தாள். “நான் கோக்காவைப் பார்த்தேன், என்றாள். அவன் என்ன சொல்லிக்கொண்டிருந்தான்?” 

“உனக்குத் தெரியாதா?” என்று பிரபாத்மோகன் முறைத்தார். 

“தெரியும், அதான் கேட்கிறேன். நீங்கள் அவனைப் போகவேண்டாம் என்று சொல்லவில்லையா?” 

அமலாவின் கேள்வி அவளுக்குள்ளிருந்து, அவளை மீறிய கதறலாக வந்தது. “ஒருமுறைகூட இத்தனைப்பெரிய தவறைச் செய்யாதே முட்டாளே, என்று உங்களால் சொல்ல முடியவில்லையா?”

அவளுடைய வேதனையால் சிறிதுகூட கலங்காதவர்போல் பிரபாத்மோகன் சொன்னார். “நான் ஏன் அவர்களை நிறுத்தவேண்டும்? அவன் ஒரு தவறு செய்வானென்றால் அவனே அதற்கான விலையைக் கொடுக்கட்டுமே?”

தரையில் சடாரென்று அமர்ந்து அமலா சொன்னாள், “அண்ணா, அப்படிப் பேசாதே. அவனுக்கு அறிவு இருந்தால் இப்படி ஏதாவதுச் செய்வானா?” 

“அவனுக்கு அறிவில்லை என்று யார் சொன்னார்”, என்றார் பிரபாத் மோகன். “அவனுக்கு நிறையவே அறிவிருக்கிறது. இல்லையென்றாலும் என்ன? அவனுக்கு அறிவை புகட்டுவதற்குத்தான் ஓர் ஆசிரியையையும் கூடவே வைத்திருக்கிறானே”. 

அமலா உடைந்துபோன குரலில் சொன்னாள். “ஆம், அப்படியாகிவிட்டது. ஆயினும் நீங்கள் அன்று பேசிய விதத்தில் பேசியிருக்கக்கூடாது அண்ணா. இப்போது போய், அய்யய்யோ, அன்று ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டேன் இதை நீங்கள் இன்னுமா மனதில் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னால்?”

அப்போது அவர்கள் யாரும் வீட்டில் இல்லை. அமலா அவர்கள் வெளியே போவதைப் பார்த்திருந்தாள். ஆகையினால்தான் இந்த விஷயத்தைப் பேசவே வந்திருந்தாள். பிரபாத்மோகன் அவர்கள் இல்லையென்றால் மனம் விட்டுப்பேசுவார் என்று எதிர்பார்த்தாள். அவர்கள் போய்வரச் சற்று நேரமாகும். இரண்டு நாட்களுக்குள் எல்லா வேலைகளையும் முடித்தாகவேண்டும்.

பிரபாத்மோகன் மனம் விட்டுப்பேசத் தொடங்கிவிட்டிருந்தார். “நான் அப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்கிறாயல்லவா”, என்று கத்தினார். “அவர்கள் காலில் சென்று விழவேண்டும் அல்லவா?”

“அண்ணா அப்படி நான் சொல்லவில்லை”, என்று அமலா சொன்னாள். “அவன் அம்மா இல்லாத பையன். அவன் மூன்று மாதத்திலிருந்து நான் தான்…”

அவள் நிறுத்தினாள். 

“ஆமாம். நீதான் அவனை வளர்த்தாய்,” என்று பிரதபாத்மோகன் கசப்பாகச் சொன்னார். “ஒரு விதவை தெய்வங்களை நோக்கிச் செய்யவேண்டிய சிரத்தைகளையெல்லாம் நீ குழந்தையை நோக்கிச் செய்தாய். ஆனால் தன்னுடைய வாழ்க்கையில் உன்னுடைய பங்கை அவன் என்றாவது மதித்துப் பேசியிருக்கிறானா? அறியாத வயதிலேயே என் தலையில் பல கடன்களைக் கட்டிவிட்டீர்களே என்று அவன் சொன்னானே, அதை நீ கேட்கவில்லையா?” 

அமலா மேசையின் காலை ஒரு கையால் கெட்டியாகப் பிடித்திருந்தாள். இப்போது மறுகையாலும் பிடித்துக்கொண்டாள். “அவன் அப்படிச் சொல்லவில்லை,” என்று குரல் உடைந்ததுபோல் சொன்னாள். “அவன் சொல்லவில்லை, அவன் ஆசிரியை சொன்னாள்”, என்று பிரபாத்மோகன் குத்தலாகச் சொன்னார். “அமலா நிறுத்து, அவன் பலவீனங்களை மறைக்க முயற்சி செய்யாதே. சிறுவயது முதலாகவே நீ அவனைப் பொத்திப் பொத்தி வளர்க்காமல் இருந்திருந்தால்…” 

அமலாவின் இதயம் கொந்தளித்திருந்தது. 

ஆமாம். அண்ணா இது எப்போதும் பேசும் பேச்சு தான். ஆனால் இதுவரை அது பெரிய விஷயமென்ற தொனியில் சொன்னதில்லை. சும்மா, ஒரு பேச்சுக்குச் சொன்னது தான். “நீ அவனுக்கு ரொம்பவும் செல்லம் கொடுக்கிறாய் அமலா, இதனால் பார் ஒருநாள் அவனுக்கு என்னாகப்போகிறதென்று”. 

ஆனால் இன்றோ, அவளுக்குத் தன்னுடைய நாளங்கள் வெடித்துவிடும் என்பதுபோல் இருந்த சமயத்தில் அவளுடைய அண்ணன் இப்படிக் குத்திக்காட்டிப் பேசியது மிகக் குரூரமானதாக இருந்தது. 

கம்மிய குரலில், “நீ தான் என்னை எப்போதும் குத்தியே பேசுகிறாய் அண்ணா. இதற்கு நான் என்ன சொல்வது? ஆனால் கோக்காவைப் பற்றித் தவறாக யாராவது ஒரு வார்த்தைப் பேசி நீ கேட்டிருக்கிறாயா? அவனுடைய வளர்ப்பைப் பற்றி, அவனுடைய வளர்ப்புத் தவறு என்று யாராவது சொல்லி நீ கேட்டிருக்கிறாயா? நீ தான் விடாப்பிடியாக இருக்கிறாய் அண்ணா. உன்னுடைய மகனுக்குத் திருமணம் ஆனப் பிறகு அவனுடன் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற தெளிவு இல்லாமல் இருக்கிறாய்…” 

கசப்பும் அமிலமுமாகத் தெரித்தது பிரபாத்மோகனின் குரல். “ஆமாம். இந்த வயதிற்கு மேல் நான் அது ஒன்றைத் தான் கற்றுக்கொள்ளவேண்டும். திருமணத்திற்குப் பிறகு மகன் மருமகன் ஆகிவிடுவானாம். மருமகள் அவனுக்கு ஆசிரியையும் வழிகாட்டியுமாக இருப்பாளாம். எங்களுக்கெல்லாம் திருமணமே ஆகவில்லையா? உன்னுடைய நாத்தனார் எப்படி வாழ்ந்தாள் என்று உனக்கு ஞாபகமில்லையா என்ன?” 

“அண்ணா அதை மறந்துவிடு. அந்த நாட்களெல்லாம் மலையேறிச் சென்றுவிட்டது. இன்றைய இளைஞர்களுக்குச் சுயமரியாதை உணர்வு நிறைய இருக்கிறது”. 

“அப்படியா? மூத்தவர்களுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையையும் அவர்கள் எடுத்துக்கொண்டுவிட்டார்களா?” 

அமலாவின் இதயத்திலிருந்த கொந்தளிப்பு மேலும் கூடியது. 

கடந்த வருடங்களின் நினைவுகள் பலவும் அவளுடைய மனதில் புகைப்படங்களைப்போல் மின்னி மின்னி மறைந்தன. ஒவ்வொரு நினைவும் அவளுடைய உடம்பில் முள்ளாகக் குத்தியது. எல்லாத்தை விடவும் வலிமிக்கது சந்தனை ஒவ்வொரு நாள் மாலையும் பரோமாவின் பெற்றோர் வீட்டுக்கு இழுத்துப்போய் விடுவது. அமலாவால் ஒரு வார்த்தைக்கூடச் சொல்ல முடியவில்லை. எல்லாமே அவளுடைய தவறுதான். தானே தன் தலை மீது கொட்டிக்கொண்டது. 

ஆனால் அமலா அவர்களிடம் சொன்னதில் என்ன தவறு இருந்தது? சிரித்துக்கொண்டு தான் அதையும் சொன்னாள். “ஒவ்வொரு நாளும் வெளியே போகும் சமயத்தில் குழந்தையை என்னிடம் விட்டுச்செல்கிறீர்கள். எனக்குப் பூஜைக்கு நேரமே இருப்பதில்லை.” 

அவ்வளவுதான். 

அந்த வார்த்தைகளை சொன்னவுடன் அவளுடைய இதயம் கடகடவென்று அடிக்கத்தொடங்கியது. ஏன் இதை நான் சொல்லியிருக்கவேண்டும்? இதனால் இவர்கள் வெளியே போவதையே மொத்தமாக நிறுத்திக்கொண்டுவிட்டால்? அப்புறம் நானே என் கர்வத்தை விழுங்கி அவர்களை சமாதானப் படுத்தவேண்டும். 

அமலா அந்த சமாதானப்பேச்சைக்கூட மனதில் வடிவமைத்து வைத்திருந்தாள். ஆனால் அதைச்சொல்லத் தேவை ஏற்படவில்லை. கோக்கா மனைவியுடன் வெளியே போவதை நிறுத்தவில்லை. ஆனால் மகனை அத்தையிடம் விடாமல் தன்னுடைய மனைவியின் பெற்றோர் வீட்டில் சென்று விட்டான். 

ஏனென்றால் இந்நாட்களில் யார் மனமும் புண்படுவதில்லை. புண்படுதல் என்ற வார்த்தையை தங்கள் அகராதியிலிருந்தே நீக்கிவிட்டார்கள். மிஞ்சியது தன்மானமும் சுயமரியாதையும் மட்டுமே.

பெரியவர்களும் அவர்களுடைய பேச்சைக் கவனிக்க வேண்டியதாகியிருந்தது.

அதிலிருந்து அமலாவும் அவளுடைய வார்த்தைகளை எண்ணியவாறே பேசினாள். அதிகமாகவும் பேசக்கூடாது. குறைவாகவும் பேசக்கூடாது. சரியான விகிதத்தில் பேசப் பழகியிருந்தாள்.

ஆனால் தன்னுடைய அண்ணனை இந்த கட்டுக்குள் கொண்டுவருவதெல்லாம் செய்யக்கூடிய வேலையல்ல.

தன்னுடைய மகனுக்குத் திருமணமானால் மருமகள் தன்னுடைய மகள் அல்ல, மகன் அவளுடைய சொத்து, என்று பிரபாத்மோகனால் ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. 

“உனக்கொரு மகள் இருந்து அவளுக்குத் திருமணம் ஆனால் அவள் மாப்பிளைக்குத்தானே சொந்தம்? அவருடைய அனுமதி இல்லாமல் அவளை நீ உன் வீட்டுக்குக் கூட கூட்டிவர முடியாதல்லவா? இப்படித்தானே இருந்திருக்கிறது காலம் காலமாக? அதைப்போல நினைத்துக்கொள்ளேன்?” என்று அமலா அவளுடைய அண்ணனிடம் சொல்லிப் புரியவைக்க முயன்றாள்.

“ஆமாம், ஆமாம், நியாயமெல்லாம் சரியாக்கத்தான் இருக்கிறது”, என்று பிரபாத்மோகன் கிண்டலாகச் சொன்னார். “நெருப்பைச்சுற்றி என் மகனும் தானே ஏழு வலம் வந்தான்”.

“கோக்காவுக்கு உன்னைப் பார்த்தாலே பயம் அண்ணா”

“நல்லது தான். என்னுடைய ராஜகுமாரனுக்கு தன்னுடைய தந்தை மேல் பயம். அன்பு இல்லை. ஏன்? ஏன் ஒவ்வொரு நாளும் ஊர் சுற்றக் காலில் சக்கரம் கட்டிப் பறக்கிறான்? ஒரு நாளாவது சாவகாசமாக வயதான அப்பாவிடம் அமர்ந்து பேசலாமே என்ற எண்ணமே இல்லை அவனுக்கு.” 

அமலா அந்தப்பேச்சின் தீவிரத்தைக் குறைத்து அனுசரணையாக்க முயன்றாள். “நீங்களா? வயதானவரா? நீங்கள் தானே அவனை விட இளமையாக இருக்கிறீர்கள்?” என்றாள். 

ஆனால் இது எதுவுமே அவர் மனதை மாற்றவில்லை.

பிறகு ஒருநாள். அந்த நாள். 

அன்று அவர்கள் இருவரும் மிகப்பிந்தி வீட்டுக்கு வந்தார்கள். இரவுணவை பரோமாவின் வீட்டிலேயே முடித்திருந்தார்கள். மகன் அவர்கள் கைகளில் இருந்தான். தூங்கிவிட்டிருந்தான். எங்கே போகிறோம், எப்போது வருவோம் என்று எந்த செய்தியும் சொல்லாமலே போயிருந்தார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் பிரபாத்மோகனுக்கு எரிச்சல் மேலோங்கியது. கோபம் தழலாடியது. “உங்களுக்குப் பிடித்த மாதிரியெல்லாம் இந்த வீட்டில் நீங்கள் வாழ முடியாது”, என்றார். 

மனவருத்தில் தான் அவர் அப்படிப் பேசினார் என்று அமலாவுக்குத் தெரியும்.

பல நாட்களுக்குப் பிறகு அன்று தான் அவர் கடல்நண்டு வாங்கிக்கொண்டு வந்திருந்தார். “சமையல்காரனிடம் கொடுக்காதே. நீயே தயார் செய்,” என்று அமலாவிடம் சொல்லியிருந்தார். அதனுடன் பிரியாணியும் சாப்பிடவேண்டும் என்று விருப்பப்பட்டார். பிரபாத்மோகனுக்கும் பிரபாலுக்கும் பிடித்த உணவு அது. 

அவர்கள் வருவார்கள் வருவார்கள் என்று பிரபாத்மோகன் சாப்பிடக் காத்துக்கொண்டிருந்தார். அவருக்குப் பசி பொறுக்காது. சாப்பிடப் பிந்தினால் அவர் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது. “படம் ஏதாவது பார்க்கப்போயிருப்பார்கள். நீங்கள் சாப்பிடுங்களேன்”, என்று அமலா அவரை மீண்டும் மீண்டும் சாப்பிட அழைத்தாள். பிரபாத்மோகனுக்கோ ஆவேசம் ஏறிக்கொண்டே சென்றது. கவலையும் ஏறியது. 

நேரம் செல்லச்செல்லக் கவலை ஏறத்தானே செய்யும்? 

அமலாவுக்கும் கவலை இல்லாமல் இல்லை. ஒவ்வொரு நாளும் சாலையில் விபத்துக்கள் நடந்துகொண்டுதான் இருந்தன. ஆனால் கவலைப்படாததுபோல் காட்டிக்கொண்டாள். 

பிரபாத்மோகன் அவள் பேச்சைக் காதுகொடுத்துக்கூடக் கேட்கவில்லை. அவர் கோபம் ஏறிக்கொண்டே போனது. மகனின் மாமியார் மாமனாரிடம் டெலிஃபோன் இல்லை. அழைத்து ஒன்றும் கேட்க முடியாது. அவர்கள் எப்போது கிளம்பினார்கள். கிளம்பினார்களா. ஏதாவது பிரச்சனையா. குழந்தைக்கு ஏதாவது ஆகிவிட்டதா… 

சமையல்காரனை அனுப்பி என்ன செய்தி என்று கேட்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது அவர்களே திரும்பி வந்தார்கள். படம் பார்க்கப் போயிருந்தார்கள். சாப்பாடும் முடிந்திருந்தது. 

அமலாவால் அண்ணனைக் குறை சொல்ல முடியவில்லை. 

பொறுமை இரும்பில் செய்யப்படுவதில்லை. அதிலும் ஆணின் பொறுமை, கண்டிப்பாக.  

ஆனால் அந்த ஒரு வார்த்தைக்கு மேல் பிரபாத்மோகனும் ஏதும் சொல்லவில்லை. ஆனால் அந்த வார்த்தையைச் சொன்னதற்காகவா அவர்கள் இருவரும் இத்தனைப்பெரிய முடிவை எடுத்தார்கள்? விசித்திரமானதுதான்.

ஆனால் இப்போது அமலா தான் சொன்னாள். “அண்ணா, தவறு உன்னுடையதுதான். நீ அதை ஒத்துக்கொண்டுத்தான் ஆகவேண்டும்”.

“இன்று உனக்குச் செய்ய வேறு வேலை ஒன்றும் இல்லையா?” என்றார் பிரபாத்மோகன். “போ. போய் உன் தெய்வங்களுடன் உட்கார். இப்படி வந்து வந்து என்னிடம் புலம்பாதே.”

அமலாவால் வேரென்ன செய்ய முடியும்? அவள் எழுந்துச்சென்றாள். கொஞ்சம் முயற்சித்தால் இந்த அகழ் விரிவதைத் தடுத்துவிடலாம் என்று நினைத்தாள். ஆனால் அவளுக்குப் புத்தி கொஞ்சம் மந்தம் தான். அப்படித்தான் யோசிக்கும் அது.

அமலா சென்ற பிறகு பிரபாத்மோகனின் மனம் இங்கேயும் அங்கேயும் அலைபாய ஆரம்பித்தது. 

இன்று இரவு ஏதாவது விபரீதமாக நடந்து நாளை அவர்கள் கிளம்பிப் போவதைத் தடுத்துவிட்டால்? அப்படி என்ன கொடூரமாக நடக்கமுடியும்? பிரபாத்மோகனுக்கு இதய அடைப்பு வந்தால்? ஆனால் அது தன்னுடைய வீழ்ச்சியை மட்டுமே குறிப்பதாக அமைந்துவிடும். அப்படி தான் வீழ்ச்சியடைவதை அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. 

அல்லது இரவு கடப்பதற்குள் பரோமாவின் அப்பாவுக்கோ அம்மாவுக்கோ ஏதாவது நடந்தால்? 

ஆனால் இவர்கள் இந்த வீட்டிலிருந்து கிளம்பிச்செல்வதை அது எப்படித் தடுக்கும்? மிஞ்சியவரோடு புதுவீட்டில் குடிபுகுவது அவர்களுக்கு வசதியாகவே இருக்கும். 

கோக்காவுக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது. ஆனால் பரோமாவுக்கு? 

இல்லை. அதுவும் வேலைக்காகாது. தன்னுடைய மனைவிக்கு ஏதாவது நடந்தால் மகன் தன்னை மன்னிக்கவே மாட்டான். இல்லை. இது எதுவுமே வேலைக்காகாது.

கோக்காவுக்கு நாளை பணிமாற்றம் நிகழ்ந்தால்? முன்பு பிரபாத்மோகன் இந்த சாத்தியத்தை யோசிக்கும்போதெல்லாம் அந்த கசப்பான எண்ணத்தை மனதிலிருந்து தள்ளித்தள்ளி வைப்பார். ஆனால் இப்போது இந்த சிக்கலுக்கு அதுவே சரியாக முடிவாகப் பட்டது. ஆம். ஒவ்வொரு நாளும் கோக்காவையும் தாதுபாயையும் பார்க்கமுடியாது. ஆனால் பரவாயில்லை. இங்கே சுற்றியிருப்பவர்களின் ஏளனப்பேச்சையாவது தவிர்த்துவிடலாம். 

ஆனால் பணிமாற்றம் வருவதற்கும் இவர்கள் நாளை மறுநாள் கிளம்புவதற்கும் என்ன சம்பந்தம்?

இல்லை. ஒரே வழி தான். ஏதாவது பேரிடர் நிகழவேண்டும். இயற்கைப் பேரிடர். 

பிரபாத் மோகன் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தார். தெளிவாக இருந்தது. ஒரு பொட்டு மேகம் இல்லை. இன்றிரவு புயல் ஏதாவது வர வாய்ப்பிருக்கிறதா? அல்லது ஒரு பூகம்பம்? 

நடக்காததைப் பற்றி யோசிப்பதில் எந்தப்பயனும் இல்லை. 

ஏதாவது செய்தாகவேண்டும். அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டும் வகையில் ஏதாவது.

ஆனால் இந்த சிந்தனைகளுக்கிடையில் மற்றொரு சிந்தனையும் இருந்தது. செல்லட்டுமே? அவர்கள் சென்று தான் பார்க்கட்டுமே? அவர்களுக்கு வாழ்க்கை இங்கே எத்தனை சொகுசாக இருந்தது என்று பட்டுத் தெரிந்துகொள்ளட்டுமே? தனக்கென்று வீடு என்ற ஆசையெல்லாம் ஒரே நாளில் பறந்து போய் விடும். ஒரு பைசா கூட செலவழிக்காமல் அப்பா சொத்தில் வாழ்வதென்பது வேறு, தனிக் குடித்தனமாக வாழ்வதென்பது வேறு. அதுவும் இரண்டரை பேர். சரி வாழ்ந்துப்பார்! 

இப்படி வக்கிரமான, விஷத்தனமான எண்ணங்களால் பீடிக்கப்பட்டு பிரபாத்மோகன் அன்றிரவு ஒரு சொட்டுக்கூடத் தூங்கவில்லை.

ஆனால் அவருடைய எண்ணங்களுக்கு எந்தப்பயனுமில்லை. மறுநாள் காலை எல்லா நாட்களைப்போலவும் சூரியன் வெட்கமே இல்லாமல் தெளிந்த வானிலிருந்து ஒளி பொழிந்துகொண்டுதான் இருந்தது.

இன்னும் ஒரே நாள் தான். பிரபாத்மோகன் ஏதாவது செய்தாகவேண்டும். நாளை இதே நேரம் ஒரு வண்டி சாமான்சட்டிகளோடு அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பிச்செல்லும். 

சாமான்சட்டிகளென்றால், அவர் வீட்டிலிருந்து எதுவும் எடுத்துச்செல்ல மாட்டார்கள். அது சரி தான். அவர்களுடைய தனிப்பட்ட உடைமைகள் மட்டும் தான் செல்லும். பரோமாவின் அப்பாவால் வரதட்சிணை ஏதும் கொடுக்கமுடியவில்லை. அவர்களுடைய மேசை, நாற்காலி, கட்டில், எல்லாமே பிரபாத்மோகன் வாங்கிப்போட்டது தான். எதையும் எடுத்துச்செல்ல மாட்டார்கள். இரண்டாம் மாடியின் பெரிய அறையில் ஒரு மூலையில் அவர்களுடைய மகனின் தொட்டில் தன்னந்தனியாக நின்றுகொண்டிருக்கும்.

பிரபாத்மோகனின் கண்களில் தூசு விழுந்ததா? தண்ணீரை வாரி வாரி அவர் முகத்தில் எரிந்துகொண்டிருந்தார்.

காலம் அமைதியாக ஒழுகிச்சென்றது. வீடு இப்போதே நிசப்தமாகத் தொடங்கியிருந்தது. அமலா சமையல்காரனை சத்தமாகக் கண்டிப்பதை நிறுத்தியிருந்தாள். பிரபாத்மோகனுக்கும் குரலை உயர்த்திப் பேசுவதற்கு அவசியம் இருக்கவில்லை. 

வீட்டு வேலை எப்போதும் போலச் சென்றுகொண்டிருந்தது. 

ஆனால் எப்போதையும் விட வீடு நிசப்தமாக இருந்தது.

கோக்கா சவரம் செய்துகொண்டான். குளித்தான். வேலைக்குப்போனான். 

பரோமா குளித்துத் தன் மகனுக்கு உணவூட்டினாள். அவனைப் படுக்கப்போட்டாள். மதிய உணவைச் சாப்பிட்டாள். அதற்குப் பிறகு அவள் என்ன செய்வாள் என்று யாருக்கும் தெரியாது. 

முன்பெல்லாம் அவள் பிரபாத்மோகனுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் இப்போதெல்லாம் அவளுடைய நாள்பொழுது மாறிவிட்டது. மதிய உணவுக்கு முன்னால் எங்காவது போவாள். இல்லை சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு எங்காவது கிளம்பிச் செல்வாள். 

அன்று அவள் என்ன செய்தாள் என்று தெரியவில்லை. 

ஆனால் ஏதாவது நடக்கும் என்று பிரபாத்மோகன் எதிர்பார்த்தார். 

எதுவும் நடக்கவில்லை. 

அன்று மாலை பிரபால் எப்போதும் போல அலுவலகத்திலிருந்து திரும்ப வந்தான். குளித்தான். ஈரத்துண்டை பால்கணி கம்பிமேல் விரித்துப்போட்டான். ஒரு கோப்பை டீ குடித்து மாலை வேளையில் எப்போதும் மனைவியுடன் வெளியே செல்வதுபோலச் சென்றான். இந்த முறை பைகளை கையோடு எடுத்துச்சென்றார்கள்.

ஆனால் சிறுவன்? 

அவனை தங்களுடன் அழைத்துப்போகவில்லை. 

கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அமலாவைப் பார்க்க பிரதாப்மோகன் சென்றான்

“இன்று என்ன குழந்தையை பையில் போட்டுக்கொண்டு செல்லவில்லையா”, என்றார். 

அமலா பதில் சொல்லவில்லை. 

அவளால் பதில் சொல்ல முடியவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. 

குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அவனை வருடிக்கொண்டிருந்தாள்.

“குழந்தையை ஏன் இப்போதே தூங்கவைக்கப்பார்க்கிறாய்?”

“அவர்கள் சொல்லிவிட்டுப் போனார்கள்”, என்றாள் அமலா. அவளால் பேசக்கூட முடியவில்லை. 

“சரிதான். அல்லது இந்த முதியவன் குழந்தையோடு விளையாட ஆசைப்படுவான் அல்லவா”, என்றார் பிரபாத்மோகன். 

அமலா அமைதியாக இருந்தாள். 

பேச ஒரு சந்தர்பத்தைக்கூடத் தவறவிடாத அமலா. ஒரு வார்த்தை பேச வேண்டிய இடத்தில் நூறு வார்த்தை பேசும் அமலா. 

“அவனைப் படுக்க வைக்காதே”, என்று பிரதாத்மோகன் கடுமையாகச் சொன்னார். “தேவையில்லை. நீ அவனைப் படுக்க வைத்தாலும் அவனை நான் எழுப்பிவிடுவேன்”. அவர் குரலில் வஞ்சம் இருந்தது. 

“என்ன சொல்கிறாய்”, என்றாள் அமலா. “அவன் தூங்கவில்லை என்றால் அழத்தொடங்குவான்.”

“அழட்டும். அவனை நான் சமாதானப்படுத்துகிறேன்.”

“உன்னால் அவனைச் சமாதானப்படுத்த முடியாது.”

“என்னால் சமாதானப்படுத்த முடிகிறதா முடியவில்லையா என்று நான் பார்த்துக்கொள்கிறேன்.”

குழந்தையை அத்தையின் கையிலிருந்து பிடுங்கி பிரபாத்மோகன் அவனை எழுப்ப முயன்றார்.

குழந்தை மிரண்டு எழுந்தது. அவரைப் புரியாமல் பார்த்தது. 

தாத்தாவைப்பார்த்து அவன் சிரிக்கவில்லை. அப்படியென்றால் அவன் பாதி தூக்கத்திலிருந்தான். இதுவே சரியான நேரம்.

பிரபாத்னோகனிடம் கடைசியாக ஒரு திட்டம் இருந்தது. தன்னுடைய ஹோமியோபதி மருந்துகளின் ஒரு பெட்டியை எடுத்து அதிலிருந்து ஒரு சிறு புட்டியை எடுத்தார். சிறிய உருண்ட மணிகளைப்போல் வெள்ளை நிற மாத்திரைகள் கொண்ட புட்டி. ஒரு சில மணிகளைக் குழந்தை வாயில் போட்டால் என்ன செய்துவிடப் போகிறது? 

அவர் நினைத்தபடிதான் அது சென்று முடியும். 

வேறெதுவும் நடக்காது.

குழந்தைக்கு வயிற்றுவலி ஏற்படலாம். குழந்தைக்கு இரவில் வயிறு வலித்தால் பகலில் அப்பா வீட்டை மாற்றப் புறப்படுவாரா அல்லது மகனுக்கு மருத்துவரைப் பார்க்க ஓடுவாரா? நாளை எப்படியும் அவர்கள் கிளம்பிச்செல்ல மாட்டார்கள். 

கோக்காவுக்கு இதனால் மனமாற்றம் ஏற்படலாம் அல்லவா? 

கடவுளே வந்து, நீ வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று சொல்வதாக நினைக்கலாம் அல்லவா? இல்லையென்றால், சாதாரணமாக இருக்கும் குழந்தைக்கு ஏன் திடீரென்று உடல்நலம் சரியில்லாமல் போகவேண்டும்?

ஒரு சில மணிகள் போதுமானதாக இல்லாமலும் இருக்கலாம்.

பிரதாத்மோகனின் மாமாவின் கடைசி மகன் ஒரு முறை அரை புட்டி ஹோமியோபதி மருந்தை விழுங்கியிருந்தான். என்ன நடந்தது? கடுமையான வயிற்றுவலி. ஆம். அளவுக்கதிகமாக போய்விடவும் கூடாது. பிரபாத்மோகன் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பிரபாத்மோகன் மருந்தின் ஒரு மணியைக் குழந்தையின் வாயினுள் வலுக்கட்டாயமாகச் செலுத்தினார். “தாது? மருந்து சாப்பிடுகிறாயா? மருந்து?” என்றார்.

அது இனிப்பாக இருந்தது.

குழந்தை கையை நீட்டி அந்த புட்டியைப் பிடுங்கிக்கொண்டது. 

முகத்தில் வெற்றித்திகழ் சிரிப்பு. புட்டியை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டது.

ஈதென்றுப் புரியாத அச்சம் பிரபாத்மோகனின் நெஞ்சைக் கவ்வியது.

புட்டியைக் குழந்தையின் பிஞ்சு கைகளிலிருந்து பிடுங்கித் திருகி எடுத்தார். குழந்தை வீலென்று கதற ஆரம்பித்தது. அழட்டும்.

அவர் புட்டியை ஜன்னல் வழியாக வெளியே தூரத் தூக்கிப்போட்டுவிடவேண்டும் என்று கை ஓங்கினார். ஆனால் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார். யாரும் பார்த்துவிட்டால்? இந்த புட்டியை இந்த நேரத்தில் யார் எரிகிறார்கள் என்று யாரேனும் வேவுபார்த்தால்? 

இல்லை, அதை வெளியே போடக்கூடாது.

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் சுசித்ரா

பிரபாத்மோகன் வெளியே போனார். பாட்டிலை நீர்த்தொட்டிக்குழாயின் அடியில் காட்டி அதில் தண்ணீரை நிரப்பி நிரப்பிக் கொட்டினார். கடைசி மணி மருந்தும் கரைந்து போகிற வரையில் கழுவி எடுத்தார். கொலை செய்த ஆதாரங்களை கடைசித்துண்டு வரை அழித்துவிடுவதுபோல மருந்தின் கடைசித்துளியும் கரைந்து செல்வதுவரை அங்கேயே நின்றார். 

வழித்தெடுக்கப்பட்ட புட்டியை மீண்டும் மருந்து டப்பாவுக்குள்ளேயே வைத்தார்.

தோற்கடிக்கப்பட்டவர் போல் அமலாவின் திசையில் குரல் கொடுத்தார். “அவனைக்கூட்டிப்போ. எழுந்துகொள்ள மாட்டேன் என்கிறான். அழுதுகொண்டிருக்கிறான்”, என்றார். 

*

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *