பெண்களுக்கான சட்டங்களை அவர்கள் சுரண்டலுக்கான ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறார்களா?
இந்திய விடுதலைப் போராட்ட காலங்களில் விடுதலைக்கான வேட்கைக்கு இணையாகவே பட்டியல் இனத்தவர்கள், பழங்குடிகள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்கான விடுதலை வேட்கையும் ஆரம்பித்து விட்டது. பெண்களின் நிலையை நாம் பட்டியல் இன மக்களின் நிலையோடு ஒப்பிடக்கூடிய அளவில் மோசமாகவே இருந்தது. அதனால் பெண்களுக்கென தனியாகப் போராட வேண்டிய தேவையும் இருந்தது.
அதன் காரணமாகவே நமக்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது பெண்களின் உரிமையைக் காப்பதற்கான ஷரத்துகளும் சேர்க்கப்பட்டன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அடிப்படை உரிமைகள் ஷரத்து 14, 15, 16 ஆகியவை பாலின சம உரிமையைப் பற்றி பேசக்கூடியது. குறிப்பாக ஷரத்து 15(3) பெண்கள் பாலின பாகுபாட்டால் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான சட்டங்களை உருவாக்க வேண்டிய பொறுப்பு “State”(அரசு)-க்கு உள்ளதாகச் சொல்கிறது. மாநிலங்களின் கொள்கைசார் சட்டங்களுக்கு வழிகாட்டியாக செயல்படும் DPSP (Directive Principles of State policy) ஷரத்து 39(a), (c), 42 ஆகியவையும் இவற்றை வலியுறுத்துகின்றன. இவை அனைத்தின் நோக்கமும் பாலின சமத்துவத்தை நோக்கியதாகவே உள்ளது. பலவாறாக இழுபறி நிலையில் இருந்த “பொது வாக்குரிமை” (Universal adult suffrage) 1950-ல் தான் அமலுக்கு வந்தது. அதற்கு முன்பாக எல்லாப் பெண்களுக்கும் வாக்களிக்க உரிமை இல்லை என்ற சிந்தனையே இன்று நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும்.
”பெண்களுக்கு எதிரான குற்றங்கள்” (Crime Against Women) என்பதை இந்திய சட்டங்கள்(Law) பலவாறாக வகுத்து வரையறை செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் படி(IPC) கற்பழிப்பு, கடத்தல், வரதட்சிணைக்காக கொலை செய்தல், கொலை முயற்சி செய்தல், மன, உடல் ரீதியான சித்ரவதை செய்தல், பாலியல் சீண்டல்கள், பாலியல் துன்புறுத்தல்கள், 21வயதுக்குட்பட்ட பெண்களை நாடு கடத்தல் ஆகியவற்றை பெண்களுக்கு எதிரான குற்றங்களாக வகுத்துள்ளது.
ஆனால் நம் சமூக அமைப்பில் பெண்களுக்கான முதல் பிரச்சனை குடும்பங்களிலிருந்தே வந்தது. அதில் முதன்மையாகக் களையப்பட வேண்டியதாக குழந்தைத் திருமணம் அமைந்தது. அந்த வகையில் பெண்களின் திருமண வயதை அதிகப்படுத்தும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் முக்கியமான முன்னெடுப்பு. 1929-ல் நிறைவேற்றப்பட்ட இச்சட்டம் சாரதா சட்டம் என்றழைக்கப்பட்டது. அதன் பின் பெண் சிசுவதைத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று பெண்ணுக்கான திருமண வயது பதினெட்டாக உள்ளது. படித்த நடுத்தரக் குடும்பங்களில் பெண்களின் திருமண வயது இன்னும் அதிகமாக உள்ளது.
ஆனால் ஏன் அன்று பெண்கள் வேண்டாத குழந்தையாக பார்க்கப்பட்டார்கள்? முதலாவது செலவீனம். திருமணத்தின் நிமித்தம் செலவு அதிகமாகும் என்று கருதியும் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக அவர்களால் பங்களிப்பு செய்ய இயலாது என்பதாலும் பெண்சிசுக்கள் கருவில் அழிக்கப்பட்டதும், பிறந்ததும் அழிக்கப்பட்டதும் நடந்தது. வரதட்சிணை வாங்குவதே செலவீனம் என அவர்களை நினைக்கும் போக்கிற்கு காரணம் என்ற அறிதலில் வரதட்சணை தடுப்புச்சட்டம் 1961-ல் கொண்டுவரப்பட்டது.
விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த எதார்த்தவாதக் கதைகள் எழுதிய எழுத்தாளர்கள் பலரும் வரதட்சிணைப் பிரச்சனையைத் தொடும் கதைகளை எழுதினர். குடும்பத்தலைவன் எவ்வாறு அதிலுள்ள பெண்களால் தன் மகளுக்கு வரதட்சிணையை அளிக்க வர்புறுத்தப்படும் இயந்திரமாக ஆகி மன உளைச்சலுக்கு உள்ளாகிறான்; மாமியார், நாத்தனார் போன்ற குடும்ப உறுப்பினர்கள் வழி அரங்கேறும் குடும்ப வன்முறைகள் போன்ற பேசுபொருள்களில் கதைகள் அமைந்துள்ளதைக் காணலாம்.
படிப்பறிவும் பொருளாதார வளர்ச்சியும் பகுத்தறிவு சிந்தனையும் ஓரளவு இப்போக்கை குறைத்தது. பெண்கள் ஆண்களுக்கு இணையாக கல்வி கற்கும் நூற்றாண்டில் இன்று இருக்கிறோம். அவர்களுக்கு இணையாக எல்லாத்துறையிலும் சாதிக்க முடியும் என நிரூபிக்கும் நூற்றாண்டு இது. பொருளாதாரச் சுதந்திரமும், இயங்கு சுதந்திரமும் இருக்கும் பெண்கள் இன்று குடும்பத்திற்கு பாரமாக இல்லை.
இத்தனைக்கு மத்தியிலும் குடும்ப வன்முறை சார்ந்த பிரச்சனைகளும் விவாகரத்துகளும் அதிகமாகி வந்த சூழ்நிலையில் குடும்ப வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 2005-ல் கொண்டுவரப்பட்டது. தொண்ணூறுகளின் ஆரம்பத்திலேயே பெண்ணெழுத்து, உடலரசியல் போன்ற சிந்தனைகள் இலக்கியத்தில் உருவாகி வந்தன. அதன் உச்சமாக அதில் தீர்வு கண்டிருக்க வேண்டிய புத்தாயிரம் ஆண்டு காலகட்டத்தில் தான் குடும்ப வன்முறை வழக்குகள் அதிகமாகின. விவாகரத்து வழக்குகள் அதிகமாகும் போக்குகளும் வளர்ந்து வருகின்றன. கூட்டுக் குடும்ப அமைப்பிலிருந்து மனிதன் தன்னை விடுவித்துக் கொண்டு தனிக்குடும்பமாக ஆகி இன்று தனியனாக சுருங்கும் போக்கும் வளர்ந்து கொண்டிருக்கும் காலகட்டமிது.
இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் முன்னேறிய தென்னிந்திய மாநிலங்களிலாவது சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. பெண்பிள்ளைகளை ஆண் பிள்ளைகளுக்கு நிகராக வளர்க்கும் பொதுப்போக்கு படித்த நடுத்தர மேல்தட்டுக் குடும்பங்களில் நிகழ்ந்துள்ளது. ஆனால் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதன் நோக்கம் ஒரு பாலின சமத்துவ சமூகத்தை(Gender Neutral Society) உருவாக்க வேண்டும் என்பதற்காகவே என்ற எண்ணம் மறைந்துவிட்டதா என்ற எண்ணம் சமீப கால நிகழ்வுகளின் மூலம் எழுகிறது.
குடும்ப அமைப்பில் ஆண், பெண் இருவரும் அனுபவிக்கும் வசதி வாய்ப்புகள் அதிகம். தனித்திருந்து உறவுச்சிகல்களுக்கு ஆளாகி மன உளைச்சல்களால் மனநலம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருகிறது. பெரியவர்கள், குழந்தைகள் ஆகியோர் தனித்துவிடப்படுபவர்களாக ஆகிறார்கள். இப்பிரச்சனையைத் தீர்க்க மேற்குலகு கிழக்கிலிருந்து குடும்ப அமைப்பை வலுவாக்கும் போக்கை கற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம் எப்போதும் போல அவர்கள் கைவிட்டுவிட்டு நகரும் ஒன்றை நோக்கி தீவிரமாக நகர்கிறோமா என்ற சிந்தனை எழுகிறது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் “இரண்டாயிரம் வருடமாக பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதால் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய சட்டபூர்வமான பாதுகாப்பையும், முன்னுரிமையையும் உடனடியாக ஒரு சுரண்டலாக்கிக் கொள்கிறார்களா என்பது பெரிய கேள்வி?” என்று கூறியிருந்தார். குறிப்பாக இவை தமிழகம், கேரளா போன்ற முன்னேறிய மாநிலங்களிலும், மேல்தட்டு, நடுத்தர குடும்பங்களிலும் உள்ள நவீனப்போக்கு என்றும் கூறினார். பெரும்பான்மை அறிவுச்சமூகம் ஏற்றுக் கொள்ளாத இந்தக் கருத்து நம்மைச் சுற்றி நம் குடும்பத்தில், நண்பர்களுக்கு நடக்கும் விஷயங்களைக் கண்டாலே புரியும் எனத் தோன்றுகிறது.
நீலி இந்தக் கருத்தை பல்வேறு அறிவுத்தரப்பினர்கள் வழியாக தொகுத்துக் கொண்டு அதற்கான காரண காரியங்களை, தீர்வுகளை உரையாட விரும்புகிறது.
-ரம்யா
*
(1) வழக்கறிஞர் V.S. செந்தில்குமாருடனான உரையாடல்
வரதட்சிணை தடுப்புச் சட்டம் 1961-ல் ஏற்படுத்தப்பட்டது. 1986-ல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. அதையும் மீறி 2005-ல் குடும்ப வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதற்கான தேவை என்ன?
வரதட்சணை தடுப்பு சட்டம் மற்றும் 498 (A) இந்திய தண்டனை சட்டம் பெண்களுக்கு அவர்களின் கணவராலும் அவரது குடும்பத்தாராலும் இழைக்கப்படும் வரதட்சணை கேட்டு சித்தரவதை மற்றும் இதர கொடுமைகளிலிருந்து சட்ட பாதுகாப்பு அளிக்கிறது. மேற்சொன்ன சட்டவிதிகளில் அவ்வப்போது தேவைக்கேற்ற திருத்தங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த சட்ட பாதுகாப்பு பெண்களுக்கு முழுமையானதாக இல்லை அதில் பல்வேறு குறைபாடுகள் நிறைந்து இருக்கின்றன. முக்கிய குறைபாடாக இரண்டைக் கூறலாம் ஒன்று ஒரு பெண் தனக்கு நேர்ந்த பாதிப்புகளை, அநீதிகளை காவல்துறையை அணுகி தனக்கான நீதியை பெறலாம் ஆனால் அதில் கடுமையான நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மேலும் அதில் உடனடி தீர்வு இல்லை. இரண்டாவது குற்றமிழைத்தவர்களை தண்டிக்க முடியும் ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்த நிவாரணத்தையும் குறிப்பாக பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான எந்த தீர்வும் மேற்சொன்ன சட்ட விதிகளில் இல்லை.
இந்த குறைகளையெல்லாம் தீர்க்கும் வகையிலும், சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான முன்னெடுப்பின் காரணமாகவும் 2005-ல் குடும்ப வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும், ஒடுக்குமுறைகளையும் ஒழிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், 1994-ல் வியன்னா மாநாட்டில் மனித உரிமை மீறலில் உலகமெங்கும் முதலிடத்தில் இருக்கும் பெண்களுக்கு எதிரான அநீதிகளை குறிப்பாக குடும்ப வன்முறையை தடுக்கும் பொருட்டு இயற்றப்பட்ட விதிகளும் நம் குடும்ப வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு அடிப்படை ஆகும்.
குடும்ப வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் சிறப்பு என்பது இது ஒரு குற்ற வழக்காக நடத்தப்படாமல் இருப்பதும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உரிமைகளை முடிந்தவரை உடனடியாக பெற்றுத்தருவது மேலும் அவர் தனது வாழ்வை மேற்கொண்டு நடத்த குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதும் ஆகும். சமூக நல பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்களை கொண்டு தேவையான உதவிகள், மனநல மருத்துவ ஆலோசனைகள் என்று பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டெடுக்கும் வழிவகைகள் இந்த சட்டத்தில் உண்டு.
மிக முக்கியமாக குடும்ப வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்து கணவருடன் தான் வசித்து வந்த இல்லத்திலேயே மேற்கொண்டு வாசிப்பதற்கான சட்டப்பாதுகாப்பு இந்த சட்டம் வழங்குகிறது. இது பெரும் புரட்சி என்றே கூறலாம். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கணவர் ஒரு குறிப்பிட்ட இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
இப்படி பல்வேறு சட்ட திருத்தங்களும், புது சட்டங்களும் பெண்கள் நலன் காக்க இருப்பது போதுமான பயனை அளிக்கிறதா என்றால் “இல்லை” என்பதுதான் உண்மை. காரணம் சட்ட விதிகளிலே இன்னும் சரி செய்யவேண்டியவை அதிகம் உள்ளன. அவ்வாறு செய்யப்பட்டாலும் அதை நடைமுறைபடுத்தி பெண்களை ஒடுக்குமுறையிலிருந்து பாதுகாப்பதற்கு இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக மிக அதிகம்.
பெண்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை உறுதி செய்யவும் ஒரு மேன்மையான நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட இச்சட்டங்களை இன்று சில பெண்கள் குறிப்பாக படித்த, மேல் மற்றும் நடுத்தர பெண்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள், பல்வேறு பொய்வழக்குகள் கணவர் மேல் மட்டுமல்லாமல் அவரின் தாய், தந்தை, சகோதர, சகோதரி மற்றும் உறவினர்கள் மேலும் போடப்பட்டு அவர்களை சிறைக்கு அனுப்புவது பெருமளவு நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு எந்த அளவு உண்மை என்பதை பற்றி விவாதிப்பதற்கு முன் சில விசயங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
முன்னேறிய பகுத்தறிவு வாய்ந்த தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழகம் கேரளா போன்ற மாநிலங்களில் ஆண்கள் மேல் பெண்கள் பொய்க்குற்றச்சாட்டுகள் போடும் வழக்கம் அதிகரித்துள்ளதா? ஆண்கள் சுரண்டப்படுகிறார்களா?
நமது நாட்டில் பொய் குற்றச்சாட்டு என்பது மிக அதிகம். சாதாரணமாக காசோலை வழக்குகளில் ஆரம்பித்து கற்பழிப்பு வழக்கு வரை அனைத்திலும் பொய் வழக்குகள் போடப்படுகின்றன. ஆகவே பெண்கள் சிலர் பொய் வழக்கு தொடுப்பது தவறில்லை அல்லது அதை பெரிதுபடுத்த கூடாது என்பது ‘வாத பிழை’. மேலை நாடுகளில் பொய் குற்றச்சாட்டுகளுக்கான விளைவுகள் கடுமையாக இருக்கும். இங்கு அவ்வாறில்லை என்பதால் அதிக பொய் குற்றச்சாட்டு வழக்குகள் தொடுக்க படுகின்றன.
உண்மையில் பெண்களுக்கான சட்டத்தை அவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்களா குறிப்பாக படித்த மேல், நடுத்தர வர்க்க பெண்கள் என்ற விவாதத்திற்குள்ளும் நான் செல்ல விரும்பவில்லை ஏனெனில் அதுவும் முடிவற்ற விவாதமாகவே இருக்கும்.
இன்று இந்தியாவில் பெருமளவில் தவறாக பயன்படுத்தும் சட்டங்களில் ஒன்றாக கருதப்படுவது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சட்டம் 1989 (SC & ST Prevention of atrocities Act ). நம் சுற்றத்தார் கூற்றின் மூலமும், தனிப்பட்ட அனுபவங்களின் மூலமும் அது உண்மை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அவற்றை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவெங்கும் பெரும் விவாதத்திற்கு உட்பட்ட “Dr.சுபாஷ் காசிநாத் மஹாஜன் எதிர் ஸ்டேட் ஆப் மகாராஷ்டிரா” வழக்கில் உச்சநீதிமன்றம் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் U.U லலித் அமர்வு எவ்வாறு வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும், எத்தனை பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் நிருபிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மிக விரிவாக விவாதிக்கிறது.
அர்னிஷ் குமார் எதிர் ஸ்டேட் ஆஃப் பிஹார் வழக்குகள் இங்கு கைது என்பது எவ்வளவு முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பதையே காட்டுகிறது. தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள சில தரவுகளின்படி “2016-ல் காவல்துறை கையாண்ட பட்டியல் இன, பழங்குடியினர் சார்ந்த வழக்குகளைப் பொறுத்து பட்டியல் இன மக்கள் சார்ந்த வழக்குகளில் 5347 வழக்குகளும் பழங்குடியினர்கள் பொறுத்து 912 வழக்குகளும் பொய் வழக்குகளாக மதிப்பிடப்படுகின்றன. 2015-ல் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட 15638 வழக்குகளில் 11024 வழக்குகள் விடுதலை செய்யப்பட்டன. 495 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. 4119 வழக்குகள் குற்றம் நிரூபிக்கப்பட்டது”.
இவ்வாறு வன்கொடுமை சட்டத்தில் பொய் வழக்குகள் போடப்படுவதும், அதை சுயநலத்திற்காக தவறாக பயன்படுத்துவதை உறுதி செய்தபின் அவற்றை தடுக்கும் விதமாக சில மாற்றங்களை சட்ட விதிகளில் கொண்டுவந்தனர். அதில் முக்கியமானது வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு முன்ஜாமின் கிடையாது என்ற நிலையை மாற்றியது. மேலும் ஒரு அரசு அலுவலர் இக்குற்றத்தில் ஈடுபட்டால் அவரை கைது செய்ய அவரை நியமிக்க அதிகாரம் உள்ள மேலதிகாரியிடம் ஒப்புதல் பெற வேண்டும். இவ்வாறு இன்னும் சில.
இத்தீர்ப்பினால் தேசமெங்கும் பெரும் சர்ச்சையும் , போராட்டமும் நிகழ்ந்தது எனவே மத்திய அரசு இத்தீர்ப்பை செயலிழக்கும் வகையில் சில சட்ட திருத்தங்களை கொண்டு வந்து வன்கொடுமை சட்டத்தை பழைய நிலைமையிலேயே நீடிக்கச் செய்தது.
தலித் மற்றும் பழங்குடியினர் அவர்களின் உரிமைகளை காக்கும் பொருட்டும், ஜாதி என்ற பெயரில் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தடுக்கும் பொருட்டும் கொண்டுவரப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பலர் தவறாக பயன்படுத்தி, பொய் வழக்கு போட்டு, மற்றவர்களை மிரட்டி, தங்கள் சுயநலத்திற்காக செயல்படுகிறார்கள் என்பதை நம் தனிப்பட்ட அனுபவம் மட்டுமன்றி உச்ச நீதிமன்றமே மிக விரிவான தரவுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளது. ஆகவே அந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது.
இப்போது நம் முன் உள்ள கேள்வி ஒன்றுதான். இவ்வாறு உண்மை இருக்கையில் நாம் அதை வெளிப்படையாக கூறலாமா? விவாதிக்கலாமா? உச்ச நீதிமன்றம் கூறியது போல் அல்லது இங்கு பெரும்பான்மையோர் விருப்பப்படுவது போல் வன்கொடுமை சட்டத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் ஒடுக்கப்பட்டோர் மேலும் பாதிக்கப்படத்தான் வழிவகுக்கும். இந்த சட்டங்கள் வந்த பிறகுதான் ஓரளவேனும் அவர்கள் மரியாதையாக நடத்தப்படுகிறார்கள். குறைந்தபட்சம் பொதுவெளியில். இவ்வளவு கடுமையான சட்ட விதிகள் இருந்தும், அவர்கள் இன்னும் எவ்வளவு ஒடுக்குமுறையை அனுபவிக்கிறார்கள் என்று மனசாட்சி உள்ள அனைவரும் அறிவர்.
அனுபவங்களின் மூலம் அல்லது தரவுகளின் மூலம், தலித் சிலர் பொய்வழக்கு போடுகிறார்கள் என்றோ, வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றோ பேசுவது, விவாதிப்பது அவர்களுக்கு அநீதி இழைப்பதாகும். “அவர்கள் தவறு இழைத்தாலும் அதற்கான வரலாற்று நியாங்கள் அவர்களுக்கு உண்டு” என்பார் எழுத்தாளர் ஜெயமோகன்.
நான் மேற்சொன்ன அனைத்து வாதங்களும் பெண்கள் உரிமைகளை காக்கும் சட்டங்களுக்கும் அப்படியே பொருந்தும். பலநூறு ஆண்டுகாலமாக கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு சமூகம், இன்றும் பெரிய அநீதிகளையும், கொடுமைகளையும், குடும்ப வன்முறைகளையும் சந்தித்து வரும் ஓர் சமூகம், சிறிது சிறிதாக சட்ட பாதுகாப்பைப் பயன்படுத்தி தங்கள் சுதந்திரத்தை, உரிமைகளை மீட்டெடுக்கும் சமூகம், பூரண சமத்துவத்திற்கு இன்னும் பல போராட்டங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய சமூகம் இன்னும் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.
நாம் எதிர்மறையாக சொல்லும் சிறு கருத்துக்களும் அவர்களுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும். உண்மையில் இங்கு பெரும்பான்மையானோர் விரும்புவது பெண்களுக்கு அளிக்கப்படும் சட்ட பாதுகாப்பை, சலுகைகளை ஒழிக்க வேண்டும் என்பதுதான். “இந்தியால எல்லா சட்டமும் பொம்பளைக்கு தான் ஆதரவா இருக்கு, அவங்க நினச்சா என்னவேணா பண்ணலாம்” போன்ற வார்த்தைகளை நாம் எங்கு சென்றாலும் கேட்கலாம். மிகச்சிலர் தான் இதற்கு எதிராக உண்மையாகப் போராடுகிறார்கள் (முகநூல் போராளிகளை கவனத்தில் கொள்ள வேண்டாம்).
இருபது வருடங்களுக்கு மேலாக வழக்கறிஞராக செயல்பட்டு வரும் உங்கள் பார்வையில் இன்றும் குடும்ப வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களாகத்தான் இருக்கிறார்களா? குறைந்தபட்சம் ஆண் பாதிக்கப்பட்டாலும் அதுவும் ஒரு பாலின சமன்குலைவுக்கான போக்கு தான் இல்லயா? அவற்றைத் தடுக்க சட்ட ரீதியாக அமைப்பு ஏதேனும் ஆண்களுக்கு தேவையுள்ளதா?
குடும்ப வன்முறையில் அதிகம் பாதிக்கப்படுவது ஆணா அல்லது பெண்ணா என்ற வினாவே அபத்தமானது. இப்படிப்பட்ட விவாதங்களை தவிர்க்க வேண்டும். குடும்ப உறவில் பெண்கள், ஆண்களை கொடுமை செய்வதில்லையா? பெண்கள் அளவுக்கு இல்லையெனினும் சிறிய சதவீதத்திலாவது ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள் இல்லையா என்ற கேள்விக்கு, ’ஆம்’ சிறிய அளவில், ’இல்லை’ பெரிய அளவிலேயே பெண்களால் ஆண்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குடும்ப உறவில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். ஆனால் அது தனி நபர் குணநலன் சார்ந்தது. பெண்கள் கொடுமை செய்தால் தனிநபர் குண நலன். ஆண்கள் செய்தால் சமூக குற்றமா என கேள்வி எழலாம்.
இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை நாம் தெளிவு படுத்தி கொள்ளவேண்டும். உலகெங்கிலும் பாகுபாடு, வன்கொடுமை என்பதை வரையறை செய்கையில், இனம், மதம், மொழி, ஜாதி, பாலின வேறுபாடு மற்றும் பிறப்பிடம் காரணமாக இயல்பிலேயே சில அதிகாரத்தை அடைந்து, அதை கொண்டு சிறுபான்மையோரை, ஒடுக்கப்பட்டோரை அவமதித்தல், உடல் ரீதியாக துன்புறுத்துதல், பாகுபாடுடன் நடத்துதல் போன்றவற்றை தான் குற்றம் என்று வரையறுக்கிறார்கள். அதை தடுப்பதற்குத்தான் சட்டம் இயற்றப்படுகிறது. எங்கும் பெண்கள் தாங்கள் பெண்கள் என்பதாலேயே ஒரு அதிகார நிலையை பெற்று அதன் மூலம் ஆண்களை கொடுமை செய்வதில்லை. அவ்வாறு செயல்பட்டால்தான் நாம் ஆண்கள் சார்பாக குரல் கொடுக்க, போராட வேண்டும். சட்ட ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் பாதுகாப்பை உருவாக்க வேண்டும். அதற்கான தேவை இப்போது இல்லை.
சட்டங்கள் மாற்றம் பெறுவதை காட்டிலும் மிக முக்கியம் என நான் கருதுவது, பெண்கள் பற்றியான பார்வையை சமூகம் மாற்ற வேண்டும் என்பதுதான். வெறும் சட்டங்கள் மூலம் மட்டுமே அனைத்து தீர்வையும் எட்டிவிட முடியாது
ஆண்-பெண் உறவுச்சிக்கல் சார்ந்தும் Adultery போன்ற சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. மாறிவரும் சூழலில் சுயம் நோக்கி அமைந்து வரும் தலைமுறைகளில் ஏற்படும் உறவுச்சிக்கலுக்கான தீர்வுகளாக சட்டங்கள் இன்னும் எவ்வாறு மாற்றம் பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? பாலின சமத்துவத்தை நோக்கி நகர இன்னும் எத்தனை தொலைவு நாம் செல்ல வேண்டும்?
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 497 (Adultery) ஒரு மணமான பெண் வேறொரு ஆணுடன் உடல் ரீதியான தொடர்பில் இருந்தால், அந்த பெண்ணின் கணவர், தொடர்பில் உள்ள அந்த ஆணின் மீது குற்ற வழக்கு தொடுக்க முடியும் என்பதைச் சொல்கிறது.
சமீபத்தில் உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஜோஸஃப் ஷைன் எதிர் இந்திய ஒன்றியம் என்ற வழக்கில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 497-ஐ, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, அந்த சட்ட பிரிவை நீக்கி தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை முழுமையாக படிக்காமலும் குறைந்தது தீர்ப்பின் சாராம்சத்தையாவது தெரிந்து கொள்ளாமல் பலர் இங்கு உச்சநீதிமன்றம் கள்ள உறவை அங்கீகரிக்கிறது என்று குற்றம் சாட்டினர். பல பத்திரிகைகளும் அப்படிதான் எழுதின.
உண்மையில் இந்த மொத்த சட்ட பிரிவும் எதன் அடிப்படையில் உள்ளது என்றால், மனைவி என்பவள் ஆணின் கட்டுப்பாட்டில் உள்ள, எதையும் தன்னளவில் முடிவு எடுக்க முடியாத, கணவனுடைய ஒரு உடமை. ஒன்றும் அறியாத மனைவியை பாதுகாத்து, காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கணவனுக்கு உள்ளது என்ற ஆதிகால ஆணாதிக்க சிந்தனையின் கோட்பாட்டின்படி இந்த சட்ட பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் ”இந்த சட்டப்பிரிவு கணவரை மனைவியின் பாதுகாவலர் (Master of Wife) என்று எண்ணுகிறது. பெண்களை சமத்துவம் இல்லாமல் பாகுபாட்டுடன் நடத்துகிறது. ஆகவே அரசியலமைப்பு எதிராக உள்ளது” என்று கூறினார். இந்த அமர்வில் இருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா இதை “institutionalises Discrimination” என்கிறார். தற்போதைய தலைமை நீதிபதி சந்திரா சூட் “பிரிவு 497 பெண்ணின் கெளரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் ஒன்றாகவும் ஒருதலை பட்சமாகவும் செயல்படுகிறது. இந்தப்பிரிவு பெண்ணின் பாலியல் சுதந்திரத்தையும் அவமரியாதை செய்கிறது” என்றார். உண்மையில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்பேன்.
உயர் பதவிக்கான பதவி உயர்வில் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம்சாட்டி பெண் ராணுவ அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது ”மத்திய அரசாங்கம், இராணுவம் போன்ற துறைகளில் தலைமை பதவிகளில் பெண்களை நியமிக்க முடியாது. ஏனெனில் அவர்களுக்கு சில physiological limitations உள்ளது. மேலும் கீழ் பணிபுரியும் ஆண்கள் பெண் அதிகாரிகளை ஏற்று கொள்ளும் மனநிலைக்கு இன்னும் வரவில்லை (the troops are not yet mentally schooled to accept women officers in command)” என்ற ஒரு பதில் மனுவைத் தாக்கல் செய்கிறது. இது வெறுமே அரசின் நிலைப்பாடு அல்ல மாறாக நம் சமூகத்திலுள்ள பெரும்பான்மையோரின் பெண்கள் பற்றிய பார்வையையே அரசு பிரதிபலிக்கிறது எனலாம்.
பெண்களே தங்கள் தேவை என்ன, தங்களின் உரிமை எது என்பதில் சரியான நிலைப்பாடு இல்லாமல் தான் இருக்கிறார்கள். போலி முற்போக்குவாத பிரச்சார அலையில் அவர்கள் எளிதில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். இங்கு இப்போது பெண்ணியம் சார்ந்து கேட்கும் பல குரல்கள் வெறும் உடல் சார்ந்த சுதந்திரம் பற்றி மட்டுமேயாக உள்ளது. மாற்று கருத்தே இல்லாமல் உடல் சார்ந்த சுதந்திரம் என்பது பெண்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று எனவே அதைக் கோர அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. ஆனால் அது மட்டுமே பாலின சமத்துவத்தை கொடுத்துவிடாது. தேசிய பாதுகாப்பு அகாதமி (National Defence Academy) கல்லூரியில் சென்ற ஆண்டு முதல் தான் பெண்களுக்கு அனுமதி அளித்தது. அதுவும் உச்சநீதிமன்றத்தின் தொடர்ச்சியான அழுத்தத்தின் காரணமாக. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்பும் இந்திய முப்படைகளுக்கான அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் கல்லூரியில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பது எவ்வளவு பெரிய சமூக இழிவு. பெண்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி. ஆனால் இதைப்பற்றி எல்லாம் எந்த பெண் அமைப்பும் பேசுவதில்லை, போராடுவதில்லை. மாறாக சபரி மலையில் பெண்களை அனுமதிக்கலாமா கூடாதா என்பது தான் இந்திய அளவில் பேசுபொருளாக உள்ளது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் விழாவில் ஆண்களை ஏன் அனுமதிப்பதில்லை என்ற எளிய வினாவிற்கு ஒருவர் சிந்தித்து வினா கண்டடைந்தால் மேற்சொன்ன தேவையற்ற விவாதங்களை தவிர்த்து உண்மையில் பெண்களுக்கு தேவையான உரிமைகளை பற்றி ஒரு விவாதத்தை உருவாக்கி ஜனநாயக முறையில் போராடி பாகுபாடுகளை அகற்றலாம்.
மானுட சமத்துவம் என்ற மகத்தான கனவில் பாலின சமத்துவமும் அடங்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.
*
(2) வழக்கறிஞர் & எழுத்தாளர் பார்கவியுடனான உரையாடல்
குடும்பங்களில்/பொதுவெளியில் பெண்கள் சந்தித்து வந்த பிரச்சனைகள் நவீன வாழ்க்கைச் சூழலுக்கேற்பவும், மாறிவரும் உறவு சார் சூழல்களுக்கேற்பவும் மாறியுள்ளதாக நினைக்கிறீர்களா? இன்று பெண்கள் சந்தித்துவரும் அநீதிகள் என்ன?
உயர்பதவி மறுப்பு, சம்பளத்தில் ஏற்றத்தாழ்வு, அடிப்படைச் சுகாதார வசதி இன்மை என்று தொடங்கி ஆணவக் கொலை, பாலியல் வன்கலவி வரை பல தளங்களில் பல வகையான அநீதிகளை பெண் சந்திக்க நேரிடுகிறது. இவை எல்லாம் அவள் பெண் என்ற பாலினத்தைச் சேர்ந்தவள் என்ற ஒரே காரணத்தினால். இதைத் தவிர பொருளாதார, சாதி, மத இன, நிற, தோற்றம் சார்ந்த பாகுபாடுகள் தனி.
அணுக்கர் மூலமாக பெண்கள் அனுபவிக்கும் (intimate partner violence) வன்முறை என்பது சர்வதேச அளவிலான பொது உடல் நலவியல் (public health issue) சார்ந்த சிக்கலாக பார்க்கபடுகிறது. அது பெண்களுக்கும் குழந்தகளுக்கும் உடல் மற்றும் மன ரீதியாக சிக்கல்களை நீண்ட கால விளைவுகளைக் கையளிப்பது. பெண்கள் மீதான வன்முறை நடுத்தர மற்றும் கீழ் நிலை வருமானம் உள்ள நாடுகளில் மேலதிகமாகக் காணப்படுகிறது என்கிறது லான்செட் பத்திரிக்கையில் வெளியான ஆய்வு. அதாவது வருமானம் அதிகமாகி, பெண்கள் படிக்கும் பொழுது அங்கு பதிவாகும் வன்முறைச் சம்பவங்கள் குறைகின்றன. வளர்ந்த சமூகத்துப் பெண்கள் தன்னை தற்காத்துக்கொள்கிறார்கள் என்று இதை நேரடியாகவே புரிந்து கொள்ளலாம். இதையே துணுக்குச் செய்தியாக்கினால், படித்த மேல் வகுப்புப் பெண்கள் ஆண்களை கொடுமை செய்கிறார்கள் என்று எதிர்மறையாக காணலாம். அனால் அது உண்மைக்கு மிக தொலைவில் இருப்பது.
அன்பும் மரியாதையும் இருக்கும் மண உறவில் இயல்பாகவே ஆணும் பெண்ணும் சமூக வார்ப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறார்கள். இந்த வகைமையில் கணிசமானவர்கள் படித்து வேலையில் இருப்பவர்கள். இதில் கல்வியும் பொருளாதாரச் சுதந்திரமும் அதி முக்கியமான பங்கை வகிக்கிறது – இரண்டில் ஒன்று குறைந்தாலும் அது அதிகாரச் சமனிலை இன்மைக்கு வித்தாகிறது.
இப்படி இரண்டும் அமையப்பெற்ற பெண்கள் வேறு வகையில் மண உறவை கேள்விக்குட்படுத்துகிறார்கள். மரபாக பெண் செய்து வந்திருந்த அத்தனை செயலையும் தான் செய்து ஆணுடைய பஸ்தி என்று சொல்லப்பட்ட துறைகளிலும் கோலோச்சுவதால், இந்த ஆண் என் வீட்டில் என்னவாக இருக்கிறான், ஏன் இருக்கிறான் என்று அவனுடைய இருப்பை, பயன்பாட்டை ஆராய்கிறாள். இது பல மனமுறிவுகளுக்குக் காரணமாக அமைந்தாலும், இவை அஹிம்சை முறையில் நடைபெறுகிறது என்பது என் அவதானிப்பு.
இப்படி அமையாத பெண் மரபான பெண்ணாகவும் தன்னை காட்டிக்கொள்ள இயலாமல் நவீன விழுமியங்கள் கொண்ட பெண்ணாகவும் வலம் வர முடியாமல் திணறுகிறாள். மரபான பெண்ணிற்கு இருக்கும் குடும்பம் என்ற குறிக்கோளும். நவீன பெண்ணிற்கான கல்வி-வேலை என்ற குறிக்கோளும் இல்லாத இந்த புதுமைப் பத்தினி யார்? ஏதோ ஒருவகையில் அவர் தன் குடும்பத்திற்கும் இந்தச் சமூகத்திற்குமே கூட ஓட்டுண்ணியாக மாறி விட முடியும். இத்தகையவர் இயல்பாக பெண் என்ற அடையாளத்தை தவறாக பயன்படுத்திககொள்ள முடியும்.
சென்ற தலைமுறையில் பாதிக்கப்பட்டு அமைதிகாத்த அம்மாக்களும் பாட்டிகளும் படித்து, சம்பாதிக்கும் மகள்களின் மணமுறிவைக் கண்டு அஞ்சுவதில்லை. மனைவியை ஜீன்ஸ் அணியாதே என்று சொன்ன ஆண் அதே வரியை மாப்பிள்ளை சொன்னதற்காக வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு தன் மகளை அழைத்து வருகிறார். கணவன் – தந்தை என்ற இரு வேறு முகங்கள் இருக்கும் ஆண்கள் பல. இது முரண் அல்ல, பெண்கள் திருப்பியடிக்கவில்லை. இது ஆண்களுக்கெதிரான போராட்டம் அல்ல, ஒரு உயிர்க்குலம் தன்னைச் செலுத்தி நிலை நிறுத்திக்கொள்ளும் தருணம். இயல்பான காலமாற்றம்.
குடும்ப வன்முறையில் முதன்மையாக சொல்லப்படும் மாமியார் கொடுமை என்பது பெண், பெண்ணுக்கே செய்யும் அநீதி தானே?
இதை என்னால் பெண் எதிர் பெண்ணாக பார்க்க முடியவில்லை. மாப்பிள்ளையிடம் மாமனார் கொடுக்கும் வரதட்சணை கொடுமையை ஆண் ஆணுக்கு இழைக்கும் அநீதியாகக் கொள்ள முடியுமா? ஆண் பெண் பேதத்தைத் தாண்டி மனிதர்களின் ஆழத்து இருட்டும் கசடும் வெளிப்படுகிறது. அன்பு அதிகாரமாக மாறி பின் ஆயுதமாக மாறுகிறது..
உளவியல் ரீதியாக பெண்ணுடைய தந்திரமான(manipulative) செயல்பாடுகள் ஆண் மையச் சமூகத்தின் விளைவா என்றால், அப்படி நேரடியாக சமூகத்தை மட்டும் குற்றம் கூற முடியாது தான். அது பெண்ணின் உணர்வுசார் நுண்ணறிவின் எதிர் வெளிப்பாடு. ஆனால் அது ஆண் மைய சமூகத்தால் எவ்விதம் கையாளப்படுகிறது என்பதையும் யோசிக்கலாம்.
அப்பொழுது பெண்களுடைய எதிர் செயல்பாடுகளெல்லாம் அவர்கள் மனிதர்கள் என்பதால் வருகிறது, ஆனால் அவர்கள் பாதிக்கப்படும் போது திடீரென்று ‘பெண்’ என்ற அடையாளம் தேவைப்படுகிறதா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இதே தான் உடல் குறைபாடுகள் உள்ளவருக்கும், ஒடுக்கப்பட்டவர்க்கும். இந்த சிறப்பு அடையாளங்களாலேயே அவர்கள் தனி ஒரு வர்க்கமாக (distinct class) ஆகிறார்கள். ஆனால் பெண்களால் பாதிக்கபட்ட ஆண்கள் தன்னளவில் ஒரு வர்க்கமாக மாறிவிட்டார்களா? அதற்கு பதில் ”ஆம்” என்றால் ஆண்களைப் பாதுகாக்கும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கான சட்ட திருத்தங்களும் சமூக அமைப்புகளும் வர வேண்டும்.
குடும்ப வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்படுவது யார்? குறைந்த அளவு ஆண் பாதிக்கப்பட்டாலும் அது பாலின சமத்துவத்தை நோக்கிச் செல்லும் மானுடத்தில் சமன்குலைவுக்கான போக்கு தான் இல்லயா. இந்தக் கேள்வியை ஒரு வழக்கறிஞராக நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
‘குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது – ஆண்களே! / பெண்களே!’ என்று பட்டிமன்ற விவாதங்கள் நடத்தும் அளவிற்கு அதிகம் விவாதிக்கப்பட்ட கேள்வி இது. இது உள்ளீடற்றது என்று நான் நம்பவில்லை. இதை ஒரு மானுடச் சிக்கலாகப் பார்க்காமல், தன்னனுபவத்திலிருந்து ஒரு நூலை திரித்து முகநூல் விவாதமாக மடை மாற்றுவதில் அதீதமாக எளிமைப்படுத்தப்படுகிறது. அபத்தமாகிறது. பல வேளைகளில் பெண்-வெறுப்பாகவே மாறி விடுகிறது.
பெருந்தொற்றுக்காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்னெடுத்த ஆய்வில் மூன்றில் ஒரு பெண் இணையரின் மூலமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள் என்பது தெரிய வந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட நிறையில் ‘பேரழிவுக்கால நாயகர்கள்’ என்று அறியப்பட்ட மருத்துவர்களும் செவிலியர்களும் அடக்கம். குடும்ப வன்முறையில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பது என் தனிப்பட்ட கருத்தல்ல, தரவு.
ஆகவே, நியாயம் பெண்கள் பக்கம் தான் உள்ளது என்று பொதுவாக சொல்லவில்லை. ஒப்பு நோக்க குறைந்த எண்ணிக்கை என்றாலும் ஆண்களும் குடும்ப வன்முறையில் பாதிக்கப்படுகின்றனர். உண்மையில் இம்மாதிரி வழக்குகள் தனித்தனியாக அலசப்படவேண்டியவை. மனைவிகளின் உளவியல் ரீதியான முறைகேடுகள் வழக்குகளில் கொணரப்பட்டு விவாகரத்து வாங்கப்பட்டிருக்கிறது. எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய மனைமாட்சி நாவலில் உடல் ரீதியான வன்முறையில் ஈடுபடும் மனைவியின் சித்திரத்தை தீட்டி இருப்பார். பெண் என்பதனால் அவளுக்கு சட்டம் துணை போக வேண்டும் என்பது என் வாதம் அல்ல. இந்தப் போக்கை நான் அதிகம் கேள்வி உற்றதில்லை என்றாலும் எனக்கு இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பெலிக்ஸ் பிரான்க்புர்டர் அடிப்படை உரிமைகள் சட்ட மசோதாவை (Bill of Rights) முன்வைத்து கூறிய சொற்களை இங்கு மேற்கோள் காட்ட விழைகிறேன், ‘மனிதன் மனிதனாக இருப்பதின் காரணமாகவே, அவனிடம் பிறரின் உரிமைகளைப் பறிக்கும் முழு அதிகாரத்தையும் நம்பி தருவதற்கில்லை.’
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றால் நீங்கள் ஆச்சரியப்படக் கூடாது. கலப்பு மணத்தை உடைப்பதற்கு பெற்றோர் பாலியல் வன்கொடுமை புகார் அளிப்பதும் இந்த வகைமையைக் சேர்ந்தது தான். துஷ்பிரயோகம் செய்யப்படும் சட்டங்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக பெண்ணின் பாலியல் ஒழுங்கு தொடர்பான சட்டங்கள் எப்படி சாதிய ஆயுதமாக மாறுகிறது என்பதை தெளிவாகவே கண்டுணரலாம். பல வகையில் சமூக ஒற்றுமை வந்தாலும் பெண்ணின் உடலில் தான் சாதியும் மதமும் அதன் மூலம் இயங்கும் நம் குடும்பங்களும் இச்சமூகமும் வேர் கொண்டுள்ளன.
என்றாலும், மாமனார் மாமியாரை கைது செய்யவைத்து பழி உணர்ச்சியுடன் வழக்கு நடத்தி பிள்ளைகளை தந்தையிடமிருந்து பிரிக்கும் பெண்களும் உள்ளனர். பெரியோரைப் பேணுதல், உணவு சமைத்தல், பிள்ளைகளை வளர்த்தல் என்று, மனைவி கணவனின் துணை அறவே இல்லாத காலத்திலிருந்து தான் மட்டுமாக செய்து வந்த முக்கியமான கடமைகளை, ஏதோ ஒரு சட்டத்தின் துணை கொண்டு ஒரே இரவில் துறந்து விட்டாளா? இல்லை. இது ஒரு விழுமிய மாற்றம். நாம் தனி மனிதர் சார் சமூகத்தில் அடியெடுத்து வைத்துவிட்டோம். வழக்கமான மாதிரிகளிலிருந்து மனிதர்கள் திமிறி எழுந்து வருகின்றனர். லாவெண்டர் திருமணங்கள் (உறவில் ஒருவர் ஒரு ஓரினச் சேர்க்கையாளராக இருப்பது) என்று சொல்லப்படும் உறவுகளும் அமைகின்றன. இன்று பல் துணை மணங்கள் (polyamory), திறந்த மணங்கள்/உறவுகள் (open relationships) பெருகி வருகின்றன, பாலியல் ரீதியான இரும அமைப்பை (gender binary) தகர்க்கும் பால் புதுமை (gender queer) உலகத்தில், எழும் முதல் கேள்வி, இங்கு யார் ஆண், யார் பெண்? பெண்கள் ஆண்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் எதை விரும்புகிறார்கள்? பெண் தனதாக்க எண்ணும் உச்ச விழுமியம் எது? கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதிய ‘பாய் பெஸ்டி’ கவிதைக்கான எதிர்வினைகள் அத்தகைய கேள்விகளை முன்வைத்தவை.
இது என்றுமில்லாத சமன்குலைவா என்ன? இந்த வன்முறையின் ஊற்றுமுகத்தில் இருப்பது ஆண்-பெண் இடையேயுள்ள பாலின சமநிலை இன்மை. காவியத்திலும் வரலாற்றிலும் கண்ணீரும் நிணமும் குருதியுமாக நாம் காண்பது இந்த சம நிலைக்குலைவைத்தான்.
ஆண்-பெண் என்பதை விட, திருமணம் என்ற நிறுவனமும் குழந்தைகளின் எதிர்காலமும் வெகுவாக சேதப்பட்டிருக்கிறது. திருமணங்கள் இன்று வாழ்நாள் ஒப்பந்தங்களாக இருப்பதில்லை என்பதற்குப் பின்னால் பெண்களின் சம்பாதிக்கும் திறமும் சகிப்புத் தன்மை அளவுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் பெரும்பங்கு வகிக்கிறது. சகிப்புத் தன்மை என்பது நேர்மறையான ஒன்றாக இருக்க வேண்டியது இல்லை என்பதால் தான் மாற்றம் என்ற சொல்லை குறிப்பாகப் பயன்படுத்தி உள்ளேன். சமமான உழைப்பற்ற திருமணங்கள் இனி காலத்தின் சோதனையைத் தாங்காது, அல்லது தாங்கி என்ன பயன்.
இன்னொரு பக்கம் உழைப்பு, உரிமை ஆகியவற்றைத் தாண்டி உறவுகளே மலினப்படுத்தப்படுகின்றனவா என்றும் யோசித்துப் பார்க்கலாம். இந்த வகைமைக்குள் வரும் நபர்கள் ஆபத்தானவர்கள், இவர்கள் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் அஞ்சக்கூடியவர்கள் அல்ல. இவர்களைத்தான் எழுத்தாளர் ஜெயமோகன் சாடுகிறார் என்பது என் புரிதல். இவர்கள் பெரும்பான்மையாக இருந்தால் அது வெறும் செய்தி மட்டுமேயாக இருந்திருக்கும். குறைந்த எண்ணிக்கை என்றாலும் ‘ஆண்கள் பாவம்’ என்பது ஒரு பெரும்பான்மைக் கருத்து என்பதையும் மறுக்க இயலாது. ஜெயமோகன் எவ்வளவு தீவிரமாக இலக்கிய உரை ஆற்றினாலும் கருத்துப் பெட்டியில் வந்து ‘சங்கி’ அல்லது ‘புளிச்சமாவு’ என்று எழுதும் கும்பல் தான் பெண்கள் தொடர்பான அவருடைய கருத்தை திரித்துக் கொண்டாடுகிறது. படைப்பாளியின் செவிக்கெட்டும் செய்தி எப்படி அவரை தொந்தரவு செய்து படைப்பின் மூலம் முழு வாழ்க்கையாக வெளி வருகிறது என்பது தான் அந்த உரையாடலின் சாரம். இதை மக்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள்?‘நான் சென்னையில் பல பெண்களுடன் ரூம் போட்ருக்கேன்’, ‘இவளுகள வெளியல விட்டதே தப்பு,’ ‘பெண்கள் படித்தால் பெரும் ஆபத்து’ என்று. (இவை எல்லாமே அந்த காணொளியின் கருத்துப்பெட்டியில் இருந்த முத்துக்கள்) பர்வீன் சுல்தானா உடனான உரையாடலில் ஒரு பெண்ணின் தூய்மையான அன்பை வாழ்நாள் முழுவதிற்குமாக இழந்து விடும் ஆணின் பார்வையை கன்னியாகுமரி நாவலை முன்வைத்து ஜெ பேசி இருப்பார். இந்தப் பேச்சின் கருத்துப் பெட்டியிலும் என்ன எழுதி இருக்கும் என்று ஊகித்துக்கொள்ளலாம்.
ஆனாலும் வன்முறை வன்முறை தானே? ‘ஆணும் பெண்ணும் சமம் என்றால் அவளுங்களையும் தூக்கி உள்ளப்போடுங்க சார்’ என்ற எண்ணம் எழலாம். பெண்ணியத்தின் ஆகப்பெரும் சிக்கலே அது மிகப்பரிச்சயமாகிவிட்டது என்பது தான் என்றொரு சொல் உண்டு. இங்கு எல்லோரும் சமம் அல்ல என்பதால் தான் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் சிறப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டன. சமுதாய மாற்றங்களுக்கேற்ப சட்டங்களும் உருமாறி இருக்கின்றன, அது எப்பொழுதும் அப்படித்தான் இருக்கும். பெண்களெல்லாம் சேர்ந்து ஆண்களை அழிக்கிறார்கள், ஆண் ஜென்மமே துன்பம் போன்ற போலி பாவனைகளுக்கு இடமில்லை.
நாம் பாலினக் குருடு இருக்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளலாம். கரோலின் க்ரியாடோ பெரெஸ் ‘புலனாகாத பெண்கள் – ஆண்களால் வடிவமைக்கப்பட்ட உலகின் தகவல் பாகுபாடுகள்’ (Invisible Women: Data Bias in a World Designed for Men )என்ற நூலில் இவ்வாறு சொல்கிறார், ‘ஆண் ஆழமாக தன் அதிகாரத்தை ஆதிக்கம் செய்யும் பண்பாட்டில் ஆணுடைய அனுபவமும் பார்வையும் உலகப்பொதுவாக்கப்படுகிறது. மக்கள்தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண்ணுடைய அனுபவமோ அரியவகை ஒன்றாக உற்று நோக்கப்படுகிறது.’ தர்க்க நியாயங்களுக்கு அப்பால் ஆண்கள் பெண்களின் இருப்பும் அவர்களில் குரலும் வலுப்பெறுவதை தங்களுக்கு எதிரானதாக பார்க்கிறார்களா என்று கேட்டுக்கொள்ளலாம். போலவே, பெண்களும் (கொஞ்சம் சினிமாத்தனமாக சொல்ல வேண்டுமென்றால்) ஆண் இனத்தை அடியோடு வெறுத்து வஞ்சம் தீர்த்துக் கொள்கிறார்களா என்றும் கேட்டுக்கொள்ளலாம்.
விடுதலை இந்தியா குடும்ப உறவுகளுக்காக தனிப்பட்ட சட்டங்களை கொண்டு வருவதற்கு முன்னால், ஆங்கிலேயர் காலனிய ஆட்சி காலம் உட்பட, மிதாச்ச்சரம் (Mitakshara) மற்றும் தாயபாக (Dhayabaga) என்ற மரபு வழி கோட்பாடுகள் இந்துக்களை கட்டுப்படுத்தியது. அதிலும் இந்தியாவின் பெரும்பான்மை இடங்களில் பயன்பாட்டில் இருந்த மிதாச்ச்சரம் என்ற முறைமை பெண்ணிற்கு சொத்தில் உரிமையை மறுத்தது. இந்து வாரிசு சட்டத்தின் கீழ் பெண்ணிற்கு சொத்தில் உரிமை 2005 இல் கொண்டு வரப்பட்டது,
கிருத்துவர்களுக்கான விவாகரத்துச் சட்டத்தின் (Indian Divorce Act, 1869) படி கணவன் உறவுடன் சேர்த்து மனைவியின் மீது ‘கூடா உறவு’ (adultery) குற்றச்சாட்டை மட்டுமே சுமத்தி விவாகரத்துப் பெற இயலும். பெண் அப்படி ஒரு குற்றச்சாட்டை மட்டும்முன்வைத்து விவாகரத்துப் பெற முடியாது என்ற நிபந்தனை இருந்தது, அத்தகைய கணவன் கூட அவளிடம் வன்முறை (cruelty) காட்டி இருக்க வேண்டும், அவளை கைவிட்டிருக்க (desertion) வேண்டும், மதம் மாறி (conversion) இருக்க வேண்டும். 1995-இல் இந்த விதி அம்மிணி எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில் கேரளா உயர் நீதிமன்றத்தால் மறுபரிசீலனைக்கு உள்ளானது. 126 ஆண்டுகளாக இந்த சட்டம் கேட்பார் அற்று இருந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கிருத்தவத்தில் மனமொத்துப் பிரிவதற்கான (mutual consert divorce) தேர்வு கூட 2001 – இல் சட்டதிருத்தம் மூலம் கொண்டு வரப்பட்டது, அதுவும் சில வரைமுறைக்குட்பட்டது தான். இந்து சட்டத்தில் அது 1976 இல் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது. சட்டத்தால் ஏற்கப்பட்ட எதிர்பற்ற விவாகரத்து என்பது ஒரு தலைமுறை பெண்களுக்கு அமையவே இல்லை. நாம் அடிக்கடி சொல்லக் கேட்கும் ‘அந்தகாலத்தில் யாருமே விவாகரத்து செய்ததில்லை’,‘அந்தக்காலத்துப் பெண்கள் உயர்ந்தவர்கள்” வரிக்கு பின்னால் பல சட்ட இடைவெளிகளும் சாதி, மத, குடும்ப அதிகார அழுத்தங்களும் இருந்து உள்ளன.
இது ஆணை உடைப்பதற்காக பெண்கள் இயற்றிய சட்டமா என்ன? இன்று குடும்பங்கள் சாரிசாரியாக காவல் நிலையங்களிலும் நீதிமன்றங்களிலும் நிறுத்தப்படுகின்றன, சரி.
சட்ட மன்றத்திலும் காவல் துறையிலும் நீதி மன்றத்திலும் பெண்களும் பெண்ணியர்கள் மட்டுமா பணியாற்றுகிறார்கள்? நீதி மன்றங்கள் எவ்வளவு முறை குடும்ப வன்முறை சட்டத்தின் எதிர்மறை முகத்தை தீர்ப்பில் தெள்ளத் தெளிவாக குறிப்பிடுகிறது என்பதையும் நாம் பார்க்கலாம். சட்டம் பிழைப்பட்டது, மனிதர்களும் அப்படித்தான், ஆகவே (வழக்கமான) சுரண்டலுக்குட்படுகிறது. இதை ஆண், பெண், பணக்காரர், ஏழை என அனைத்து தரப்பினரும் சுரண்டவே செய்கிறார்கள். இதில் வழக்கறிஞர்களின் பங்கும் உண்டு. ஒரு புகழ் பெற்ற நகைச்சுவைத் துணுக்கு உள்ளது, ‘ வக்கீல்கலைப் பற்றிய கடி ஜோக்குகள் மொத்தம் எத்தனை உள்ளன? மொத்தம் மூன்று, மீதி எல்லாமே நிஜம்.’
பொதுவாகவே வழக்குகள், ஒரு நல்ல புனைவை போல் கால ஒழுக்கின் படித் திரட்டித் தொகுப்பட்டத் தரவுகளை முன்வைக்கிறது. விடுபடல்கள் ஒவ்வொன்றிற்கும் நீதி மன்றத்திற்கு ஏற்றுக்கொள்ளும்படியான காரணங்கள் தரப்பட வேண்டும். உண்மை நீதிமன்றத்திற்கு ஏற்புடைய வகையில் அதன் மொழியில் முன்வைக்கப்பட வேண்டும்.
ஒரு குற்றம் சாட்டினால் – எப்படி அந்தச் செயலின் ஒவ்வொரு கூறும் குற்றத்தின் சேர்வை உறுப்பாக (ingredient) ஆகின்றது என்பது நிறுவப்பட வேண்டும். நம் எளிய துன்பங்கள், சிக்கல்களல்ல நீதிமன்றங்கள் தீர்ப்பது – அவை மனுவில் எழுதப்படும்போதே ‘தீராத மனவேதனை’, ‘பெருந்துன்பம்’ என்று தான் வார்க்கபடுகிறது. நீதிமன்றத்திற்கு ஒரு நாள் வந்தாலும் நீங்கள் கவனிக்கலாம் – சட்டம் ஆயுதமக்கப்படவில்லை. சட்டம் என்பதே ஆயுதம் தான்.
என்ன விலை கொடுத்தாலும் யாதொரு சட்டம் அமைத்தாலும் சேர்ந்து வாழ விரும்பாத இருவரை சட்டம் சேர்த்து வைக்க இயலாது. போலவே, தனி அறையில் பாலியல் அத்துமீறல் நிகழந்தது என்பதை நிறுவ பாதிக்கப்பட்ட பெண் எவ்வளவு சிரமப்படுகிறாளோ, தான் குற்றமற்றவன் என்பதை நிறுவ ஆணும் போராட வேண்டி இருக்கிறது.
பிரிவு 498-A இந்திய தண்டனைச் சட்டம். குடும்ப வன்முறைச் சட்டம், 2005 உள்ளிட்ட சட்டங்களின் அமைப்பே பெண்ணிற்கு சாதகமாக இருப்பதை ஏன் யாருமே எதிர்க்கவில்லை? இந்தச் சட்டங்களின் போதாமைகளைப்பற்றி பலரும் பேசி இருக்கின்றனர், முறையான பரிசீலனைகளுடன் சட்ட மாற்றங்கள் ஏன் நிகழவில்லை?
கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகமும் சட்டத்திருத்தங்களை சந்தித்த சட்டங்களைப் பாருங்கள் – நொடிப்பு மற்றும் பொருளறு நிலைச் சட்டக்கோவை, 2016 (Insolvency and Bankruptcy Code, 2016), வருமான வரி சட்டம், நிறுவனச் சட்டம், 2013. (Companies Act, 2013) இந்த சட்டங்களுள் உள்ள ஒற்றுமை இவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு நேரடித் தொடர்புடையவை. இது தான் நிதர்சனம். நிர்பயா வழக்கு முடிந்த பின்பு அமைக்கப்பட்ட வர்மா கமிட்டியின் பரிந்துரைகள் பல இன்றும் அதே நிலையில் தான் இருக்கின்றன. ஆகவே, கம்பன் சொல்லில் சொல்ல வேண்டுமென்றால் நதியின் பிழை அன்று, விதியின் பிழை.
பென்சில் சீவுவதற்கு அரிவாளும் அறுவை சிகிச்சைக்குக் கடப்பாறையும் பயன்படுகிறதோ என்ற ஐயம் தான் இங்கு எஞ்சுகிறது. இதன் தீர்வை சட்டத்தில் நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் சமூகத்தில் தான் தேட வேண்டும். நம்முடைய பண்டபாட்டின் கசடுகளை பிரக்யைபூர்வமாக களைய வேண்டும். அதிகாரப் போராட்டத்தில் நெடுங்காலம் பின் தங்கி இருந்து பழகியவர்கள் சமநிலையை எட்டுவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கான அவகாசத்தை நமக்கு நாமே கொடுத்துக்கொள்ள வேண்டும். சிந்திக்கும் பெண்கள் தன்னை சமூகம் பலி ஆளாகவும் இரையாகவும் பார்ப்பதிலிருந்து மீளவே எண்ணுவார்கள். சமூகத்தை எந்தவித அவநம்பிக்கையும் இல்லாமல் காணவே நினைப்பார்கள். பெண் என்ன செய்யலாம்? ஒரு முறை பள்ளியில் ஆசிரியரின் மேஜை அவர் நடந்து வரும் பொழுது கை பட்டு கீழே விழுந்து விட்டது. அதன் மேலிருந்த புத்தகம், பேனா முதலியவைகளும் விழுந்தன. இரண்டு நிமிடங்களில் மாணவர்களால் அது சரி செய்யப்பட்டது. எங்கள் ஆசிரியர் மாணவிகள் நிறையை பார்த்து ஒன்று கேட்டார், ‘ஏன் உங்களில் ஒருவர் கூட மேஜையை எடுத்து வைக்க முன்வரவில்லை?’ அப்படிக் கேட்டுத் தான் இன்று பெண்கள் பல கண்ணாடி கூரைகளை உடைத்து முன்பில்லாத அளவிற்குப் பல துறைகளில் முன்னேறி இருக்கிறார்கள். ஒரு வேளை இன்று மீண்டும் அந்த கேள்வியை குடும்பக் கட்டமைப்பிற்குள்ளும் கேட்டுக்கொள்ளலாம். இதுவும் வன்முறையற்ற குடும்பங்களில் மட்டும் தான் கேட்டுக்கொள்ள முடியும் என்பதை தெளிவுபடுத்திவிடுகிறேன்.
சில பெண்கள் தங்களுக்கான சட்டங்களை சுரண்டலுக்கான ஆயுதமாக பயன்படுத்துவதை நம் சுற்றத்தை நோக்கவே உண்மை புலப்படும். அப்படியிருக்கும் பட்சத்தில் இதிலுள்ள குறைகளைக் களைவதில் நீதித்துறைக்கு, அரசமைப்பிற்கு இருக்கும் சிக்கல் தான் என்ன. நம் அரசியலமைப்பு நெகிழ்வுத்தன்மையும் ஸ்திரத்தன்மையும் ஒருங்கே கொண்டது தான் இல்லயா. இம்மாதிரி சமூகத்தோடு தொடர்புடைய உணர்வுப்பூர்வமான விடயங்களுக்கு அதனுடனான தொடர் உரையாடல் வழியாக இச்சட்டங்கள் காலமாற்றத்திற்கேற்ப திருத்தப்பட்டுக் கொண்டுதானே இருக்க வேண்டும்? எங்கே தவறு நடப்பதாக நினைக்கிறீர்கள்?
தனி ஒருவனுக்கு உணவில்லை என்பதற்காக பாரதி ஜெகத்தை அழிக்கச் சொல்லியது அதிகார இடைவெளி அதிகமாக இருக்கும் பொழுது அதை சுரண்டல் என்று சுருக்கி விடக்கூடாது என்பதால் தான்.
பாதிக்குப் பாதி குடும்ப வன்முறை அல்லது பாலியல் வன்முறை வழக்குகள் போலிப் புகார்கள் என்று வைத்துக்கொண்டாலும் அந்தப் பாதியின் எண்ணிக்கையே அச்சமூட்டுவது. காவல் நிலையங்களுக்கும் நீதி மன்றங்களுக்கும் சென்றால் மேலும் இழிவுற வேண்டுமென்று ஒதுங்கி இருக்கும் பெண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். சட்டம் பெண்களுக்குச் சாதகமானது என்று சொல்பவர்கள் பாலியல் வன்கொடுமை/வன்முறை வழக்குகளை நீதி மன்றம் எப்படிக் கையாளுகிறது என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டும்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375 வன்கலவியை வரையறை செய்கிறது – பெண்ணின் சம்மதமோ விருப்பமோ இல்லாது அவளுடைய பிறப்புறுப்பில் ஆணுறுப்போ அல்லது ஆணுறுப்பு அல்லாத பிற பொருட்களோ பெண்ணின் பிறப்புறுப்பிலோ சிறுநீர்க்குழாயிலோ மலக்குழியிலோ ஆண் நுழைப்பதற்கான தண்டனை என்று வந்துவிடுகிறது. இதை அதிர்ச்சி மதிப்பீடிற்காக நான் முன்வைக்கவில்லை. சட்டங்கள் விளையாட்டுப் பொருட்களல்ல, எவ்வளவு நுணுக்கமானதாகவும் தீர்மானமாகவும் அமையும் என்பதற்கு இது ஒரு சான்று. நீதிமன்றத்தில் இதற்கான நியாயம் கேட்கும் பெண் எதிர்கொள்ளும் கேள்விகளில் சில, ‘ஆணுறுப்பு உங்களுள் நுழையும் போது உங்களுக்கு எப்படி இருந்தது’ ‘அதை நீங்கள் எதிர்த்தீர்களா அல்லது விரும்பி ஏற்றுக்கொண்டீர்களா?’ ‘நீங்கள் விருப்பத்துடன் மனமுவந்து கலவியில் ஈட்டுபட்டீர்கள் என்றி நான் சொல்கிறேன், ஆம் அல்லது இல்லை என்று சொல்லுங்கள்?’ என்பது. அந்தச் சம்பவத்தை திருத்தமாக சொல்லில் நிகழ்த்திக்காட்ட வேண்டும். உச்ச நீதி மன்றம் பல முறை சாடியும் பெண்ணுறுப்பில் இரண்டு விரல்களை நுழைத்துச் செய்யும் இருவிரல் கன்னிமை சோதனை முறை இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
பாலியல் கொடுமைகளையும் வன்கலவியையும் கட்டிய கணவன் குடித்துவிட்டும் ஆபாசச் சித்திரங்களைப் பார்த்தும் குடும்ப மரியாதையைக் காட்டி மிரட்டியும் செய்ய முடியும். அல்லது, தன்னால் அப்படிச் செய்ய முடியும் என்ற ஒரே காரணத்திற்காக செய்யக்கூடும், செய்கிறார்கள். ஏனென்றால் அடிப்படையில் வன்கலவி என்பது கலவி இன்பத்திற்காக செய்யப்படுவது அல்ல, அது ஒரு அதிகார நிலைநிறுத்தல். இந்தியாவில் மண உறவில் நடக்கும் வல்லுறவு தண்டனைக்குரியது அல்ல, வர்மா கமிட்டியின் பரிந்துரைக்குப் பின்னும்.
மண உறவில் வன்கலவி தண்டனைக்குரிய குற்றமாவதை எதிர்த்து ஆண்கள் நல குழுமம் ஒன்று பொது நல வழக்கு தொடுத்திருக்கிறது. அவர்களுடைய முதன்மை வாதம் இந்திய தண்டனைச் சட்டமும் குடும்ப வன்முறைச் சட்டமும் இதற்கு போதுமே என்பது தான். அறம் எல்லார்க்கும் பொதுவானது. சட்டங்களை நியாயமானவையாக அமைக்கும் பொறுப்பை பாதிக்கப்படக்கூடிய இடத்திலிருப்பவரின் தோளில் சுமத்துவது அறமன்று. நீதிமன்றம் அதற்கான தர்கத்தை வந்தடைவது முக்கியம் என்று கருதுகிறேன்.
முன்னுரிமையை பொறுத்த வரையில், பஞ்சயாத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண் தலைவர்கள் பங்கு பெற வேண்டும் என்பது அரசியலமைப்பில் திருத்தமாக 1992—இல் கொண்டு வரப்பட்டது. காகிதத்தில் நிறைவேறிவிட்டது. ஆனால் மனைவியை நேரடியாக கிராம நிர்வாகத்தில் பங்கு பெறவிடாமல் கணவர்கள் பதிலியாக செயல்படுகின்றனர் என்பதைப் பல கள ஆய்வுகள் ஆதாரத்துடன் நிறுவுகின்றன.
உரிமையும் கடமையும் ஒன்றோடொன்று தொடர்படுத்தபட்டவை என்பது சட்ட அறிவியலின் பால பாடம். பெண் கேட்கும் சம உரிமைக்கும் பாதுகாப்பிற்கும் ஈடாக அவள் குடும்பச் சூழலில் விழுமியங்களை பேணுவது அதிலொரு பக்கம். அதாவது இவ்வுரிமையை கோரும் பெண்ணின் தகுதி இடத்திற்கு தக்கவாறு பரிசீலிக்கப்படும்.
இதன் மறுபக்கம், எங்களுக்கு எதிராகவோ எங்களை மீறியோ செயல்பட்டாய் என்றால் உனக்கு கொடுத்த உரிமைகள் மறுபரீசீலனை செய்யப்படும் என்பது. இவ்வுரிமைகளும் பாதுகாப்பும் தன்னளவில் நிபந்தனைக்குட்பட்டவை இல்லை. வளர்ச்சிக்கான சூழலும் எளிய சலுகை அல்ல, இயல்பான மனித உரிமை, அது கடமை தவறினால் பறிக்கபடும் என்றால் அப்படிப்பட்ட மனிதர், அல்லது குழு அந்தச் சமூகத்தில் மிக மிகப் பின் தங்கி இருக்கிறார்/இருக்கிறது என்றே பொருள். கறுப்பின மக்கள், தலித்துகள், சிறுபான்மை இஸ்லாமியர்கள் மற்றும் பெண்கள் எப்பொழுதுமே தன இனத்தைச் சேர்ந்த தனி மனிதர் ஒருவரின் சொல்லுக்கும் செயலுக்கும் நிரந்தர ஜவாப்தாரிகளாக இருக்கின்றனர். இது மேலும் குழப்பங்களையும் சிக்கல்களையும் உருவாக்கும்.
*
நீலி: எழுத்தாளர்கள் பொதுவாக எதையும் சிறுபான்மைத்தரப்பு என்று ஒதுக்கிவிடாதவர்கள். அவர்களுக்கான எழுத்தின் சிந்தனையின் கச்சாப்பொருள் பெரும்பாலும் சிறுபான்மை விஷயங்களிலிருந்தே கிடைக்கிறது. சமூகம், அரசியல், சூழலியல் என யாவும் ”பெரும்பான்மைக்கு நன்மை” என்ற மன நிலையை மட்டும் கருத்தில் கொள்ளும் நிலையிலிருந்து மாறிவிட்ட காலத்தில் இருக்கிறோம். பாதிக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அத்தரப்பில் நிற்க வேண்டியது அறத்தின், நீதியின் கடமை. அன்றாடத்தை மிகக் கூர்மையாக அணுகும் கலைஞர்கள், சிந்தனையாளர்கள் ஒன்றின் எல்லாத்தரப்புகளையும் சரிசமமாக ஆய்பவர்கள். எந்த அதீத நிலைப்பாட்டையும் கை கொள்ளாமல் இருப்பவர்கள். அவ்வகையில் பெண்களுக்கான சட்டங்கள் பற்றிய இந்த உரையாடல் முக்கியம் என நீலி கருதுகிறது. கலாச்சார பெண்ணியமும் அரசியல் பெண்ணியமும் முயங்கும் ஒன்றாக இந்த உரையாடலை நீலி முன்னெடுத்துள்ளது.
*
V.S செந்தில்குமார்: இலக்கிய வாசகர். பயண விரும்பி. ஒரு பயணியாக தன்னை அறிவதையே விரும்புபவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இருபத்தி மூன்று வருடங்களாக வழக்கறிஞராகப் பணியில் உள்ளார். குற்றவியல் வழக்குகளில் நிபுணத்துவம் உள்ளவர்.
பார்கவி: எழுத்தாளர். இணைய இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். ஸ்ரீநிவாசனுடன் இணைந்து “இம்பர்வாரி வாசகர் வட்டம்” என்ற கம்பராமாயண வாசிப்புக் குழுவைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியில் உள்ளார்.
மாறி வரும் காலசூழலுக்கு ஏற்றவகையில் மாற்றம் பெற்றுவரும் குடும்ப அமைப்புகளில் இயல்பாகவே ஆண் பெண் அடையகூடிய சிக்கல்கள் சிலவற்றை விவாதித்திருப்பது பாராட்டுக்குரியது. குடும்ப அமைப்புகளில் இருவரில் யார் அதிகம் பாதிக்க படுகிறார்கள் என்பதை யாரும் அறுதியிட்டு சொல்லிவிட முடியாது என்றாலும் உள்ளே சென்று சிலவற்றை பகுத்து அறிந்து பார்க்கலாம் என்ற நீலி ஆசிரியர் ரம்யாவின் முயற்சியே சிறப்பானது தான்.
இக்கால கட்டத்திற்கு தேவையான அலசல்.வெறும் ஒற்றை வரிகளில் சுருக்காமல் அலசி ஆராய்ந்து இருப்பது பாராட்டத்தக்க விஷயம்.
பெண்கள் சுதந்திரமாக சாதிக்கத் தொடங்கிய பொழுது சில ஆண்கள் அந்த இடத்திலிருந்து சமமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாததாலும், பெண்களில் சிலர் தான் எட்டிய இடத்தை சரியாக பயன் படுத்தி கொள்ளாததாலும் வரும் விளைவுகள்.