”இலக்கியத்தின் ரகசிய ஓடைகளை நம்பித்தான் எழுத்தும் மொழியாக்கமும் செய்யப்படுகிறது”: சுசித்ரா

(தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பு உலகம் & The Abyss சார்ந்து உரையாடல்)

(போஸ்டர்: கீதா)

சுசித்ரா தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். 2020-ல் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஒளி’ வெளியானது. தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். 2017-ல் Asymptote புனைவு மொழியாக்கத்துக்கான சர்வதேச பரிசை “பெரியம்மாவின் சொற்கள்” சிறுகதை மொழியாக்கத்திற்காக பெற்றார். இந்திய இலக்கியங்களுக்கிடையேயான உரையாடலை மொழிபெயர்ப்பு மூலமாக முன்னெடுத்துச் செல்ல மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதாவுடன் இணைந்து “மொழி” தளத்தை நிறுவியுள்ளார். அருணவா சின்ஹாவை ஆசிரியராகக் கொண்ட South Asia Speaks மொழிபெயர்ப்பு சார்ந்த பட்டறைக்கான குழுவில் மாணவராக இருந்தார். இதன் மூலம் ஏப்ரல் 2023-ல் எழுத்தாளர் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை மொழிபெயர்ப்பு செய்து ஜாகர்னட் பதிப்பகம் வெளியீடாக வெளியிட்டுள்ளார். ஜெயமோகனின் விஷ்ணுபுரம், குமரித்துறைவி ஆகிய நாவல்களின் மொழிபெயர்ப்பில் உள்ளார்.

முதன்மையாக சுசித்ரா இயங்கிக் கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பு உலகம் சார்ந்தும், அவரின் முதல் முழு நீள மொழிபெயர்ப்பான ”The Abyss” சார்ந்தும் நீலிக்காக ஒரு உரையாடல்.

எழுத்தாளர் ஜெயமோகன், எழுத்தாளர் சுசித்ரா

முதன்மையாக ஏழாம் உலகம் நாவலின் மொழிபெயர்ப்பான ”The Abyss” -க்கு வாழ்த்துக்கள் சுசித்ரா. எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் சிறுகதைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பான “Stories Of The True”-க்குப் பின் வந்திருக்கும் இரண்டாவது மொழிபெயர்ப்பு இது. ஏழாம் உலகம் தன்னளவில் ஒரு கனமான நாவல். அதனை இயக்குனர் பாலா ‘ நான் கடவுள்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து தன் வாழ்வின் மன நெருக்கடியான காலகட்டத்தைக் கடந்ததாக ஜெ குறிப்பிட்டுள்ளார். ஜெ -வின் படைப்புகளில் ஏழாம் உலகம் நாவலை நீங்கள் மொழிபெயர்ப்பு செய்ததற்கான காரணம் பற்றி சொல்லுங்கள்.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ரம்யா. இந்த நாவலை மொழியாக்கம் செய்வதற்கான முக்கியமான காரணம் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ஐயா தான். பெரியம்மாவின் சொற்கள் சிறுகதை மொழிபெயர்த்து வெளிவந்தபோது அ. முத்துலிங்கம் வாழ்த்து தெரிவித்ததோடு ஜெயமோகனின் எழுத்துக்களில் முதன்மையாக மொழிபெயர்க்கப்பட வேண்டியது ஏழாம் உலகம் தான் என்றார். அது உலக வாசகர்களுக்கு போய்ச்சேர வேண்டும் என்றும் அதை பரிசீலிக்குமாறும் அப்போதே என்னிடம் சொல்லியிருந்தார். பிறகு 2021-ல் மீண்டும் கேட்டார்.

2015-ல் ஏழாம் உலகம் வாசித்தேன். முதன்முதலில் வாசித்தபோது அந்த உலகம் எனக்கு அந்நியமாக இருந்தது. என்னால் அதனுள் நுழைய முடியவில்லை. ஏழாம் உலகம் போன்ற நாவல்கள் வாசகர்களுக்கு முகப்பில் ஒரு சவாலை வைத்துவிட்டே தொடங்குகின்றன என்று நினைக்கிறேன். தீட்சை பெறுவது போன்ற சவால். அந்த வாசலைத்தாண்டும் வாசகனுக்கே நாவல் தன் கதவுகளை திறக்கும் போலும்.  2021 ஆண்டில் அ.முத்துலிங்கம் அவர்கள் என்னை மீண்டும் கேட்டபோது திரும்ப வாசித்தேன். அப்போது அந்த நாவலின் முழு அர்த்தத்தளமும் எனக்குத் திறந்துகொண்டது. அதன் பீபத்சத்தின் உள்ளே உள்ள அழகும் அறிவார்ந்ததனமும் தெரிந்தது. அதை மொழிபெயர்க்க முடியும் என்ற நம்பிக்கையும், மொழிபெயர்க்க வேண்டும் என்ற உத்வேகமும் பிறந்தது.

முழுவதுமாக வட்டார மொழியில் எழுதப்பட்ட நாவல். ஆகவே மொழிபெயர்க்கவே முடியாத நாவல் என்று பல நண்பர்கள் கருதினார்கள். அந்த வட்டார மொழிக்கு அடியில் ஒரு அந்தரங்க மொழி ஒன்று அந்த நாவலில் உள்ளது. அதை என்னால் கண்டடைய முடியுமா என எழுதிப்பார்த்து அது சாத்தியமானபோது அதை மொழிபெயர்ப்பு செய்யலாம் என முடிவெடுத்தேன்.

ஒட்டுமொத்தமாக இந்த மொழியாக்கத்திற்கு முக்கியக்காரணம் அ.முத்துலிங்கமும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும். ஒரு தனி நபரை ஊக்கப்படுத்தி உதவித்தொகையும் அளித்து மொழியாக்கம் செய்வதற்கு உதவுவது தமிழ்ச்சூழலில் வரவேற்கத்தக்க ஒன்று.

தமிழ்ச்சூழலில் ஏழாம் உலகம் நாவல் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் என்ன?

ஒரு நாவலை மொழிபெயர்க்கும்போது அதை மறுவாசிப்பு செய்யும் சூழலை உருவாக்குகிறோம். ஏழாம் உலகம் வந்து இருபது வருடங்கள் ஆகின்றன. அது தமிழ்ச்சூழலில் இன்னும் சரியாக வாசிக்கப்படாத நாவல் என்றே இப்போது கருதுகிறேன். அதன் சமூகச்சித்திரங்கள் தாண்டி, அதன் ஆன்மீக தரிசனமோ நகைச்சுவை வழியாக அது அடையும் உச்சங்களோ இன்னும் அதிகம் பேசப்பட இடம் உள்ளது. இன்று ஒரு மொழிபெயர்ப்பு வருவதால் அது மீள் வாசிப்பு செய்யபடுகிறது. திரும்பத்திரும்ப நல்ல ஆக்கங்கள் பேசும் சூழல் ஏற்படுவது முக்கியமானது. ஒரு ஆக்கம் பல மொழிகளில் சென்று அடைவது அந்தப்படைப்பு புத்துணர்வாக இருப்பதற்கு உதவுகிறது.

மொழிபெயர்ப்பு என்பது வாசிப்பை விட ஒரு படி மேலே போய் ஆசிரியருடன் இணையாகப் பயணம் செய்யும் அனுபவம் இல்லயா. ஜெயமோகனின் படைப்புகளில் நீங்கள் ஏழாம் உலகத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது உங்கள் தேடலையும் சொல்கிறது. அதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஐரோப்பிய மறுமலர்ச்சி காலகட்டத்தில் இத்தாலியில் பழைய கிரேக்க சிற்பங்களை மறுகண்டடைவு செய்தார்கள். அவை மண்ணுக்கடியில் புதைந்திருந்தன, காலத்தால் மறக்கப்பட்டிருந்தன. அவை மறுகண்டிபிடிப்பு செய்யப்பட்டபோது தான் ஐரோப்பாவில் மறுமலர்ச்சியே தொடங்கியது. அந்த சிற்பங்களால் உத்வேகம் கொண்டு, அதன் தாக்கத்தில் கலை படைக்க அது போன்ற சிற்பங்களை செய்ய வேண்டுமென ஒரு படையே கிளம்பி வந்தது. அதில் தான் டானடெல்லோ, மைக்கேல் அஞ்சலோ, லியணார்டோ டாவின்சி போன்றவர்கள் வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாஸ்டர். அவர்கள் செய்வதை மாணவர்கள் ஜன்னல் வழியாகப் பார்ப்பதும் அவர்கள் செய்வதைப் பட்டறையில் சென்று பயிற்சி செய்வதும் நடந்தது. இன்றைய காலகட்டத்தில் ஜெயமோகன் அப்படிப்பட்ட மாஸ்டர் தான். மொழியாக்கம் என்பது அப்படி ஒரு பயிற்சியை அடைவதற்கான ஒரு சாத்தியம் தான்.

மொழிபெயர்ப்பு செய்யும் போது அதன் ஆசிரியர் அங்கு இருப்பதில்லை. அப்படி இருப்பதும் ஒரு வகையில் சுமை. சில மொழிபெயர்ப்பாளர்கள் அந்தந்த எழுத்தாளர்களுடன் வார்த்தைக்கு வார்த்தை உடனிருந்து மொழிபெயர்த்ததாகச் சொல்வார்கள். என்னால் அது இயலாது. ஒரு முன் வரைவை முடித்தபின், சில இடங்களில் இதை உத்தேசித்தீர்களா என சந்தேகம் கேட்டுக் கொள்ளலாம். அவ்வளவு தான். ஒரு மொழிபெயர்ப்பாளராக என் உரையாடல் படைப்புடன் தான். படைப்பின் உச்சகணத்தில் இருக்கும் ஆசிரியர் மனத்துடன் தான்.  அதன் வழியாக ஒரு கல்வி நிகழ்கிறதென்றால் அதுவே எனக்கு பிரதானம். 

மொழியாக்கம் முடிந்த பிறகு ஜெயமோகனுடன் ஓரிரு மணிநேரங்கள் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அது படைப்பு உருவான விதத்தை பற்றி சில தெளிவுகளை அளித்தது. அந்த உரையாடலின் பகுதியை அவர் ஒப்புதலோடு ஒரு நேர்காணலாக புத்தகத்தில் இணைத்திருக்கிறேன்.

அப்படியானால் மொழிபெயர்ப்பு என்பது ஒரு வகையான மிகக்கூரிய வாசிப்பு தானே? அப்படி வாசிக்கும் போது வாசகர்கள் அதுவரை கண்டறியாத அல்லது அதிகம் பேசாத விஷயங்களைக் கூட மொழிபெயர்ப்பாளர்கள் கண்டறியலாம் இல்லயா. அப்படியாக நீங்கள் இந்த மொழிபெயர்ப்புப் பயணத்தில் கண்டடைந்த முக்கியமான இடம் பற்றி…

அமாம். அது கோயிலில் அதிகம் பேர் கவனிக்காத சிற்பத்தை கண்டுகொள்ளும் பரவசத்துக்கு இணையானது. ஏழாம் உலகில் அகம்மது குட்டி என ஒரு கதாப்பாத்திரம். அவரால் எழுந்து நடக்க முடியாது. ஆனால் பெரிய படிப்பாளி. துண்டுகள், காகிதங்கள் ஒன்றுவிடாமல் படிக்கக்கூடியவர். ஒரு நாள் நாளிதழில் நவீன ஓவியம் ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கும் போது ராமப்பன் என்ற தொழு நோயாளி இணைந்துகொள்வார். இது என்னையா கை கால் மூக்கு எல்லாம் உருதெரியாத மாதிரி வரஞ்சு வச்சிருக்காங்க என்று கேட்பார். மாடர்ன் பெயிண்டிங்கில் அது தான் அழகு என்று அகமதுகுட்டி விவரிப்பார். ராமப்பன் தொழுநோய் வந்து மழுங்கின தன் விரலால் காகிதத்தை சுரண்டி கிரண்டி பார்ப்பார். அவருக்கு ஒன்றும் புரியாது. இறுதியில், ‘சரி மனுஷனுக்கு ஓரோ களி’ என்று முடிப்பார். அந்த இடம் பெரிய புன்னகையை வரவழைத்தது. விவாதங்களிலெல்லாம் யாரும் அதிகம் பேசாத இடம் அது. அந்த இடம் மொழியாக்கம் செய்யும் போது தான் திறந்து கொண்டது. வாசகனாக இருந்து கண்டடைவதை விட மொழிபெயர்ப்பாளனாக கண்டடையும் ஒரு இடம் மேலும் பரவசத்தை அளிக்கிறது.

ஏழாம் உலகம்

ஏழாம் உலகம் நாவலின் மொழி வட்டார வழக்கில் உள்ளது. ஜெயமோகன் தான் பயன்படுத்தும் வட்டார மொழியைப் பற்றி சொல்லும்போது அது வட்டார வழக்கு என்பதைத்தாண்டியும் தான் தன் புனைவுக்கு உருவாக்கிக் கொண்ட தனித்துவமான மொழி என்பார். ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் போது அந்தச் சவாலை எப்படி எதிர்கொண்டீர்கள்? மூலத்தை கடத்த மொழி தடையாக இல்லயா?

வட்டார வழக்கு என்பது ஒரு நாவலின் அந்தரங்கமான மொழி வெளிப்படுத்த கையாளப்படும் ஒரு வண்ண வடிவம் என்று சொல்லலாம். நாவலின் தனித்துவமான அழகுக்கு அது முக்கியம். ஆனால் அதை மொழிபெயர்ப்பில் நேரடியாக கொண்டு வர முடியாது. ஏனென்றால் அது தமிழ் மொழியின் வண்ணம். அந்த வண்ணம் வழியாக துலங்கி வரும் அந்தரங்க மொழியை தான் பிரதானமாக மொழிபெயர்ப்பில கொண்டு வர முடியும். உதாரணமாக டால்ஸ்டாயின் ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஒரு பிரெஞ்ச் பேசக்கூடிய ரஷ்யனுக்கும் ஒரு குடியானவன் பேசக்கூடிய ரஷ்யனுக்கும்  சின்னச்சின்ன மொழி வேறுபாடுகளையும் டால்ஸ்டாய் கையாண்டிருப்பதாக சொல்கிறார்கள். அது மொழிபெயர்ப்பில் நம்மை அடைய சாத்தியமில்லை. அவர் சொல்ல வருகிற ”விஷன்”அந்தச் சின்ன மொழிவேறுபாடுகள் இல்லையானாலும் புலப்படும் திறனுள்ள மொழிபெயர்ப்பு தான் முதல் தேவை. இந்த நாவலை பொறுத்தவரை அதன் அந்தரங்கமான மொழியைப் பிடிப்பது தான் அதிலுள்ள சவாலாக இருந்தது. மேலதிகமாக வட்டாரவழக்கின் பிரத்யேக வண்ணத்தின் சில சாயைகளை மொழிபெயர்ப்பில் கொண்டு வரலாம். பேச்சு வழக்கின் சில பிரயோகங்களை நேரடியாக ஆங்கிலத்தில் கொண்டு வருவது வழியாக, சொலவடைகள், நகைச்சுவைகளை நேரடியாக மொழிபெயர்ப்பது வழியாக, பாடல் வரிகளை அப்படியே கையாள்வது வழியாக. இவை எல்லாம் இலக்கண சுத்தமான ஆங்கிலமாக வாசிக்கக் கிடைக்காது. அறியாத சிலர் அதை குறையாகவும் கூறுவர். ஆனால் அது அப்படி அல்ல. அது வேறொரு ஆங்கிலம். புதிய ஆங்கிலம். இலக்கிய ஆங்கிலம். இந்த செயல்பாடுகள் வழியாக அந்த மொழி உரம் பெருகிறது. அதில் புதிய சாத்தியங்கள் உருவாகிறது. இப்படித்தான் மொழிகள் மொழியாக்கங்கள் வழியாக வளம் பெறுகின்றன.

ஜெயமோகனின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது எதையெல்லாம் கணக்கில் கொள்வது அவசியம் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு படைப்பிலக்கியத்தை மொழிபெயர்ப்பதென்பது வெறுமே நாளிதழின் ஒரு பத்தியை மொழிபெயர்ப்பது போன்ற விஷயம் அல்ல. சவாலானது. முதலில் மூல மொழியின் நுண்மைகள் கவனித்து உள்வாங்கும் திறமை இருக்க வேண்டும். அதே அளவு ஆங்கிலத்தில் புலமை வேண்டும். படைப்பின் உள் ஆழங்களையெல்லாம் முடிந்த அளவு கணக்கில் கொண்டு அதை கடத்த வேண்டும். அப்போது மொழியும் படைப்பூக்கத்துடன், மூல மொழியின் வீச்சைப் பெற்று தனித்துவமான நடை (style) உடன் அமைந்திருக்க வேண்டும். இவ்வளவு சவால் உள்ளது.

இதில் ஜெயமோகனின் படைப்புகள் தனிச்சிறப்பு மிக்கவை. இன்று வெளிவரும் பெரும்பாலான நாவல்களைப்போல் சமூக அரசியல் சித்திரங்களையோ, உறவு விஷயங்களையோ பேசுவதோடு அவை நிற்பதில்லை. அவற்றில் எப்போதும் கண்டடைவுக்கான ஒரு quest உள்ளது. மொழிபெயர்ப்பாளர் அந்த நுண்தளத்தை எப்போதும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. 

ஒரு கதைக்களம், அல்லது இமேஜ் கையாளப்படுகிறதென்றால், அது ஏன் அவ்வாறு இருக்கிறது, அப்படி அமைப்பதன் மூலம் எதையெல்லாம் உத்தேசிக்கிறார் என்று மொழிபெயர்ப்பாளர் தன் கற்பனையைக் கொண்டு உணர வேண்டும். அந்த உணர்வுகள் மொழிபெயர்ப்பில் கடத்தப்படுகின்றனவா என்று கவனமாக இருக்க வேண்டும். உதாரணம் இந்த நாவலில் மலை மேல் பக்தர்கள் காவடி எடுத்து ஏறும் போது வண்டிமலையும் பெருமாளும் முத்தம்மையை தூளிகட்டி தூக்கிச்செல்லும் இடம். அந்த விவரிப்பின் காட்சித்துல்லியம் அந்த உணர்வை உருவாக்க முக்கியமானது. அப்போது அந்த கவனம் இருந்தது. 

எழுத்தாளர் ஜெயமோகன்

குறிப்பாக ஏழாம் உலகம் நாவலை மொழிபெயர்க்கும்போது நீங்கள் சந்தித்த சவால் பற்றி சொல்லுங்கள்.

மொழி, பண்பாடு, தரிசனம் சார்ந்த சவால்கள் இருந்தன. ஆங்கிலம் முற்றிலும் அந்நியமான மொழி, அதில் இந்த பண்பாட்டின் களத்தை உருவாக்க வேண்டியிருந்தது.  வட்டார வழக்கை மொழிநடையில் உணர்த்துவதும் ஒரு சவால் தான். கெட்ட வார்த்தைகளைப் பற்றி தனியாக சொல்ல வேண்டும். இந்த மொழியாக்கம் மூலம் ஜெயமோகன் ஆங்கிலத்திற்கு சில தரமான கெட்ட வார்த்தைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார் [சிரிக்கிறார்]. பண்பாடு ரீதியாக முருகன் கோவில் வழிபாடு, பண்டாரங்களின் வாழ்க்கை ஆகியவற்றை கடத்துவதில் இருந்த சிக்கலைச் சொல்லல்லாம். மாங்காண்டி சாமியின் பாடல்களை மொழியாக்கம் செய்வதற்கு சித்தர் பாடல்களை பற்றி கொஞ்சம் உள்ளே போய் வாசித்தேன்.

இவை எல்லாம் ‘வாசகர் யார்’ என்ற கேள்வியில் மையல் கொள்கிறது. தமிழ்ச்சூழலில், அல்லது இந்தியச்சூழலில் வாழ்ந்த ஒருவருக்கு இந்த மொழி, பண்பாடு, தரிசனம் எல்லாம் திறந்துகொள்ள சாத்தியம் அதிகம். ஆனால் முற்றிலும் வேறு பண்பாட்டில் உள்ள ஒருவருக்கும் இந்த நூல் தொடர்புற வேண்டும் என்று எண்ணி மொழிபெயர்த்தேன். தேவைப்பட்ட இடங்களில் சில பின்னணி விவரிப்புகளை இணைத்துக்கொண்டேன். ‘முருகன்’ என்றால் நமக்குத் தெரியும். நாவலில் படிமமாக வாசிப்போம். மொழியாக்கத்தில் முருகன் என்னும் போது அவனுடைய அழகான உருவம், இளமை, பழனியில் அவன் ஆண்டியாக இருக்கும் விஷயம், இவ்வளவையும் கதையில் ஊடுருவாமல் அறிமுகப் படுத்த வேண்டியிருந்தது.

ஒரு எழுத்தாளராக இருந்து கொண்டு மொழிபெயர்ப்பு செய்வது உங்கள் படைப்பூக்கத்திற்கு எவ்வகையில் உதவுகிறது?

நான் என்னை ஒரு தொழில்முறை மொழிபெயர்ப்பாளராகப் பார்க்கவில்லை. என்னுடைய பிரதானமான குறிக்கோள் ஒரு இலக்கிய ஆசிரியராக உருவாவது தான். அந்த படைப்பிலக்கியம் எழுதுவதற்கான கருவிகள் கற்றுக்கொள்ளும் பயணத்தில் இருக்கிறேன். அந்தப்பயணத்தில் கற்றுக்கொள்வதற்கான எந்த விஷயத்தையும் விட்டுவிடக்கூடாது என்ற முனைப்பு என்னிடம் உள்ளது. அதற்குத்தேவையான எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். மொழிபெயர்ப்பை அப்படியான ஒரு கருவியாகத்தான் பார்க்கிறேன். மொழிபெயர்ப்பு செய்யும் போது ஒரு படைப்பின் ஆசிரியருடன் இணையாக பயணம் செய்து பார்க்கக் கூடிய அனுபவம் கிடைக்கிறது. மொழிபெயர்ப்பு இல்லாமலும் அது நடக்கலாம்.

எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு பேட்டியில் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. அவர் “போரும் வாழ்வும்” நாவலை வரிக்கு வரி பார்த்து திரும்ப எழுதியதாய் சொல்லியிருந்தார். மொத்தமாகத் திரும்ப எழுதுவது ஒரு சக்திவாய்ந்த கருவி தான். அப்படிச் செய்வது ஒரு மகத்தான ஆசிரியரின் பாதையில் பயணிக்கும் ஒழுக்கை உணரச் செய்யும். அது சில தடங்களை நம்மில் நமக்கே தெரியாமல் விட்டுச் செல்லும். மொழியாக்கம் என்பது அதற்கு நிகரான ஒரு செயல் தான்.

ஒரு ஆசிரியரின் இலக்கிய மொழியைக் கற்றுக் கொள்வது என்பது அவன் ஆழத்தின் சிந்தனை முறையை, அதை அவன் மொழியில் வார்க்கும் விதத்தை கற்றுக்கொள்வது என்று சொல்லலாம். ஒரு விதமான தொடுப்பை/பின்னலைக் கற்றுக் கொள்வது அது. அதாவது அந்தப்படைப்பு காலத்தை, நிகழ்வுகளை எப்படி அடுக்குகிறது. அப்படி அடுக்குவதன் வழியாக எப்படி உணர்வுகளை வாசகனில் கடத்துகிறது. ஒரு எழுத்தின் கலைத்தன்மை என்பது இந்த அடுக்கில் தான் உள்ளது. அது மனதிற்குள் படிய வேண்டும். அதை உருவாக்க முடியாது. அந்த உள்ளுணர்வை நாம் அடைய அந்த படைப்பிற்குள் நாம் வாழும் அனுபவம் நிகழ வேண்டும். தொடர்ந்த வாசிப்பு நமக்கு அளிப்பது அதைத்தான். ஒரு நூலைத்திரும்ப எழுதுவது போன்ற செயல்பாடும் அதற்கு இணையான செயல்பாடு தான். ஆனால் மொழிபெயர்ப்பு என்பது இரு மொழிகளுக்கிடையேயான உரையாடலுக்கு அடியில் இருக்கக் கூடிய ஒரு அந்தரங்கமான கதியை பிடிப்பதை நோக்கிய அனுபவம் தான்.

எடித் வார்டன் என்ற பெண் நாவல் ஆசிரியர் மூன்று முக்கியமான நாவல்கள் எழுதியிருக்கிறார். அதில் ”House of mirth” என்ற நாவலும் ஒன்று. தமிழில் ”களி வீடு” எனலாம். அந்த நாவலின் சில பகுதிகளை மொழியாக்கம் செய்து பார்த்திருக்கிறேன்.  அது ஒரு பெண்ணின் சரிவின் கதை. அவ்வளவு பெரிய சரிவை நாம் எதிர்நோக்க மாட்டோம், அதற்கான பெரிய அறிகுறிகள் ஏதும் ஆசிரியர் வெளிப்படுத்த மாட்டார். நிகழ்வுகளை மட்டுமே அடுக்கி வந்துகொண்டே இருப்பார். ஏதோ ஒரு கட்டத்தில் திரும்பிப் பார்க்கும் போது இவ்வளவு தொலைவு வந்துவிட்டோமே என்று திடுக்கென்று தோன்றும். அதை எப்படி அவர்கள் உருவாக்குகிறார்கள் என்பது பெரிய கலை. அதை நாம் திட்டமிட்டு உருவாக்க முடியாது. ஆனால் அதன் சில சூட்சமங்களை மொழியாக்கத்தின் வழி கற்றுக் கொள்ள முடியும். மொழிக்கு அடியில் பின் தொடர்வதன் வழி கற்றுக் கொள்ள முடியும். அதை தான் மொழியாக்கத்தின் வழி அடைய நினைக்கிறேன். 

பிறகு ஃபன்(fun) என்று ஒன்று உள்ளதல்லவா. மொழியுடன் விளையாடுதல். பெரியம்மாவின் சொற்கள் கதையை நான் மொழியாக்கத்திற்கு எடுக்கக் காரணம் அதிலுள்ள நகைச்சுவை தான். இரண்டு மொழிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் தான் அது நிகழ்கிறது. அதை வேறு மொழியில் சொல்ல முடியுமா என பார்ப்பதிலுள்ள ஒரு ஜாலியான சவாலை தான் நான் எதிர் கொள்கிறேன்.

உங்கள் சிறுகதைகளில் ஒரு தத்துவார்த்த தேடல் உண்டு. அதுவும் கூட இத்தகைய கனமான நாவலின் அடியோட்டத்துடன் பயணிக்கும் ஆசையைத் தூண்டியதா? இந்தப்பயணம் வழியாக அது சாத்தியமானதா என அறிய ஆவல்.

ஆம், எழுத அப்படிப்பட்ட விஷயங்கள் உள்ளன. ஆனால் எப்படி எழுதுவது என்பது புலப்படாமல் இருந்தது. தத்துவார்த்தமான கேள்வி இருக்கும் பட்சத்தில் தத்துவ நூலை படிக்கலாம். ஆனால் அதை இலக்கியமாக்க முடியாது. வாசகனை அது வார்த்தையால் அடிப்பது போல இருக்கும். இனிமையான வாசிப்பனுபத்தைக் கொடுக்காது. அவனோடு உரையாடாது. கலை அனுபவத்திலிருந்து வரவேண்டும்.  விவரிப்புகள் வழியாக அழகான, அல்லது பேரனுபவமான ஒரு ஞானத்தை உருவாக்கவேண்டும். அதன் வழியாக தத்துவார்த்தமான ஒரு புள்ளியை தொட்டால் அது ஒரு விடை. ‘ஏழாம் உலகம்’ போன்ற ஒரு நாவல் அந்த வகையில் ஒரு மாஸ்டர்பீஸ். படைப்பில் தத்துவம் வருவதில்லை. மனிதன் ஒவ்வொருவனுக்குள் இருக்கும் தத்துவார்த்தமான ஒரு தவிப்பு, ஏக்கம், அது மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. அப்படி ஒரு நாவலை ஆழமாக பயில்வதன் வழியாகவே நிறைய கற்றுக்கொள்ளலாம். இமேஜ், உருவகம் எப்படி பயன்படுத்தபடுகிறது? இடமும் வெளியும் எப்படி அந்த நேரத்தின் உணர்வுக்கேற்ப உருமாருகிறது? நகைச்சுவையில், அவலத்தில், பகடியில், பாரடாக்ஸில் எல்லாம் அந்த உணர்வு எப்படி வெளிப்படுகிறது? இப்படி நிறைய கவனிக்க உள்ளது. இவ்வளவுக்கு பிறகும் ஒரு ஆசியருக்கு அது கைவருவதும் வராததும் அவரவர் திறன் சார்ந்தது. ஆனால் இதையெல்லாம் கவனித்து கற்பதே பெரிய இன்பம்.

இப்படி ஆழ்ந்து வாசிக்கும் போது இந்த நாவல் எனக்கு அணுக்கமானது. அதை நான் மீள கட்டிப்பார்ப்பது என்பது இனிமையான அனுபவம். அதை செய்வதன் வழியாக அந்த நாவலின் உலகம் எனக்கு நேரடியான அனுபவமானது. அதன் வழியாக நான் ஏதோவொன்று அடைந்தேன். அந்த அடைதல் முக்கியமானது. எந்தவிதத்தில் என்று சொல்லத்தெரியவில்லை. ஒரு பெரிய நிறைவை அளிக்கிறது.

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட மொழியாக்கங்கள், ஆசிரியர்கள் அந்த உலகம் பற்றிய சித்திரத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தமிழில் படைப்புகளும் அதிகம். அதற்கு ஈடுகொடுக்க அதிக எண்ணிக்கையில், ரசனையுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் வேண்டும். ஆனால் ஆரம்பத்திலிருந்தே தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாகக்ம் செய்பவர்கள் குறைவாகத்தான் இருந்து வந்துள்ளனர். முக்கியமான பெயர்கள் என்றால் பத்மா நாராயணன், லட்சுமி ஹோம்ஸ்ட்ராம், என். கல்யாண் ராமன் ஆகியோரை சொல்லலாம். இவர்களைத்தவிரவும் மொழிபெயர்ப்புகள் செய்தவர்கள் உண்டு. ஆனால் அதிகம் அறியப்படவில்லை. அறியப்படாததற்கும் மொழிபெயர்ப்பாளரின் தரத்துக்கும் சம்பந்தம் இல்லை. கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாகத்தான் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் அதிகம் வாசிக்கப்படுகின்றன. ஆகவே வாசகர்கள் குறைவு. மொழிபெயர்ப்புகளை பற்றி பத்திரிக்கைகளில் எழுதக்கூடியவர்கள் குறைவு.  ஆகவே நூல்கள் பிரசுரமானாலும் பல்கலைக்கழக நூலகங்களுக்குப் போய் சேர்ந்ததே தவிர அவை பொது வாசகர்களிடம் பெரிய அளவில் சென்று சேரவில்லை. விவாதிக்கப்படவில்லை. 

அதற்கு ஒரு காரணம், சென்ற நூற்றாண்டில் ஆங்கிலத்தில் வெளிவந்த புனைவுகளை எழுதியவர்களும் அதற்கு அமைந்த வாசகர்களும் நவீனத்துவ மதிப்பீடுகள் கொண்டவர்கள் என்பதாக இருக்கலாம். அவர்கள் உலகத்தை நோக்கியே எழுதினார்கள், உலகத்தால் ஏற்கப்படவேண்டும் என்று விரும்பினார்கள். அதையே ‘இந்திய இலக்கியம்’ என்று கொண்டுசென்றார்கள். மொழிபெயர்ப்புகளில் வெறும் சில சமூக யதார்த்த சித்திரங்களும் வறுமை நிகழ்வுகளும் இருப்பதாகவும் அவை இரண்டாம் நிலை படைப்புகள் என்றும் சொன்னார்கள். வெளிநாட்டு ஆங்கில ஊடகங்கள் நம்முடைய மொழிபெயர்ப்பு இலக்கியம் நோக்கி எந்த ஆர்வமும் காட்டவில்லை. அவர்களுக்கு இந்திய இலக்கியம் என்றால் இந்திய-ஆங்கில இலக்கியம் தான் என்ற பிம்பம் இருந்தது. சல்மான் ருஷ்டி போன்றவர்கள் அந்த நம்பிக்கையை அங்கே நிலைநிறுத்தினார்கள்.

ஆனால் சென்ற பத்து ஆண்டுகளில் இந்த நிலைமை மாறியுள்ளது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உலக இலக்கியங்கள் சார்ந்த ஓர் ஆர்வம் உருவாகியுள்ளது. மக்கள் அவரவர் பேசும் மொழிகளில் அவரவர் கதைகளை சொல்ல வேண்டும், அவை மொழியாக்கம் மூலம் தம்மை அடையவேண்டும் என்ற விருப்பம் உள்ள ஒரு வாசகர் தரப்பு அமெரிக்காவில் உருவாகியுள்ளது. 2008-ல் ராசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் சாட் போஸ்ட் (Chad W Post) என்ற ஆய்வாளர் அமெரிக்காவில் பிரசுரமாகும் புத்தகங்களில் 3% மட்டுமே மொழிபெயர்ப்பு இலக்கியம் என்று கண்டடைந்தார். அந்த எண்ணிக்கையை உயர்த்த பல செயல்பாடுகள் தொடங்கப்பட்டன. இன்று மொழியாக்கங்களை பிரசுரிக்கும் Tilted Axis Press, Open Letter, Fitzcarraldo போன்ற பதிப்பகங்கள் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உருவாகியுள்ளன.

அதன் அலையை நாம் இந்தியாவிலும் உணரத் தொடங்கினோம். இன்று மொழிபெயர்ப்புகள் இந்தியா முழுவதும் ஆர்வத்துடன் வாசிக்கப்படுகின்றன. பதிப்பாளர்களும் புத்தகங்களை பிரசுரிக்க, வணிகப்படுத்த ஆர்வமாக உள்ளனர். வெளிநாட்டினர் மத்தியிலும் ஆர்வம் வலுத்துள்ளது. சென்ற ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு ஒரு ஹிந்தி நாவலின் மொழியாக்கத்துக்கு வழங்கப்பட்டது (கீதாஞ்சலி ஶ்ரீயின் ரேட் சமாதி – Tomb of Sand). பெருமாள் முருகனின் பூக்குழி நாவலின் மொழியாக்கம் இந்த ஆண்டு சர்வதேச புக்கரின் நெடும்பட்டியலில் இடம்பெற்றது. பெரும்பாலும் அரசியல், அடையாளச்சிக்கல்களை பேசும் நாவல்கள், மத-சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நாவல்கள் பிரபலமடைகின்றன. இவை அனைத்துமே மிகமிக தொடக்கநிலை நிகழ்வுகள் என்றாலும் வரவேற்கத்தக்கது.

மொழிபெயர்ப்பாளர் நந்தினி கிருஷ்ணன்

இங்கே இன்னொன்றையும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்த செயல்பாடுகள் மேலும் கவனத்துடன் நிகழ்த்தப்படலாம். இதையெல்லாம் முன்னெடுப்பவர்கள் மேலும் ஆன்மசுத்தியுடன் நடந்துகொள்ளலாம். தங்கள் இலக்கிய அளவுகோள்கள் என்னவோ அவற்றை தயக்கமே இல்லாமல் முன்னிறுத்தலாம். சமீபத்தில் ஆர்மரி ஸ்க்வேர் என்ற நிதி நிறுவனம் தெற்காசிய அளவில் ஒரு மொழியாக்க போட்டியை நடத்தியது. உலக அளவில் இன்று தலை சிறந்து விளங்கும் மொழிபெயர்ப்பாளர்கள் அதன் நீதிபதிகள். முதல் பரிசு பெறும் நூல் ராச்செஸ்டர் பல்கலையின் சாட் போஸ்ட் நடத்தும் ஓப்பன் லெட்டர் பதிப்பகம் வழியாக வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள். இந்த போட்டியில் சாரு நிவேதிதாவின் ராஸ லீலா – ஒரு  தமிழ் புத்தகம் – முதல் பரிசுக்கு தேர்வானது (மொழிபெயர்ப்பாளர் நந்தினி கிருஷ்ணன்). பிறகு அந்த புத்தகத்தில் under-age sex சார்ந்து ஒரு கதாபாத்திரத்தின் பேச்சு இடம்பெறுவதால் சட்டச்சிக்கல் வரலாம் என்று சொல்லி அறிவிக்கப்பட்ட பரிசு திரும்ப பெறப்பட்டது. இந்த விவகாரத்தை பற்றி ஏன் சொல்கிறேன் என்றால், இதில் அந்த நிறுவனமும் நடுவர்களும் அந்த நூலின் மொழிபெயர்ப்பாளரையும் ஆசிரியரையும் நடத்திய விதம் ரசனைக்குறியதாக இல்லை. ஒரு புத்தகத்தை பதிப்பிப்பதும் பதிப்பிக்காமல் இருப்பதும் ஒரு பதிப்பாளரின் சுதந்திரம். ஆனால் எழுத்தாளர் மேல் மதிப்பும் நன்னம்பிக்கையும் கொண்டவர்கள் என்றால் ஓர் இலக்கிய பிரதி என்ற அளவில் – அவர்களே தங்கள் ரசனையின் அடிப்படையில் பரிசுக்கு தேர்வு செய்த நூல் என்ற அளவில் –  அந்த சிக்கலான பகுதிகளைப்பற்றி அவர்களிடம் மேலும் ஆலோசித்திருக்கலாம். அதைச் செய்யவில்லை. குறைந்த பட்சம் பரிசை திரும்பப்பெறும் போது வருத்தம் தெரிவிக்கும் தொனி இருந்திருக்கவேண்டும். அது இல்லை. இந்த மேட்டிமைநோக்கை, நுண்மையின்மையை, இத்தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதற்கு எதிராகவே இங்கே மொழியாக்கச் செயல்பாடுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. 

ஆங்கில மொழிபெயர்ப்பின் உலகம் மைய தமிழ் இலக்கிய உரையாடலிலிருந்து சற்று தள்ளி இருக்கிறது. ஆகவே பெரும்பாலான எழுத்தாளர் வாசகருக்கு இந்த பின்னணிகள் தெரியாது இத்தருணத்தில் முன்வைக்கிறேன்.

ஜெயமோகன் போன்ற முக்கியமான தமிழ் ஆளுமையின் படைப்புகள் அவர் எழுத ஆரம்பித்து 35 வருடங்கள் கழித்து தான் மொழிபெயர்க்க முடிகிறது என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்.

இன்று ஆங்கிலத்தில் வாசிக்கும் இந்திய வாசகர்களுக்கு தங்கள் வரலாற்றை, பூர்வீகத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் பெருகியிருக்கிறது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலம் வழி கல்வி கற்றவர்கள். ஆனால் இந்தியாவில் வளர்ந்தவர்கள். ஒரு வயதில் தங்கள் பள்ளிப்பாடங்களைத் தாண்டி தங்கள் சுற்றுச்சூழல், வரலாற்றைப் பற்றிய கேள்விகளுடன் வருகிறார்கள். குறிப்பாக எழுதப்பட்ட வரலாறுக்கு மறுபுரமாக பழம் இலக்கியங்களையும் நாட்டார் கதைகளையும் அறிந்துகொள்ள விருப்பம் கொண்டுள்ளனர். பிராந்திய மொழி சார்ந்த அறிவியக்கங்களில் ஈடுபாடு கொண்டுள்ளனர். இது ஓர் அலை. ஆங்கிலத்தில் இன்று இந்த நோக்கில் எழுதப்படும் பல புத்தகங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. பிரபல சினிமாவிலும் இதைக் காண்கிறோம்.

இந்த அலையின் பகுதியாகவே ஜெயமோகன் இன்று மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுகிறார். ஜெயமோகனின் புனைவுகளைப் போலவே அபுனைவுகள் பெரிய தாக்கம் உருவாக்கும். புனைவை மொழியாக்கம் செய்ய கவனமான மொழியாக்கக்காரர்கள் அவசியம். இப்போது பிரியம்வதா, ஜெகதீஷ், மேலும் சிலர் அவர் புனைவுகளை பிரசுரித்து வருகிறோம். அபுனைவுகளும் விரைவில் ஆங்கிலத்தில் வந்தால் நன்றாக இருக்கும்.

எழுத்தாளர் ஜெயமோகன்

ஏழாம் உலகத்தை நீங்கள் புதிய கலாச்சார பண்பாட்டு புலம் சார்ந்த வாசகர்கள் முன் வைக்கிறீர்கள். அவர்களுக்கு இதை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவீர்கள். நம் ஆன்மிகமும் மெய்யியலும் அங்கு சென்று சேர்வதற்கான சூழல் அங்கு உள்ளதா?

முதலில் “அங்கு” என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலில் தமிழ்நாட்டில் ஆங்கில வழியில் படித்து, அங்கிருந்து இலக்கியத்துக்கு வரும் இளைய தலைமுறை வாசக சூழல் ஒன்றுள்ளது. அவர்கள் புனைவு வாசிப்பது அதிகமும் ஆங்கிலத்தில் தான். இதுபோன்ற நூல்கள் முதலில் அவர்களுக்கே படிக்க கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்று ஆங்கிலத்தில் வெளிவரும் ஆக்கங்கள் ஒரு போதும் நம் வாழ்க்கையிலுள்ள ஆழமான பிரச்சனைகள் பற்றி பேசுவதில்லை. இன்று நகரத்தில் படித்து வேலையில் இருக்கும் ஒரு முப்பது வயது இளைஞனுக்கோ பெண்ணுக்கோ இருக்கும் உண்மையான பிரச்சனை என்ன? நவீன உலகம், அதன் பல்வேறு அழுத்தங்கள், அதனால் உருவாகும் கவனக்குறைவு, ஆழமின்மை, அதிலிருந்து வரும்  நிறைவின்மை. பிறகு மரபு. முப்பது வயது வரை மரபை பற்றி யோசிக்காமல் ஒரு மயக்கத்தில் வாழ முடியும். ஒரு குழந்தை வரும் போது – அல்லது ஒரு தந்தை இறக்கும் போது – மரபு மீண்டும் வந்து முதுகில் ஏறிக்கொள்கிறது. அதை எதிர்கொள்ளும் கருவிகள் பெரும்பாலும் அவனிடமோ (அவளிடமோ) இல்லை. சாதி பழமைவாதத்துக்குள்ளும் மத நிர்மாணங்களுக்குள்ளும் அரசியலுக்குள்ளும் புகுந்துகொள்கிறார்கள். அல்லது மறுபக்கம், மரபெதிர்ப்பு, அதன் அரசியல். இன்று அன்றாடத்தில் எதிலும் இலட்சியவாதம் இல்லை. தீவிரம் இல்லை. கனவுகளே இல்லை. இன்றைய உலகின் பொத்தாம்பொதுவான உணர்வுநிலையை சலிப்பு-சோம்பல் என்று சொல்லத்தோன்றுகிறது.  இப்படி இருப்பவர்கள் பெரும்பாலானவர்களுக்கு என்ன பிரச்சனை என்ற பிரக்ஞையே இல்லாததை கண்டிருக்கிறேன். ஆனால் தொடர்ந்து ஒரு நிறைவின்மையை உணர்கிறார்கள். 

உன் பிரச்சனை என்ன என்று கதைசொல்லி காண்பிக்க ஒரு புனைவெழுத்தாளன் இங்கு அவசியமாகிறான். அந்த அவகையில் தான் அறம், ஏழாம் உலகம் போன்ற நூல்கள் முக்கியம் என்று நினைக்கிறேன். இந்தியாவில் வாழ்ந்த ஒரு வாசகன் இந்த நூல்கள் பேசும் விஷயங்களை ஒரு சிறு தடையைத் தாண்டினால் எளிதில் வந்தடைந்து விடுவான் என்றே நம்புகிறேன். ஏனென்றால் அவன் மேல் மனம் சிதறலற்றிருந்தாலும் ஆழ் மனதில் கனவுகளின் ஊற்று பரிசுத்தமாகவே இருக்கின்றன. அதை எழுப்புகின்றன இந்த புத்தகங்கள். 

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியா முழுவதிலும் இந்த மனநிலையில் உள்ள வாசகர்கள் இருக்கிறார்கள். ஒரு சிறு அறிமுகம் போதும். மாங்காண்டி சாமியையும் கெத்தேல் சாஹிப்பையும் அவர்கள் எளிதில் கண்டுகொள்வார்கள். அவர்களுள் உறையும் கலாச்சார அலகுகள் அவர்களுக்கு தொடர்புறுத்தும். பிறகு உரையாடவும் செய்வார்கள். Stories of the True வந்தபோது டிவிட்டரில் ஒரு இளைஞர் ஷேர் செய்திருந்தார். அவர் பிஹாரில் இருக்கிறார். போட்டித்தேர்வு மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர். அவரை அணுகி பேசியபோது அவருக்கு மலையாள நண்பர் ஒருவர் இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தியதாகச் சொன்னார். இலக்கியத்தின் ரசகிய ஓடைகளை நம்பித்தான் நல்ல எழுத்தும் மொழியாக்கமும் செய்யபப்டுகிறது.  

நல்ல வாசகர்கள் எங்கிருந்தாலும் இவ்வகைக் கதைகளின் அடிப்படை விழுமியங்களை நோக்கி வந்துவிடுவார்கள் என்றே தோன்றியது. அமெரிக்காவின் ஓஹாயுவிலுள்ள வெண்டி என்பவர் – பேரப்பிள்ளைகளை கண்டவர் – ப்ரியம்வதாவிற்கு Stories of the True பற்றி எழுதியிருந்தார். ஆனால் அந்த தொடர்புறுத்தலில் ஆச்சரியமில்லை. ஒரு கதையின் சில லோக்கலான தகவல்கள் தொடர்புறாமல் போகலாம். ஆனால் அறத்தை, மானுட இலட்சியங்களை பேசும் கதைகள் எதுவானாலும் அவை தேடல் கொண்ட மனங்களில் போய்ச் சேறும்.

ஒரு மொழிபெயர்ப்பாளராக இந்த தொடர்புறுத்தலில் என் பங்கை நான் இப்படி வரையறுப்பேன். நான் கதையின் உணர்ச்சியையே மையமாகக் கடத்துகிறேன். அதற்கு மொழி ஒரு கருவி. மொழியின் அடுக்கில், ஓசை நயத்தில், அவை மனதில் எழுப்பும் படிமங்களில் அந்த உணர்ச்சி உருவாக வேண்டும். பண்பாடு குறிப்புகளை எதிர்கொள்ளும்போது அவற்றை “விளக்க” நான் முற்படுவதில்லை. அடிக்குறிப்புகளோ புத்தகத்துக்குப் பின்னால் பட்டியலிடுவதோ நான் செய்வதே இல்லை. மாறாக கதைப்போக்கில் அதை இன்னொரு புலன் அனுபவமாக எடுத்துறைக்கமுடியுமா என்றே பார்ப்பேன். அதுவே இயல்பான வாசக அனுபவமாக அமையும். ஏழாம் உலகத்தில் வரும் காவடி வர்ணனை ஓர் உதாரணம். தமிழில் காவடி என்றாலே புரியும். ஆங்கிலத்தில் காவடியின் வளைந்த வடிவத்தையும் வண்ணமயத்தையும்  ஆட்டத்தையும் சில கூடுதல் சொற்களால் உணர்த்தியிருக்கிறேன். அந்த சுதந்திரத்தை எடுப்பதன் வழியாக கதையின் உணர்வுதளத்துக்கு மேலும் விசுவாசமாக இருப்பதாக நினைக்கிறேன்.

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்வதன் தேவையை பாரதி, .நா.சு தொடங்கி நம் முன்னோடிகள் சொல்லி வந்திருக்கிறார்கள். அதை சாத்தியப்படுத்தியுமிருக்கிறார்கள். ஒரு தமிழ்ஆங்கில மொழிபெயர்ப்பாளராக இதன் தேவையைப் பற்றி உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பாரதி உலக மொழிகள் யாவையும் இங்கு கொண்டு வந்து சேர்ப்போம் என்றும் சொல்லியுள்ளார். அதே போல் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நாட்டமும் அவருக்கு இருந்தது. இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்ற எண்ணமே இப்போது உள்ளது. ஒரு ‘யுனிவர்சல் மைண்ட்’ உள்ள அனைவருக்குமே அவ்விரு எண்ணங்களும் இருக்கும் என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் அது இனங்களை மொழி அடையாளங்களைக் கடந்து ஓர் ஒருமைக்கான ஏக்கம் அல்லவா. மொழி என்பது ஒரு வண்ணம், ஓர் அழகான நிற வேறுபாடு. அடுத்த தேசத்தில் இருப்பவரை விடுங்கள், நம் வீட்டில் உள்ள சின்னஞ்சிறு குழந்தை நாம் பேசும் மொழியையா பேசுகிறது? இல்லையல்லவா? அதன் மழலை மொழியில் எத்தனை பேதம், எத்தனை சுவை? ஆனால் அதை மீறி அது சொல்வதை நாமும் நாம் சொல்வதை அதுவும் புரிந்துகொள்ளும்போது நெஞ்சு இனிமையில் அதிர்கிறதே? அந்த இனிய அதிர்வை –  செம்புலப்பெய்நீர் போல் இரண்டு வெவ்வேர் இயல்புடையவை ஒரு புள்ளியில் ஒன்றாவதன் இனிமையை – எண்ணித்தான் நாம் மொழிப்பெயர்க்கிறோம்.  

க.நா.சு “இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்” புத்தகத்தில் உலக இலக்கியங்கள் எல்லாமுமே இங்கு தமிழில் கொண்டு வரப்பட வேண்டும் விவாதிக்கப்பட வேண்டும் என்கிறார். அந்த அறிவுப்பசி அவர்களுக்கு இருந்ததால் தான் நம் இலக்கியம் இன்று இவ்வளவு செழிப்பாக உள்ளது. நம்முடைய முன்னோர்கள் – க.நா.சு, புதுமைப்பித்தன், சு.ரா. எல்லோருமே படைப்பியக்கத்தின் பகுதியாக மொழியாக்கம் செய்து நம் மொழியின் உயிர்ப்பை போஷித்தவர்கள். 

ஒரு மரபாக கைமாற்றப்பட்டு இந்தச் சிந்தனை இன்னும் உயிர்ப்போடு தான் உள்ளது. நல்ல படைப்புகள் உடனேயே நமக்கு மொழிபெயர்ப்புகளாகக்  கிடைத்துவிடுகின்றன. உலக மொழிகள் மட்டுமல்ல, இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகள் விரைவாகவே தமிழுக்கு வருகின்றன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதை விட விரைவாக தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்படுகிறது. இது ஆரோக்கியமான விஷயம். அர்ப்பணிப்புள்ள மொழிபெயர்ப்பாளர்களும் நுண்மையும் தேடலும் கொண்ட வாசகர்களுமே நமது சொத்து. லாபம் கருதாது இச்செயல்களில் ஈடுபட்டு நம் கனவுகளை ஆழமாக்குபவர்கள். அவர்கள் எப்போதும் நம் வணக்கத்துக்குறியவர்கள். 

அதே போல, நாம் இங்கு கண்டடையும் அழகு, மெய்மை என்று ஒன்று உள்ளதல்லவா? அதை வெளியில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஒரு வீரியமுள்ள மனதுக்கு இருக்கும். இதில் நம்முடையது உயர்வு, அவர்களுடையது தாழ்வு என்ற எண்ணமெல்லாம் இல்லை. எதோவொரு புள்ளியில், உன்னிடம் புதிதாக சொல்ல என்னிடம் ஒன்று உள்ளது, சொல்லட்டுமா? என்ற பரவசம் தான் அதைச் செய்யத் தூண்டுகிறது. அது தான் பாரதியை அப்படிச் சொல்ல வைத்தது, அதனால் தான் நானும் ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்கிறேன். என்னை பாதித்த, என்னை முழுமை செய்த விஷயங்களை இன்னொருவருக்குச் சொல்கிறேன். “என்” கலாச்சாரம், “என்” மொழியைக் கொண்டு போகிறேன் என்ற மார்த்தட்டல் அல்ல. ஒரு இனிப்பை பகிர்ந்துண்ணுவது போல் தான் அது. நான் அடைந்த அழகனுபவத்தை, உண்மையை என்னைப்போலவே சுவைக்க விருப்பமுள்ளவனுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ஆங்கிலத்தில் தமிழ் ஆக்கங்களைக் கொண்டு போவதிலுள்ள பயன் மதிப்பு என்ன?

நம் மனதைத்தொட்ட ஆசிரியர்களை வேற்றுமொழியினர் அடைவார்கள் என்ற நிறைவு தான் முதன்மையான நோக்கம்.  வரலாற்றுக் காரணங்களால் ஆங்கிலம் உலகமெங்கும் பேசப்படும் மொழியாக விளங்குகிறது. ஆங்கிலத்தில் வந்தால் அதன் வழியாக மற்ற மொழிகளுக்கு நூல் செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது. 

பிறகு உலகளவில் விருதுகளும் அங்கீகாரங்களும் நம் ஆசிரியர்களுக்குக் கிடைக்க வழி செய்கிறது. ஆனால் இது மிகவும் சிக்கலான விஷயம். ஒரு புத்தகத்துக்கு அங்கீகாரம் என்றால் என்ன? புத்தகம் உரிய முறையில் வாசிக்கப்படுவதும், தாக்கம் ஏற்படுத்துவதுமே. தன் புத்தகம் அழகியலில், சிந்தனையில், சமூகத்தில் செல்வாக்கு செலுத்துமென்றால் அதையே ஆசிரியன் முதன்மையாக விரும்புவான். 

விருதுகள் போன்றவை அதற்கு உறுதுணை. இன்று ஒரு தமிழ் புத்தகம் மொழியாக்கமாகி புக்கர் பரிசு வென்றால் அது முற்றிலும் புதிய நோக்கில் தமிழில் மீள்வாசிப்புக்கு வரும். விவாதமாகும். அந்த புத்தகம் தன் சமூகத்துடன் எப்படி உரையாடுகிறது என்பதைத்தாண்டி உலகத்துடன் எப்படி உரையாடுகிறது என்ற புள்ளியில் அதன் அர்த்தத்தளம் மேலும் விரிவடையும். ஆசிரியருக்கும் புத்தகத்துக்கும் அதன் வழியாக கிடைக்கும் கவனமும் பணமும் முக்கியமானது. 

ஆனால் இதன் அரசியலும் கவனிக்கப்பட வேண்டியது. ஒரு நூல் ஆங்கிலத்தில் வருகிறது, சர்வதேச பரிசுகளுக்கு தேர்வாகிறது என்பதாலேயே அது அந்த அங்கீகாரங்களுக்கு தகுதியான நூல் என்று ஆகிவிடுமா? ஆங்கில மொழியாக்கங்களே அருகியிருக்கும் நம் சூழலில் எந்த நூல்கள் மொழியாக்கம் செய்யப்படுகின்றன, எப்படி முன்வைக்கப்படுகின்றன, அவற்றுக்குப் பின்னால் உள்ள நிர்வாக அமைப்பு, கருத்தியல் அமைப்பு எப்படிப்பட்டது என்பது போன்ற பல உட்சிடுக்குகள் உள்ளன. இவை இங்கே வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும். 

இன்னொரு அரசியலும் உள்ளது. சர்வதேச விருதுகளின் அரசியல். அந்த விருதுகளின் அளவுகோல்கள் என்ன? அவற்றை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? அவை உருவாக்கும் கவனம் நமக்கு ஒரு நலனை உண்டுபண்ணுகிறது, சரி. விருதோடு பணமும் புகழும் கிடைக்கிறது, சரி. ஆனால் இன்று பெரும்பாலான இலக்கிய விருதுகள் தங்களை ‘உலகளாவிய விருதுகள்’ என்று அறிவித்துக்கொண்டாலும் ‘உலகளாவிய தரம்’ சார்ந்து அளிக்கப்படுவதில்லை. சர்வதேச புக்கருக்கு தேர்வாகும் நூல்கள் அனைத்துமே அதற்கு முந்தைய ஆண்டில் பிரிட்டனில் வெளியாகியிருக்க வேண்டும் என்று நிபந்தனை. பிரிட்டனிலோ ஒரு வருடத்தில் வெளியாகும் மொழிபெயர்ப்பு நூல்களே 3%க்கு கீழ். அதிலும் பெரும்பான்மை ஐரோப்பிய மொழிகள். மற்ற மொழி நூல்களை பிரசுரிக்கவே பதிப்பாளர்கள் யோசிக்கிறார்கள். அன்னிய கலாச்சாரங்களை பற்றிய கதைகளை வாசகர்கள் வாங்குவார்களா என்ற பயம். அப்படியிருக்க, எங்கணம் ‘உலகளாவிய’? 

இருந்தாலும், நம் மனதைத் தொட்ட ஆசிரியர்களை உலகுக்கு அறிமுகப் படுத்த நாம் முயற்சி செய்யலாம்.. தமிழின் மாபெரும் படைப்பாளிகளில் ஒருவர் அசோகமித்திரன். அவருடைய நூல்களின் நல்ல ஆங்கில மொழியாக்கங்கள் உள்ளன. அவர் நவீனத்துவர், அழகான ‘ஸ்டைல்’ மற்றும் ‘எகானமி’ உடைய நடை கொண்டவர். அவரை உலக வாசகர்கள் அறியச்செய்ய வேண்டியது நம் கடமை என்று சொல்வேன். அதற்கு வெறுமனே பதிப்பு நிறுவனங்களோ புத்தக வணிகர்களோ போதாது. தமிழில் விரிவாக வாசிக்கிற, ஆங்கிலத்தில் சமகால விமர்சன மொழியை அறிந்த, அதன் வழியே ஒரு படைப்பின் நுண்தளத்தை கூர்மையாக முன்வைக்கக் கூடிய மொழிபெயர்ப்பாளர்களும் புத்தகரசனையாளர்களும் உருவாக வேண்டும். இது தூதுரவு போன்ற ஒரு தொடர்புப் பணி.  அப்புறம் நோபல் பரிசு கிடைத்தால் தான் அசோகமித்திரன் பெரிய எழுத்தாளர் என்று நான் சொல்ல வரவில்லை. அவரை கொண்டு செல்வது அங்கீகாரத்திற்காக அல்ல. வெள்ளையன் குனிந்து பார்த்து தலையைத்தட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. என்னிடம் இத்தனை பெரிய அருமணி உள்ளது. உங்களால் அதை பார்ப்பதற்கான கண் இருந்தால் பாருங்கள் என்பதற்காகத்தான். ருசிகளைப் பெருக்குவது தான் கலைஞனின் வேலை. மொழிபெயர்ப்பு ரசனை விமர்சனம் என்பது, நம் ருசிகளை உலகத்துக்கு கற்பிப்பதும் தான்.

இன்றைய இந்தியஆங்கில வாசிப்பு சூழல் எப்படியுள்ளது?

க.நா.சுவின் இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் நூலை வரிக்கு வரி இந்திய ஆங்கில சூழலை நோக்கி சொல்ல முடியும் என்ற நினைப்பு வந்துகொண்டே இருக்கிறது. இன்று இந்திய ஆங்கில சூழல் வீரியமற்றுப்போனதாக உள்ளது. அங்குள்ள போக்கு என்பது எல்லாரும் சமம் தான். எல்லாரும் எழுதுவது இலக்கியம் தான். எழுதுபவனை ஊக்குவிப்போம். எல்லோரும் சேர்ந்து எழுதி ஊக்கப்படுத்தி புத்தகங்களை விற்று மகிழ்ச்சியாக இருப்போம். இதுவே பொதுப்போக்கு. 

அப்புறம் எதற்கெடுத்தாலும் அரசியல். கள அரசியல் அல்ல. மக்களிடமிருந்து உருவாகும் அரசியல் அல்ல. மேலிருந்து, பல்கலைக்கழகங்கள் விதைத்துப் பரப்பும் கருத்தரசியல். அல்லது கட்சிகள் விதைக்கும் கருத்தரசியல். ஆங்கிலத்தில் வாசிப்பவர்கள் ஊடகம் வழியாக அவற்றை அறிந்துகொண்டு ஒப்பிப்பதே மிகுதியாக உள்ளது. மேலும்  இன்று அரசியல் சுத்தம் என்று ஒன்று உருவாகிவந்துள்ளது. எல்லோரும் தீட்டு பார்க்கிறார்கள். அச்சச்சோ நான் எவ்வளவு சுத்தமானவள் தெரியுமா என்று சொல்லிக்கொள்வதற்காகவே புத்தகம் தேர்ந்தெடுத்து படிக்கீறார்களோ என்று தோன்றுகிறது. இந்த மாமித்தனம் இந்திய ஆங்கிலச் சூழலில் ஒரு பெரிய சாபக்கேடு.

ரசனையுள்ளவர்களே இல்லை என்று சொல்ல மாட்டேன். துடிப்பும் நெருப்பும் உள்ள சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். நுண்ணுணர்வு மிக்க வாசகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் குரல் பெரிதாக கேட்கவில்லை. அவர்கள் இந்தியாவெங்கும் எங்கே இருக்கிறார்கள் என்று பரஸ்பரம் தெரியாமல் இருக்கிறது. ரசனை அடிப்படையில் இலக்கியத்தை பற்றிப் பேச தீவிரமான களங்கள் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆகையினால் அப்படி வாசிப்பவர்கள் வாசித்து பேசாமல் இருக்கலாம். ஆனால் இது ஒரு மொழிச்சூழலுக்கு ஆரோக்கியமானது அல்ல. பேசவேண்டும். கநாசு சொல்வது போல் ஊர்க்கு 1000-2000 பேர் என்று ஒரு கோஷ்டி உருவாக வேண்டும். புத்தகம் என்பது பண்டம் இல்லை. நல்வாழ்க்கை நல்கும் உபதேசம் அல்ல. தன்னுடைய அரசியல்சரிகளை பிரஸ்தாபித்துக்கொள்ளும் fashion accessory அல்ல. இலக்கியத்தின் நோக்கம் என்பது அழகை உருவாக்குவது. சிந்தனையை உருவாக்குவது லட்சியங்களை உருவாக்குவது. கனவுகளை பெருக்குவது. இந்த உணர்வு உருவாக வேண்டும்.

மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போது வந்தது. உங்களுக்கு ஆதர்சமான மொழிபெயர்ப்பாளர் பற்றி சொல்லுங்கள்.

ஆதர்சமாக குறிப்பிடத்தக்க ஒரு பெயர் என்றால் அசோகமித்திரனைத்தான் சொல்ல வேண்டும். அசோகமித்திரன் மொழிபெயர்ப்பாளராக அறியப்பெற்றவர் அல்ல. ஆனால் நான் வாசித்ததில் மிகச்சிறந்த சில மொழியாக்கங்களை அவர் செய்திருக்கிறார். சமீபத்தில் வண்ணநிலவனின் எஸ்தர் கதையை அவர் மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் வாசித்தேன். Indian Literature என்ற இதழில் பல தசாப்தங்களுக்கு முன் வெளியானது. அந்த கதையின் அனைத்து நுண்தளங்களையும் உணர்வுகளையும் அவரால் மொழிபெயர்ப்பில் கடத்திவிட முடிந்திருந்தது. மிகச்சரளமான எழுத்து நடை. ஒரு வார்த்தை கூடுதல் குறைவு இல்லை. அது ஓர் இலட்சிய மொழிப்பெயர்ப்பு.  அது தான் தர நிர்ணயப்புள்ளி என் வரையில். 

இலக்கிய ஆசிரியர்கள் மொழிபெயர்க்கலாமா என்ற ஐயம் எனக்கு இருந்துள்ளது. அசோகமித்திரனின் மொழிபெயர்ப்பை வாசித்தபோது அது அகன்றது. அதில் இருந்தது வண்ணநிலவனின் மொழி தான். ஆனால் அசோகமித்திரன் என்ற படைப்பாளியால் எடுத்தாளப்பட்டிருந்தது. மொழியாக்கம் என்பது வெறுமனே வார்த்தைமாற்றல் விளையாட்டு என்று நான் நினைக்கவில்லை. கொஞ்சம் interpretation – எடுத்தாள்கைக்கான சுதந்திரம் உள்ள கலை தான் அது என்று நினைக்கிறேன். ஒரு மாஸ்டர் கம்போஸரின் இசையை ஒரு கண்டக்டர் எடுத்தாள்வது போல. எடுத்தாளும் போது மூலத்தின் அழகு மேலும் துலக்கம் பெற வேண்டும், படைப்பு மேலும் உயிர்ப்புடன் எழ வேண்டும். அவ்வளவு தான் நியதி. அந்த அற்புதமான கலவை அந்தப் பிரதியில் நிகழ்ந்திருந்தது.மற்றபடி நுண்ணுணர்வுடைய தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்புகள் சொர்ப்பம் தான். தி.ஜா வின் அம்மா வந்தாள் நாவலின் ஒரு மோசமான மொழிபெயர்ப்பை ஒரு காலத்தில் படிக்க நேர்ந்தது. இதை விடத் தரமாக நாமே செய்யலாமே என்று தோன்றலானது. அங்கிருந்து தான் என் பயணம் தொடங்கியது என்று நினைக்கிறேன்.

இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களிடம் இருக்க வேண்டிய தரம் என்ன?

இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் முதலில் நல்ல வாசகர்களாக இருக்க வேண்டும். இரு மொழிகளிலும் புனைவு மொழியை லாவகமாக கையாளும் கலை தெரிந்திருக்க வேண்டும். ஓர் ஆசிரியரை மொழிபெயர்க்கிறார் என்றார் அவர் படைப்பு மனநிலையை ஊகிப்பவர்களாக, பின் தொடர்பவர்களாக இருப்பது அவசியம் என்று கருதுகிறேன். போன பதிலில் சொன்ன ‘எடுத்தாள்கை’ என்ற கருத்தின் நீட்சி தான் இது. மரச்சிற்பத்தைப் பார்த்து கற்சிற்பம் செய்வது போல் தான். மரமும் கல்லும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவை. அந்த குணாதிசயங்களை கணக்கில் கொண்டு தான் ஒன்றில் நிகழ்ந்துள்ளதை இன்னொன்றில் நிகழச்செய்ய வேண்டும். இதற்கு மேல் ஒரு மொழிபெயர்பபளர் ஒரு சூழலில் ஒரு விமர்சனப்பணியையும் செய்கிறார். அவர் மொழிபெயர்க்கும் நூல்கள் மேலும் கவனம் பெறுகின்றன. தன் ரசனையையை அதற்கு அளவுகோளாக பயன்படுத்துகிறார். ஆகவே மொழிபெயர்பபளர் விமர்சகராக, ரசனை மதிப்பீடுகளின் அடிப்படையில் புனைவுகளை பற்றிப் பேசக்கூடியவராக இருப்பதும் அவசியம் என்று நினைக்கிறேன்.

THE ABYSS

ஏழாம் உலகம் மொழிபெயர்ப்பு செய்ய எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது

நான்கு மாதங்களில் அந்த மொழிபெயர்ப்பை செய்து முடித்தேன். நவம்பர் 2021 தொடங்கி மார்ச் 2022-ல் முடித்தேன். அதன் பின் அதற்கு ஒரு பதிப்பக நிறுவனத்தைக் கண்டறிந்து அதை பிரசுரிக்க ஒரு வருடம் ஆகியுள்ளது.

தமிழ் பதிப்பகங்கள் இன்னும் தமிழ்ஆங்கிலம் மொழிபெயர்ப்பு முயற்சிகளை எடுக்க வேண்டுமா?

இரு பக்கங்களிலிருந்தும் ஆர்வம் எழ வேண்டும் என்று நினைக்கிறேன். நான் இப்போது ஐரோப்பாவில் இருக்கிறேன். இது ஒரு கண்டம். ஆனால் இங்கு ஒரு ஜெர்மன் மொழியில் நாவல் வந்தால் உடனே பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படுகிறது. எழுத்துக்கலையுடன் பிற கலைகளும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பல மொழிகள் பேசினாலும் ஒற்றைப்பண்பாடு, ஒற்றை அறிவியக்கம் என்ற உணர்வு அவர்களுக்கு உள்ளது. நமக்கு அப்படியல்லாதது வருத்தமளிக்கிறது. 

இன்று தமிழ், ஆங்கிலம், இரண்டு பதிப்புச் சூழல்களும் ஒன்று மற்றொன்றை சந்தேகத்துடன் காண்பதாக ஊகிக்கிறேன். ஏனென்றால் அவை உரையாடிக்கொள்வதற்கான வெளிகளே இல்லை. மேட்டிமைநோக்கு, அப்படி ஒரு நோக்கு இருக்கக்கூடுமோ என்ற ஐயம் போன்றவை திறந்த மனமுடைய உரையாடலை தடைசெய்கின்றன. இந்த பனிச்சுவர்கள் உடைய வேண்டும். பரஸ்பரம் மரியாதையும் நன்மதிப்பும் உருவாக வேண்டும்.

தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கு இன்று இந்திய அளவில் இருக்கும் பதிப்பகங்கள் பற்றி சொல்லுங்கள்.

இன்று இந்திய அளவில் மையத்தில் இருக்கும் எல்லா பதிப்பாளர்களும் மொழியாக்கங்களை வெளியிடுகிறார்கள். Penguin, Harper Collins, Hachette, Bloomsbury, Juggernaut என்று முக்கியமானவர்கள் எல்லோரும் இந்தக் களத்தில் இருக்கிறார்கள். இது கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த முக்கியமான வரவேற்க்கத்தக்க விஷயம். வெளிநாடுகளை பொறுத்தவரை மொழியாக்கங்களை, குறிப்பாக தெற்காசிய மொழிகளிலிருந்து வரும் நூல்களை வெளியிடுவதில் கொஞ்சம் தயங்குகிறார்கள் என்பது உண்மை. ஆனால் முன்பை விட நிலைமை மேம்பட்டுள்ளது. Tilted Axis Press போன்ற பதிப்பகங்கள் மொழியாக்கங்களை வெளியிடுவதையே மையச் செயல்பாடாக கொண்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த சல்மாவின் ‘Women Dreaming’ (தமிழில்: மனாமியங்கள்) புத்தகத்தை வெளியிட்டவர்கள் இவர்கள் தான் (மொழிபெயர்ப்பாளர்: மீனா கந்தசாமி). 

ஆனால் இவ்வகை பதிப்பகங்கள் மொழியாக்கத்தை ஆதரிப்பதை பெரும்பாலும் ஓர் அரசியல் நிலைப்பாடாகக் காண்கிறார்கள். அவர்கள் பதிப்பிக்கும் புத்தகங்களும் அந்த அளவுகோல்களின் படியே தேர்வுசெய்யப்படுகின்றன. மொழிபெயர்ப்புகளை பதிப்பிப்பதும் வாசிப்பதும் குரல் அல்லாத மொழிக்காரர்களுக்கு குரல் கொடுக்கும் ‘நற்செயல்’ என்ற நினைப்பிலிருந்து இந்த மனநிலை எழுவதாக எண்ணுகிறேன். இதில் உள்ள ரட்சிக்கும் மனநிலையையும் (saviour complex) புரவலத்தன்மையும் (patronizing tone) சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பதிப்பகங்களுக்கு வியாபார நோக்கமும் சில இலட்சியங்களும் இருக்கலாம். ஆனால் உலகத்தின் பிறமொழி எழுத்தாளர்களை எழுத்தாளர்களாக சமநிலையில் வைத்து உறவாட வேண்டும். யாரும் யாரையும் வியக்கவும் வேண்டாம் இகழவும் வேண்டாம் ரட்சிக்கவும் வேண்டாம்.

மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதா

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்ய நுழையும் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு இன்று தமிழ்ச்சூழலில் இந்திய அளவில் உலக அரங்கில் உள்ள வாய்ப்புகள் என்ன? உங்களுக்கு ஊக்கத்தொகை கிடைத்ததாகச் சொல்லியிருந்தீர்கள். ப்ரியம்வதா தமிழிலிருந்து முதல் முறையாக வெள்ளையானை மொழிபெயர்ப்பு பணிக்காக PEN-Heim grant பெற்றுள்ளார். இந்தச்சூழல் நேர்மறையாக உள்ளது. இது போல மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருக்கும் பிற வாய்ப்புகள் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாய்ப்புகள் என்றால்… முதன்மையாக ஒருவர் தன் சொந்த ஆர்வத்தால் ஒரு நூலை மொழியாக்கம் செய்து பதிப்பாளரை அணுகி பதிப்பிக்கவேண்டும் என்றால் அதை அவர் செய்யலாம். அதற்கான எல்லா வாய்ப்புகளும் இன்று திறந்திருக்கின்றன. 

ஊக்கத்தொகை இருந்தால் ஒருவர் மேலும் நேரத்தை ஈட்டி கவனமெடுத்து மொழிபெயர்ப்புகளை உருவாக்கலாம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை – தமிழைப் பொறுத்தவரை – மொழியாக்க ஊக்கத்தொகைகள் என்று எதுவும் இல்லை. ‘ஏழாம் உலகம்’ நாவலை மொழியாக்கம் செய்ய அ. முத்துலிங்கம் அவர்கள் தனிப்பட்ட முறையில் என்னை commission செய்தார். அந்த உதவியோடு ஓராண்டுக்குள் வேலைகளெல்லாம் முடிந்து நூல் வெளிவந்தது. அந்த உதவியில்லாமல் அவ்வளவு விரைவில் அது நிகழ்ந்திருக்குமா என்பது சந்தேகம். இன்று மொழிபெயர்ப்பாளர்களுக்கு மட்டுமல்ல, தமிழில், பிராந்திய மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களுக்கும் grants, commissions கிடைக்கவேண்டும், அதற்கான அமைப்புகள் உருவாக வேண்டும் என்று நினைக்கிறேன். இன்றைய பொருளாதார சூழல் அப்படி. வேலைச்சூழலும் அப்படி. 

நான் சுவிட்சர்லாந்தில் வசிக்கிறேன். இங்கே ஜெர்மன் மொழிக்கு உலக மொழிகளிலிருந்து ஒரு நூலை கொண்டு வர ஒருவர் உத்தேசித்தால் அவ்வளவு உதவித்தொகைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஜெர்மன் மொழிபெயர்ப்பு செய்ய இயன்றவர்கள் அதை ஒரு முழு நேர வேலையாக செய்யுமளவு சூழல் உள்ளது. அதை ஊக்குவிப்பது ஜெர்மன் அரசு, அவர்ளுடைய கலாச்சார அமைப்பு. அதே போல் ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கோ வேறு மொழிகளுக்கோ புத்தகங்களை கொண்டு செல்லவும் நிதியளிக்கிறார்கள். 

தமிழைப் பொறுத்தவரை ஆங்கில மொழியாக்கத்துக்காவது கொஞ்சம் உதவி கிடைக்கிறது. பணம் பெற முடிகிறது. தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்களுக்கு என்ன கிடைக்கிறது? நமது அரசு தமிழ் வளர்க்க நினைத்தால் கொரியன், ஜெர்மன், அரபி, சீன மொழிகளைப்போல் நமக்கும் வலுவான கலாச்சார அமைப்புகளை உருவாக்கி இருவழிகளிலும் மொழியாக்கத்தை ஊக்குவிக்க நிதி செலவிட வேண்டும். அல்லது தனியார் ஆர்வலர்கள் எடுத்துச் செய்ய வேண்டும்.

இது இந்திய நிலமை. உலகளவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய சில ஊக்கத்தொகைகள் உள்ளன. அவை ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் அளிக்கப்படுபவை. பிரியம்வதா வென்ற PEN-Heim ஊக்கத்தொகை அதில் முக்கியமானது. 

ஆனால் PEN-Heim-ஐத்தவிர பெரும்பான்மையானவை (அமெரிக்காவின் National Endowment for the Arts உக்கத்தொகை போன்றவை) அந்தந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கே அளிக்கப்படுகின்றன. அதாவது அதற்கு ஒருவர் அமெரிக்காவில் வசிக்க வேண்டும், அல்லது அந்த நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால் மொத்தமாக பார்த்தால் லாபநோக்கிலான வாய்ப்புகள் குறைவு தான். பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் லாபநோக்கத்துக்காக இந்த வகை நிதியுதவிகளை நாடுவதும் இல்லை. இன்று உலகத்தரத்தில் பெயர்ப்பெற்ற மொழிப்பெயர்ப்பாளர் என்றால் இத்தனை ஊக்கத்தொகைகளை வென்றவர், இத்தனை விருதுகளை வென்றவர் என்று ஒரு கணக்கு வந்துவிட்டது. அவை ஒருவித தரச்சான்றுகளைப் போல் ஆகிவிட்டன. அதன் அடிப்படையிலேயே ஒரு ‘நல்ல’ மொழிபெயர்ப்பாளராக உலகளவில் அறியப்படுவதும், வெளிநாட்டு பதிப்பு வாய்ப்புகளும், புத்தக விற்பனையும் நிர்ணையிக்கப்படுகின்றன. ‘நல்ல’ மொழிபெயர்ப்பாளராக அறியப்படுவது நாம் மொழிபெயர்க்கும் எழுத்தாளர்களுக்கும் வாசல்களை திறக்கிறது. ஆகவே முயற்சி செய்கிறோம. நமக்கிருக்கும் குறைவான வாய்ப்புகளுக்குள் ஏதாவது தேருமா என்று. மற்றபடி இன்று இந்தியாவில் ஒரு சராசரி மொழிபெயர்ப்பாளர் வேலையில் இருந்துகொண்டு தன்னார்வத்தில் செய்யும் ஒரு பணியாகவே மொழிபெயர்ப்பு உள்ளது.

நீங்கள் THE ABYSS -ஐ மொழிபெயர்த்தபின் பதிப்பு செய்து அதை கொண்டு போய் வாசகர்களிடம் சேர்க்கும் ஒட்டுமொத்த தொடர் சங்கிலியில் இருப்பதைப் பார்க்கிறேன். அது தொடர்பாக நிறைய கட்டுரைகள் எழுதுகிறீர்கள். ஆசிரியரை நேர்காணல் செய்து வெளியிடுகிறீர்கள். தொடர்ந்து ஆங்கில இதழ்களில் வெளிவரும் THE ABYSS-க்கான ரசனை விமர்சனக் கட்டுரைகளை பகிர்கிறீர்கள். வாசகர்களுடன் பல தளங்களில் உரையாடுகிறீர்கள். இந்த செயலைப்பார்க்கும்போதே மலைப்பாக உள்ளது. இந்த PROCESS-ன் தொடக்கம் மற்றும் முடிவுப்புள்ளி வரை எங்களுக்கு ஒரு அறிமுகம் கொடுக்க முடியுமா.  

நீங்கள் கேட்பதில் இரண்டு கேள்விகள் உள்ளன. முதலில், மொழியாக்கத்தை பதிப்பித்து கொண்டு சேர்க்கும் “Process”. இரண்டாவது கட்டுரைகள் எழுதுவது, நேர்காணல்கள் செய்வது வழியாக தமிழ் இலக்கியத்தை ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் செயல்பாடு. 

முதலில் மொழிபெயர்ப்பின் செயல்பாடு பற்றி. ஆங்கில மொழியாக்கத்தின் பெரிய சிக்கல் என்னவென்றால் நமக்கு வாசகன் யாரென்று தெரியாமல் இருப்பது. இங்கே தமிழில் ஒரு நூல் வெளிவந்தால் அதன் வாசகர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்ற ஊகம் நம்மிடம் இருக்கும் அல்லவா. அங்கே அது கிடையாது. அவன் எந்த ஊரைச் சார்ந்தவன், அவனின் உணர்வுகள், ரசனை எப்படிப்பட்டது என நம்மால் உணர முடியாது. அந்த அனாமதேய வாசகனை நோக்கிச் செல்வது தான் நம் சவால்.

ஆகவே ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தபின் நல்ல பதிப்பு கொண்டு வர வேண்டும். அனாமதேய வாசகனை ஈர்க்கும் வகையில் தலைப்பு, முகப்புப்படம், பின்னட்டை, மதிப்புரைகள் என்று அமைந்திருக்க வேண்டும். அந்த படைப்புக்குள் உள் நுழைய வாசகனுக்கு உதவும் வகையில் முன்னுரை இருக்க வேண்டும். வார்த்தைப்பட்டியல் இருக்கவேண்டும். பிறகு நூலைப்பற்றி கவனம் குவியும் வகையில் மீடியாவில் அது சில காலம் பேசப்பட வேண்டும். இதையெல்லாம் கவனமெடுத்துச் செய்யும் பதிப்பகம் அமைய வேண்டும். 

அப்படி ஒரு பதிப்பகத்தை நாம் அடைய ஏஜெண்ட் என்று ஒரு மனிதர் உதவுவார். இந்த ஏஜெண்ட் என்பவர் ஆசிரியர்/மொழிபெயர்ப்பாளருக்கும், பதிப்பகத்துக்கும், பொது இலக்கியச் சூழலுக்கும் இடையே ஒரு தொடர்பு மையமாக செயல்படுவார். சரியான பதிப்பாளரிடம் நம்மை கொண்டு சேர்ப்பார். நம் புத்தகத்தைப் பற்றிப் பேசி கவனத்தை உருவாக்குவார். 

ஆகவே இங்கே செயல்பாடு என்பது – ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், ஏஜெண்ட், பதிப்பாளர், விற்பனையாளர், வாசகர் என்று நீள்கிறது. அங்கே ஆசியரை வாசகர் நேரடியாக அணுகுவது குறைவு தான்.

இது ஆங்கிலச் சூழல் இன்று இருக்கும் விதம். தமிழில் ஒரு புத்தகத்தை பதிப்பிக்க நினைத்தால் நான் பதிப்பாளரை நேரடியாக அழைத்துப் பேசலாம். அங்கே அப்படி இல்லை. எல்லோரும் தங்களை அணுகமுடியாத இடத்தில் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் ஒரு ஜும் உரையாடல் நடந்தால் கூட அங்கே மையப்பேச்சாளரிடம் நாம் நேரடியாக ஒரு கேள்வியை கேட்டுவிட முடியாது. மாடரேட்டர் வாயிலாகத்தான் செல்லும். அவர்களுடைய அழுத்தங்கள் அப்படிப்பட்டதாக இருக்கலாம் – நிறைய நச்சரிப்புகள் இருக்கலாம் – ஆனால் உண்மையான இலக்கிய உரையாடலை தடுக்கும் வகையில் தான் அது உள்ளது. எதற்கு சொல்கிறேன் என்றால் – ஒரு ‘பிராசஸ்’ இருப்பதே அரசாங்கத்தனமான விஷயம். அது ஒரு நிர்வாக யதார்த்தம். 

இந்த பிராசஸை வாசிக்கும் தமிழ் வாசகருக்கு ஒருவேளை ஒவ்வாமை ஏற்படலாம். ஆனால் வேறு வழியில்லை. இலக்கிய லட்சியங்கள் கொண்ட ஒருவர் இதை நம் ஆசிரியர்களை உரிய வகையில் அறிமுகப்படுத்தவும் லட்சிய வாசகர்களை அடையவும் ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம், அவ்வளவுதான். 

ஒரு மொழிபெயர்ப்பாளராக எனக்கு என்னை இந்த பிராசஸுக்குள் ஓர் அங்கமாக மட்டும் வைத்துக்கொள்ளும் எண்ணமில்லை. தொடர்ந்து எல்லா நிலையில் இருப்பவர்களிடமும் இலக்கியத்தை பற்றி சுதந்திரமாக பேசவே நினைக்கிறேன். இலக்கியவாதி என்பவர் வாசகர் எவராலும் அணுகக்கூடியவராகத்தான் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை தமிழின் அறிவியக்கத்திலிருந்து பெற்றிருக்கிறேன். அந்த மதிப்பீடுகளை தொடர்ந்து ஆங்கிலத்திலும் முன்வைக்கவேண்டும் என்றும் அதன் படி செயல்பட வேண்டும் என்றும் நினைக்கிறேன். அதன் பகுதியாகத்தான்  ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதுவது நேர்காணல் செய்வது எல்லாம். அவை உரையாடலை உருவாக்கும் என்ற நம்பிக்கை.

சென்ற விஷ்ணுபுரம் விழா 2022-ல் கனிஷ்கா குப்தாவை விஷ்ணுபுர அமர்வு வழியாக அறிமுகம் செய்து கொண்டோம். ”Publishing  Agent” என்ற சொல்லே புதுமையாக இருந்தது. விளம்பரங்கள் வணிகம் சார்ந்து இயங்கும் இலக்கியத்துறை என்று பார்க்கும்போது முதலில் ஒவ்வாமை வந்தது. பின் நண்பர்களுடன் பேசும்போது கலையை செல்வத்தை அடையும் வாயிலாக பார்ப்பதிலுள்ள ஒரு மரபின் ஒவ்வாமை தான் அப்படித் தோன்றச் செய்கிறது எனப் புரிந்தது. ஆங்கிலச் சூழல் வணிகமாக்கப்பட்ட சூழலாகவும் விமர்சனங்களின்மையால் தரம் குறைபாடு நிகழ்வதாகவும் தோன்றுகிறது. தமிழிலும் வணிகப்புத்தகங்கள் இந்த முறையைப் பின்பற்றுவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு தீவிர இலக்கிய வாசகருக்கு/எழுத்தாளருக்கு இச்சூழல் தரும் அதிர்ச்சி உள்ளது. அப்படியிருக்க  நல்ல மொழிபெயர்ப்பு, நல்ல படைப்பு என்பதைக் கூட கூவி விற்கவேண்டியிருக்கும் இந்தச் சூழலை எப்படிப்பார்க்கிறீர்கள்.

உங்கள் ஒவ்வாமையும் ஐயமும் புரிகிறது. உங்கள் உணர்வுகளை ஓரளவுக்கு நானும் பகிர்ந்துகொள்கிறேன்.

ஆனால் ஒன்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்று நாம் அனைவருமே – உலகம் முழுக்க – கவனச்சிதறலால் பீடிக்கப்பட்டுள்ளோம். ஆகவே எல்லா கலைத்துறைகளிலும் ரசிகர்களை கவரவேண்டியுள்ளது. விளம்பரம் இன்றியமையாததாகிவிட்டது. தமிழிலும் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பை விட இப்போது புத்தகங்கள் அதிகம் விளம்பரம் செய்யப்படுகிறதே? 

பிறகு இது பழுத்த முதலாளித்துவ யுகம். எல்லோரும் பணமீட்டவும் பணம் செலவிடவும் ஊக்கப்படுத்தப் படுகிறார்கள். ஒரு சராசரி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவே முன்பை விட இந்நாட்களில் பன்மடங்கு உழைப்பைப் போட வேண்டியுள்ளது. ஆகவே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எழுத்தும் ஒரு வருவாய்த்துறையாக பரிணமித்துவிட்டது. இந்திய ஆங்கிலச் சூழலில் அந்த மாடலை நகலெடுக்கிறார்கள். 

இதில் சாதக பாதகங்கள் உண்டு. எழுத்தாளர்கள் புரவலர்களையோ வேறு அமைப்பையோ நம்பி செயல்படத் தேவையில்லை. பொருளாதாரச் சமநிலையை எழுத்தே பெற்றுத்தரும் நிலைமை உருவாகலாம். அதே சமயம் முதலாளித்துவச் சூழல் எழுத்தின் மீது ஓர் நிபந்தனையை வைக்கிறது. சந்தையில் வெல்லவே அனைவரும் எழுத ஆரம்பிக்கிறார்கள். இது நல்லதேயல்ல. 

இதற்கிடையில், மொழிபெயர்ப்பு வழியாகவோ சொந்த எழுத்தாகவோ, நாம் நம்பும் ஓர் அழகியலை, சிந்தனை முறையை முன்வைக்க வேண்டுமென்றால், வேறு வழியே இல்லை – இந்த விளம்பர வணிகம் சார்ந்த அமைப்பை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதைத் தவிர. இல்லையென்றால் நம் குரல் கவனிக்கப்படாமல் போகும் அபாயமே மிகுதி. நல்ல வாசகர்க் கோவை ஒன்று நம்மை நோக்கித் தேடி வரும் என்ற நம்பிக்கை மட்டுமே இதில் உருவாகும் சோர்வுகளை மீறி என்னைப்போன்றவர்களை செயல்பட வைக்கிறது.

நமக்கு முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் பசி கொண்டவர்களாக இருந்தார்கள். பாணர்கள் போல அலைந்து திரிந்து எழுதியவர்களாக இருந்திருக்கிறார்கள். இன்று புதிதாக எழுதவருபவர்களிடம் முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் முதலில் சொல்வது சோறு திண்ண ஏதுவான பொருளாதாரத்தை அடைந்தபின் எழுதினால் போதும் என்ற அறிவுரையைத்தான். புதிய தலைமுறை எழுத்தாளர்களைப் பார்த்தாலும் அவர்கள் ஏதாவது ஒருவகையில் மாத வருமானம் தரும் தொழிலில் இருந்து கொண்டு தான் எழுதுகிறார்கள் என்பதும் புரிகிறது. இந்த தமிழ்ச்சூழலுடன் ஆங்கிலச் சூழலை எப்படி ஒப்பிடுகிறீர்கள்? தமிழ்ச்சூழலில் இன்னும் பழைய மதிப்பீடுகள் செயல்படுவதாக நினைக்கீறீர்களா?

நான் கவனித்த வரை இளம் தமிழ் எழுத்தாளர்கள் ‘இன்னும் சற்று பொருளாதாரச் சமநிலை இருந்தால் மேலும் சிறப்பாக எழுதுவேனே’ என்று உணர்கிறார்கள். அதை முற்றாக புரிந்துகொள்கிறேன். இன்று இணையம் போல வாசிக்க எழுத உரையாட பல வசதிகள் வந்துவிட்டன. ஆனால் சாதாரணமாக அரசாங்கத்திலோ ஐடியிலோ வேலைப்பளு அதிகம். விலைவாசி எல்லாமே அதிகம். குடும்பத்திலும் பொருளாதாரம் சார்ந்த அழுத்தங்கள் மிகுந்துவிட்டன. எழுத்தாளருக்கு  எழுத மனவிரிவும் நேரமும் தனிமையும் வாய்ப்பதில்லை. பணம் ஓரளவுக்கு அதையெல்லாம் மீட்டிக்கொள்ள ஒரு வழி தான். 

ஆகவே முன்பு சொன்னது மாதிரி தனியார் அமைப்புகள் எழுத்தாளர்களுக்கு சிறு உதவித்தொகைகளை போட்டி அடிப்படையில் அளிக்க முன்வரலாம். அவை எழுத்தாளர்களுக்கு அங்கீகாரமாகவும் அமையும். குடும்பத்தின் முன்னே சமூகத்தின் முன்னே ‘எழுத்தாளனின் பணி மதிக்கப்படுகிறது’ என்ற செய்தியை அவை அழுத்தமாக முன்வைக்கின்றன.

 அதே சமயம் பணம் இருந்தால் தான் எழுதுவேன் செயல்படுவேன் என்ற சூழலும் இலக்கியத்திற்கு ஆபத்து. அந்த நிலைக்கு நாம் செல்லக் கூடாது. இந்த இரண்டு உலகங்களிலும் ஒரு சேர பயணிப்பவள் என்ற முறையில் சில நேரங்களில் எனக்கு சிரிப்பாக இருக்கும். தமிழில் வெண்முரசு போன்ற ஒரு நாவல் எழுத எழுத நேரடியாக வலையேற்றப்பட்டது. அதன் பல்லாயிரம் பக்கங்களை ஒவ்வொரு நாளும் இருவர் திருத்தி வெளிவந்தது. இதில் லாபநோக்கமென்பதே இல்லை. இலக்கியம் மட்டுமே லாபம். இதை ஆங்கிலத்தில் சொன்னால் வியக்கிறார்கள்.

நாம் அனைவருமே பிரசுரமாகாத கதைகளை வாசித்து நண்பர்களிடம் கருத்து சொல்கிறோம். இணைய சந்திப்புகளில் பேச்சாளர்களாக கலந்துகொள்கிறோம். நாவல்களை தொகுத்துக் கொடுக்கிறோம். ஆங்கிலச் சூழலில் இதையெல்லாம் செய்ய பணம் எதிர்பார்க்கிறார்கள். அல்லது அதற்கீடான பரோபகாரம். ஆம், நண்பர்களே என்றாலும். ‘ஒன்றை சிறப்பாக செய்தால் அதை பணம் வாங்காமல் செய்யாதே, உன் வித்தை மேல் உனக்கே மதிப்பில்லை என்று அது காட்டுகிறது’ என்பது தான் அங்கே தாரக மந்திரம். 

பார்க்க பார்க்க எனக்கு குழப்பமே எஞ்சுகிறது. அறுதியாக எதுவும் சொல்லத் தெரியவில்லை. இப்படிச்சொல்வேன் –  “பசி இருப்பவன் தான் நல்ல எழுத்தாளன்” போன்ற ரொமாண்டிசிசம்களை நாம் கடந்து வரலாம். அதே சமயம் எழுதவேண்டியதை எழுத சூழலை அமைத்துக்கொள்வதே எழுத்தாளரின் கடமை. சொகுசு நல்ல எழுத்தை குலைக்கிறதென்றால் சொகுசுக்கு பழகாமல் இருப்பதும் எழுத்தாளனின் கடமையே. அதை அவன் (அல்லது அவள்) தனக்குறிய வழிகளில் தேற வேண்டும். அதற்கு அமைப்புரீதியான உதவிகள் கௌரவங்கள் கிடக்குமானால் சிறப்பு.

சமீபத்தில் நீங்கள் Scroll.in -ல் திருக்குறள் மொழிபெயர்ப்பு பற்றி எழுதிய கட்டுரை முக்கியமானது. மொழிபெயர்ப்பு செய்யும் அதே நேரம் தமிழிலிருந்து சரியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதா என்ற பதற்றத்தை வெளிப்படுத்திய கட்டுரை அது. இது போன்றவைகளை இன்று உங்களால் அழுத்தமாக முன்வைக்க முடியும் இடத்திற்கு இந்த மொழிபெயர்ப்பு பணி உதவியுள்ளதாக எண்ணுகிறீர்களா?

என் கட்டுரையின் நோக்கம் எது “சரியான மொழிபெயர்ப்பு” என்று ஆராய்வது அல்ல. கவிதை மொழிபெயர்ப்பை அப்படி சரி, தவறு என்று பார்க்க முடியாது. மொழிபெயர்ப்பில் அது கவிதையாக நிலைபெறுகிறதா, அழகாக உள்ளதா என்றே நான் கேட்கிறேன். அவ்வாறு அல்லாத ஒரு மொழிபெயர்ப்பு பரவலாக கொண்டாடப்படும் போது அதை சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் அழகான படைப்பூக்கம் மிக்க மொழிபெயர்ப்பை முன்வைத்து ‘இதை வாசியுங்கள், இதில் கற்றுக்கொள்ள கொண்டாட மேலும் விஷயங்கள் உள்ளன’ என்று சொல்கிறேன். 

தாமஸ் ப்ருக்ஸ்மாவின் குறள் மொழியாக்கம் மிக்க அழகுடனும் கவனத்துடனும் செய்யப்பட்டுள்ளது. குறளின் அழகு அதன் குறைந்த வார்த்தைக்கட்டில் உள்ளது. economy, precision என்பார்கள். பிறகு ஓசைநயம். இரண்டையும் தாமஸ் அவர் மொழியாக்கத்தில் அடைந்திருக்கிறார். மீனா கந்தசாமியின் மொழியாக்கம் இந்த அம்சங்களை முற்றிலும் தவறவிடுகின்றன. தாமஸ் குறளின் பாடல்களின் அர்த்தத்தளத்தை விரித்து வாசிக்க முற்பட்டுள்ளார். குறளின் இயல்பான பறந்தமனப்பான்மை அவர் மொழியாக்கத்தில் ஆழமாக வெளிப்படுகிறது. ஆகவே மிக புத்துணர்வு மிக்க, நவீனமான ஒரு வாசிப்புக்கு வழிவகுக்கிறது. மீனா கந்தசாமியின் மொழியாக்கம் அரசியல் நோக்கோடு செய்யப்பட்டதென்றாலும் சில பழமைவாத க்ளீஷேகளுக்குள் மாட்டிக்கொள்கிறார். ஆகவே சில இடங்களில் அவர் முன்வைக்கும் பெரியாரிய-பெண்ணிய அரசியலுக்கு எதிரான தொனி வந்துவிடுகிறது. திராவட அரசியலின் நோக்கம் கொண்டவர்களால் திராவிட அழகியலை அவ்வளவு எளிதாக கைவிட முடியவில்லை என்பதை இது காட்டுகிறது. இதுதான் என் கட்டுரையின் சாராம்சம்.

இதை ஆங்கிலத்தில் சொல்வது வழியாக என் ரசனையை முன்வைத்து அங்கே ஒரு ரசனை மதிப்பீட்டை உருவாக்க முயற்சிக்கிறேன்.

சமீபத்தில் நீங்கள் ப்ரியம்வதாவுடன் இணைந்து தொடங்கிய மொழி” தளம் முக்கியமான முன்னெடுப்பு. மொழிபெயர்ப்புக்கான போட்டி வைத்து அவற்றை பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். அதன் எதிர்கால நோக்கம் என்ன? இன்னும் அதை எப்படி எடுத்துச் செல்லலாம் என்று நினைக்கிறீர்கள்?

வாழ்த்துக்களுக்கு நன்றி ரம்யா. இந்த நேர்காணல் முழுவதும் சொல்லி வரும் சிந்தனைகள் தான் இந்த தளத்தைத் தொடங்க பின்னணி காரணம். உலக அளவில் இந்திய இலக்கியம் என்றால் இந்திய ஆங்கில இலக்கியம் என்ற பிம்பம் உள்ளது. அதற்கு முதல் காரணம், இந்திய மொழி இலக்கியங்கள் ஆங்கிலத்தில் போதிய அளவுக்கு விவாதிக்கப்படுவதில்லை. அழகியல் நோக்கில் விமர்சிக்கப்படுவதில்லை. அந்தந்த மொழிக்கு ஓர் அறிவுத்தளம் உள்ளது, வளமான அறிவியக்கங்கள் உள்ளன. இவை மைய விவாதமாக வேண்டும். அந்த நோக்கத்திலேயே “மொழி” தொடங்கப்பட்டது.

“மொழி”யை நாங்கள் இந்திய மொழிகளுக்கிடையே ஒரு பாலமாக, ‘மொழிகளுக்கு இடையேயான ஒரு வெளி’யாக உருவகிக்கிறோம். நாங்கள் உத்தேசித்திருக்கும் செயல்பாடுகள் – வெவ்வேறு மொழிகளிலிருந்து கதைகள் கட்டுரைகள் விமர்சனங்களை  ஆங்கில மொழியாக்கத்தில் வெளியிடுவது, அவற்றைப்பற்றிய விவாதம் உண்டுபண்ணுவது; ஆங்கிலம் அல்லாமல், மற்ற இந்திய மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்புகளை வெளியிட ஒரு தளமாக அமைவது; இந்திய மொழி எழுத்தாளர்களை மொழிபெயர்ப்பாளர்களை கவனப்படுத்தி ஓர் உரையாடல் வெளியை உருவாக்குவது; இந்திய இலக்கியத்தை ரசனை அடிப்படையில் விமர்சனப்பூர்வமாக அணுகும் விமர்சனங்களை முன்வைப்பது; அடுத்தத் தலைமுறை மொழிபெயர்ப்பாளர்களை கண்டடைந்து அவர்கள் வெளிப்பட உதவுவது.

இது மிகவும் நீண்டகால தொடர்ச்செயல்பாடு வழியாக நிகழவேண்டிய ஒன்று என்பதை உணர்கிறோம். இப்போது தான் தொடங்கியிருக்கிறோம்.

இந்தச்செயல்பாடு இன்னும் தீவிரமடைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

மொழிகளுக்கு இடையில் நின்று பேசக்கூடிய நல்ல திரளை நாம் உருவாக்க வேண்டும். நம் இலக்கியங்களை பற்றி தொடர்ந்து ஆங்கிலத்திலும் உரையாடும் ஒரு வாசலை நாம் திறந்து வைக்க வேண்டும்.அறிவுத்துறையிலிருக்கும் நாம் அந்த முனைப்போடு தான் செயல்பட வேண்டும். அது நம் கடமை. இன்று ஆங்கிலத்தில் தனி மனிதனின் ரசனை என்பதற்கு பதிலாக ஊடகவியலாளர்களால் வடிவமைக்கப்படும் பிம்பங்களே மலிந்து கிடக்கின்றன. இது மாற வேண்டும். ஓரளவு ஆங்கிலத்தில் எழுதும் திறமையுள்ளவர்கள் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதி பிரசுரிக்கலாம். விவாதங்களை உருவாக்கலாம். இலக்கியக் குழுக்களை ஒருங்கிணைக்கலாம். விடுதலைக்கு முன் காந்தி, தாகூர் எழுதியவை மற்ற இந்திய மொழிகளுக்கெல்லாம் சென்றது. மிகத்தீவிரமாக பரப்பப்படுவதற்கு விடுதலை வேட்கை காரணமாக இருந்தது. இன்றைக்கு அந்தத் தீ இல்லை. அந்த அறிவுக் கலாச்சாரம் இல்லை. இதை மாற்ற நம்மளில் சிலர் முன் வர வேண்டும். இந்த வெளியை விரிவாக்க வேண்டும்.

பெண்களுக்கு கிரியேடிவிட்டி குறைவு என்பதால் அதிக எண்ணிக்கையில் மொழிபெயர்க்கிறார்கள் என்ற கருத்து உள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அது அவரவர் கருத்து. உலக அளவில் பெண்கள் தான் அதிக எண்ணிக்கையில் மொழியாக்கம் செய்கிறார்கள் என்பதே உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால் இரண்டு விஷயம். ஒன்று, நல்ல புனைவு மொழியாக்கம் செய்ய மொழிசார்ந்த நுண்ணுணர்வும் படைப்புணர்ச்சியும் அவசியம். கூடவே, ஓர் அன்னிய கதைக்களனை தனதாக்கிக்கொண்டு அதை மீண்டும் நிகழ்த்திப்பார்க்க வேண்டும்  என்ற ஒருவித விடாப்பிடித்தனம். ஆண்களோ பெண்களோ நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இவ்விரு குணங்களும் கொண்டவர்கள். இவை இரண்டுமே creative impulses – படைப்பாக்க தூண்டுதல்கள் தான்.

ஒரு வேளை தமிழில் நிறைய பெண்கள் மொழியாக்கம் செய்கிறார்கள் என்பதை ஒட்டி உங்கள் கேள்வி வருகிறதா? அதை அவர்கள் இலக்கியத்தில் இருப்பதற்கான ஒரு வழியாக வைத்துக்கொள்கிறார்கள் என்று ஊகிக்கிறேன். இன்று நிறைய பெண்கள் காணொலிகளில் ரேடியோவில் கதை வாசிக்கிறார்கள். அவர்களுக்கு இலக்கியம் மேல் காதல் உள்ளது. ஆனால் ஒரு வலுவான படைப்பாளியாக உருவாக குடும்பச்சூழல் இல்லாத நிலையில் இருக்கிறார்கள். ஆகவே இப்படியெல்லாம் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்துகிறார்கள். இது ஒருவித சிதறுண்ட வெளிப்பாடு தான். ஆனால் ‘பெண்களுக்கு கிரியேட்டிவிட்டி குறைவு’ என்று இல்லை. அது ஒரு blanket statement, அதை எவரும் சொல்லலாம். கிரியேட்டிவிட்டியை குவித்து (focussed) வெளிப்படுத்த தமிழ்ப்பெண்களுக்கு வெளிகள் குறைவு என்பதே நிதர்சனம்.

எழுத்தாளர் சுசித்ரா

இறுதியாக… தமிழ்ச்சூழலில் நல்ல மொழிபெயர்ப்புகள் கொண்டு வர வேண்டிய பொறுப்பு யாரிடம் உள்ளதாக நினைக்கிறீர்கள்?

பதிப்பகங்கள் தான் நல்ல மொழிபெயர்ப்புகள் கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்ச் சூழலில் எடிட்டரின் பங்கு மிகவும் குறைவு அல்லவா? அது மாற வேண்டும். இந்த விஷயத்தில் ஆங்கிலச்சூழல் மேலும் சிறப்பாக செயல்படுகிறது என்று நினைக்கிறேன். தமிழில் வாசிக்கமுடியாத மொழிபெயர்ப்புகள் நிறைய வருவதைப் பார்க்கிறேன். அவற்றை தரம் மேம்படுத்தாமல் பிரசுரிக்க வேண்டாமே?  ஒரு பியர் ரிவ்யூ குழுவை வைத்தாவது இதைச் செய்யலாம்.

அடிப்படையில் ஓர் இலக்கியச் சமூகமாக நாம் மொழிபெயர்ப்பாளர்களின் படைப்பூக்கத்தை பங்களிப்பை உணர்ந்து அங்கீகரிக்கும் இடத்துக்கு வர வேண்டும். நல்ல மொழிபெயர்ப்பாளன் மொழியின் பண்பாட்டின் சொத்து.

(நிறைவு)

*

8 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *