புதிய வானம் புதிய சிறகுகள் : அனார்
(சமகால இலங்கைப் பெண்ணியக் கவிதைகள் குறித்து சில பார்வைகள்)
(1)
நானும் கவிதைகளும்
சாய்ந்து எழுந்த விருட்சம்
வந்து செல்லுகின்ற மலைக்குன்று
தள்ளாடுகிற ஆகாயம்
இங்குமங்கும் ஓடியோடித் தேய்ந்த நிலா
ஊஞ்சலில்
தலைகீழாகப் பார்க்கிறேன் உலகத்தை……
இறுக்கமாகப் பொத்திய கைகளிரண்டையும், தலைக்குமேல் உயர்த்தியபடி “சுடு சுடு மாம்பழம்“ எனப் பாடி விளையாடியவாறு மண்தரையில் கைகளை வைத்து விரிக்கும்போது என்னுடைய முதலாவது கவிதை பறந்து போயிருக்கக்கூடும்…. கோப்பி மரத்திற்கும், மூங்கில் மரங்களுக்குமிடையே தேடிய சிவப்புநிறத் தும்பியைப்போல !
மழைபெய்து ஓய்ந்த ஈர மண்தரையில், தோழி கீறிய சதுர வடிவான கட்டங்களில், ஒற்றைக்காலால் நொண்டி விளையாடும்போது, எதிரே தெரிந்த சிறு கடலையும்… பெருங்கடலையும் நான் தாண்டிய கணம்தான் கவிதையோ… என்னவோ !
என் சிறுவயதில், ஓலைகளால் கூரைவேய்ந்ததும், களிமண்தரை மெழுகியதுமான, சிறு குடிசைக்குள்ளிருந்த ஒரு மூதாட்டியின் அருகாமை கிடைத்தது. முக்காடிட்ட அம்முதிய பெண் களிமண்தரையில், பன் பாயில் கால்களை நீட்டி அம்ர்ந்தபடி, எப்போதும் நாட்டுப்புறக்கவிகளை ஒன்றொன்றாகப் பாடிக்கொண்டேயிருப்பார். அருகே செம்பு வட்டாவும், படிக்கமும், சிறிய வெற்றிலை உரலும், சிவப்புநிறச் சாயமூறிய பனைஓலை விசிறியும், ஒரு சுருட்டைத்தலைமுடி சிறுபெண்ணும்… அந்திசாயும்வரை அவளருகே அசையாமல் அமர்ந்திருப்போம். வெற்றிலைபோட்ட இரத்தச் சிவப்பான நாக்கு, மேலும் கீழுமாக அசைய, காற்றில் மணக்கும் கவி இசையைக் கேட்டு மயங்கியிருப்பேன். பிறகு வந்த நாட்களில், சபைகளில் என்னை யாராவது கவிபாடும்படி கேட்டுக்கொண்டால், ஆர்வமேலீட்டால் மனனமாகியிருந்த அத்தனை நாட்டார் பாடல்களையும் மூச்சுவிடாமல் பாடிக்காட்டும் சிறுமியாக நானிருந்தேன்.
என்னுடைய முதலாவது கவிதை உணர்வுக்குக் கிடைத்த, முதலாவது தண்டனை விசித்திரமானது. நன்றாகப் பழுத்தமிளகாயை இரண்டாகப்பிளந்து, என் உதட்டில் வைத்து தேய்த்துவிட்டனர். கெட்ட வார்த்தை பேசுதல் அல்லது கெட்ட நடத்தைகளுக்கான சிறுவர் சிறுமியருக்கு வழங்கப்படும் தண்டனை இது. எனவே கவி பாடுவதும் கெட்ட பழக்கம் என்று அன்றவர்கள் எனக்கு உணர்த்தினர்.
என்னுடைய ஊரான சாய்ந்தமருது, கிழக்கிலங்கையில் உள்ளது. இன்று முற்றுமுழுதாக நகரமயமாகிவிட்ட முன்னாள் கிராமம் அது. என்னூரின் கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே வயற்பரப்பும்… விரிந்து பரந்து கிடக்கின்றன. இந்த நிலப்பகுதியின் பாரம்பரிய வாழ்க்கை முறைமைகளில், சொற்பமானவற்றைக் கண்கூடாகக் கண்ட, பெரும்பாலானவற்றை முதியோர்களிடமிருந்து செவிவழியாகக் கேட்டறிந்த கடைசிப் பரம்பரையில் ஒருத்தி நான். கட்டுப்பாடுகள், பாரம்பரிய பண்பாடுகள்மிக்க எனது குடும்பத்தில், ஆண்களால் ஏற்படுத்தப்பட்ட வலுவான சட்டதிட்டங்கள், பெண்களை பூட்டிய கதவுகளுக்குப் பின்னே வைத்திருந்தது. அதற்கு ஊரில் எற்பட்டிருந்த யுத்தநெருக்கடிகள் குழப்பமான சூழல் இன மோதல்கள் என்பன மேலதிகமான வலுவான காரணிகளாக அவருக்கு இருந்தன.
என்னுடைய வாழ்க்கை. அத்தம்விட்ட பெருவிரலுக்கும், பழம் விடுகிற சின்ன விரலுக்கும் இடையே இருந்த, சந்தோசங்களிலிருந்தும் விளையாட்டுக்களிலிருந்தும் அன்றாட இயல்புகளிலிருந்தும் தலைகீழாகி சாகசமானதாக எதிர்பாராத அதிர்ச்சிகளோடு என் எதிர் நின்றது.
உண்மையில் மரணம் ஹெலிக்கொப்டரின் இரைச்சலென, தென்னை மரங்களிடையே தாழ்ந்து, சுழன்று கொண்டிருந்தது. நிராதரவும், அபாயங்களும், அச்சங்களும் பலவிதமாகத்தாக்கின. உயிர், உடல், மனம், இனம், அரசியல், மதம், பண்பாடு. நிலம், ஊர் எல்லாம் என்னைச் சுற்றி எரிந்தன. சமையத்தில் அந்த நெருப்பு, என்னில் தீக்காயங்களை ஏற்படுத்தியது. என்னுடைய இயலாமை, கையறுநிலை இரவின் ஆழமான பள்ளங்களை, கண்ணீரால் நிரப்பியபடி வழிந்தோடியது. நான் என் உயிரின் நிறங்களை கரைத்துச் சிந்தி, ஓவியங்களாக வரைய முற்பட்டேன்…
ஒவ்வொரு வர்ணமாய்ப் பிரித்து
தரையில் கரைத்து
சிந்தும் ஓவியம் இது
இதன் இதயத்திலரும்பிய கவிதைகளும்
பாவப்பட்டவைதான்
வெறும் ஓவியத்தின் வாழ்வில்
என்ன அர்த்தமிருக்க முடியும்
அசைய முடியாக் கைகளும்
நகர முடியாக் கால்களும்
பேச முடியா உதடுகளும்
சந்தேகமேயில்லை
வாயில்லா ஜீவன்
ஆடாதசையாது
சுவரில் மாட்டப்பட்டிருக்கிறது
பல்லிகள் எச்சில்படுத்துவதையும் எதிர்க்காமல்
வருகிறவர்களுக்கென்ன
வரைந்தவனை
வாழ்த்திவிட்டுப் போகிறார்கள்
சட்டங்களால் சிலுவையறையப்பட்டிருக்கும்
ஓவியத்தைப் பார்த்து
உண்மை தெரியாதவர்கள்
உயிரோவியம் என்றார்கள்
–அனார்
உண்மையில் அவசர அவசரமாக உயிர்விடப்போகிற ஒருத்தி விட்டுச் செல்வதற்கென எழுதிய இவ்விதமான பல கவிதைகள் என் முதல் தொகுப்பில் உள்ளன.
எல்லாவிதக் கட்டாயத் திணிப்புகளிலிருந்தும் கல்வியோ காதலோ கிடையாத உலகத்திலிருந்தும் வெளியேற விரும்பினேன். யாரயேனும் இதற்காக தண்டிக்க வேண்டுமென நினைத்தேன். குறைந்தபட்சமாக கடவுளையேனும். ஆனால் சாகும் தருணங்களிலிருந்தெல்லாம் என்னை மீட்டெடுத்துக்கொண்டது கவிதை. ஆற்றில் இலக்கற்று மிதந்து செல்லும் இலையொன்றின் மீது விழுந்த எறும்பு, உயிர் தப்பிப் பிழைத்துக் கொண்டது….
அன்று நான் உணர்ந்தேன்
எனக்குக் கவிதை முகம்
என் உடல் பச்சை வானம்
நான் பெண் என்பதையும்..
ஒரு காட்டாறு
ஒரு பேரருவி
ஓர் ஆழக்கடல்
ஓர் அடைமழை
நீர் நான்
கரும் பாறை மலை
பசும் வயல்வெளி
ஒரு விதை
ஒரு காடு
நிலம் நான்
உடல் காலம்
உள்ளம் காற்று
கண்கள் நெருப்பு
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்
-அனார்
நான் கவிதை எழுதத்தொடங்கிய நாட்கள், சமூகம் பலவிதமான இம்சைகளுக்குள் சிக்கியிருந்த கொந்தளிப்பான காலமாகும். சொல்வதற்கு அதிகமிருந்தன. ஆனால் சொல்லமுடியாத இறுக்கம் வெளியிலிருந்தது. இரண்டுக்கும் நடுவில் என்னுடைய இருப்பை கவிதையூடாக நிலை நிறுத்த தொடங்கினேன். என் குரல் தனிமையெனும் பாறையை ஊடறுத்தபடி ஒளியெனத் தெறித்தது. பெண் மனவெளியை அதன் வீரியமான எழுச்சியை பொங்கும் பிரவாகத்தை என்னுள் உணரத் தொடங்கினேன். கவிதை நுண்ணுர்வுகளுடன் சம்மந்தப்பட்டது. அனுபவங்களுக்கூடாகவும் வாசிப்பு தேடல் போன்றவற்றினாலும் நிகழ்வது. உணர்வின் குரலை அழகின் பாடலை மொழியின் கனவை அதன் உறையும் மௌனத்தை நோவைப் பகிர்ந்து வருகிறேன். மேலும் கூறினால் என்னுடைய கவிதைகள் தமக்கு அதிகபட்ச உரிமைகளை எடுத்துக்கொள்ள எப்போதும் அனுமதிக்கிறேன்.
இவ்விதமே என்னை அபூர்வமானவளாய், வலிமையானவளாய் மாற்றியது கவிதை. என் அகவெளியை கவிதை என்னும் மந்திரப்பூச்சிகள் ஆள்கின்றன. அங்கே எனக்கான உலகம் எல்லாவித சாத்தியங்களாலும் ஆக்கப்பட்டிருக்கிறது. இன்று எனக்குத் தெரியும், வாள்உறைக்குள் கனவுகளை நிரப்புவது எப்படி என்று. என்னுடைய ஆனந்தத்தை ஈரம் சொட்டச்சொட்ட உருவாக்குகின்றேன். எல்லையற்ற அதன் எல்லையை நிர்ணயிக்கிறேன். எனது ருசியின் முழுமையை முழுமையின் ருசிக்குப் பரிமாறுகிறேன்.
குறிஞ்சியின் தலைவி
இரண்டு குன்றுகள்
அல்லது தளும்பும் மலைகள் போன்ற
முலைகளுக்கு மேல் உயர்ந்து
அவள் முகம் சூரியனாக தக தகத்தது
இரண்டு விலா எலும்புகளால் படைக்கப்பட்டவள்
பச்சிலை வாடைவீசும் தேகத்தால்
இச்சையெனப் பெருக்கெடுத்தோடும்
மலையாற்றைப் பொன்னாக்குகிறாள்
வேட்டையின் இரத்தவீச்சத்தை உணர்ந்து
மலைச்சரிவின் பருந்துகள் தாளப்பறக்கின்றன
மரக்குற்றிகளால் உயர்த்திக்கட்டப்பட்ட
குடில்களில் படர்ந்த மிளகுப்பற்றை
மணம்கசியும் கறுவாச்செடி
கோப்பிப்பழங்களும் சிவந்திருந்தன
நடுகைக் காலத்தில் தானியவிதைகளை வீசுகிறாள்
சுட்டகிழங்கின் மணத்தோடு
பறைகளுடன் மகுடிகளும் சேர்ந்து ஒலியெழுப்ப
ஆரம்பமாகின்றது சடங்கு
களிவெறி… கள் சுகம்…
மூட்டிய நெருப்பைச்சுற்றி வழிபாடு தொடங்கிற்று
வளர்ப்பு நாய்களும்… பெட்டிப்பாம்புகளும்… காத்துக்கிடக்கின்றன
மாயஆவிகளை விரட்டி
பலிகொடுக்கும் விருந்துக்காக
தீர்ந்த கள்ளுச்சிரட்டைகளைத் தட்டி
விளையாடுகிற சிறுசுகள்
வாட்டிய சோளகக்கதிர்களை கடித்துத்திரிகின்றனர்
பிடிபட்டு வளையில் திமிறும் உடும்பை
கம்பினில் கட்டி… தீயிலிட்டு…
அதன் வெந்த இறைச்சியை மலைத்தேனில் தொட்டு
கணவன்மார்களுக்கு பரிமாறுகின்றாள் குறத்தி
தும்பி சிறகடிக்கும் கண்கள்விரித்து
இரவுச் சுரங்கத்தின் கறுப்புத்தங்கமென எழும்
தலைவியை மரியாதை செய்கின்றனர்
மலைத்தேன் அருந்தியவாறு இருப்பவளை
புணர்ச்சிக்கு அழைத்தவன் கூறுகின்றான்
‘போர் தேவதையின் கண்களாக உறுண்ட
உன் முலைகளால்
குறிஞ்சி மலைகளையே அச்சுறுத்துகின்றாய்’
அவளது குரல் … மலைகளில் சிதறி ஒலிக்கின்றது
‘பெண் உடல் பூண்ட முழு இயற்கை நான்’
காற்றில் வசிப்பவன் …
காலத்தை தோன்றச் செய்வபன் …
இன்றென்னைத் தீண்டலாம் !
–அனார்
(2)
“இலக்கிய உலகில் கலகம் செய்வதற்கு ஏற்ற வடிவம் கவிதை இலக்கியமே. ஏன்னென்றால் கவிதை, மொழியைப் பற்றிய மொழியாக இருக்கிறது. பெண்ணுக்குள் கிடக்கும் எல்லையில்லாக் கற்பனை வளத்தைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் மிக்கது. நனவிலி மனத்தோடு அங்கே கிடக்கும் அடக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான குறியீடுகளுக்கு மிகவும் நெருக்கமானது. மேலும் கவிதை எப்பொழுதும் அமுக்கப்பட்ட ஒரு குழுவின் ஒட்டு மொத்தக் குரலாக பதிவாகிறது. எனவே அமுக்கப்பட்ட பெண்ணும் தனக்கான மொழியை உருவாக்கிக்கொள்ள கவிதை வடிவே சிறந்த சாதனமென, கோராகப்லான் (Corakaplan), பெண்ணுக்கான மொழியை உருவாக்க வழி கூறுகிறார்“. மேலும் கவிதைதான் காரண காரியம், பகுத்தறிவு, தர்க்கம் என்கின்ற முறையில் பெண்ணை மடக்கிப்போடும் ஆணாதிக்க மொழியை தகர்த்துக்கொண்டு எல்லை மீறிய அப்பாலுக்கு அப்பால் அழைத்துச் செல்லும். படைப்பாக்கத்தின் உச்சக்கட்ட சுவையை எட்டி நிற்கும். எனவே கலகம் செய்ய நினைக்கின்ற பெண் எழுத்தாளர்களுக்கு கவிதை சிறந்த வடிவமென்று பல பெண்ணியலாளர்கள் இக்கருத்தை முன்வைக்கின்றனர்.
இலங்கை தமிழ் இலக்கியத்தின் தீவிர படைப்பிலக்கியத் தளங்களில் ஈடுபடுகின்ற பெண்களது பங்களிப்பானது பல்வேறு காரணிகளால் 80 களிலும் அதன் பின்னர் அடுத்தடுத்த காலகட்டங்களில் வெவ்வேறு முக்கியத்துவங்களைக் கொண்டும் வெளிப்பட்டிருக்கின்றது. 80களில் உருவாகிய புதிய சமூக அரசியல் பிரக்ஞையின் முக்கிய கூறாக சிவரமணி, செல்வி, சங்கரி. ஊர்வசி. மைத்ரேயி போன்றவர்களுடைய கவிதைகளைக் காணலாம். அக்காலகட்டப் பிரச்சினைகள், பெண்ணிருப்பு, அரசியல் எழுச்சி மாற்றம், பெண்ணியவிடுதலை, போராட்டநிலைகள் என்பனவற்றை அக்கவிதைகள் வெளிப்படுத்தின. தற்போது நிலவிவரும் சமகால நவீன பெண் கவிதையின் வளமான எதிர்காலத்தை அன்றைய கவிஞர்கள்தான் இத்தனை வலிமைமிக்க பாதையாக ஆக்கிக் கொடுத்தனர்.
1990களில் மற்றும் 2000 ஆண்டின் நடுப்பகுதிவரை பெண் கவிஞர்களின் பங்களிப்பானது செறிவும், வடிவச் செளுமையும், மாற்றுக் குரல் கொண்டதாகவும், கருத்தாளமிக்க மொழி ஆளுமை பெற்று நவீன முகத்துடன் வளர்ச்சியடைந்தது. இலங்கைப் பெண் கவிஞர்களைப் பொறுத்தவரை இன்றியமையாத முக்கிய காலகட்டங்களாக இக்காலப்பகுதிகளைக் குறிக்க முடியும்.
சமகால இலங்கைப் பெண்ணியக் கவிதைகளை ஒற்றைத் தன்மையான குரலாக நாம் அடையாளப்படுத்திக் காணமுடியாது. சமகாலம் என்பது கடந்த காலத்தின் பல நிலைப்பாடுகளிலிருந்து முற்றுமுழுதாக மாறி, வேறொன்றாக எம்முன் நிற்கின்றது.
இலங்கைப் பெண்கள் தம்முடைய நிலத்திலிருந்தபடியும், அதற்குள்ளேயே அகதிகளாக்கபட்டும்… புலம்பெயர்ந்து உலகின் பல நாடுகளில் சிதறியும் காணப்படுகின்றனர். ஆணாதிக்கத்திற்கெதிராகவும், பாலியல் வன்முறைகள், குடும்ப வன்முறைகள், நூதன ஒடுக்கு முறை பற்றிய கேள்விகளையும், சுயநிர்ணயம், இடப்பெயர்வு, சமூக அரசியல், வாழ்தலின் நெருக்கடி என்பன போன்ற விடயங்களில் கூர்மையான முனைப்புடன் பல பெண் கவிஞர்கள் கவிதைகளை பதிவுசெய்து வருகிறார்கள். எப்போதும் மறுக்கப்பட்டுவரும் விடுதலை பற்றியும், சுதந்திரத்திற்கான வேட்கையினையும் தம்முடைய நிலம் சார்ந்தும், இனம், மதம், பண்பாடுகள் சார்ந்தும் அல்லது சாராமலும் பெண்களுடைய அனுபவங்கள் தொடர்பாகவும் அவர்களுடைய கவிதைகளை ஆயுதமாக ஆக்குகின்றனர். அநீதி, அடக்குமுறை, வன்மப்படுதலுக்கு எதிரான அந்த ஆயுதமே, அவர்களது உயிரும், தசைகளும் சிந்திய குருதியால் ஆக்கப்பட்டிருக்கிறது.
80களின் காலகட்ட அரசியல் சூழ்நிலையும், பெண்நிலைவாதம் தொடர்பான சிந்தனைகளும் உணரப்பட்டு வெளிப்பட்ட கவிதைகள் பற்றிப் பேசாமல், சமகாலத்திற்குள் நுழையமுடியாது. வாழ்வும், மரணமும் அன்று அருகருகே இருந்தது. பல சமயங்களில் இரண்டும் ஒன்றுபோலவும் இருந்தது. இரண்டுக்கும் நடுவே இயங்கிய அன்றைய உச்சமான பெண் கவிதைகள் அவை. அந்த வகையில் ‘சொல்லாத சேதிகள்’ தொகுப்பில் சிவரமணி எழுதிய ‘முனைப்பு’ எனும் கவிதை,
பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கபட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன
என்னை
மேகத்திற்குள்ளும்
மண்னிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர்
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன
எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன
அவர்களின் மனம்
மகிழ்ச்சி கொண்டது
அவர்களின் பேரின்பம்
என் கண்ணீரில்தான்
இருக்கமுடியும்
‘அவர்கள் பார்வை’ எனும் கவிதையில் சங்கரி எழுதும் போது,
எனக்கு முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த துடை
இவைகளே உள்ளன
சமையல் செய்தல்
படுக்கையை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைகளாகும்
கற்பு பற்றியும்
மழை பெய்யென பெய்வது பற்றியும்
கதைக்கும் அவர்கள்
எப்போதும் எனது உடலையே நோக்குவர்
கணவன் தொடக்கம்
கடைக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்
இவர்களைப்போன்றே மற்றொரு ஆளுமைமிக்க பெண் கவிஞர் ஊர்வசி. அவரின் கவிதை என்பது அதன் மொழி நேர்த்தியாலும், கவிதைத் தன்மையான கனவுகளாலும், இயற்கையினைக் கொண்டாடுகிற காதலினாலும், வாசிப்பனுபவத்தையும் சிலிர்ப்பையும் அதிர்வுகளையும் தரக்கூடியது. பசுமையும் பரிவுமான அவரது ‘வேலி’ என்ற கவிதை மிகுந்த நினைவுத் துயரை எற்படுத்துகிறது.
நட்சத்திரப் பூக்களை
எண்ணமுடியாமல்
மேலே கவிழ்ந்தபடி கூரை
ஒட்டடைகள் படிந்து
கறுப்பாய்ப் போனது
கம்பி போட்ட சாளரம் கூட
உயரமாய்
ஆனாலும் திறந்தபடி
அதனூடே காற்று
எப்பொழுதும்
மிகவும் இரகசியமாய்
உன்னிடம் என்னை
அழைக்கிற காற்று
என்னைச் சூழவும் சுவர்கள்தான்
நச் நச் என்று
ஓயாமல் கத்திக்கொண்டிருக்கிற
பல்லிகள் ஊர்கிற சுவர்கள்
அவையும்
ஒட்டடைகள் படிந்து
எப்போதோ கறுத்துப்போனவை
உனக்காக நான்
தனிமையில் தோய்ந்தவளாய்
இங்கே காத்திருக்கிறேன்
பழைய பஞ்சாங்கங்களில்
புதிதாக
நம்பிக்கை தருவதாய்
ஒரு சொல்லைத் தேடிப்பார்த்தபடி
எப்பொழுதுதான் என்னால்
நீ வசிக்கின்ற அந்த
திறந்த வெளிக்கு வரமுடியும்
உன் இருப்பிடம்
இங்கிருந்து வெகு தொலைவோ
இரண்டு சிட்டுக்குருவிகளை
இங்கே அனுப்பேன்
அல்லது
இரண்டு வண்ணத்துப் பூச்சிகளையாவது
“சொல்லாத சேதிகள்“ தொகுப்பில் கவிதைகள் எழுதிய பெண்களையும், ‘மரணத்துள் வாழ்வோம்’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பெண் கவிஞர்களின் கவிதைகளையும் இவ்விடத்தில் நினைவுகூரவேண்டும்.
எல்லை கடத்தல் எனும் கவிதைத் தொகுப்பிலிருந்து ஔவையின் ‘சுயம்’ என்ற கவிதையின் இறுதிப்பகுதி இவ்வாறமைகின்றது,
இப்போதுதான் என்னை மீட்டு
எடுத்திருக்கிறேன்
அடக்குமுறைக்குள்ளிருந்தும்
அச்சம் தரும் இருளிலிருந்தும்
உணர்வுகள் பிடுங்கி எறியப்பட்ட வாழ்விலிருந்தும்
என்னை மீட்டுள்ளேன்
ஒளியைப் பிறப்பித்தபடி செல்லும் சின்னஞ்சிறு
மின்மினிப் பூச்சியாய் என்னைக் கண்டு எடுத்துள்ளேன்
யாவருமறிய நிலவைப்போல இரவல் ஒளியில்
வாழ்தலில் உயிர்ப்பில்லை
சிறிய மின்மினியாய் சுயஒளியில் வாழ்தலே
இன்று சுகமென்றறிந்தேன்
பூவின் மலர்விலும் வாழ்வு உயிர்க்கின்றது
காற்றின் அசைவிலும் வாழ்வு விரிகிறது
1990 களின் காலகட்டத்தில் புதிய சிந்தனைப் போக்குகளோடு பல பெண்கள் கவிதைத்துறையில் ஓர் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார்கள் எனத் திடமாகக் கூறமுடியும். முஸ்லீம் பெண் கவிஞர்களின் தீவிரமான பங்களிப்பு நிகழ்ந்த காலமும் இதுவாகும். இக்காலப்பகுதியானது இனமுரண்பாடுகள் அதிகரித்து கிழக்கிலும் வடக்கிலும் பல கசப்பான அழியாத வடுக்களையும் தோற்றுவித்தது. 1990 ஒக்டோபரில் யாழ்குடாநாட்டிலிருந்த முஸ்லீம்கள் வெளியேற்றபட்ட பின்னரான இவ்விடைவெளி, புதிய பல முஸ்லீம் கவிஞர்களையும் உருவாக்கியது.
பெண்மொழி, உடலரசியல், உடலைக் கொண்டாடுதல், போர்க்கால நெருக்கடிமிகுந்த அனுபவங்களை முனைப்போடு வெளிப்படுத்தியவர்களாக பல பெண்கள் கவிதைத் துறைக்குள் நுழைந்தனர். மைதிலி. ரேவதி, வினோதினி, ஆகர்ஷியா, சுல்பிகா, ஆழியாள், சுமதிரூபன், பெண்ணியா, ரஞ்சினி, தமிழ்நதி, பானுபாரதி, அனார், பஹீமாஜஹான், உருத்திரா என பல பெண்கள் தமக்கென தனித்துவமான பாதையைக் கொண்டவர்களாக வெளிப்பட்டனர். இக்காலத்தில் இடம்பெற்ற முக்கிய அரசியல் சமூகத்தளமாற்றம், புலம்பெயர்தல், தமிழ்ப் போராட்டத்திற்கான ஆதரவு மற்றும் எதிர்ப்புக்களாகவும் கவிதைகள் தோன்றின. புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து எழுதிய பெண்கள் எனவும், கிழக்கிலங்கையை மையப்டுத்தி சில பெண் கவிஞர்களும், மலையகப் பெண்ணெழுத்துக்கள் என வேறு தளத்திலும், வடக்கிலிருந்தபடி போராளிப் பெண்கள் எழுதிய கவிதைகள் என இன்னொரு வகையும் பல பிரிவுகளில் கவனிக்கத்தக்கனவாக பெண்கள் தம் கவிதைகளை பதிவு செய்தனர். உணர்வுத் தளத்தில் பெண் எனும் இருப்பு மேலோங்கியும் அவரவர்க்கான வாழ்வு நிலைகள், கவிதைகளை தீர்மானிக்கின்றவையாகவும் 90களின் பெண் கவிதைகள் அமைந்திருந்தன. சுமார் நூறுபேர்களைத் தாண்டிய பெண் கவிஞர்களின் அனைத்துக் கவிதைகள் பற்றியும் ஓர் கட்டுரையில் எழுதிவிடமுடியாது. இங்கு எனது கட்டுரையானது ஆய்வாளரின் பார்வையில் அல்லாமல் சக பெண் படைப்பாளி என்ற அடிப்படையில் சில எல்லைகளுக்குட்பட்டு எழுதப்பட்டிருக்கின்றது என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன். இந்தவகையில் 90களில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க பெண் கவிஞர்கள் சிலருடைய கவிதைகளை அவதானிக்கலாம்.
புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் ஆழியாளின் ‘உரத்துப் பேச’ தொகுப்பு காத்திரமான பெண் மொழியுடன் வெளிவந்தது. அத்தொகுப்பிலிருந்து ‘தேவைகள்’ என்ற கவிதையில் ஒரு பகுதி,
ஒற்றைக்கவள உணவுக்காய்
ஒரு பிஞ்சு உயிர் நான்கு ஐந்தாய்ப் பிரிந்து
பேயாய்த் திரியும் அவலம்
தெரியுமா உனக்கு
கோணிப்பையால் உடல்மூடி
வீதிக் குளிரில் முடங்கி நடுங்கும்
எம் குட்டி இளவரசிகளின் சின்னக்கைகளை
அம்மா நீ அறிவாயா
தளிர்த்துக் கனியுமுன் வாடிக்கை ஆள் தேடி
தெருவெங்கும் அலையும்
என் பத்துவயதுத் தங்கைகளின்
வெம்பிய உடலங்கள் பற்றி
உனக்கேதும் தெரியுமா
ஆழியாளின் மற்றொரு கவிதை ‘மன்னம்பேரிகள்’. பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களைக் குறித்து எழுதப்பட்ட கவிதை இது. இலங்கைக் கவிதை வரலாற்றில் குறிப்பாக பெண்ணிய அடையாளத்துடன் வெளிவந்த கவிதைகளுள் இக்கவிதையின் இடம் தனித்துவமானது. கோணேஸ்வரிகளுக்கும் மன்னம்பேரிகளுக்கும் நிகழ்ந்த கொடூரம் ஒவ்வொரு பெண்ணுடலின் மீதும் ஆழத்திணிக்கப்படும் அன்றாட நிகழ்வாக உள்ளதை இக்கவிதையில் குறிப்பிடுகிறார்.
அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையும்
எனக்குள் உணர்த்திற்று
அழகி மன்னம்பேரிக்கும்
அவள் கோணேஸ்வரிக்கும்
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்கும் என
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்
அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில்
நானும் அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையைப் புரிந்து கொண்டேன்
அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்
வீசும்காற்றில்
கனத்திருக்கும் அமைதி
இருந்திருந்து ஒற்றைக்குரலில்
கத்தும் பெயர்தெரியாப்பறவை
மடிமீது திறந்துகிடக்கும் புத்தகம்
காற்றில் அலைபாயும்
இருளில் படிந்திருக்கும் அச்சம்
வாழ்தல் பற்றிய பயமாய்
திரண்டெழும் என்னுள்
தூரக் கேட்கும் வெடியொலி
(வினோதினி)
நவீன பெண்ணிய அடையாளத்துடன் எழுதப்பட்ட இன்னொரு முக்கிய கவிதை அனார் எழுதிய ‘மேலும் சில இரத்தக் குறிப்புகள்’. இக்கவிதை பற்றி எழுத்தாளரும், பெண்ணியச் செயற்பாட்டாளருமான வ. கீதா, குறிப்பிடும்போது, “பெண்மையை வரையறுக்கும் மாதாந்த இரத்தப்போக்கு வாடையும், வரலாற்றின்மீது படிந்துள்ள குருதிக்கறையை நினைவூட்டும் விபரீதத்தை கவிதையாக்கி, அகமும் புறமும் ஒன்றை மற்றொன்று ஊடுருவியுள்ள நிலையை, அரசியலுக்கு நூதனப்பொருள் வழங்கிப் பதிவு செய்கிறது“ என்கிறார்.
மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து
பழக்கப்பட்டிருந்தும்
குழந்தை விரலை அறுத்துக் கொண்டு
அலறி வருகையில்
நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன்
இப்போது தான் முதல் தடவையாக காண்பதுபோன்று
“இரத்தம்” கருணையை, பரிதவிப்பினை
அவாவுகின்றது
இயலாமையை வெளிப்படுத்துகின்றது
வன்கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்
செத்த கொட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும்
குமுறும் அவளுயிரின் பிசுபிசுத்த நிறமாயும்
குளிர்ந்து வழியக் கூடும்
கொல்லப்பட்ட குழந்தையின்
உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்
மிக நிசப்தமாக
மிக குழந்தைத் தனமாக
களத்தில்
இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்
அதிக இரத்தத்தை சிந்த வைத்தவர்கள்
தலைவர்களால் கௌரவிக்கப்பட்டும்
பதவி உயர்த்தப்பட்டும் உள்ளார்கள்
சித்திரவதை முகாம்களின்
இரத்தக் கறைபடிந்திருக்கும் சுவர்களில்
மன்றாடும் மனிதாத்மாவின் உணர்வுகள்
தண்டனைகளின் உக்கிரத்தில்
தெறித்துச் சிதறியிருக்கின்றன
வன்மத்தின் இரத்த வாடை
வேட்டையின் இரத்த நெடி
வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்
கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்
சாவின் தடயமாய்
என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது
இனபேதமற்று போர் மக்களின் இயல்பு வாழ்க்கையை சிதைத்து நிர்மூலமாக்கியது. மனித அவலங்களை தனித்துப்பேசிய போர்க்கால பெண் கவிதைகள் விரிவாகவும் வேறுபடுத்தியும் பார்க்கப்பட வேண்டியவை. இவற்றில் போராளிப்பெண்கள் தாங்கள் போராளிகளாகவும் கவிதை எழுதுபவர்களாகவும் இருந்து பதிவுசெய்த பல கவிதைகளையும் இணைக்க வேண்டும். ஓரளவு பெண் கவிஞர்கள் அனைவரினதும் கவிதைகளை காலத்திற்கு காலம் சக பெண்ணியலாளர்கள் தொகுத்து வந்திருக்கின்றனர்.
2000ம் ஆண்டிற்குப் பின்னரும் சமகாலத்திலும் நம்பிக்கை தரும் கவிதைகளை எழுதுகின்ற பெண்கள் பலர் இருக்கின்றனர். அந்தவகையில் பிரதீபா. தான்யா, கற்பகம் யசோதரா, சலனி, ஸர்மிளா ஸெய்யத், பாயிஸா அலி, லறீனாஹக், சமீலா யூசுப்அலி, விஜயலட்சுமி என இன்னும் பலரைக் குறிப்பிட முடியும். புதிய பெண்களோடு… 80, 90களில் எழுதத்தொடங்கிய குறிப்பிடத்தக்க பெண்கள் சிலர் இன்றும் கவிதைகள் எழுதி வருகின்றனர்.
கவிதை எழுதும் சுயமும் அந்த சுயத்தினூடாக கண்டெடுக்க விளையும் பெண் எனும் ஆளுமையை வளர்த்தெடுக்கவும் இன்றைய நவீன பெண் கவிதைகள் புதிய வடிவமெடுத்து தன்னை முன்னிறுத்துகின்றது. காதல், காமம், ஆண் பெண் உறவு, உடல் அரசியல் என பிரேத்தியேகமான பெண்மொழியை, சுயாதீனமும் விடுதலையும் கோரும் கவிதைகளாக கட்டுப்பாடுகளிலிருந்து சுதந்திரம் பெறுதல் தெரிவுகளுக்கான சுதந்திரத்தை அடையும் நோக்கம் மற்றும் பாலியல் சமத்துவம் தனித்துவம் எதிர்ப்பு அரசியல் பெண்ணியத்தின் கூர்மையான பார்வைகளை தம்முடைய சமகாலக் கவிதைகளிலும் எழுதி வருகின்றனர். அவரவருக்கான அடையாளம் வித்தியாசம் கோட்பாட்டுரீதியான அணுகுமுறை என்பனவும் இன்றைய கவிதையின் பொருள்கள் சார்ந்து காணமுடிகின்றது. ஆதிக்கக் குரல்களைக் கொண்டவர்களை எதிர்த்தபடியும் பெண் விடுதலைக்கான கலகக் குரலில் முழங்கியவாறு பெண் எனும் கர்வமும் கம்பீரமும் கொண்டவர்களாகவும் பெண் கவிஞர்கள் எழுதி வருகின்றனர்.
பொதுவாகவே பெண்கள் ஒரே விடயத்திற்காகவே கண்ணீர் சிந்துகிறார்கள். போராடுகிறார்கள் கனவு காண்கிறார்கள் கவிதை எழுதுகிறார்கள். அது அவர்களுடைய விடுதலையை முன்னிட்டேயாகும். நம்பிக்கையினை தன்னுடைய மன உறுதியினை சுயத்தை வலிமையாக பதிவுசெய்யும் ‘பெண்ணியா’வின் கவிதை இது.
இறுகிய பாறைகளினூடிருந்து
வீறு கொண்டதொரு புல்லாய் நிமிர்வேன்
கூவத்தான் முடியாதாயினும்
ஈனஸ்வரத்திலேனும்
என் பாடல்களை முனகியபடி
யார் முன்னும் பணிதலன்றி
எனது உணர்வுகளோடும் அவாக்களோடும்
எவ்வகை வாழவெனப் புரியாத இது
குழப்பமிகு வாழ்வேதானாயினும்
வாழ்வேன்
வாழ்வேன்
வாழ்வேன் நான்
சமூதாய அக்கறையும் கரிசனமும் தன்பெண்ணிய வெளிப்பாட்டு மொழியோடு எழுதியவர் பஹீமா ஜஹான்.அவருடைய “பேறுகள் உனக்குமட்டுமல்ல“ கவிதையில் சிறு பகுதி,
போரிலும் பகலிலும்
முதல் பொருளாய்
அவளையே சூறையாடினாய்
அவளுக்கே துயரிழைத்தாய்
உன்னால் அனாதையாக்கப்பட்ட
குழந்தைகளை எல்லாம்
அவளிடமே ஒப்படைத்தாய்
தலைவனாகவும்
தேவனாகவும் நீ
தலை நிமிர்ந்து நடந்தாய்
பஹீமாவின் மற்றொரு கவிதையில் பெண்ணுடல், மனம், அவளுடைய அனுபவங்கள், நசுக்கப்படும் உள்ளுணர்வு, அவளுடைய புறவெளி என்பவற்றை பதிகிறார்.
அவளது தலைமீது
குருவிகள் தங்கிச்செல்லலாம்
அவளது தோள்மீதமர்ந்து கிளிகள் சத்தமிடலாம்
எனினும்
பட்சிகளைப் பயங்காட்டவே
ஓங்கிய தடியொன்று அவளது
கரங்களில் தரப்பட்டிருக்கலாம்
யாருடைய விளைநிலமோ அது
விதிமுறைகள் வேறில்லை
அவள் காவல் புரிந்தாகவேண்டும்
யாருமற்ற அமைதியான இரவுகளில்
நிலவின் மெல்லிய கிரணங்கள்
அவளை விசாரிக்க வந்துபோகும்
அவள் அண்ணார்ந்து பார்த்ததேயில்லை
நட்சத்திரங்கள்
திசைகளையும் வாழ்வின் திருப்பங்களையும்
ஓயாது சொல்லும்
அவள் காதுகொடுத்துக் கேட்டதேயில்லை
விடியலின் பூபாளம் அவளைச் சுற்றியே எழும்
அவள் வரவேற்றதேயில்லை
இவர்களின் விதிமுறைகள்
அவளை அசையவிட மாட்டாது
அவளைத் தாங்கி நின்ற பூமியே
அவளைப் பரிதாபமாய்ப் பார்த்திருந்த வானமே
அவளது மௌனமும் ஒரு நாள் வெடிக்குமா
குமுறுகின்ற எரிமலையாக
அதிரவைக்கும் இடிமுழக்கமாக
கவிதை அந்தரங்கமானது, நுட்பமானது, அழமானது. ஆனால் எவ்வளவு தூரம் மறைத்துப்பேச முடியும்…. எவ்வளவு தூரம் சத்தத்தை அடக்க முடியும்…
ஒவ்வொரு சமூகப்பெண்களும் எதிர்கொள்ளக்கூடிய சமூக சமைய நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகள் பொதுவானதாகவும் பிரேத்தியகமானதாகவும் இருப்பது போன்றே முஸ்லீம் பெண் ஒருவர் எதிர்கொள்ளும் சமூகப்பிரச்சினைகள் கூடுதலான வேறுபாடுகள் காணப்படுகின்றன. இலக்கியத்துறையைப் பொறுத்தவரை திருமணத்தின்பிறகு தம்முடைய எழுத்துச் செயற்பாட்டை தீவிரமான தளத்தில் முன்னெடுப்பது அவளுக்கு சாகவும் பிழைக்கவுமான போராட்டம் என்றுதான் கூறமுடியும். அவள் எழுதுகின்ற கவிதையின் ஒவ்வொரு சொல்லையும் மதத்தோடு சேர்த்து அல்லது சந்தேகத்திற்குள்ளாக்கி கேள்வி எழுப்புகின்ற ஆண் எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. மிக நுட்பமான வலைப்பின்னல்களைப் பின்னி வைத்திருக்கின்ற சமூதாயத்தில் தன்னுடைய கவிதைகளை முன் வைப்பதற்கு மனவுறுதி இரண்டுமடங்காக தேவைப்படுகின்றது. மூன்று தெரிவுகள் அவள் முன்னுள்ளது, குடும்பத்தின் ஆதரவை பெற்றவாறு அவள் எழுதவேண்டும் அல்லது கணவனின் ஆதரவைப் பெற்றுக்கொண்டவளாக இல்லையென்றால் இவைகளை முற்றுமுழுதாக ஒதுக்கிவிட்டு தனித்துநின்று செயற்படவேண்டும். இம்மூன்றையும் ஒருங்கிணைந்தபடி அவள் தன் இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடுவது எத்தனை பெண்களைச் சாத்தியமாயிருக்கிறது. நான் கவிதை எழுதுகின்ற பெண் என்பது வெளிப்படாமல் இருக்கத்தான் எனது சூழல் ஆசைப்படுகிறது நிர்ப்பந்திக்கிறது. ஒரு பெண்ணின் வளர்ச்சியில் எவ்விதமான தடைகளை ஏற்படுத்த முடியுமோ அவற்றையெல்லாம் எவ்வித கூச்சமுமில்லாமல் சில ஆண்கள் தடைகளை ஏற்படுத்தத் தவறுவதுமில்லை.
முஸ்லீம்பெண் எனும் அடையாளத்தைப் பேணிக்கொணடு கவிதை எழுதும் பெண்கள் தங்களுடைய சமூதாயத்தின் முன்பு எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் மனநெருக்கடிகள் ஆழ்ந்த வலியைத் தரக்கூடியது. கவிதை எழுதுகிற ஒரு முஸ்லீம் பெண் என்ற அடையாளத்திற்காக மாத்திரம் நேர்கொள்கின்ற இத்தகைய அசௌகரியங்களை தாக்குதல்களை பொறுத்தவர்களாகவே தொடர்ந்தும் கவிதைத்துறையில் ஈடுபட வேண்டியிருக்கிறது. என்னுடைய அனுபவத்திலும் பிற பெண்களும் சிக்கலான பல தருணங்களை எதிப்புகளை அதிகம் எதிர்கொண்டே வருகின்றோம். ஆண்களுடைய ஆதிக்கமானது பெண் எழுத்துக்களின் குரல்வளையை நசுக்குவதற்கான முன்னெடுப்புக்களை இடைவிடாது மேற்கொள்கின்றது. உலகம் சமூகம் ஆதிக்கப்பண்பாடு குடும்ப அமைப்பு இவற்றில் எவை பெண்ணைப் புரிந்து வைத்திருக்கின்றன. அதுவும் நேர்மையான வகையில்? அவளுடைய இறுக்கமான மூடுண்ட வாழ்வினது சிறிய ஒளித்துவாரங்களுக்கூடாகத் தெரியும் அந்த சுதந்திரத்தை உணர்வதற்காக பெண் பலியாகும் இடங்கள்தான் எத்தனை?
நுண்மையான பெண் மனத்தின் மென்ணுர்வுகள் காயப்படும் ஒரு தருணத்தை அஷ்ரபா நூர்தீன் ‘நானும் நீயும்’ கவிதையில் சொல்லும்விதம் எளிமையான, அதே சமயம் இன்றியமையாத பதிவுமாகும்,
நானும் நீயும் அருகருகிருந்து
பயணம் செய்கிறோம்
கறுப்புப் பர்தாவுக்குள்
முகம் மறைத்தவளாய் நான்
எனினும் எனக்கு
இவற்றின் மீது வெறுப்பில்லை
பால் அருந்தும் என் சிறு குழந்தை
மடியில் இருந்து வதைக்கிறது
பக்கத்தே மூத்தவனும்
அத்ற்கு மூத்தவளும்
காற்றுப்புகா நெரிசல்
நீ சுதந்திரமானவன் ஆண்
சிறகில்லையெனினும் நீ வான்வெளி மிதப்பாய்
அக்கணம் உனக்கு
மனைவியும் சிறுகுழந்தைகளும் இருக்காது
படகின் மேல்தளம் செல்வாய்
காற்றை முகர்வாய் களி்ப்புறுவாய்
சற்றே அலுக்கையில் இருக்கையிலும் அமர்வாய்
என்னருகில் ஓர் அந்நியனைப்போல
சிலவேளை எதிர்த்திசைப் பெண்களைக்கூட
நீ ரசித்த வண்ணம் பயணிக்கலாம்
அழகான நீலக்கடலும்
அதனைத் தொட்டுக் கொண்டு தெரிகின்ற வெண்நீலவானும்
சிறிய மலைக்குன்றுகளும்
துள்ளுகின்ற மீன்களும்
பார்ப்பதற்கு அழகாய் இருக்கும்
எனினும்
நான் முகத்திரை அகற்றிடில்
அந்நிய ஆடவன் பார்ர்திடல் கூடும்
அது ஹறாமானதென
எனது கணவனாகிய நீ தண்டிப்பாய்
இதோ
விலக்கப்படவேண்டிய
இலத்திரனியல் ஆப்பிள்களோடு
வரவேற்பறையில் உட்கார்ந்திருக்கிறான்
உறைநிலைச் சாத்தான்
அவன் காந்தக்கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டே
ஏக்கமாய் முன்னமர்ந்து கிடக்கின்றன
சில ஏவாள்குஞ்சுகள்
இன்னோர் வீசலுக்கான
ஆதிவிளைவுகள் மறந்து
(எஸ். பாயிசாஅலி கவிதைகைள்)
பொய்மையும்
குரோதமும் அழியாத என் விழிகளை
சிந்திக்கிறேன
பல இரவுகளாக பல பகல்களாக
போராடி எனக்குள் வருந்தி அழுகிறேன்
என் பிரயத்தனம் முழுவதும்
பிரக்ஞை அற்ற என் சரீரத்தை
களைந்தெறிவது பற்றியது
நான் எண்ணுவது சாத்தியமாகின்
நதிகளின் கால்களில் நடந்தும்
கடல்களின் அடியில்
பாறைகளின் முகட்டில் படுத்தும்
மீன்கூட்டங்கள் கொத்தும்
பாசிகளில் குந்தி இளைப்பாறியும் திரிவேன்
கைகளுக்கு எட்டாத இன்பங்களை
கட்டப்படாத துயரங்களை சுமந்தலையும்
என்னை
அலைக்கழிக்கும்
சரீரம் துறக்கும் பகீரதத்தின் முடிவில்
நான்
கடவுள் நிலையை அடையக்கூடும்
(சிறகுமுளைத்த பெண்- ஸர்மிளா ஸெய்யித்)
வாழ்வில் பெண்ணுடைய உணர்வுகள் எத்தனை எளிய காரணங்களுக்காக எந்தப் பொறுப்புமற்று புறக்கணிக்கப்டுகின்றது என்பதையும் மதம் பண்பாடு என்ற போர்வையில் பெண்ணை ஒடுக்கும் ஆணின் அதிகாரத்திணிப்பை வெளிப்படுத்துகிறது. இத்தகைய சுயவிசாரணகைகு உள்ளாகும்பொழுது எற்படும் கோபம் பெண்ணை அந்நியப்பட்டு நிற்பவளாய் ஆக்குகின்றது. அனாரின் ‘பெண்பலி’ என்ற கவிதை,
அது போர்க்களம்
வசதியான பரிசோதனைக் கூடம்
வற்றாத களஞ்சியம்
நிரந்தர சிறைச் சாலை
அது பலிபீடம்
அது பெண் உடல்
உள்ளக் குமுறல்
உயிர்த் துடிப்பு
இரு பாலாருக்கும் ஒரே விதமானது
எனினும்
பெண்ணுடையது என்பதனாலேயே
எந்த மரியாதையும் இருப்பதில்லை அதற்கு
என் முன்தான் நிகழ்கின்றது
என் மீதான கொலை
புலம்பெயர்ந்த இளம்தலைமுறைப் பெண் கவிஞர்களின் கவிதைகளில் புலம்பெயர் வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் அன்னியப்பாடு அடையளம்மிழத்தல் தனிமை தாம் இழந்துவிட்ட மண்சார்ந்த மரபுசார்ந்த வாழ்வு பற்றிய நினைவுகளையும் துயரங்களையும் இன வன்முறையால் இடம்பெறும் போரின் அவலங்களையும் வெளிப்படுத்துபவை அவர்களுடைய கவிதைகள். இக்கவிதைகள் யுத்த அவலங்களையும் ஒடுக்குமுறையின் வெவ்வேறு வடிவங்களையும் தான் வாழ்ந்த நிலத்தின் மீதான பிணைப்பைபும் சொந்த இருப்பிடத்தை இழந்த நிலையும் விடுதலை உணர்வும் தாம் இழந்துவிட்ட அடையாளத்தை பற்றிச் (loose of identity) சிந்திக்க வைக்கின்றது. இவற்றைப்பற்றி இக்கவிதைகள் பேசுகின்றன. அகதி நிலை புகழிட அனுபவம் அதனால் ஏற்பட்ட அந்தியப்பாடு (alienation) நிறவாதம் அவர்கள் எதிர்கொள்ளும் பண்பாட்டு முரண்கள் என்பன இக்கவிதைகளுடூ வெளிப்படுத்தப் படுகின்றன.
எலும்புக் குருத்தை ஊடறுக்கும் குளிரில்
வசந்தத்தை எரிர்பார்த்து
வெளிநாட்டு வாழ்வில் அள்ளுண்டு
சீட்டாட்டம்
ஏமாற்று
போதைப்பொருட் கடத்தல்
பல்வேறாய்ப் பிளவுண்ட
குழுமோதல்கள்
குடி
மேற்குலக யாத்திரிகத்தின்
விஸ்பரூபம்……….
(மைத்திரேயி)
வெள்ளிப்பனி படிர்ந்த
இலையுதிர்த்த நெடுமரங்கள்
பெருங்கட்டடச் சாலைகளில்
ஊசிப்பனித்துளிகள்
………………………………………
மனிதம் எங்கே
நாளையும் இருப்பேனா
கேள்விக் குறிகளின்
பூதாகர நெரிசலால்
பனிச்சாரலில்
நடுங்கும் கூதலில்
நீண்டவரிசைகளில் நாம்
ஆயுட்தண்டனைக் கைதிகளாக
அகதியான குற்றத்திற்காக
(சந்தியா)
தூரத்தில் ஊளையிடுகிறது ஒரு விமானம்
தடித்த அங்கியின் கீழாகத்
துடித்துக்கொண்டிருக்கிற
உன் இதயம் பற்றி நான அறிவேன்
………………………………………….
ஏதும் சொல்வதற்கில்லை
தொலைவில் உறுமல் இடுகின்ற
விமானத்தைத்தவிர
நிசப்தமானது இந்த இரவு
நண்பனே
என்னை நினைத்திருக்க
ஆயிரம் காரணங்கள் இருப்பதுபோல
உன்னை நினையாதிருக்கப்
பல்லாயிரம் காரணங்களாய்
என் வாழ்க்கை
(ஆகர்ஷியா)
எனது இயக்கம்
எனது ஆற்றல்
எனது சிந்தனை
எனது திறமை அனைத்தும்
எனக்கே இருக்கக் கூடியது
இவற்றை யாரிடமாவது இருந்து பெற்றிருந்தால்
நான் பெண்ணாக இருக்க முடியாது
நீங்கள் உருவாக்கிய பெண்மை
எனது அடையாளமல்ல
நான் பெண் பிறக்கும்போதே
(ரஞ்சினி)
மேலும் தமிழ்நதியின் ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்ற கவிதைத் தொகுதியிலிருந்து ‘இருப்பற்று அலையும் துயர்’ கவிதையின் பகுதி,
பூட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி
பசியோடு அலைந்துகொண்டிருக்கின்றனர்
வளர்ப்புப்பிராணிகள்
சோறுவைத்து அழைத்தாலும்
விழியுயர்த்திப் பார்த்துவிட்டுப் படுத்திருக்கும்
நாய்க்குட்டியிடம் எப்படிச் சொல்வது
திரும்பமாட்டாத எசமானர்கள்
மற்றும் நெடியதும் கொடியதுமான போர் குறித்து
இந்தச் செங்கல்லுள் என் இரத்தம் ஓடுகிறது
இந்தக் கதவின் வழி
ஒவ்வொரு காலையும் துளிர்த்தது
கிணற்றில் பீறிட்ட முதல் ஊற்று
இளநீரின் சுவையொத்திருந்தது
மல்லிகையே உன்னை நான்
வாங்கிவரும்போது நீ சிறு தளிர்
இருப்பைச் சிறுபெட்டிக்குள் அடக்குகிறேன்
சிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்
எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது
எஞ்சிய மனிதரை
சொற்களற்றுப் புலம்புமிந்த வீட்டை
வேம்பை
அது அள்ளியெறியும் காற்றை
காலுரசும்
என் பட்டுப்பூனைக்குட்டிகளை
இவ்விதமான பல புகலிடப் பெண்கள் தம் வாழ்பனுபவங்களை பதிந்து வருகின்றனர். தொகுப்புகளிலும் சஞ்சிகைகளிலும் இணையதளங்களிலும் ஒரு தொகைப் புகலிடப் பெண் கவிஞர்கள் எழுதிவருவதைக் காணமுடிகின்றது.
ஒரு ஆழமான காயத்திலிருந்து துளித்துளியாக பொறுமையாக சொட்டும் குருதிபோல எழுதப்பட்ட கவிதைகள் பற்றி இன்னொரு பெண்ணாகவும் கவிதை எழுதுகின்ற ஒருத்தியாகவும் இருந்தபடி நான் பேசுவது மிகப்பெரும் வலியை மீள உணரச்செய்கின்றது. ஒரு விதமான திகைப்பை திணுக்குறுதலை வெப்பிசாரங்களை மெல்லிய குறுகுறுப்பை பச்சாதாபங்களை கிளறிவிட்டிருக்கிறது. துயரமும் கருணையும் கனவும் அன்பும் திளைத்தலும் வெடிப்பும் விரிசலும் ஆழமும் மாயமும் பெருக்கெடுப்பின் வியாபகமும் என திக்குமுக்காடுமளவுக்கு பெண் எனும் பிரவாகம் தூக்கி வீசப்படமுடியாத கேள்வியாய் பூமியை மூடுகின்றது.
கவிதைகள் பற்றி பேசுவது என்பது என்ன? அது நமக்குப் புரியாத அந்நியமான பழக்கப்படாத ஒன்றைப்பற்றியதல்ல. புனிதமோ உன்னதமானதோ கைக்கெட்டாது அந்தரத்தில் பிடிபடாது தொங்கும் ஜாலமோ அல்ல அது. பெண் கவிதை இந்த வாழ்வையும் சமூகத்தையும் இயற்கையினையும் மனித அறம் வாழ்வு பற்றியும் பேசுவதுதான்.
புரிதலுக்கும் புரியாமைக்கும் நடுவில் மறைந்திருக்கும் நுண்ணுனர்வுகளை திளைப்பிற்கும் காயங்களிற்கும் நடுவேயான அனுபவத்தை கண்களுக்கும் உள்ளத்திற்குமான இசையை கேட்பது பற்றியே நான் பேச விரும்புகின்றேன். அதாவது பெண் என்பவள் நீருக்கடியே கொண்டு செல்லும் மொழி என்ற நெருப்பைப்பற்றி. ஒன்றுபோலவே தோன்றும் வெவ்வேறு நதிகள் பற்றி.
சமகாலத்தில் பெண் இலக்கியத்திற்கான புதிய மரபும் திறன்களும் நவீன மொழியில் உருவாகியுள்ளது. பெண்களுடைய சிந்தனைத்தளம் படைப்பின் கூறுகள் அவரவருக்கான அடையாளத்தை முன்னிலைப்படுத்துகின்றன. பிரேத்தியகமான குரலுடன் ஒவ்வொரு பெண்ணும் பேசமுற்படுகின்றாள். தமிழ் பண்பாட்டுச் சூழலில் பெண்ணின் அடையாள மையம் சிதைக்கப்படும்போது பெண் கவிதையின் உள்முகத் தன்மை புதிய அடையாளத்தைப் பெற்றது. பெண் உடலின் அரசியலை அகச்சமூக முரண்களை ஒருபுதிய வெளியில் பெண் மொழிக் கவிதைகள் மிக வலுவாக தம்மை நிறுவியுள்ளன. ஒடுக்கப்பட்ட பெண் உடலுக்குள் கிளர்ச்சி வேட்கை வலி கனவு காயம் வதைகள் என்பனவற்றைச் சுமந்து பெண்ணுடலானது வாழ்வின் முன்னுள்ள களமாகவும் விளங்குகின்றது. அதேநேரம் தனித்துவமான உணர்வுகளை உருக்கமாகவும் உயிரோட்டமாகவும் சொல்கின்ற கவிதைகள் ஏராளமாக எழுதப்பட்டு வந்திருக்கின்றன. பெண் அரசியல் சார்ந்த கவிதைகள் அது கொண்டுள்ள முக்கியத்துவத்தின் அடிப்படையில் முழுமையான கலைப்படைப்பாகவும் மேலோங்கிக் காணப்படுகின்றது. இக்கட்டுரையானது அனைத்துப் பெண் கவிதைகளையும் உணர்வுத் தளத்தில் நின்றே அணுகியிருக்கின்றது. இலங்கைப் பெண் கவிதைகளின் உட்பிரிவுகளையும் காலமாற்றத்தின் நிகழ்வுகளையும் அரசியல் மாற்றங்களையும் கொண்டகவிதைகளை வகைப்படுத்தி பார்க்கின்றது. சார்பற்று இயங்கும் அவதானத்தோடு இக்கட்டுரை அமைந்திருப்பதாக நான் கருதுகின்றேன்.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான பெண்கவிதைகள் பற்றிய அவதானத்தில் பெண்களின் கவிதைகள் ஆறுதல்மொழியாக மாபெரும் துயருக்கான கதறலாக ஆன்மாவிற்குத் தேவைப்படும் சிகிச்சை மொழியாக எழுதப்பட்டிருக்கின்றதா? மிகப்பெரும் சமூக அவலத்தின் சாட்சிகளாய் அல்லது பாதிக்கப்பட்ட பெண் உடலின் மனதின் குரலாய் அந்தமண்ணிலிருந்து வெளிப்பட்டிருக்கின்றதா? நிசப்தமாக ஒளிந்திருக்கும் அந்த இருதயங்களிலிருந்து வெடித்துக்கிளம்பும் உண்மைகள் மானுட வரலாற்றின் வெளியில் உயிர்மொழியாய் உலவுகிறதா? இங்கு நாம் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுதில், தான் பெண் என்பதையே மறந்து அங்கு உறைந்துபோயிருக்கும் இன்னொரு பெண்ணின் கண்கள், அந்தக் கண்களிலிருக்கின்ற சூனியம் சாம்பல் சுழலாய் புகையாய் நம் புன்னகைகளின் மேல் கனவுகளின் மேல் பல்லாயிரம் பல்லாயிரம் கருகிய குரல்களின் தூசிப்படலங்களாக கவிகின்றதாக உணர்கிறேன். எங்களிடம் இதற்கேதும் பதிலிருக்கின்றதா? இந்தக் கேள்வியை அனைத்துப் பெண் கவிஞர்களிடமும் முன் வைக்கின்றேன்.
*
1990க்கும்,-2000 ஆண்டுகளின் பின்னர் வரையுமான இலங்கைளில் வெளிவந்த, பெண்களின் சில கவிதைத் தொகுப்புகள்: ‘வானதியின் கவிதைகள் (1990), கஸ்தூரியின் ஆக்கங்கள் (1992), பாரதியின் காதோடு சொல்லிவிடு (1992), சிவரமணி கவிதைகள் (1993), தூயவளின் நிமிர்வு (1993), சுல்பிகாவின் விலங்கிடப்பட்ட மானிடம் (1995), உயிர்த்தெழல் (2001),உரத்துப்பேசும் உள்மனம், செல்வி – சிவரமணி கவிதைகள் (1997), ஒளவையின் எல்லை கடத்தல் (2000), ஆழியாளின் உரத்துப் பேச (2000), துவிதம் (2006), தர்மினியின் உதயத்தைத் தேடி (2002),மைதிலியின் இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் (2003), லறீனா ஏ. ஹக்கின் வீசுக புயலே(2003), மைத்ரேயின் கல்லறை நெருஞ்சிகள் (2004), அனாரின் ஓவியம் வரையாத தூரிகை (2004), எனக்குக் கவிதை முகம் (2007), உடல் பச்சை வானம் (2009), பெருங்கடல் போடுகிறேன் (2013), அம்புலியின் மீண்டும் துடிக்கும் வசந்தம் (2004), ஆதிலட்சுமி சிவகுமாரின் என் கவிதை (2000), பஹீமா ஜஹானின் ஒரு கடல் நீரூற்றி (2007), அபராதி( 2009), ஆதித்துயர் (2010), பெண்ணியாவின் என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! (2006), இது நதியின் நாள்(2008), றஞ்சனி கவிதைகள் (2005), வி.கலைமகளின் முடிவில்லாப் பேச்சுக்கள்(2007), யோ.கார்த்திகாவின் ஆணிவேராகிடுமோ, நளாயினிதாமரைச்செல்வனின் நங்கூரம் (2005), உயிர்த்தீ, லுணுகலைஹஸீனாபுஹாரியின் மண்ணிழந்த வேர்கள்(2003), சுதாகினி சுப்ரமணியத்தின் அடையாளம்(2005), தமிழ்நதியின் சூரியன் தனித்தலையும் பகல் (2007), அஷ்ரபா நூர்தீனின் ஆகக் குறைந்தபட்சம்…!(2012), ஸர்மிளா ஸெய்யித்தின் சிறகு முளைத்த பெண்(2012), எஸ்.பாயிஸா அலி கவிதைகள்(2012), ஆகர்ஷியாவின் நம்மைப் பற்றிய கவிதை(2007), வினோதினியின் முகமூடி செய்பவள் (2007) .
*
1980களுக்குப் பின் வெளிவந்த பல்வேறு இலங்கைப் பெண் கவிஞர்களின் குறிப்பிடத்தக்க தொகுப்புகள்: ‘சொல்லாத சேதிகள்’ (1986), ‘மறையாத மறுபாதி’ (1992), ‘கனல்’ (1997), ‘உயிர்வெளி’ (1999), ‘எழுதாத உன் கவிதை’ (2001), ‘வெளிப்படுத்தல்’ (2001), ‘பெயல் மணக்கும் பொழுது’ (2007), ‘மை’ (2007), ‘இசை பிழியப்பட்ட வீணை’ (2007), ‘ஒலிக்காத இளவேனில்’ (2009), பெயரிடாத நட்சத்திரங்கள் (2011), கவிதைகள் பேசட்டும் (2010) போன்றவற்றைக் கூறலாம்.
*
உசாத்துணை நூல்கள்: துவிதம் – ஆழியாள் (2006), பெயல் மணக்கும் பொழுது (2007), பூவல் (உலகத் தமிழ் இலக்கிய மாநாடு – 2012, கொழும்பு), ஞானம் (ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ் – 2012, கொழும்பு)
*
ஈழத்து பெண்கவிஞர்களின் கவிதைகள் குறித்து ஒரு பறவைப்பார்வை பார்த்திருக்கிறார் அனார். அது நம்மை அக்கவிதைகளின் ஆழத்தை உணர்வதற்கும் அக்கவிஞர்களின் கவிதைகளை நோக்கிச் செல்லவதற்கும் போதுமானதாக இருக்கிறது. நல்ல கட்டுரை. தேர்ந்தெடுத்து சொல்லப்பட்டுள்ள கவிதைகள் யாவும் நம் அகத்தை உலுக்குபவையாக உள்ளன. பெண்கள் தங்களின் சமூக சிக்கல்களை வென்று வீறுநடை போட எழுத வரவேண்டும். அவர்களின் சிக்கல்களை அவர்கள்தாம் வெளிக்கொண்டுவரவேண்டும் தங்களின் படைப்புகளின் வழி. கவிதை என்பது உறுதியான நம்பிக்கை. பற்றுக! பொலிக!