ஆனி லாமா (சிறுகதை)- மூனா குருங்

“சமகால பெண் படைப்பாளிகளின் மொழியாக்க சிறுகதைவரிசை” – நரேன்

பகுதி 3: மூனா குருங் (நேபால்)

மூனா குருங்

மூனா குருங் (Muna Gurung) நேபாளைச் சேர்ந்த எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர், கல்வியாளர். நேபாள கோர்க்கா வீரருக்கு மகளாக சிங்கப்பூரில் பிறந்தார். அவருடைய 12வது வயதில் அவர் குடும்பம் நேபாளத்திற்குத் திரும்பியது. சிங்கப்பூரின் உருவாக்கத்தில் பங்குகொண்ட நேபாள கோர்க்காக்களின் வாழ்வை அவரின் பல சிறுகதைகளில் காண முடியும். நேபாளத்தின் முக்கியமான பெண் இலக்கியக் குரலாக அறியப்படும் இவர் ஒரு சமூக செயற்பாட்டாளரும் கூட. பெண்களுக்கும் மாற்று பாலினத்தவருக்கும் ஆதரவான குரல்களை எழுப்பி வருகிறார். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பகுதி நேர ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘நேபாளி டைம்ஸ்’ என்ற இதழுக்காக மாதம் ஒரு நேபாள பெண் எழுத்தாளரைப் பேட்டி காண்கிறார். ‘கதா சதா’ என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார். நேபாளத்தில் கதை சொல்லும் கலாச்சாரத்தை உருவாக்கவும் புதிய எழுத்தாளர்களைச் செம்மைப்படுத்தவும் இவ்வமைப்பின் மூலமாக பட்டறைகளை நடத்துகிறார்.

ஆங்கிலத்தில் எழுதி வரும் மூனா குருங் மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார். அதிக கவனம் பெறாவிடினும் நேபாள இலக்கிய இதழ்களில் தன் கதைகள் வெளி வருவதையே விரும்புகிறார். தன் மண்ணின் புராணங்களையும் நிகழ் கலாச்சாரத்தையும் இணைத்து யதார்த்த தளத்தில் கதை சொல்லும் போக்கு இவருடையது. ஆர்ப்பாட்டமில்லாத குரலில் கதை சொல்கிறார், பாத்திரங்களின் சிறு அசைவுகளைக் கூட அர்த்தம் கூட்டும் வகையில் நிதானமாக விவரிக்கிறார். இயல்பாக உருவாகி வரும் படிமங்களின் மூலமாக கதாபாத்திரங்களின் உணர்வுகளை, அதன் நியாயங்களை நினைவில் தேங்கச் செய்துவிடுகிறார். அத்தனை கதைகளிலும் தன் நிலத்தின் பண்பாட்டோடு இளம் தலைமுறை மோதும் முரண்பாட்டையே பிரதானமாக முன்வைக்கிறார்.  இதன் காரணமாகவே நேபாள இலக்கியத்தின் முக்கிய முகமாக அறியப்படுகிறார் மூனா குருங்.

ஆனி லாமா (சிறுகதை)

-(தமிழில் நரேன்)

லாமா வாங்சுக் என்னுடைய புதிய காலணிக்குள் அவர் கால்களை நுழைத்தபோதே, இனி அது பழையபடி இருக்காது என்பதை அறிந்துகொண்டேன்; என்னுடைய காலணிகள் அவருடைய கால்கள் இரண்டுமேதான்! அதன் அழகை இரசிப்பதற்காக அவர் தன்னுடைய பழுப்புச் சிவப்பு நிற அங்கியை மேலே உயர்த்தி பாதங்களைப் பக்கவாட்டுகளில் திருப்பிப் பார்த்தார்.

“ஓ… இவை அழகாக இருக்கின்றன,” இன்னமும் திறந்திருக்கும் அவரது வாயின் மேலிருந்த விரல்களின் இடையே பெருமூச்சுடன் சொன்னார். என்னுடைய வெற்றுக் கால்களின் மீது அவரின் பார்வை விழுந்ததும் உடனடியாக தன்னுடைய ‘அடிடாஸ்’ ரப்பர் செருப்புகளை என் பக்கம் தள்ளினார். “பூமோ, இதோ இப்போதைக்கு என்னுடைய செருப்புகளை போட்டுக்கொள்.”

என்னை ‘பூமோ’ என்று அழைத்தார். சரிதான், நான் ஒரு பெண்தான். ஆனால் இளம் துறவிகளின் மத்தியில் அவர்தான் ‘பூமோ’. கர்மா என்னிடம் கூறியிருக்கிறான். அவனும் அவனுடைய நண்பர்களும் அவரை ‘ஆனி லாமா’ என்றுதான் அழைப்பார்களாம். ‘பெண் துறவி!’ காத்மாண்டு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் போல “அச்சி…!!”, “ச்சீய்ய்…!” போலக் கூக்குரல் போடுவதிலும், இளம் துறவிகளை விளையாட்டாகக் கன்னங்களில் அடிப்பதிலும் லாமா வாங்சுக் புகழ் பெற்றவர் என்று அவன் சொன்னான். மடாலயத்தில்  அவரின் இச்செயல்களெல்லாம் அன்றாடக் காட்சிகள். அவருள் உறையும் தெய்வமொன்று தன் பெண்மையின் சாரங்களால் அவரை ஆட்டுவிக்கிறது என்றும் பேசிக்கொண்டார்கள்.

அப்பெரிய ரப்பர் செருப்புகளுக்குள் கால்களை நுழைத்து நெளிந்தேன். அவை இன்னமும் வெதுவெதுப்பாக இருந்தன. ஏற்கனவே ஏழு மணி ஆகிவிட்டது, கர்மாவும் நானும் சேர்ந்து செய்யும் தினசரி ‘கோராவிற்கு’[1] தாமதமாகிவிட்டது. தினமும் நானும் அவனும் ‘ஸ்வயம்புவின்’ அடிவாரத்தை மூன்று முறை வலம் வந்து, பின்னர் 362 படிகளேறி பிரதான கோவிலுக்குச் சென்று அங்கிருந்து காத்மாண்டுவை ரசித்தபடி தேநீர் அருந்துவோம். ஒரு துறவியாக தினமும் இரண்டு முறை கோரா செய்ய வேண்டியது அவனுடைய கடமை, ஆனால் நான் சும்மா அவனுடன் இணைந்து கொண்டேன். பொதுவிடத்தில் அவனிடமிருந்து இரண்டடி தூரத்தில் நடப்பது எனக்கு மிகவும் கிளர்ச்சியூட்டும் அனுபவமாக இருந்தது. நான் சற்று வேகமாக வீசும்போது என் கைகள் அவன் முழங்கையைத் தொட்டாலோ, அல்லது அவனை நெருங்கிச் செல்கையில் என் பின்னங்கைகள் அவன் அங்கியை உரசினாலோ எனக்குக் கிறுகிறுத்தது.

லாமா வாங்சுக் என் காலணிகளின் அழகை இரசித்துக்கொண்டிருந்தபோது, நான் மடத்தின் வாசலில் அரசரமத்தின் அடியில் எனக்காகக் காத்திருக்கும் கர்மாவின் உருவத்தை மனதில் நினைத்துக்கொண்டேன். புனித மாலையின் மணிகளை எண்ணும்போது அவன் முன்கையின் நரம்புகள் நகரும், அவ்விடதுகையின் விரல்கள் மணிகளை ஒவ்வொன்றாகத் தழுவும்.

“லாமா வாங்சுக், எனக்கு கோராவிற்கு நேரமாகிறது,” ரப்பர் செருப்புகளிலிருந்து கால்களை விலக்கி  என் மஞ்சள் நிற காலணியைச் சுட்டிக் காட்டிச் சொன்னேன். “நான் போகணும்.”

வெட்கிச் சிவந்து, மென்மையான தன் மழித்த தலையைத் தடவியபடி என் காலணிகளிலிருந்து கால்களை வெளியே எடுத்து என்னிடம் கொடுத்தார். “கோண்டா பூமோ.” என் கைகளிலிருந்து அவருடைய செருப்பை தன் கையில் வாங்கி நெஞ்சோடு அணைத்தபடி திபெத்திய மொழியில் மன்னிப்பு கேட்டார். பின்னர் அவர் பிரார்த்தனை மண்டபத்திற்குள் நுழைந்தார். அங்கு அவரையொத்த வயதுடைய துறவிகளின் குழு காலை மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருந்தது. தாரா தேவியிடம் இப்பள்ளத்தாக்கை தன் அருளால் ஆசிர்வதிக்கும்படியும், வெறுப்பை ஒழித்து அமைதியைக் கொணரும்படியும் வேண்டிக்கொண்டிருந்தனர் – ஆனால் கிண்ணம் நிறைய வெண்ணெய் தேநீர்களுக்கு இடையிடையேதான் மந்திரங்களெல்லாம்.

என் காலணிகளின் அளவு தளர்ந்துவிட்டதைப் போலத் தோன்றியது. வாயிலை விட்டு நான் ஓட்டமாக வெளியேறியபோது என் பாதங்களின் மீது படபடவென்று அடித்தது. கர்மா மரத்தைச் சுற்றிக்கொண்டிருந்தான், தன் மணிமாலையைப் பின்முதுகின் மீது வீசியடித்துக்கொண்டிருந்தான் – ஒருமுறை இடது மறுமுறை வலது – ஏதோ முதுகில் அரிக்கும் ஓரிடத்தைத் தொட முயல்வது போல. என்னைப் பார்த்ததும் அவன் முகம் சுருங்கியது. “சூரியன் பாதி தூரம் மேலே ஏறியாச்சு! ஸ்வயம்புவைச் சுற்றி வலம் வரும்போது சுட்டெரிக்கப்போகிறது! நாளையிலிருந்து நீ வர்றியோ இல்லையோ, நான் கிளம்பிடுவேன்,” என்று சொன்னான். “இல்லை, எனக்குப் புரியலை. உன் கதவுக்கு வெளியேதான் காண்டாமணி இருக்கிறது! தினமும் காலை 4.30க்கு தோண்டுப் அதை அடிக்கிறான். அதெப்படி உனக்கு கேட்காமல் போகும்?”

உண்மையில் கர்மாவின் கோபம் எனக்குள் ஆர்வத்தைத் தூண்டியது. அவன் இப்படி பேசும்போது என்னை அறிந்தவன் என்ற உணர்வு ஏற்படுகிறது. அவன் வாழ்க்கையில் நான் இப்போது முழுமையாக வந்துவிட்டதைப் போல; தன்னிலையை இழக்கும் அளவிற்கு அவன் என்னிடம் இயல்பாக இருக்கிறான் என்பதைப் போல. இதுவே மூன்று வாரங்களுக்கு முன்னால் என்றால் அவன் வேறு மாதிரி என்னிடம் சொல்லியிருப்பான் – “இல்லை… இல்லை.. பரவாயில்லை. தாமதமாக வந்தாலும் பிரச்சினை இல்லை. அதிகாலையில் விழித்து உனக்கு பழக்கமில்லைதானே. இல்லை, அவ்வளவு நேரமாக ஒன்றும் நான் காத்திருக்கவில்லை.”

“லாமா வாங்சுக்தான் காரணம்,” என்றேன். “அவர் என் காலணிகளைப் போட்டுப் பார்க்க விரும்பினார். என் துணிகளைப் பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார். நான் எங்கே வாங்குகிறேன், எவ்வளவு விலை என்றெல்லாம். அவர் எப்படி என்று உனக்குத் தெரியும்தானே – இப்போது முழுதாகவே அவர் ஆனி லாமா”. அவருடனான என் சந்திப்பை மிகைப்படுத்தி விவரித்தேன்.

கர்மா லேசாகச் சிரித்துவிட்டு மரத்திலிருந்து விலகி நடக்க ஆரம்பித்தான். “சரி, அவர் நம்மைப் பார்ப்பதற்கு முன்னால் இங்கிருந்து கிளம்புவதுதான் நல்லது. இல்லைன்னா அவரும் கூடவே வருவேன்னு சொல்லிடுவார்,” என்றான்.

“இதற்கப்புறம் என்னுடைய அறைக்குப் போவோமா?” அவனுடைய கருஞ்சிவப்பு போர்வையின் நுனியை இழுத்தபடி கேட்டேன். “நீ உன்னுடைய ஆங்கில பயிற்சியை அங்கு தொடரலாம்,” என்றேன்.

அப்போது ‘பெமா லிங்கிறகு’ நான் வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. என்னுடைய தாத்தா அங்கு ‘ரின்போச்சே’வாக இருந்தார். அவரது உடல் இன்றும் பிரதான கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ஒரு தங்கச் சமாதியில் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய பெற்றோர்கள் தங்களின் கட்டிடத் தொழில் வருமானத்தில் ஒரு தங்கச் சிலையை ஒவ்வொரு வாரமும் ‘கோம்பா’வில் ஏற்கனவே இருக்கும் தெய்வக் கூட்டங்களோடு சேர்த்துக்கொண்டே இருந்தனர். புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளை அரிசிக் கிண்ணத்தில் மடித்துச் சொருகி இம்மையில் மதிப்பும் மறுமையில் இனிமையும் வேண்டிக்கொள்வார்கள். ஆனால் அந்த வருடம் அவர்கள் வாழ்வின் எந்த இனிமையிலும் எனக்குப் பங்கு இல்லை. விடியவிடிய இணைய அரட்டை பெட்டிகளில் முழித்திருப்பதற்கும், போக்கிரி நண்பர்களுடன் சிகரெட்டு, ரம் வாசனையுடன் ‘தமேலில்’ சுற்றித் திரிவதற்கும் எதிராகப் போராடி சோர்ந்துவிட்டார்கள். அதனால், எஸ். எல். சி. தேர்வு முடிந்தவுடன் மீண்டும் பள்ளி திறப்பதற்குள் ஒழுக்கம் பழகுவதற்காக நான் கோம்பாவிற்கு அனுப்பப்பட்டேன். அந்த ஆண்டு மே மாதம் வழக்கத்திற்கு மாறாக வெப்பமும் கசகசப்பும் அதிகரித்திருந்ததால் சடை முடி தரித்த, காட்டன் பேண்ட் அணிந்த சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைந்துவிட்டது. இந்தப் பயணிகள் உணவிற்கும் தங்குமிடத்திற்கும் ஈடாக இளைய துறவிகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்தனர். அவர்களின் இடத்தை நான் நிரப்ப வேண்டுமென அம்மா விரும்பினாள். “நீ வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும்போது இது உனக்குச் சாதகமாக இருக்கும்,” என்னை மடாலயத்திற்கு அழைத்து வரும்போது சொன்னாள். “தினசரி ஒழுங்கை கடைப்பிடித்து வாழ்வது எப்படியென்று இந்த மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள். பிரகாசமான ஆரஞ்சு ஓடுகள் வேயப்பட்ட குளியலறை கொண்ட பெரிய சதுர வடிவ அறை எனக்கு ஒதுக்கப்பட்டது. விருந்தினர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இக்கட்டிடம், பிரதான கோம்பா மண்டபம், துறவிகளின் அறைகள், தொலைக்காட்சி அறை ஆகியவற்றிலிருந்து விலகி இருந்தது. “ஞாபகம் இருக்கட்டும். மூன்றாவது மாடியிலிருந்து போபோ உன்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்,” கோம்பாவின் மையக் கட்டிடத்தைக் கண்களால் சுட்டிக்காட்டி, கையில் துணிப்பையை திணித்து அம்மா சொன்னாள்.

மூன்றாம் நாள், என்னை மேற்பார்வையிடும் லாமா கர்மாவின் பராமரிப்பில் என்னை விட்டார். அவனுடைய மென்மையான பாதுகாப்பின் கீழிருந்தே நான் புதுப்புது தொல்லைகளை உண்டாக்கும் வழிகளைக் கண்டுபிடித்தேன். குட்டித் துறவிகளின் குடியிருப்புகளை எனக்குக் காட்டினான். தகரக் கூரையிட்ட வெப்பமான அறைக்கு என்னை இட்டுச் சென்றான். அங்குதான் நான் அவர்களுக்கு தினமும் மதியம் ஆங்கிலம் கற்பித்தேன். அவன் கூச்சத்துடன் இருந்தான், என் கண்களையே அவன் பார்க்கவில்லை. ஆனால் எல்லாவற்றையும் சுற்றிக் காட்டிவிட்டு இறுதியாக என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டான். “உனக்கு கம்ப்யூட்டர் தெரியுமா? எனக்கு ஈ-மெயில் பண்ணனும்,” இதை ஆங்கிலத்தில் கேட்டான்.

எனவே மாலை ‘கோரா’விற்கு முன்பு நானும் கர்மாவும் முற்றத்திலுள்ள எலுமிச்சை மரத்தடியில் சந்தித்து, கோம்பாவின் வாயில்களைக் கடந்து சாலையில் நடந்திறங்கி ‘Y2K இண்டெர்நெட்’ கஃபேவிற்குச் செல்வோம். மின்னஞ்சல்கள் எழுதவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தான்; ஒரு வருடத்திற்கு முன்பு ஜெர்மானிய பயணி ஒருத்தி அவனிடம் தன் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்ததாகவும், ஆனால் அவனுக்கு அதில் கடிதம் அனுப்புவது எப்படி எனத் தெரியவில்லை என்றும் என்னிடம் கூறினான். Y2K பையன்கள் அவனை ஏற்கனவே போதுமானளவு கிண்டலடித்துவிட்டதால் அவர்களிடம் மீண்டும் கேட்பதற்கு அவனுக்கு விருப்பமில்லை. ஆனால் அவனது மின்னஞ்சல்களைத் திருத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. முதலில் அவனது ஆங்கிலத்தைச் சரி செய்ய வேண்டும் என்று நான் அவனிடம் கூறினேன்.

அப்படித்தான் அது தொடங்கியது. மரத்தடியில் சந்திப்பதற்குப் பதிலாக அவன் என்னுடைய அறைக்கு வந்தான். நாங்கள் தரையில் அமர்ந்து நோட்டுப்புத்தகத்தை படுக்கையின் மீது வைத்து எழுதினோம். அறைக்கதவை முழுதாக திறந்து வைத்திருந்தோம், எங்கள் கண்காணிப்பாளர் அறையைக் கடந்து செல்லும்போது எங்களை நன்றாகப் பார்க்க வேண்டும் என்பதனால். ஒவ்வொரு மாலையும் கர்மா தன்னுடைய நோட்டில் எழுதும்போது, கைகளைச் சுற்றி அவன் அணிந்திருந்த புனித நூலைத் தளர்த்தியும் இறுக்கியும் அவன் வலதுகை தசைகள் அசைவதைப் பார்ப்பேன். அவனுக்கு பத்தொன்பது வயது, மென்மையான தேகம். எந்நேரமும் தூப வாசனை அவன் மேல் படிந்திருந்தது. எனக்கு பதினாறு, இதற்கு முன் நான் ஒரு பையனுடன் இவ்வளவு நேரம் செலவழித்ததில்லை. இரண்டு வாரங்கள் ஒன்றாகச் சுற்றித் திரிந்ததே போதுமானதாக இருந்தது, அவனது நோட்டுப்புத்தகத்தை நோக்கிக் குனிந்திருப்பதைப் போலப் பாசாங்கு செய்யவும், படுக்கையின் கீழ் எங்களின் வியர்த்த கைகள் ஒன்றையொன்று பற்றிக்கொள்ளும் சுதந்திரம் கொள்ளவும்.

எங்களின் வழக்கமான கோராவிற்கு நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். செங்கற்கள் பதியப்பட்ட அமைதியான சந்தின் வழியாகக் குரங்குகளிடம் சண்டையிடும் நாய்களைக் கடந்து பொதுக்கிணறு வழியாக நடந்துகொண்டிருந்தோம். அங்கு பெண்கள் துணிகளைத் துவைத்த பின் குளித்து தங்களையும் சுத்தப்படுத்திக்கொள்வார்கள். மார்பு வரை பாவாடையை ஏற்றிக் கட்டி மாற்றி மாற்றி முதுகைத் துடைத்துவிட்டார்கள். கர்மாவும் நானும் அவர்களைக் கடந்து சென்றபோது கெக்கலித்துச் சிரித்தார்கள்.

“அவர்களின் பாவாடை ஒருநாள் அவிழ்ந்துவிடுமென்று காத்திருக்கிறாய் தானே?” கர்மாவை வம்புக்கிழுத்தேன்.

“ரொம்ப அழுக்கான மனம் கொண்டவள் நீ, பூமோ,” பிரார்த்தனை மணிகளால் அவன் என்னை மெதுவாக அடித்தான்.

மடத்தின் மற்ற துறவிகளிடம் எங்களைப் பற்றி கர்மா பேசுவானா என்று வியந்து யோசித்ததுண்டு. சில சனிக்கிழமை இரவுகளில் அவர்களுடன் சேர்ந்து தொலைக்காட்சி அறைக்குச் செல்வேன். யாரும் கண்காணிக்கப்படாத நேரம் அது. ஏறக்குறைய எப்போதுமே தவறாமல் WWF பார்ப்பார்கள். சிறிய வளையத்திற்குள் இறுக்கமான உள்ளாடை அணிந்த ஆண்கள் ஒருவரையொருவர் தூக்கி வீசிக்கொண்டிருந்தார்கள். அவ்வறையில் வியர்வை படிந்த பாதங்களின் வாசனையும் உறங்கும் மெத்தைகளில் தோய்ந்த ஈரமும் ஒரு வதந்தியைப் போல ஊசலாடிக்கொண்டிருந்தது. மற்ற துறவிகள் தன் மேலங்கியின் மடிப்புகளைச் சரி செய்யும்போது என்னைத் திரும்பிப் பார்ப்பதைக் கண்டிருக்கிறேன்.

கர்மாவும் நானும் பை நிறைய சமோசாக்கள் வாங்குவதற்காக பிக்ராம்-தய்யின் கடையில் நின்றோம். பெரிய ஸ்தூபியைச் சுற்றி இருந்த கோராவிற்கான பாதை பிச்சைக்காரர்களால் எப்போதும் நிறைந்திருக்கும். அவர்களுக்குப் பணம் கொடுப்பதற்குப் பதிலாக உணவு கொடுக்குமாறு ஒரு பணக்கார பூட்டானிய புரவலர் மடாலயத்தைக் கேட்டுக்கொண்டார். எங்கள் பாதையில் நடக்கத் தொடங்கிய உடனே ‘கிறுக்கு தாரா’வைக் கண்டேன். அவள் எழுந்து நின்று புன்னகைத்தாள், சிக்குண்ட தலையைச் சொறிந்தபடி மணிக்கட்டைப் பார்த்து கண்களுக்குள் அடங்காத காலத்தைக் கணக்கிட முற்பட்டாள். “ஓ! கர்மா… பூமோ… இன்னைக்கு கொஞ்சம் நேரமாகிவிட்டதோ?”

“ஆனா, உனக்கு சமோசா கொண்டு வந்திருக்கோம்!” பைக்குள் கையை விட்டு எண்ணெய் மிதக்கும் ஒன்றை வெளியே எடுத்தேன்.

“வேண்டாம்! தாரா 7.30 மணிக்கு மேல் எதையும் வாங்கிக் கொள்ள மாட்டாள்,” என்று அறிவித்தாள். பிச்சை எடுக்கும் நேரத்தை மிகக் கடுமையாகப் பின்பற்றுவாள் என்பதை மறந்துவிட்டேன். நேரம் கழிந்து சில்லறைகள் கூட வாங்கிக்கொள்ள மாட்டாள். 7.30 மணிக்குப் பிறகு, யாத்திரிகள், இராணுவ ஆட்கள், பெண்கள், காலை நடையாளர்கள், ஓட்டக்காரர்கள் என அனைவரும் சுற்றி வருவது குறைந்துபோகும். அவள் தன்னுடைய தற்காலிக கூடாரத்தைச் சுற்றி சுத்தம் செய்து, விருப்பமுள்ளவர்களுக்குத் தேநீர் வழங்குவாள். கிறுக்கு தாராவின் தேநீரை யாரும் குடிப்பதில்லை, விஷம் கொடுத்து அவர்களின் பணத்தை அவள் திருடிக்கொள்வாள் என்று பயந்தார்கள். ஆனால் கர்மா சொன்னான், லாமா வங்குசுக் அவளை ஒரு தாகினியாக கருதினார் என்று. எளிய மனித உடலில் உறையும் பெண் தெய்வம். கிறுக்கு தாரா வேறொரு உலகில் வாழ்கிறாள் என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழிதான் அது. நான் கர்மாவிடம் சொன்னேன், “ஆமாம், நிச்சயமாக லாமா வாங்சுக் அப்படித்தான் சொல்வார். அவரே தனக்குள் ஒரு தெய்வம் உறைவதாக நம்புகிறார் இல்லையா?”

“ஓ தாரா, நீ இந்த சமோசாவை எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவொன்றும் பணம் இல்லையே,” நான் சமோசா வைத்திருந்த கையை அவளை நோக்கித் தள்ளி வற்புறுத்தினான்.

தரையில் விரித்திருந்த பழைய பந்தல் விரிப்பைத் துடைத்து அவள் சொன்னாள், “நீங்க இரண்டு பேரும் இங்கே உட்காருங்கள், எனக்கு உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.” சமோசாவை ஒரு கடி கடித்து, சிவப்பு நிற ரவிக்கையை இழுத்து வாயைத் துடைத்துக்கொண்டாள். “லாமா வாங்சுக்கிற்கு இரட்டைத் தம்பி யாராவது உண்டா?”

நான் சொல்லக்கூடாத ஒன்றை கிறுக்கு தாராவிடம் சொல்லிவிட்டேனா என்பதைப் போல கர்மா என்னை நோக்கினான். நான் அவனைத் திரும்பப் பார்த்து இல்லையென்று தலையசைத்தேன்.

“நேற்றிரவு தமேலில் அவரைப் பார்த்தேன்,” என்றாள். “அவர் லாமா வாங்சுக் போலவேதான் இருந்தார். ஆனால், என் துடைப்பத்தை அவரை நோக்கி ஆட்டி அழைத்தபோது அவர் கண்டுகொள்ளவில்லை.”  தோள்களைக் குலுக்கினாள். பிறகு சமோசாவை முடித்துவிட்டு, விரல்களை ஒவ்வொன்றாக நக்கி தன் புடைவையில் துடைத்துக்கொண்டாள்.

“ஹர்ரே… தமேல் போன்ற ஒரு இடத்தில் அவர் ஏன் இருக்கப் போகிறார்?” என் பேண்டை துடைத்துக் கொண்டு கிளம்புவதற்காக எழுந்து நின்றேன். “அது சரி தாரா, சொல்லு… இப்போதெல்லாம் யார் உனக்கு குர்குரி ரம் வாங்கித் தருகிறார்கள்?” அவளைக் கிண்டலடித்தேன்.

அவள் முதலில் இளித்துவிட்டு பின் முகத்தைத் தீவிரமாக மாற்றிக்கொண்டாள். “தாராவுக்கு ரம் கிடையாது, பூமோ. அது லாமா வாங்சுக்காக இருக்க முடியாது என்பது எனக்கும் தெரியும். அதனால்தான் கேட்டேன். அவர் பாவாடையெல்லாம் அணிய மாட்டார் தானே?”

“அட தாரா… இருக்கவே இருக்காது. லாமா வாங்சுக் போன்ற ஒருவர் கோம்பாவின் வாயில்களுக்கு வெளியே தனது மேலங்கியைக் கழற்றுவது பாவமென்று உனக்குத் தெரியும்தானே? நீ என்ன சொன்னாய், பாவாடையா? நீ நிச்சயமாக வேறு யாரையோ பார்த்திருக்கிறாய், அது அவராக இருக்காது,” கர்மா சொன்னான். மணிமாலையை இடது மணிக்கட்டில் சுற்றிவிட்டு, போர்வையால் நெற்றியைத் துடைத்துக்கொண்டான்.

“என்னவோ… ஆனால் கண்டிப்பாக அவரால் ஒரு அழகான பெண் போல மாற முடியும்” என்று தாரா முணுமுணுத்தாள். ஒரு நொடி அவள் மீது எனக்குப் பொறாமையாக இருந்தது. அத்தனையையும் பார்க்கும் திறன் கொண்டிருக்கிறாள், பார்த்ததை எவரிடமும் சொல்லத் துணிகிறாள், சமரசம் தேவையற்ற ஒரு தர்க்கத்தால் தன் வாழ்வைக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறாள்.

மடத்தை நெருங்கும்போது வெயில் பலமாக ஏறியிருந்தது. என் அக்குள்கள் வியர்த்தன, வெளிர் நீல சட்டையின் கரங்களில் பரவியிருக்கும் வியர்வைத் தடங்கள் கர்மாவின் கண்களில் படக்கூடாது. வீடற்றவர்கள் மலம் கழிக்கும் ஒரு சந்தில் கர்மா என் மணிக்கட்டைப் பிடித்து என்னை நிறுத்தினான். “தாரா சொன்னதைப் பற்றி நீ யாரிடமும் சொல்லக்கூடாது என்று நினைக்கிறேன். அவள் தெருவில் வாழும் பெண். ஒரு முதிய லாமா ஒருபோதும் பொதுவெளியில் தன் அங்கியைக் கழற்ற மாட்டார். அதுவும், பாவாடை? என்ன ஒரு முட்டாள்தனம்!”

அவன் பேச்சு தேவையற்றது. கடந்த ஒரு வாரமாக அவன் என்னை ஒரு குழந்தையைப் போல நடத்தத் துவங்கியிருக்கிறான். “ஆனால், நான் அவளை என் சொந்த அம்மாவிற்கு இணையாக நம்புவேன்,” என்று பதில் பேசினேன். என் மணிக்கட்டை விலக்கிக்கொண்டு முன்னால் நடந்தேன். “அவர் ஒரு பெண்ணை போல உடையணிந்து மலிவான விடுதியைத் தேடியோ அல்லது நடன இடங்களுக்கோ சென்றிருக்கலாம். நீயே சொல்லியிருக்கிறாய், ஞாபகம் இருக்கிறதா? இதைப் போல ஏதோவொன்றிற்காக அவர் ஏற்கனவே சிக்கலில் மாட்டியிருக்கிறார் என்று!”

“அது பாதி உண்மைதான்,” என்று கர்மா சொன்னான். ஆனால் அவனுடன் அங்கே நின்று நான் வாதிடவில்லை. மடத்தை நோக்கி தொடர்ந்து நடந்து சென்றேன், அவன் எனக்குப் பின்னால் தூர மறைந்து போவதை உணர முடிந்தது. அவன் ஒருவேளை இன்னமும் அங்கேயே நின்றுக்கொண்டு மணிமாலையை மணிக்கட்டில் அவிழ்த்து அவிழ்த்துக் கட்டிக்கொண்டிருக்கலாம். ஆனால் நான் திரும்பிப் பார்க்கவில்லை.

பின்மதியம் என் வியர்வை போக குளித்தேன். ஒருநாளின் அமைதியான நேரம் இது. மடாலயத்திற்கு வருவதற்கு முன்னால் இந்த நேரத்தில்தான் நான் வழக்கமாக பள்ளி நண்பர்களைச் சந்திப்பதற்காக தமேல் தெருக்களில் நடந்துபோவேன். நாங்கள் துருக்கிய மது விடுதிக்குச் சென்று அங்கிருக்கும் கரடுமுரடாகத் தோற்றமளிக்கும் மலையேற்றக்காரர்களிடம் பேசுவோம். விசேஷமான தட்டை ரொட்டியின் மேல் ஹம்மஸ் தடவி சாப்பிடுவோம், ஆங்கிலத்தில் பேசுவோம், அந்தி சாயும் வரை உணவுக் கறை படிந்த மெத்தைகளில் சாய்ந்து, பியர்களும் பிரவுனிக்களும் வருவதற்காகக் காத்திருப்போம்.

அந்த நாள், நான் கர்மாவின் அருகாமையை இழக்கத் துவங்கினேன். நான் பள்ளியிலிருந்து இரவுப் பயணங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறேன் ஆனால் வாரக் கணக்காக ஒருவருடன் கழித்ததில்லை – அவனுடன் கைகளைக் கோர்த்து நடந்து, அமர்ந்து, வாசித்து, ஒன்றாக உணவருந்தி… பல ஆண்டுகளுக்குப் பின்னர் மலைக்குடில் ஒன்றில் ஒரு ஆணுடன், அவன் மடி மீது என் கால்களை வைத்து, அவன் கைகள் என்று முழங்காலைத் தடவிக்கொண்டிருக்க, வானில் வெளிறிய சிவப்புத் தடங்களை விட்டுவிட்டு சூரியன் மறைவதைப் பார்த்திருக்கும்போது, கர்மா உடன் இல்லாததை நான் உணர மாட்டேன்தான் ஆனால் அவனை நிச்சயம் நினைவுகூர்வேன். ஒவ்வொருமுறையும் அவன் என்னை விட்டு எழுந்து செல்லும்போது என் கரங்களில் எப்படி மயிர்க்கூச்செறிகிறது! தன் போர்வையின் ஒரு முனையை இடது தோள் மீது அவன் வீசும் அச்சிறிய செயல் எப்படி அறையின் காற்றையே உலுக்குகிறது!

நான் காலையில் நடந்துகொண்ட விதத்திற்காக கர்மாவிடம் மன்னிப்பு கேட்பதாக முடிவெடுத்தேன். பிரதான மடாலயப் பகுதியிலிருந்து வேகமாக ஓடி வந்து கர்மாவின் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது லாமா வாங்சுக் அவரது கதவருகில் நின்றபடி என்னை நோக்கிக் குரலெழுப்பினார். வைக்கோல் பாயை கைகளுக்கு அடியில் சுருட்டி வைத்திருந்தார். முற்றத்தைப் பார்த்தபடி அவரது அறை முதல் தளத்தில் இருந்தது. வட்டமான பாய்களைத் தூசு தட்டி அதில் என்னை உட்காருமாறு சைகை செய்தார்.

“காஃபி குடிக்கிறாயா?” என்று கேட்டார். “பாலும் சர்க்கரையும் சேர்ந்து வரும் கொரிய வகை காஃபி பொட்டலங்கள் என்னிடம் உள்ளன.”

லாமா வாங்சுக் ஏதேனும் வேண்டுமா என்று என்னிடம் கேட்டுக் கொடுக்க முற்படுவது இதுவே முதல்முறை. கடந்த ஒரு மாதமாக நாங்கள் வெறும் புன்னகையைப் பரிமாறிக்கொள்வோம் அல்லது வெப்பத்தைப் பற்றியும், மின்வெட்டைப் பற்றியும், அன்று காலை பருப்பில் உப்பு அதிகமாக இருந்ததைப் பற்றியும்தான் பேசிக்கொள்வோம். அவர் ஒரு ஆனி லாமா என்று அறிந்துகொண்டதிலிருந்து, அவர் என் காலணிகளை அணிவதில் காட்டும் விருப்பத்தையும், சிலசமயம் WWF இரவுகளுக்கு வந்து இளைய துறவிகளுக்குத் தலை மசாஜ் செய்வதையும் வைத்து தமேலில் வலம் வரும் கரகரப்பான குரலும் மென்மையான கைகளும் கொண்ட பெண்ணாகத்தான் அவரை கருதத் தொடங்கியிருந்தேன். நான் பதில் சொல்வதற்குள், தண்ணீரைச் சூடாக்குவதற்காக தன் அறைக்குள் திரும்பச் சென்றார்.

அவர் திரும்ப வந்தபோது அவரது கையில் இரண்டு காஃபி கோப்பைகள் இருந்தன.

“உன்னுடைய காலணிகளை அணிந்ததற்காக என்னை மன்னித்துவிடு,” அவர் சொன்னார். பிறகு, காஃபியை அருந்துமாறு என்னிடம் சைகை காட்டினார். “ஆண்களின் காலணிகளையும் பெண்களுடையதைப் போலவே தயாரித்தால் நன்றாக இருக்கும். வசதியாக, திறந்திருக்கும் வகையில்!”

நான் புன்னகைத்து கோப்பையைக் கீழே வைத்தேன், “கொஞ்சம் சூடாக இருக்கிறது,” உதடுகளால் கோப்பையைச் சுட்டிக்காட்டி கூறினேன்.

“இன்னும் எவ்வளவு காலம் நீ இங்கே இருக்கப் போகிறாய், பூமோ?” கொரியன் காஃபியை ஒரு மிடறு அருந்தி, கண்களை என் மீது பதித்து லாமா வாங்சுக் கேட்டார்.

“அநேகமாக இன்னும் இரண்டு வாரம்?” ஒரு கேள்வியைப் போலவே என் பதிலைச் சொன்னேன்.

“குட்டிகளுக்குப் பாடம் எடுப்பது உனக்குப் பிடித்திருக்கிறதா?”

“ஆமா,” என்று சொன்னேன். உரையாடலைச் சுருக்கமாக முடிக்க விரும்பினேன்.

“சரி கர்மாவின் கதை என்ன?” தன் இடது கையிலிருந்த வடுவைத் தடவிக்கொண்டு கேட்டார். அது உடைந்த தொப்பியைப் போல இருந்தது.

“என்ன கதை?” எங்களை அறையில் வைத்து லாமா வாங்சுக் பார்த்துவிட்டாரா?

“அவன் ஆங்கிலம் ஒழுங்காக கற்றுக் கொண்டானா?”

“ஆஹ்.. ஆமாமா… அவன் வேகமாகவே கற்றுக்கொண்டான்,” பொய் சொன்னேன். கடந்த ஒரு வாரமாகப் பிரதி பெயர்சொற்களைச் சொல்லிக்கொடுப்பதிலேயே சிக்கிக்கொண்டிருக்கிறேன். அவனா? அவளா? அதுவா?

“அவன் என்னுடைய கிராமத்தைச் சேர்ந்தவன், தெரியுமா… கோர்க்கா மாவட்டம்,” ஆட்காட்டி விரலை வடக்கை நோக்கி காட்டிச் சொன்னார். யாரால் கணித்திருக்க முடியும்? குகுரி கத்தியை தன் கைகளில் சுழற்றும் பயமறியா நேபாள வீரர்களை உலகிற்கு அளித்த மாவட்டத்திலிருந்து ஒரு ஆனி லாமா வருவாரென்று. “சாம் நடன வகுப்புகளை அவன் இங்கு நடத்த வேண்டுமென்று விரும்புகிறேன். இளம் துறவிகள் மோசமாக ஆடுகிறார்கள். இறுதி ஊர்வலத்தில் அவர்கள் ஆடினால் ஆத்மா ஒருபோதும் அமைதியில் உறையாது.” தன்னுடைய நகைச்சுவைக்கு அவரே சிரித்துக்கொண்டார்.

“அதை நீங்களே அவனிடம் சொல்ல வேண்டும்,” என்றேன். கடந்த வியாழன் மாலை, லாமா வாங்சுக் முற்றத்தில் பாயை விரித்து இளம் துறவிகள் சாம் நடனமாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர்களை நோக்கி உச்சுக் கொட்டி தன் தாடையால் கர்மாவைச் சுட்டி மற்றவர்களை விழித்துக்கொண்டு அவனைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். துறவிகள் கச்சிதமாகச் சுழன்று குதிக்கும் போதெல்லாம் கைதட்டி விசில் அடிக்க அவர் தயங்கவில்லை. கொழுகொழுவென்றிருக்கும் துறவிகளிடம் “குறைவாக சாப்பிடுங்கள்” என்பார். ஆனால் அவர் பெரும்பாலும் அமைதியாக இருந்தார், கர்மா சாம் ஆடும்போது தலையைத் தட்டியபடி அமர்ந்திருந்தார். லாமா வாங்சுக்கின் கண்கள் முதலில் கர்மாவின் தோள்களில் விழுந்ததையும் பின்பு அங்கிருந்து நழுவி அவன் குதிக்கும்போது கெண்டைக்கால்களைத் தொட்டதையும் நான் கவனித்தேன். அவன் காற்றில் சுழலும்போது நீர்ப்படலமென அவன் அங்கியின் முனை சுற்றுப்பாதையில் சுழன்று வந்தது.

“ஒருவேளை உன் பேச்சை அவன் ஒழுங்காகக் கேட்கக்கூடும்,” கால்களைக் குறுக்காக மடித்துச் சொன்னார். “நான் இளமையாக இருந்தபோது எப்படி ஆடுவேன்!”

என் கடிகாரத்தைப் பார்த்தேன், கிட்டத்தட்ட இரண்டு மணி ஆகியிருந்தது. ஐந்து நிமிடங்கள் தாமதமாகச் சென்றால் கூட அந்தக் குட்டி அங்கிகள் என்னை ஏளனமாகக் கேள்விகள் கேட்டன. “நான் இப்போது போக வேண்டும்,” அசைந்தாடி எழுந்தேன்.

“உன் காஃபியை மறந்துவிடாதே,” லாமா வாங்சுக் சொன்னார். “சரி, நானும் உன்கூட வருகிறேன்!” சொன்ன கணத்தில் அப்படியே பாயிலிருந்து மேலெழுந்தார், இரண்டு கைகளில் காஃபி கோப்பைகள்! இவ்வளவு விரைவாக இயங்கும் ஒருவருக்கு அறுபத்து ஐந்து வயது என்று யாருக்குமே தோன்றாது.

குட்டித் துறவிகள் சாப்பாட்டு அறைக்குப் பின்னால் இருந்த இரண்டு தகரக் கூரை வீடுகளில் வசித்து வந்தனர். அவர்களுக்கென தனியாக தொலைக்காட்சி அறை கூட இருந்தது. சனிக்கிழமைகளில் டீ-ஷர்ட்டும் அரைக்கால் சட்டையும் அணிந்துகொண்டு பெரும்பாலும் கார்டூன்களும் ஹிந்திப் படங்களும் பார்த்தனர். அவர்கள் ஏன் பிரதான மடாலய மண்டபங்களிலிருந்து விலகி வாழ்கிறார்கள் என்று நான் கர்மாவைக் கேட்டபோது, அதற்குப் படிநிலைகளைத் தீவிரமாகப் பின்பற்றுவதுதான் காரணம் என்றான். படிக்கட்டுகளைப் போல! சூத்திரங்களை மனப்பாடம் செய்த பிறகுதான் அவர்கள் மற்ற துறவிகளுடன் இணையும் தகுதியை அடைவார்கள் என்றான்.

நான் அவர்கள் குடியிருப்புகளின் வாயிலை சங்கிலியைப் பிரித்து திறந்தபோது, மூன்று குட்டி லாமாக்கள் படிக்கட்டுகளில் ஓடுவதைக் கண்டேன். “நீங்க வந்துட்டீங்களா! வரமாட்டீர்கள் என நினைத்தோம். கீழே உள்ள கடிகாரத்தில் பெரிய முள் பன்னிரண்டிற்கும் சிறிய முள் இரண்டிற்கும் அப்போதே வந்துவிட்டது,” என்றான் மனோஜ். கோம்பாவிற்கு புதியவன். திபெத்திய துறவிப் பெயர் பெறுவதற்காகக் காத்திருக்கிறான். மற்ற இருவர், பசங்கும் சங்க்போவும், என் இடது கையை பிடித்துக்கொண்டு ஆமாம் எனத் தலையசைத்தனர். பசங்கிற்கு எப்போதுமே மூக்கில் ஒழுகும். சில நேரத்தில் நாசியிலிருந்து வழிந்து மேல் உதட்டைத் தொடும். மேலே இழுக்க மூக்கை உறிஞ்சுவான்.

“கைக்குட்டை எங்கே பசங்?” அவனிடம் கேட்டேன். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவன் மூக்கைத் துடைப்பதற்காக ஒரு சிறிய துணியை அவன் அங்கியின் மீது குத்தி விட்டேன். ஆனால் அந்தத் துணி இப்போது காணவில்லை. அது மரித்துப் போனதின் அடையாளமாக இரண்டு ஊசித் துளைகள் மட்டுமே இருந்தன. அவன் தோள்களைக் குலுக்கிக்கொண்டு, போர்வையால் மூக்கைத் துடைத்தான்; அதில் கறை படிந்த தடங்கள் இருந்தன. பின்னர், ஏதோ அவர் அப்போதுதான் தோன்றினார் என்பதைப் போல பாதி படிக்கட்டுகளில் லாமா வாங்சுக் நிற்பதை அவர்கள் கண்டனர். அவர்கள் என் கைகளை விடுவித்து, தோள்களிலிருந்த போர்வையை அவிழ்த்து மரியாதையுடன் தலை வணங்கினர்.

“தோ… தோ…” படிக்கட்டுகளில் ஏறியவாறே திபெத்திய மொழியில் சொன்னார் லாமா வாங்சுக்.

நாங்கள் வகுப்பறைக்குச் சென்றபோது, என் மாணவர்களில் பெரும்பாலானோர் வெளியே கொய்யா மரத்தடியில் இருந்தனர். “இங்கே ரொம்ப சூடா இருக்கு மிஸ்,” ஆறு வயது ட்ஸெரிங் போர்வையால் விசிறிக்கொண்டு சொன்னான். ஆனால் அவர்கள் லாமா வாங்சுக்கை கண்டதும் கலைந்து எழுந்து நின்றார்கள். நான் கோம்பாவில் தங்கியிருந்த அம்மாதத்தில் லாமா வாங்சுக் நுழைந்தால் அறையின் தன்மையே மாறிவிடுவதைக் கவனித்திருக்கிறேன்: கர்மாவுடன் தொலைக்காட்சி அறைக்குள் நுழைந்தால், கள்ள வேடமிட்ட மௌன சிரிப்பு ஒன்று ஊர்ந்து நகர்வதை உணர்ந்திருக்கிறேன்; உணவறைக்குள் நுழைந்தால் இரக்கம் அலட்சியமாகப் பொய்த் தோற்றம் கொள்வதை உணர்ந்திருக்கிறேன்; ஆனால் இங்கு மரியாதையை உணர்கிறேன். தலைமை லாமாவைக் கண்டதும் கர்மாவின் உடல் மாறுவதைப் போல. நான் லாமா வாங்சுக்கைப் பார்த்து பின் நிமிர்ந்து சிறுவர்களிடம் அறிவித்தேன், “லாமா வாங்சுக் இன்று நம்முடன் வகுப்பில் இணைந்துகொள்வார்.”

இரவு உணவிற்குப் பின்னர், அனைத்து வாயில்களையும் மூடுவது கர்மாவின் பணிகளில் ஒன்று. பின் முதிய துறவிகளை மாலை பிரார்த்தனைக்குச் செல்ல நினைவுறுத்துவதும், என் அறைக்கு வெளியே மாடியில் இருக்கும் மணியை கோடை சூரியன் தாமதமாக மறைவதைக் குறிக்கும் வகையில் அரை மணிக்கு ஒரு முறை அடிப்பதையும் அவன் உறுதிப்படுத்த வேண்டும். அவன் மூன்று முறை மணியை அடித்தான், முதலில் மென்மையாகவும், பிறகு கொஞ்சம் சப்தமாகவும், மூன்றாவது பலத்த சப்தத்துடனும் அடித்தான். முடித்ததும் அவன் என் அறையை நோக்கி வந்து கையில் மணியடிக்கும் குச்சியுடன் என் கதவின் மீது சாய்ந்து நின்றான். காலை அந்தச் சந்தில் அவனிடமிருந்து விலகி தனியாக வந்த பிறகு அவனிடம் இதுவரை பேசவில்லை.

“லாமா வாங்சுங் இன்று எங்களுடைய வகுப்பில் கலந்துகொண்டார்,” நான் தொடங்கினேன்.

“மறுபடியும் அதைப் பற்றி பேச வேண்டாம், பூமோ,” கர்மா சொன்னான். கையில் இருந்த குச்சியின் வெல்வெட்டு முனையைச் சுரண்டிக்கொண்டிருந்தான்.

“தெரியும் தெரியும்… நான் அதை விட்டுவிட்டேன்,” என்று சொன்னேன். அவன் வலது கரத்தை பற்றி என் கையை அவன் முழங்கையுடன் கோர்த்துக்கொண்டேன். “உள்ளே வா. கதவை மூடி வைக்க வேண்டும். கொசுக்கள் உள்ளே வந்து இரவு முழுதும் தொந்தரவு செய்யும்.”

“இன்றைய இறுதி பூஜைக்கு நான் போய் பிரார்த்தனை மண்டபத்தைத் தயார் செய்ய வேண்டும்,” என்றான்.

“நாளை கோராவிற்கு நம்மோடு லாமா வாங்சுக்கும் வரப் போகிறார்,” அவனிடமிருந்து திரும்பி நின்று கூறினேன்.

கர்மா எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவன் தோள்கள் இறுகுவதை உணர முடிந்தது என்னால். “உன் இஷ்டம்,” என்று முணுமுணுத்துவிட்டு அந்தியின் அமைதிக்குள் நழுவிச் சென்றுவிட்டான்.

மறுநாள் காலை அரசமரத்தடியில் கர்மா இல்லை. ஒரே நேரத்தில் வருத்தமாகவும் நிம்மதியாகவும் உணர்ந்தது இப்போதும் என் ஞாபகத்தில் இருக்கிறது. லாமா வாங்சுக்கும் நானும் வழக்கமான பாதையில் சென்றோம்: பாசி படிந்த செங்கற் பாதையில், குரங்குகளுடன் சண்டையிடும் நாய்களைக் கடந்து, துணிகளைத் துவைக்கும், குளிக்கும் பெண்களையும் கடந்து… பிக்ராம்-தய் கடையில் பை நிறைய சமோசாக்களை வாங்கிக்கொண்டோம். கர்மா முன்னமே வந்து சென்றுவிட்டதாக அவர் கூறினார்.

அந்தப் பெரிய மலையை நானும் கர்மாவும் மூன்று சுற்றி வர எடுக்கும் நேரத்தில் லாமா வாங்சுக் ஐந்து முறை வலம் வந்துவிட்டார்.

“இந்த லாமாவாக இருப்பது கடினமான வேலை தெரியுமா – சாப்பிட வேண்டும், சும்மா அமர்ந்திருக்கனும், படிக்கனும். இது உடலை நிதானமாக்கிவிடுகிறது,” அவர் சொன்னார்.

கிறுக்கு தாராவின் கூடாரத்தின் அருகே வந்ததும், லாமா வாங்சுக் அவளிடம் பேச்சு கொடுத்தார், “ஓ தாகினி! என்ன காலையிலேயே சோகமாக இருக்கிறாய்?”

“பூமோ, இந்த வயதான லாமாவிற்காக அந்த இளையவனைக் கைவிட்டு விட்டாயா,” தாரா கேட்டாள்.

அவள் கிண்டல் செய்கிறாள் என்று தெரியும் ஆனாலும் அது ஆழக் குத்தியது. அவளுக்கு என்ன தெரியும், இளையவர், வயதானவர் என்றெல்லாம்…? இன்று காலை கர்மா அவளிடம் ஏதேனும் சொல்லியிருப்பானா?

சரியான கணத்தில் அவளே சொன்னாள், “மனம் உடலை வென்றுவிடுகிறது என்று நினைக்கிறேன்.”

“ஹா… தாகினியின் ஆப்த வாக்கியம்!” லாமா வாங்சுக் கொண்டாடினார்.

“உங்கள் தாகினி பொய்யும் கூடச் சொல்லும்,” நான் வெடுக்கென்று கூறினேன். “ஜீன்ஸ் பாவாடை அணிந்துகொண்டிருந்த உங்களை தமேலில் பார்த்ததாக அவள் சொன்னாள்.” ஒரு இனிமையான தருணத்தின் மீது சற்றும் சிந்திக்காமல் குளிர்ந்த நீரை ஊற்றி விட்டேன். தாரா தரையில் காரி உமிழ்ந்தாள்.

லாமா வாங்சுக் அவளைப் பார்த்து புன்னகைத்து அவளது நொய்மையான தோளில் கை வைத்துக் கூறினார், “என்னால் முடியுமென்றால் நான் செய்ய மாட்டேனா? இந்த அங்கியில் சில பொத்தான்களும் ஜிப்புகளும் தைப்பதற்கு என்னால் என்ன தர முடியும்?”

துரோகம் அத்தனை மொழிகளிலும் அனைத்து தர்க்க முறைகளிலும் ஒரே மாதிரியான மணமும் சுவையும் கொண்டது என்பதை நான் உணர்ந்துகொண்ட நாள் அது. கோம்பாவில் நான் இருந்த மீத நாட்களில் என் கோராவின் போது கிறுக்கு தாரா என்னிடம் மறுபடி பேசவேயில்லை. காலை நடைப்பயிற்சி செய்பவர்கள், நாய்கள், மாடுகள், மோட்டார்வண்டிகள் மற்றும் யாத்திரிகர்களின் கூட்டத்தில் ஒருவராக, தனித்து அறியப்படாதவளாகக் கலந்துவிட்டேன்.

நாங்கள் ஒன்றாகச் சென்ற முதல் கோராவிற்குப் பிறகு ஒருவரையொருவர் தள்ளி நின்றே கவனித்தோம் என்பது நினைவிருக்கிறது. தினசரி நிரல் ஒன்றை வகுத்துக்கொண்டோம். லாமா வாங்சுக் தினமும் மதியம் என் வகுப்பிற்கு வந்தார். உணவு வேளைகளில் நானும் கர்மாவும் ஒருவரையொருவர் கடந்து சென்றோம். சில மாலை நேரங்களில் எலுமிச்சை மரத்தடியில் அவன் நிழலுறுவை கற்பனை செய்துகொள்வேன். குட்டித் துறவிகள் லாமா வாங்சுக்கிடம் தயக்கமின்றி பழகத் தொடங்கினார்கள். வாத்து விளையாட்டு ஆடும் எங்கள் சிறிய உலகில், நீண்ட மதியத்தை ஒன்றும் செய்யாமல் கழிக்க நினைக்கும் குழந்தைகளாக மட்டுமே இருந்தோம். மனம் முழுதும் விளையாட்டுகளில்தான் மூழ்கி இருந்தது. குட்டித் துறவிகளுக்கும் லாமா வாங்சுக்கிற்கும் இடையேயான தூரம் அருகி வருவதை நான் கவனித்தேன்; அவரது தலையைத் தட்டினார்கள், அவர் மீது ஏறிக் குதித்தார்கள், அவர் கைகளைப் பிடித்து ஏறி குரங்குகளைப் போல அவர் தோளில் தொங்கினார்கள்.

ஒரு மாலை லாமா வாங்சுக்கின் வாசலில் அமர்ந்திருந்தபோது தாரா பார்த்ததாகச் சொன்ன வதந்தியைப் பற்றிக் கேட்கும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன். அது ஏன் ஆனி லாமா? இளம் துறவிகள் அவரை அப்படி அழைப்பதை அவரும் நிச்சயமாக அறிந்திருப்பார். பின்னாட்களில் அந்தத் தருணத்தை நினைவுகூர்ந்து பார்க்கும்போது மனிதர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் பலவீனங்களைப் பகிர்ந்துகொண்ட கணமாகத் தோன்றியது. ஆனால் அன்று அவரது வாசலில் நான் கேட்டது எனக்குக் குழப்பமாக இருந்தது. லாமா வாங்சுக் தன் சிறு வயதில் தனது சகோதரியின் குர்த்தாக்களை அணிந்துகொண்டு பாலிவுட் நடிகைகளைப் போல மழையில் நடனமாடியதைப் பற்றி என்னிடம் கூறினார். தஷைன் மேளாக்களில் தனது சகோதரியின் நடனக் குழுவுடன் இணைந்து கிராமங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். வெல்வெட்டு இரவிக்கையும் பருத்தி புடவையும் அணிந்து தாளத்திற்கேற்ப குதித்தார். அவருக்கு ஐந்து ஆறு வயதாகும் வரை அவருடைய பெற்றோருக்கு இது தவறாகத் தெரியவில்லை. நடனத்தின் மூலமாக அவர் அவரது சகோதரியை முழுவதுமாக புரிந்துகொண்டார், அவளுக்கு நடனம் ஏன் அவசியமானது என்பதையும் அறிந்துகொண்டார். மணிக்கணக்காக ஆடுகளுக்குப் புற்களை வெட்டுவது, மாடுகளை மேய்ப்பது, தயிர் கடைவது, அரிசித் தேறலைத் தயாரிப்பது, சுள்ளிகளைப் பொறுக்குவது என அத்தனை வேலைப்பளுக்களையும் மறக்க நடனம்தான் அவளுக்கு உதவுகிறது. காற்றில் சுழலும் விரல்களை தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்பதை அறிந்துகொண்டாள். கையைக் கூர்மையாகக் கீழே இறக்குவதும் கால்களின் வேகத்தைக் குறைப்பதின் அர்த்தம் என்ன என்பதையும் அவள் உணர்ந்துகொண்டாள். ஆனால் நடனம் நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. லாமா வாங்சுக் தனது சகோதரியின் குர்தாவை அணிந்து, ஸ்டீரியோவில் ஒரு புதிய ஹிந்தி பாடலுக்குச் சுழன்று ஆடிக் கொண்டிருப்பதை அவரது பெற்றோர் கண்டபோது, அவரை மடாலயத்திற்கு அனுப்பிவிட முடிவு செய்தனர். மற்ற பையன்களுடன் சேர்ந்து வாழ்வதுதான் ஒரு ஆணாக மாறுவதற்கு அவனுக்கு கற்றுக் கொடுக்கும் என்று நம்பினார்கள். அவர் மடாலயத்திற்கு வந்தபோது, அப்போது ரின்போச்சியாக இருந்த என்னுடைய போபோ, முற்காலத்தில் அவர் பெண்ணாக வாழ்ந்ததின் எச்சங்களைச் சுமந்து கொண்டிருப்பவர் என்பதைக் கண்டறிந்தார்.

“அப்போ அது உண்மைதானா? தாரா உண்மையிலேயே உங்களைப் பாவாடையில் பார்த்தாளா?” நான் கேட்டேன்.

“நீ என்ன நினைக்கிறாய்?”

“நான் உங்களைக் கேட்கிறேன், லாமா வாங்சுக்.”

“தாகினி கண்டது எதுவோ அது அவளுக்கு மட்டுமே சொந்தம். அதுமட்டுமல்ல, வயதானவனுக்கு தமேலின் இரைச்சல் தாளமுடியாதது,” கண்சிமிட்டி என்னிடம் சொன்னார்.

சனிக்கிழமை காலைகளில்  அனைத்து துறவிகளும் தன் தலையை மழித்து, குளித்து, துணிகளைத் துவைத்து விடுவார்கள். சனிக்கிழமை மதியங்களில் கோம்பா முழுக்க அமைதியாக, வெறுமையுற்று இருக்கும். குட்டித் துறவிகளைத் தவிர மற்ற லாமாக்கள் அனைவரும் நகரத்திற்குச் சென்றுவிடுவார்கள். கால்பந்து விளையாடுவார்கள், நீச்சலடிப்பார்கள், நண்பர்களை குடும்பத்தினரைச் சென்று பார்ப்பார்கள். அந்த சனிக்கிழமை மதியம் அத்தனை குட்டித் துறவிகளும் தொலைக்காட்சி அறைக்குச் சென்று இரண்டு மணி ஹிந்திப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது நான் துணிகளை உலர்த்த மாடிக்குச் சென்றேன். தெற்கு பள்ளத்தாக்கிலிருந்து கனத்த மேகங்கள் உருண்டோடி வந்தன. ஆனால் ஏதோ அவற்றுக்கு இன்று துணி துவைக்கும் நாள் என்று தெரிந்ததைப் போல மடாலயத்திற்கு முன்னரே நின்று விட்டன.

நான் மொட்டை மாடியைக் கூட்டிப் பெருக்கி என் துணிகளை கீழே விரித்து உலர்த்தினேன். காற்றில் பறந்துவிடாமலிருக்க செங்கற்களைத் துணியின் முனைகளின் மீது வைத்தேன். நான் கீழே திரும்பிச் செல்ல எத்தனித்த போது, விருந்தினர் மாளிகையின் பின்னால் ஆரஞ்சு மரத் தோப்பில் ஒரு ஜோடி கால்களைக் கண்டேன். முழங்கால்களை மூடியிருந்த நீல நிற பாவாடைக்குள் இருந்து இரண்டு கால்கள் வெளியே வந்து செருப்புகளுக்குள் நுழைந்தன. ஒரு திரையைப் போல செஞ்சிவப்பு அங்கி அதன் மீது வந்து மூடியது. சற்று அமைதி நிலவியது. அதன் பின்னர் கிளைகளுக்கிடையில் ஒரு சலசலப்பு. ஒரு உருவம் மரங்களுக்கிடையே நெளிந்து வெளியே வந்தது. விருந்தினர் மாளிகையின் பின் வாயிலை நெருங்கி வருகையில் அது லாமா வாங்சுக்காக மாறியது. அவர் சுற்றும் முற்றும் பார்த்தபோது நான் குனிந்து ஒளிந்துகொண்டேன்.

ரகசியங்களைப் பாதுகாப்பதில் எனக்கு இப்போதும் கடினமாக இருக்கிறது. தவறுதான், எனக்குத் தெரியும். ஆனால் நான் யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டும், அது கர்மாவாகத்தான் இருக்க வேண்டும். என்னால் முடிந்தவரை கர்மாவின் அறையை நோக்கி வேகமாக ஓடினேன் ஆனால் அது பூட்டியிருந்தது. Y2Kவில் இருப்பான் என்று நினைத்து பிரதான வாயிலைத் தாண்டி மலையில் கீழிறங்கி ஓடினேன். அங்கே ஒரு கணினியின் முன்னால் கூன் போட்டு அமர்ந்திருந்தான். மீண்டும் அந்த ஜெர்மன் பெண்ணிற்குக் கடிதம் எழுதிறானா? எரிச்சலுடன் அவனை நோக்கி நடந்தேன்.

“உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்,” என்றேன்.

அவன் இருக்கையிலிருந்து துள்ளி எழுந்தான்.

“லாமா வாங்சுக் மீண்டும் பழைய ஆனி லாமாவாக சுற்றித் திரிகிறார் என நினைக்கிறேன்,” சட்டெனக் கொட்டிவிட்டேன்.

“நீ சொல்றதை என்னால் நம்ப முடியலை, பூமோ. நீங்கள் இருவரும் இப்போது நண்பர்கள்தானே?” கர்மா கேட்டான். அவனது குரல் எவ்வளவு மென்மையானது என்பதை நான் மறந்துவிட்டிருந்தேன். அந்த சைபர் கஃபேவில் அக்கம்பக்கத்து வாலிபர்கள் அத்தனை கணினிகளையும் ஆக்கிரமித்து விளையாடிக்கொண்டும் இணையத்தில் அரட்டையடித்துக்கொண்டும் இருந்தனர். கீபோர்டின் கிளிக் சப்தங்களுக்கிடையே கர்மாவின் குரல் என்னை அரவணைத்துக்கொண்டது. நான் சற்றும் யோசிக்காமல் அவன் நெற்றியை வருடக் கையை நீட்டினேன். கோர்க்காவில் ஒரு மரக்கிளை உண்டாக்கிய வடுவைத் தொட்டேன். என் விரல்களைப் பிடித்து வேகமாக விலக்கினான். “ஏன் தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்புகிறாய்?” என்று கேட்டான்.

“அவர் பின்பக்கமிருந்து உள்ளே வருவதைப் பார்த்தேன்,” என்றேன். “கோம்பா சுற்றுச்சுவருக்குப் பின்னால் இருக்கும் ஆரஞ்சு மரக் கிளைகளில் பெண் ஆடைகளை விட்டுச் செல்கிறார்.”

“உனக்கு ரொம்ப போர் அடிக்கிறது என நினைக்கிறேன், பூமோ. உனக்கு நிறைய நேரம் இருக்கிறது.”

“நீ ஏன் இப்போதெல்லாம் என்னைப் பார்க்க வருவதில்லை? நீ மறுபடியும் அந்த ஜெர்மன் பெண்ணிற்கு எழுதுகிறாயா? உன் ஆங்கிலம் இன்னமும் மோசமாகத்தான் இருக்கு. அப்படி என்ன நீ அந்த பெண்ணிடம் பேசிட முடியும்?” வார்த்தைகள் என் இதயத் துடிப்பை விட வேகமாகக் கட்டுக்கடங்காமல் கொட்டியது.

அந்த மாலை தோண்டுப்பிடம் மாலை பிரார்த்தனைக்கான மணியை தான் அடிப்பதாகக் கூறினான் கர்மா. பின், என் அறைக்கு வந்தான்.

“என் கிராமத்தில் இன்னமும் லாமா வாங்சுக் பற்றிப் பேசுகிறார்கள்,” என்றான். அவன் கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு கதவோரமாக நின்றிருந்தான். பின் மெதுவாகக் கால்களை மடக்கி தரையில் அமர்ந்தான், பாதி வெளியே பாதி உள்ளே.

நான் நடந்து சென்று அவனுக்கு எதிரே அமர்ந்தேன்.

“அவர் சரியாகிட்டாரா? ஒரு ஆணாக மாறிவிட்டாரா? என்று இன்னமும் என்னிடம் கேட்கிறார்கள்,” அவன் தொடர்ந்தான். “இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு சம்பவம் நடந்தது. லாமாக்களில் ஒருவர் குளியலறையில் அவரை பெண் ஆடையில் பார்த்துவிட்டார். இன்று மதியத்தைப் பற்றி தலைமை லாமாவிற்கு தெரிய வந்தால் நன்றாக இருக்காது.”

“நான் எதுவும் பார்க்கலை,” பொய் சொன்னேன். “உன் கூட பேசுவதற்கு ஒரு காரணம் தேவைப்பட்டது அவ்வளவுதான்.”

“உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு, பூமோ.” நிம்மதியில் பெருமூச்சு விட்டான்.

அடுத்து நான் செய்ததை எது என்னைச் செய்ய வைத்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதற்காக நான் ஒருபோதும் வருந்தியதில்லை. நான் முன்னால் சாய்ந்து கர்மாவின் நெற்றியிலிருந்த வடுவை முத்தமிட்டேன். அவன் இடது கையை என் தொடை மீது வைத்தேன். அவன் வலது கையை என் கையோடு கோர்த்துக்கொண்டேன். அவன் நகரவில்லை. அவன் இடது கன்னத்தை முத்தமிட்டேன், பின் வலது கன்னத்தை. கன்னக்குழியில் விளையாட சற்று நேரம் எடுத்துக்கொண்டேன். எப்போதோ பல ஆண்டுகளுக்கு முன்னால் பரிமாறிக்கொண்டதின் மிச்சமோ எனத் தோன்றச் செய்த புன்னகை அது. பிரார்த்தனை அறையைப் போன்ற மணம் கொண்டிருந்தான். தூபப் புகையின், பூமியின், உலோகத்தின் நறுமணம். பின் அவன் உதட்டை முத்தமிட்டேன். சுவாசிப்பதற்காக அவன் வாயைத் திறந்தான். என் இரு கைகளாலும் அவன் முகத்தை தாங்கிக்கொண்டேன். அவன் உள்ளங்கைகளை என் முதுகில் அழுத்தி அவனருகில் தள்ளினேன்.

“இன்னும் சற்று நேரத்தில் பூஜை ஆரம்பித்துவிடும் கர்மா,” என்று ஒரு குரல் இரண்டடி தூரத்தில் கேட்டது. அது லாமா வாங்சுக்குடையது.

கர்மா எழுந்து அங்கியை சரி செய்துகொண்டு என்னைத் திரும்பி பார்க்காமல் லாமா வாங்சுக்கைக் கடந்து வேகமாக படியில் இறங்கி ஓடினான்.

“லாமா வாங்சுக், இது அவனுடைய தவறில்லை,” என்று தொடங்கினேன். “இதற்கு முன்னர் இப்படிச் செய்தது இல்லை. நான் சும்மா… லாமா வாங்சுக், தயவுசெய்து யாரிடமும் சொல்லிடாதீங்க,” நான் சொன்னேன். என் சொற்கள் என் தொண்டையிலேயே தங்கிவிட்டன. திடீரென சோர்ந்து போனேன். வாசற்கதவில் சாய்ந்து லாமா வாங்சுக்கிற்குப் பின்னால் தூரத்தில் பார்த்தேன், கர்மா திரும்பி வருவான் என்று காத்திருந்தேன்.

நான் அச்சத்திலிருக்கும் போதெல்லாம் என் அம்மா செய்வதைப் போல லாமா வாங்சுக் என் தலையைக் கோதினார். “நிச்சயமாக…,” லாமா வாங்சுக் சொன்னார். “கண்கள் காண்பதைவிட இதயம் ஆழமாகப் பார்க்கிறது, பூமோ!”

மறுநாள் மதியம் லாமா வாங்சுக் என் வகுப்பிற்கு வரவில்லை. குட்டித் துறவிகளுக்கு முகம் வரைந்து பாகம் குறிப்பது எப்படியென பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது – மூக்கு, கண்கள், காதுகள், வாய் – கர்மா வகுப்பறையின் கதவைத் தட்டினான். குட்டித் துறவிகளை வண்ணம் தீட்டச் சொல்லிவிட்டுத் தகரக் கூரையின் வெளியே அவன் எதிரே நின்றேன். அவன் சிறியதாகத் தோன்றினான், சூரிய வெளிச்சத்தில் கண்கள் சுருங்கியிருந்தன. அவன் கன்னங்களைத் தொட முயன்றபோது விலகினான்.

“இங்கே வேண்டாம்,” என்றான். சூரிய ஒளியிலிருந்து தன்னை மறைப்பதற்காகப் போர்வையைத் தலையில் சுற்றிக்கொண்டான். “நான் தலைமை லாமாவிடம் லாமா வாங்சுக் பற்றிச் சொல்லிவிட்டேன். வெளியே, நீ சொன்ன ஆரஞ்சு மரக்கிளையில் ஒரு பை நிறைய பெண் ஆடைகள் இருப்பதைக் கண்டேன். அப்படியென்றால், நேற்று நீ அவரைப் பார்த்தது உண்மைதான்.”

“தலைமை லாமா என்ன சொன்னார்?” அவனிடமிருந்து தள்ளி நின்று கேட்டேன்.

“இன்று காலை பிரார்த்தனைக்குப் பிறகு லாமா வாங்சுக்கை இவ்விடத்தை விட்டு போகச் சொல்லிவிட்டார்கள்.”

“இங்கிருந்து லாமா வாங்சுக்கை வெளியேறச் செய்துட்டியா?” கர்மாவை தூரத் தள்ளினேன்.

“நேற்று அவர் நம் இருவரையும் ஒன்றாகப் பார்த்ததை நீ எப்படி மறந்துபோனாய்? இல்லையென்றால் அவர் என்னை இங்கிருந்து வெளியேற்றியிருக்கக்கூடும்!” உலர்ந்த செஞ்சிவப்பு திராட்சையைப் போலச் சுருங்கி என் முன்னால் அமர்ந்துகொண்டான்.

லாமா வாங்சுக் தன்னுடைய தண்ணீர் பாட்டிலையும், பொருட்களையும் தூக்கிக் கொண்டு போவதைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். அவர் எங்கே போயிருப்பார்? தன் அடிடாஸ் செருப்பில் நகரத்தில் எங்காவது நடந்துகொண்டிருப்பாரா? “லாமாக்களெல்லாம் தன்னை விட அடுத்தவர் நலனில்தான் அக்கறை கொள்ள வேண்டும், இல்லையா?” என்று கேட்டேன். கர்மாவின் கால் நகங்களில் கருப்பாக அழுக்கு படிந்திருப்பதை முதன்முறையாக கண்டேன்.

“நான் என் உறுதிமொழியைக் காக்கத்தான் முயற்சி செய்தேன், பூமோ,” எழுந்து நின்று சொன்னான். நழுவிச் சென்ற வெண்கயிற்றைக் கைகளில் சுற்றிக்கொண்டான். இதுவரை கேட்டதே போதும் என்று முடிவு செய்தேன், வகுப்பறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டேன்.

“மிஸ். இங்கே ரொம்ப சூடாக இருக்கு,” மனோஜ் சொன்னான். வரைவதை நிறுத்தி தன் பென்சில் முனையால் கதவைச் சுட்டிக்காட்டினான்.

பின்னர் நான் எலுமிச்சை மரத்தடியில் அமர்ந்திருந்தேன், கோடைகாற்றில் மல்லிகையின் மணம் கலந்திருந்தது. லாமா வாங்சுக் தன்னுடைய பாயை வெளியே விட்டுச் சென்றிருப்பதைப் பார்த்தேன். நடை போவதற்காக மடாலயத்தின் வாயிலுக்கருகே வந்தேன். ஆனால் பழைய அரசமரத்தடியில் கர்மா இருப்பதைக் கண்டேன். அருகில் சென்றபோதுதான் அவன் அழுதுகொண்டிருப்பதை உணர்ந்தேன். சில வருடங்கள் கழித்து பெற்றோருடன் என் போபோவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக கோம்போவிற்கு வந்தபோது, லாமா வாங்சுக் வெளியேறிய சில மாதங்களிலேயே கர்மாவும் இங்கிருந்து சென்றுவிட்டதை அறிந்துகொண்டேன். கர்மா ஒருவேளை ஒழுக்கத்திற்குக் கட்டுப்படும் திறன் இல்லாதவனாக இருக்கலாம் என்று மற்ற லாமாக்கள் ஊகித்தனர்;  பகட்டான பொருட்களின் மீது அவனுக்கு பற்று இருந்தது, இணையம், தொலைபேசிகள், மோட்டார் சைக்கிள்கள். ஆனால் லாமா வாங்சுக்கின் வெளியேற்றத்திற்குக் காரணமான தன்னை அவன் மன்னிக்கும் நிலைக்கு ஒருபோது வரவில்லை என்று எண்ணுகிறேன். என்னைப் பொருத்தவரை, நான் அங்கிருந்து எதிலும் சிக்கிக்கொள்ளாமல் வெளியே வந்ததில் நிம்மதியடைந்தேன்.

லாமா வாங்சுக் வெளியேறிய இரண்டு நாட்களுக்குள் நானும் அங்கிருந்து வந்துவிட்டேன். என்னை அழைத்துச் செல்ல வந்தபோது, ஏன் திடீரென செல்ல விரும்புகிறேன் என்று அம்மா கேட்டாள். ஏதாவது நடந்ததா? “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” என்று பதிலளித்தேன். பின் கண்ணாடியில் அவள் கண்களைப் பார்த்து “எனக்கு வீட்டு ஞாபகம் வந்துவிட்டது,” என்றேன். அரதப் பழசான பொய்தான் என்றாலும் என் அம்மாவின் கண்கள் பணிந்தன.

அதன்பின் நான் கர்மாவைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. என்னை நனைக்காமல் சென்ற கோடை மழையைப் போல ஆனான். ஒருசில முறை குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான், பெரிதாக வேறொன்றும் இல்லை. ஆனால் லாமா வாங்சுக்கின் உருவம் – கைகளுக்கு கீழ் பைகளை அதக்கிக்கொண்டு, அடிடாஸ் செருப்புடன் சுற்றி வரும் உருவம் மட்டும் என் மனதை விட்டு அகலவில்லை. என் பெற்றோர் கோம்பாவிற்கு செல்லும்போதெல்லாம் லாமா வாங்சுக் பற்றி யாராவது ஏதாவது கேள்விப்பட்டார்களா என்று கேட்பேன். “ஆனி லாமா பற்றிக் கேட்கிறாயா?” என்று அம்மா உறுதிப்படுத்திக்கொண்டாள். “ஓ.. அவர் தமேலில் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். யாருக்குத் தெரியும். ஒருவருக்கும் அதில் அக்கறையில்லை?”

நான் எஸ். எல். சி. தேர்ச்சி பெற்ற பின் என் பெற்றோர்கள் என் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார்கள். நான் அடிக்கடி தமேல் செல்ல அனுமதித்தார்கள். பள்ளிக்குப் பிறகோ அல்லது அவ்வப்போது பள்ளி நேரத்திலேயோ கூட நான் நண்பர்களுடன் அந்த துருக்கிய விடுதிக்குச் சென்றேன். மயங்கச் செய்யும் ஒளியின் அடியில் பள்ளிச் சீருடையில் அமர்ந்திருப்போம். ஒவ்வொரு முறையும் தமேலிற்குச் செல்லும்போது, நான் லாமா வாங்சுக்கை எங்காவது அடையாளம் காணுவேன் அல்லது அவரது பெயரைக் காதால் கேட்பேன் அல்லது ஒப்பனை பூசிய முகத்திற்குப் பின்னாலிருந்து வெளிப்படும் அவர் புன்னகையைக் காண்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றால் நான் பொய் சொன்னவள் ஆவேன். பியரும், நறுமண பிசினும், ஷீஷா ஹூக்காவினாலும் புகை மேகங்கள் மூண்ட ஒரு மதியத்தில்தான் ஒருவழியாக நான் லாமா வாங்சுக்கைப் பார்த்தேன்.

ஒருநாள் வெகுநேரமாகி விட்டது. துருக்கிய விடுதிக்கு எதிரே, மஞ்சள் குர்தா அணிந்த மழித்த தலையுடன் ஒரு பெண் பாரிலிருந்து வெளியே வந்து தன் தோழிகளிடமிருந்து விடை பெறுவதைக் கண்டேன். கூட்டத்தில் அவளது தலை மேலும் கீழும் ஏறி இறங்கியது, அவளது காதணிகள் அவள் கன்னங்கள் மீது மோதின. அது லாமா வாங்சுக்காக இருக்கும் என்று நம்பினேன். திரும்பிப்பார்ப்பாள் என்ற நம்பிக்கையில் நான் அவளைப் பின்தொடர்ந்தேன். அவளுக்கு இரண்டு மீட்டர் பின்னால் இருந்தபோது, நான் நிதானித்தேன். என் கருப்புக் கண்ணாடியைக் கீழிறக்கி என் பார்வையை அவள் தலைமீது பதித்தேன். கண்ணாடி ஜன்னல்களிருக்கும் கடைகளைக் கடக்கும்போது நான் அதில் அவள் பக்கவாட்டு முகம் தெரிகிறதா என்று பார்த்தேன். என் பள்ளி சட்டையை வெளியே எடுத்து விட்டேன், டை கட்டை அவிழ்த்து விட்டேன்.

அவள் ஒரு சந்தில் திரும்பி, குறுகிய பாதையில் நடந்து சென்று நீல நிற பலகை வைத்திருந்த கட்டிடத்திற்குள் நுழைந்தாள். நான் உள்ளே செல்வதற்காக இரண்டு நிமிடங்கள் காத்திருந்தேன். அறிவிப்புப் பலகையை நெருங்கிச் சென்றபோது அதில் எழுதியிருந்ததைப் படித்தேன்: “ஶ்ரீ தேவியின் பரதநாட்டியம்”. பளிச்சென மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. அதன் பக்கத்தில் பாலிவுட் நடிகையின் பெயர் கொண்ட ஒருவரின் சுவரொட்டி இருந்தது. அவள் மார்பிற்கு நேராக அவளது உள்ளங்கைகள் இணைந்திருந்தன. புன்னகை செய்யும் அவளின் விரல்களின் மேலே “நல்வரவு” என்று நேபாள மொழியில் நீண்டிருந்தது.

பலகையின் அடியில் நுழைவாயில் வழியாக உள்ளே சென்றேன், செங்குத்தான படிக்கட்டுகள் என்னை வரவேற்றன. என் கண்களை இருட்டிற்குப் பழக்குவதற்காகக் கறுப்புக் கண்ணாடியை நெற்றியின் மேல் ஏற்றி விட்டுக்கொண்டேன். மரத்தாலான படிக்கட்டுகளில் ஏறிச் சென்றபோது, ‘நாக் சாம்பா’ தூபத்தின் நறுமணத்தை நுகர முடிந்தது. அதைச் சுற்றி சுழன்றுகொண்டிருந்தது உள்ளிருந்து வந்த தபலாவின் ஓசைகள். முதல் மாடியை அடைந்ததும் கதவிற்குப் பின்னால் குனிந்து என் வலது கண்ணால் மட்டும் பார்த்தேன்.

பெரிய ஜன்னல்கள் வழியாகச் சூரியன் வடிந்துகொண்டிருந்தது. சுவரின் ஓரமாக மெத்தைகளும் திண்டுகளும் போடப்பட்டிருந்தன. அவற்றில் கால்களைக் குறுக்காக மடித்து பெண்கள் அமர்ந்திருந்தனர். கூர்மையான ஆண் தாடைகள், பல வருட மழித்தலினால் கருப்பேறியிருந்தன. அவர்கள் போட்டிருந்த மிகப் பெரிய சலங்கைகள் அவர்கள் கால்களைத் தரையிலிருந்து சற்று உயர்த்திக் காட்டின. வெள்ளை நிற குர்த்தா அணிந்திருந்த ஒரு பெண் பிளேயரிலிருந்து வந்த பாடலின் தாளத்திற்கேற்ப தட்டித் துள்ளிச் சுழன்று வருவதை அவர்கள் பார்த்திருந்தனர்.

வரிசையின் இறுதியில், ஒரு மூலையில், லாமா வாங்சுக் அமர்ந்திருந்தார். அவரது சலங்கைகள் பெரிய மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இளைமையாகத் தெரிந்தார். அவர் உதட்டின் வலது மூலையில் புதியதாக ஒரு மச்சம் தோன்றியிருந்தது. அதற்கு அவர் இளஞ்சிவப்பு வண்ணம் பூசியிருந்தார். ஒப்பனை செய்யப்பட்டிருந்த அவரது கைகளால் அடர்ந்த தன் தலையைக் கோதிக்கொண்டார், அவரது தோள்கள் ஓய்ந்து சரிந்திருந்தன. மெல்லிய திரையெனப் புன்னகையை அவர் முகம் அணிந்திருந்தது. அறையின் மையத்தில் இருந்த பெண்ணை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். அவள் நடன அசைவுகளைக் கூர்மையாகக் கவனித்தார். அவளுடைய குதிகால் ஒவ்வொருமுறையும் தரையில் படும்போது அவர் அதை எண்ணினார். தா…தய்… தய்… தக்க. முன்னங்கால்களைத் தட்டும்போது, அஹ்..தய்..தய்..தக்க. அவள் கைகள் மடிப்பதையும் , திறந்து மூடுவதையும், மணிக்கட்டுகளைச் சுழற்றி அவற்றை மார்புக்கு உள்நோக்கி கொண்டு வந்து  மீண்டும் வெளியே எடுப்பதையும் பிரதி எடுத்துக்கொண்டிருந்தார்.

அவள் முடித்ததும் ஒலி நாடா மீண்டும் சுற்றப்பட்டத்து. அடுத்து லாமா வாங்சுக்.

அவர் எழுந்து வந்து மரியாதை செலுத்தும் விதமாக மேடையை விரல்களால் தொட்டார், உள்ளங்கைகளை நெஞ்சுக்கு நேராகக் கோர்த்தார். கண்களை மூடியவாறு, அவர் தாடையின் கீழே, இரண்டு மயில்கள் முத்தமிடுவதைப் போல தன் இரண்டு ஆட்காட்டி விரல்களால் கட்டை விரல்களின் நுனியைத் தொட்டார். குதிகால்கள் தரையில் அமிழ, கால்களை வளைத்து  தன் உடலைத் தரையை நோக்கிக் கீழிறக்கினார். தபலாக்கள் தாளமெழுப்ப, வெள்ளை குர்த்தாவில் இருந்த பெண் பாடத் தொடங்கியதும், அவர் கண்களைத் திறந்து நதி தேவதையாக உருமாறினார். கங்கைக் கரையில் ஒரு இளைஞன் நதி தேவதையைக் கண்டு, மையல் கொண்டு அவள் மேல் காதலில் விழுந்த கதையை நடனமாடினார். வலது கையால் லாமா வாங்சுக் தனது இடது மணிக்கட்டைப் பற்றி, கற்பனை மனிதனின் இழுப்பிலிருந்து வெட்கி நழுவி, ஒரு நதி தேவதையாகப் புன்னகைத்து, அக்கையிலிருந்து தன் முகத்தை முடிந்த மட்டும் தூரமாகத் திருப்பிக்கொண்டார். தேவதை அவ்விளைஞனின் காதலுக்கு எதிராகக் கடிந்துகொண்டாள், விலகிப் போகச் சொன்னாள். அவன் மீது அவளுக்குக் காதல் தோன்றிய கணமே தான் மறைந்து போய்விடுவேனென்று அவனிடம் கூறினாள். ஆனால் அவன் உறுதியாக இருந்தான். தினமும் கங்கைக் கரையில் தனிமைத் துயர் பொங்கும் பாடல்களைப் பாடி வந்தான்.

லாமா வாங்சுக் தேவதையாகவும் இளைஞனாகவும் மாறிக்கொண்டேயிருந்தார்; தேவதையாக நடிக்கும்போது கண்களை படபடவென அடித்து முகத்தை மென்மையாக அமைத்து இளகிய புன்னகையை வழங்கினார். கண்களை அகலத் திறந்து கூர்மையான பார்வைகளால் இளைஞனாக மாறினார். இறுதியில் தேவதையும் காதலில் விழுந்தாள், தன் வாக்கின்படி அவள் மாயமாய் மறைய இளைஞன் கங்கையில் மூழ்கினான்.

தபேலாவின் இறுதி தாளங்களுக்கு லாமா வாங்சுக் மின் விசிறியை விட வேகமாகச் சுழன்று இசை நின்றதும் தரையில் நீண்டு விழுந்தார்; காதலர்கள் சார்பாகத் தேம்பி அழுவதைப் போல அவருக்கு வேகமாக மூச்சு வாங்கியது.

நான் கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருப்பதையும் மறந்து கைகள் தட்டினேன்.

லாமா வாங்சுக் எழுந்து நான் நின்றிருந்த படிகளின் இருளைத் துளைத்து என்னைப் பார்ப்பதற்காகக் கண்களைச் சுருக்கினார். அறையிலிருந்த மற்றவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். என்னிடமும் ஆசிரியரிடமும் ஏதேதோ கேட்டார்கள்: யார் அது? அற்புதமாக இருந்தது. எவ்வளவு சோகம். யார் அங்கே? மேடம், எப்படி அவர் அந்தக் கடைசி சுழலை ஆடினார்? வகுப்பில் சேர விருப்பம் என்றால் உள்ளே வாங்க.

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் நரேன்

லாமா வாங்சுக் தன் இடுப்பில் இருந்த சால்வையை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக்கொண்டார். பின்னர் வாசலை நோக்கி நடந்து வந்தார். நான் எழுந்து அங்கிருந்து வெளியேறிட விரும்பினேன், ஆனால் லாமா வாங்சுக்கின் சலங்கை மணிகளின் ஓசை என்னை விறைத்து நிற்கச் செய்துவிட்டது. அவர் என்னை நெருங்கி வருகையில் லாமா வாங்சுக்கின் சலங்கை ஒலியின் சப்தம் மேலும் மேலுமென பெருகி எச்சரிக்கை மணியென ஒலித்தது. அவர் கதவைத் திறந்து நான் அமர்ந்திருந்த இருளின் மீது வெளிச்சம் பாயச் செய்தார். அவர் என்னைக் கண்டபோது நான் வாயின் மீது கைகளை வைத்திருந்தேன், விரல் நுனிகள் கண்ணீர் தோய்ந்த என் கன்னங்களின் மீது துடித்துக்கொண்டிருந்தன.

ஏதோ என்னைக் காண்பதற்காகவே காத்திருந்ததைப் போலப் புன்னகைத்து அழைத்தார், “பூமோ – “

                                                                        *** 


[1] கோரா – புனித மலையை வலம் வருதல் – திபெத்திய மடாலயம் இருக்கும் மலையை வலம் வந்து செய்யப்படும் பிரதட்சனை வழிபாட்டுமுறை

நரேன்: தமிழ்விக்கி

நரேனின் முந்தைய ஆக்கங்கள்

பகுதி 1: “சமகால பெண் படைப்பாளிகளின் மொழியாக்க சிறுகதைவரிசை” – ஜெனிபர் நன்சுபுகாமக்கும்பி (உகாண்டா)

பகுதி 2: “சமகால பெண் படைப்பாளிகளின் மொழியாக்க சிறுகதைவரிசை” – சுனந்தா பிரகாஷ் கடமே (கன்னடம்)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *