விசிறியடிக்கப்பட்ட வண்ணக்கலவைகள்: கமலதேவி

(பகுதி 2: அம்பையின் படைப்புலகம்: கமலதேவி)

எழுத்தாளர் அம்பை

அதிகாலையில்
கலைத்துவிடுகிறது காற்று
இனி
அது வேறொரு குளம்

அம்பை அவர்களின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ என்ற சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தபின் கதைகளை மனதிற்கு ஓட்டிப்பார்த்த போது மேற்கண்ட வரிகள் மனதில் ஓடியது. ‘மனம் திசைமாறும் தருணங்களின்’ கதைகள் என்று இவற்றை சொல்லலாம்.

சிறகுகள் முறியும் என்ற கதையில் திருமணமான புதிதில் தானே சமைத்து அனுப்பும் உணவு பற்றி சாயா பாஸ்கரனிடம் கேட்கும் போது வெளியில் உண்பதை விட பணம் மிச்சம் என்று அவன் சொல்கிறான். அவளின் திருமணம் பற்றிய கனவுகள் மீது விழும் முதல்கல் அது.

இந்தக்கதையில் கணவன், மனைவி,பணம், இல்லறத்தில் பெண்ணுக்கு இருக்கும் சங்கடங்கள் மட்டும் பேசப்படவில்லை. ஒரு பறவை தன்னை அறியாமலேயே பறவையாய் இல்லாமலாகும் தருணத்தை கதைத் தொடுகிறது. இதில் சாயா திருமணத்திற்கு பின் தன் இயல்பிலிருந்து தன்னை தானே நழுவவிடுகிறாள். அந்த பதட்டம் கதை முழுவதும் அந்தரங்கமாக அவளுடன் அவள் நடத்தும் விவாதமாக விரிகிறது.

அண்மையில் சமயபுரம் கோவிலுக்கு சென்றோம். சுற்றி தடுக்கப்பட்ட கம்பி தடுப்புகள் வழியே சுற்றி சுற்றி அம்மனை பார்க்க சில மணி நேரங்களானது. ஒரு நேர் வழியை எத்தனை மடிப்புகளாக்கி வைத்திருக்கிறோம். மக்கள் நெருக்கத்தால் அப்படி செய்ய வேண்டி வருகிறது. எனக்கு பின்னால் ஒரு அம்மாள் பேசிக்கொண்டே இருந்தார். திரும்பி முகத்தைப் பார்த்தேன். முகம் தெளிவாக இருந்தது. ஐம்பது வயது இருக்கும். வாய் ஓயாது தனக்குத்தானே புலம்பிக்கொண்டே இருந்தார். முதல்நாள் இந்தத்தொகுப்பை வாசித்து முடித்திருந்தேன். சிறகுகள் முறியும் கதையில் வரும் சாயா மனதிற்குள்ளாக இப்படிதான் ‘சட்டம்.. சட்டம்… சட்டம் போடனும்’ புலம்பிக்கொண்டே இருக்கிறாள். நேர் வழியை நெருக்கடி காரணமாக மடக்கி மடக்கி தடுத்து வைத்திருப்பதைப் போல பந்தங்களை, குடும்ப உறவுகளை சிக்கலாக்கி வைத்திருக்கிறோம். எல்லா பக்கமும் நெருக்கடிகளால் ஆன குடும்ப அமைப்பால் ஒரு பெண் வாழ்க்கை முழுதும் குடும்பம் என்ற ஒரே புள்ளியை சுற்றி சுற்றி வருவதில் உள்ள ஆயாசம் இந்தக்கதைகளில் உள்ளது என்று நினைத்துகொண்டேன். குடும்பம் என்ற ஒரே ஒரு திசை நோக்கியே வாழ்நாள் முழுவதும் சலிக்க சலிக்க செல் என்று பெண்ணை இந்த சமூகம் செலுத்துகிறது என்பதை வெவ்வேறு பெண்களின் வழி அம்பை எடுத்து எழுதுகிறார்.

‘இது மிகப்பெரிய யுத்தம். நம் அடையாளத்தை வேறொருவர் உருவாக்குவார்’ என்று ஒரு கதாபாத்திரம் மதம் பற்றி தன் கருத்தை சொல்லும். அதை பெண்ணுடனும் இணைத்துக்கொள்ள முடிகிறது. இதே போல மல்லுக்கட்டு,காவு நாள், அசர மரணங்கள் போன்ற கதைகளையும் சொல்லலாம்.

பெரும்பாலான கதைகளில் கதாப்பாத்திரங்கள் இசை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். பெண்கள் வீணையிசை கற்றவர்களாக, அதில் லயிப்பவர்களாக இருக்கிறார்கள். வீணையும் இசையும் ஒரு குறியீடு போலவே இந்தக்கதைகளில் உள்ளன. அவளின் இயல்பும்,அவள் உடலுமாக வீணை வருகிறது. அசரமரணங்கள் கதையில் ஐந்தடிக்கும் குறைவான கருத்த செப்பு உடல் கொண்ட கதை சொல்லியின் அம்மாவுடன் கறுப்புமரத்தில் கடைந்த வீணை ஆறு வயதிலிருந்து இறுதி வரை உடன்வருகிறது. அவளின் நீண்ட வாழ்வின் இடையில் பத்தாண்டுகள் வீணையை வாசிக்காமல் வைத்துவிடுகிறாள். அடுத்தக்கதையில் ஒரு பெண் வீணையின் தந்தியை தானே அறுத்து விடுகிறாள். இன்னொரு கதையில் சபையில் முன்னால் பாட வேண்டிய ஒருத்தி வீணையுடன் பக்கவாத்தியமாக பின்னால் அமர்கிறாள். இதற்கு காரணமாக இருப்பவர்கள் அவர்களின் கணவர்கள்.

மூலையில் சாத்தி நிறுத்தி வைக்கப்பட்ட வீணை,அழகான பட்டுத்துணி உரை தைத்து போடப்பட்ட வீணை,இசைக்காமல் சந்தன குங்கும் வைத்து வணங்கப்படும் வீணை,தவறுதலாக உடைந்த வீணை என்று இந்தக் கதைகளை வாசிக்கும் போது ஒரு கட்டத்தில் இந்த வீணைகள் எல்லாம் அந்தப் பெண்களாக தெரிகின்றன.
அசர மரணங்களில் உடைந்த வீணை கோதாவரியில் விடப்பட்டு அது பாறையில் மோதி சிதறுவதை வாசிக்கும் போது நாமும் வெறுமையை தொடுகிறாம். அது ஒரு பெண்ணின் நீண்ட வாழ்க்கை தரும் வெறுமை. நாவல்கள் தரும் அந்த வெறுமையை சிறுகதையில் அம்பையால் தொடமுடிந்திருக்கிறது.

காவுநாள் கதையின் நாயகி ஒரு பாடகி. பாடகி என்பதால் பணக்கார குடும்பத்தில் மருமகளாக தேர்ந்தெடுக்கப் படுகிறாள். அரசியல் சதுரங்கத்திலும், குடும்பத்திலும் பகடையாகிறாள். பிள்ளைகள் வளர்ந்தும் அவளை புரிந்து கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியறுகிறாள். பெண் கலைஞர்கள் இளமையில் தங்கள் திருமணவாழ்வில் எடுக்கும் தெளிவில்லாத முடிவுகளை அம்பை மறுபடி மறுபடி தன் கதைகளில் தொட்டுக் காட்டிக்கொண்டே இருக்கிறார்.

அம்பை கதைகளில் குழந்தைகள் முக்கியமானவர்கள். கிட்டதட்ட அனைத்து கதைகளிலிலும் குழந்தைகள் இருக்கிறார்கள். நான் வேறெந்த எழுத்தாளரின் கதைகளிலும் இவ்வளவு குழந்தைகளை பார்த்ததில்லை. கு.அழகிரிசாமி கதையில் வரும் குழந்தைகள் நினைவிற்கு வந்தாலும் கூட இந்தத்தொகுப்பில் சிறுவர் சிறுமியர், குழந்தைகள் தங்களின் இனிமையுடன், வெகுளித்தன்மையுடன், வெளிச்சத்துடன் இருக்கிறார்கள். கதைகளில் பேருந்து இயல்பாக பெரியவர்கள் செய்யக்கூடிய வேலைகளை தங்களே எடுத்து செய்யும் சிறுவர்களின் சித்திரங்கள் நம்மை பாதிக்கின்றன.

வற்றும் ஏரியின் மீன்கள் என்ற கதையில் கதைசொல்லி தன் மிச்ச வாழ்வின் பாதையை தேர்ந்தெடுக்க காரணமாக ஒரு சிறுமி இருக்கிறாள். வாகனம் என்ற கதையில் பெரியவர்கள் கதை சொல்லியை சோர்வாக்கும் போது குழந்தைகளே அவள் சைக்கள் பழக உற்சாகப்படுத்துகின்றன. ‘ஆன்ட்டிஜீ அவ்வளவு தான் ஓட்டுங்க… ஓட்டுங்க’ என்று அதிகாலையில் குழந்தைகள் பின்னால் இருந்து சொல்லும்போதே அவள் சைக்கிளை ஓட்ட தொடங்கிவிடுகிறாள். குழந்தைகள் பெண்களை எளிதாக தங்கள் உலகிற்குள் அனுமதிக்கிறார்கள். அம்பையின் கதையில் வரும் குழந்தைகள் அறியாத பெண்களுடன் வெகு இயல்பாக மௌசீஜி,ஆன்டீஜீ என்று ஒட்டிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு கதையிலும் இந்த வெளிச்சம் இருக்கிறது.

நிலவைத் தின்னும் பெண் கதையில் வரும் இரட்டை வாழைப்பழங்களை போன்ற சிதைக்கப்பட்ட இரட்டை கருக்கள் முதல், கருக்கலைப்பில் தப்பி பிறந்த கால் சூம்பிய சிறுவன் வரை பல குழந்தைகள் நம்மை தொந்தரவு செய்பவர்கள். தாயை பிரிந்த குட்டியானை காரணம் தெரியாது சோர்வாக இருக்கும் சித்திரம் கூட கதையில் உண்டு. அம்பையின் புனைவுலகில் குழந்தைகளுக்கான தவிர்க்கமுடியாத இடம் இருந்து கொண்டே இருக்கிறது.

சென்ற நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் திருமணம் என்ற நிகழ்வு பெண்களின் வாழ்வில் எப்படியான அழுத்தத்தை கொண்டிருந்தது என்ற பேசுபொருள் கொண்ட கதைகள் இவை. அந்த காலகட்டத்தில் தான் மத்தியதர குடும்பத்து பெண்கள் படித்தார்கள், இசைக்கற்றார்கள். அவர்களின் மனநிலையில் குடும்பத்தை தாண்டிய வெளிச்சம் விழுந்தது. அதற்கு முன்பே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் சமூகம் இவர்களை அதற்கு முன் இருந்த காலகட்டத்து பெண்களை போலவே நடத்துகிறது. இவர்களால் அதை ஏற்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் தங்களுக்குள்ளே ஒரு மனப்போராட்டத்தை எதிர்கொள்கிறார்கள்.
மல்லுக்கட்டு கதையில் கலைதேர்ச்சியில் தன்னை விட உயரத்தில் உள்ள செண்பகத்தை, சண்முகம் திருமணபந்தத்தின் மூலம் பிணையாக்குகிறான். தான் பாடும் கச்சேரிகளில் பின்னால் இருந்து வீணை வாசிக்கும் பக்கவாத்தியமாகவும், பால்கூஜா எடுத்துத்தரும் ஆளாகவும் நிறுத்துகிறான். திருமணம் நிச்சயம் ஆனவுடன் வீட்டில் இருந்தால் போதும் என்று சொல்பவனை செண்பகம் எதிர்ப்பதில்லை. குருவான அவனுடைய அப்பாவிடம் இருந்து இவள் கடைசிவரை புதுப்புது இசை நுணுக்கங்களை கற்று மேலும் தேர்ச்சி பெறுகிறாள். இறுதியில் கச்சேரியில் அவள் வெளிப்படும் தருணம் அழகானது.

காட்டில் ஒரு மான் கதையில் எல்லா மிருகங்களும் மகிழ்ச்சியாக இருக்கிற காட்டிலிருந்து வழி தவறி வேறொரு காட்டிற்குள் புகுந்து விட்ட மானின் கதையை தங்கம் அத்தை பிள்ளைகளுக்கு சொல்கிறாள். எதற்கெடுத்தாலும் பதறும் அந்த மான் மெல்ல மெல்ல காட்டிற்கு பழகுகிறது. துயரத்தை பழக்கிக்கொள்ளுதல் மூலம் பதட்டத்தை வெல்கிறாள்.

எனக்கான அடையாளத்தை யாரோ தரும் யுத்தம் என்று சொல்லும் ஸகீனா அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்து போகிறார். வன்முறைக்கு எதிரான போராட்டத்தை வாழ்நாள் முழுவதும் எடுத்து செல்லும் தோழியர்கள் தமிழ் சிறுகதைக்கு முக்கியமானவர்கள். இந்தக்கதை வடஇந்தியாவில் நடக்கிறது. இந்து முஸ்லீம் பிரச்சனைதான் கதைக்கரு. ஒன்றாயிருக்கும் மக்கள் தங்களுக்குள்ளேயே சந்தேகப்படுவதும், எதிர்பாரா நேரத்தில் வன்முறை வெடிப்பதுமான சூழலில் மனநலம் தடுமாறிப்போகும் பெண்களையும், சட்டென்று இறந்து போகும் உறவுகளும், நட்புகளும், வலிகளுடனும் ரத்தத்துடன் வருகிறார்கள்.

அம்பை சில கதைகளை பயணம் என்று தலைப்பிட்டு எத்தனையாவது பயணம் என்று குறிப்பிடுவார். பயணம் 7 என்ற கதையில் ரூப்மதி என்ற பெண் கணவனிடம் கோவித்து கொண்டு பிறந்த ஊருக்கு செல்ல ரயிலடிக்கு வருகிறாள். ஆனால் ஏறிச்செல்லவும் இல்லை. கணவன் அழைத்துப்போக வருவான் என்று காத்திருந்து கடைசி ரயிலும் சென்றுவிடுகிறது. முன்பின் அறிமுகமில்லாத மௌசீஜி அவளை வீட்டிற்கு கொண்டு சென்று விடுகிறாள். அந்த மௌசீஜி வெவ்வேறு வயதுகளில் வெவ்வேறு ரூபங்களில், இந்தத்தொகுப்பில் உள்ளனர். இந்த தொகுப்பின் அடுத்த முக்கியமான சரடு இந்த மௌசீஜீக்கள். பயணம் 20 என்ற கதையில் காதல் திருமணம் செய்து கொண்ட இந்து முஸ்லீம் தம்பதிகளுக்கு நிகழும் வன்முறை அழகான வாழ்வை குலைத்துப்போடுகிறது. அம்பை இந்து முஸ்லீம் கலவரங்களை தன் கதைகளில் தொட்டும் மையப்படுத்தியும் எழுதுகிறார். தலைமுறை தலைமுறையாக ஒன்றாக வாழும் நண்பர்களுக்குள் நிகழும் விலகல்கள் தரும் துக்கத்தை கதைகளில் உணர்ச்சிவசப்படாமல் கையாள்கிறார். அது வரை வேற்றுமையை உணராது வாழ்ந்து கொண்டிருக்கும் எளிய மக்களின் அன்றாடத்தில் மத வேறுபாடு வன்முறையாக பூதாகரம் கொள்கிறது. மனதளவில் ஏற்படும் பதட்டம் அவர்களை மனநோயாளிகளாக்குகிறது. அவ்வளவு எளிதாக ஒரு சிறு வன்முறை ஒரு குடும்பத்தை பறித்து கசக்கி வீசிவிடுவதன் பதட்டங்கள் இந்தக்கதைகளில் உள்ளது. வாசிக்கும் போது காந்தி மனதில் வந்து கொண்டே இருந்தார். அறத்தின் கைகளுக்கு அகப்படாத ஒன்று நிகழ்ந்து விட்டது. அதை அம்பையின் கதைகளில் அப்னா பஜாரின் சந்திற்குள், ஹுதாத்ம சதுக்கத்தில் நின்று எதிர்பாராத தருணத்தில் நெருங்கிய மனிதர்களின் இழப்பை எதிர்கொள்கிறோம்.
அதே போல கதைகளில் வரும் வடஇந்திய நிலம் முதலில் வாசிக்கும் போது ஒரு பறந்தலையும் நிலையின்மையை தந்தாலும் நீண்ட கதைகள் அந்த நிலத்தை மனதில் ஒன்றசெய்கின்றன. மெல்ல மெல்ல அடுத்தடுத்த கதைகளில் நம்மால் அந்த நிலத்திற்குள் எளிதாக செல்ல முடிகிறது. உதாரணத்திற்கு வற்றும் ஏரியின் மீன்கள் கதையில் வரும் இமயமலை பனிமுகடு மலைகிராமம் நோக்கி நாமும் பயணிக்கும் உணர்வு அந்த கதை தரும் நல்ல வாசிப்பனுபவம். கதை பேசும் பொருள் வேறு என்றாலும் பயணஅனுபவத்தை சிறுகதைக்குள் பெறமுடிகிறது.

இந்த சிறுகதை தொகுப்பில் பல கதைகளின் முக்கிய கதாப்பாத்திரமாக வரும் பெண்கள் தனியாக வாழ்கிறார்கள் அல்லது தங்களை தனியாக்கிக் கொள்கிறார்கள். இந்தத்தன்மையை இந்த தொகுப்பின் முக்கியமான சரடு என்று நினைக்கிறேன். நம் சமூகத்தில் தனிப்பெண் என்ற நினைப்புக்கூட சமூகத்திற்கு இருந்திருக்காது. விதவையாக இருந்தாலும், பிள்ளைகள் இல்லாதவர்களாக இருந்தாலும் ஏதோ ஒரு கூட்டு குடும்பத்தில் நசுங்கிக்கொண்டிருப்பதே அவர்களின் விதி. இந்தக்கதைகளில் தனிப்பெண்கள் இயல்பாக வருகிறார்கள்.

நிலவைத்தின்னும் பெண் என்ற கதையில் ஒத்த இசைரசனை உடைய சகமாணவனால் விரும்பப்பட்டு கருத்திரிக்கும் சகு என்ற பெண் மிக எதார்த்தமாக எப்போது திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்று கேட்கிறாள். உன்னை கண்ணாடியில் பார்த்ததில்லையா என்று விச்வா கேட்பான். அவனுடைய பதில் அதுவரையான அவளை கலைத்து வீசுகிறது. சகு பேராசிரியராக வயோதிகத்தில் பெங்களூர் கருத்தரங்கிற்கு வருகிறாள். கலைந்து கிடக்கும் ஹம்பியின் பாறைகள் அவளுக்கு பூதகியின் முலைகளாக தெரிகின்றது. அந்த ஊரே அவளுக்கு தாய்மையின் வடுவாக அவள் முன்னால் நிற்கும் உணர்வை கதை நமக்கு தருகிறது. சரித்திர இடிபாடுகள் நிரம்பிய அந்த ஊரின் பல்கலை கழகத்திற்கு அவள் போக வேண்டாம் என்று தான் நினைத்தாள் என்று கதை துவங்குகிறது. இடிபாடுகள் குவிந்த நகரம் ஒருகட்டத்தில் நமக்கு அவளின் குலைந்து போன தாய்மை என்ற அரூபத்தின் ரூபமாய் நம் மனதில் விரிகிறது. இதில் சகு கருப்பான பெண். அதற்கான கேலிகளை எதிர்கொள்ளும் போது அவள் தன்னை கண்ணாடியில் பார்த்து ‘நாகப்பழக்கருப்பு அழகுதானே’ என்று நினைக்கும் காட்சிகள் அழகானவை. கதைகளில் பெண்களின் இயல்பான உடல் பற்றிய கவனம் இருந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக வயிற்றில் கரு நழுங்கும் அசைவு,இசையால் அதிரும் உடல்,தொடுகையால் பதறும் உடல் என்று கதைகளெங்கும் உடல் பேசுவது நமக்கு கேட்கிறது.

வலி இருந்தது
வலி இருக்கிறது
வலி இருக்கும்

என்ற தாமஸ் ஹார்டி என்ற எழுத்தாளரின் வரிகளை சகு நினைத்துக்கொள்கிறாள். பெண்ணின் உடல் வலிகள் கதைகளெங்கும் சிதறிக்கிடக்கின்றன.

இந்த கதைகளில் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்,தானே அடைந்த ஏமாற்றங்களை, தாங்கள் வேறு வழியில்லாது செய்த பிழைகளை, இயற்கையாக ஏற்படும் தங்களின் உயிரியல் குறைபாடுகளை குழந்தைகளின் வழியே கடந்து செல்கிறார்கள். அவர்கள் தங்களை தாங்களே ஏற்றுக்கொள்வதற்கும் குழந்தைகள் மீதான அன்பு அவர்களுக்கு தேவையாகிறது. அந்தக்குழந்தை அவர்களுடையதாக இருக்க வேண்டும் என்றில்லை. உதாரணமாக நிலவைத்தின்னும் பெண்ணில் தனித்தவரான சகு எப்போதோ தன் இளமையில் கலைந்த இரட்டை கருவின் நினைவு துரத்த பல்கலைக்கழக வளாகத்தில் நிலைகொள்ளாமல் இருக்கிறார். அங்கிருக்கும் வேலைக்காரப் பெண்ணின் குழந்தையின் ஊனமுற்ற கால்களை தன் மடியில் வைத்து எண்ணெய் தேய்ப்பதன் மூலம் அந்த நிலையின்மையில் இருந்து வெளியே வருகிறார். வற்றும் ஏரியின் மீன்கள் கதையின் குமுதா, கம்பி வேலி தாண்டி நிற்கும் ஏதோ ஒரு மலைவாழ் குழந்தையுடனான ஐந்து நிமிடப்பழக்கத்தில் தன் வாழ்நாள் முடிவை எடுக்கிறாள். பூப்பெய்தாத தங்கம்அத்தை குழந்தை கூட்டத்திற்கு கதை சொல்வதன் மூலம் தன்னையே கடத்துகிறாள்.

ஆனால் அம்மா கொலை செய்தாள் போன்ற கதையில் அது வரை தேவதையாய் இருந்த அம்மா தன் மகள் வயதிற்கு வந்தப்பிறகு வேறொருத்தியாய் மாறுகிறாள். ஊருக்கு சென்ற அம்மா வந்த பிறகு எல்லாம் சரியாகும் என்று ஒவ்வொரு நாளும் தன் முதல் மாதவிடாய் காலத்தின் பதட்டங்களுடன் வலிகளுடன் மகள் காத்திருக்கிறாள். ஆனால் அம்மா வந்ததும் ‘அதுக்குள்ள என்ன அவசரம்..இது வேற இனிமே பாரம்’ என்றதும் அவளுக்குள்ளிருந்த தேவதை போன்ற அம்மா வெறும் மனித அம்மாவாகிறாள். ஈரமில்லாத சொற்கள் செய்யும் ஹதம் என்று கதையில் வருகிறது.
திருமணம் என்ற பொறுப்புணர்வு தான் இளம்மகளின் மனதை உணர விடாமல் அம்மாவை எதிர்கால பதட்டம் நோக்கி விரட்டுகிறது. இங்கே பெண்ணின் கருத்த நிறமும், திருமண பதட்டமும் அம்மாவின் அன்பின் மீது விழும் வாளாக இருக்கிறது. பெரும்பாலும் இப்படித்தான்.

மேலும் இந்த அனைத்து கதைகளிலும் பெண்களுக்குள்ளான ஒரு உணர்வுபூர்வமான ஆடல் உள்ளது. வயதெய்துவதை சிடுசிடுக்கும் அம்மாவும், குழந்தை பேறின் போது நெருக்கமாகும் அம்மாவும் ஒருத்தி தான். பயணம் 70 வதில் வரக்கூடிய மாமியார் மருமகள் எதிரும் புதிருமாக இருந்தாலும் மருமகளின் ஒழுக்கம் பற்றி மகன் பேசும் போது தடியை எடுத்து அவனை அடிக்கிறாள். கதைகளில் வரும் தோழிகள் தனித்துவமானவர்கள். ஒரு கதையில் தன் முஸ்லீம் தோழிக்காக தன் மகளை வீட்டை விட்டு ஒரு பெண் வெளியேற்றுகிறாள். உடல் நலமில்லாமல் போனால் நான் வந்து பார்க்க மாட்டேன் என்று கூறும் மகளிடம் ‘தனியா வாழத்தெரிஞ்சா தனியா சாகவும் தெரியும்’ என்கிறாள். இந்தப்பெண்கள் தங்களின் பாதுகாப்பிற்காக எதையும் சகிக்கும் பெண்களாக இல்லாமல் இருக்கிறார்கள்.

சமையலில், வீட்டு வேலைகளில் மூழ்கும் பெண்களுக்கு சமமாகவே போராட்டம் செய்யும், இசையில் மூழ்கும், படிப்பில் வெல்லும் பெண்களும் கதைகளில் கலவையாக இருக்கிறார்கள்.

அம்பை இந்தக்கதைகளின் வழியே வெவ்வேறு நிறமுள்ள தனித்துவமான பெண்களின் வாழ்வை எழுதுகிறார். அவர்களும் கூட ஒரே நிறத்தில் இல்லை. முந்தின தொகுப்பான வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற தொகுப்பைப் பற்றி எழுதும் போது கதைகளில் எங்கிருந்தாலும் ஒரே வார்ப்பிலான பெண்களை காணமுடிகிறது என்று எழுதியிருந்தேன். இந்தத்தொகுப்பில் விசிறியடித்த வண்ணக்குழம்புகள் போன்று வெவ்வேறு நிற பேதங்களிலான பெண்கள் உள்ளனர். அவர்களை வகுப்பதும் புரிந்து கொள்வதும் மிகவும் சிரமம். அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை கடந்து அவர்களின் மனதின் அடியில் ஒரு நதி அழுங்காமல் ஓடுகிறது. அந்த நதியை கலைக்கும் காற்றை பெரும்பாலான கதைகளில் நம்மால் காணமுடிகிறது. அதற்குப்பிறகே அவள் கிளைகளாக பரவுகிறாள். மீண்டும் கழிமுகத்தில் வடிந்து கடல்சேரும் போது, அவளுக்குள் தன்னை கலைத்த காற்றின் தடயமாய் ஏதுமில்லை என்பது வியப்புதான். காதலை,குடும்பத்தை, பிள்ளைகளை கடந்து அவள் கொண்டதெல்லாம் தனக்காய் தன்னை மட்டுமே. அதுவே அவளின் உயிரியல் இயல்பாகவும் இருக்கலாம். சில கதைகளில் விடுவித்துக்கொண்ட அந்தப் பெண் தேடல்கள் உள்ள பாதையை தேர்ந்தெடுகிறாள்.

எழுத்தாளர் கமலதேவி

இந்தத்தொகுப்பில் அம்பை பல கதைகளில் பெண்களின் அந்த ஆதார இயல்பையும் அந்த பெண்களின் வாழ்வையும் எழுதிருக்கிறார். சராசரியில் இருந்து மாறுபட்ட பெண்களை அவர்களின் சிக்கல்களை அவற்றிற்கே உரிய நிற பேதங்களுடன் இந்தத்தொகுப்பில் கையாண்டிருக்கிறார். அம்பையின் அனைத்து கதைகளிலும் உள்ள மனிதநேயத்தின் ஈரத்தில் அந்த நிற பேதங்கள் மேலும் ஔி கொள்கின்றன.

*

அம்பை: தமிழ்விக்கி

கமலதேவி: தமிழ்விக்கி

2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *