களிநெல்லிக்கனி: உன் ஆசைக்கு யாருமில்லை

(ஒளவையார் பாடல்களை முன்வைத்து கவிஞர் இசை எழுதும் தொடர்)

(படம்: கவிஞர் அகச்சேரன்)

தலைவி வீட்டைத் துறந்து தலைவனோடு சென்று விட்டாள். இந்தச் செய்தியை தோழி செவிலிக்குச் சொல்கிறாள். ‘உன் மகள் அவள் விரும்பிய தலைவனோடு சென்று விட்டாள். அவர்கள் மணம் முடித்துக் கொண்டனர். அது உறுதியாகி விட்டது. இனி அதை மாற்றவியலாது’.

பண்டைத் தமிழகத்தை மூவேந்தர்களைப் போன்றே அதியர், கொங்கர், தொண்டையர் போல வேறு சில மறக்குடிகளும் ஆண்டு வந்தனர். அவைகளுள் ஒன்றான ‘கோசர்’  என்கிற மறக்குடி குறித்தும், அவர்களது மாறாத வாய்மை குறித்தும் இப்பாடலில் சொல்கிறாள் அவ்வை. 

“நாலூர்க் கோசார் நன் மொழி போல
 வாய் ஆகின்றே தோழி”  (குறு; 15)

கோசர் சொன்ன சொல் எப்படிப் பிழையாதோ அதுபோல தலைவியின் உடன் போக்கும் உறுதியாகிவிட்டது என்கிறாள். இந்தக் கோசர்கள் ஆலமரத்தடியில் அவை  நடத்தியது போல தெரிகிறது. “தொன் மூதாலத்து பொதியில் தோன்றிய நாலுர்க் கோசர்” என்கிறது பாடல்.  எனில் அந்த ஆலமரத்து பஞ்சாயத்து சீன்கள்  இரண்டாயிரம் ஆண்டுகள்  வரலாறு கொண்டதா? பஞ்சாயத்திற்கென்றே வடிவமைக்கபட்ட அந்தப் பித்தளைச் செம்பிற்கு எத்தனை  நூற்றாண்டு  வயதாகிறது? அது எப்போது பஞ்சாயத்துள் புகுந்து அவ்வளவு கம்பீரமாக அமர்ந்து கொண்டது என்பது சரியாகத் தெரியவில்லை?   இந்தப் பாடலின் உரையில் தலைவனுக்கு ‘ அன்பன்’ என்கிற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் உ.வே.சா. அழகிய காதல் சொல். ஏனோ இது காதலுள் அவ்வளவாக புழங்கவில்லை. “ பக்தகோடி மெய் அன்பர்களே” போல பக்திக்குள் புகுந்துவிட்டது.   நானறிந்த வரையில் முன்பு சினிமாவில் ” அன்பரே! , அன்பரே!…” என்று விளிக்கிற  நகைச்சுவை காட்சியாக வந்தது.  சமீபத்தில்தான் ஒரு உருக்கமான பாட்டாகி இருக்கிறது.

தலைவி மெலிந்து கொண்டே போகிறாள். விட்டால் காணாமல் போய் விடுவாள் போல? இதைக் கண்டு வருந்திய அன்னை அவள் மெலிவு நோய்க்கு காரணம் அறிய கட்டுவிச்சியை அழைத்துக்  குறி கேட்கிறாள். அப்போது தோழி அந்த நோய் எப்படி வந்தது என்றும், என்ன செய்தால் ஒழியும் என்றும் சொல்கிறாள். குறிப்பமைதியின் ஆழத்தால் சிறக்கும் பாடல் இது.. 

“அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக்கோப்பு அன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே!
இன்னும் பாடுக பாட்டே! அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!” (குறு; 23)

குறத்தி  தலைவனின் மலையிலிருந்து வருகிறாள். அவள் குறி சொல்லும் போது தன் மலைவளம் சொல்லித் துவங்குதல் மரபு. அது மட்டும் போதும் என்கிறாள் தோழி. அந்தக் குன்றத்தை போற்றிப் பாடினாயே  அதை மட்டும் மீண்டும் மீண்டும் பாடு! அதுவே போதும். அந்தச் சொற்கள்தான் தலைவியின் நோய்க்கு மருந்து. அந்த மலைதான் அவளுக்குத் தெய்வம். அதுவன்றி நீ பாடி அழைத்துவரும் வேறு தெய்வங்களால் பலனேதுமில்லை என்கிறாள் தோழி. “அவர் நன்னெடுங்குன்றம்” என்கிற ஒற்றை வரியில் தலைவி கடுமையாகக் காதல் வயப்பட்டிருப்பதை அன்னைக்குச் சொல்லி விடுகிறாள் தோழி.  ‘அகவல்’ என்றால் அழைத்தல். தெய்வங்களை அழைத்து குறி சொல்பவள் ‘ அகவன் மகள்’. 

காதலுக்கு ஆயிரமாயிரம் ரூபங்கள்.  காதல் எங்கும் நிறைந்து விடுகிறது. காதலர் எங்கெங்கும் தெரியத் துவங்கி விடுகின்றனர். தலைவியால்  பூனைக்குட்டியை தலைவனாக்கி விட முடிகிறது. காதலில் வாழ்கையில் காதல் அல்லாதது என்று  ஒன்றுமில்லை. தீக்குள் விரலை வைத்தாலும் காதலைத் தீண்டும் இன்பம். 

ஓங்கிக் கத்தும் ஒளவையின் பாடலொன்று பிரபலமானது. அலறல் சத்தம் சத்தமாகவே  எழுதப்பட்டுள்ள பாடல் இது.  தலைவியைக் காதல் நோய் வருத்தியெடுக்கிறது. இளங்காற்றின் இனிமை அவள்  தனிமையை மேலும் பெருக்குகிறது. இந்த ஊரோ இது எதுவும் அறியாது உறக்கத்தில் ஆழ்ந்துள்ளது. 

” முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
‘ ஆஅ! ஒல்! எனக் கூவுவேன் கொல்?
அலமரல் அசைவளி அலைப்ப என்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.” (குறு; 28)

இந்த ஊரை நான்  முட்டி முட்டி எழுப்புவேனா? தாக்கி வருத்துவேனா?

தனிமைத் துயர் பொறுக்கமாட்டாது ஆ! ஓ! என்று என்று வெறி கொண்டு கத்துவேனா?  என்னதான் செய்வேன் நான்?

பகலில் சத்தங்களாவது  துணையாக உள்ளன. இரவில்  அவையும்  அடங்கி  முழுத்தனிமை மூண்டெழுகிறது. நமது சங்கப்பாடல்களில் மாலை வருவது பேய் வருவது போல அஞ்சப்பட்டுள்ளது. தலைவனின் நினைவு இரவு முழுக்க சட சடத்து எரிகிறது. அந்தத் தீக்குள்ளிருந்துதான் அவ்வையின் தலைவி அப்படிக் கத்துகிறாள். 

நம் ஆசைகளையெல்லாம் யாரோ ஒருவர்,  குரங்கு தன் குட்டியை  ஏந்துவது போல ஏந்தியணைத்து  ஏற்றுக்கொண்டால் எப்படி இருக்கும்? நன்றாகத்தான் இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படியான குரங்குகள் ஏதும் நமது வழியில் தென்படுவதில்லை. மீறிவரும் ஒன்றிரண்டும் நமது வாழைப் பழத்தையும் வழிப்பறி செய்ய வருபவை. சமயங்களில் குரங்கு நம் ஆசையை உச்சிமலைக்குத் தூக்கிக் கொண்டு போய் அங்கிருந்து விசுறிவிடுகிறது. தலைகீழாக மொட்டைப் பாறையை நோக்கிப் பாய்ந்து வரும் அதை நாம் பார்த்து கொண்டு நிற்கிறோம்.

தலைவன் தலைவியை இரவில் சந்தித்து இன்பமுற விரும்புகிறான்.  தோழியோ அதை மறுத்து திருமணத்திற்கு வற்புறுத்துகிறாள். தலைவனின் நெஞ்சமோ ஆசையை விடவில்லை. அந்த அலைக்கழியும் நெஞ்சத்தை நோக்கி தலைவன் பாடுகிறான். குட்டிக் குரங்கிற்கு அதன் அன்னை உண்டு.  உன் ஆசைக்கோ யாருமில்லை.

” ……..
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிது அவாவுற்றனை நெஞ்சே! நன்றும் 
பெரிதால் அம்ம  நின் பூசல், உயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகன்உறத்  தழீஇக் கேட்குநர்ப் பெறினே” (குறு; 29)

 அரிது அவாவுறவில்லையெனில் அது நெஞ்சமே இல்லை பாட்டி.

“முலையிடை முனிநர்” என்கிற சொற்கட்டு ஒன்று அவ்வையிடம் உண்டு. அதாவது “முலையிடை துயில்வதை வெறுப்பவர்”. உண்மையில் தமிழ் ஆண்களில் ஒருவனும் அப்படியில்லை. பலரின் உச்சபட்ச லட்சியமே அதுதான். தமிழிலக்கியம்  ஆண்டாண்டு காலமாக  முலையை உருகி உருகிப் போற்றியுள்ளது. பக்தி இலக்கியமும் கூட அம்மையின் முலைச்சிறப்பு பாடியே துதிக்கின்றன. நமது திரைநாயகியர் பானம் தயாரிப்பதே அதைப் பரிமாறும் போது முந்தானையைத்  தவறவிடத்தான் என்கிற காலம் ஒன்று இருந்தது. அந்த சதைக்கோளத்தின் மீது அவ்வளவு கற்பனைகள், அவ்வளவு பரவசங்கள், அவ்வளவு புதிர்கள் என  பிரமாண்டமான இன்பக் கோட்டையை கட்டி வைத்துள்ளான் தமிழன். முலை குறித்த அறிவியல் உண்மை ஏதும் உங்களுக்குத் தெரியுமெனில் அந்த உண்மையை உங்களிடமே பத்திரமாக  வைத்துக் கொள்ளுங்கள். பாவம்,  மூவாயிரமாண்டுக்  கனவை உங்கள் உண்மையை வீசி உடைத்து விடாதீர்கள்! 

“வெந்திறல்  கடுவளி பொங்கர்ப்  போந்தென
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்ப நம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே” (குறு; 39)

தலைவன் பிரிந்து போயிருக்கிற பாலை வழி  குறித்து தலைவியின் கூற்று இப்பாடல்.  வெம்மையான  கடும் காற்று மரக்கிளைகளினூடே வீசுகையில்  வாகை மரத்தின்  உலர்ந்து வற்றிய  காய்களிலிருந்து ஒரு வித பீதியூட்டும் ஒலி எழும். என் முலையிடை துயில்வதை விடுத்து அத்தகைய கொடிய  பாலை வழி சென்றிருக்கும் தலைவனை எண்ணி எவ்வாறு வருந்தாமல் இருப்பது என்று கேட்கிறாள் தலைவி.

வாகைமரம்  இப்படி காற்றில் விடாது பேசிக் கொண்டிருப்பதால் அதற்கு “பெண்களின் நாக்கு” என்று இன்னொரு பெயரும் உண்டாம். தாவரவியல் ஆய்வாளர் லோகமாதேவி இதைத் தெரிவித்தார். யாரோ சொல்லியிருக்கிறார்கள். அறிஞர் சொல்கிறார். நான் ஒன்றும் சொல்லவில்லை. 

தலைவனாவது நம்மைப் பிரிந்து செல்வதாவது? என்று நான் கொஞ்சம் அலட்சியமாக  இருந்து விட்டேன். சொன்னால் தாங்க மாட்டாள் என்று அவனும் சொல்லாமலேயே சென்று விட்டான். இப்போது நல்ல பாம்புக் கடித்தது போல என் நெஞ்சம் கலங்கித் துடிக்கிறது என்கிறாள் இன்னொரு தலைவி. (குறு; 43) 

பரத்தையர் கூற்றாக ஒரு பாடல்… 

‘ஆற்றில் புதுவெள்ளம் பெருகி வருகிறது . நானும் தலைவனும் அதில் குடைந்து விளையாடப் போகிறோம். இது கண்டு தலைவி அஞ்சுவாளாயின்,  தனது   எதிரிகளை   வென்று,  அவர்கள் கவர்ந்து செல்ல நினைத்த ஆநிரைகளை மீட்டு வந்த அதியமானைப் போல,  அவளும் அவளது சுற்றத்தோடு வந்து தலைவனின் மார்பை மீட்டுச் செல்லட்டும்’

‘……… அஃது 
அஞ்சுவது உடையளாயின் வெம்போர்
நுகப்படக் கடக்கும்  பல்வேல் எழினி
முனை ஆன் பெருநிரை போலக்
கிளையொடும் காக்க தன் கொழுநன் மார்பே” (குறு; 80)

பரத்தைக்கு அவ்வளவு உறுதி! அவள் தலைவனை இன்பத்தில்  இழுத்துக் கட்டியிருக்கிறாள். காமத்தின் முன் கண்ணீர்,  கலகம், உண்மை, நீதி என யாவும்  முனை மழுங்கிய ஆயுதங்கள் தான். 

பரத்தையிடம் போன ஒருவன் திரும்ப வந்து வீட்டு வாசலில் நிற்கிறான். தலைவி ஊடலில் இருக்கிறாள். ஆனால் அவள் நெஞ்சமோ இயல்பாக தலைவனை அணையவே விரும்புகிறது. அந்த நெஞ்சத்தை கடிந்து சொல்கிறாள். ‘ என் பேச்சைக் கேளாது அவனை உன் உன்னுள் அனுமதித்தால் உன் துயரம் பெருகிக் கொண்டே போகும், உன் உறக்கம் குறைந்து கொண்டே போகும்.

“பலவாகுக நின் நெஞ்சில் படரே…
 சிலவாகுக நீ துஞ்சும் நாளே!’

அதியன் படை எடுத்துச் சென்றிருக்கும் போர்முனைக்கு அருகில் உள்ள ஊர்கள் இரவெல்லாம் அச்சத்தில்  எப்படி உறக்கமின்றித் தவிக்குமோ அப்படி உன் உறக்கமும் குறைந்த போகும் என்கிறாள். (குறு: 91)

காதலனை ஊட வேண்டிய தருணத்திலும் ஊட விடாத காமத்தை பேசும் கவிதைகளை கொண்ட அதிகாரத்திற்கு அய்யன் “நிறை அழிதல்” என்று பெயர் சூட்டியிருக்கிறார். அதாவது உள்ளத்தின் உறுதி அறுதல். 

“செற்றார்பின் செல்லா பெருந்தகைமை காமநோய் 
உற்றார் அறிவதொன்று அன்று”

தன்னை யார் வெறுக்கிறார்களோ அவர்கள் பின்னால் போக மாட்டாதது உலக மாந்தர்களின் இயல்பு. ஆனால் காதலில் இருக்கும் உயிருக்கு அந்த செருக்கிற்கு வாய்ப்பே இல்லை. அது கல் கொண்டு எறிந்தோர் காலடியில் பதுங்கும் ஒரு நாய்க்குட்டி. நீ நாணம் என்கிற தாழ்ப்பாளைப் போட்டுக் கொண்டு வீட்டுக்குள் ஒளிந்திருந்தாலும் காமம் என்கிற கோடரி உடைத்து உள் புகுந்துவிடும் என்றும் அச்சுறுத்துகிறார் அய்யன்.

“என்னை நினைத்துக் கொண்டாயா?” என்று கேட்காத காதலர் இல்லை.” உண்மையில் வெடிமருந்து நிரப்பப்பட்ட கேள்வி இது. “இல்லை” என்றால் கட்டாயம் குண்டு வெடிக்கும். “ஆம்” என்றால் ” பொய்” என்று குண்டு வெடிக்கும். காதல், ஏக்கம், பிரிவாற்றாமை , சந்தேகம், எரிச்சல் என்று வெவ்வேறு உணர்வுகளின் கலவையான கேள்வி இது. அன்பு செய்யக் கேட்கப்படுகிறதா? வம்பு துவக்கக் கேட்கப்படுகிறதா என்று கண்டறிவது சுலபமல்ல.  அவ்வையின் பாடலொன்றிலும் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு தலைவன் சொல்கிறான்..

“…………
நீடிய மரத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்து உணச்சென்று அற்றாஅங்கு
அனைப்பெருங்காமம் ஈண்டு கடைக்  கொளவே”

‘உயர்ந்த மரக்கிளைகளை தொட்டுக் கொண்டு ஓடும்படி பெருக்கெடுத்துப் பாயும் வெள்ளம் பின்பு இறைத்து உண்ணும்படியாக மிகக் குறைந்து,  இறுதியில் இல்லாமல் ஆவது போல, பிரிவுப் பொழுதில் என்னுள் பெருக்கெடுத்த காமம் முழுவதும் தலைவியைக் காணும் பொழுதில்  அறவே தீர்ந்துவிடும் என்கிற நினைப்பில் நான் அவளையே எண்ணிக் கொண்டிருந்தேன்.’ (குறு: 99 )

நல்ல பதில்தான். பதில் சொல்லியாயிற்று. காமம் முழுவதும் வடியும் படியான நீடித்த கூடலுக்கு விண்ணப்பமும் போட்டாயிற்று.

“உள்ளின் உள்ளம் வேமே” என்கிறாள் இன்னொரு தலைவி. இந்த நெடிய பிரிவை நினைத்துப் பார்த்தால் நினைத்த நெஞ்சம் வெந்துவிடும். நினையாது  கடந்துவிடலாம் என்றால் அவ்வளவு எளிய துயரமா  இது?” (குறு; 102)

மழையிடம் இறைஞ்சுவது போல தன் பிரிவுத்துயரைச் சொல்லி தலைவனை திருமணத்திற்கு வற்புறுத்துகிறாள் ஒருத்தி. பாடல் முழுக்கவே மழையிடம்தான் பேசுகிறாள் தலைவி. ஆனால் வலிப்பதோ தலைவனுக்கு

“….மா மழை!
ஆர் அளி இலையோ நீயே? பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை;
துணையிலர், அளியர், பெண்டிர் இஃது எவனோ? (குறு; 158)

“பெரிய மலையையே  அரித்து உடைத்துவிடும் மாமழையே! உனக்கு இந்த எளிய பெண்ணுயிர்  எம்மாத்திரம்!”

தலைவன் பிரிந்து செல்லும் வழியில் காணும் காட்சிகள் அவன் காதல் மனத்தை வருத்துவதுண்டு. அப்படி ஒரு காட்சியைக் கண்டு தலைவன் திரும்பி வந்துவிட மாட்டானா என்று ஏங்குகிறாள் தலைவி.

“… தம் போல்
சிறுதலைப் பிணையின் தீர்ந்த நெறிகோட்டு
இரலை மானையும் காண்பர்கொல்,  நமரே? ” (குறு; 183)

சிறிய தலையையுடைய பெண்மானை தனியே தவிக்க விட்டு தனியே திரியும் ஆண் மானைக் அங்கு காண முடியுமா? அவை இணைந்து குலாவி இன்பம் சேர்த்த படி நிற்கும். அதைக் காணும் தலைவன் நம்மிடம் திரும்பி வந்துவிட மாட்டானா?

இப்பாடலில் காயா மலர் செழித்த மரக்கிளையை மயிலின்  கழுத்திற்கு உவமை சொல்கிறாள்.

“புல்லென் காயா பூக்கெழு பெருஞ்சினை
மென்மயில் எருத்தில் தோன்றும்
புன்புல வைப்பிற் கானத் தானே”

இதே பாட்டில் பசலைக்கு கொன்றைப்பூ  உவமை சொல்லப்பட்டுள்ளது. 

“.. கொன்றையம் பசுவீ
நம்போல் பசக்கும் காலை”

இந்தப் பசலையை ஏட்டில் நிறைய படித்துவிட்டேன். நாட்டில் எங்கேனும் கிட்டும் பார்த்துவிடலாம் என்று பார்க்கிறேன். முடியவில்லை.  சரி… நமக்கு வாய்த்தது கொன்றைதான் போல?

தலைவன்,  தான் கார்காலத்தில் கட்டாயம் திரும்பி வந்துவிடுகிறேன் என்று வாக்களித்து சென்றிருக்கிறான். மழை வந்துவிட்டது. ஆனால் அவன் வரவில்லை. அதைக் கண்டு வருந்தும் தலைவியை “இது கார்காலமல்ல. இது பருவம் தப்பிப் பொழியும் மழை. ஆகவே நீ வருந்தாதே. தலைவன் சொன்னபடி திரும்பிவிடுவான்”  என்று தோழி ஆற்றுப்படுத்துவது வழக்கம்.  ஆனால் இந்தக் குறுந்தொகைப்பாடலில் தலைவியை அப்படி ஏமாற்ற இயலவில்லை. பருவம் தப்பிப் பொழியும் மழை “வம்ப மாரி” எனப்படும். தலைவி இப்பாடலில் இது  “காலமாரி” என்று சரியாக கணித்துவிடுகிறாள். 

“பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ்
மீமிசைத் தாஅய வீஇ சுமந்துவந்து
இழிதரும் புனலும் வாரார் தோழி
மறந்தோர் மன்ற; மறவாம் நாமே…’  (குறு: 200)

‘மலையில் பெய்த மாமழையின் கலங்கல் வெள்ளம் அங்கு சிதறிக்கிடக்கும் மலர்களையெல்லாம் அடித்துக் கொண்டு அருவியாய்ப் பொழிகிற கார்காலம் இதோ… வந்துவிட்டது. ஆனால் தலைவன் இன்னும் வரவில்லை. அவர் நம்மை மறந்துதான் விட்டார், ஆனால் நாம் அப்படியில்லை’

இரண்டு பரத்தையர்களுக்கிடையே சச்சரவு வருகிறது ஒரு பாடலில். நீ தலைவனை மயக்கி உன் வலையில் விழ வைத்துள்ளாய் என்று குற்றம் சொல்கிறாள் ஒருத்தி. அவனே வலிய வந்து என்னை விரும்பினான். வருகிற விழாக்காலத்தில் துணங்கைக் கூத்தின் போது அவன் என்னோடு தலைக்கை தந்து ஆடுவதை எல்லோரும் பார்ப்பீர்கள். அப்போது நீயே அதனை அறிந்து கொள்வாய் என்கிறாள் மற்றொருத்தி. ( குறு: 364)

தலைவி தலைவனோடு உடன்போக்கு செல்ல முடிவெடுத்துவிட்டாள். ஆனால் தலைவன் அந்த கொடிய பாலை வழியில் அவளை அழைத்துச் செல்ல விரும்பவில்லை. அதை அறிந்த தோழி உன்னோடு இருந்தால் காடும் இனியதே என்று சொல்லி வற்புறுத்துகிறாள்.( குறு: 388)

 “நீர்கால் யாத்த நிரைஇதழ்க் குவளை
கோடை ஒற்றினும் வாடாதாகும்……
 கானமும் இனியவாம் நும்மொடு வரினே”

நீரைத் தன்னடியில் தேக்கிவைத்திருக்கும் குவளை மலர் கோடைக்காற்றுக்கும் வாடாமல் இருப்பதைப் போல,  தலைவி உன்னோடு இருந்தால் எவ்வளவு இடர் நேரினும் இன்பமாகவே இருப்பாள்.

அனிச்சமும் அன்னத்தின்தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

என்பான் அய்யன். அனிச்சமலரும், அன்னத்தின் இறகும் கூட நெருஞ்சி முள்ளாய் வருத்தும்படி அவ்வளவு மெல்லிய பாதங்களை உடையவளாம் தலைவி. அந்தப் பாதங்களை எடுத்து நிஜமான நெருஞ்சி மீது வைத்து காட்டுக்குள் நடக்கிறாள் அவள்.

கவிஞர் இசை

காதலர் கைபிடித்து நடக்கும் காதல் இருவரையும் மாறிமாறிக் கண்டு அழுகிறது. சிரிக்கிறது.

                                           (தொடரும்…)

*

கவிஞர் இசை: தமிழ்விக்கி

முந்தைய கட்டுரைகள்:

  1. களிநெல்லிக்கனி (வாயில்) – இசை
  2. களிநெல்லிக்கனி: கைகவர் முயக்கம்
4 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *