இது ஒரிஜினல் ஸ்கிரிப்டில் இல்லை: சாம்ராஜ்
(இயக்குனர் ஆர்.வி. ரமணியின் ”Oh that’s Bhanu” ஆவணப்படத்தை முன்வைத்து…)
ஞாபகங்கள் வருகின்றன
வருவதற்குத்தானே ஞாபகங்கள்
–கல்யாண்ஜி
”என் அம்மாவின் கடைசி பத்தாண்டுகளில் அவள் படிப்படியாக நினைவை இழந்து வந்தாள். அவள் சரகோசாவில் என் சகோதரர்களுடன் வாழ்ந்து வந்தாள். நான் அங்கு போகும்பொழுதெல்லாம் கவனிப்பதுண்டு, அவள் பத்திரிக்கைகளை மிக கவனமாக படிப்பாள். தொடக்கம் முதல் கடைசி வரை அவள் படித்து முடித்தவுடன் நான் பத்திரிக்கையை அவளிடமிருந்து வாங்கிக்கொள்வேன். சற்று நேரத்தில் நான் திரும்பக் கொடுப்பேன், மறுபடியும் படிக்கத் தொடங்குவாள்.
அந்த வயதிற்கு அவளுடைய உடல் நலம் சீராகவே இருந்தது. ஆனால் அவளால் தன் குழந்தைகளை அடையாளம் காண முடியவில்லை. நாங்கள் யாரென்று அவளுக்குத் தெரியவில்லை. சமயங்களில் அவளையும்.
நான் அவள் அறைக்குள் போவேன், அவளை முத்தமிடுவேன். சற்று நேரம் அவளுடன் அமர்ந்திருப்பேன். சிறிது நேரம் கழித்து அவளுடைய அறைக்குள் மீண்டும் போனால் அவள் அதே மாறாப் புன்னகையோடு வரவேற்று இருக்கச் சொல்வாள். என்னை முதல் முறையாக அப்பொழுது தான் பார்ப்பது போல் பார்ப்பாள். அவள் என் பெயரையும் மறந்திருந்தாள்.”
–ஸ்பானிஷ் இயக்குனர் லூயி புனுவலின் ”இறுதி சுவாசம்” நூலிலிருந்து
*
முதுமையும் ஞாபக மறதியும் பிரிக்க முடியாதவை. ஐம்பதில் கொஞ்சம் தேயத் தொடங்கி அறுபதுகளில் இன்னும் கூடி எழுபதுகளில் கூடிப்போகிறது. இது பொது விதி இல்லையெனினும், கலையில் இயங்குபவர்களை, மூளையை வாழ்க்கை முழுக்க கூடுதலாக பயன்படுத்த முயன்றவர்களை, கூடுதலாகவே ஞாபக மறதி வாஞ்சையோடு நினைத்துக்கொள்கிறது.
இடதுசாரி தலைவரான தோழர் மைதிலி சிவராமன் , 1967-ல் வெண்மணி படுகொலைகளிலிருந்து தன் அரசியல் வாழ்க்கையை துவங்கியவர், தனது அந்திமக் காலத்தில் உரையாடலில் வெண்மணி பற்றி பேச்சு வர, ” வெண்மணினா என்ன? “ என்று கேட்டதாய் சொல்வார்கள்.
விதிவிலக்குகள் உண்டுதான். தோழர் தியாகு, வண்ணதாசன், காலம் செல்வம், போன்றவர்கள் என் அறிதலில் ஞாப பிசகில்லாமல் இருக்கிறார்கள். தோழர் தியாகு இன்றைக்கு காலை நாம் அழைத்துக் கேட்டால் ஐம்பது வருடத்திற்கு முந்தைய சம்பவத்தை துல்லியமாகச் சொல்வார். வண்ணதாசனால் தனது குழந்தைப் பருவத்தின் வெயிலை அதன் நிறத்தோடு மணத்தோடு சொல்ல முடிகிறது. காலம் செல்வத்தின் சமீபத்திய நூலான பனிவிழும் பனைவனம் ஏறக்குறைய நாற்பது நாற்பத்தைந்து வருடத்திற்கு முந்திய நினைவுகளை பேசக்கூடியவை.
இயக்குனர் ஆர்.வி. ரமணி பானுமதி ராவ் எனும் அறியப்பட்ட கதகளி, பரதநாட்டிய மற்றும் அரங்கக் கலைஞரைப் பற்றி ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டிற்கான சிறந்த ஆவணப்படத்திற்குரிய தேசிய விருது இதற்கே வழங்கப்பட்டது. ஆர்.வி. ரமணி நாடறிந்த ஆவணப்பட இயக்குனர். 28 படங்களை இயக்கியுள்ளார். “My Camera And Tsunami”, “Is This How Creaters Are Formed On The Moon”, “Paddharo Mharey Desh (Welcome to my country), “Nee Yaar”, போன்றவை குறிப்பிடத் தகுந்தவை.
இயக்குனர் ரமணி இந்த ஆவணப்படத்திற்காக நடனக் கலைஞர் பானுமதி ராவை அவருடைய 95-வது வயதில் இருந்து தொடர்ந்து சந்திக்கிறார். இந்த ஆவணப்படத்தின் மீதான எனது ஈர்ப்பு என்பது பானுமதி எனும் நடனக் கலைஞரின் உரையாடல்களும், வற்றாத கலையின் மீதான அவரது ஆர்வமும், முதுமையை மிஞ்சும் அவரது இயங்குதலுமே.
ஆவணப்படம் முழுக்க தனது ஞாபகம் மற்றும் ஞாபக மறதியோடே உரையாற்றுகிறார் பானுமதி ராவ். ஒவ்வொரு முறை ரமணியை பார்க்கும் பொழுதும் தன்னை எதற்காக பார்க்க வந்திருக்கிறார் என்று கேட்கிறார். ரமணி என்ன வேலை செய்துகொண்டிருக்கிறார் என்பதையும் கேட்டுக்கொண்டே இருக்கிறார். கூடுதலாக இந்தத் தொழிலில் வருமானம் ஏதாவது உண்டா என்பதை மறுபடியும் மறுபடியும் கேட்கிறார்.
95 வயதிலும் அவரால் கதக்களி முத்திரையை அபிநயிக்க முடிகிறது. தனது பழைய ஓராள் நடிப்பை ஓரளவிற்கு ரமணியின் காமிரா முன் நிகழ்த்திக் காட்டுகிறார். எம்.எல்.வசந்தகுமாரியின் பாடல்களை ரசித்துக் கேட்கிறார். எம்.எல். வசந்தகுமாரி யாரென்றும் கேட்கிறார்.
அவருடைய நீண்ட நெடிய வாழ்வில் காலம் குழம்பிக் கிடக்கிறது. ரமணியிடம் அவ்வப்பொழுது தனது கணவர் கிருஷ்ணாவை தெரியுமா என்று கேட்கிறார். கிருஷ்ணன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி. 1970-களிலேயே இறந்துவிடுகிறார். ரமணி கிருஷ்ணாவை சந்தித்திருப்பார் என்றே பானுமதி கேட்கிறார். பானுமதி ராவ் எனும் கோழிக்கோட்டுக்காரியின் ( ராவ் கணவர் வழி பெற்றது ) நகைச்சுவையும் பகடியும் அவரது அந்திமத்திலும் பிரகாசிக்கிறது.
அவர் வாக்களிக்கக் போகையில் அவரது மகள் மாயாராவ் அவருக்கு வாக்களிப்பதைப் பற்றி விவரிக்கிறார். யார் யார் வேட்பாளார்கள், எப்படி வாக்களிக்க வேண்டும். தான் உள்ளே அவருடன் வரமுடியாதென்றும் சொல்கிறார். குழந்தை போல அதனையெல்லாம் கேட்டுக்கொண்ட பானுமதி வாக்குச் சாவடிக்குள் நுழையும்போது சடாரென உள்ளே நுழைகிறார். வாக்களிப்பதற்கு ஆக உகந்தது ஞாபக மறதிதானே?
எனக்கு இந்த ஆவணப்படம் எழுப்பும் கேள்விகள் வேறு. கலைஞர்களின் வாழ்வில் ஞாபகமும் ஞாபகமறதியும் அவர்களுடைய அந்திமக் காலத்தில் என்ன பாத்திரத்தை வகிக்கின்றன? அது அவர்களுக்கு ஆறுதலா வாதையா?
இந்த ஆவணப்படத்தை மூன்று முறை பார்த்தேன். பார்க்கும் தோறும் அது வேறொன்றாக துலங்கிவந்தது. ஞாபகங்கள் கலைஞர்களுக்கு வெறும் வாதையை மாத்திரம் கொடுக்கிறது என ஒற்றைப் படையாக ஒதுக்க இயலவில்லை. அவர்கள் ஞாபகமும் ஞாபகமறதிக்கும் இடையே ஊஞ்சலாடுகிறார்கள். கலைஞர்களுக்கு ஞாபகம் மிக முக்கியம். அவர்களுடைய மனதில் நல்லதும் கெட்டதுமாய் ஏதேதோ தங்கிப் போகிறது. முதுமை அதில் தனக்கு விருப்பமானவற்றை மாத்திரம் வைத்திருக்கிறது. எதை ஞாபகம் வைத்திருப்பதென அதுவே தீர்க்கமாய் தீர்மானிக்கிறது.
முன்னொரு காலத்தில் செயலூக்கமாய் இருந்த கலைஞர்கள், முதுமையின் சாய்வு நாற்காலியில் அமரும்பொழுது அதை ஆட்டி விடுவது இந்த ஞாபகங்கள்தான். சமயங்களில் ஞாபக மறதியும்தான்.
அவர்கள் கலையென்னும் குதிரையிலிருந்து இறங்கிவிட்டார்கள். ஆனால் மனதில் இன்னும் அந்தக் குதிரை ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. எழுதுகின்றவர்களுக்கும் நிகழ்த்துக் கலைஞர்களுக்கும் ஒரு நுண்ணிய வேறுபாடு இதில் உண்டு.
அசோகமித்திரன் அவர் மரித்த 86 வயது வரை எழுதிக்கொண்டு தான் இருந்தார். அவரே ஒருமுறை எழுதினார். “எனது கைகள் எழுதி எழுதி உளுந்த வடைகள் போன்று வீங்கி விடுகின்றன” ஆனாலும் அவர் எழுதினார். நிகழ்த்துக் கலைஞர்களுக்கு இந்தச் சலுகை இல்லை. அவர்களின் கலைக்கு உடலின் வலு மிகவும் அவசியப்படுகிறது. முதுமை ஓர் எழுத்தாளனை கட்டிலில் படுக்க வைத்தாலும் அவன் அங்கிருந்தும் எழுத முடியும்.
ஆனாலும் பானுமதி ராவ், தனது அபாரமான ஆற்றலால், கலையால், பகடியால், நகைச்சுவையால், கவித்துவமான மறதியால் தனது நாட்களை மணமூட்டுகிறார்.
பகுத்தறிவிலிருந்து சற்று விலகிப்போய் நின்று யோசித்தால், கலைஞர்களின் அந்திமம் வாதையெனில் வாதை, மகிழ்ச்சியெனில் மகிழ்ச்சி. அவர்கள் மீட்டுவதற்கு ஓராயிரம் சுரம் அவர்களின் மன வீணையிலிருக்கிறது. ஆண்டுகள் கூடக் கூட, சம்பவங்களும் நிகழ்வுகளும் வேறு வேறு பொருள் தருகின்றன. தலைகீழான அர்த்தத்தைத் தருகின்றன.
வீட்டு வரவேற்பறையில் அமர்ந்தபடி, தனது வளம் மிக்க வாழ்வில் எங்கெங்கோ அலைவது கலைஞர்களுக்கு மாத்திரமே சாத்தியம். சாதரணர்களுக்கு சாதாரண சம்பவம். ஒரு கலைஞனின் வாழ்வில் எத்தனை ஏற்றம், இறக்கம், துரோகம், கண்ணீர், இருள், வெளிச்சம், கலைஞர்களின் மனக்குதிரை பால்வீதியிலும் மேயலாம். பானுமதி ராவ் தன் தோட்டக்காரரை பற்றி சொல்லும்பொழுது “அவர் வருவார். சற்று நேரம் இருந்துவிட்டுப் போய்விடுவார். அவருடைய வேலையை எல்லாம் நானே செய்துவிடுவேன்.” என்று சொல்கிறார். ஏதோ ஒரு வகையில் கலைஞர்களுக்கு இந்த வரி பொருந்தவே செய்கிறது. வேறொருவரின் பொருட்டே நம்மீது பல வாதைகள் இறங்குகின்றன. எந்த சூடத்துக்கும் வெளியேறாத, அடிபணியாத வாதைகள் அவை. நமக்கு அதில் புகார் ஒன்றுமில்லை. கிறிஸ்துவிற்கு ஒரு சிலுவைதான். கலைஞனுக்கு எண்ணிலடங்கா. பிறருக்கென அழத் தொடங்குபவர்களின் கண்ணீர் எப்பொழுது நிற்கும்? உலகத்தின் தீமையெல்லாம் தீரும் தினத்தில் நிற்கக் கூடும்.
மலையாளத் திரைப்படமான “தன் மாத்திராவில்” அதன் நாயகனான மோகன்லால் அல்ஸிமரால் பாதிக்கப்பட்டு முற்றிலும் ஞாபகமற்றவராய் இருப்பார். அவரை அவரது பூர்வீக தரவாட்டு வீட்டிற்கு அழைத்து வருவார்கள். ஒரு நாள் காலை அவர் காணாமல் போக, வீடு முழுக்க தேடுவார்கள்.தரவாட்டு வீட்டிற்குள் இருக்கும் குளத்திலும் மூழ்கித் தேடுவார்கள். அப்பொழுது அவரது அப்பா நெடுமுடி வேணு ஒற்றை வாக்கியம் மாத்திரமே சொல்வார். “அவனுக்கு நீச்சல் அறியான் அல்லே” ஒரு தந்தையால் அல்ஸிமரால் என் மகனுக்கு நீச்சல் மறந்திருக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும். காலத்தோடு கலைஞர்களின் மனம் காலத்திற்கும் இப்படித்தான் போராடுகிறது போல.
இந்த ஆவணப்படத்தில் பானுமதிராவ் தனது வீடு தேடும் படலம் குறித்து பழைய ஓராள் நாடகத்தை தன் மகள் மாயாராவிற்க்கு நிகழ்த்திக் காட்டும் பொழுது பழைய நாடகப் பிரதியில் இல்லாத வசனங்களையெல்லாம் புதிதாக சேர்த்துப் பேசுகிறார். “நீ ஒரிஜினல் ஸ்கிரிப்டில் இல்லாததையெல்லாம் பேசுகிறாய்” என மகள் அதை கோபமாய் மறுக்கிறார்.
ஸ்கிரிப்டில் இருப்பதை அப்படியே பேசுவதற்கு கலைஞர்கள் எதற்கு? இருப்பதையும் இல்லாததையும் தானே கலைஞர்கள் பேச வேண்டும். இல்லாதது என்பது பொய்யானது அல்ல. அதனுள் மறைந்திருப்பதை, உரைந்திருப்பதை உணர்த்துவது. ஸ்கிரிப்டில் இருப்பதை அப்படியே வாசித்துவிட்டு போவது அல்லது வாழ்ந்துவிட்டுப் போவது சாதரணர்களெனில். கலைஞன் அதையும் தாண்டி பேசுகிறான் அல்லது போகிறான். அதற்கே பானுமதி ராவும் அல்லது நாமும்.
*