கதையாட்டம்: செல்மா லாகர்லெவ்வின் “கஸ்டா பெர்லிங் கதை”
–பாலாஜி பிரித்விராஜ்
“One must treat old tales with care; they are like faded roses. They easily drop their petals if one comes too near to them.” – Selma Lagerlof in ‘The story of Gosta Berling.’
சில மாதங்களுக்கு முன்பு ‘அன்னா கரீனினா’ நாவல் குறித்த விமர்சனங்களை வாசித்துக் கொண்டிருந்தேன். பிரமிப்பாக இருந்தது. எத்தனை எத்தனை பார்வைக் கோணங்கள். ஒரு புறம் ஒழுக்கவியல் பார்வை கொண்ட விமர்சனங்கள். அன்னாவின் உயர்மட்ட வாழ்வும் சம்பிராதயமான குடும்பமுறையும் உருவாக்கும் சலிப்பு; அப்போது கிடைக்கும் ஒரு காதல் உணர்வினால் ஈர்க்கப்பட்டு ‘வழிதவறும்’ வாழ்க்கை; லெவினைப் போல் உயர் நோக்கங்கள் கொண்ட வாழ்வாக இருந்திருந்தால் அன்னாவிற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனும் பார்வை.
இன்னொருபுறம் நவீனத்துவ மனநிலை உண்டாக்கும் பார்வை. அது அன்னாவை தன்னில் ஒருவராக அடையாளம் கண்டுகொள்கிறது. விரான்ஸ்கியுடன் ஓபரா அரங்கில் வந்து அன்னா அமர்வது அந்த வாசகர்களுக்கு முக்கியமான தருணம். சுற்றிலும் கசப்பு கொண்ட கண்கள். அந்தப் பெண்கள் அனைவருக்கும் ரகசிய உறவுகள் உள்ளன. தான் மீற முடியாத எல்லையை அன்னா மீறியதால் அவர்களுக்கு அன்னா மீது துவேஷம் எழுகிறது. அந்த அரங்கில் அப்படி அமர்ந்திருக்கும் அன்னா வாசகர்களுக்கு மதிப்புமிக்கவளாக இருக்கிறாள்.
மற்றொருபுறம் பிற அறிவுத்துறை சார்ந்த கோட்பாட்டு விமர்சனங்கள். அமெரிக்க விமர்சகர் ஹரால்ட் புளூம் ஓரிடத்தில் ஷோப்பனவரின் ‘Will’ சார்ந்து எழுதப்பட்ட கட்டுரையை குறிப்பிடுகிறார். எப்படி ஆதிவிருப்பம் என்னும் கருத்துருவம் அன்னாவில் செயல்பட்டு அவளது அழிவிற்கு காரணமாகிறது என்கிற நோக்கில் ஆராயும் கட்டுரை.
இவ்விமர்சங்களை ஒட்டி நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் “இவ்வளவு பார்வைகளைத் தாண்டி நமக்கென ஒரு பார்வையை உருவாக்கிக் கொள்வது சவால் தான்” என்றார். “ஆம். உண்மை. ஆனால் நமக்கு இன்று ஒரு வசதி இருக்கிறது. புனைவு குறித்து முந்தைய தலைமுறை வாசகர்களுக்கும் நமக்கும் வேறுபாடு உள்ளது. இன்று நமக்கு நாவல் உருவாக்கும் சிக்கல் மீது அதீத பற்று இல்லை. கதாப்பாத்திரங்கள் கொள்ளும் நெருக்கடிகளில் நாம் ஒன்றி உழன்றாலும் அடியில் அது நுண்ணிய ஆடல் என்கிற போதமும் நம்மில் இருக்கிறது. அடிப்படையில் நம்மை நம் வாழ்வைப் புரிந்துகொள்ளவே இவற்றில் ஈடுபடுகிறோம் என்கிற எண்ணத்தை விலக்கி நாம் இன்று வாசிப்பதில்லை. ஆகவே நாவல் எவ்வளவு இருண்மையாக சிக்கலாக இருந்தாலும் வாசிப்பு நிறைவு தருவதாக உள்ளது. கலை தரும் நிறைவு அது. ஆகவே இன்று கலை உருவாக்கும் உன்னதத்தை(Sublimation) நோக்கியே நம் பார்வை இருக்கிறது.”
நான் தொடர்ந்தேன். “உதாரணமாக இப்போது அன்னா கரீனினா வாசிக்கையில் உடனடியாக தோன்றுவது அதிலுள்ள லீலை தான். உலகப் பேரழகியான ஒருத்தி தன் இளமையின் முடிவில் இருக்கிறாள். வாழ்வில் முதன் முறையாக தீவிரமான காதல் வேட்கை கொண்ட விரான்ஸ்கி என்னும் ஆணின் கண் அவளைப் பார்க்கிறது. அவளுக்குள் பீடம் போட்டு அமர்ந்திருக்கும் பேரழகுத் தெய்வத்தால் அதைத் தாண்டிப் போக முடியாது. தான் அமர்ந்திருக்கும் உடல் அழிந்தாலும் அதற்குக் கவலையில்லை என அந்த உறவை நோக்கிச் செல்கிறது. அந்த வேட்கையை மிச்சமின்றி முழுவதும் அருந்தி விட்டுச் செல்வது தான் அன்னாவின் மிச்ச வாழ்க்கையாக உள்ளது” என்றேன்.
நண்பர் “கொஞ்சம் ரொமாண்டிக் வாசனை வருகிறதே!” எனச் சிரித்தார்.
“அதனாலென்ன. கற்பனாவாதப் பார்வை ஒன்றும் தரம் குறைந்தது இல்லை. அந்த அழகியலில் பெரும்பாலும் வெகுஜனப் படைப்புகளே வந்திருக்கின்றன என்பது உண்மை தான். ஆனால் அன்றாடத்தின் அடியிலிருக்கும் பிரம்மாண்டத்தை அதன் விசைகளை வெளிக்காட்ட கற்பனாவாதம் மிகச் சிறந்த கருவி. அதைச் சாதித்துக் காட்டிய இலக்கியப் படைப்புகளும் உள்ளன.” என்றேன்.
நண்பர் உதாரணம் கேட்டார். உடனடியாக என் நினைவிற்கு வந்தது செல்மா லாகர்லெவ் எழுதிய “கஸ்டா பெர்லிங் கதை” (The story of Gosta Berling) என்கிற நாவலைச் சொன்னேன்.
1891-ம் ஆண்டு வெளிவந்த நாவல். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன் வார்ம்லாண்ட்(Varmland) என்னும் நிலத்தில் நடந்த நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்ட நாவல். ஒரு நிலத்தையும் அதன் மக்களையும் சுற்றி நடக்கும் நாவல் என்பது நாம் அறிந்திறாதது அல்ல. இயல்புவாத நாவல்களின் களம் முதன்மையாக அதுதான். தமிழிலேய பூமணியின் “பிறகு”-ல் இருந்து சோ.தர்மனின் “கூகை” வரை நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.
ஆனால் இந்த நாவலின் தனித்தன்மையென்பது இது எடுத்துக் கொண்ட கூறுமுறையில் உள்ளது. ஆங்கிலத்தில் “டேல்”(Tale) என்று கூறப்படும் கதை வடிவ முறையில் எழுதப்பட்ட படைப்பு இது. நாட்டார் கதைக்கு நெருக்கமான வடிவம் அது. குழந்தைக் கதை, தேவதைக் கதை, பேய்க் கதை, நீதிக் கதை என பல வகைமைகள் அதில் உள்ளன. நம் அனைவரும் அறிந்த ஒன்று “பிரதர்ஸ் க்ரிம் டேல்ஸ்” (Brothers Grimm Tales).
இந்த நாவலை செல்மா தன் பாட்டி சொன்ன கதைகளை அடிப்படையாக வைத்து எழுதியுள்ளார். மிக சுவாரசிமான குறிப்பு இது. அதாவது பாட்டி தன் இளமைக் காலத்தில் கண்முன் நிகழ்வுகளைக் கதையாக்கி தன் பேத்திக்கு கூறியிருக்கிறார். ஒரு தலைமுறையின் வாழ்வும் அதன் மனிதர்களும் புனைவாகி கதைமாந்தர்களாகும் முறைமை இந்த படைப்பில் உள்ளது.
நம் கற்பனையை முழுதாக தூண்டும் அம்சம் இது. ஒரு காட்டின் சாரம் முழுக்க மலையிடுக்கின் தேன்கூடாக மாறியிருப்பதைப் போல நிகழ்வுகள் சுருக்கி செறிவாக்கப்பட்டு வருங்காலத்திற்கு கதைகளாக கையளிக்கப்படுகிறது.
மொத்தம் 36 அத்தியாயங்கள் கொண்டது இந்த நாவல். பெரும்பாலானவை தனித்தனிக் கதைகளாக வாசிக்கும்படியான முழுமை கொண்டுள்ளன. நாவலாசிரியர் இவற்றை ‘பழங்கதைகள்’(old stories) என அழைக்கிறார்.
இவ்வகையான கதைகளின் தனித்தன்மை என்பது இவற்றை வாய்மொழிக் கதைகளாகக் கூறமுடியும் என்பதே. மொத்த நாவலையும் இன்னொருவருக்கு கதையாக சொல்லிவிட முடியும். அதற்கேற்ப ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் வலிமையான மைய முடிச்சு இருக்கும். உதாரணமாக நாவலின் முதல் அத்தியாயம் கஸ்டா எனும் மதகுருவை நீக்குவதற்கு தலைமைகுரு வருகைதர, அவர் முன்னிலையில் பிரசங்கம் ஆரம்பிக்கிறது. கஸ்டா தன் நண்பர்களுடன் குடி கேளிக்கை என இருப்பதால் தன் மதப்பணிகளை சரியாக ஆற்றவில்லை என அவரை நீக்க முடிவெடுத்து வந்திருக்கிறார் தலைமைகுரு. அப்போது தன் சொற்பொழிவை ஆரம்பிக்கிறார் கஸ்டா.
கணந்தோறும் ஞானத்தின் நிழலில் நின்றிருப்பவனின் சொற்களாக அவரது பிரசங்கம் அமைகிறது. ‘அவர் வாயில் இருந்து சொற்கள் வர ஆரம்பித்ததும் நின்றிருந்த தரையும் தலைக்கு மேலிருந்த விதானமும் மறைந்து போக நித்ய வெளியில் நின்று கொண்டு தன் சொற்களைக் கூற அரம்பித்தார். அப்போது அவரை வேறொன்று முழுதாக ஆக்கிரமித்திருந்தது.’ என ஆசிரியர் அக்கணத்தை எழுதுகிறார். திகைத்த தலைமைகுரு எதுவும் சொல்லாமல் போய்விடுகிறார். ஆனால் மறு நாள் வேறறொரு பிரச்சனையில் அவரை நீக்கிவிடுகிறார் என்பதுடன் அந்த அத்தியாயம் நிறைவுறுகிறது. இந்த அத்தியாயத்தின் மையமுடிச்சான கஸ்டா பதவி பறிக்கப்படுமா என்பது இதை வாய்மொழிக் கதையாகச் சொல்ல உதவுகிறது. அதேசமயம் ஒரு இலக்கிய வாசகருக்கு இதிலுள்ள கஸ்டாவின் அடிப்படை முரண் கவனத்தில் படும். கேளிக்கையாளன் அதே சமயம் ஞானி எனும் இரட்டை நிலையில் இருப்பவன் கஸ்டா. ஒரு எல்லையில் இருந்து இன்னொரு எல்லைக்கு கண நேரத்தில் மாறும் ஒருவன். கிட்டத்தட்ட இயேசுவின் அற்புதங்களுக்கும் இதே தர்க்கம் சொல்லப்படுவதுண்டு. தண்ணீரை ஒயினாக்குவதற்கு ஒருக்கணம் முன்புவரை அவர் சாதாரண தச்சன்மகன் தான். ‘இன்னொன்றால்’ அக்கிரமிக்கப்பட்டு அவர் அதைச் செய்கிறார். நிகாஸ் கசண்ட் சாகிஸ்ஸின் ‘கிருஸ்துவின் இறுதி சபலம்’ நாவலில் இது அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு ஒவ்வொரு அத்தியாயமும் வாய்மொழிக்கான வலுவான முடிச்சும் இலக்கிய ஆழம் கொண்ட மையமும் அமையப்பெற்ற நிகழ்வுகளின் தொகுதிகளாக இந்த நாவல் விரிகிறது. மேலும் இவ்வகையான வாய்மொழிக் கதைகளின் இன்னொரு தனித்தனமை இது கறாரான யதார்தத்தில் வேரூன்றியிருக்காது. அதிகப்படியான பிராந்தியத் தகவல்கள் இருக்காது. அதனாலேயே அதற்கு எளிமையும் ஒரு உலகளாவியத் தன்மையும் இருக்கும். ‘டேல்’ என்பதன் அடிப்படை குணாம்சம் இது. ஒருவிதத்தில் இதை அனிமேஷன் திரைப்படங்களோடு ஒப்பிட முடியும். எந்தப் பிராந்தியத்தை சொல்லும் கதையாக இருந்தாலும் அனிமேஷன் அதை உலகப் பொதுவாக மாற்றிவிடுகிறது.
இந்த நாவலில் பல வகையான நீண்ட இயற்கை வர்ணனைகளில் இதைக் காணலாம். வார்ம்லாண்ட் எனும் பிரதேசத்தின் நிலமும் ஏரியும் காடுகளும் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் அனைத்தும் செரிவான கற்பனாவாதச் சித்தரிப்பால் உச்சப்படுத்தப் பட்டு காட்டப்படுகின்றன. அதேசமயம் குறிப்பிட்ட பிராந்திய நுண்தகவல்களை நம்மால் காண முடிவதில்லை. உதாரணமாக கீழ்க்கண்ட வரிகளைக் கூறலாம்.
“கிறிஸ்துமஸில்தான் ஏரிக்கு ஓய்வு கிடைக்கும். எத்தனையோ சமயங்களில் இந்த ஏரிக்குக் கோபம் வந்துவிடுகிறது. வெண்மையாக நுரைக்கும் அலைகளைத் தூதாக அனுப்பிப் படகுகளைக் கவிழ்த்து விடுகிறது. சில சமயங்களில் கனவுகாணும் குழந்தைபோல வானத்தை நிர்மலமாகப் பிரதிபலித்துக்கொண்டு உலகத்தில் ஆழ்ந்து இருக்கும் அந்த ஏரி.“
மூன்றாவதாக இக்கதைகளின் நாட்டார் அம்சம் நம் அனைவருடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அடிப்படையான நன்மைத் தீமைக்கான போர் பற்றி கவனம் கொள்கிறது. நான் மேலே கூறிய நாவலின் முதல் அத்தியாயத்திலேயே அந்த ஊடாட்டம் நிகழ ஆரம்பித்து விடுகிறது. இருள் ஒளி இரண்டுக்கான விழைவும் சம அளவில் உள்ள கதாப்பாத்திரம் கஸ்டா. மதகுருப் பணியில் இருந்து நீக்கப்பட்ட கஸ்டா நாடோடியாக அலைகிறான். தூரத்து மலைகளுக்கு அப்பால் உள்ள காடுகளின் இருளில் கரைந்து மறைந்து விட வேண்டும் என விரும்புகிறான். ஆனால் அவனை மார்கரிட்டா என்கிற மேஜரின் மனைவி அழைத்து வந்து தன் விடுதியில் தங்க வைக்கிறாள்.
அவன் அங்கு தங்க சம்மதித்தாலும் அவனுக்குள் தொடர்ந்து இருளின் விழைவு இருந்தபடியே உள்ளது. நாவல் நெடுக அதன் சுவடுகளை நாம் பார்க்கிறோம். எங்கெல்லாம் தன் மாண்பை இழக்க நேரிடுகிறானோ அங்கெல்லாம் அவனுக்குள் தீமையின் விழைவு அதிகமாகிறது. தன் சக விடுதியாளர்களுடன் சேர்ந்து குடித்துக் கும்மாளமிடுகிறான். அதன் மூலம் தன் ஆன்மாவை சிதைத்துக் கொள்கிறான்.
அவனுள் இருக்கும் இந்த ஆழ்ந்த இருளை நோக்கிய ஈர்ப்பில் இருந்து அவனை வெளிக்கொண்டு வர முனைவது அன்பு. குறிப்பாக நாவலில் மூன்று விதமான பெண் கதாப்பாத்திரங்கள் வருகின்றனர். மரியானே, அன்னா மற்றும் எலிசபெத். மீட்சிக்கான பாதையாக அவர்களுடனான உறவுகள் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் அம்மீட்சி நிகழா வண்ணம் ஒவ்வொரு பெண்ணிடமிருந்து அவனை விலக்கும் வகையில் இருள் ஒவ்வொரு வடிவம் எடுத்து வருகிறது. இறுதியில் எலிசபெத்துடன் இணைகையில் நாவல் நிறைவுறுகிறது.
இவ்வாறு நாவல் முழுக்க வரும் மனித இருண்மைகளும் உளவியல் தடைகளும் உச்சப்படுத்தப்பட்டு உருவகமாகக் காட்டப்படுகிறது. மரியானேவின் கதையில் அப்படியான ஒன்றை நாம் காணலாம். ஒரு கிறிஸ்துமஸ் விருந்தில் மரியானே கஸ்டாவை சந்திக்கிறான். அவருடன் இணைந்து நடனமாடுகையில் ஒருவர் மேல் ஒருவருக்கு காதல் ஏற்படுகிறது. அதைத் தெரிந்து கொள்ளும் தந்தை மரியானேவை விட்டுவிட்டு கிளம்பிவிடுகிறான். அதிர்ச்சியில் அந்த நடுஇரவில் நடந்தே தன் வீட்டுக்கு செல்லும் அவள் வெகுநேரம் தன் வீட்டுக்கதவைத் கதவைத் தட்டியும் திறக்காததால் அங்கு இருக்கும் உறைபனியிலேயே படுத்து இரவைக் கழிக்கிறாள்.
அப்போது ஆழமான சுயமழிப்பு எனும் உணர்வு அவளுள் ஏற்படுகிறது. தன் தந்தையின் கோபத்திற்கு எதிர்வினையாக தன்னையே அழித்துக் கொள்ளும் உணர்வு அவளுள் குடிகொள்கிறது. ஆணின் வெறுப்பிற்கு எதிரான ஆயுதமாக பெண் தன்னை வருத்திக் கொள்ளும் சித்திரத்தை அத்தருணத்தில் காண்கிறோம். நடுங்கி காய்ச்சலோடு இருக்கும் அவளை கஸ்டா தன் விடுதிக்கு கூட்டிக் கொண்டு வருகிறான். ஆனால் ஆழமான அந்த வதையுணர்வு அவளுள் தங்குகிறது. தன் கண்முன் வெளிறிய நீல நிறக் கண்கள் கொண்ட உருவமாக அந்த உணர்வைக் காண்கிறாள். நோய்மையின் தூதுவனைப் போல் அந்த உருவம் அங்கு இருக்கிறது. அதிலிருந்து அவளால் தன் கண்களை விலக்க முடியவில்லை. அது தரும் சலிப்பும் உணர்வின்மையும் அவளை முழுதாக ஆட்கொள்கிறது. கஸ்டா அவள் மேல் கொள்ளும் காதல் உணர்வைக்கூட அவள் அந்த சுரணையின்மையோடே பார்க்கிறாள். ஒரு சமயம் தன் தந்தை வந்து அழைக்கையில் தயக்கமில்லாமல் அவருடன் சென்றுவிடுகிறாள்.
இங்கு அந்த வெளிறிய நீலக் கண்கள் கொண்ட உருவம் எதை உணர்த்துகிறது என்பதை நம்மால் உணரமுடிகிறது. நோய்மையின் உணர்வின்மையாக பெண்ணின் உள்ளத்திற்குள் வரும் ஒன்று தன் காதலை புறக்கணிக்கும் இடம் வரை இட்டுச் செல்கிறது. மலைச் சரிவுப் பாறையின் முதல் உருளலை அந்த நீலக்கண் உருவம் அளிக்கிறது. ஒருமுறை நகர்ந்து விட்டால் அதை நிறுத்த முடியாது இருளில் பாதாளத்தில் சென்று தான் மறையும். கஸ்டாவின் காதல் அங்கு முடிவடைகிறது.
இதே சுயமழிப்பின் மற்றொரு கோணத்தை எலிசபத் எனும் கதாப்பாத்திரம் பரிணாமம் நமக்குத் தருகிறது. ஹென்ரிக் எனும் கணவனுடன் அமைதியாக வாழும் அவளும் கஸ்டாவை ஒரு விருந்தில் சந்திக்கிறாள். அவர்களுக்குள் ஏற்படும் பிணக்கு பின் ஒரு நாடகீயத் தருணத்திற்கு பின் நட்பாக ஆகிறது. கஸ்டா தான் எழுதும் கவிதைகளை அவளுக்குப் படித்துக் காண்பிக்கிறான். ஒருகட்டத்தில் ஊரார் அனைவரும் அவர்களின் உறவை காதலாக மாற்றிப் பேச அச்சிக்கல் அவள் வீட்டில் எதிரொலிக்கிறது. தன் கணவன் அவளை வீட்டில் சிறை வைக்கிறான்.
இந்த நாவலின் முக்கியமான உச்சப்புள்ளில் ஒன்று எலிசபத் அப்போது கொள்ளும் மனமாற்றம். ஊரில் அனைவராலும் வெகுளி என்றே அழைக்கப்படுபவள் எலிசபத். சிறுவயதில் இருந்து எந்த இக்கட்டுகளுக்குள்ளும் செல்லாதவள். ஒரு உரையாடலில் தன் கணவனைக் காதலிப்பதாக சொல்லும் போது மார்கெரிட்டா கிண்டலுடன் சொல்கிறாள் “நீ குழந்தையைப் போன்றவள் எலிசபத். குழந்தை தான் முதலில் பார்க்கும் எதையும் பிடித்திருக்கிறதென்றே சொல்லும்.” அப்படியானவளுக்கு முதன் முதலாக வாழ்க்கையின் குரூரம் வந்து அறைகிறது. அந்த அநீதியை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் தன் இயல்பான நற்குணத்தைக் கொண்டு அந்த நிகழ்வை அணுகுகிறாள். தனக்கு ஏன் இந்த அநீதி நடக்கிறது? அப்படியென்றால் தன்னையும் அறியாமல் ஏதோ தீங்கு செய்துவிட்டோமென்ற முடிவுக்கு வருகிறாள். ஏதோ வகையில் அந்த அநீதிக்கு தான் தகுதியானவள் என்றும் அதைப் போக்க அந்த தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறாள். ஒரு நாளைக்கு சொற்ப நேரம் மட்டுமே தூங்கி தன் மாமியார் சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்கிறாள்.
ஒரு கட்டத்தில் அந்த அதீத தண்டனையின் அழுத்தத்தை விரும்பி அனுபவிக்க ஆரம்பிக்கிறாள். எந்த சூழ்நிலையிலும் தன்னால் வாழமுடியும், வாழ்வின் எந்த சிறு சௌகரியமும் தேவையில்லை என்கிற நிலைக்குத் தான் வந்துவிட்டதை உணர்கிறாள். அப்போது அவள் கால்கள் வீட்டிலிருந்து கிளம்புகின்றன. அப்போது இவ்வாறு அவளைப் பற்றி சொல்லப்படுகிறது “நீங்கள் வழியில் நீளமான பழுப்பு அங்கியும் கைகளில் செருப்பும் தலைக்குப் பின்னால் வட்டத் தொப்பியுமாக ஒரு பெண்ணைக் காண நேர்ந்தால் அது எலிசபத்தாகத் தான் இருக்கும். ஆனால் அப்போது அவள் பிராயச்சித்தத்தின் வடிவாக இருப்பாள்.”
ஒரு முக்கியமான எதிரீட்டை வாசகர்கள் இங்கு கவனிக்க முடியும். எந்த நிலை கஸ்டாவுக்கு இருளின் அம்சமாக இருக்கிறதோ அது எலிசபத்துக்கு தியாகத்தின் அம்சமாக இருக்கிறது. ஆணுக்கு கேளிக்கையின் வழியாக உள்ள ஒன்று பெண்ணுக்கு விடுதலையின் வழியாக உள்ளது. நாவலில் மேற்கொண்டு அது விரித்தெடுக்கப் படவில்லை. ஆனால் ஆழமாக நம்மை யோசிக்க வைக்கும் இடம் இது.
கூடவே எலிசபெத் கொள்ளும் இந்த வெளியேறுவதற்கான உந்துதல் வேறொரு கோணத்தில் சிறையாகவும் சுட்டப்படுகிறது. எப்படி மரியானேவிற்கு நோய்மை என்பது உளவியல் தடையாக உள்ளதோ அப்படி எலிசபத் தன்னை மேலும் மேலும் வதைக்குள்ளாக்குவதில் ஒரு ஈர்ப்பை உணர்கிறாள். அது அவளுக்கு வீட்டிலிருந்து விடுதலையை அழித்தாலும் இன்னொரு வகையில் அவளை சிறையாக்குகிறது. இறுதியில் தான் கருவுற்றதை உணர்ந்து அப்பாதையில் இருந்து விலகி கஸ்டாவிடம் வருகிறாள். தனக்குள் இருக்கும் தாய்மை என்னும் உணர்வு மூலம் அந்தத் தளையைத் தாண்டுகிறாள் எலிசபத்.
இதுவரை பேசப்பட்ட விஷயங்களில் இருந்து ஒரு பொதுத்தன்மையை நாம் கண்டுகொள்ள முடியும். மனிதனின் வாழ்வை தீர்மானிப்பவை அருவமான விசைகள் என்பதும் ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னால் அதை இயக்கும் வாழ்வின் அடிப்படை விசைகள் உள்ளன என்பதும் இக்கதைகள் வைக்கும் வாழ்க்கைப் பார்வை. அது நோய்மையாக, வதைத்துக் கொள்ளும் விழைவாக, கேளிக்கை நோக்கிய ஈர்ப்பாக மனிதர்களுள் உள்ளன. அருவ விசைகள் எவ்வாறு நம் பரு வடிவ வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்னும் சித்திரம் இக்கதைகளில் இருந்து நம்மால் கண்டு கொள்ள முடியும்.
அப்படியென்றால் உச்சபட்ச இருள் விசையின் வடிவமாக ஏதாவது உள்ளதா? ஆம். இதில் சிண்ட்ராம்(Sintram) எனும் கதாப்பாத்திரம் வருகிறது. கவித்துவமும் திகிலும் கலந்த உணர்வைத் தூண்டும் கதாப்பாத்திரம் அது. நாவலில் அவன் சாத்தானின் பிரதிநிதியாகவே வருகிறான். ஒரு கோடைகாலத்து முன்பகலில் தேவாலயத்திற்கு வரும் சித்திரம் இந்த நாவலின் முத்திரை இடங்களில் ஒன்று. கடுமையான குளிரும் இருளும் கொண்ட பனிக்காலத்தில் முழு வலுவுடன் இருக்கும் சிண்ட்ராம் கோடைகாலத்தில் தன் வலிமை அனைத்தும் குன்றி வீட்டிற்குள்ளே இருக்கிறான். நகரும் எங்கும் அலங்கார வளைவுளும் வண்ணங்களும் நிறைந்திருக்க ஒருநாள் தன் குதிரை வண்டியில் ஓநாய்த்தோலால் தைக்கப்பட்ட கையுறைகளும் நீளமான தடித்த கருப்பு அங்கியும் அணிந்து இருட்டு நகர்ந்து வருவதைப் போல தேவாலயத்திற்கு வருகிறான். இருண்மை உருவாக்கும் அமைதி அங்கிருப்பவர்களை தழுவுகிறது. மெல்ல நடந்து தேவாலயத்தின் சரிவில் நின்று எதிரிலிருக்கும் காட்டைப் பார்க்கிறான். அவன் மனதில் அப்போது ஒரு எண்ணம் தோன்றுகிறது. இந்த சர்ச் கோபுரம் தெரியும் எல்லை வரை அனைத்து வீடுகளையும் தெருக்களையும் அழித்து அந்த காட்டின் பகுதியாக மாற்ற வேண்டும். அப்போது கரைபடிந்து இருண்டிருக்கும் தேவாலயக் கோபுரத்தை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறான்.
ஓரு கோணத்தில் மொத்த நாவலையும் சிண்ட்ராம் வார்ம்லாண்ட் எனும் நிலப்பகுதியில் வாழும் மக்களிடம் உருவாக்கும் எதிர்விசைகளின் தொகுப்பாகவும் பார்க்க முடியும். காட்டின் இருளும், பனியும், ஓநாய்களும், நோய்மையும், திகிலும் என பல முகங்களுடன் அவன் வெளிப்படுகிறான். அவனின் பிரதான குறிக்கோள் கஸ்டா பெர்லிங்கின் அழிவு. சிண்ட்ராம் சாத்தானின் பிரதிநிதி என்றால் கஸ்டா இயேசுவின் அம்சம் கொண்டவன். இயேசுவின் மூன்று சபலங்களுக்கு இணையாக சிண்ட்ராம் பலவற்றை நாவல் நெடுக கஸ்டாவிற்குத் தருகிறான்.
இந்த இணைப்பு வாய்மொழிக்கதைகளின் முக்கியப் பங்களிப்பு. நம்மிடம் ஏற்கனவே தொன்மங்களாக இறைக்கதைகளாக ஒரு களஞ்சியம் உள்ளன. இவ்வகையான வாய்மொழிக் கதைகள் அக்களஞ்சியங்களை நீட்டிக்கின்றன. கண்முன் கடந்து சென்ற வாழ்வை சாராம்சப்படுத்தி அவற்றுடன் இணைக்கின்றன. செல்மாவின் பாட்டி சிண்ட்ராமை தனி மனிதாகப் பார்ர்கவில்லை சாத்தானின் அம்சம் ஓங்கிய ஒருவனாக கதைக்குள் பார்க்கிறார்.
மேலும் இரண்டு விதமான கூறுமுறைகளையும் இந்த வாய்மொழிக்கதையில் செல்மா பயன்படுத்துகிறார். ஒன்று பேய்க் கதை அடுத்தது தேவதைக் கதை. இயல்பாக சிண்ட்ராமின் கதாப்பாத்திர இயல்பு பேய்க்கதை வடிவத்திற்கு உகந்ததாக இருக்கிறது. ஆனால் வெறும் திகலுணர்வுக்காக மட்டும் பயன்படுத்தப்படவில்லை. நாவலில் தொடர் கருப்பொருளான இருள் மற்றும் அதன் வலிமை என்பதன் நீட்சியாக அவை வருகின்றன.
சிண்ட்ராம் மனைவியின் கதைவழியாக அது கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக அவனின் இருள்வளையத்து சிறையில் இருக்கிறாள் அவன் மனைவி. அன்னாவின் முயற்சியால் அவள் அங்கிருந்து ஓரிரவு வெளியேறுகிறாள். பனிச்சகட வண்டியில் அவர்கள் செல்ல மெல்ல சிண்ட்ராம் வண்டியின் மணியோசை மனைவிக்குக் கேட்கிறது. அதைக் கேட்டு அவள் அரற்ற அன்னா அவளை சமாதானப்படுத்துகிறாள். இவ்வளவு விரைவில் நிலவரத்தை அறிந்து அவர்களைத் தொடர வாய்ப்பில்லை எனக் கூறுகிறாள். ஆனால் தனக்கு தொடர்ந்து அந்த மணியோசை கேட்கிறது; அது அவர் தான் என உறுதியாக சிண்ட்ராமின் மனைவி கூறுகிறாள். சத்தம் தொடர்ந்து வலுப்பெற்று கேட்க வண்டியிலிருந்து இறங்கிப் பின்னால் பார்க்கிறாள். அவள் எண்ணம் வடிவம்பெறுவது போல தூரத்து இருட்டில் இருந்து ஒரு வண்டி உருவாகிறது. இங்கு நுட்பமான ஒன்று சுட்டப்படுகிறது. எங்கெல்லாம் பலவீனமும் பயமும் இருக்கிறதோ அங்கெல்லாம் சாத்தான் உருவாகி எழுகிறான். ஒருவகையில் நாம் தான் அவனை உருவாக்கி எடுக்கிறோம்.
அதே போல் அற்புதமான தேவதைக் கதை ஒன்றும் நாவலில் வருகிறது. அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் ஆற்றலை ஒருவனுக்கு தேவதை வழங்குகிறது. கூடவே ஒரு நிபந்தனையும் விதிக்கிறது. ஒருமுறை மட்டுமே அவனால் அப்பொருளை உருவாக்கமுடியும். பொதுஜன பயன்பாட்டுக்காக அதை எண்ணிக்கைப் பெருக்கம் செய்யமுடியாது. படைப்பாற்றலாக்கும் இயந்திரமயமாக்கலுக்கும் இருக்கும் வேற்றுமையும் உறவையும் தொட்டுக் காட்டும் கதை அது.
இந்த நாவலின் ஆசிரியரான செல்மா லாகர்லெவ் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் படைப்பாளி. ஆனால் அதற்கு கணிசமாக விமர்சனங்களும் எழுந்தன. ஏன் அவை எழுந்தன என்பது இன்று யோசிக்கும் போது புரிகிறது. அன்று இலக்கியத்தின் மையப்பீடத்திலிருந்தது செவ்வியல் யதார்த்தவாதம். டால்ஸ்டாயும் தஸ்தாயேவ்ஸ்கியும் அதன் முதன்மை முகங்களாக இருந்தனர். இருவரது படைப்புகளும் அன்றாட யதார்த்த வாழ்வை ஒட்டி எழுந்தவை. அதில் இருக்கும் எல்லைகளும் போதாமைகளும் அவர்களது கருப்பொருட்களாயின. அதிலிருந்து எழும் முழுமை நோக்கிய தேடலே அவர்களது படைப்புகளை இட்டுச் சென்றன.
ஆதலால் கறாரான யதார்த்தவாதம் என்பது ஒரு முன்விதியாக அவர்களது படைப்பில் இருக்க வேண்டிய அவசியம் இருந்தது. படைப்புக்குள் இருந்த நாடகத் தருணங்கள் யாவையும் அந்த யதார்த்தத்தால் நிகர் செய்யப்பட்டு இருந்தன.
ஆகவே சற்று அதிக கனவம்சம் கொண்ட கற்பனாவாதம் ஒருவகையான இரண்டாம் தரம் கொண்டவையாக அன்றைய விமர்சகர்களுக்குத் தோன்றியது இயல்பானதே. எண்பதுகள் வரை கூட நவீனத்துவ அலை ஓயும் வரை அவ்விதமான மனநிலை நீடித்தது.
ஆனால் இன்றைய வாசகருக்கு கதை என்கிற வடிவமே தன்னளவில் மதிப்புமிக்கதாக உள்ளது. அதன் யதார்த்தப் பிண்ணனியோ அதன் நேரடியான அன்றாடத்தை சுட்டும் தன்மையோ அந்த வடிவத்திற்கான துணைப்பொருள் என்கிற அளவில் மட்டுமே முக்கியம் என்கிற பிரக்ஞை நம்மிடம் உள்ளது. அடிப்படையில் ஒரு புனைவு எந்தளவுக்கு படைப்பாற்றலுடன் வெளிப்பட்டுள்ளது என்பதே இன்று நம் முதன்மை அளவுகோல்.
அதன்படி பார்த்தால் இந்த நாவலின் தனித்தன்மைகளாக சமீபகால வரலாறை வாய்மொழிக் கதைகளாக ஆக்குதல், அதற்கு “டேல்” என்கிற வடிவத்தைப் பயன்படுத்துதல், அதன் மூலம் வாழ்க்கையின் அடிப்படை விசைகளை கவனப்படுத்துதல், எல்லாவற்றிக்கும் மேலாக கதை என்னும் வடிவத்தைக் கொண்டாடுதல் போன்றவற்றைக் கூற முடியும்.
இறுதியாக இக்கதைகளைப் பற்றிய ஒரு சிறிய குறிப்புடன் நாவல் நிறைவடைகிறது. ‘இப்பழங்கதைகளின் அர்த்த புஷ்டியால் வீங்கிப் பருத்துள்ளன இந்தத் தேனீக்கள். இவை தன் வழக்கமான தேன் கூட்டின் துளைகளுக்குள் நுழைய முடியாது. அவற்றுக்கான வழியை வாசகர்கள் தான் கண்டு சொல்ல வேண்டும்.’
இன்றைய காலகட்டத்து வாசகர்களாகிய நாம் நம்முடைய கற்பனை மீதான மதிப்பால் மனக்கூட்டின் துளைகளை பெரிதாக்கியுள்ளோம். அவற்றிற்குள் இத்தேனீக்கள் தன் புஷ்டி குறையாமல் நுழையட்டும். அதன் ரீங்காரத்தில் அவை அலைந்து திரிந்த காட்டின் பிரம்மாண்டத்தை உணர்ந்து கொள்வோம்.
*
This “Gosta Berling saga” is translated as “மதகுரு” by க.நா.சு