கவிதைகள் – கல்பனா ஜெயகாந்த்
”இசை”
இதை
இசைக்கவென
அணைத்து
என்
மடியமர்த்திக் கொள்கிறேன்
இன்று
முதல் மீட்டலிலேயே
சுருதி சேர்ந்து விட்டது
உள்ளம்
நிரம்பித்
தளும்புகிறது
ஒரு கேவலாய்..
மீண்டும்
மீட்டத்
துவங்குகிறேன்
அடி நாக்கு
வரை
கூட
இனிக்கிறது
எங்கோ
ஆழத்தில்
ஒரு
சின்னப் பறவை
வேக வேகமாய்
சிறகடித்துக் கொள்கிறது
இனி
பறத்தல்
தான்
மீட்ட மீட்ட
என்னிலிருந்து
எழுந்த
நானாய்
“பிழையமுது“
சரியின் பொருள் அவர் சொன்னது
பிழையின் பொருளும் தான்
பிழையின் பொருளும் நீயே என்கிறேன்
மறுசொல்லில்லை
ஆம்
அதுவும் நானே
என்கிறாய்
மறுபடியும் சொல்கிறேன்
உன்னில்
பிழையும்
நீயே
ஆம் எனக்கு அதுவும் பிடிக்கும்
நாணிச்
சிரித்த படி
பிழையமுதை உண்கிறாய்
“புதிது“
முடிந்து
பூரணமான
அழகிய
ஒரு சித்திரத்தை
அளிக்கிறேன்
கலைத்துப் போட்ட
ஒன்றைக் கொடு
என் கதையை
நானே எழுதிக் கொள்கிறேன்
என்கிறாள்
மனமும் தொடாத
முழுப்புதிது தான்
வேண்டுமாம்
பிச்சி
“கரை“
எத்தனை
முறை
வந்தறைந்தாலும்
கரையைத்
தாண்டுவதேயில்லை அல்லவா
என்றான் அவன்
தாண்டவில்லையெனினும்
தளும்புதல்
ஓய்வதேயில்லையல்லவா
என்றாள் அவள்
அந்தியைப் பார்த்தபடி
கைகோர்த்து
சிலைத்திருந்தனர்
இருவரும்
“ஒற்றை நரம்பின் கதை“
அந்தரக் காற்றில்
தானாய் அதிர்கின்றன
அவன்
தந்திகள்
அவ்விசையில்
திகையும்
நூலேணியின்
அடுத்த படியில்
காலடி வைக்கிறான்
கைகள் பற்றிக் கொள்ளவும்
அடுத்த காலடி எடுத்து வைக்கவுஂம்
இனியும்
திகைந்தால் தான் உண்டு
ஒரு காலில்
பறந்து கொண்டிருக்கும்
அவனை
கொஞ்சமே கொஞ்சமாய்
பதிலுக்கு
பற்றியிருக்கிறது
அம்மெல்லிய
நூலேணியின்
ஒற்றை நரம்பு
” இரண்டடி புள்ளி ஒரு துளி“
அவளின் சாம்ராஜ்யம் அவன்
இத்தனை தான் உயரம்
இத்தனை தான் அகலம்
ஒரு துளியிலும் துளி
அவன் பரப்பு
சொல்லோ
மனமோ
கூட
இரண்டடி
செல்லுபடியாகலாம்
இதற்கா
இத்தனை
உழைப்பு
அவன் வெறும் மனிதன்
அவள் ஒரு மடச்சி
*
கல்பனா ஜெயகாந்த்: கல்பனா ஜெயகாந்த்: தமிழ்விக்கி