அனைத்திலும் உறையும் பேரமைதி: சைதன்யா

IN OMNIBUS REQUIEM QUAESIVI
இங்குள்ள அனைத்திலும் நான் விழைந்தது அமைதியை

-சீராக் ஆகமம் 24:11

ஐரோப்பாவில் முழுக்க முழுக்க வணிகம் சார்ந்த சமுதாய அமைப்புமுறைக்குள் நகரங்கள் சென்ற பத்தாம் நூற்றாண்டு கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சியிலும் ஒரு திருப்புமுனை என்று கூறலாம். ரோமானிய ஆட்சியின்போது நகரங்களை மையமாகக்கொண்டு வளர்ந்து பரவிய இம்மதம் பத்தாம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ காலத்தில் உறைந்திருந்த கிராமப்புரங்களுக்கு பரவியது. மறைஞான (mysticism) மற்றும் நாடோடி (mendicant) சமயக் குழுக்கள் அங்கு செழித்து வளர்ந்தன. மேற்கு ஐரோப்பாவின் மலைகிராமங்களும், ஊர்களும் தங்களுக்கேயுரிய புனிதர்கள், தேவாலயங்கள், பக்தி மற்றும் துறவுமுறைகள் என பல்வேறு விதமாக கிறிஸ்தவ சமயத்தை வளர்த்தெடுத்தன.

வணிகம், வர்த்தகம் என்று விரைந்து வளர்ந்துவரும் நகரங்களும் இவற்றிலிருந்து முற்றிலும் விலகியிருந்த ஊர்களும், கிராமங்களும் இரு வேறு கிளைகளை கிறிஸ்தவத்தில் உருவாக்கியது. பாவ மன்னிப்பு, பிராயச்சித்தம், அர்ப்பணிப்பு என ஒருபுறமும். துறவு, ஏழ்மையை ஏற்று அலைதல், சமூக பணிகளில் ஈடுபடுதல் என மறுபுறமும். முதல் தரப்பு முழுக்க முழுக்க ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பிடிக்குள் இருந்தது. இரண்டாம் தரப்பினர் இதற்கு எதிரீடாக தனித்தியங்கும் குழுக்களாக, வேறு மடாலயங்களுக்கு கீழ் இயங்குபவர்களாக இருந்தனர்.  

இவை ஒன்றோடொன்று முரண்பட்டும், இணங்கியும் பல முக்கியமான தத்துவங்களையும், சிந்தனையாளர்களையும் உருவாக்கியுள்ளன. கடவுளின் ஆன்மாவை மதகுருமார்கள் மட்டுமல்லாமல் அனைவரும் உணர முடியும் என்றும், இறையியலுக்காக அல்லாமல் ஒருவர் தனி வாழ்க்கையில் ஆன்ம விடுதலைக்காக உலகியலிலிருந்து விலகியிருக்கலாம் என்பதும் இக்காலகட்டத்தில் பேசப்பட்டன. அடுத்த நாநூறு வருடங்களுக்கு ஐரோப்பாவில் உருவாகி வந்த ஜனநாயகம், மதம் சாரா ஆன்மீகம் மற்றும் தனிமனிதவாதம் ஆகியவற்றின் விதை இங்கிருந்து தொடங்குகிறது எனலாம்.

 “அவள் வீட்டில் இருந்தாள், உலகில் இருந்தாள் ஆனால் உலகியலில் இல்லை”

ஐடா ஆஃப் லியவ் என்ற 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெகீன் (beguine) ஒருவரின் வரி இது. பெகீன்ஸ்-பெகார்ட்ஸ் (Beguines-Beghards) பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய திருச்சபை சாரா கிறிஸ்தவ இயக்கங்களில் ஒன்று. கிறிஸ்தவ மடாலயங்களை மையமாக கொண்டு நிகழ்ந்த பல சீர்த்திருத்த இயக்கங்களுக்கு துவக்கப்புள்ளியாக பெகீன்ஸ்-பெகார்ட்ஸ் அமைந்தது. இதன் பெரும்பகுதி பெண்களால் மேற்கொள்ளப்பட்டது. இன்றைய பெல்ஜியமில் துவங்கி மேற்கு ஐரோப்பா முழுவதும் பரவியது. குறிப்பிடதக்க நிறுவனரோ நிறுவப்படுவதற்கான தோற்றுவாயோ இவ்வியக்கத்திற்கு இருக்கவில்லை.

சமூகத்திலிருந்து விலகி தங்களுக்கென்று தனித்துவமான ஆன்மீகம் ஒன்றை கண்டடைந்து வாழ விரும்பிய பெண்கள் புதிய விடுதிகளை (beguinages) உருவாக்கினர். பெகீன்ஸ் அமைப்பின் பெண்களுக்கு கத்தோலிக்க ஆர்டரின் இறுக்கமான விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கிய கன்னியாஸ்திரி மடங்கள் உவப்பானதாக இருக்கவில்லை. அவர்கள் கன்னியாஸ்திரிகளுக்கான ஏழ்மை, கற்பு, கீழ்ப்படிதல் என்னும் உறுதிமொழிகளை எடுக்க வேண்டியதில்லை. எப்போது வேண்டுமென்றாலும் விலகிச் செல்லும் சுதந்திரமும் இங்கு அவர்களுக்கு இருந்தது.

‘பெகீன்ஸ்’ இயக்கத்தின் வளர்ச்சியை நான்கு காலக்கட்டங்களாக வகுக்கலாம். உலகியலில் இருந்து விலகி இருக்க விரும்பும் பெண்கள் தனியாகவோ அல்லது பெற்றோருடனோ சமய மற்றும் சமூக செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தது முதல் கட்டம். பின்பு அவர்கள் ஒன்றிணைந்து சிறிய மடங்களை உருவாக்கினர். தங்களுக்கென்று விதிமுறைகளை உருவாக்கிக்கொண்டு பெருமடங்களாக அவை வளர்ந்தன. மருத்துவ உதவி, மக்கள் சேவை என அவர்கள் சமூக பொறுப்புகளையும் ஏற்று விரிய தொடங்கிய காலம் 12ஆம் நூற்றாண்டின் இறுதி. இன்று வரை நீடிக்கும் பெரும் பெகீன் மடங்களான Groot Begijnhof of Leuven போன்றவை நூறு முதல் ஐநூறு பெண்களை கொண்டு ஒரு காலத்தில் இயங்கியுள்ளன.

Groot Begijnhof of Leuven – Beguinage

தொடக்க கால பெகீன்களில் முக்கியமானவர் மேரி ஆஃப் ஒய்னீ (Marie of Oignies). இவர் பெரும் செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்தவர். பதினான்கு வயதில் திருமணம் செய்துவைக்கப்பட்டார். பின் மணவாழ்க்கையை துறந்து ஆன்மீக தேடல், சமூக சேவையில் ஈடுபட்டார். மேரியின் ஆளுமை பல பெண்களை பெகீன் இயக்கத்தை நோக்கி இழுத்துள்ளது. அவர்கள் மடங்களை நிறுவினர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொழுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் செயல்பட்டனர். இப்படி பல ஆளுமைகள் வழியாகவே இவ்வியக்கம் வளர்ந்து பரவியுள்ளது.

இது போன்று பல பிரபுக்குல பெண்கள், நடுத்தரவர்க்க பெண்கள் வந்து இணைந்து பங்காற்றி 12ஆம் நூற்றாண்டிற்குள் ஐரோப்பா முழுவதும் தாக்கத்தை செலுத்திய ஒரு இயக்கமாக இது இருந்தது. திருச்சபையின் பாதுகாப்பும் ஒரு கட்டம் வரை இருந்தது. ஒவ்வொரு ஊர்களிலும் இருந்த டொமினிக்கன், சிஸ்டெர்சியன் போன்ற மடாலயங்களை சேர்ந்த மடாதிபதிகளின் ஆதரவுடன் இவை செயல்பட்டன. ஆனால் சில இடங்களில் பெகீன்களிற்கு எதிரான மனநிலை இருந்தது. மக்களிடமும், திருச்சபையிடமும். ஒரு சில பெகீன்களின் நூல்கள் மத எதிர்ப்புவாதம் (heresy) என எரிக்கப்பட்டன. சில சமயங்களில் பெகீன்களும் உயிருடன் எரிக்கப்பட்டனர்.

Bust of Mary of Oignies

12ஆம் நூற்றாண்டில் அனுபவம் சார்ந்த மறைஞானம் (experiential mysticism), அறிதல் சார்ந்த மறைஞானம் (speculative mysticism) என்று இரு கிளைகளாக திருச்சபைகளுக்கு கீழும் அவற்றிலிருந்து விலகியும் மறைஞான தத்துவம் வளர்ந்தது. பெகீன்களின் தேடல் பெரும்பாலும் அனுபவம் சார்ந்த மறைஞானத்தை நோக்கியே சென்றது. இது குறித்து அக்காலக்கட்டத்தில் எழுதப்பட்ட நூல்களுள் பெரும் பங்கு பெகீன்களுடையது எனலாம்.

மெக்தில்ட் ஆஃப் மாக்டிபர்க் (Mechthild of Magdeburg) எழுதிய ‘பெருகியொழுகும் இறையின் ஒளி’ (Flowing Light of the Godhead) என்னும் நூல் இவ்வகையில் முக்கியமானது. இவர் இருபத்தி மூன்று வயதில் தனது ஆன்மீக தேடலுக்கான அழைப்பை ஏற்று ‘மாக்டிபர்க்’ என்னும் ஓர் ஊரை தேர்ந்தெடுத்து அங்கு நாற்பது வருடங்கள் முழு தனிமையில் வாழ்ந்தார். பின் உடல் நிலை காரணமாக ஸிஸ்டெர்ஸியன் (Cistercian order) திருச்சபை ஒன்றில் சேர்ந்து இப்புத்தகத்தை எழுத ஆரம்பித்தார்.

Mechthild of Magdeburg

கடவுளுக்கும் தனக்குமான உறவை அக்கால பிரபுத்துவ காதலின் (courtly love) மொழியில் எழுதினார்.

நீ என் மென்மையான தலையணை,
என் மிக அழகான படுக்கை,
என் அந்தரங்கமான ஓய்வு,
என் ஆழ்ந்த ஏக்கம்,
எனது ஆழத்தின் உன்னதம்.
நீ இறைமேல் நான் கொண்ட மயக்கம்,
என் கருணைக்கான தாகம்,
என் அகத்தீயின் வடிகால்.

-Mechthild of Magdeburg

சுயம் அழிந்து கடவுளுடன் ஒன்றாவதை காதலின், காமத்தின் மொழியில் விவரிக்கிறார். கிறிஸ்து அகத்திடம் (lady soul) அவளது ஆடைகளை களையச் சொல்லும் ஒரு இடத்தில் ”தான்” என்பதழிந்த அகம் கடவுளின் அகத்தின் உருவே என்று கூறுகிறார். இவரது அகத்திற்கும் கடவுளுக்குமான உறவு ஒரு மண உறவின் பல்வேறு உணர்வுகளையும் அதன் அந்தரங்க தன்மையையும் கொண்டுள்ளது.

இந்நூலால் மதஎதிர்ப்பாளர் (heretic) என திருச்சபையால் பழி சுமத்தப்படுவோம் என்றுணர்ந்தே மெக்தில்ட் பிற பெகீன்களின் உதவியுடன் 1270இல் எழுதினார். சமயப் புத்தகங்கள் பெரும்பாலும் லத்தீன் மொழியில் எழுதப்பட்ட இக்காலத்தில் இவர் ஜெர்மன் மொழியில் இதனை இயற்றினார். பெகீன்கள் பொதுவாகவே ஃப்ரெஞ்ச், ஜெர்மன் போன்ற அன்றாட மொழிகளில் புத்தகங்கள் எழுதினர். அவர்களின் சமய மொழியும் எளிதில் படித்தறியக் கூடியதாக இருந்தது.

மெக்தில்ட் ஆஃப் ஹாக்பன், ஹடவிஷ் ஆஃப் ப்ரபாண்ட் என பல பெகீன்கள் இன்றும் வழிபடப்பட்டு அவர்கள் நூல்கள் இறையியல் குறிப்புகளாக முக்கியத்துவம் வாய்ந்து விளங்குகின்றன. அவர்களுக்கு திருச்சபையில் சன்னதிகளும் தினங்களும் ஒதுக்கி கொண்டாடுகின்றனர்.

“அவ்வாறு தூய அன்பால் ஆட்கொள்ளப்பட்ட ஆன்மா
அனைத்தையும் களைந்து தோலுறிக்கப்பட்டு
கருணையின் தீயில் உடல் எரிக்கப்பட்டு
அதன் சாம்பல் பெருங்கடலின் மேல் அவளது இன்மையின் இருப்பால் வீசப்படும்…
இவ்வாரானவள் நோன்பிலும் திருச்சபை சடங்கிலும் 
சொல்லிலும் அவற்றின் பொருளிலும்
இங்கிருக்கும் எவற்றிலும்
அங்குள்ள ஒன்றிலும்
நீதியிலும் கருணையிலும் மேன்மையிலும்
உன்னத அறிதல்களிலும்
அன்பிலும் புகழிலும்
இவை எதிலும் கடவுளை அடைய விழைவதில்லை”

-மார்க்ரெட் பொரெட்

மெக்தில்ட் ஆஃப் மாக்டிபர்க்கிற்கு பின் வந்த பெகீன்களில் மார்கரெட் பொரெட் முக்கியமானவர். மார்கரெட் பொரெட் (Marguerite Porete 1250) பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் குறைவாகவே கிடைக்கின்றன. அவர் ஒரு நாடோடியான பெகீனாக இருந்திருக்கலாம் என்று அறிஞர்கள் ஊகிக்கின்றனர். அவரது ‘எளிய ஆன்மாக்களின் ஆடி’ (Mirror of Simple Souls) என்னும் நூல் அக்காலத்தில் மிகவும் பரவலாக வாசிக்கப்பட்டது. இதை எழுதியதற்காக heretic என்று திருச்சபையால் உயிருடன் எரிக்கப்பட்டார். மெக்தில்ட் போலவே இவரும் தன் பேச்சுமொழியான ஃப்ரென்ச்சில் இதை எழுதினார். பல விதங்களில் அக்கால சமயநூல் மொழியின் சாத்தியங்களை மிஞ்சும் அளவிற்கு ஆழமும் உணர்வு உச்சங்களும் இவர் எழுத்தில் இருந்தன.

Virgin Annunciate (Painting by Antonello da Messina, Palermo)

மெய்ஸ்டர் எக்ஹார்ட் (Meister Eckhart) போன்ற பெரும் ஆளுமைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது இந்நூல். மெய்ஸ்டர் எக்ஹார்ட் நியொ ப்ளேட்டானிக் (Neo Platonic) சிந்தனையில் பெரும் செல்வாக்கை செலுத்திய தத்துவவாதி, மறைஞானி. அவரது பிரசங்கங்கள் (sermons) இன்று வரை தத்துவத்திலும் ஆன்மீகத்திலும் கலையிலும் கூட பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. Meister Eckhart – The man from whom God hid nothing என்ற நூலில் இவரது பிரசங்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கிறிஸ்த்தவ மறைஞான ஆன்மீகத்தில் இந்நூலே உச்சம்.

மார்கரெட் பொரெட் திருச்சபையின் பிடியிலிருந்து விலகிச் சென்ற அக்கால மறைஞானிகளில் ஒருவர். எந்த வகையிலும் ஒரு மடத்துக்குள்ளோ திருச்சபை பொறுப்பிலோ இருப்பதென்பது ஆன்மீகத்திற்கு முற்றிலும் எதிரானது என்னும் கருத்தைக் கொண்டிருந்தார். அக்காலகட்டத்தின் (medieval period) தத்துவக் கல்வி முறைகளை (scholastic traditions) கற்று அவற்றின் போதாமையைக் குறித்து கூறியுள்ளார்.

பொதுவான மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் இந்நூல் ஆன்மீக பயணத்தின் கடைசி நிலையில் இருப்பவர்களுக்கானதாக அமைகிறது. அன்பிற்கும் ஆன்மாவிற்குமான உரையாடலாக செல்லும் இந்நூல் ஏழு படிநிலை கடந்து ஒரு ஆன்மா கடவுளை அடைவதைக் கூறுகிறது. முதல் மூன்று நிலைகள் கருணை, பக்தி, நற்செயல்கள். நான்காவது நிலையில் எல்லா அறங்களையும் ஆன்மா கடந்து செல்கிறது. இந்நிலையை ‘ஆன்மாவின் ஏழ்மை’ என பொரெட் குறிப்பிடுகிறார். ஐந்தாவது ஆறாவது நிலைகளில் அனைத்து சடங்குகளையும் கடமைகளையும் ஆன்மா கடக்கிறது. ஏழாம் நிலையில் ஆன்மா முற்றழிகிறது.

“தர்க்கம்:   ஆன்மா விழைவை விரும்புகிறது. கடவுள் ஆன்மாவில் விழைவை விதைக்கிறார். அப்படியானால் விழைவறுக்கும் ஆன்மா நிறைவுக்கொள்வதில்லை என்பதே என் புரிதல்

அன்பு:   தர்க்கமே உன் புரிதல் மிகவும் மேலோட்டமாக உள்ளது. முற்றழிந்த ஆன்மா கடவுளின் விழைவையே விழையும்… ஒரு உயிராக அவள் அற்பமானவளே… அவளுள் விழைவை விதைக்கும் கடவுள் இந்த பிரித்தறியும் திறனையும் கொடுக்கிறார். அவ்வாறு கடவுளின் விழைவை தன் விழைவாக ஏற்கும் உயிர் தன்னுள் விடுதலையும், ஞானத்தின், அன்பின், புகழின் உன்னத ஒருமையை உணரும். அகத்தின் ஆழத்தில் அவற்றை பூட்டிவைத்திருக்கும்”

தன்னை முற்றழிக்கும் ஆன்மா இறுதியில் சென்று சேரும் இடம் பிறப்பிற்கு முன் இருந்த பேரமைதி.

“அவனிடம் நான் அன்புகூர்வேன் என்றேன்
அது உண்மையில்லை
அவனே என்னிடம் அன்புகூர்வான்
அவனே உள்ளான், நான் இல்லை
நான் வேண்டுவதொன்றில்லை
அவன் விழைவதை அன்றி
அவன் விரும்புவதை அன்றி”

மார்கரெட் பொரெட் எந்த ஒரு அமைப்பையோ மடாலயத்தையோ சார்ந்திருக்கவில்லை. அவரது நூலில் கிறிஸ்தவ திருச்சபையை, ஆசாரங்களை, நோன்புகளை, சமய ஆய்வாளர்களை, ஒரு இடத்தில் பெகீன்களையுமே எதிர்த்து எழுதியிருக்கிறார். அவர் அலைந்து திரியும் வாழ்கையை கொண்டிருந்திருக்கலாம். இறுதி காலத்தில் மத எதிர்ப்புவாதியாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இடப்பட்டார். அவரது நூலில் ஆன்ம சுதந்திரம் குறித்து பேசுவோரின் (Heresy of the Free spirit) எதிர் கருத்துக்கள் உள்ளன என்பதே திருச்சபையின் குற்றச்சாட்டாக இருந்தது.

Free spirits என்று 12,13 ஆம் நூற்றாண்டுகளில் தங்களை அழைத்துக் கொண்ட அக்கூட்டமைப்பு திருச்சபையின் பாவம், பாவ மன்னிப்பு சார்ந்த இருக்கத்தையும் அவர்களின் கடவுள் குறித்த சித்திரத்தையும் எதிர்த்து எழுந்த ஒன்று. அவர்கள் விழைவுகளை மறுக்கவோ  திருச்சபையின் சட்டங்களுக்கு உட்படவோ வேண்டியதில்லை. தெய்வத்தின் சுதந்திரம் அவர்களுக்கு என்றனர். இந்த முழுமை நிலையை கடவுளின் இன்மையில் தன்னை அழித்தல் என அவர்கள் வகைப்படுத்தினர். இந்த வாழ்க்கையில் பாவம் செய்ய முடியாத ஒரு நிலையை அடைய முடியும் என்றும், இந்த நிலையில் துறவு, அர்ப்பணிப்பு, பக்தி ஆகியவை தேவையற்றது என்றும், ஏனெனில் இந்நிலையில் உலகியல் விழைவுகள் அவர்களின் தர்க்கத்தை பாதிக்காது என்றும் ஆன்ம சுதந்திரம் குறித்து பேசுவோரின் கூட்டமைப்பு (Brethren of the Free Spirit) குற்றம் சாட்டப்பட்டது. பூரணத்துவத்தை அடைவதற்கு கடவுள் ஒரு தடையாக இருக்க முடியும் என்று கற்பிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்.

இவற்றில் மூன்று கூறுகள் மார்கரெட்டின் ஆன்மாவின் ஆடி நூலில் கண்டடைந்தனர் திருச்சபையினர். ஒன்று “இறுதி நிலையில் ஆன்மா அறங்களிடமிருந்து விடைப்பெறுகிறது” என்னும் வரி. இரண்டாவது இறைவனின் ஆறுதல்கள் தன்னை முற்றழிக்க விழையும் ஆன்மாவிற்கு ஒரு தடை என்னும் அவரின் கருத்து. மூன்றாவது கருத்து முற்றும் கடந்த அந்த ஆன்மா இயற்கையின் தூண்டுதல்களுக்கு இணங்கலாம் என்பது.

ஒரு வருடம் சிறையிடப்பட்ட மார்கரெட் பொரெட் தன் கருத்துக்களை மாற்றிக்கொள்ளவில்லை. மன்னிப்பும் கோரவில்லை. அதனால் உயிருடன் சிதையேற்றப்பட்டார். அவரின் நூல் பிரதிகளை எரிக்க ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவரின் வரிகள் பெகீன்களின் சொல்லில் ஐரோப்பா முழுவதும் பரவியது. மார்கரெட் பொரெட்டின் பெயர் காலத்தில் மறைந்தும்கூட அவரின்  தாக்கம் மெய்ஸ்டர் எக்ஹார்ட் போன்ற மறைஞானிகள் மூலமாக தத்துவத்திலும் பல அறிவுத்தளங்களிலும் நிலைத்தது.

மெய்ஸ்டர் எக்ஹார்டின் ஒரு பிரசங்கத்தில் விவிலியத்தில் வரும் ஒரு வரியை குறித்து விவரிக்கிறார்.

“இங்குள்ள அனைத்திலும் நான் விழைந்தது ஓய்வை; அதற்கு ஆன்மா ‘என்னை படைத்தவன் என் குடிலுக்குள் ஓய்வெடுக்கிறான்’ என்று மறுமொழிந்தது.”

-சீராக் 24:11

அனைத்து உயிர்களும் விழைவது ஓய்வை என்கிறார் எக்ஹார்ட். படைத்தவன் படைப்பில் அமைதியை நாடுகிறான். படைப்பு படைத்தவனில். கடவுளின் அம்சமில்லாத ஒன்றை நாம் விழைவதில்லை. அனைத்து உயிர்களிலும் அமைதியை போல் கடவுளை பிரதிபலிப்பது வேறில்லை என்கிறார்.

Meister Eckhart

பல விதங்களில் பிற்கால ஐரோப்பிய சிந்தனையில் மறைஞானிகளின் பங்கிருக்கிறது. தனிமனிதவாதமேக்கூட ஒரு தனிமனிதனின் ஆன்மீக தேடலுக்கான சுதந்திரம் என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. அக்கால பெகீன்கள், மறைஞானிகள், நாடோடிகள் போல் முழு வாழ்கையையும் அலைந்து திரிந்து கடப்போரும், சமூகத்திலிருந்து விலகிச் சென்று வாழ்வோரும் விதைத்த கருதுகோள்களே அடுத்த ஐநூறு வருடங்கள் வளர்ந்து ஐரோப்பா முழுவதும் பரவியது. சமூகக் கட்டமைப்பையே மாற்றியமைத்தது. இதில் பெகீன்களின் பங்கும் அந்த அமைப்பில் கூட முழுதாக அடக்கமுடியாத மார்கரெட் பொரெட் போன்றவர்களின் பங்கும் உள்ளது. சுதந்திரத்திற்கான, ஆன்மீகப் பூரணத்துவத்திற்கான இவ்வேட்கை அனைத்தும் முதலில் எழுவது அகத்தின் ஆழத்தில் உறையும் பேரமைதிக்கான தேடலில்தான்.

எழுத்தாளர் சைதன்யா

***

2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *