”பாகீரதியின் வருகை”: எலெனா ஃபெராண்டேவின் புனைவுலகம்

-விக்னேஷ் ஹரிஹரன்

“நயமற்றிருந்தபோதும், தாக்கரேவையும் லேம்பையும் போல் தன் பேனாவின் ஒவ்வொரு அசைவையும் செவிக்கு இனியதாக்கும் நூற்றாண்டுகால மரபுவழித் தொடர்ச்சியுடைய நனவிலி மனம் அமையாதபோதும் அவள் தன் முதற்பெரும் பாடத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டாள் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. அவள் பெண்ணாகவே எழுதினாள். ஆனால் தான் ஒரு பெண் என்பதை மறந்த தன்னுணர்வற்ற பாலினத்தில் மட்டுமே வெளிப்படும் வியப்பூட்டும் பெண் தன்மை அவள் எழுத்தில் நிறைந்திருந்தது.”

-விர்ஜினியா வுல்ஃப்
A Room of One’s Own (1929)

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீன இலக்கியம் உருவானபோதே நவீன பெண்ணெழுத்தும் உருவாகிவிட்டது. ஆஃப்ரா பென், ஃபேன்னி பர்னி, எலிசா கார்ட்டர் எனும் முதல் தலைமுறை பெண்ணெழுத்தாளர்களின் பட்டியல் என்பது கிட்டத்தட்ட முதல் தலைமுறை நவீன இலக்கியவாதிகளின் பட்டியலேதான். ஆனால் கால அளவிலான பிரிவினை என்பது பெருமளவில் இல்லாதபோதும் பெண்ணெழுத்து நவீன இலக்கியத்தில் ஒரு தனிப்பிரிவாகவே இருந்திருக்கிறது.

18ஆம் நூற்றாண்டு வரையிலான கற்பனாவாதத்திற்கு எதிராக மைய நவீன இலக்கியம் புறவயமான சமூக, அரசியல், பொருளாதாரச் சூழல்களையும், மனித வாழ்வு சார்ந்த அடிப்படை கேள்விகளையும் கொண்ட யதார்த்தவாதத்தை கையிலெடுத்தபோது நவீன பெண்ணெழுத்தோ அதற்கு மாறாக குடும்பம், பாலியல் உறவுகள், தனி மனித உரிமைகள் சார்ந்த வேறோர் அகவயமான யதார்த்தவாதத்தை முன்வைத்தது. அடிப்படையில் ஆண்களின் வாழ்வு புற உலக அனுபவங்களாலும் பெண்களின் வாழ்வு உறவுகளாலும், ஒழுக்கங்களாலும் ஆட்கொள்ளப்பட்டிருந்ததே இதற்கான காரணம். குறிப்பாக 19ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் பெண்களின் மீதான ஒழுக்க மதிப்பீடுகளே மிகுந்திருந்தன. அத்தகைய நிலையில் முதல் தலைமுறை நவீன பெண்ணெழுத்தாளர்கள் அவ்வொழுக்க மதிப்பீடுகளை கேள்விக்குள்ளாக்க வேண்டியிருந்தது. அவ்வொழுக்க மதிப்பீடுகளுக்கு அப்பால் தங்கள் அகத்தையும் சம உரிமைகளுக்கான வேட்கையையும் அவர்கள் பிரதிபலிக்க வேண்டியிருந்தது. எனவே அன்று வரை அவர்களை பாடுபொருளாக மட்டுமே கொண்டு செயல்பட்ட கற்பனாவாதத்தின் கட்டமைப்புகளான காதல், மெல்லுணர்ச்சி போன்றவற்றை கைக்கொண்டு அவர்கள் தங்களுக்கான அகவயமான யதார்த்தவாதத்தை உருவாக்கினார்கள். ஆனால் அத்தகைய அகவயமான யதார்த்தவாதமே காலப்போக்கில் பெண்ணெழுத்தை வரலாற்றிலிருந்தும் புறவுலகின் பெரு நிகழ்வுகளில் இருந்தும் விளக்கியது.

குறிப்பாக சென்ற நூற்றாண்டில் அரசியல் புரட்சிகள், நவீனத்துவ சிந்தனைகள், போர்கள், அறிவியல் புரட்சிகள்,  கணினியின் வருகை என கரை புரண்டோடிய வரலாற்றின் பெருவெள்ளம் ஆண் எழுத்தாளர்களின் படைப்புகளில் பெரும்பாலான தளங்களில் பாய்ந்தபோது நவீன பெண்ணெழுத்தில் அந்த அனுபவங்களுக்கான பதிவுகள் மிகக் குறைவாகவே காணப்பட்டன. மாறாக இந்த பெரும் மாற்றங்களின் விளைவாக உருவான உறவுகள் சார்ந்த மாற்றங்கள், அகச்சிக்கல்கள், உரிமைகளுக்கான குரல்கள் போன்றவையே நவீன பெண்ணெழுத்தில் பிரதானமாக அமைந்தன. வரலாற்றையும் பெரு நிகழ்வுகளையும் களமாகக் கொண்டு எழுதப்பட்ட பெண் எழுத்தாளர்களின் குறிப்பிடத்தக்க படைப்புகளும் ஆண் கதாபாத்திரங்களையே பிரதானமாகக் கொண்டிருந்தன. ஒரு வகையில் நவீன பெண்ணெழுத்து கைக்கொண்ட அகவயமான யதார்த்தவாதத்தின் இலக்கணங்களே பெண் வாழ்வின் அனுபவங்களை வரலாற்றின் பெரும் பிரவாகத்தில் இயல்பாக பொருத்திப் பார்க்க தடையாக அமைந்தது. இதன் காரணமாகவே முதல் தலைமுறை பெண்ணெழுத்தாளர்கள் பெண் எனும் அடையாளத்தை இலக்கியத்தில் பதிவு செய்வதற்காக உருவாக்கிய பெண்ணெழுத்தெனும் தனித்துவமான வடிவமே காலப் போக்கில் அதன் சிறையாகவும் மாறிவிட்டது என நவீன பெண்ணிய சிந்தனையாளர்களும் விமர்சகர்களும் கருதினர்.   

எனவே சமகால பெண்ணெழுத்தை மதிப்பிடுகையில் அப்படைப்புகள் பெண்ணெழுத்தெனும் தனி வடிவத்திற்கு அளிப்பவற்றையும் அவை ஒட்டுமொத்தமாக நவீன இலக்கியத்திற்கு அளிப்பவற்றையும் ஒன்றாகக் கருத்தில் கொண்டே மதிப்பிட வேண்டியுள்ளது. அவ்வாறு இரண்டு தளங்களிலும் நிலைபெற்ற படைப்புகளே இன்றளவும் பெண்ணெழுத்தின் செவ்வியல் படைப்புகளாகக் கருதப்படுகின்றன. அவ்வகையில் இவ்விரு தளங்களிலும் புதிய உச்சங்களை எட்டியிருப்பவை சமகால இத்தாலிய பெண்ணெழுத்தாளரான எலெனா ஃபெராண்டேவின் படைப்புகள்.

புனைப்பெயரில் எழுதும் இத்தாலிய பெண் எழுத்தாளர் என்பதைத் தவிர ஃபெராண்டேவைப் பற்றிய எந்த தகவலும் பொதுவெளியில் இல்லை. அவர் அளித்த சொற்பமான பேட்டிகளில் தன் படைப்புகள் தன் துணையின்றி நிற்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தும் ஃபெராண்டேவின் வருகை கடந்த இரு தசாப்தங்களில் ஆங்கில இலக்கியத்தில் நிகழ்ந்த பெருநிகழ்வுகளில் ஒன்று.

நவீன பெண்ணெழுத்தின் வரலாற்றில் எலெனா ஃபெராண்டேவின் முதல் பிரதானமான பங்களிப்பென்பது அவர் பெண் வாழ்வெனும் தனித்துவமான அனுபவத்தை வரலாற்றின் பிரவாகத்தில் இணைத்து உருவாக்கியிருக்கும் பிரத்தியேகமான பெண்ணெழுத்து வடிவமே. தனி மனித வாழ்வை வரலாற்றோடு பிணைக்கும் காலத்தின் சரடுகளை அடிப்படையாகக் கொண்டு நவீன இலக்கியத்தில் எண்ணற்ற படைப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழில் அசோகமித்திரனின் “18வது அட்சக்கோடு” சுந்தர ராமசாமியின் “ஒரு புளியமரத்தின் கதை” போன்ற படைப்புகளில் தொடங்கி உலக இலக்கியத்தில் டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்” வரை இத்தகைய படைப்புகள் ஆண் எழுத்தாளர்களால் பல முறை கையாளப்பட்டிருந்தாலும் எலெனா ஃபெராண்டேவின் தனித்துவமென்பது அவர் அவ்வெழுத்து முறையை நவீன பெண்ணெழுத்தின் அகவயமான யதார்த்தவாத அழகியலோடு இணைத்து உருவாக்கியிருக்கும் தனித்துவமான பெண்ணெழுத்து வடிவமே. இதன் விளைவாக பெண்களின் அந்தரங்கமான அகச்செயல்பாடுகள் புறவுலகின் யதார்த்தங்களை சந்திக்கையில் உருவாகும் தனித்துவமான தருணங்களை, எலெனா ஃபெராண்டேவால் மிகத் துள்ளியமாக சித்தரிக்க முடிகிறது. நவீனத்துவ எழுத்தாளர்களின் பற்றற்ற அறிவார்த்தமும் பெண்ணெழுத்தின் அகவயமான உணர்ச்சிச் சித்தரிப்புகளும் அவற்றின் தனி வடிவங்களில் அடைய முடியாத செவ்வியல் தன்மையுடைய உச்சங்களை இதன் விளைவாக எலெனா எட்டுகிறார். அவரது நியோபோலிடன் நாவல்கள் “லீலா” “லெனு” எனும் இரு பிரதான கதாபாத்திரங்களின் அனுபவங்களின் வழியே பெண்களின் தனித்துவமான வாழ்வனுபவங்களை இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான இத்தாலியின் எண்பதாண்டு கால வரலாற்றின் பிண்ணனியில் துள்ளியமாக சித்தரிகின்றன. வரலாறும் சமூகச்சூழலும் நாவலின் பின்னணிகளாக மட்டுமின்றி அதன் கதாபாத்திரங்களின் செயல்களை நேரடியாக தீர்மானிக்கும் தீவிரமான இயங்குவிசைகளாகவும் செயல்படுகின்றன. போர், வறுமை, இடதுசாரி இயக்கங்கள், கணிணிப் புரட்சி, பெண்ணிய சிந்தனைகள், நவீன இலக்கியம் என சென்ற நூற்றாண்டின் பெரு நிகழ்வுகள்   அனைத்தும் நாவலில் நேரடியாகவே தாக்கம் செலுத்துகின்றன. அவற்றினிடையே லீலாவும் லெனுவும் மட்டுமின்றி நாவலின் அனைத்து பெண் கதாபாத்திரங்களும்  அவர்கள் வாழும் நேபில்சின் காலத்தில் கலந்திருக்கிறார்கள். அவர்களது தனி வாழ்வும் நேபில்சின் புறச்சூழலும் காலம்தோறும் முயங்கி உருவாக்கும் அபாரமான அறிவார்த்தமும் தீவிரமான நுண்விவரணைகளும் கொண்ட உச்சங்களின் வழியாகவே ஃபெராண்டேவின் நாவல்கள் செவ்வியல் தன்மைகொள்கின்றன.

“எங்களோடு முற்றத்தில் விளையாடிய அல்லது விளையாடாத, எனக்கு பெயரளவில் மட்டுமே தெரிந்த லூயிஜினா, டைஃபஸில் இறந்தாள். எங்கள் உலகம் அத்தகைய உயிர்கொல்லிச் சொற்களால் நிறைந்திருந்தது. மூச்சுக்குழல் அழற்ச்சி, டெடனஸ், டைஃபஸ், விஷவாயு, போர், லேத், இடிபாடுகள், வேலை, குண்டுவீச்சு, வெடிகுண்டு, காசநோய், நோய்த்தொற்று. இச்சொற்களையும், அக்காலத்தையும் நினைவுகூறும்பொழுது என் வாழ்நாள் முழுவதும் என்னை பின்தொடர்ந்த பல விதமான பயங்களையும் நினைவுகூர்கிறேன்.” எனும் வரிகளில் வெளிப்படும் நுண்ணுணர்வும் அறிவார்த்தமும் நிறைந்தவை ஃபெராண்டேவின் படைப்புகள்.

அவரது இரண்டாவது முக்கிய பங்களிப்பென்பது அவர் உருவாக்கும் யதார்த்த வெளியின் வடிவம் சார்ந்தது முழுமையாக யதார்த்த தளத்தில் செயல்படுவதான பிம்பத்தை தரக்கூடிய ஃபெராண்டேவின் படைப்புகளை சில சர்வதேச இலக்கிய இதழ்கள் யதார்த்தவாத படைப்புகளாக வகைமைப்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அவரது புனைவு வெளியோ மிக நுட்பமான படிமங்களாலும் மாய யதார்த்தங்களாலும் நிறைந்திருக்கிறது. லீலாவின் எல்லைகள் அழியும் நோய், வடிவம் மாறும் வெண்கல பாத்திரம், சொலாராக்களின் சிகப்புப் புத்தகம், குட்டி தேவதை எனும் சிறுவர் நாவல், கணிணி அல்காரிதத்தின் மொழி, லீலா-லெனுவின் பொம்மைகள் என நேரடியான படிமங்கள் நாவல் முழுவதும் நிறைந்திருக்கின்றன. அவை தவிர்த்து லீலா லெனுவின் பாத்திரப் படைப்பு, காலத்தின் புலப்படாத வலை பின்னல் உருவாக்கும் அபாரமான தருணங்கள், டான் அக்கிலேயின் இருப்பு, லெனுவின் தாய், காதலினால் பித்தாகித் திரியும் மெலினா என நாவல்களின் அடித்தளமோ நுட்பமான மாய யதார்த்த படிமங்களால் நிறைந்திருக்கிறது. முழுக்க ஆழ்படிம வெளியாலும் நிறைந்திருக்கிறது. இவ்வாறு நுட்பமான யதார்த்த தளத்தையும் அதன் அடித்தளத்தில் வலுவான மாய யதார்த்த படிமங்களையும் இணைத்து உருவாக்கும் புனைவுகளின் வழியே ஃபெராண்டே ஓர் பெரும் தொண்ம வெளியை கட்டமைக்கிறார். அவ்வெளியின் ஊடுபிரதித் தன்மையின் காரணமாக அது ஒட்டுமொத்த பெண்ணெழுத்தின் படிம வெளியாகவும் செயல்படுகிறது. ஒரு வகையில் ஃபெராண்டேவின் படைப்புலகை உலகின் முதல் பெண்ணிய தொன்ம வெளியாகவும் கருதலாம்.

மூன்றாவதாக நவீன பெண்ணிலக்கியத்தில் பெருநாவல்களுக்கான இடத்தை எலெனா மீட்டிருக்கிறார். பெண்களின் அந்தரங்கமான வாழ்வனுபவங்களைக் கொண்டு இதிகாச அளவிலான ஓர் நவீன பெருநாவலை நுட்பமாக உருவாக்குவதன் வழியே பெண்ணெழுத்தின் எல்லைகளை அவர் நிரந்தரமாக மறுவரையறைக்கு உட்படுத்தியிருக்கிறார். பெரும் களங்களும் நுண் விவரணைகளும் ஒருசேர அமைந்த ஓர் நவீன புனைவு வெளியில் செயல்படும் எலெனாவின் நாவல்கள் சமகால உலக இலக்கியத்தில் முக்கியமானவை. அதிலும் தீவிர இலக்கியம், பெருநாவல்களை முழுவதுமாக வணிக இலக்கியத்திற்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கும் நம் காலத்தில் எலெனா அவற்றுக்கான புதிய சாத்தியங்களை கண்டடைந்திருக்கிறார்.

ஆனால் இவை அனைத்திற்கும் மேலாக அவர் ஆற்றியிருக்கும் பெரும் பங்களிப்பென்பது மேற்கூறிய அனைத்தையும் அவர் பெண் வாழ்வின் அனுபவங்களுக்கு உண்மையாக செய்திருக்கிறார் என்பதுதான். எந்த தளத்திலும் ஆண் எழுத்தாளர்களையோ அவர்களது அனுபவங்களையோ நகல் செய்யாமல் பெண் வாழ்வின் அனுபவங்களை தன்னளவில் உண்மையாகவும் முழுமையாகவும் எலெனா பிரதிபலித்திருக்கிறார். அதன் வழியே உலக இலக்கியத்தில் ஓர் அசலான பங்களிப்பை அவர் ஆற்றியிருக்கிறார். மகத்தான வரலாற்று நிகழ்வுகளின் மத்தியில் வாழும்பொழுதும் ஃபெராண்டேவின் கதைமாந்தர்கள் கரைபுரள காதலிக்கவும், காமம்கொள்ளவும், பிற பெண்களின் மீது பொறாமைபடவும், ஆண்களிடம் ஏமாறவும், குழந்தைகளை கண்டிக்கவும், மறப்பதில்லை. ஆனால் அவர்கள் அவற்றுள் கட்டுண்டுவிடுவதும் இல்லை.

விக்னேஷ் ஹரிஹரன்

ஒரு அயல்மொழி எழுத்தாளரை தமிழுக்கு அறிமுகப்படுத்துகையில் அடிப்படையாக கேட்கப்பட வேண்டிய கேள்வி அவர் தமிழுக்கு அளிக்கக்கூடிய ஏதேனும் உண்டா என்பதுதான். அப்படி குறிப்பிடத்தக்க ஏதும் இல்லாத பட்சத்தில் அவரை அறிமுகப்படுத்துவதென்பது வெறும் அகங்காரச் செயல்பாடுதான். அந்த வகையில் எலெனா ஃபெராண்டேவை இங்கு அறிமுகப்படுத்துவதற்கான மிக வலுவான காரணங்கள் சமகால தமிழ் பெண்ணெழுத்தில் இருப்பதாகவே நினைக்கிறேன். இவரை எனக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனுக்கு நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளேன்.

-விக்னேஷ் ஹரிஹரன்

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *