“அகத்தளம்” – சுரேஷ் பிரதீப்

உமாமகேஸ்வரியின் “யாரும் யாருடனும் இல்லை” நாவலை முன்வைத்து

எழுத்தாளர் உமாமகேஸ்வரி

1

ரயில் நிலையங்களில் தினசரி நாளிதழ்களுடன் இன்றும் ‘குடும்ப நாவல்’ என்ற வகைமையில் சில நூல்களைக் காண முடியும். பெரிய கண்களுக்கு மை எழுதி மெல்லிய உதட்டுச்சாயம் பூசி மெல்லிய சேலை உடுத்திய பெண்களை இதுபோன்ற பெரும்பான்மை நாவல்களின் அட்டைப்படங்களில் காணலாம். இருபது வருடங்களுக்கு முன்பு இத்தகைய எழுத்துக்களை வாசித்து இருக்கிறேன். சமீபத்தில் கிண்டிலில் ‘பெஸ்ட்செல்லர்’ தமிழ் நூல்களின் வரிசையிலும் இந்த ‘குடும்ப நாவல்’ வகை நூல்களே முதலிடம் பிடித்திருந்தன. அதுபோன்ற சில நூல்களை கிண்டிலில் புரட்டி வாசித்துப் பார்த்தபோது ஒன்றை உணர முடிந்தது. பழைய குடும்ப நாவல்களில் ஏதாவது ஒரு ரமேஷுக்கும் லதாவும் இடையேயான உறவுச்சிக்கல்கள் சென்னை அல்லது டெல்லி பின்புலத்தில் எழுதப்பட்டன. தற்போது அவை அமெரிக்க பின்புலத்தில் எழுதப்படுகின்றன. இதுபோன்ற எழுத்துக்களின் தொடர்ச்சியாகவே இன்று வெளியாகும் திரைத்தொடர்கள் சென்ற நூற்றாண்டில் வெளியான ‘குடும்ப’த் திரைப்படங்களைப் பார்க்க வேண்டி இருக்கிறது. இதுபோன்ற எழுத்துக்கள் மற்றும் படங்களின் அடிப்படையைப் பற்றிய ஒரு புரிதல் நமக்கு அவசியமாகிறது. இவ்வெழுத்துக்கள் அடிப்படையில் குடும்பத்தை ஒரு ‘லட்சிய’ வடிவமாக எடுத்துக் கொண்டு அதில் நிகழும் பிழைகளை சுட்டிச் செல்கின்றன. நாயகனும் வில்லனும் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றனர்.‌ ஆனால் நம்முடைய நினைவில் இருக்கும் குடும்ப அமைப்புக்கும் இந்த எழுத்துக்களுக்கும் துளியும் தொடர்பு இருப்பதில்லை. அந்த தொடர்பின்மையின் காரணமாகவே இவை வெகுவாக சிலாகிக்கப்படுகின்றன. என் ஊரான தக்களூரில் டைனோசர்கள் அலைகின்றன என்று சொல்லி யாரும் எழுதினால் எனக்கு மகிழ்ச்சி ஏற்படும்தானே! வெகுஜன வாசிப்பைப் பெற்ற இந்தக் குடும்பக் கதைகளும் அப்படி அவரவர் வீட்டில் அலையவிடப்பட்ட டைனோசர்களே. மெல்லிய பாலியல் கிளர்ச்சியை அளிக்கும்படியான இவ்வெழுத்துக்களால் குடும்ப அமைப்பின் ஆதார சிக்கல்களை தொட முடிந்ததில்லை. இன்று தமிழகம் முழுவதும் மனப்பிறழ்வோ என்று எண்ணுமளவு எந்த சுவாரஸ்யமும் இல்லாத தொலைக்காட்சி தொடர்களை பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம் அவற்றில் நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கையின் எளிய தீற்றல்கூட இல்லை என்பதுதான்.

இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரை ஒரு தமிழ் குடும்பம் என்பது மிக விரிவான ஒரு அமைப்பாக இருந்தது. பெற்றோர் குழந்தைகளை மட்டுமே கொண்ட ஒரு தனி அமைப்பாக இல்லாமல் பெரியப்பா,சித்தி,அத்தை,ஓர்படி,நாத்தி,கொழுந்தனார் என விரியும் பெரிய வலையாக நம்முடைய குடும்ப அமைப்பு இருந்தது. இந்த அமைப்பின் உண்மையான சிக்கல்களை நவீன இலக்கியமும் குறைவாக பதிவு செய்திருக்கிறது. எந்த ஒரு அமைப்பையும் அதன் மீதான மயக்கங்கள் இன்றி பார்க்க உதவும் கருவிகள் நவீன இலக்கியத்திலேயே உள்ளன. ஆனால் ஆரம்பகால நவீன எழுத்தாளர்கள் பலர் நகர்புற பின்னணி கொண்டவர்களாக இருந்தனர். அல்லது குடும்பத்தின் சிக்கல்களை அது தன்னை நேரடியாக பாதிக்கும் வரை பொருட்படுத்தி நோக்கும் தன்மை அற்றவர்களாக இருந்தனர். குடும்பத்தை பிரிந்து விட்டேத்தியாக அலைந்து புற உலகில் இருந்து கிடைக்கும் அனுபவங்கள் அடிப்படையில் எழுதப்படுவதே நல்ல எழுத்து என்றொரு பார்வையும் இருந்தது. நவீனத்துவ காலத்துக்கு பிறகாக எழுதப்பட்ட ஆழிசூல் உலகு, நுண்வெளி கிரகணங்கள் போன்ற நாவல்களின் வழியாக குடும்ப அமைப்பின் சிக்கல்கள் விரிவாக பேசப்படுகின்றன. ஆனால் அவையும் பெரும்பாலும் வரலாற்று நோக்கில் இருந்தும் அரசியல் நோக்கில் இருந்தும் குடும்பத்தை அணுகின. சங்க இலக்கியம் அகம் புறம் என்று பிரித்தால் குடும்ப வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பல நாவல்களை புறப்பாட்டுகள் என்றே சொல்ல முடியும். ஏனெனில் இது போன்ற நாவல்களை ஆண்களே பெரும்பாலும் எழுதினர். அதாவது பெரும்பாலான நேரம் வீட்டினுள் புழங்காதவர்களால் வீடு எழுதப்பட்டது.

பெண்கள் குடும்பங்களைப் பற்றி எழுதிய ஆக்கங்களும் தமிழில் உண்டு. வாசவேச்வரம் போன்ற விமர்சனப்பாங்கிலோ நிலாக்கள் தூரதூரமா,நாடுவிட்டு நாடு போன்ற தன்வரலாற்றுத் தன்மை கொண்ட படைப்புகளும்தான் நம் குடும்பங்களைப் பற்றி பெண்கள் எழுதிய முக்கியமான ஆக்கங்களாக இருக்கின்றன. ஆனால் ஒரு வீட்டினுள் மட்டுமே பல வருடங்களாக நிகழ்கிறவற்றை நாவலுக்குரிய அத்தனை சாத்தியங்களையும் பயன்படுத்திக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் என்று உமா மகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை நாவலைச் சொல்ல முடியும்.

இந்நாவலைப் போன்ற ஒன்று தமிழில் இதற்கு முன்னதாக எழுதப்படாததற்கான காரணங்களும் புரிந்து கொள்ளக் கூடியது. உமா மகேஸ்வரி இந்த நாவலின் வழியாக சித்தரித்திருக்கும் குடும்பம் தொடர்ச்சியாக குடும்பத்தின் செயல்பாடுகளை அவதானிக்கும் கண் கொண்ட ஒருவரால் மட்டுமே உருவாக்கப்படும் சாத்தியம் கொண்டது. ஆனால் தமிழ்ச்சூழலில் எழுத முனையும் பெண்கள் ஏதோவொரு வகையில் தங்களை புறனடையாளர்களாக மாற்றிக் கொள்கின்றனர். ஆண்டாள்,ஔவையார், காரைக்கால் அம்மையார் என மரபில் இருந்தும் புறனடையாளர்களுக்கு உதாரணங்களைச் சுட்ட முடியும். நவீன இலக்கியத்திலும் ஒரு பெரும்போக்கான வாசிப்பில் பெண் தன்னிலை என்பது இத்தகைய புறனடைத்தன்மை கொண்டதாக விலகி நின்று கேள்வி கேட்பதாகவே வெளிப்படுகிறது. அத்தகைய விலகல் தன்மை கொண்ட குரல் இயல்பானதே என்றாலும் விமர்சனத் தொனியுடன் குடும்பச் சூழலை அணுகும்போது எழுத்திற்கு ஒரு ஒற்றைப்படைத்தன்மை வந்து விடுகிறது.

யாரும் யாருடனும் இல்லை நாவலின் தனித்துவம் என்பது நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குடும்ப அமைப்பு பற்றியும் குடும்பத்தில் பெண்கள் இடம் குறித்தானதுமான கூர்மையான அவதானிப்பும் அதேநேரம் இலக்கியவாதிக்கே உரிய விமர்சனத் தொனியும் மிகச் சரியாக இணைந்து வெளிப்படுவதுதான்.

யாரும் யாருடனும் இல்லை நாவல்

2

பொதுவாக தமிழ் நாவல்களில் குடும்ப கட்டமைப்பு என்பது ஒரு ‘இயல்பு’ நிலையில் இருந்து ‘சீரழிவு’ நிலை நோக்கிச் செல்வதான சித்திரங்களே பெரும்பான்மையாக கிடைக்கிறது. அல்லது எதுவுமே நிகழாத தட்டையான சித்தரிப்புகள். யாரும் யாருடனும் இல்லை என்ற தலைப்பின் வழியாகவே இந்த நாவல் தான் வரித்துக் கொண்ட களத்தின் வேறுபட்டத் தன்மையை உணர்த்தி விடுகிறது. நாவலின் களமாக அமைந்திருப்பது பொன்னய்யாவின் வீடு மட்டுமே. ஆற்றங்கரைக் கோவில்,மருத்துவமனை,குதிரை வண்டி என சில இடங்கள் நீங்கலாக நாவல் முழுக்க நிகழ்வது அந்த வீட்டிற்குள் மட்டுமே. வீட்டிற்குள்ளேயே நிகழ்வதால் இயல்பாகவே ஒரு நாளின் பெரும்பகுதியை வீட்டுக்கு வெளியே கழிக்கும் ஆண்களைப் பற்றிய சித்தரிப்புகளும் நாவலில் குறைவாகவே – ஆனால் கூர்மையாக – வெளிப்படுகின்றன.

ஒரு இடத்தில் வீட்டுக்கதவு திறக்கப்படும் சத்தத்தைக் கொண்டே இந்த நாவல் யாரைப் பற்றியது எந்தப் புரிதலை வாசகனுக்கு கடத்திவிட ஆசிரியரால் முடிந்திருக்கிறது.

/அந்தக் கதவு ஒவ்வொருவரோடும் ஒவ்வொரு மாதிரி உரையாடும். பிள்ளைகள் வந்தால் கலகலக்கும்‌ தாத்தா வந்தால் திடமும் நிதானமுமாக ஒரேயொரு முறை கொண்டி விலகும். மணியின் பரபரப்பும் விசுவாசமும் தொனிக்கும் அவசரத் திறப்பு. குணாவோடு உல்லாசமும் பெரிய மகன்களோடு அலட்சியமும் கூடவரும். மருமகள்களின் விரல்களை அறிந்ததே இல்லை அந்தக் கதவு./

கைக்குழந்தையான பானு தொடங்கி பாட்டியாகிவிட்ட அன்னம்மா வரை அத்தனை வயதிலும் நாவலுக்குள் பெண்கள் உலவுகின்றனர். அத்தனை பேரின் உணர்வுகளும் மிகத்துல்லியமாக வெளிப்படுகின்றன. தன் உடலின் மீது கொண்ட கசப்பினால் பேரன் பேத்திகள் எடுத்த பிறகும் பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் பொன்னய்யாவை எண்ணி மருகும் அன்னம்மா, கடுமையான உடல் உபாதைகளுடன் தொடர்ச்சியாக பெண் குழந்தைகளையே பெற்றுப் போடுகிறவள் என கணவனால் கடுமையாக வெறுக்கப்படும் தனமணி, சித்தப்பா வாங்கிக் கொடுத்த தபால்பெட்டியில் கடவுளுக்கு கடிதங்கள் எழுதும் பயந்த சுபாவம் கொண்ட சிறுமியான அனு என ஒரே வீட்டினுள் வெவ்வேறு வகையான குண வார்ப்புகளுடைய பெண்களை மீள மீள சந்திக்கிறோம். இப்பெண்களின் தந்தைகளாக,கணவர்களாக இடம்பெறும் பொன்னம்மா,தர்மராஜ்,செல்வம், குணா போன்ற ஆண்களின் சித்தரிப்பும் , பெண்களை கொடுமைப்படுத்துவதே அவர்களின் நோக்கம் என்கிற ரீதியில் இல்லாமல் அவர்களுக்குரிய சிக்கல்களுடன் வெளிப்பட்டிருக்கிறது.

உதாரணமாக குணா. பொன்னய்யாவின் கடைசிமகன். ஒரு வகையில் சிறுவன்.‌ மற்றொரு வகையில் அண்ணன்களின் குழந்தைகளுக்கு ‘சித்தப்பா’. இளைமையான கண்டிப்பில்லாத அப்பா என்பதாலேயே அவர்களின் ‘ஹீரோ’. அவனுடைய தாய் அன்னம்மா இறக்கும் பொழுது அவனுக்குள் ஏற்படும் நிலையழிவும் வினோதினியுடனான அவனது உறவும் அவன் அகத்தை சீரழிக்கிறது. வெவ்வேறு அத்தியாயங்களில் குணாவைப்பற்றி சொல்லப்பட்டிருக்கும் தனித்தனியான குறிப்புகளில் இருந்தே அவனைப்பற்றி முழுமையான ஒரு சித்திரத்தை நம்மால் அடைந்துவிட முடிகிறது.

உடல் ஊனமுற்றவளாக பொன்னய்யாவின் வீட்டுக்கு வரும் சுப்பக்கா, பொறுப்பற்ற கணவனிடம் அடிவாங்கிக் கொண்டே காலம் கழிக்கும் பூரணி என சுருக்கமாக தீட்டப்பட்ட பாத்திரங்களைக்கூட முழுமையாக நினைவுகூறும்படி அமைத்திருப்பது நாவலின் முதன்மையான பலம் என்று சொல்லலாம். இந்த தீற்றலுக்கு துயரங்களை பக்கம் பக்கமாக விவரிக்காமல் ஒரு சில வார்த்தைகளில் கூர்மையாகச் சொல்லிவிடும் பாங்கு முக்கிய காரணம்.

/தினசரி உயர்ந்தும் தாழ்ந்தும் எரியும் அடுப்பு நெருப்பில் மாற்றி மாற்றி தங்கள் பொழுதுகளைப் போட்டு கொளுத்திக் கொண்டிருப்பார்கள் அந்த வீட்டின் பெண்கள்/ என்ற வரி ஒன்றே‌ அவர்களுடைய மாற்றமற்ற அன்றாடத்தை சுட்டிவிடுகிறது.

/அம்மா அவரது மனைவியென்பதற்கான சகஜமோ நெருக்கமோ அவர் தோற்றத்திலோ அசைவுகளிலோ இருக்காது. அவர்களின் குழந்தைகள் வெறும் இருளின் கருக்களோ என்று ஐயுறச் செய்யும் அந்த ஒட்டுதலின்மை/

இருளின் கருக்கள் என்ற சொல்லின் வழியாக அவ்வீட்டின் ஆண்களுக்கும் பெண்களுக்குமான காதலின்மை மிகச் சரியாக உணர்த்தப்பட்டுவிடுகிறது. நாவல் நிகழும் காலமான பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளில் ஏறத்தாழ எல்லா காலங்களிலும் யாரோ ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள். ஆனாலும் சல்லாபம் போன்ற ஒரு வரிகூட நாவலி இடம்பெறுவதில்லை.

உதிரி உதிரியாக சொல்லப்படுகிறவற்றில் இருந்து முழுமையான சித்திரம் நோக்கி வாசகரே பயணிக்க வேண்டிய சவாலை நாவல் அளிக்கிறது என்றாலும் ஒரு சில அத்தியாயங்கள் தன்னளவில் முழுமை கொண்ட சிறுகதைகள் போல வெளிப்படுகின்றன.

வாணியின் மாதவிடாய் சுழற்சி தொடங்கிய பிறகு அவள் அக உணர்வுகளை பேசியிருக்கும் அத்தியாயம் தமிழ் இலக்கியத்தின் அகவய சித்தரிப்புகளில் ஒரு உச்சம் என்று சொல்லலாம்.

/அவளிடமிருந்து ஏதோவொன்று அவளை கடந்து செல்கிறது. ரயில் பயணத்தின் போது கண்ட குழந்தை முகமோ, பூக்களின் அசைவோ,மழைக்காலத்தின் இதமான குளிரோ போன்ற எதுவோ ஒன்று. ஒருவேளை அவள் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு நகர்த்தி வைக்கப்படுகிறாள்.மிகவும் பழகிய நிம்மதியான களிப்பு நிறைந்த பருவத்திலிருந்து புதிதான புரியாத இன்னொரு உலகத்திற்கு/ என்று அகவயமாக தொடங்கும் அந்த அத்தியாயம் பல்வேறு உணர்வுச்சுழிப்புகளை சித்தரித்து /அவள் உடல் திறந்துகொண்ட ஈ

உடனேயே வெளி உலகின் கதவுகளை அம்மா அடைத்துவிட்டாள் இறுக்கமாக, எப்போதைக்குமாக/ என முடிகிறது.

இந்தப் படிநிலை உணர்ச்சி வெளிப்பாடுகள் – அதாவது முழுமையான அகவயமான ஒரு தளத்தில் இருந்து முகத்திலறையும் யதார்த்தம் நோக்கி பயணிக்கும் பல்வேறு தருணங்கள் நாவல் முழுக்கவே விரவி இருக்கின்றன. இன்னொரு ஆணுக்கு தான் மணமுடிக்கப்படவிருப்பதை ஒருவித ஏற்கமுடியாமையுடன் எதிர்கொள்ளும் வாணி மெல்ல மெல்ல தன் திருமணத்தை பெருமிதத்துடனும் கனவுடனும் எதிர்கொள்ளும் அகநகர்வை சொல்லிய அடுத்த அத்தியாத்திலேயே அவள் திருமணத்துக்கென கொடுக்கப்படவிருக்கும் இருநூறு சவரனின் எடை சரியாக இருக்கிறதா என்று அளக்க மணமகன் வீட்டார் ஆசாரியை அழைத்து வருவது சொல்லப்படுகிறது.

வினோதினி கணவனின் தம்பியுடன் கொண்ட உறவினால் குடும்பத்திலிருந்து மெல்ல மெல்ல விலக்கப்படுகிறாள். அவள் உள்ளம் அடையும் பிறழ்வு குடும்பத்தின் பாகப்பிரிவிணையில் வந்து முடிகிறது. அகத்தின் உணர்வுகள் உருமாறி புறத்தில் பிரதிபலிக்கத் தொடங்கும் புள்ளிகளை நாவல் மிகச் சிறப்பாக தொட்டுக் காட்டுகிறது. நாவலில் குறிப்பிட வேண்டிய மற்றொரு அம்சம் நாம் ‘குடும்பத்தலைவிகள்’ என்று எண்ணும் பெண்களின் வயது. வினோதினி சந்தித்து மீளும் சிக்கல்களை வாசித்துச்செல்கையில் அவள் இருபது வயதுகூட தொடாதவள் என்பது அதிர்ச்சியூட்டுகிறது. பின்னர் அதுவே இயல்பென்றும் தோன்றுகிறது. வினோதினியின் குழப்பமான அகச்சூழலில் வீட்டுப் பிள்ளைகள் ராமாயண நாடகம் ஒன்றிலிருந்து ஜானகியைப் பற்றி பாடுவது, வீட்டில் பூத்துக்குலுங்கும் முல்லை மரம் என நுட்பமான வாசிப்பைக்கோரும் பல தளங்களை இந்நாவல் தன்னுள்ளே கொண்டுள்ளது.

(எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்)

நாவல் வாசித்த பிறகு அதுவொரு விவாதத்தன்மையை கோருவதை உணர முடிகிறது. தமிழ் குடும்பம் என்ற அமைப்பின் நாம் உருவாக்கிக் கொண்ட கருத்துகள் அனைத்தையும் ஒரு மறுபரிசீலனைக்கு உட்படுத்திப் பார்க்க வேண்டிய தேவையை இந்நாவல் ஏற்படுத்துகிறது. குடும்ப அமைப்பு பெண்களுக்கு இழைத்த நுட்பமான அநீதிகள் அவர்களுடைய உணர்வுகள் மதிக்கப்படாதிருத்தல் என்ற எல்லைகளைக் கடந்து இவ்வமைப்பின் இயல்பிலேயே உறையும் சில குரூரங்களை நாவல் கோடிட்டு காட்டுகிறது. ஒருசில அடக்குமுறைகளுடனும் வன்முறையுடனும் பாதுகாப்பையும் உணர்வுச் சமநிலையையும் அளிக்கும் நிறுவனமாக உணரப்பட்ட குடும்பம் உண்மையில் என்னவாக இருக்கிறது என அதன் அத்தனை திருகாணிகளையும் கழட்டிப் போட்டு ஆய்வு செய்திருக்கிறது. குடும்பப் பிணைப்பின் தவிர்க்க முடியாத அம்சமான காமம் – வினோதினிக்கும் வாணிக்கும் இடையிலான உறவு உட்பட – எங்குமே நாவலில் தவிர்க்கப்படவில்லை. மறுமுனையில் அனுவிற்கு தன்னை அன்னையாக உணரும் வாணியின் உணர்வும் பேசப்படுகிறது.

நம்முடைய அடுக்களைகளில் இருந்தும் அகத்தளத்தில் இருந்தும் எழும் முதல் குரல் என்ற வகையில் யாரும் யாருடனும் இல்லை முன்னோடியான ஆக்கமாக மாறிவிடுகிறது. இந்நாவலின் மீதான வலுவான விமர்சனம் என்பது இது மேலும் பரவலாக விவாதிக்கப்பட்ட பிறகே உருவாக இயலும்.

சுரேஷ் பிரதீப்: சுரேஷ் பிரதீப்: தமிழ்விக்கி

இணைப்புகள்:

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *