ரிவால்வர் ரீட்டா, ஃகன் ஃபைட் காஞ்சனா (அ) விடுதலையின் பாடல் – சாம்ராஜ்
(எழுத்தாளர் பா. கண்மணியின் ”இடபம்” நாவலை முன்வைத்து)
”நினைவு பழக்கம்“
என் நினைவிலும் இருக்கிறது ஒரு காடு
அதில்
நெடிதுயர்ந்த மரங்களை விடுங்கள்
சில்லறைப் புதர்கள் கூட இல்லை
ஆனால் அதைக் காடு என்றுதான்
சொல்லிக்கொள்கிறேன்
வெட்டவெளி
என்றாலும்
என் நினைவில் இருப்பது காடுதான்
அப்படி நினைத்துக்கொள்வது
ஒரு பழக்கமாகிவிட்டது
-(கவிஞர் பெருந்தேவி_வாயாடிக் கவிதைகள்)
2020 செப்டம்பர் வாக்கில், கொரோனா தன் உச்சத்திலிருந்து கொஞ்சம் தணிந்திருந்த சூழலில், சிங்கப்பூர் வாசக வட்டத்தின் சார்பாக இடபம் நாவலுக்கு ஒரு ZOOM கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் பேசிய பெரும்பான்மையினர் நாவலைக் கடுமையாக சாடிப்பேசினார்கள். பேச்சாளார்களில் ஒருவர், சிங்கப்பூர் MRT ரயிலில் போனபடி பேசினார். இடையில் தொடர்பு அறுந்துபோக, மற்றொரு ரயில் நிலைய வாசலில் நின்று, மூச்சிறைக்க நாவலைச் சாடினார். அழகுநிலா, செந்தில் நடராஜன் போன்ற சிலர் மாத்திரமே, நாவலைக் குறித்து நேர்மறையாக பேசினார்கள்.
நிராகரித்துப் பேசியவர்களின் பேச்சை, இப்படியொரு நாவல் எழுதப்பட வேண்டுமா?
நாயகி ஏன் திருடுகிறாள்? இவ்வளவு அப்பட்டமான பாலியல் சார்ந்த விஷயங்கள் எழுதப்பட வேண்டுமா? என சாராம்சமாக தொகுத்துக் கொள்ளலாம். தமிழ் நாவல்கள் தொடங்கிய காலத்திலிருந்து அதன் நாயகர்கள் தறிகெட்டு அலைகிறார்கள். அவர்களை நோக்கி இப்படியான கேள்விகள் எழுப்பப்பட்டதே இல்லை. ஜி.நாகராஜனின் “நாளை மற்றுமொரு நாளை” நாவலின் கதை நாயகன் கந்தனைவிடவா ஒருவர் மோசமாக இயங்கமுடியும்? எத்தனையோ நாவல்களில், எத்தனையோ விதமான மோசமான ஆண் பாத்திரங்கள் உலவுகிறார்கள். அவர்களெல்லாம் இப்படி விசாரிக்கப்பட்டதில்லை, மொத்த ஆண் வாசிப்பாளர்களையும் ஹிப்னாட்டிஸ உறக்கத்தில் ஆழ்த்தித்தான் கேள்வி கேட்கவேண்டும்.
இடபம் நாவல் பங்குச்சந்தையின் பின்னணியில் நிகழ்கிறது, பங்குச்சந்தை பின்னணி மட்டுமே. அடிப்படையில் இடபத்தின் பெயரற்ற நாயகி, சுயேச்சையாக வாழ விரும்புகிறாள். அவளுக்குப் பெரிய அரசியல்/ தத்துவ நிலைப்பாடுகள் எதுவும் கிடையாது. தன் போக்கில் தன் வாழ்வை வாழ விரும்புகிறாள். அதற்குப் பொருளாதாரம் தான் அடிப்படை என்று கருதிப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகிறாள்.
பங்குச்சந்தை என்பதை ஒரு பகடையாட்டமாகக் கொண்டால், இந்த வாழ்வே பகடையாட்டமாக இருக்கிறது என்று மறைமுகமாகப் பேசுகிறது நாவல்.
பல ஆண்கள் இந்த நாயகியின் வாழ்வில் வந்துபோகிறார்கள், யார்மீதும் அவளுக்கு எந்த புகாரும் இல்லை, என் வாழ்வு, என் சுதந்திரம் என வாழ்கிறாள். இவையெல்லாம் இருப்பதாலேயே இது ஒரு நல்ல நாவல் ஆகிவிடுமா எனில், இல்லை. இடபம் நம்மோடு தேர்ந்த மொழியில், நுட்பமான விவரிப்பில், நாம் பேசத்தயங்குபவற்றை ஆர்ப்பாட்டம் இல்லாமல், விரல் சொடுக்காமல், புலம்பல் இல்லாமல் முன்வைக்கிறது. ஒரு நல்ல படைப்பு நம்மை வாசிக்கத் தூண்ட வேண்டும். அது எதோ ஒருவகையில் நம் வாழ்வின் மீது கேள்விகளை எழுப்ப வேண்டும். தின வாழ்க்கையின் அவசரங்களை மீறி, அது நம் மனதிற்குள் இறங்க வேண்டும். இடபத்தில் இது அத்தனையும் நிகழ்கிறது. தோசையை திருப்பிப்போடுவதை போல, இந்த வாழ்வை இப்படியும் பார்க்கலாமே என்று நம்மிடம் கேட்கிறது இடபம். தனித்து ஒரு ஆண் வாழலாம்; குடும்ப நிறுவனத்திற்குள்
நுழைய மறுக்கலாம் எனில், அதை ஒரு பெண்ணும் செய்யலாமே என்ற விவாதத்தை முன்வைக்கிறது இந்நாவல். இடபம் நாயகி பெரிய சாகசம் எதுவும் செய்யவில்லை. என் போக்கில் என் வாழ்வை நான் வாழ்கிறேன் என்கிறாள்.
பெங்களூர் நகரம், அதன் தட்பவெப்பம், அதன் மரங்கள் பூக்கள், சாலைகள், இரவுகள், மேட்டுக்குடியினரின் களியாட்டங்கள், ஓவியக் கண்காட்சிகள், பங்கு வர்த்தகம், அதில் ஈடுபடும் விதவிதமான மனிதர்கள், அவர்களின் இயல்புகள், சமரசங்கள், கட்டுப்பட்டித் தனங்கள், நம் வாழ்வில் உலவும் துப்பறியும் சாம்புக்கள், அன்பின் பெயரால் கைவிலங்கோடு அலையும் உறவுகள், சாரமற்ற பண்டிகைகள், ரொக்கப் பட்டுவாடாவாகிப் போன மனித உறவுகள்….. என எல்லாவற்றையும் கூர்மையாக பேசிப்போகிறது இந்நாவல்.
களம் புதிது என்பதனாலேயே ஒரு படைப்பு முக்கியமானதாக மாறிவிடாது. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் புதிய புதிய களங்களில் போய் அங்கேயே தங்கி வாழ்ந்து நாவல்கள் எழுதுவார், “அலைவாய் கரைதனிலே” மீனவர்களைப் பற்றியும், “சேற்றில் மனிதர்கள்”
விவசாயிகளைப் பற்றியுமான நாவல்கள். அந்த நாவல்கள் நம் ஆன்மாவைத் தொடுவதே இல்லை. வெறும் களத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய?.
என் சிறு வயதில், அழகர்கோவில் திருவிழாவின் போது தல்லாகுளம் பொட்டலில், INDIAN PHOTO STUDIO என்று ஒன்று வந்து கூடாரமிடும், அதில் தாஜ்மஹால், மகாபலிபுரம், பைக்கில் அமர்ந்திருக்கும் தர்மேந்திரா, கைகோர்த்துக்கொண்டு நிற்கும் அமிதாப் தர்மேந்திரா, என கட் அவுட்டுகள் அடுக்கி வரிசையாக நிற்கும். மதுரைக்காரர்கள் தாஜ்மஹாலுக்கே போன மகிழ்ச்சியோடு அதன் பின்னணியில் புகைப்படம் எடுப்பார்கள். அந்த கட் அவுட்டின் வழி தாஜ்மஹால் போகமுடியுமெனில், ராஜம் கிருஷ்ணனின் நாவலின் வழியேயும் அவர் காட்டும் களத்துக்குப் போகலாம். கட்
அவுட்டுகள் அல்ல களம்.
இடபத்தின் களம் நாவலுக்கு வேறொரு அர்த்தத்தை தருகிறது, அதை மேலும் பொருள் பொதிந்ததாக மாற்றுகிறது. பங்குச் சந்தை வர்த்தகத்துக்கு வெளியே இருக்கும் மனிதர்களும் சதா பங்குகளின் ஏற்றங்களையும் இறக்கங்களையும், வீழ்ச்சிகளையும் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தினம் வெற்றி; பல தினங்கள் தோல்வி. சூதாட்டத்தின் ருசி மீண்டும் மீண்டும் ஆட அழைக்கிறது. இழந்ததை மீட்டுவிடலாம் என இன்னும் இழக்கவைக்கிறது. அணைந்த கனிப்பொறியின் திரையை வெறிக்க வைக்கிறது. SHUT DOWN செய்யும் பொழுது ஞானம் வருகிறது, அதனால் பிரையோஜனம் இல்லை என்கிறது ஊழ்வினை. வாழ்வென்பதோர் மாபெரும் வர்த்தம் என்கிறது இடபம்.
தமிழில் இடபம் போன்ற நாவல்களின் வருகை மிக அரிதாகவே நிகழ்கிறது. அதையும் ரிவால்வார் ரீட்டாவாக, ஃகன் ஃபைட் காஞ்சனாவாக அணுகும் போக்கு தொடர்கிறது. ஏன் அவள் ரிவால்வார் ரீட்டாவானாள் என்ற கேள்வியை எழுப்புவதே இல்லை அல்லது எழுப்ப விரும்புவதே இல்லை. ரிவால்வார் ரீட்டா வில்லனுடன் (பெரும்பாலும் அசோகன்) சின்ன விசயத்தில் முரண்பட, ஜிகுஜிகு மாளிகையில் பல்வேறு வண்ண விளக்குகளுக்கு மத்தியில், சிவப்பு கார்ப்பெட்டில் சுட்டுக் கொல்லப்படுவாள். ஒரு மாறுதலாக இந்த முறை இடபம் நாயகி வரலாற்று பழிதீர்த்தலாய், அசோகனைக் கொல்லட்டும்.
சாம்ராஜ்: சாம்ராஜ் தமிழ்விக்கி பக்கம்
Commentமிக அருமையான நாவல் . களம் புதியது . சிந்திக்க தூண்டும் நாவல். சமூக ஒழுக்க விதிகளை ஒரு எழுத்தாளர் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை .
சுவாரசியமாக அறிமுகப்படுத்திய சாம்ராஜ் அண்ணனுக்கு அன்பு ☘️
சிறப்பான பார்வை….நாவலை உடனடியாக அணுகத் தூண்டுகிறது ….
Commentநாவலை உடனடியாக படிக்கதூண்டும் சிறப்பான கட்டுரை.