ஸ்ரீ-லக்ஷ்மி – ஆனந்த குமாரசாமி
-தமிழில்: தாமரைக்கண்ணன்
(உலகம் முழுவதுமே தொல் நூல்களிலும் தொல் சுவடுகளிலும் பெண் தெய்வ வழிபாடுகளை நாம் காண்கிறோம். இந்திய பண்பாட்டில் ஹரப்பா நாகரீக எச்சங்களிலும் ரிக் வேதத்திலும் பெண் தெய்வங்களைக் காண்கிறோம். தற்போது வழிபாட்டிலுள்ள பல தெய்வங்களின் ஆதி வடிவங்களை அவற்றில் காணமுடியும். அவற்றில் ஒன்று ஸ்ரீலஷ்மி. ஸ்ரீலஷ்மியின் துவக்கத்தையும் அவளின் வளர்ச்சியையும் தொல் நூல்கள் மற்றும் நமக்கு கிடைத்துள்ள தொல் சிற்பங்களின் அடிப்படையில் ஆனந்த குமாரசாமி இந்த கட்டுரையில் சித்தரித்துக்காட்டுகிறார். ’Eastern art’ என்ற இதழில் ஆனந்த குமாரசாமி துவக்ககால சிற்பவியல் பற்றிய கட்டுரைத் தொடரை 1928-ல் துவங்குகிறார். அதில் குப்தர் காலத்திற்கு முன்பு இந்திய தெய்வங்கள் எவ்வாறு நாணயங்களிலும் சிற்பங்களிலும் மனித வடிவில் சித்தரிக்கப்பட்டன என்பதை ஆராய்வதை நோக்கமாக கொண்டிருந்தார். முதல் கட்டுரை இந்திரனை பற்றியது, இரண்டாவது கட்டுரை ஸ்ரீலஷ்மி பற்றிய இக்கட்டுரை. பின் அவர் இதை தொடரவில்லை. கலை சார்ந்து இயங்குபவர்கள் முதன்மையாக நம் மரபில் பெண் எவ்வாறு உருவகிக்கப்பட்டாள் என்பதை அறிந்து கொண்டு அதன் தொடர்ச்சியை இணைக்கும் சரடை தன் கலையில் கண்டுகொள்ள இக்கட்டுரை பயன்படும் என்பதால் இதன் மொழிபெயர்ப்பு பிரசுரிக்கப்படுகிறது.)
*
1.நூல்களில்
ரிக்வேதத்தில் ‘ஸ்ரீ’ பெயர்ச்சொல்லாகவும் பெயர் உரிச்சொல்லாகவும் பெரும்பாலும் அழகை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்களுக்கு அழகாக இனிமையாக இருப்பவற்றை குறிக்கிறது. சில இடங்களில் வளத்தையும் வளர்ச்சியையும் குறிக்கிறது, அவைகளும் அழகானவை அல்லவா? வினைச்சொல்லாக இது சோமத்தில் பாலை கலந்து சோமத்தை மெருகூட்டுவதுடன் தொடர்புடையது. ’ஸ்ரீ’யை பெண்ணாக உருவகப்படுத்துவது பிராமணங்கள். சதபத பிராமணம் xi.4.3.1 ”பிரஜாபதி முனிவரில் இருந்து ஸ்ரீ அழகிய பெண்ணாக வெளிப்பட்டாள்” என்கிறது. மைத்ராயன உபநிஷதத்தில் ஸ்ரீ என்பது ”பேரரசர்களும் மரணத்தின்போது விட்டுச் செல்லவேண்டியது” என்கிறது.
’லக்ஷ்மி’ என்ற சொல்லும் முதலில் ரிக்வேதத்திலேயே வருகிறது, மங்களத்தை குறிக்கிறது. பிற்கால வேத நூல்களில் பெரும்பாலும் ஸ்ரீ-யும் லக்ஷ்மி-யும் ஒருவரே என சொல்லப்படுகின்றன. ’ஸ்ரீ’ அழகையும், ’லக்ஷ்மி’ மங்களத்தையும் குறிக்கின்றது. புத்தரின் காலத்திற்கு முந்தைய ஸ்ரீசூக்தமே முதன்முதலில் ’ஸ்ரீ’யும் ’லக்ஷ்மி’யும் ஒரே தேவி; தாமரையில் வசிப்பவள் என சொல்லியதாக இருக்க வேண்டும். ’ஸ்ரீ’ கருவுருதலின் தெய்வம். ஆகவே சூத்திரங்கள் அவளை படுக்கையின் தலைமேட்டில் வணங்க வேண்டும் என்கின்றன. தைத்ரிய உபநிஷதம் i.4 ’உணவு, பானம், பசு, ஆடை’ ஆகியவற்றை வழங்குபவளாக ஸ்ரீயை குறிப்பிடுகிறது, ஆகவே ”ஸ்ரீ என்னிடம் வருக” என்கிறது.
லக்ஷ்மியை விஷ்ணுவுடன் இணைப்பது இதிகாசங்களுக்கு முந்தய காலத்தில் இல்லை. ஆனால் இதே காலத்தில் வேத கடவுளான அதிதி யஜுர் வேதத்தில் விஷ்ணுவின் மனைவியாக சொல்லப்படுகிறாள் (தைத்ரிய சம்ஹிதை vii.5.14, வாஜஷன்ய சம்ஹிதை 29.60). தைத்ரிய சம்ஹிதை iv.4.12 “விண்ணிற்கு ஆதாரமானவளே, மண்ணிற்கு துணையானவளே, உலகை ஆள்பவளே, விஷ்ணுவின் மனைவியே, எங்கும் வியாபித்திருப்பவளே, செழிப்பையும் உணவையும் வழங்கும் அதிதியே, எங்களுக்கு அருள்க” என்கிறது. அவள் ஆதித்யர்களின் அன்னை (முதலில் சகோதரி எனப்பட்டாள்), வருணனுக்கும் மித்ரனுக்கும் அன்னை, தக்ஷனுக்கு அன்னை அல்லது மகள், மற்ற பல கடவுள்களுக்கும் அரசர்களுக்கும்கூட அன்னையாக சொல்லப்படுகிறாள். தாய்மையே அவளின் ஆதார இயல்பு. ரிக் 1.89-ன் இறுதி வரிகள் அதிதியை பிரபஞ்ச இயற்கையாக உருவகப்படுத்துகிறது, ‘அனைத்தும் அவளே, அவளில் இருந்தே அனைத்தும் பிறக்கின்றன’ என்கிறது. அதிதி எல்லையற்றவள், முடிவற்று விரிபவள். சில இடங்களில் அவள் பிருத்வியுடன்(பூமி) இணைத்து பேசப்படுகிறாள். பிருத்வி செழிப்பை தருபவளாக வணங்கப்படுகிறாள். உணவையும் பாலையும் வழங்குபவள். அவள் வழங்குவது தூய்மையானது, குறைபடாதது, தெய்வீகமானது, அழியாதது. வழங்குபவள் ஆதலால் அவளை பசு என்றும் சொல்கின்றனர். சோமம் அவள் தரும் பாலே(1).
ஆகவே இயற்கையின் பேரன்னையின் செழிப்பின் உருவகமான அதிதி மிக நெருக்கமாக கருவுருதலின் வளத்தின் தெய்வமான ஸ்ரீ-லக்ஷ்மியை ஒத்திருக்கிறாள். ஏற்கனவே அதிதி விஷ்ணுவின் மனைவியாக சொல்லப்படுகிறாள். ஸ்ரீயை போலவே அதிதியும் தக்ஷனின் மகளாக இருக்கலாம். ஆனால் அதிதியும் ஸ்ரீயும் ஒன்றல்ல. அதிதி விஷ்ணுவின் இன்னொரு மனைவியான பூதேவியின் மூலவடிவாக இருக்கலாம். பிற்காலத்தில் ஸ்ரீலக்ஷ்மி தனி தெய்வமாக குறிப்பிடப்பட்டாலும், விஷ்ணுவுடன் சேர்ந்து அவரின் மனைவியாக குறிப்பிடப்பட்டாலும் அதிதியின் சில அம்சங்கள் ஸ்ரீயில் இருப்பதை நாம் உணரமுடியும். உதாரணமாக ஸ்ரீலக்ஷ்மி தன் முலையை அழுத்தி பாலை பொழியுமாறு செதுக்கப்பட்டிருக்கும் பார்ஹட் (படம் 18) மற்றும் வேறுசில பிற்கால சிற்பங்களை (படம் 4) சுட்டலாம். ஸ்ரீயை அன்னை என சொல்லும் குறிப்புகள் உள்ளன, உதாரணம் பார்ஹட் கல்வெட்டு (படம் 2). மேலும் வைஷ்ணவம் லக்ஷ்மியை பிரக்ருதி (இயற்கை) என்றும் நாராயணனை பிருஷன் (ஆத்மா) என்றும் சொல்கிறது.
மீண்டும் ஸ்ரீலக்ஷ்மிக்கு வரலாம். அவள் இதிகாசங்களில் தெய்வமாக வலுப்பெருகிறாள். நற்பேறின் (அதிர்ஷ்டம்), செல்வத்தின் தெய்வமாக அவள் வெற்றியடைந்த அரசர்கள் அல்லது தெய்வங்களுடன் இணைத்து பேசப்படுகிறாள், உதாரணமாக குபேரன், இந்திரன். அல்லது விண்ணாளும் விஷ்ணுவின் மனைவியாக சொல்லப்படுகிறாள். மகாபாரதம் xii.8343 “நான் (ஸ்ரீ-பத்மா) வெற்றி, உறுதி, நற்பேறு; வெற்றி பெற்ற அரசர்களிடத்தில் உறைபவள்” என்கிறது.
மற்றொருபக்கம், புராணங்களில் படி ஸ்ரீலக்ஷ்மி பார்கடலை கடையும்போது உருவானவள். பிறகு விஷ்ணுவின் மனைவியாகிறாள். நீரில் பிறந்தவள், தாமரையுடன் சுட்டபடுபவள். இவளைப் போலவே இவளின் கிரேக்க சகோதரி அப்ரோடைடும் (Aphrodite) நீரில் பிறந்தவளே. அப்ரோடைட்டை கிரேக்க காமதேவனான எரோஸின் அன்னையாக சொல்வது போலவே ஸ்ரீலக்ஷ்மி இந்திய காமதேவனின் அன்னையாக சொல்லப்படுகிறாள்(2). நேரடியாக, அவள் தர்மனின் (விஷ்ணுவின் நெற்றியிலிருந்து முளைத்த தாமரையில் தோன்றிய பிரஜாபதியின் வடிவானவர்) மனைவியாக சொல்லப்படுகிறாள். இவர்களின் மைந்தனே காமன். மறைமுகமாக, கிருஷ்ணனின் மனைவியான ருக்மணியாகவும், பிரத்யும்ணனின் அன்னையாகவும் சொல்லப்படுகிறாள். லக்ஷ்மிக்கும் காமதேவனுக்கமான தொடர்பு மகாபாரதம் xiii.11.3-ல் மேலும் வருகிறது: “காமனின் அன்னையாக அவள் மங்களத்தை குறிக்கும் மகரத்தை ஏந்தியுள்ளாள்” என்கிறது(3).
தர்மனின் மனைவியென சொல்லுமிடத்தில் லக்ஷ்மியில் இருந்து ’ஸ்ரீ’ பிரிகிறாள். அப்போது ’ஸ்ரீ’ தக்ஷனின் மகள். மகாபாரதம் iii.37,33-ல் ஹ்ரீ, கீர்த்தி, தித்ரி, புஷ்டி, உமை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் வரிசையில் ஸ்ரீ வருகிறாள். ஆனால் வழக்கமாக ஸ்ரீயும் லக்ஷ்மியும் ஒரு தேவியே.
ராமாயணம் v.7.14 ’ஸ்ரீ’யை குபேரனின் வாகனத்தில் தாமரை ஏந்தி இருப்பவள் என்கிறது. மகாபாரதம் iii.293.25-ல் சாவித்ரி தேவகன்னியென செல்வதை காணும் மக்கள் அவளை ஸ்ரீயின் மண் வடிவாக சொல்கின்றனர்.
பெளத்த நூல்களில் ஸ்ரீ குறைவாகவே வருகிறாள். அவளை வழிபடுபவர்களையும் அவளது வழிபாடு பற்றியும் மிலிந்தபனஹா (milindapanha) சொல்கிறது. நித்தேசா (niddesa) நூலில் குறிப்பிடப்படும் தெய்வங்கள் வரிசையில் இவள் இல்லை. திக்கநிகாயத்தின் பிரஹமஜால சூக்தம் அவளை அழைப்பதை தடைசெய்கிறது. ஜாதகக்கதை 535 அவளை கிழக்கில் இருப்பவளாக சொல்கிறது – ஆஷா தெற்கிலும், ஷதஹா மேற்கிலும், ஹிரி வடக்கிலும் ஸ்ரீ கிழக்கில் இருப்பவர்கள்; மேலும் அக்கதையில் இவள் திறமை நற்குணம் நல்லறிவு உடையவர்களுக்கு அல்லாமல் சோம்பல் பேராசை கொண்ட சிறுமதியாளர்களுக்கு செல்வத்தை வளங்குவதால் தவறானவள் மூடம் என நிந்திக்கப்படுகிறாள். ஸ்ரீகாலகன்னி ஜாதகக்கதையில் (382) ஸ்ரீமாதா எனப்படும் இவள் தத்ரத்ததாவின் மகள், கிழக்கை ஆள்பவள். அதில் ”நானே மனிதர்களுக்கு பிரப்புத்துவத்தை வழங்குபவள், நான் அழகு (ஸ்ரீ), நற்பேறு (அதிர்ஸ்டம், லஹி), செல்வம், உலகியல் விவேகம்” என்கிறாள். தம்மபத அட்ஹகதாவில் (ii.70) அவள் நாடுகளுக்கு நற்பேறை வழங்குபவள் – ’ராஜ்ய ஸ்ரீதயிகா தேவதே’ என்கிறது. மைத்ரிபால ஜாதகம் அவளை நாம் வழக்கமாக காணும் தாமரையுடன் குறிப்பிடுகிறது, “தாமரை குளத்தில் வசிப்பவளே, ஸ்ரீ, உன்னுடன் வசிக்க விரும்புகிறேன்” என்கிறது.
ஜப்பானிய பெளத்த புராணத்தில் ஸ்ரீலக்ஷ்மி குடோகுடென் (Kudokuten), கிச்சிஜொடென் (kichijoten) என அழைக்கப்படுகிறாள், ஹரிதியின் மகள், ஆகவே அவளை யக்ஷியாக குறிப்பிடுகின்றனர்.
சமண கல்ப சூத்திரத்தில் (பர்யுசனா கல்பம், 36) மகாவீரர்னின் பிறப்பை அவரின் அன்னை திசாலாவிற்கு பதினான்கு கனவுகள் உணர்த்துகின்றன. அதிலொன்றில் திசாலா திருமுழுக்காட்டு (அபிஷேகம்) செய்யப்படும் லக்ஷ்மியை காண்கிறாள். இந்த சூத்திரம் லக்ஷ்மியை மிகவிரிவாக வர்ணிக்கிறது. “மேன்மையானவளே, ஸ்ரீ, உயர்ந்த இமயத்தின் கமலதடாகத்தில் தாமரை மலர்மீது இருப்பவளே, உறுதிவாய்ந்த யானைகளின் துதிக்கையால் நீராட்டப்படுபவளே” என நீண்டு செல்கிறது. லக்ஷ்மியை விரிவாக வர்ணிப்பதில் மிக பழமையானது இதுவாகவே இருக்கவேண்டும். இதுபோலவே பகவத சூத்திரத்தில் அரசி தாரணி காணும் பதினான்கு கனவுகள் ஒன்றில் திருமுழுக்காட்டப்படும் லக்ஷ்யை காண்கிறாள். பிற்கால நூலான ஹேமச்சந்த்ரரின் பரிஷிஷ்டபர்வன் ’ஸ்ரீ’யை ஸ்ரீதேவியென குறிப்பிடுகிறது. கைகளில் தாமரையை ஏந்தியவள், இமயத்தில் அவள் வசிக்கும் இடம் பத்மஹரதா என்கிறது.
ஸ்ரீலக்ஷ்மி பற்றி இதிகாசத்திலுள்ள கருத்து அப்படியே மத்திய கால இந்து நூல்களிலும் தொடர்கிறது. நற்பேறை, செல்வத்தை வழங்குபவள், தாமரையை கையில் ஏந்தியவள். ஆகவே அரசர்களுடன் இணைத்து பேசப்படுகிறாள் (ரகுவம்சம், iv.4). காவியத்தில் நாயகிகளின் அழகு அவளுடன் ஒப்பிடப்படுகிறது (மாளவிகாக்னிமித்ரா v.30). ”ஸ்ரீயும் சரஸ்வதியும் (செல்வமும், கல்வியும்) ஒன்றாக ஒரே வீட்டில் வசிக்க மாட்டார்கள்’ என்ற பழமொழி புழக்கத்தில் உள்ளது. பெளத்த நூல்கள் சொல்வது போல சிலசமயம் ஸ்ரீலக்ஷ்மி உறுதியற்றவள், பாரபட்சமானவள் என நிந்திக்கப்படுகிறாள். இந்த வகை விவரணை காதாம்பரியில் மிக நீண்டதாக வருகிறது, அவளை எப்போதும் நிலையற்றவள் என்கிறது.
இவைகளைவிட மிக முக்கியமானவை வைஷ்ணவத்தில் உள்ள கருத்துக்கள். அக்னி புராணம் ஸ்ரீலக்ஷ்மியை பிரக்ருதி என்றும் நாராயணனை புருஷன் என்றும் சொல்கிறது. பஞ்சரத்ரமும் மத்வரின் கோட்பாடும் ’லக்ஷ்மி, விஷ்ணுவின் மனைவியாக, பரம்பொருள் பருப்பிரபஞ்சத்தில் வெளிப்படும் ஆற்றல்’ என்கிறது. இதையே பக்தமாலாவும் குறிப்பிடுகிறது, தாமரையில் வசிப்பவள், கமலா, விஷ்ணுவின் ஆற்றல் என்கிறது. பாகவதத்தில் அவள் ராதை, பூரணமான காதலை அடைந்தவள். தெற்கத்திய பாகவதர்கள் லக்ஷ்மியை பேரன்னையாகவே வழிபட வேண்டும் என்றனர்.
இந்த வளர்ச்சியைப் போலவே சாக்தத்தில் தேவியும், வஜ்ராயண பெளத்தத்தில் தாராவும் வளர்ந்துள்ளனர். ஒரு அன்னை தெய்வம் அல்லது தெய்வங்கள் என்ற கருத்து நம் நினைப்புக்கெட்டா காலந்தொட்டே இருந்துவருகிறது. வழக்கமாக, ஒரு வேத உருவகம் மக்களிடையே பரவலாக உள்ள தெய்வத்துடன் இணையும். இதுபோலவே இங்கும் ஒரு வேத கருத்து அல்லது கருத்துக்கள் செல்வத்தின் நற்பேறின் வளத்தின் தெய்வமாக ஆகிறது. அதேசமயம் இன்னொருபக்கம், பக்தியில் அக்கருத்துக்கள் மிக ஆழமானதாக ஆன்மீகமானதாக வளர்கிறது, அழகின் தெய்வமும் மங்களத்தின் தெய்வமும் ஒன்றிணைந்த முடிவற்ற சாத்தியத்தை ஒரே இறையில் தக்கவைத்துக்கொள்கிறது, அதுவே இயற்கையினுள் பொதிந்துள்ள வற்றாத வளமாக வெளிப்படுகிறது, ராதையென மனித வடிவில் வெளிப்பட்டு வழிபடப்படுகிறது.
2. துவக்ககால சிற்பங்களில்
ஸ்ரீலக்ஷ்மி நீருடனும், நீரின் குறியீடான தாமரையுடனுமே தொடர்புபடுத்தப்படுகிறாள் என்பதை மேலே பார்த்த நூல் குறிப்புகளில் இருந்து நாம் அறிகிறோம். உதாரணமாக சதபதபிராமணம் 4.1.8 தாமரை நீரின் குறியீடு என்கிறது. லக்ஷ்மி மூன்று வகைகளில் தாமரையுடன் சித்தரிக்கப்படுகிறாள். வகை-1: பத்மஹஷ்தம். வலக்கரத்தை உயர்த்தி தாமரையை ஏந்தியிருப்பாள், இடக்கரம் இடையின் மீதிருக்கும். வகை-2: விரிந்த தாமரை மலரில் (பீடத்தில்) அமர்ந்திருப்பாள் அல்லது நின்றிருப்பாள். வகை-3: பத்ம-வாஷினி. கமலலயா என்றும் சொல்லப்படுகிறது. மலர்களும் வளர்ந்த இலைகளும் கொண்ட தண்டுகள் சூழ இருப்பாள். இது அவள் அங்கு வசிப்பதை குறிக்கிறது. இந்த சித்தரிப்பில் அவள் ஒரு தண்டை இரு கரங்களிலும் பற்றி இருப்பாள்.
பல சித்தரிப்புகளில் இந்த மூன்று வகைகளும் சேர்ந்தவாறே சித்தரிக்கப்பட்டுள்ளன. அதிகமாக வழிப்பாட்டில் இருப்பது வகை-1, தாமரையை கையில் ஏந்திய வடிவம். பல தெய்வங்கள் இந்த வடிவத்தில் உள்ளனர். சாஞ்சி மற்றும் பார்ஹட்டின் பத்மபாணி யக்சர்களும் இவ்வடிவத்திலேயே காணப்படுகின்றனர். மனிதர்களும் இவ்வடிவத்தில் சித்தரிக்கப்படுகின்றனர். அரிதானது வகை-3. வேறெந்த தெய்வங்களையும் இந்த வடிவத்தில் காணமுடியாது. வகை-2 குஷானர்களுக்கு முன் அதிகமாக கிடையாது. குஷானர்கள் காலத்திலேயே விரிந்த தாமரை பீடம் பரவலாக வருகிறது. பார்ஹட்டில் தூண்களின் விளிம்புகளில் மனிதர்கள், விலங்குகள் தாமரை மீது நிற்கும் சித்தரிப்புகள் பல உள்ளன (படம்-1). பெண்வடிவங்களில் சில லக்ஷ்மிக்கு நெருக்கமாக உள்ளன. இவற்றில் தண்டு நீண்டு, சிலவற்றில் சுருண்டும் வளைந்தும் காணப்படுகின்றன. தாமரை இதழ்கள் தலைகீழாக (வாடியது போல) கவிழ்ந்து மகரந்தங்கள் நன்கு வெளித்தெரிகின்றன. மகரந்தங்கள் மீதுள்ள பீடத்தில் மனிதர்களும் விலங்குகளும் நிற்கின்றனர்(4).
ஏன் குழைகின்ற வழுவற்ற தாமரை மலர் தெய்வங்கள் மனிதர்கள் விலங்குகளை தாங்கி நிற்பதாக சித்தரிக்கப்படுகிறது? தாமரை என்பது நீர், நீரிலிருந்தே அனைத்தும் பிறந்தன. ”பூமியே நீ நீரில் மிதக்கிறாய்” என்கிறது யஜுர் வேதம் iv.1.3, 2.8. “இப்புவி நீர்ப்பரப்பின் மீதுள்ளது” என்கிறது சதபத பிராமணம் vii.4.1.8. மத்தியகாலத்தில் விரிந்த தாமரை பிரபஞ்சத்தின் குறியீடு. ஆகவேதான் சக்கரங்களில் (யந்திரம், மண்டலம்) தாமரை வடிவம் வருகிறது. பெளத்தத்தில் மனம் மற்றும் சிந்தனையின் தூய்மையின் குறியீடு. இவைகள் பிற்காலத்தில் வருபவை, இரண்டாம் பட்சமானவை. ஆனால் துவக்ககால குறியீடுகளிலும் பிற்கால வேத நூல்களிலும் உள்ள அடிப்படையான கருத்து தாமரை அனைத்து உயிர்களையும் தாங்கியிருக்கும் நீர், முக்கியமாக இப்புவியை. ஆகவேதான் தாமரை ஆசனமாக, பீடமாக சித்தரிக்கப்பட்டது.
பார்ஹட்டின் (பொ.மு 175) ஒரு பெண் சிற்பத்தில் ’ஸ்ரீமாதேவதா’ என பொறிக்கப்பட்டுள்ளது(5) (படம் 2). அச்சிற்பத்தின் உயர்த்திய வலக்கரத்தில் இருப்பது தாமரையாகவே இருக்க வேண்டும், இது வகை 1-ஐ சேர்ந்தது. இதை தவிர வேறெந்த அம்சங்களும் அச்சிற்பத்தில் இல்லை. அப்பெண் தெய்வம் மிக அழகாக வளம் செரிந்தவளாக உள்ளாள். இவள் சமண கல்ப சூத்திரத்தில் விவரிக்கப்படும் உடல் அழகை ஒத்தவள். அகத்தில் உள்ள கருணையின் அருளின் வெளிப்பாடே புற உடல் அழகு. இந்திய கலையில் துவக்கத்திலிருந்து இன்றுவரை மாறாது வரும் இந்த அம்சத்தின் ஒரு வெளிப்பாடாக அவள் திகழ்கிறாள். துவக்ககால சுடுமண் சிற்பங்களில் காணப்படும் பெயரறியாத ஆடையற்ற அன்னை தெய்வத்தின் சிற்ப தொடர்ச்சியை இதில் காணாமல் இருக்க முடியாது. கருவுறுதலின் தெய்வமான அந்த அன்னை தெய்வத்தை அழகு என்று சொல்லாமல் வேறெவ்வாறும் குறிப்பிடவியலாது.
வழக்கத்திற்கு மாறான சித்தரிப்பு ஒன்று பஸார் (Basarh) பகுதியில் கிடைத்துள்ளது. இது சுடுமண் பலகையிலுள்ள சிற்பம் (படம் 3), பொ.மு. இரண்டாம் நூற்றாண்டின் துவக்கமாக இருக்கலாம். கைகளில் முத்துக்கள் தொங்கும் வளையல்கள் அணிந்துள்ளாள். இது பாஜா (Bhaja) குகைகளில் உள்ள சிற்பங்களை ஒத்தது. வேறெங்கும் இந்த வடிவத்தை காண முடியவில்லை. இது வகைகள் 2ம், 3ம் இணைந்த வடிவம். இதிலும் தாமரை உள்ளது. ஆகவே இவளை ஸ்ரீலக்ஷ்மி என அடையாளம் காணமுடியாமல் இருந்தால்தான் ஆச்சரியம். ஆனால் தோல்ப்படையில் இருந்து மேலே விரியும் இறகு மிகவும் தனித்தன்மை வாய்ந்தது(6).
லக்ஷ்மியின் சித்தரிப்புகளிலேயே மிக அழகியதாக, நிற்கும் விதத்தாலும் சூழலாலும் (பத்மவாஷினி, பத்மஸ்திதா) யாரும் தவறாக கணிக்க முடியாதவாறு, கருனை நிறைந்து காணப்படும் சிற்பம் மதுராவில் கிடைத்த நான்கடி உயர ஒற்றைக்கல் தூணில் செதுக்கப்பட்ட லக்ஷ்மியின் சிற்பம் (படம் 4). இந்த சிற்பம் எதற்காக செதுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. பெரிதாக வளர்ந்த தாமரைகளும் விரிந்த இலைகளும் சிற்பம் முழுவதும் காணப்படுகின்றன. அவை கீழேயுள்ள பூரண கும்பத்தில் இருந்து முளைத்து மேலே வருகின்றன. பின்புறத்தில் ஒரு இலைமீது இரு மயில்கள் தோகை கீழே தொங்கியவாறு அமர்ந்துள்ளன. முன்புறத்தில் வனப்புமிக்க உடலுடன் இரு தாமரைகள் மீது கால்களை ஊன்றி நிற்கிறாள். இவள் அழகு மற்றும் வளமையின் தலைவி என்பதை இது தெளிவாக காட்டுகிறது. மிக மெல்லிய ஆடையும், இடையில் மேகலையும் அணிந்துள்ளாள்(7). ஒரு கரத்தால் தன் ஒரு மார்பை அழுத்தி பாலை பொழிகிறாள்(8) (மேலே “உணவை, பாலை அளிப்பவளே, விஷ்ணுவின் மனைவியே” என்ற தைத்ரிய சம்ஹிதை பாடலை பார்த்தோம்). மற்றொரு கரத்தில் நீண்ட தண்டுடன் கூடிய தாமரையை தொங்கியவாறு தொப்புளுக்கு கீழே பிடித்திருக்கிறாள்.
சீனாவின் டான்டன் யுலிக் பகுதியில் ஒரு பெண் தேவதையின் (படம் 5) சுவர் ஓவியம் கிடைத்துள்ளது(9). இது நிச்சயம் மதுரா லக்ஷ்மி (படம் 4)-ன் வழித்தோன்றலே என்பதில் எந்த ஐயமும் இல்லை. இவள் ஒரு தாமரை தொட்டியில் இருந்து எழுகிறாள். இவள் அணிந்துள்ள மேகலை இந்திய பாணியிலானது. இவளின் உடல் சுங்க, குஷாண சித்தரிப்புகளில் காணப்படுவது போலவே உள்ளது(10). இதிலுள்ள அத்தி இலை மட்டும் இந்தியா பாணி அல்லாமல் இருக்கலாம். ஒரு கரம் மார்பின் மீதுள்ளது, மறுகரம் தொப்புள் மீதுள்ளது. இது வாழ்க்கை, வளத்தின் ஊற்றை குறிக்கிறது.
லக்ஷ்மியின் மூன்று வகைகளும் இணைந்த தனித்தன்மை வாய்ந்த வடிவம் சாஞ்சியின் இரண்டாம் ஸ்தூபத்திலுள்ள தூணில் செதுக்கப்பட்டுள்ளது (படம் 6). இங்கு இரு சேடிப்பெண்கள் உணவையும் பாணத்தையும் வைத்திருக்க இறைவி நடுவில் நிற்கிறாள். இது தூணின் நடுவிலுள்ள வட்டத்தினுள் செதுக்கப்பட்டுள்ளது. இதுவும் மேலே பார்த்த தைத்ரிய சம்ஹிதை பாடலையே நினைவுபடுத்துகிறது. இந்த வடிவம் இதேபோல் உணவை பாணத்தை ஏந்தியிருக்கும் வேறுசில வடிவங்களையும் நினைவுபடுத்துகிறது. பனாரஸ் தூணில் உள்ள பெண் (படம் 7) தாளத்தில் உணவையும், பாணம் உள்ள குடுவையை வைத்திருக்கிறாள். இதிலிருந்து அடுத்த சித்தரிப்பு படம் 8-க்கு சென்றால் அதில் ஒரு பெண் தன் மரத்திற்கு கீழே நிற்கிறாள். இது நிச்சயமாக யக்ஷி வடிவமே. இதிலிருந்து படம் 9-க்கு செல்லலாம். இதில் யக்ஷன் அல்லது யக்ஷியின் கைகள் மட்டும் மரத்தில் இருந்து நீண்டு அதேபோன்ற தாளத்தில் உணவையும் குடுவையில் நீரையும் அளிக்கிறது. இந்த ஒப்புமையை வைத்துக்கொண்டு இத்தகைய லக்ஷ்மி வடிவம் சித்தரிக்கப்படுவது நிற்கும் போது யக்ஷி வடிவம் துவங்குகிறது என சொல்ல முடியாது. ஆனால் லக்ஷ்மிக்கும் யக்ஷிக்கும் உள்ள தொடர்பை காட்டும் சில உதாரணங்களில் இதுவும் ஒன்று எனலாம்.
மூன்று வகைகளும் இணைந்த வடிவம் சுடுமண் சிற்பங்களிலும் கிடைத்துள்ளது (படம் 10). பெரும்பாலும் நாணயங்களில் காணக் கிடைக்கிறது. நற்பேறின் குறியீடாக அதில் பொறிக்கப்படுகிறாள். கிரேக்க-பக்தியார் அரசர்களான பேண்டலியன் (Pantaleon), அகதோகிள்ஸ் (Agathocles) ஆகியோரின் நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள நடனமங்கை என சொல்லப்படும் வடிவம் ஸ்ரீ-லக்ஷ்மியாக இருக்கலாம் (படங்கள் 11,12,13). இவைகள் வகை 1-க்கே நெருக்கமாக உள்ளன. வகை 1 அவ்வளவு நிலையான வடிவமல்ல, அவற்றிலுள்ள உடல்வாகு சற்று வழக்கத்திற்கு மாறாகவே இருக்கும். இந்த நாணயங்களிலும் அவ்வாறே உள்ளது. பொதுவாக நாணயங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் வடிவம் அஜுஸ் (Azes) மற்றும் அமோகபுதி (படம் 14) நாணயங்களில் (பொ.யு 1-ஆம் நூற்றாண்டு) உள்ள வடிவமே. யதேயர்கள் மற்றும் மித்ரர்களின்(11) ஒருசில நாணயங்களிலும் இத்தகைய வடிவம் உள்ளது. அமோகபுதி நாணயத்தில் லக்ஷ்மி வகை 1ம், 2ம் சேர்ந்தவாறு சித்தரிக்கப்பட்டுள்ளாள். இதில் இடப்பக்கம் மான் உள்ளது, மானின் கொம்புகளுக்கு நடுவே ஸ்ரீவஸ்த முத்திரை உள்ளது.
அபிஷேக வடிவம் சுடுமண் சிற்பங்களில், நாணயங்களில், முத்திரைகளில் கிடைக்கின்றது. ஆனால் வட்டத்தினுள் இருக்குமாறு கிடைக்கவில்லை. சுடுமண் சிற்பங்களில் மதுராவில் கிடைத்தாக சொல்லப்படும் சிற்பம் தற்போது பாஸ்டனில் உள்ளது. ஷான்கிசாவில் கிடைத்தாக சொல்லப்படும் சிற்பங்கள் தொலைந்துவிட்டன. நாணயங்களில் அஜுஸ் (படம் 15), ஸொடாஷா(12) நாணயங்களிலும், அவந்தி, கோசாம், ஏரன், சிலோன் நாணயங்கள் (படம் 16) சிலதிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
அபிஷேக வடிவத்தை துவக்ககால தூண்களில் அதிகம் காணலாம். சாஞ்சி ஸ்தூபங்களில் இத்தகைய பல சிற்பங்கள் உள்ளன (படம் 17). பார்ஹட் (படம் 18), புத்தகயா (படம் 19), மண்மோதி, நத்சூர் போன்ற மேற்குமலைக் குகைகளிலும், ஒரிசாவிலும் காணக்கிடைக்கின்றன. ஆனால் மதுராவில் கிடைத்ததாக தெரியவில்லை. அமராவதியிலும் எதுவும் கிடைக்கவில்லை. குப்த முத்திரைகளில் கிடைத்துள்ளன (படம் 23). துவக்ககால சாளுக்கிய கலைகளிலும் மத்தியகாலத்தின் பிற்பகுதி கலைகளிலும் துழைவாயிலின் மேல் அபிஷேக வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது பொ.மு.200 முதல் இன்று வரை பொதுவாக எந்தமாற்றமும் இல்லாமல் தொடர்ந்துவருகிறது.
பார்ஹட்டில் மட்டும் சில சிற்பங்களில் இறைவி தன் மார்பை அழுத்திக்கொண்டிருப்பது செதுக்கப்பட்டிருக்கும். மத்தியகால மற்றும் பிற்கால சிற்பங்களில் சில முக்கியமான வேறுபாடுகள் காணப்படுகின்றன – நான்கு கைகள், நான்கு யானைகள் இருக்கும். நான்கு யானைகள் இருந்தாலும் இரண்டு யானைகள் மட்டுமே கும்பத்தை வைத்திருக்கும். துவக்ககால சாளுக்கிய வடிவங்களில் தாமரை பீடமானது மலர் கொடி பின்னல்களில் மறைந்திருக்கும் (விருப்பாக்ஷா ஆலயம்). சில சித்தரிப்புகள் விரிவாக செதுக்கப்பட்டிருக்கும், அவற்றில் வருணன் முதலிய சேவர்கள் இருப்பர். சில இடங்களில் (உதாரணமாக ராவண காஹி எல்லோரா, படம் 20) தாமரை தடாகம் சிற்பத்தின் முகட்டுத்தளம் போல செதுக்கப்பட்டிருக்கும், அவற்றில் தாமரையுடன் நாகங்கள் நின்றிருக்கும். இத்தகைய வடிவங்கள் ’அபிஷேக-ஸ்ரீ’ என சொல்லப்படுவதை விட கஜலக்ஷ்மி என்றே அறியப்படுகின்றன. எனினும் இரண்டாயிரம் வருடங்களாக இந்த வடிவம் பெரிதாக எந்த மாறுதல்களும் இல்லாமல் நிலையாக தொடர்ந்து வருகிறது எனலாம்.
துவக்ககால இந்திய கலையில் அபிஷேக வடிவம் அடிக்கடி தென்படுகிறது. இது சிக்கலான வடிவமும் கூட. இந்திய சிற்பவியல் வரலாற்றில் முக்கிய இடத்தை வகிக்கிறது, ஸ்ரீ-லக்ஷ்மியுடன் தொடர்புடையது என்பதால் மட்டுமல்ல. ஸ்ரீ-லக்ஷ்மி சிற்பங்களில் இந்த வடிவம் பெரும்பாலும் வகை-1ம், 2ம் இணைந்தவாறு, அல்லது வகை-2ம், 3ம் இணைந்தவாறே காணப்படும். பார்ஹட் சிற்பங்களில் இறைவி வலக்கரத்தால் இடமார்பை அழுத்துவது இருக்கும். பல சிற்பங்களில் நிற்பதற்கு அல்லது அமர்வதற்கான தாமரை பீடம் தாமரைச்செடியின் கிளைகளுடனும் இலைகளுடனுமே காணப்படும். அவை தடாகத்தில் இருந்து மேலெழுந்திருக்காது, பூரண கும்பத்தில் இருந்து மேலெழும் (படம் 18). தாமரையுடன் இணைந்த கலசம் நீரைச் சுட்டுவது, வளத்தின் செழிப்பின் குறியீடு. ஆகவே அஸ்டமங்கலங்கள் வரிசையில் இறுதியில் வருகிறது. மேலும் எல்லா காலங்களிலும் சுவர் அலங்காரகளில் இது வடிக்கப்பட்டுள்ளது. துவக்ககால கலையில் உள்ள இதன் வடிவமுறையையும், இது காண்பிக்கும் சூழலையும் பார்க்கும் போது இறைவியின் குறியீட்டு வடிவமாக கலசம் இருக்கலாம் என கருதுகிறேன். ஆனால் இதற்கு ஏற்ற சான்றுகளை என்னால் தர இயலாது. சாஞ்சி (படம் 21), மதுரா, அமராவதி (படம் 22), சிலோன், ஜாவா ஆகிய பல இடங்களில் இந்த சித்தரிப்பை காணலாம்.
கும்பத்திலிருந்து மேலெழும் பிற கிளைகளில் இரண்டு கிளைகள் யானைகளை தாங்கியிருக்கும். யானைகள் துதிக்கைகளை தூக்கி தலைகீழாக பிடித்துள்ள கும்பத்திலிருந்து நீரை இறைவி மீது பொழிந்துகொண்டிருக்கும் (படம் 18). பொழியும் நீராலேயே அது அபிஷாக (திருமுழுக்காட்டு) வடிவம் எனப்படுகிறது. யானை, கும்பம், நீர் ஆகியவை மேகம் மற்றும் மழையை சுட்டுகின்றன. புராணங்களில் பார்கடலைக் கடையும் போது லக்ஷ்மி வெளிவந்தது போலவே இந்திரனின் யானையான ஐராவதமும் வெளிவந்தது. ஐராவதமும் மேகத்தின் குறியீடு.
முற்காலத்தில் நான்கு யானைகள் நான்கு திசைகளை குறித்தன. இதை மேலே பார்த்த கல்ப சூத்திரமும் சொல்கிறது. பதாமியின் இரண்டாம் மற்றும் நான்காம் குகைகள் (ஆறாம் நூற்றாண்டு), மாமல்லபுரம் (ஏழாம் நூற்றாண்டு), மற்றும் பல பிற்கால வடிவங்களில் நான்கு யானைகள் வடிக்கப்பட்டுள்ளன (படங்கள் 23, 24). அவை ஐராவதா, அஞ்சனா, வாமனா, மஹாபத்மா. புவனேஸ்வரியை போற்றும் தந்ரசார பாடலின் ஒருவரி அவளின் தோற்றத்தை லக்ஷ்மியென பாடுகிறது, “நான்கு யானைகள் துதிக்கையால் கும்பத்தை ஏந்தி அமிர்தத்தை உன் மீது பொழிகின்றன” என பாடுகிறது(13). ரிக்வேதத்தில் தலைகீழ் கும்பம் (அல்லது கலயம், குடுவை) மழைமேகத்தின் குறியீடாக பல இடங்களில் வருகிறது – ”மழையை பொழிய வருணன் உருவாக்கியது” என்கிறது பாடல் V.85.3-4, ”மருத்துக்கள் விண்ணின் கும்பத்தை ஊற்றுகிறார்கள், அதிலிருந்து மழை மேகங்கள் விடுபட்டு மழையைப் பொழிகின்றன” என்கிறது V.53.6. மருத்துக்கள் காற்றுகளின் உருவகம். ”விண் யானைகளே காற்றுக்களின் மூலம், அவற்றின் துதிக்கையிலிருந்தே காற்றுக்கள் ஊதப்படுகின்றன” என்கிறது மகாபாரதம் vi.12.36, vii.94.7. அதர்வவேதம் xviii.4.36 “வானிலுள்ள கும்பத்தில் நீர் முழுவதும் நிரம்பியுள்ளது, உயிரளிக்கும் நீர், அது அழகியது” என்கிறது. ஆகவே கவிழ்க்கப்பட்ட கும்பத்திலிருந்து பொழியும் நீர் உயிரின் ஊற்றான மழையின் குறியீடே. விண்ணின் சோமத்தை கொண்டுவரும் மழையும் மேகமுமே வளர்ச்சியின் செல்வத்தின் ஆதாரம்(14). இதை உறுதிசெய்யும் வகையில் ஜக்கய்யாபேட்டை (jaggayyapeta) ஸ்தூபத்தின் பிரகார புடைப்புச்சிற்பங்கள் ஒன்றில் மேகங்கள் நாணய மழை பொழிவது சித்தரிக்கப்பட்டுள்ளது(15).
பஸ்ஷார்க் (Basarh) மற்றும் பித்தா (bhita) பகுதியில் கிடைத்த குப்த முத்திரைகளில் சிறுசிறு வேறுபாடுகளுடன் கஜலக்ஷ்மி வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன (படம் 25). அதில் யக்ஷர்கள் செல்வம் வைக்கப்பட்டிருக்கும் கும்பத்திற்கு அருகில் நிற்பர், அல்லது கையில் ஏந்தி கும்பத்திலிருந்து செல்வத்தை பொழிந்துகொண்டு இருப்பர். சிலவற்றில் இறைவி ஸ்ரீவஸ்த முத்திரை அல்லது சங்கு முத்திரையுடன் தொடர்புபடுத்தப்பட்டிருப்பாள்.
கஜலக்ஷ்மி வடிவை தவிர்த்து அபிஷேகம் என்ற சடங்கை மட்டும் எடுத்துக்கொண்டால் இது அரச சடங்குகளில் முக்கிய இடம் வகித்தது, உதாரணமாக முடிசூட்டு விழா. சடங்குகளிலும் இதற்கான குறியீட்டு அர்த்தம் அதுவே. அரச விழா அபிஷேக காட்சிகள் சில இடங்களில் பொறிக்கப்பட்டுள்ளன – உழூக ஜாதக கதையில் வரும் ஆந்தை அரசன் முடிசூட்டுவது மதுராவில் புடைப்புச்சிற்பமாக கிடைத்துள்ளது, பதாமி குகை 4-ல் கிருஷ்ணன் தன் நண்பர்களுடன் முடிசூடி விளையாடும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது(16). மஸ்ருர் (masrur) குடைவரையின் சாளர சிற்பத்தொகுதியில் ஸ்ரீலக்ஷ்மியின் அபிஷேகவடிவமும் முடிசூடுவதும் இணைந்துள்ளது (படம் 26). பெரும் மகுடத்தை விண் மகளிர் இறைவியின் தலையில் வைக்கின்றனர்(17). இந்தவகையான சித்தரிப்பை புத்தர் முடிசூடும் சிற்பங்களில் அல்லது சிவன் பார்வதி முடிசூடும் சிற்பங்களிலும் காண்கிறோம்.
புத்தருக்கு முன்பே ஸ்ரீலக்ஷ்மி வழிப்பாடு இருந்தது பற்றியும், அதன் குறியீட்டு அர்த்தம் மற்றும் விளக்கம் பற்றிய பல குறிப்புகள் துவக்ககால இந்து நூல்களில் உள்ளன. விரிவான அபிஷெக வடிவம் பற்றி குறிப்பும் உள்ளது(18).
சிற்பங்களில் நமக்கு கிடைப்பவற்றில் சிலவற்றை சற்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும் பல சிற்பங்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் ஸ்ரீலக்ஷ்மியின் வடிவங்களே. ஸ்ரீலக்ஷ்மி என சற்று உறுதியாக சொல்லமுடியாத ஆனால் அதற்கு அருகில் வரும் சிற்பங்களுக்கு சில உதாரணங்களை பார்க்கலாம்.
அமராவதி சிற்பங்களில் மலர் வளையத்தை யக்ஷர்கள் தாங்கி நிற்கும் சித்தரிப்புகள் உள்ளன. அவற்றில் யக்ஷர்கள் அழகிய இளமை வடிவத்தில் இருப்பர் அல்லது கணங்களாக இருப்பர் (ஒரு சிற்பத்தில் கணங்களின் தலை யானைத்தலையாக உள்ளது). மலர் வளையத்தின் வலப்புறத்தில் அல்லது இடப்புறத்தில் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தால் மகரம் அல்லது குட்டை யக்ஷரின் திறந்த வாயில் இருந்து அந்த மலர்வளையம் அல்லது மலர்களுடன் கொடி வருவது சித்தரிக்கப்பட்டிருக்கும். சாஞ்சி, பார்ஹட் ஆகிய இடங்களில் தாமரைத் தண்டுடன் யக்ஷர் அல்லது மகரத்தின் வாயிலிருந்து வெளிவரும் சிற்பங்களை காணலாம் (படங்கள் 27, 28). அமராவதியில் மலர்வளையத்தை யக்ஷர்கள் தாங்குவது மட்டுமல்லாமல் அதை அதன் மூலத்தில் இருந்து (உதாரணம் மரகத்தில் வாய்) வெளியே இழுத்து எடுப்பதும் சித்தரிக்கப்பட்டுள்ளது (யக்ஷர்கள் தாவரங்களுடன் தொடர்புடையவர்கள், நீரிலுள்ள தாவர மூலத்திலிருந்து தாவரங்களை உருவாக்கி எடுப்பவர்கள்). வழக்கமாக ஆண் யக்ஷர்கள் சித்தரிக்கப்பட்டிருப்பர். ஆனால் ஒரு சிற்பத்தில் மட்டும் (படம் 29) பெண் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவள் மலர்ந்த தாமரையின் மகரந்த விதைப்பரப்பின் மீதமர்ந்து, மலர் வளையத்தில் தன் முதுகைத் தாங்கி ஆற்றலை செலுத்தி மலர்மாலையை அதன் மூலத்தில் (மகரத்தின் திறந்த வாய்) இருந்து வெளியே எடுக்கிறாள். மகரத்தின் மீது பல தாமரை கொத்துக்கள் காணப்படுகின்றன. இவை இந்த சித்தரிப்பு நீர் சூழல் என்பதை தெளிவாக காட்டுகின்றன. இந்த சிற்பத்தில் காணப்படும் படைப்புச் சுதந்திரத்தினாலும், நுண் விவரணைகளாலும் இது மிகவும் தனித்தன்மை வாய்ந்த சித்தரிப்பு. மேலும் அந்த யக்ஷி ஸ்ரீலக்ஷ்மியை (கமலா) தவிர வேறு எதுவாக இருக்க வாய்ப்பில்லை எனலாம். உறுதியாக ஸ்ரீலக்ஷ்மியே என்றால்கூட இங்கு அவள் யக்சர்களுடன் யக்சியாக இருப்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல. ஏனென்றால் அவளை யக்ஷர்களுடன் தொடர்புபடுத்தும் உதாரணங்களை நூல்களில் இருந்து பார்த்தோம். மேலும் ஒரு மரபு அவளை ஹரிதியின் மகள் என்கிறது.
சிர்காப் (sirkap) பகுதியில் காந்தார கலைக்கு முந்தைய கலை வடிவின் பெண் சிற்பம் கிடைத்துள்ளது (படம் 30)(19). இவள் சன்னவீரமும் மேகலையும் அணிந்து புடவை உடுத்தி நிற்கிறாள். இடக்கரம் அவிழ்ந்து விழுகும் புடவையை பிடித்துள்ளது. மேல் தொடையும் பிருஷ்டமும் தெரிகின்றன. வலக்கரம் மார்புகளுக்கு அருகே தாமரை மலரை ஏந்தியுள்ளது. இந்த சிற்பம் பாதி ஹெலெனிஸ்டிக் பாணியில் உள்ளது. அவிழ்ந்து விழும் ஆடை துவக்ககால இந்திய கலைகளில் காணப்படுவதில்லை(20). ஆனால் இதிலுள்ள மற்ற அம்சங்கள் பண்டைய இந்திய தன்மை கொண்டதே. இதை ஸ்ரீலக்ஷ்மி என சொல்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஆனால் உறுதியாக சொல்லமுடியாது.
இன்று இந்துக்களும் சமணர்களும் செல்வமும் வளமும் பெருக லக்ஷ்மியை வணங்குவதற்கான விழாவாக தீபாவளியை தீபங்கள் ஏற்றி கொண்டாடுகின்றனர். தீப விளக்கை ஏந்தி பெண் நிற்கும் பாவைவிளக்கை தீபலக்ஷ்மி என சொல்வதுண்டு. இந்த வடிவத்தின் மிகபழமையான சிற்பங்கள் காந்தார கலையில் கிடைத்துள்ளன(21). ஆனால் இவைகள் லக்ஷ்மி-விளக்கு என அழைக்கப்பட்டனவா என நமக்குத் தெரியாது.
துவக்ககால இந்திய கலையில் ஸ்ரீலக்ஷ்மியின் சிற்பவியல் பற்றிய இந்த சுருக்கமான பார்வையில் கார்னகோப்பியாவை (cornucopia) ஏந்திய ஈரானிய அதிர்ஷ்ட தெய்வத்தை குறிப்பிட வேண்டியதில்லை என நினைத்தேன். ஆனால் முழுமையான பார்வைக்காக அவளை இங்கு சுருக்கமாக குறிப்பிட்டாக வேண்டும். அவள் கிறுஸ்துவ காலத்தின் துவக்கத்தில் அர்டோக்ஷோ (Ardochsho) என நாணயங்களில் பொறிக்கப்பட்டாள். ஈரானிய கலையின் இருந்து இந்த வடிவம் படிப்படியாக இந்திய கலையில் உள்வாங்கப்பட்டு இந்திய மண்ணின் ஸ்ரீலக்ஷ்மியுடன் இணைக்கப்பட்டது, கார்னகோப்பியா நீண்ட தண்டுடன் கூடிய தாமரையாக மாறியது, யானைகள் சேர்க்கப்பட்டன. இந்த மாற்றத்தை காஷ்மீரில் கிடைத்த சிற்பங்கள் நன்கு காட்டுகின்றன(22).
இதுவரை பார்த்தவற்றின் சுருக்கம்:
ஸ்ரீலக்ஷ்மி ஒரு வேத கருத்தாக்கமும் வளத்தை சுட்டும் இந்திய அன்னை தெய்வமும் இணைந்தவள். தாமரை மற்றும் நீருடனே அவள் தொடர்புபடுத்தப்படுகிறாள். அவளின் திட்டவட்டமான சிற்பவியல் வடிவம் மிகமிக துவக்ககாலத்தில் உருவானது, கிட்டத்தட்ட எந்த மாற்றமும் இல்லாமல் இன்றுவரை தொடர்வது.
அடிக்குறிப்புகள்:
1. பிருத்வியின் விவரனைகளை அப்படியே மதுகசைக்கும் ஒப்பிடலாம். மதுகசை வற்றாத சோம கலத்தை கொண்டவள். அதர்வவேதம் ix.1 “வற்றாதவை, ஆயிரம் ஊற்றுகளாக பால் சுரப்பவை மதுகசையின் முலைகள்” என்கிறது. சமஸ்கிருதத்தில் மதுகசா. மது + கசை = தேன் + சாட்டை. அஸ்வினி தேவர்களின் சாட்டை. இது வளத்தின் ஊற்றான மழை பொழிவில் தோன்றும் மின்னலாக இருக்கலாம். அதர்வவேத பாடல் இதை பெண்ணாக உருவகப்படுத்தி, வளத்தின் தெய்வமாக சொல்கிறது. இவள் வசுக்களின் மகள். ஆதித்யர்களின் அன்னை. மற்றோரு இடத்தில் இவளை பசுவுடன் ஒப்பிட்டு, வளத்தில் ஊற்றான நீர் அவள் மீது பொழியப்படுவதையும் (அபிஷேகம்), பொழிபவர்களுக்கு அவள் வளத்தை அளிப்பதையும் குறிப்பிடுகிறது. இது ஸ்ரீலக்ஷ்மி பொழியும் நீரில் குளிப்பதற்கும், தன் முலையை அழுத்தி பாலை பொழிவதற்கும் மிக நெருக்கமானது.
தைத்ரேய சம்ஹிதை III, 1.11 ”மின்னல் பசுவைப்போல கனைக்கிறது, மலை பொழியும் போது தாயைப் பசு கன்றை அனைவதுபோல் மலை பூமியை அனைகிறது” என்கிறது. மின்னல் எப்போதும் பெண்ணாக, மேகத்தின் சேவகியாகவே உருவகப்படுத்தப்பட்டுள்ளது. (தைத்ரேய சம்ஹிதை IV, 1.11 சரஸ்வதியை மின்னல் சேவகி என்கிறது.) பிற்காலத்தில் ராதை மின்னல் ஒளியாகவும், கிருஷ்ணன் கருமேகமாகவும் குறிப்பிடப்படுகின்றனர். எவ்வாறு மிகமிகத் தொன்மையான படிமமும் மனநிலையும் பிற்காலத்தில் மிக உணர்ச்சிப்பூர்வமாக, புராணமாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இதை சான்றாக முன்வைக்கலாம்.
2. மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: சாஞ்சியில் உள்ள ஒரு லக்ஷ்மி சித்தரிப்பு (படம் 6) வீனஸுடன் ஒப்பிடப்பட்டிருப்பதை இதில் காணலாம்: commons.wikimedia.org/wiki/File:Lakshmi_Sanchi_Stupa_2.jpg
3.மகரம் நீரின் குறியீடு அல்லது நீரிலுள்ள சாராம்சத்தின் குறியீடு. கருவுருதலையும் குறிக்கிறது. பெரும்பாலும் வருணன், யக்ஷிகள், காமன் ஆகியோருடனேயே தொடர்புபடுத்தப்படுகிறது. மேலும் நிலவுடனும் கங்காதேவியுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது.
4.சாரநாத்தில் கிடைத்த நான்குபக்க சிம்ம முத்திரையும், ராமபுராவில் கிடைத்த எருது முத்திரையும் நிற்கின்ற தாமரை பீடம் இவ்வடிவிலேயே உள்ளது. இதிலும் தாமரை இதழ்கள் தலைகீழாக கவிழ்ந்து காணப்படுகின்றன. ஆனால் இதழ் முனைகள் சற்று வளைந்துள்ளன, ஆகவே இது பார்ப்பதற்கு மணி வடிவத்தில் காணப்படுகிறது (பார்ஹட்டில் அவ்வாறு இல்லை). இதன் மேலுள்ள வட்டவடிவ பீடத்தின் மீதே அச்சின்னங்கள் நிற்கின்றன. இவற்றில் நீண்ட தண்டு இல்லை. துவக்ககால ஸ்தம்பங்கள் சிலவற்றின் மீதும் இவ்வடிவத்தை காண முடியும்.
5.மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: கல்வெட்டு பொறிப்பைப்பற்றி இவற்றில் காணலாம்: The stūpa of Bharhut: a Buddhist monument ornamented with numerous sculptures, jatland.com/home/Bharhut_inscriptions
6.ஆண் தெய்வங்களில் இறகு அரிதானதல்ல. பார்ஹட்டின் பிரசன்னஜித் இந்திரஜித் தூணில் இறகுடைய தெய்வங்களை காணலாம். சுப்ரணா மற்றும் கருடன் இறகுடன் இருப்பவர்கள். புத்தகயா மற்றும் காந்தாரத்தில் கிடைத்த யக்ஷ சிலைகள் சிலதில் இறகு உள்ளது. பெண் தெய்வங்களில் அகுன் தெரி (akhun dheri)-யில் கிடைத்த தெய்வத்தை தவிர வேறெந்த தெய்வமும் இறகுடன் கிடைக்கவில்லை. இந்திய சிற்பவியலில் துவக்ககாலத்திலும் பிற்காலத்திலும் இறகுடைய வேறு பெண் தெய்வத்தை என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. இந்த சிற்பத்தை Annual Report Of The Archaeological Survey Of India 1922-1923 (plate X, b)-ல் காணலாம்.
7.துவக்ககாலம் மற்றும் சுங்க சுடுமண் சிற்பங்களிலும், குஷாண மற்றும் சுங்கம் யக்ஷி சிற்பங்களிலும் மேகலை குறிப்பிடத்தக்க அம்சம். தாய்த்து, காப்பு போன்ற அணியாக மேகலை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி அதர்வவேதம் நான்காம் காண்டத்தில் குறிப்புள்ளது.
8.தன் மார்பை அழுத்தி பாலை பொழியும்’ குறியீடு காலத்தால் மிக முற்ப்பட்டது. இதற்கு உதாரணமாக மேலே பார்த்த தைத்ரிய சம்ஹிதை பாடலை நினைவுகூறலாம். இத்ததைய வடிவில் சுங்க சுடுமண் ஒன்று கிடைத்துள்ளது, அது ஸ்ரீலக்ஷ்மியாக இருக்கலாம். மேலும் ஆடையற்ற பெண் தெய்வங்கள் மிகப்பழமையான மெசபடோமிய சிடுமண் சிற்பங்களில் கிடைத்திருப்பது அனைவரும் அறிந்ததே.
9.மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இந்த ஓவியச்சுவரின் முழுவடிவை இதில் காணலாம்: File:Ancient Khotan BLER4 AKV2 PLII PHOT.jpg – Wikimedia Commons. இவள் ஹோடான் ஹரிதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
10.இவளின் பிறப்புறுப்பில் முடிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய மற்றும் ஏஜியன் (aegean) பகுதிகளிலேயே இவ்வாறு சித்தரிக்கப்படுகிறது. இது இந்தியபாணிக்கு ஆந்நியமானது. சுங்க குஷான பகுதிகளில் ஆடை அணிந்தவாறு சித்தரிக்கப்பட்டிருக்கும். எனினும் அச்சித்தரிப்புகளில் உடல் வனப்பு ஆடையற்று இருந்தால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறே காட்டப்பட்டிருக்கும். இதற்கான உதாரணத்தை ‘History of Indian and Indonesian Art’ நூலில் படங்கள் 57, 58-ல் காணலாம். இந்த சித்தரிப்பு முறை மிகப்பழமையான சுமேரியன் மற்றும் ஐரோப்பாவின் நியோலிதிக் சுடுமண் சிற்பங்களில் காணலாம்.
11.மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: மித்ரர் நாணங்களில் உள்ள லக்ஷ்மியின் வடிவத்தை இதில் காணலாம்: en.wikipedia.org/wiki/Mitra_dynasty_(Mathura)
12.மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ஸொடாஷா நாணங்களில் உள்ள அபிஷேகம் செய்யும் லக்ஷ்மியின் வடிவத்தை இதில் காணலாம்: en.wikipedia.org/wiki/Sodasa
13.Hymns to the Goddess by John Woodroffe (Arthur Avalon), 1913
14.நீரை பொழியும் யானைகள் லக்ஷ்மி தவிர வேறு சித்தரிப்புகளில் காணப்படுவதில்லை. ஆனால் கன்ஹேரி குகையின் இரு தூண்களில் இது செதுக்கப்பட்டுள்ளது. ஒரு தூணில் புத்தர் ஞானமடைந்ததை குறிக்கும் போதி மரத்தின் மீதும், மற்றொரு தூணில் பரிநிர்வாணத்தை குறிக்கும் ஸ்தூபத்தின் மீதும் யானைகள் நீரை பொழிகின்றன.
15.THE BUDDHIST STUPAS OF AMARAVATI AND JAGGAYYAPETA : James Burgess, plate LV, 3
16.Memoirs of the Archaeological Survey of India no.25 by Banerji, R.D.pt XXV
17.Annual Report pt.1 (1914-15) : Marshall, John
18.இங்கு ஒரு விவாதத்தை குறிப்பிடுவது அவசியம். துவக்ககால அபிஷேக வடிவங்கள் புத்தரின் பிறப்பை சுட்டும் குறியீடு, அதிலிருப்பது மாயாதேவி, குப்தர் காலத்திற்கு பிறகே இந்த வடிவம் பிராமணிய கலையில் எடுத்தாளப்பட்டு லக்ஷ்மியாக குறிப்பிடப்படுகிறது என்று நிறுவுவதற்கான முயற்சி நிகழ்ந்து வருகிறது, உதாரணமாக A.Foucher. இந்த திரிபுக்கு சான்றாக காந்தார புடைப்புச்சிற்பங்களில் உள்ள காட்சிகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் குழந்தை போதிச்சத்துவருக்கு இருவர் கும்பத்தில் உள்ள நீரை பொழிந்து முதல் நீராட்டை நிகழ்த்துகின்றனர். ஆனால் இவற்றை சரியான ஆதாரமாக கொள்ள முடியாது. ஏனென்றால் முதல் நீராட்டு இவ்வாறு சித்தரிக்கப்படுவதில்லை, வேறு வகையிலேயே சித்தரிக்கப்படுகிறது. மேலும் இதில் நீராட்டு தாய்க்கு இல்லாமல் குழந்தைக்கே நிகழ்த்தப்படுகிறது. ஆகவே இதை மாயாதேவியுடன் அடையாளப்படுத்த முடியாது. மேலும் புத்தரின் பிறப்பை குறிக்கும் சிற்பங்கள் எதுவும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை. (ஆனால் மாயாதேவியின் கனவில் வெள்ளை யானை வருவது சாஞ்சி மற்றும் பார்ஹட்டில் சித்தரிக்கப்பட்டுள்ளது.) இவ்வாறு புத்தபிறப்பை சுட்டும் ஒரு குறியீடு துவக்ககால கலையில் இருந்திருந்தால் அது அமராவதியில் கிடைத்திருக்கும். அமராவதியில் புத்தரின் பழமையான குறியீட்டு வடிவங்கள் அனைத்திற்கும் அவற்றிற்கு இணையான புத்தரின் மனித வடிவங்கள் அருகருகே சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அபிஷேக வடிவம் அமராவதியில் கிடைக்கவில்லை, இதற்கு இணையான சிலோனின் துவக்ககால புத்த கலையிலும் கிடைக்கவில்லை. எனவே அபிஷேக வடிவத்தில் இருப்பது மாயாதேவியின் சித்தரிப்பு என்ற வாதத்தை நாம் உறுதியாக நிராகரிக்கலாம். அபிஷேக சித்தரிப்புக்கான அர்த்தம் தெளிவாக நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. அபிஷேக சித்தரிப்பு பெளத்த மதத்தில் இருந்து எடுக்கப்படவில்லை. ஆகவே பெளத்தத்துடன் இதை தொடர்புபடுத்தி ஊகிக்க முடியாது.
19.Annual report of the director-general of archaeology in India, 1919-20, pl IX
20.ஆடை அவிழும் சித்தரிப்பு இதே காலத்தில் எகிப்திய கலையில் காணப்படுகிறது. இந்தியாவில் பிற்காலத்தில் புத்த நூல்களில் மாரனின் மகள்கள் ஆசையை தூண்டும் போது இது சொல்லப்படுகிறது. இந்து நூல்களில் தாருகவன ரிஷி பத்தினிகள் கதையில் ஆடை அவிழ்தல் குறிப்பிடப்பட்டுள்ளது.
21.Annual Report Of The Archaeological Survey Of India 1915-16
22.காஸ்மீர் வடிவங்களை இவற்றில் காணலாம்: ASI annual report 1913-14, pl xxvii, pg 55. Handbook of the Archaeological and Numismatic Sections of the Sri Pratap Singh Museum, Srinagar, pg 64. அர்டோக்ஷோ வடிவங்களை இவற்றில் காணலாம்: Catalog of Coins in the British Museum – Greek and Scythic Kings of Bactria and India – Percy Gardner, pl lxiv; kkvi.6; xxvii, Catalog of coins in british museum, Allan.J, Coins of indo-scythian, Cunningham. A, pl xxii,2,6
மூலம்: Early Indian Iconography, II.Sri-Laksmi, by Ananda K. Coomaraswamy, Eastern Art, Vol.1, No.3, 1929, pp.175-189
*
– தமிழில் தாமரைக்கண்ணன்
(பி.கு: இந்த மொழிபெயர்ப்பில் எனக்கு பல வகைகளில் உதவியாக இருந்த நண்பன் அனங்கனுக்கு நன்றி)
அழகான மொழி மாற்றம். வாழ்த்துக்கள்.
ஶ்ரீலட்சுமி உருவத்தின் பரிணாமம் பற்றி ஒரு சித்திரத்தை அளிக்கும் கட்டுரை. ஆனந்த குமாரசாமியின் கட்டுரைகளை தொடர்ந்து தமிழில் மொழிபெயர்க்கும் நண்பர் தாமரைகண்ணனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். ஒரு பெண் தெய்வம் சம்பந்தமான முக்கியமான கட்டுரையை இதழில் பிரசுரிக்க தேர்வு செய்த நீலி ஆசிரியரின் தேர்வும் சிறப்பு!
நன்றி ஜெயராம். ஶ்ரீலட்சுமியின் இந்தக் கட்டுரையை வாசித்து முடித்தபோது கலைமகளுக்கும், சக்திக்கும் இத்தகைய ஒரு முழுமையான ஆவணப்படுத்தல் வேண்டும் என்று தோன்றியது. இதன் தேவை உள்ளது.