களிநெல்லிக்கனி: தொழுது, ஆற்றா தியாகம்

(ஒளவையார் பாடல்களை முன்வைத்து கவிஞர் இசை எழுதும் தொடர்)

கவிஞர் ஒளவையாருடன் கவிஞர் இசை

அவ்வையின் புறப்பாடல்களில் அதிகம் பாடப்பட்டவன் அதியமானே.சில பாடல்களில் அவன் மகன் பொகுட்டெழினி பாடப்பட்டுள்ளான்.  ஒரு பாடலில் நாஞ்சில் வள்ளுவனும், ஒரு பாடலில் மூவேந்தரும் போற்றபட்டுள்ளனர். சில பாடல்கள் பொதுவான புறப்பாக்கள். 

அவ்வை- அதியமான்- நெல்லிக்கனி என்கிற  மறக்க இயலாத கதையை  நாம் பள்ளிப் பாடத்தில் படித்திருக்கிறோம். அதன் உணர்வுப் பெருக்கால்  அந்நாடகம் நம் நெஞ்சிலே  நிலைத்துவிட்டது.  நாம்  தியாகம் செய்யத் தயாரில்லை ஆயினும் தியாகம் நம் நெஞ்சை விட்டு நீங்குவதுமில்லை.  ஒரு தமிழ் மாணவனுக்கு நெல்லி என்பது வெறுமனே விட்டமின்- சி அல்ல. அதனுள் இரண்டாயிர  வருடத்திய தமிழும் கவிதையும் அலை புரள்கின்றன. நெல்லியைத் தொடுவது அவ்வையைத் தொடுவதுமாம். 

 “கரபுரநாதர் புராணம் ” என்கிற நூலில் நெல்லிக்கனி இளமையை காக்கும் கதை சொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மூலிகைக் காடான சஞ்சீவி மலைக்கு அந்தணன் ஒருவர் வருகிறார். கூடவே அவரது வயது முதிர்ந்த சீடனும். அந்தணன் மூலிகைகளைத் தேடி சென்ற  போது சீடன் உணவு தயாரிக்கிறான். சோற்றைக் கிளற அவன் ஒரு கருநெல்லிக்குச்சியை பயன்படுத்த,  சோறு முழுவதும் கருத்து விடுகிறது. இதனால் 

அஞ்சிய சீடன் முழு சோற்றையும் தானே தின்று விடுகிறான். உடனே அவன் முதுமை நீங்கி இளமை அடைகிறான். இதை அறிந்த அந்தணணும் சீடன் உண்ட உணவை வாந்தி எடுக்கச் சொல்லி அதைத் தான்  உண்டு அவனும் இளமை அடைந்தான் என்கிறது புராணம். மேலும் இப்புராணம் அதியனும் அவ்வையும் உடன் பிறந்தவர்கள் என்கிறது. அதியன் அவ்வைக்கு நெல்லிக்கனியைத் தர , இறை அமுதே அமுதென்று சொல்லி அதை உண்ண மறுத்து கரபுரநாதரை நோக்கி நடந்தார் என்கிறது இந்நூல்.

 அவ்வையைச் சுற்றி ஆயிரம் கதைகள் அதிலொரு கதை மேலே சொன்னது.  அதியனைப் போற்றியே  அநேகப் பாடல்களைப் பாடியிருப்பதால் அவ்வை அதியனின் அவைப் புலவர் என்று  சொல்லப்படுகிறது.  ஆனால் ஒரு பாடலில்  பரிசில் தராத அதியனுடன்  கோபித்துக் கொண்டு ” எத்திசை செலினும் அத்திசைச் சோறே’ என்று கிளம்பி விடுகிறாள். பாணர் சேரியில் வளர்ந்தவள்.  விறலி மரபினள். விநாயகக் கடவுளை வேண்டி  இளமையிலேயே முதுமை பெற்றவள். முருகப்பெருமான் விளையாடிய பாட்டி.  நிலவில் அமர்ந்து இன்றும் வடை சுட்டுக் கொண்டிருக்கும் கிழவி. இப்படி அவ்வை ஒரு ருசிகர குழப்பம். ஆனால் புறநானூற்றில் அதியன்  அவ்வைக்கு நெல்லிக்கனி வழங்கியது பாடப்பட்டுள்ளது. சிறுபாணாற்றுப்படையிலும் இந்நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.

புறநானூற்றில் 91வது பாடல்,

“சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின் அகத்து அடக்கி
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே!”

“அந்த நெல்லிக்கனி அடைய அரியது ஆகவே நாமே உண்போம் என்று கருதாமலும், அதன் அளப்பரிய பயனை என்னிடம்  சொல்லாமல் உன் மனத்துள்ளே அடக்கிக் கொண்டும், என் ஆயுளை நீட்டிக்க அளித்தாயே!”

இப்பாடலில் அதியமான்  சிவபெருமானுக்கு உவமை சொல்லப்படுகிறான்..

“பால்புரை பிறை நுதற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும!”

நமது பக்தி இலக்கியங்களில்  ‘பிறை சூடிய சென்னி’  வித விதமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. நான் வாசித்த வரை  ஒவ்வொரு முறையும் அது அழகாகவே வெளிப்பட்டுள்ளது. ” கோணற் பிறையன்” என்கிற விளிப்பு கூட  கோணலாக இருந்தாலும் அழகுதான். 

“ஆர்கலி நறவு” என்கிறாள் அவ்வை. ஆர்ப்பாட்டம் மிக்க மது  என்று அறிஞர்கள் பொருள் சொல்கிறார்கள். ஆர்கலி நறவை உடையவன் அதியன். அதியனின் ஆர்ப்பாட்டம் அடங்கி விட்டது. நறவோ இதோ இந்த நொடி வரை ஆடிக் கொண்டிருக்கிறது. ஏழ் கடலைப் புகுத்தி செய்த புட்டி அது. இப்பரந்த  உலகில் மது காணாத இருளில்லை. அது காணாத ஒளியுமில்லை. சேட்டை  செய்யும் குடிமகன் ஒருவனை ” களி மகன்” என்று விளிக்கிறது மணிமேகலை. அதாவது  களிப்பு முற்றியவன். தூய களிப்பில் சிக்கலொன்றுமில்லை. சமயங்களில் களிப்போடு சேர்ந்து யாவும் முற்றி விடுகிறது. அங்குதான் துவங்குகிறது சிக்கல்.

ஒரு நாளைக்கு எட்டுத் தேர் செய்யும் தச்சன்,  ஒரு மாதம் சிரத்தை  எடுத்து ,  பொறுமை கூட்டி,  ஆய்ந்து ஆய்ந்து ஒரு தேர்க்கால் செய்தான் என்றால் அது எவ்வளவு வலிமை கொண்டதாய் இருக்கும். அந்தத் தேர்காலிற்கு ஒப்பானவன் அதியன் என்கிறாள். 

“… வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே…” (புறம்: 87)

அதியன் யார் எனச் சொல்லி பகை மன்னர்களை எச்சரிக்கிறாள்

“பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின்
‘அது போர்’ என்னும் என்னையும் உளனே” (புறம்: 89)

என்னை- என் ஐ-  எம் தலைவன்

பொது மன்றத்தில் இழுத்துக் கட்டப்பட்டுள்ள முழவில் காற்று மோதி ஓசை எழுப்ப, அந்த ஓசையை போர் முரசம் என்று எண்ணி மகிழ்பவனாம்.

இந்தப் பாடல் விறலி கூற்றாக அமைந்த ஒரு பாடல். இதனைக் கருதி அவ்வை விறலியர் மரபில் வந்தவர் என்று முடிவு செய்துவிடக் கூடாதென்றும், இப்படிப் பாடுதல் கவிமதமென்றும் சொல்கிறார் உ.வே.சா.

ஒரு பாடலில் காந்தள் மலரை உடைந்த வளையலுக்கு உவமை சொல்கிறாள். 

“உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள்” (புறம்: 90)

உடைந்த வளையலான காந்தள் மலரை தேடிப் போய்ப் பாருங்கள். கூகுளிலாவது தேடிக் காணுங்கள்.

நீ போர்க்களம் புகுந்தால் உன்னை எதிர்க்கவும் ஆளுண்டோ? என்று கேட்கிறாள்..

“மறப்புலி உடலின் மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய 
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்?” (புறம்: 90)

பாரதியின் வசன கவிதை ஒன்று இப்படித் துவங்குகிறது…

“ஞாயிறே, இருளை என்ன செய்து விட்டாய்?
ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கி விட்டாயா?…”

அவ்வை அதியனின் உடன் பிறந்தவளா? நிறைய பாடல்கள் அவன் மேல் பாடியிருப்பதால் அவன் அவைப் புலவரா? பெறுதற்கரிய நெல்லிக்கனியை தான் உண்ணாது அவ்வைக்கு அளிக்கும் அளவு மதிப்பு மிகு உறவா அது? கூடி இருந்து கள்ளருந்தும் குடித் தோழமையா இருவருக்கும்? இக்கேள்விகளுக்கு அவ்வை ஒரு பதில் சொல்கிறாள்…

யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள் அறிவாரா; ஆயினும் தந்தையர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர் தம் மழலை;
என் வாய்ச் சொல்லும் அன்ன- ஒன்னார்
கடி மதில் அரண் பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீ அருளன்மாறே. (புறம்: 92)

யாழ் போல் இனியது அல்ல; சரியான  காலத்தில் ஒலிப்பதும் அல்ல; பொருள் கூட இல்லாத ஒன்று; ஆயினும் தன் மழலையின் மொழி மீது தந்தையின் வாஞ்சை குறைந்து விடுமா என்ன? அது போலத்தான் நீயும் என் சொற்களை  அரவணைத்து அன்பு செய்கிறாய்.

ஒளவை: உத்தமசோழபுரம்

போரில் விழுப்புண் பெறாமல் மடிந்தவர்களை வாளால் கீறி அடக்கம் செய்யும் மரபு குறித்து அவ்வையும் ஒரு பாடலில் சொல்கிறாள். அதியன்  போர்க்களத்தில் மதம் கொண்ட யானைகளை வென்று விழுப்புண் பெற்றான்.  எதிரிகளோ அவனொடு நேர் நிக்க முடியாமல் பின் வாங்கி ஓடினர். ஆகவே பெருமை இழந்து, நோயில் விழுந்து மடிந்தனர். அவர்களை அந்தணர்கள் பசும் புல்லைப் பரப்பி அதில் கிடத்தினர் ”  போரில் வீழ்ந்த வீர மறவர்கள் சென்ற வழியே நீங்களே செல்லுங்கள்” என்று சொல்லி வாளால் மார்ப்பைக் கீறி அடக்கம் செய்தனர்.

“மறம் கந்தாக நல் அமர் வீழ்ந்த 
நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க! என 
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ….” (புறம்: 93)

அதியன் யாருக்கு இனியன், யாருக்கு இன்னாதவன்? அவன் யாருக்கு எளியன்? யாருக்கு எமன்?

” ஊர்ச் சிறுவர்கள் தன் தந்தங்களை கழுவி விடும்படிக்கு, நீர் துறையில் சாந்தமாக  இளைப்பாறிக் கொண்டிருக்கும் பெருங்களிறு போல் எளியவன் எமக்கு; பகைவர்க்கோ கொல் கொடுங்களிறு.

“ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழா அலின்
நீர்த்துறை படியும் பெருங் களிறு போல இனியை, பெரும! எமக்கே…” (புறம்: 94)

பிரமாதமான உவமையல்லவா? பெருங்களிறு..! பேருரு..! ஆனால்

சிறுவர்களின் விளையாட்டுப் பொருள் போல்  அவ்வளவு எளியது. துடியான சிறுவன் ஒருவன் களிறின் கழுத்து மீது அமர்ந்து கழுவிக் கொண்டிருக்கும் காட்சியொன்று என்  கண்களில்   விரிகிறது. 

வஞ்சப் புகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. அந்த சுவாரஸ்யம் காரணமாக அந்த அணியில் அமைந்த பாடல்கள் எளிதில் நம்மை ஈர்த்து விடக் கூடியவை.  ஒளவையின் வஞ்சப் புகழ்ச்சி ஒன்று புகழ் மிக்கது. அவ்வை அதியனின் தூதாக சென்று அவனுக்கும் தொண்டைமானுக்கும் நிகழ இருந்த போரைத் தடுத்து நிறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. தமிழர் வரலாற்றில் முதல் பெண் தூது அவ்வைதான் என்று நினைக்கிறேன்.பெண் வாய் திறந்தால் வீடு இரண்டாகி விடும், நாடு நாளாகி விடும் என்பதே பொதுவான கருத்து. ஆனால் அவ்வை பேரழிவை தன் சமயோஜிதமான சொற்களால் தடுத்து நிறுத்தியுள்ளாள்.  அதியனுக்கும், தொண்டைமானுக்கும் இடையே போர் நிகழ்ததாக புறநானூற்றில் வேறு பாட்டொன்றும் இல்லை. 

அவ்வையிடம்  தொண்டைமான் தன் படைக்கலங்களின் பெருமையைக் காட்ட அப்போது அவ்வை பாடிய பாடல் இது…

“இவ்வே பீலி அணிந்து, மாலை சூட்டி
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து
கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே பகைவர்க் குத்தி, கோடு நுதி சிதைந்து,
கொல் துறைக் குற்றிலமாதோ…
அண்ணல் எம் கோமான், வைந் நிதி வேலே.” (புறம்: 95)

‘உன்னிடம் உள்ள போர்க்கருவிகளெல்லாம்  முனைகள் மழுங்காமல், நெய் பூசி, புத்தம் புதிதாக,  மயிற்பீலி சூட்டப்பட்டு பொலிவோடு விளங்குகின்றன. அதியனின் ஆயுதங்களோ ஓயாத போர்களால் முனை உடைந்து  கொல்லனின் பட்டறையிலேயே கிடக்கின்றன’ என்கிறாள்.  உடைந்த வேல் கொண்டு அதியனின் ஆற்றலை கச்சிதமாக எழுதிவிட்டாள். 

  அதியன் மகன் பொகுட்டெழினியின் இளமை வளத்தையும், போர்த்திறத்தையும் ஒரு சேர பாடியிருக்கிறாள் ஒரு பாட்டில். அவனுக்குப் பகைகள் இரண்டு. அவை என்ன?

“… ஒன்றே,
பூப்போல் உண்கண் பசந்து , தோள் நுணுகி,
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே
… துறை நீர்க் 
கைமான் கொள்ளுமோ என
உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே.” (புறம்: 96)

ஒரு பகை பொகுட்டெழினி கொடுத்த காதல் நோயால் பூப்போன்ற , மையுண்ட விழிகள் பசந்து, தோள் நலம் குன்றிய பெண்களின் பகை. அவன் படையெடுத்துச் செல்லும் ஊர்களின் நீர்த் துறைகளில் போர்யானைகள் புகுந்து விடுமோ என்கிற அச்சத்தால்  மக்கள்  அந்த ஊரில் தங்க விரும்பாது வேறிடம் தேடி ஓடுவர் . அந்த மக்களின் பகைதான் இன்னொரு பகை.

முதல்பகை வழக்கமானதுதான். காதலில் ஏக்கமே இன்பம் என்பதால் அது குறித்து கவலை கொள்ள ஒன்றுமில்லை. இரண்டாவது பகையோ இன்றைய வாசிப்பில் இழிவில் சேருகிறது. இரண்டு உலகப் போர்களைக் கண்டு அதன் கொடூரங்களால் சீரழிக்கப்பட்ட  நவீன மனித மனத்திற்கு புறநானூற்றின் எத்தனை வரிகள் இனிக்கும் என்பது சந்தேகமே?

இன்னொரு பாடல் அதியமானுக்கு அடி பணிந்து அவனுக்கு திறை செலுத்தி வாழுங்கள். இல்லையேல், உங்கள் அழகிய மனைவியரைக் கூடி நீங்கள் இன்புற்றிருப்பது நடக்காது என்று எச்சரிக்கிறது. (புறம்; 97) 

தீயன அண்டாது இருக்கவும். பேய்கள் நெருங்காது இருக்கவும் வெண்சிறு கடுகை புகைக்கச் செய்யும் பழக்கம் பழந்தமிழர்களிடையே இருந்துள்ளது. கடுகைப் புகைத்தாலும் அதியனிடமிருந்து தப்பி விட முடியாது. அவன் கூற்றம். உயிரை எடுக்காது விட மாட்டான்.

“நீயே ,ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை…” (புறம்: 98)

ஐயவி என்றால் வெண்கடுகு.

அதியமானின் ஆற்றல் புலவர்கள் பாடுவதற்கு அரியது. பரணர் போன்ற பெரும் புலவர் மட்டுமே பாட இயல்வது என்கிறாள்.

“அன்று பாடுநர்க்கு அரியை; இன்றும்
பரணன் பாடினான் மற்கொல்- மற்று நீ
முரண் மிகு கோவலூர் நூறி , நின்
அரண் அடு  திகிரி ஏந்திய தோளே” (புறம்: 99)

ஆனால் அதியன் கோவலூரை வென்று  பெற்ற வெற்றியைக் குறித்து  பரணர் பாடிய பாடல் எதுவும் சங்கப்பாடல்களில் இல்லை.  கிடைக்கப் பெறாமலும் இருக்கலாம். இந்தப் பாடலில் அதியனின் வேலை ” புனிற்றுப் புலால் நெடு வேல்” என்கிறாள். அதாவது எப்போதும் புதிய புலாலின் ஈரம் காயாத நெடிய வேலை ஏந்தியவன். 

நமது அப்பாக்கள் தனக்குப் பிறந்த பிள்ளைகளை முதன் முதலாக காணப் போகும் போது எப்படிப் போவார்கள்? முகம் முழுக்க சிரிப்பிருக்கும். கண்களில் கொஞ்சம்  நீர் திரண்டிருக்கும். கைகளில் இனிப்பிருக்கும். உதடுகளில் முத்தமொன்று துடித்துக் கொண்டிருக்கும். ஆசையோடு சூட்டி அழைத்து அழைத்து மகிழ பெயரொன்று நெஞ்சத்தில் மலர்ந்திருக்கும். இவைதானே நமது வழக்கம். ஆனால் அதியன் தனது மகனை முதன்முதலாக காணச் செல்லும் காட்சியை காட்டுகிறாள் அவ்வை. 

கையில் வேல்; காலில் கழல்; உடல் முழுக்க வியர்வை; கழுத்தில் காயாத புசும்புண்; முகத்தில் புலியொடு பொருத யானையின் வெஞ்சினம்; போர்க்களத்தில் எதிரியை நோக்கிய கண்களின் சிவப்பு தன் குழந்தையைக் காணும் போதும் மாறவில்லை.

“கையது வேலே; காலன புனை கழல்;
மெய்யது வியரே; மிடற்றது புசும்புண்;

வரிவயம்  பொருத வயக் களிறு போல,
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே;
செறுவர் நோக்கிய கண், தன்
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே.” (புறம்: 100)

பெற்ற பிள்ளை வீரனாக வளர வேண்டி,  தந்தை போர்க்கோலத்தில் சென்று குழந்தையைக் காணுதல் மரபு என்று சொல்லப்படுகிறது. இது புனைவெனில் கொடூரம். மரபெனில் ஆகக் கொடூரம்.

“கொழந்த சார் அது…!”

கவிஞர் இசை

*

கவிஞர் ஒளவையார்: தமிழ்விக்கி

கவிஞர் இசை: தமிழ்விக்கி

தாயம்மாள் அறவாணன்: தமிழ்விக்கி

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *