இந்தக் கதையை சரியாகச் சொல்வோம் (சிறுகதை): ஜெனிபர் நன்சுபுகாமக்கும்பி
“சமகால பெண் படைப்பாளிகளின் மொழியாக்க சிறுகதைவரிசை” – நரேன்
பகுதி 1: ஜெனிபர் நன்சுபுகாமக்கும்பி (உகாண்டா)
உகாண்டாவில் பிறந்து வளர்ந்த மக்கும்பி இதுவரை ஒரு நாவலையும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். தன்னுடைய பள்ளிப் பருவத்தில் இருந்தே நாடகங்களை எழுதி மேடையேற்றிய இவர், இச்சிறுகதைக்காக 2014ல் ‘காமென்வெல்த் சிறுகதை போட்டியில்’ பரிசு வென்றார். இவரின் கதைகள் உகாண்டாவில் வாய் மொழி கதையாடல் மரபை அடிப்படையாகக் கொண்டவை. இம்முறைமையில் தன் கதைகளை அமைப்பதின் மூலமாக தன்னுடைய “காண்டா” கலாசாரத்திற்கு தான் நேர்மையாக இருப்பதாக இவர் உணர்கிறார். வளர்ந்த நாடு ஒன்றிற்கு புலம் பெயரும்போது நூறு ஆண்டுகளை ஒரு சொடுக்கில் கடந்து விடுவதினால் வரும் குழப்பங்களையும் தன் பூர்வீக நிலத்துடனான உறவுத் தடுமாற்றங்களையும் தன் கதைகளில் லேசான பகடியுடன் வெளிப்படுத்தி வருகிறார். தற்போது மேன்செஸ்டர் நகரில் வசிக்கிறார்.
*
”இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்”(சிறுகதை) – ஜெனிபர் நன்சுபுகாமக்கும்பி
-(தமிழில் நரேன்)
ந்னாமின் வீட்டிற்கு இப்போது நீங்கள் சென்றால் சுவர் பெயிண்டின் வாசம் உங்கள் மூச்சை அடைக்கும் ஆனால் அவள் அதை மகிழ்வாக அனுபவிக்கிறாள். அவள் அம்மா கருவுற்றிருந்தபோது வீட்டின் வெளியே இருந்த ஒரு கழிப்பறையின், அது வெறும் ஒரு மலக்குழி, நாற்றத்தை சற்று தள்ளியிருந்து நுகர்ந்து அனுபவித்ததைப் போல. அவள் அம்மா குழந்தை பிறக்கும் வரை அனைவரையும் அருவறுப்புக் கொள்ளச் செய்யும்படி கழிப்பறையிலிருந்து சிறு தொலைவில் அமர்ந்துக் கொண்டு சாப்பிடுவதையோ அல்லது மற்ற வேலைகளையோ செய்வாள். ஆனால் ந்னாம் கர்ப்பிணி இல்லை. அவள் பெயிண்ட் வாசத்தை அனுபவிப்பதற்கு ஒரு காரணமுண்டு. ஒரு வருடத்திற்கு முன் அவள் கணவன் இறந்து போனான், ஆனால் அவனின் வாசனை இங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது, அவன் உருவம் இங்குள்ள பொருட்களின் மீது படிந்திருந்தது, அவன் குரலை படுக்கையறையின் சுவர்கள் உறிஞ்சியிருந்தது: ஓவ்வொரு முறையும் ந்னாம் தூங்கப் போகும்போது, அச்சுவர்கள் அவன் குரலை ஒலி நாடாக்களைப் போல திரும்பத் திரும்ப ஒலிக்கும். கடந்த வாரம், இந்தப் பெயிண்ட் கெயிட்டாவின் வாசத்தை மூழ்கடித்தது, படுக்கையறை சுவர்களும் அமைதியாக இருந்தது. இன்று, ந்னாம் பொருட்களிலிருந்த அவன் உருவத்தை துடைத்தெடுக்க திட்டமிட்டுள்ளாள்.
ஒரு வாரத்திற்கு முன்பு ந்னாம் பணியிலிருந்து ஒரு மாதம் விடுப்பு எடுத்திருந்தாள், அவளின் இரு மகன்களையும், லுமும்பா மற்றும் சங்காரா, உகண்டாவிலுள்ள தன் அப்பாவிடம் கெயிட்டாவின் இறுதி காரியங்களை செய்வதற்காக அனுப்பி வைத்திருக்கிறாள். அதனால்தான் அவள் நிர்வாணமாக இருக்கிறாள். வீட்டில் தனிமையில் அமைதியாக நிர்வாணமாக இருப்பது ஒரு வகை சிகிச்சை. இப்போது ந்னாம் புரிந்துக் கொண்டாள், மக்கள் ஏன் தன் புத்தியை இழக்கும்போது அவர்களின் முதல் அணிச்சையான செயல் தன்னை அம்மணமாக்கிக் கொள்வதுதான் என்பது. ஆடைகள் உங்களை கட்டுப்படுத்துகிறது. ஆனால் நாள் முழுதும், ஒரு வாரத்தின் ஒவ்வொரு நாளும் நிர்வாணமாய் உங்கள் வீட்டில் உலவும் வரை அதை நீங்கள் உணர்வதில்லை.
*****
கெயிட்டா அவனின் காற்சட்டைகள் கீழே அவிழ்ந்து விழுந்தபடி குளியலறையில் இறந்து கிடந்தான். அவனுக்கு அப்போது நாற்பத்தி ஐந்து வயது, குலைந்து விழுவதற்கு முன்னால் அவன் காற்சட்டைகளை அணிந்துக் கொண்டிருந்திருக்கலாம். அது ஈஸ்டர் என்பதால் மேலும் அவமானமாக இருந்தது. யார் ஈஸ்டர் அன்று அம்மணமாக இறப்பார்கள்?
அன்று காலை, அவன் எழுந்து படுக்கையிலிருந்து கால்களை கீழே தொங்கப் போட்டான். எழுந்து நின்று பிறகு யாரோ பின்னால் இழுத்தைதைப் போல மீண்டும் அமர்ந்துக் கொண்டான். கைகளை தன் நெஞ்சின் மீது வைத்து கவனித்தான். சுவரையடுத்து படுத்திருந்த ந்னாம் தலையைத் திருப்பி தன் முழங்கைகள் மீது வைத்து கேட்டாள்,
“என்ன?”
“நான் இன்னும் சரியாக விழித்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்,” அவன் கொட்டாவி விட்டான்.
“அப்படியெனில் திரும்ப வந்து படுங்கள்”
ஆனால் கெயிட்டா எழுந்து நின்று ஒரு துவாலையை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டான். கதவருகே சென்று திரும்பி ந்னாமிடம் சொன்னான்,
“நீ மீண்டும் உறங்கு. பையன்களுக்கு நான் காலையுணவு தருகிறேன்.”
லுலும்பா அவளை எழுப்பினான். அவன் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும். ஆனால் அப்பா வெளியே வருவதாகயில்லை. கழிப்பறையையும் குளியலறையையும் ஒன்றாக வைத்த கட்டிட அமைப்பாளர்களை திட்டியபடியே ந்னாம் எழுந்து வந்தாள். அவள் கதவை தட்டி “நான்தான்” என்றபடி திறந்தாள்.
கெயிட்டா தரையில் கிடந்தான், அவன் தலை ஹீட்டர் அருகேயும் வயிறு கால் விரிப்பு மீதும் கிடந்தது. இடுப்பு துண்டின் ஒரு முனை மலக் கிண்ணத்தின் உள்ளேயும் மறுமுனை தரையிலும், கணுக்கால் வரை சுருட்டப்பட்டிருந்த உள்ளாடையைத் தவிர அவன் முழு அம்மணமாக இருந்தான்.
ந்னாம் கூச்சல் போடவில்லை. ஒருவேளை அவள் லுலும்பா வந்து தன் அப்பாவை நிர்வாணமாக பார்த்துவிடுவானோ என்று பயந்திருக்கலாம். கெயிட்டா கண்களை மூடி வெறும் மயக்கமடைந்ததைப் போல் காணப்பட்டதாலும் இருக்கலாம். அவள் கதவை மூடி அவன் பெயர் சொல்லி அழைத்து, அவன் உள்ளாடைகளை மேலேற்றிவிட்டாள்.
கழிவறை கிண்ணத்திலிருந்து துண்டை வெளியே எடுத்து அதை குளியல் தொட்டிக்குள் எறிந்தாள். பிறகு சத்தம் போட்டாள்,
“போனை கொண்டு வா, லும்.”
லுலும்பா அவளிடம் போனை கொடுத்தபோது அவள் கதவு முழுதும் திறவாமல் இருக்குமாறு பிடித்துக் கொண்டாள்.
“உன் அப்பாவின் அங்கியையும் கொண்டு வா,” அவள் சொன்னாள், எண்களை அழுத்தியபடி.
அவள் கதவை மூடி கெயிட்டாவை அவன் பழுப்பு நிற அங்கியால் மூடினாள்.
தொலைபேசியில், ஆம்புலன்ஸ் வரும் வரை அவள் என்ன செய்ய வேண்டும் என்று செவிலி அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“மீட்டெழுப்பும் நிலையில் அவரை திருப்பவும்…அவரை கதகதப்பாக வைத்திருக்கவும்… அவரிடம் நீங்கள் தொடர்ந்து பேச வேண்டும்… அவருக்கு நீங்கள் பேசுவதை கேட்குமாறு பார்த்துக் கொள்ளவும்….”
துணை மருத்துவர்கள் வந்தபோது, அவர்களிடம் அன்று காலை கெயிட்டா திரும்பவும் கட்டிலில் விழுந்ததுதான் தான் கவனித்த ஒரே விஷயம் என்று ந்னாம் விளக்கினாள். தன் மகன்களிடம் விளக்கியபோது அவள் கண்களில் நீர் மூண்டது, “அப்பாவிற்கு உடல் நலமில்லை ஆனால் தேறிவிடுவார்.”
அவள் ஆடை மாற்றிக் கொண்டு, மகன்களை அழைத்துக் கொண்டு போகுமாறு தன் தோழிக்கு போனில் சொன்னாள். துணை மருத்துவர்கள் குளியறையிலிருந்து வெளியே வந்தபோது, கெயிட்டாவிற்கு ஆக்சிஜன் முகமூடி போடப்பட்டிருந்தது அவளுக்கு நம்பிக்கையை தந்தது. அவள் தோழி சிறுவர்களை கூட்டிச் செல்ல இன்னும் வராததால் ந்னாமால் ஆம்புலன்ஸில் செல்ல முடியவில்லை. எந்த மருத்துவமனையில் கெயிட்டா சேர்க்கப்பட்டிருக்கிறான் என்பதை துணை மருத்துவர்கள் இவளை அழைத்து சொல்வார்கள்.
*****
அவள் அவசர பிரிவிற்கு வந்தபோது, ஒரு வரவேற்பாளர் அவளை அமரச் செய்து காத்திருக்கச் சொன்னார். பிறகு ஒரு இளம் செவிலி வந்து கேட்டாள்,
“உங்களுடன் யாராவது வந்திருக்கிறார்களா?”
ந்னாம் தலையசைத்ததும் செவிலி மறைந்து போனாள். சில கணங்கள் கழித்து, அதே செவிலி திரும்பி வந்து கேட்டாள்,
“நீங்களே கார் ஒட்டி வந்திருக்கிறீர்களா?”
அவள்தான் ஓட்டவேண்டும், செவிலி திரும்பவும் சென்றாள்.
“மிஸஸ். கெயிட்டா?”
ந்னாம் தலை நிமிர்த்தி பார்த்தாள்.
“என்னுடன் வாருங்கள்.” அவள் ஒரு ஆப்பிரிக்க செவிலி.
அவள் ந்னாமை ஆலோசனை அறைக்கு அழைத்துச் சென்று அமரச் சொன்னாள்
“டாக்டர் உங்களை விரைவில் வந்து சந்திப்பார்,” கதவை மூடிச் சென்றாள்.
ஏறத்தாழ இளமையானவராக தெரிந்த ஒரு டாக்டர் நீல நிற அறுவை சிகிச்சை ஆடையுடன் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
“மிஸஸ். கெயிட்டா, என்னை மன்னிக்கவும். எங்களால் உங்கள் கணவரை காப்பாற்ற முடியவில்லை; அவர் இறந்துதான் கொண்டு வரப்பட்டார்.” அவர் குரல் மென்பட்டென மென்மையாக இருந்தது. “நாங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை. உங்கள் இழப்பிற்கு நான் வருந்துகிறேன்.” அவரின் கைகள் அவர் மார்பில் ஒன்றின் மீது ஒன்று குறுக்காக அமைந்தது. ஒரு கை அவரின் உதட்டை கிள்ளியது, “நாங்கள் உங்களுக்கு வேறு ஏதாவது வகையில் உதவ முடியுமா?”
பிரிட்டனில் துயரம் அந்தரங்கமானது – ஊரில் பெண்கள் எப்படி இதற்கு தாங்களாக முன்வந்து குலவையிட்டு சத்தமெழுப்புவார்கள் என்று உங்களுக்கு தெரியும். அது எதுவும் கிடையாது. உங்களுடைய துக்கத்தை அடுத்தவர் மீது நீங்கள் திணிக்க முடியாது. ந்னாம் சற்று நிலை மீண்ட பிறகு அவள் வேகமாக ஒப்பனையறைக்குச் சென்று கழி நீர்த் தொட்டியை பிடித்துக் கொண்டாள். அவள் முகம் கழுவி வெளியே சென்றபோதுதான் உணர்ந்தாள் அவள் கைப்பை அவளிடம் இல்லையென. அவள் மீண்டும் ஆலோசனை அறைக்குச் சென்றாள். அந்த ஆப்பிரிக்க செவிலி அதை வைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் பெயர் லெசெகோ. “என்னால் ஏதாவது செய்ய இயலுமா?”, ந்னாம் தலையசைத்தாள். “நீங்கள் தொலைபேசியில் உதவிக்கு அழைக்க யாராவது இருக்கிறார்களா? இந்த நிலையில் உங்களால் வண்டி ஓட்டிச் செல்ல முடியாது”. ந்னாம் இல்லையென்று சொல்லும் முன்னரே லெசெகோ சொன்னாள்,
“உங்களுடைய போனை கொடுங்கள்.”
ந்னாம் அதை அவளிடம் கொடுத்தாள்.
அதில் தொடர்பு எண்களை ஒவ்வொன்றாக கீழே உருட்டியபடி அதன் பெயர்களை வாசித்து காட்டினார். ந்னாம் தலையசைத்தபோது, லெசெகோ அந்த எண்ணை அழைத்துச் சொன்னார், – ஆமாம் நான் மேன்செஸ்டர் ராயல் மருத்துவமனையில் இருந்து தான் அழைக்கிறேன்…. இதை நான் உங்களிடம் தெரிவிப்பதற்காக வருத்தப்படுகிறேன்… மிஸஸ். கெயிட்டா இன்னும் இங்குதான் இருக்கிறார்… ஆம் நிச்சயமாக. நீங்கள் வரும் வரை நான் அவருடன் இருப்பேன்.
மருத்துவமனையை விட்டு வெளியேறுவதுதான் கடினமாக இருந்தது. உங்களுக்கு இரண்டு வாழைப்பழங்களின் தோல் ஒன்றோடு ஒன்று சில சமயங்களில் ஒட்டியிருப்பது தெரியும்தானே, அதை நீங்கள் இரண்டாகப் பிரித்து ஒன்றை மட்டும் சாப்பிடுவீர்கள்தானே? அதைப் போலத்தான் ந்னாம் உணர்ந்தாள்.
*****
ந்னாம் குளியலறையை சுத்தம் செய்யத் தொடங்கினாள். அந்தத் தரை நீல நிறத்தில் சிறு மொசைக் வினைல் கற்களால் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. தரை விரிப்பான்களை துணிக் கூடையில் போடாமல் குப்பைப் பையில் போட்டாள். அலமாறிக்குச் சென்று சுத்தமான விரிப்புகளை எடுக்கப் போனாள் ஆனால் அங்கிருந்த எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்து அவற்றையும் குப்பையில் போட்டு அடைத்தாள்: அவற்றில் ஒன்றின் மீதுதான் கெயிட்டாவின் வயிறு இறந்து கிடந்தது. பிறகு அவள் குளியல் தொட்டி, கழிப்பிடம், கை அலம்பும் இடம் அத்தனையையும் வெளுக்கும் பொடி கொண்டு கழுவினாள். குளியல் திரையையும் கொக்கியிலிருந்து அகற்றி அதையும் குப்பைப் பையில் போட்டாள். நிலைப்பெட்டியை திறந்தபோது அதில் மின் சவரமும் மழித்த தாடையில் பூசும் பொடியும் நறுமண நீரும் இருந்தது. அவையும் குப்பைப் பைக்குள் போனது. நிலைப் பெட்டியின் உள்ளே அலமாரிகளில் பூஞ்சை சேர்ந்திருந்தது. சுவரிலிருந்து பெட்டியை பிரித்தெடுத்து முன் கதவருகே கொண்டு சென்றாள். அதை பின்னர் தூர எறிந்துவிடுவாள். அவள் திரும்பி வந்தபோது, குளியலைறை விசாலமாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது. குப்பைப் பையை வாயை இறுகக் கட்டி அதையும் முன் கதவருகே கொண்டு சென்றாள்.
ந்னாமை சந்திப்பதற்கு முன்னால் கெயிட்டாவிற்கு இரண்டு குழந்தைகள் இருந்தது. அவர்களின் அம்மாவிடமே உகாண்டாவில் அவர்களை விட்டு வந்திருந்தான். ந்னாமை சந்திப்பதற்கு வெகு காலம் முன்னால் அவனுக்கும் அவர்களின் அம்மாவிற்குமான உறவு முறிந்திருந்தது. பல சந்தர்பங்களில் ந்னாம் அக்குழந்தைகளை பிரிட்டனுக்கு கூட்டி வர சொல்லியிருக்கிறாள். ஆனால் அவன் சொன்னான்,
“அவர்கள் அம்மாவைப் பற்றி உனக்குத் தெரியாது; அக்குழந்தைகள் தான் அவளின் பணம் கறக்கும் பசு.”
இருப்பினும் அவனின் குழந்தைகள் தந்தையின்றி வளர்வதைப் பற்றி ந்னாம் நிம்மதியற்றிருந்தாள். ஒவ்வொரு வார இறுதியும் அவன் தன் குழைந்தைகளை போனில் அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்: அதற்காகவே தனி தொலைபேசி அட்டைகளையும் வாங்கியிருந்தாள். அவர்களை பார்க்க அவன் உகாண்டா சென்றபோதெல்லாம், அவர்களுக்காக அவள் ஆடைகள் வாங்கி கொடுத்தனுப்பினாள்.
கெயிட்டா மற்ற உகாண்டா ஆண்களைப் போல் அல்லாமல், தான் வருவதற்கு முன்னேயே இங்கு வந்து குடியேறிவிட்ட பெண்களுடனான மேற்கத்திய திருமணங்களினால் உருவாகும் சூழல் மாறுதல்களுக்கு தன்னை நன்றாக பொருத்திக் கொண்டான். சமீப காலத்தில்தான் ஊரிலிருந்து வந்திருக்கும் ஒரு மணமகன், பிரித்தானிய-திறம் கொண்ட மனைவியினால் கலாச்சார அதிர்வுக்குள்ளாகி அவள் முன்னே கையாலாகதவனாக உணரத் தொடங்கும் போது இதைப் போன்ற பல திருமணங்கள் தேய்ந்துவிடுவதுண்டு. அவர்களுக்கு தங்கள் திருமணத்தை ஒரு சிறிய அளவில் ஏற்பாடு செய்துக் கொள்ளத்தான் வசதி இருந்தது, அவர்களால் இரண்டு குழந்தைகளுக்கான செலவுகளை மட்டுமே ஏற்க முடியும். மாதத்தின் இறுதியில் அவர்கள் இருவரின் சம்பாத்தியத்தையும் ஒன்றாக திரட்டுவார்கள்: கெயிட்டா G4Sல், பாதுகப்பு சேவை வழங்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தான் அதனால் ஒப்புநோக்க அவனின் சம்பளம் குறைவாக இருக்கும். ஆனால் அதை ஈடு செய்வதற்கு அவன் பல பகுதி நேர வேலைகளையும் செய்தான். வீட்டுச் செலவுகளுக்கும் மற்றவற்றிற்கும் பணம் செலுத்திய பின், ஊரில் உள்ள குழந்தைகளுக்கு அனுப்ப வேண்டிய பணத்தை அதிலிருந்து கழித்துக் கொள்வார்கள். மேலும், சில நேரங்களில் ஏதாவது குடும்ப சங்கதிகளுக்காக சிறிது ஒதுக்கப்படும் – யாராவது இறந்திருப்பார்கள், யாருக்காவது திருமணம் நடக்கும்.
கெயிட்டாவை சந்திப்பதற்கு முன்னால் கிராமப்புற கலுலேவில் ஒன்பது ஏக்கருக்கு ஒரு நிலத்தை வாங்கியிருந்தாள் ந்னாம். சில தசமங்கள் மேண்செஸ்டரில் கழித்த பிறகு, அவள் கிராமப்புற உகாண்டாவில் ஓய்வெடுப்பதை தன் கனவாக கொண்டிருந்தாள். ஆனால் கெயிட்டா வந்த பிறகு கம்பாலாவில் நிலம் வாங்கி நகரத்தில் முதலில் ஒரு வீடு கட்டலாம் என்று யோசனை சொன்னான்.
“நாம் இன்னும் அடுத்த இருபது வருடங்களில் வாழப் போகாத கலுலே கிராமத்தில் எதற்கு ஒரு வீடு கட்ட வேண்டும்? ஒருவரும் அங்கு வாடகைக்கு வர மாட்டார்கள். நகரத்தில் இருக்கும் வீட்டிலிருந்து வரும் வாடகையை வைத்து நாம் கலுலேவில் நம் அடுத்த வீட்டை கட்டிக் கொள்ளலாம்.”
அது அர்த்தமுள்ளதாக இருந்தது.
அவர்கள் ந்சங்கியில் சிறிது நிலம் வாங்கினார்கள். ஆனால் ந்னாமின் அப்பாவிற்கு, அவர்தான் அவர்களுக்காக நிலம் வாங்கினார், பெரும்பகுதி பணம் தன் மகளிடமிருந்துதான் வந்தது என்று தெரியும். அவள் பெயரில் தான் அவர் பத்திரங்களை பதிவு செய்தார். ஆனால் கெயிட்டா தான் ஒதுக்கப்பட்டுவிட்டதாய் கண்டனம் தெரிவித்தபோது, ந்னாம் அவள் அப்பாவிடம் எல்லாவற்றையையும் கெயிட்டாவின் பெயருக்கே மாற்றுமாறு சொல்லிவிட்டாள்.
ஏனென்றால், மொத்த குடும்பமும் சென்று பார்த்து வர அவர்களால் செலவு செய்ய முடியாது. கெயிட்டா மட்டும் தொடர்ந்து உகாண்டாவிற்கு பறந்து போய் வீட்டைப் பார்த்து வருவான். ஆனாலும் அதை கட்டியதென்னவோ ந்னாமின் அப்பாதான், அவர்தான் பண விஷயங்களில் அவள் நம்பும் ஒரே ஆள், அவர் ஒரு கட்டிட பொறியாளரும் கூட. வீடு கட்டி முடிந்ததும் அதில் குடி வைக்க ஆட்களை கெயிட்டாவே தேடி பிடித்தான். இது 1990ல், அவன் இறப்பதற்கு ஆறு வருடங்களுக்கு முன்னால். அதுவரை அந்த வாடகைக்காரர்களே அங்கு குடியிருந்தனர். ந்னாம் அந்த வீட்டைப் பார்க்க சென்றிருக்கிறாள், அங்கு வாடகைக்கு குடியிருப்பவர்களையும் சந்தித்திருக்கிறாள்.
ந்னாம் தற்போது படுக்கையறையை சுத்தம் செய்கிறாள். ஜன்னல் அடிக்கட்டை இன்னும் அழுக்கு படிந்தே இருந்தது. கெயிட்டா அதில் அவனுடைய பணப்பை, கார் சாவிகள், மூக்குக் கண்ணாடி மற்றும் G4S அடையாள அட்டை எல்லாவற்றையும் இரவில் அதன் மீதுதான் வைப்பான். ஒருமுறை ஏதொவொரு படிவத்தை ஜன்னலருகில் அது திறந்திருந்த போது வைத்தான். மழை பெய்து அந்தக் காகிதம் நனைந்தது. மை கரைந்து அதன் வண்ணம் அக்கட்டையின் மீது பரவி கறையாக்கியது. ந்னாம் கடின கறை நீக்கிகளை அதன் மீது அடித்துப் பார்த்தாள். ஆனால் மை விட்டுக் கொடுப்பதாக இல்லை. வெளுக்கும் பொடியிடமே மீண்டும் சென்றாள்.
அவள் துணி அலமாரியில் இருந்து பழைய கைப்பைகளையும் காலணிகளையும் துடைத்து எடுத்தாள். கெயிட்டாவின் துணிகளை அவன் புதைக்கப்பட்ட உடனேயே தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி விட்டாள் ஆனால் ஒரு பெல்ட்டும் ஒரு ஜோடி உள்ளாடைகளும் பைகளுக்கு பின்னால் இருப்பதை பார்த்தாள். அவனின் வாசம் இன்னும் இங்கேயே உலாவிக் கொண்டிருப்பதற்கு அதுவும் கூட காரணமாக இருக்கலாம். சுத்தம் செய்த பிறகு ஒரு வாசனை மாத்திரையை துணி அலமாரி இருக்கும் தரையில் போட்டு வைத்தாள்.
கெயிட்டா இறந்த முதல் வாரத்தில் உகாண்டா மக்கள் அவளைச் சுற்றி அணி திரண்டனர். ந்னாம் அழுகைக்கும் தூக்கத்திற்கும் இடையில் மிதந்துக் கொண்டிருந்தபோது, ஆண்கள் சவக் கிடங்கு சம்பந்தமான பிரச்சினைகளை சமாளித்துக் கொண்டனர், பெண்கள் வீட்டை பார்த்துக் கொண்டனர். அவர்கள் மேண்செஸ்டரில் இறுதி அஞ்சலிக்கான தயாரிப்புகளை செய்தனர் மற்றும் நிதி திரட்டும் இயக்கத்திற்கும் அவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர்.
“நம்மில் ஒருவரை நாம் பனியில் புதைக்கப்போவதில்லை.”
அந்த வாரம் முழுதும், பெண்கள் அவர்களின் பணி நேரத்திற்கு ஏற்றவாறு ந்னாமின் வீட்டிற்கு வந்து குழந்தைகளை பார்த்துக் கொண்டு பிறகு வேலைக்குச் சென்றனர். அவளின் இரண்டு நண்பர்கள் விடுப்பு எடுத்து அவளுடன் உகாண்டாவிற்கு செல்ல விமானச் சீட்டுகளை வாங்கினர்.
அவள் தனக்கான பயணச் சீட்டுகளை வாங்கியபோதுதான் தோன்றியது, உகாண்டாவில் இறுதி காரியங்கள் எங்கே நடக்கப் போகிறது? அவளது வீட்டில் வாடகைக்காரர்கள் குடியிருக்கிறார்களே. அவள் தன் தந்தையை அழைத்தாள். அவர் கெயிட்டாவின் குடும்பம் இதைப் பற்றி எதுவும் சொல்ல முன்வரவில்லை என்றார்.
“முன் வரவில்லையா?”
“மழுப்பலாக பேசுகிறார்கள்.”
“அப்படியா? ஏன்?”
“அவர்கள் ஏழை கிராமத்தான்கள், ந்னாமேயா: அவனைத் திருமணம் செய்து கொண்டபோதே உனக்கு இதெல்லாம் தெரியும்தானே.”
ந்னாம் அமைதியாக இருந்தாள். அவள் அப்பா எப்போதுமே அப்படித்தான். அவருக்கு கெயிட்டாவை பிடிக்காது. கெயிட்டா படித்து பட்டம் பெற்றவன் இல்லை, நல்ல குடும்பப் பின்புலமும் இல்லை.
“நீ கெயிட்டாவை கொண்டு வா. நீ இங்கு வந்த பிறகு என்னவென்று பார்ப்போம்,” அவர் கடைசியாக சொன்னார்.
என்டெப்பி விமான நிலையத்தில் கெயிட்டாவின் குடும்பத்தை அவள் பார்த்த உடனே, ஏதோ தவறாக இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டாள். அவள் இதற்கு முன் சந்தித்த உடன் பிறந்தவர்கள் இல்லை.
அவர்கள், அவளிடம் நட்பாகவும் அவர்கள் நடந்து கொள்ளவில்லை. அவள் தன் குடும்பத்தினரிடம் கெயிட்டாவின் உண்மையான குடும்பம் எங்கே என்று கேட்டபோது “அதுதான் அந்த உண்மையான குடும்பம்.” என்று சொன்னார்கள்.
ந்னாம் நீண்ட நேரம் தாடையை தடவிக் கொண்டிருந்தாள். அவள் காதுக்குள் எதிரொலிகள் கேட்டது.
சவப்பெட்டி சுங்க பரிசோதனையிலிருந்து விடுவிக்கப் பட்டதும், கெயிட்டாவின்
குடும்பம் அதைப் பெற்றுக் கொண்டு அவர்கள் கொண்டு வந்திருந்த வண்டியில் ஏற்றி
விருட்டென ஓட்டிச் சென்றனர்.
ந்னாம் அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றாள்.
“நான் அவனை கொன்று விட்டேன் என்று அவர்கள் நினைக்கிறார்களா என்ன? என்னிடம் பிரேத பரிசோதனை அறிக்கை இருக்கிறது.
“பிரேத பரிசோதனையா? அதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?”
“ஒருவேளை அப்பா அவர்களின் குடும்பத்தை ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அவமானப்படுத்தியிருக்கலாம்,” ந்னாம் அவள் அப்பாவின் பகட்டுத்தனத்தை பழி சொல்லத் தொடங்கினாள். “ஒருவேளை அவர்கள் நம்மை போலியானவர்கள் என்று எண்ணுகிறார்களோ.”
கெயிட்டாவின் உடன் பிறந்தவர்களை பின் தொடர அவள் தன் குடும்பத்தின் வண்டிகளில் ஒன்றில் ஏறிக் கொண்டாள்.
“இல்லை, பகட்டெல்லாம் இல்லை,” மேயா, ந்னாமின் மூத்த அண்ணன் அமைதியாகக் கூறினார். பிறகு பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் ந்னாமிடம் திரும்பி சொன்னார், “ந்னாமேயா, நீ தைரியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறன்.”
அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்பதற்கு பதிலாக, முகத்தில் குத்து ஒன்று வாங்குவதற்கு தயார் ஆகுபவள் போல் வாயை திருகி பற்களை கடித்தாள்.
“கெயிட்டா… திருமணமானவர். அவர் உன்னிடம் சொன்னது போலவே அவருக்கு இரண்டு வளர்ந்த குழந்தைகள் உண்டு, ஆனால் அவர் இங்கு வந்து சில முறை வந்து சென்றதில், அந்த மனைவியுடனேயே அவருக்கு மேலும் இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கிறது.”
ந்னாம் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை. அவளது கீழ் முன் பற்களில் இழையைப் போல ஏதோஒன்று சிக்கியிருந்தது. எரிச்சலில் அவள் நாக்கு அதை குத்திக் கொண்டிருந்தது. இப்போது அதை அவளது கட்டை விரல் நகத்தால் எடுத்து விட்டாள்.
“அவர் இறந்த பிறகுதான் நாங்கள் இதைக் கண்டு பிடித்தோம் ஆனால் நீ இங்கு வந்து எங்களுடன் இருக்கும் வரையில் உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று அப்பா சொல்லிவிட்டார்.”
அந்த வண்டியில் அவளுடன் மூன்று அண்ணன்கள் இருந்தார்கள். அவளுடைய அக்காள்கள் பின்னாடி வரும் மற்றோரு வண்டியில். அவள் மகன்களும் அப்பாவும் இன்னொன்றில்; அத்தைகளும் மாமன்களும் மேலும் இருந்த இன்னொரு வண்டியில். ந்னாம் அமைதியாக இருந்தாள்.
“நாம் அவர்களை நிறுத்தி இன்னும் எவ்வளவு தொலைவு செல்லப் போகிறோம் என்று கேட்கவேண்டும், நம் வண்டியில் பெட்ரோல் நிரப்ப வேண்டியிருக்கலாம்,” மற்றொரு அண்ணன் சவப்பெட்டி இருந்த வண்டியை சுட்டிக் காட்டி சொன்னான்.
ந்னாம் அப்பொழுதும் அமைதியாகவே இருந்தாள். அவள் ‘கிவுடுவுடு’ ஆக இருந்தாள், துண்டிக்கப்பட்ட ஒரு முண்டமாக – உணர்வுகள் இல்லை.
அவர்கள் ந்டீபா ரவுண்டானாவிற்கு வந்ததும் சவப்பெட்டி வண்டி வேகமெடுத்து மாசாக்கா பாதையில் திரும்பியது. ந்டீபா நகரத்திற்குள் ஒரு மரக்கடை அருகே அந்த வண்டியை முந்தி அதை நிறுத்துமாறு கையசைத்தனர். ந்னாமின்அண்ணன்கள் வண்டியிலிருந்து வெளியே குதித்து கெயிட்டா குடும்பத்தினரிடம் சென்றனர். ந்னாம் இன்னமும் அவள் பல்லில் சிக்கிய வேறு எதையோ எடுத்துக் கொண்டிருந்தாள். பாதி உலர்ந்த மரத்தண்டுகள் மற்றும் மரத்தூள்களின் பூஞ்சை மணம்தான் ந்டீபாவின் அடையாளம்.
கனத்த பலகைகள் ஒன்றின் மீது ஒன்று விழுந்து உருண்டது. பலகைகள் வெட்டப்படுவது புற்களை அறுப்பது போன்ற ஒரு சத்தத்தை எழுப்பியது. அவள் சாலையின் மறுபக்கம் பார்த்தாள், கார் கழுவும் வசதியுடன் ஒரு பெட்ரோல் நிலையம் இருந்தது. அவள் புன்னகைத்தாள்,
“நீ தைரியமாக இருக்க வேண்டும் நெமேயா…” அவளுக்கு ஏதோ வேறு வழி ஒன்று இருப்பதைப் போல.
“எவ்வளவு தூரம் போகிறோம்?” மேயா கெயிட்டாவின் உடன்பிறந்தவர்களிடம் கேட்டார். “நாங்கள் வண்டியில் பெட்ரோல் நிரப்ப வேண்டியிருக்கலாம்.”
“ந்சாங்கி வரைதான் செல்கிறோம்,” அவர்களில் ஒருவன் பதில் சொன்னான்.
“எங்களை தொலைத்து விட முயற்சிக்காதே; நாங்கள் போலீஸை அழைப்போம்.”
முரட்டுத்தனமாக வண்டி அங்கிருந்து கிளம்பியது. மூன்று அண்ணன்களும் வண்டிக்கு திரும்பியதும் ந்னாமிடம் தெரிவித்தார்கள்.
“ந்னாம், அவர்கள் அவனை ந்சாங்கிக்குத்தான் எடுத்துச் செல்கிறார்கள்; ந்சாங்கியில் இருக்கும் உன் வீடு வாடகைக்குத் தானே விடப்பட்டிருக்கிறது?”
விறைத்து மேல் நிமிர்ந்த காதுகளுடைய நாயைப் போல ந்னாம் எழுந்து உட்கார்ந்தாள். அவள் கண்கள் ஒரு அண்ணனிடமிருந்து மற்றொருவருக்கு பின் அடுத்தவருக்கு என நகர்ந்தது, ஏதோ அவர்கள் முகங்களில் அதற்கான பதில் எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் போல.
“அப்பாவிற்கு போன் செய்து கொடுங்கள்,” அவள் சொன்னாள்.
மேயா செல்பேசியின் ஒலிபரப்பியை உயிர்ப்பித்தான். அவர்கள் அப்பாவின் குரல் அதில் ஒலித்தபோது ந்னாம் கேட்டாள்,
“அப்பா, ந்சாங்கி வீட்டின் உரிமைப் பத்திரங்கள் உங்களிடம் இருக்கிறதா?”
“அவை சேமிப்பு பேழையில் பத்திரமாக இருக்கிறது.”
“அவை அவர் பேரில் இருக்கிறதா?”
“நான் என்ன முட்டாளா?”
ந்னாம் கண்களை மூடினாள். “நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி.”
அவர் பதில் சொல்லவில்லை.
“கடைசியாக எப்போது வாடகை கொடுக்கப்பட்டது?”
“மூன்று வாரங்களுக்கு முன்னால். எங்கே இருக்கிறாய்?”
“அதைத் தொடாதீர்கள் அப்பா,” அவள் சொன்னாள். “நாங்கள் ந்டீபாவில் இருக்கிறோம். இறுதி சடங்கிற்கு இதற்கு மேல் எந்தப் பணமும் நாம் செல்வழிக்கப் போவதில்லை. அவர் குடும்பமே அவரை புதைக்கட்டும்: ஏதாவதொரு குழியில் அவரை அடைத்து வைப்பார்களென்றாலும் எனக்கு அக்கறை இல்லை. அவர்கள் அவரை ந்சாங்கிக்கு எடுத்துச் செல்கிறார்கள்.”
“ந்சாங்கியா? எனக்கு புரியவில்லை.”
“எங்களுக்கும்.”
ந்னாம் அவளது செல்பேசியை அணைத்தபோது அண்ணன்களிடம் சொன்னாள், “வீடு பத்திரமாக இருக்கிறது,” ஏதோ அவர்கள் அந்த உரையாடலை கேட்கவில்லை என்பதைப் போல. “இப்போது இறுதி பிரார்த்தனையை அவர்கள் விரும்பினாள் ஒரு குகையில் கூட வைத்துக் கொள்ளட்டும்.”
அண்ணன்கள் பதில் எதுவும் சொல்லவில்லை.
“நாம் அங்கு சென்றதும்,” ந்னாமின் குரலில் இப்போது உயிர் இருந்தது, “என்ன நடக்கிறது என்று நீங்கள் கண்டுபிடியுங்கள்; நான் காரிலேயே இருப்பேன். பிறகு நீங்கள் என்னை மீண்டும் நகரத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்: நான் ஒரு நல்ல சலூனுக்கு சென்று என்னை நான் அழகுபடுத்திக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு நான் ஒரு நல்ல ‘புஸ்ஸுட்டி’ வாங்கி அணிந்துக் கொள்வேன். இனி நான் ஒரு விதவையல்ல.”
“அதெல்லாம் அவசியம் இல்லை…” மேயா சொன்னார்.
“நான் என் தலைமுடி, என் நகங்கள் மற்றும் என் முகத்தை சீர் செய்துக் கொள்ளத்தான் சலூனுக்கு போகிறேன் என்று சொன்னேன். ஆனால் முதலில் நான் குளித்து ஒரு நல்ல உணவை உண்ண வேண்டும். பிரார்த்தனைகளைப் பற்றி பிறகு பார்க்கலாம்.”
பிறகு அவள் புத்தி குழம்பியவள் போலச் சிரித்தாள்.
“எனக்கு இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது,” அவள் இருமினாள், அதை மட்டுப்படுத்த நெஞ்சில் குத்தினாள். “நம் சிறு வயதில்,” அவள் முழுங்குவதற்கு கடினப்பட்டாள், “மக்கள் காண்டா பெண்களின் சொத்துப் பற்றை குறித்து என்ன சொல்வார்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? வெளிப்படையாகவே, ஒரு கணவன் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டால், முதல் விஷயம் நீங்கள் வீட்டு உரிமைப் பத்திரங்கள், ஒப்பந்தங்கள், கார் ஆவணங்கள் சாவிகள் மேலும் அப்படியான மற்ற விஷயங்களைத்தான் தேடுவீர்கள். அவற்றை ஒரு துணியில் இறுகக் கட்டி மாதவிடாய் துண்டைப் போல கட்டிக் கொள்வீர்கள். அவை உங்கள் கால்கலுக்கிடையில் பத்திரமாக இருக்கிறது என்று அறிந்தபிறகு, உங்கள் அழுகையை அவிழ்த்து விடுவீர்கள், “பாஸ்ஸே வ்வ்வ்வாங்கே….!”
அவள் அண்ணன்கள் பதற்றமாகச் சிரித்தார்கள்.
“என் வீடு பறிபோய்விடும் என்ற அச்சுறுத்தலை உணர்ந்தவுடன் – ப்ஷ்ஊஊஊஊ,” அவள் தலைக்கு மேல் காற்றடிப்பதைப் போல கைகள் அசைத்து காட்டினாள். “துக்கம், வலி, அதிர்ச்சி – போயாச்சு.”
*****
ந்சாங்கியில் உள்ள சிவப்பு செங்கற்களால் ஆன இரண்டு அடுக்கு வீடு கண்ணில் பட்டதும், வேலியும் சுற்றுச் சுவரும் நன்றாகப் பராமரிக்கப்பட்டிருக்கிறது என்பதை ந்னாம் நடுக்கத்துடன் கவனித்தாள். சவப்பெட்டி வண்டி கெயிட்டாவின் மக்களுக்கிடையே சென்று நிறுத்தியதும் பரபரப்புடன் அவர்கள் அதை சூழ்ந்துக் கொண்டனர். பெண்கள் தங்கள் உடலை ஓங்கி அறைந்து அழுதனர். கெயிட்டவின் மனைவியின் ஓலம் தனித்து தெரிந்தது: பனியில் தனித்து இறந்துபோன ஒரு கணவனுக்கான ஒப்பாரி. கெயிட்டாவின் சவப்பெட்டி வண்டியிலிருந்து இறக்கப்பட்டு வீட்டிற்குள் எடுத்துச் செல்வதற்கான பின்னனி இசையைப் போல இருந்தது அவ்வழுகைகள். பிறகு சத்தம் லேசாக வடிந்தது. கெயிட்டாவின் மனைவிதான் இந்த வீட்டில் ஆரம்பத்திலிருதே குடியிருக்கிறாள் என்பதை ந்னாம் தற்போது உறுதி செய்துக் கொண்டாள். கெயிட்டா தன் மனைவியின் வாடகையை ந்னாமின் பணத்தை கொண்டே கட்டியிருக்கிறான். நம்ப முடியாமல் ந்னாம் தன் கன்னத்தில் கை வைத்து கொண்டாள்.
“கெயிட்டா திருடனல்ல; அவன் ஒரு கொலைகாரன்.” அவள் தன் வாயை மீண்டும் திருகினாள்.
அப்போது கூட, மனம் ஒரு கோழை – ந்னாம் பயந்துபோனாள். பயணம் முடிந்தது. அவள் சூழ்நிலையின் உண்மை அவள் முகத்திற்கு நேரே நின்று முறைத்தது.
அவளின் அக்காக்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் அவளுடன் காருக்குள் அமர்ந்து கொண்டனர். அவளின் அப்பா, மகன்கள், மாமன்களும் அத்தைகளும் மதிலுக்கு வெளியே வண்டியை நிறுத்தி இருந்தனர். காரை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இப்புதிய சூழல் ந்னாமின் முகத்தில் முறைப்பதை நிறுத்துவதாக இல்லை.
வயதான ஒரு ஆள் அவளை நெருங்கி வருவதை அவள் பார்க்கக் கூட இல்லை. அவர் தாழ குனிந்து காருக்குள் எட்டி பார்த்தபோதுதான் அவள் கவனித்தாள். அவர் தன்னை கெயிட்டாவின் அப்பா என்று அறிமுகம் செய்துக் கொண்டார். ந்னாமை பார்த்து பேசினார்,
“லண்டனில் என் மகனுடன் வாழ்ந்த பெண் நீ தான் என்று எனக்கு புரிகிறது.”
“மேண்செஸ்டர்….,” ந்னாமின் ஒரு அக்கா துடுக்காக அவரை சரிசெய்தாள்.
“மேண்செஸ்டர், லண்டன், நீயு யார்க், அவை எல்லாமே எனக்கு ஈக்களைப் போலதான்: எனக்கு அவற்றில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் பார்க்கத் தெரியாது.” அந்த வயதான மனிதன் ந்னாம் பக்கமாக திரும்பினார். “கெயிட்டாவிற்கு ஒரு மனைவி இருந்தது உனக்கு தெரியும்தானே.” ந்னாம் பதில் சொல்வதற்கு முன்னால் அவர் தொடர்ந்தார், “அவள் தன் கணவனுடன் இந்த கடைசி கணத்தை கெளரவமாக கழிக்க உன்னால் அனுமதிக்க முடியுமா? நீ உன் இருப்பை விளம்பரப்படுத்துவதை நாங்கள் விருபம்பவில்லை. ஆனால் உன் மகன்களை நாங்கள் ஏற்கிறோம். நீ தயாரானதும் அவர்களை எங்கள் குல மக்களுக்கு காட்ட வேண்டும்.”
அவள் சகோதரிகள் பேச்சற்றுப் போயினர். அந்த மனிதன் வீட்டிற்கு திரும்பி நடப்பதை ந்னாம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மேண்செஸ்டரிலிருந்து இரண்டு நண்பர்களும் வந்துவிட்டிருந்தனர், ந்னாம் அமர்ந்திருந்த காருக்கு வந்தனர். இந்தப் புள்ளியில்தான் ந்னாம் தன்னுடைய அவமானத்தை எதிர்த்து நிற்பது என்ற முடிவுக்கு வந்தாள். அவள் தன் நண்பர்களின் கண்களைப் பார்த்து நோயின் தீவிரத்தை ஒரு நோயாளியிடம் விளக்கும் மருத்துவரைப் போல கெயிட்டாவின் மோசடிகளை விளக்கினாள். அதை அவர்களிடத்தில் அவளே விளக்கிய விதத்தில் ஒரு கண்ணியம் இருந்தது.
*****
சமையலறையில் சுத்தம் செய்வதற்கு வேறெதுவும் இல்லை ஆனால் அவள் நகரக்கூடிய அத்தனை பொருட்களையும் இழுத்து அதில் குவிந்திருந்த அழுக்குகளையும் குப்பைகளையும் துடைத்தாள். நீர்க் கழியின் கீழே, கடைப் பைகளுக்கு பின்னால் ஒளிந்திருந்தது கெயிட்டாவின் கோப்பை. ந்னாம் அவர்களின் ஐந்தாவது திருமண நாளன்று வாங்கியது – உலகின் சிறந்த கணவன். அவள் அதை முன் கதவருகே எடுத்துச் சென்று குப்பைப் பையில் போட்டாள். மேல் நிலைப்பெட்டிகளின் மேலே “குவாலிட்டி ஸ்டிரீட்ஸ்” காலி டப்பாக்கள் இருந்தன, அவை கெயிட்டா தனக்குத் தானே கிறிஸ்துமஸ் அன்று அன்பளித்துக் கொண்டது. கெயிட்டா இனிப்பு விரும்பி: மஃப்பின்கள், ஐஸ்-கிரீம், இஞ்சி பிஸ்கட்டுகள் மற்றும் எக்ளேர்ஸ். இந்த டப்பாக்களை ஒரு நாள் தேவைப்படும் என்று எடுத்து வைத்துக் கொண்டான். ந்னாம் புன்னகைத்து அவற்றையும் அவள் முன் கதவருகே கொண்டு சென்றாள் – கெயிட்டாவின் பொருட்களை பதுக்கி வைக்கும் போக்கு இப்போது அர்த்தாமாகிறது.
ந்னாம், அவள் நண்பர்கள் மற்றும் அவள் குடும்பம் இறுதி சடங்கிற்காக இரவு பதினோரு மணிக்கு திரும்பி வந்தார்கள். அவள் அமர்ந்த இடத்திலிருந்து கெயிட்டாவின் மனைவியை பார்க்க முடிந்தது. அப்பெண் பார்ப்பதற்கு இவளின் அம்மாவாக இருப்பதற்கான வயதுடையவளாகத் தெரிந்தாள். அந்த அவதானிப்பு அவளுக்கு ஒரு நிறைவை கொடுப்பதற்கு பதிலாக, கூராகக் குத்தியது. சலூனின் சுகங்களோ அல்ல விலையுயர்ந்த புஸ்ஸூட்டியோ நகைகளோ பிரிட்டனின் காற்றோ கெயிட்டா இப்படியான ஒரு பெண்ணிற்கு விசுவாசமாக இருந்தான் என்ற வலியை மறக்கடிக்க உதவவில்லை. அவள் அழகாக தன்னைச் சுற்றி வடிவமைத்து வைத்திருந்த ஒரு அசட்டையான சூழலை இது சேதப்படுத்தியது. ஒவ்வொரு முறையும் அவள் அவன் மனைவியை பார்த்தபோது, அவள் இதயத்தை இறுக்குவது பொறாமை அல்ல: ‘நீ போதவில்லை’ என்ற கிசுகிசுப்பொலிதான்.
அப்போதுதான் அவளின் அத்தை, அவர்தான் அவளை திருமணத்தன்று தயார்படுத்தியவள், சடங்கு ஒன்றை ரகசியமாக அவளிடம் சொல்வதற்கு வந்தார். அவர் நெருங்கி வந்து சாய்ந்து சொன்னார்,
“கணவன் இறந்து போனால் ஒரு மாதவிடாய் துண்டை உடனே கட்டிக் கொள்ள வேண்டும். அவன் புதைப்பதற்காக மூடப்படும்போது, அது அவனுடைய ஆணுறுப்பின் மீது வைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவன் திரும்பி வந்து…….”
“ஃபக் தட் ஷிட்…”
“இல்லை அது வெறும்……”
“ஃபக் இட்,” ந்னாம் லுகாண்டா மொழியை சட்டைசெய்யவில்லை.
அத்தை மெல்ல கரைந்து நழுவிப் போனாள்.
*****
ந்னாமின் உறவினர்கள் அதிகம் வரத் தொடங்கியது போலவே நடு வயதுப் பெண்களின் கும்பல் ஒன்றும் வந்தது. அவர்களை யார் அழைத்தது என்று ந்னாமிற்கு தெரியாது. ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிந்தது; அவர்கள் கோபமாக இருந்தார்கள். ந்னாமின் கதை எல்லோருக்கும் பொதுவாகிப் போனது என்று இப்போது வெட்டவெளிச்சமானது. இவளின் அவலங்களைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள், அவளுக்கு உதவ வந்திருக்கிறார்கள். அந்தப் பெண்கள் பார்ப்பதற்கு முன்னாள் ‘ந்குபா க்யெயோ’ – இங்கிருந்து துடைத்து பொருளாதார குடியேறிகளை மேற்கே வீசி அனுப்பும் துடைப்பங்கள் – போலிருந்தார்கள். விலையுயர்ந்த ஆடைகளை அணிந்திருந்தார்கள். லுகாண்டாவும் ஆங்கிலமும் இரண்டு தங்கைகள் என்பதைப் போல கலந்து பேசினார்கள். அவர்கள் செயற்கை தலைமுடியையோ அல்லது இழைமணிகளையோ அணிந்திருந்தனர். யாரோ விலகிச் செல்லுமாறு மிரட்டியதைப் போல அவர்களுடைய ஒப்பனை அவர்கள் முகத்திற்கு இணக்கமற்று இருந்தது. சிலர் வெள்ளையடித்திருந்தனர். அவர்கள் பியர் பாட்டில் கூடைகளையும் உகாண்டா ‘வாராகி’ பெட்டிகளையும் இறக்கினர். ந்னாம் அவள் குடும்பத்துடன் அமர்ந்திருந்த கொட்டகைக்கு அவற்றை கொண்டு வந்து பகிரத் தொடங்கினர். வந்திருந்தவர்களில் ஒருவர் அவரிடம் வந்து கேட்டார்,
“நீ தான் மேண்செஸ்டரில் இருக்கும் ந்னாமேயாவா?” அவளுடைய குரல் அவள் ‘வாராகி’யை மிகவும் விரும்புகிறாள் என்பதைப் போல கரகரப்பாக இருந்தது.
ந்னாம் தலையசைத்ததும் அந்தப் பெண் நெருங்கி சாய்ந்தார்.
“நீ விதவையின் அழுகையை நடித்துக் காட்ட வேண்டும் என்று விரும்பினால், செய். ஆனால் எங்களை விட்டுவிடு.”
“என்னை பார்த்தாள் அழுபவள் போல தெரிகிறதா?”
அந்தப் பெண் வெற்றி கொண்டவளைப் போலச் சிரித்தாள். அவர் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதைப் போல அதிகாரத்தோடு இருந்தது அது. அந்தக் பெண் கூட்டம் எந்தத் தொழில் செய்பவர்களாகவும் இருக்கலாம். ஒருவேளை ஒற்றை தாய்மார்களாக இருக்கலாம், பணக்காரர்களாகவும் அல்லது வேலையற்றவர்களாகவும் கூட இருக்கக்கூடும் என்று ந்னாம் முடிவு செய்தாள்.
அப்போது ந்னாமின் உறவுக்காரப் பெண் வந்தாள். அவள் ஏதோ கொதிக்கும் செய்தி ஒன்றை கொண்டு வந்திருக்கிறாள் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவள் ந்னாம் பக்கத்தில் அமர்ந்து கிசுகிசுப்பாகச் சொன்னாள்,
“உன்னுடையது மட்டும் தான் மகன்கள்.”
அவள் ஏதோ ந்னாம் லாட்டரியில் ஜெயித்ததைப் போல கைகளை பரபரவென தேய்த்தாள். அவள் தலையை திருப்பி வாயை கெயிட்டாவின் விதவையை நோக்கி சுட்டினாள். “அவளுடையதெல்லாம் மகள்கள் மட்டுமே.”
ந்னாம் புன்னகைத்தாள். அவள் திரும்பி தன் குடும்பத்திடம் கிசுகிசுத்தாள், “லுமும்பாதான் வாரிசு. நம்ம தோழிக்கு மகன்களே கிடையாது,” அவள் குடும்பம் இச்செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்தபோது கொட்டகைக்குள் மகிழ்ச்சி சிற்றலையில் மின்னோட்டமென பரவியது.
ஆரம்பத்தில் இந்தப் பெண்களின் கூட்டம் கெயிட்டாவின் மீதான நல்லெண்ணத்தால் இந்த இரங்கற் கூட்டத்திற்கு வந்ததைப் போல அமைதியாக துயரம் வெளிப்படுத்தினர், பின்னர் பியர் குடித்துக் கொண்டும் பிரட்டனைப் பற்றி விசாரித்து கொண்டும் இருக்கத் தொடங்கினர். இரண்டு மணியளவில் அக்குழு சோர்வடைந்தபோது, அப்பெண்களில் ஒருவர் எழுந்து நின்றார்.
“சக துக்கவான்களே,” திருமீட்டெழுச்சியின் நற்செய்தியை கொண்டு வருபவரைப் போல மென்மையான குரலில் தொடங்கினார்.
ஒரு மதிப்பிற்குரிய ‘ஷ்ஷ்ஷ்’ துக்க மக்களின் இடையே பரவியது.
“இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்,” அவர் இடை நிறுத்தினார். “இந்தக் கதையில் வேறொரு பெண்ணும் உண்டு.”
திகைக்கும் அமைதி.
“இரண்டு அப்பாவி குழந்தைகளும் இந்தக் கதையில் உண்டு.”
‘அமீனா ம்வட்டு.’ குழுவிடமிருந்து வந்த ஆமென்கள் ஒரு பிரச்சாரக் கூட்டத்திலிருந்து வரக்கூடியவையாக இருந்தது.
“ஆனால் நான் பெண்ணின் கதையிலிருந்து தொடங்குகிறேன்.”
அவள் கூற்றுப்படி, கதை ந்னாமின் பெற்றோர்கள் அவளின் எதிர்காலத்திற்காக அவளை பிரிட்டனுக்கு அனுப்புவதிலிருந்து தொடங்குகிறது. அவள் கடினமாக உழைத்தாள், படித்தாள், சேமித்தாள் அப்போது வந்தான் ஒரு பொய்யன், அவன் ஒரு திருடன்.
அப்போது பொறுமையின்றி கரகரத்த குரலுடைய பெண் இடைமறித்தார், “அந்தப் பெண் ஏமாற்றப்பட்டாள்.” கதைச் சொல்லி அவ்வளவு சிறப்பாக சொல்லவில்லை என்பதைப் போல இடையில் எழுந்து நின்றார். “அவன் அவளை திருமணம் செய்துக் கொண்டான் – எங்களிடம் புகைப்படங்கள் உள்ளது. எங்களிடம் காணொலிகள் உள்ளது. அவன் அவளின் பெற்றோரிடம் கூட பொய் சொன்னான் – பாருங்கள் அந்த அசிங்கத்தை!
“போதும்,” முதல் கதை சொல்லி மென்மையாக கண்டனம் தெரிவித்தார். “நான் கதையை முறையாக அவிழ்த்துக் கொண்டிருந்தேன்: நீ அதை பிய்த்துக் கொண்டிருக்கிறாய்.”
“உட்கார்: நமக்கு இந்த இரவு முழுதும் இல்லை இதை சொல்வதற்கு,” கரகரப்பு பெண் சொன்னார்.
அந்த மென்மையான பெண் அமர்ந்துக் கொண்டார். மற்றவர்கள் அப்பெண்ணின் துடுக்குத்தனத்தைக் கண்டு வாயடைத்துப் போயினர்.
“ஒரு புத்திசாளி ஆள் கேட்கிறான்,” கரகரப்பு பெண் தொடர்ந்தார். “பிரிட்டனில் துடைப்பத்தை வீசும் கெயிட்டாவிற்கு எங்கிருந்து இப்படி ஒரு வீடு கட்ட பணம் வந்தது? அப்போதுதான் நீங்கள் உணர்வீர்கள் ஓஓஓஓ…, அவன் ஒரு பணக்கார பெண்ணை மணந்திருக்கிறான், மேண்செஸ்டரில் ஒரு முறையான வக்கீல்.”
“அவளுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” ந்னாம் தன் உறவுக்காரப் பெண்ணிடம் மெல்ல கேட்டாள்.
“ஹ்ம்ம்ம்… வார்த்தைகளுக்கு கால்கள் உண்டு.”
“அவளிடம் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று அவன் சொன்னான் ஆனால் இந்த மனைவிக்கு நடப்பது அத்தனையும் தெரியும்,” அப்பெண் சொல்லிக் கொண்டிருந்தார். “இங்கிருக்கும் உங்களில் யாருக்காவது அவள் எவ்வளவு பெரிய அதிர்ச்சியில் இருக்கிறாள் என்று தெரியுமா? தெரியாது, ஏன்? ஏனென்றால் அவள் இங்கிருந்து குடி பெயர்ந்த பெண்களில் ஒருத்தி? தெரியாதவர்களுக்காக சொல்கிறேன், இது அவளுடைய பணத்தில் கட்டப்பட்ட அவளுடைய வீடு. நான் முடித்துவிட்டேன்.”
அவர் பியர் ஒன்றை பெற்றுக் கொண்டு அமர்கையில் கைகள் தட்டப்பட்டன. இறுதிச் சடங்கின் துயரமான சூழல் இப்போது ஒரு அரசியல் கூட்டத்தைப் போன்ற உற்சாகத்திற்கு மாறியது.
“மரணம் ஒரு திருடனைப் போல வந்தது,” கீச்சுக் குரல் கொண்ட பெண் எழுந்து நின்றார். “அது கதவை தட்டி கெயிட்டாவை எச்சரிக்கவில்லை. திரை விலகியதும், ஆ… என்ன ஒரு அசிங்கம்!”
“ஒருவேளை இந்தப் பெண் கெயிட்டாவை வீட்டுக்கு அழைத்து வர போராடமல் இருந்திருந்தால், பிரிட்டானியர்கள் அவனை எரித்திருப்பார்கள். அவர்கள் இதிலெல்லாம் விளையாடுவதில்லை. யாரும் கோராத உடல்களுக்காக வீணடிக்க அவர்களிடம் இடங்கள் இல்லை. ஆனால் அதற்காக அவளிடம் ஒரு நன்றி சொல்லும் கருணை யாருக்காவது இருந்ததா? இல்லை. மாறாக, கெயிட்டாவின் அப்பா அவள் வாயை மூட சொல்கிறார். என்ன ஒரு படிக்காத முட்டாள் ஏழை!”
அந்த கும்பல் ஏனோதானோவென வார்த்தைகளை வீசத் தொடங்கினர். அவை வசைகளாக மாறியிருக்கக் கூடும். ஒரு பெரியவர் வந்து அவர்களை அமைதிப்படுத்தினார்.
“இந்த தேசத்தின் தாய்மார்களே, உங்களுடைய கருத்து சென்று சேர்ந்தது, மேலும் அது ஒரு முக்கியமான விஷயத்தை முன் வைத்திருக்கிறது. அதை நேருக்கு நேர் சந்தித்துவிடுவோம். ஏனென்றால், அவன் அவளிடம் பொய் சொன்னார், நீங்கள் சொல்வதைப் போல இதில் இரண்டு அப்பாவி குழந்தைகளும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள்.”
“ஆனால் முதலில் நாம் பிரிட்டன் மனைவியைப் பார்ப்போம்,” ஒரு பெண் குறுக்கிட்டார். “அவள் பெயர் ந்னமேயா. இந்த பிச்சைக் குடும்பம் ஒரு ஆசன துடைப்பானைப் போல துடைத்து எறிந்த பெண்ணை இந்த உலகம் பார்க்கட்டும்.”
ந்னாம் எழுந்து நிற்க விரும்பவில்லைதான், ஆனால் இந்தப் பெண்களின் முயற்சிகளுக்கு நன்றிகெட்டவளாய் இருக்க விரும்பவில்லை. அவள் எழுந்து தலை நிமிர்த்தி நின்றாள்.
“வா”, குடித்திருந்த பெண்ணொருத்தி அவள் கையைப் பற்றி வீட்டு வரவேற்பரையில் துக்கக்காரர்களுக்கு மத்தியில் கூட்டிச் சென்று நிறுத்தினாள். “இவளைப் பாருங்கள்,” அவள் கெயிட்டாவின் குடும்பத்தினரிடம் சொன்னாள்.
துக்கத்திற்கு வந்தவர்கள், வீட்டின் பின்னால் இருந்தவர்கள் கூட உள்ளே வந்து ந்னாமை வெறித்துப் பார்த்தனர். அவள் சவப்பெட்டியிலிருந்து பார்வையை விலக்கினாள், கண்ணீர் அவளின் “தலையை நிமிர்த்தி நில்” என்ற பாவணையை குலைப்பதாக இருந்தது.
“என்னிடமிருந்து திருடியதை நான் பொறுத்துக் கொள்வேன், ஆனால் என் மகன்களின் எதிர்காலம்.?”
அந்த கணத்தில் அப் பெண்கள் கும்பலின் ஆவேசப் போக்கு கீழிறங்கி அவர்கள் தங்கள் தலைகளை அசைத்து கண்களை துடைத்து பற்களை மென்றார்கள்,
“குழந்தைகள்… ஆமாம். ‘அபானா மாமா… யியி’. எல்லாம் இந்த ஆண்களால்தான்… நாம் யாராக பிறக்க வேண்டுமென்ற தேர்வு நம்மிடம் இல்லாமல் இருப்பதால்தான்…. ஆண்கள் எல்லாம் மனிதர்கள் என்று யார் சொன்னது…”
இரங்கல் கூட்டம் ந்னாமிற்கு சாதகமாக திரும்பியது.
அப்போதுதான் ந்னாமின் கண்கள் அவளை ஏமாற்றியது. அவள் திறந்திருந்த சவப்பெட்டியை ஒரு நொடி பார்த்தாள். பொய்கள் சொன்ன ஒருவன் பிணமாக மாட்டிக் கொள்வதைப் போல ஒரு கலகக் காட்சி வேறில்லை.
*****
ந்னாம் கூடத்தில் இருந்தாள். சுத்தம் செய்து முடித்திருந்தாள். சுவரில் இருந்த எல்லா புகைப்படங்களையும் எடுத்து விட்டிருந்தாள் – திருமணம், பிறந்த நாட்கள், பள்ளி உருவப் படங்கள், கிறிஸ்துமஸ்கள் – மற்றும் கெயிட்டாவின் மரணித்திற்கு முன்னால் எடுத்த அத்தனை புகைப்படங்கள், அதில் அவன் இருக்கிறானோ இல்லையோ, மற்றதிலிருந்து பிரித்தெடுத்தாள். அவள் அவற்றை பையில் போட்டு முடிச்சிட்டாள். மற்ற புகைப்படங்களை படுக்கையறைக்கு கொண்டு சென்றாள். இரவு அங்கியை உடுத்திக் கொண்டு அவள் நிர்வாணத்தை மறைத்தாள். பிறகு அவள் புகைப்படங்கள் இருந்த பையை எடுத்துக் கொண்டு முன் கதவிற்குச் சென்றாள். அவள் கதைவை திறந்ததும் வெளியில் காற்றின் புத்துணர்வு அவளை அறைந்தது. இந்தக் குப்பை பைகளை அவள் ஒவ்வொன்றாக குப்பை உள்ளிழுக்கும் ஒரு சரிவுக் குழாயின் வாயருகே வைத்தாள். பிறகு சிறிய பைகளை முதலில் போட்டாள். அது கழிவறைக்குள் நீண்ட மலச் சொட்டு வீழ்வதைப் போல வீழ்ந்தது – எதிரொளி தாமதித்தது. அவள் நிலைப்பெட்டியை உடைத்து துண்டு துண்டாக அதனுள் போட்டாள். இறுதியாக, புகைப்படங்கள் இருந்த பெரிய குப்பைப் பையை குழாயின் தொண்டைக்குள் போட்டாள். குழாய் அடைத்துக் கொண்டது. ந்னாம் வீட்டினுள் திரும்பிச் சென்று நீண்ட துடைப்பத்தை கொண்டு வந்தாள். அவள் மனதில் அவள் அப்பாவின் சமீபத்திய வார்த்தைகள் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது,
“அவர்களை அப்படியே வீட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட முடியாது. அந்த வீட்டில் இப்போது நான்கு ஒன்றுமறியாத குழந்தைகள் இருக்கிறார்கள். மேலும், லுலும்பா கெயிட்டாவின் மூத்த மகனாக இருப்பதால் அவன் அவர்கள் எல்லோரையும் சுவீகரித்துக் கொண்டவனாகிறான். அந்தக் குற்றத்தை நாம் அவன் தோளில் குவிக்க வேண்டாம்.”
அவள் துடைப்பத்தின் கைப்பிடியை வைத்து பையை குத்தினாள். கண்ணாடிகளும் சட்டகங்களும் சிறிது நேரம் உடைபடலுக்குப் பிறகு அது உள்ளே சென்றது விழுந்தது. அவள் வீட்டிற்கு திரும்பி வந்ததும், பெயிண்டின் வாசம் அவளை மூழ்கடித்தது. அவள் துடைப்பத்தை சமையலறைக்கு கொண்டு வந்து வைத்து கைகளை கழுவினாள். அவள் ஜன்னல்களை திறந்தாள். காற்று, திரைகளை வேகமாக ஊதி அசைத்தது. அவள் அங்கியை கழற்றினாள், குளிர்ந்த காற்று அவள் வெற்று உடல் மீது வீசியது. அவள் கண்களை மூடி கைகளை தூக்கினாள். அவள் சருமத்தின் மீது காற்று படும் உணர்வு, நிர்வாணமாய் இருப்பது, சுத்தமான வீட்டின் அமைதி எல்லாம் அவளை திணறடித்தது, ஆனால் அவள் அழவில்லை.
(இந்தக் கதை 2020 ஆம் ஆண்டு யாவரும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்” என்ற மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பிலிருக்கும் தலைப்புக் கதை. வெளியிட அனுமதித்த யாவரும் பதிப்பகம் ஜீவகரிகாலன் அவர்களுக்கு நன்றி. )
நரேன்: மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களில் தொடர் வாசிப்பும் ஆர்வமும் கொண்டவர். இவரின் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மற்றும் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் திரு. ஜெயமோகன் தளத்திலும் சொல்வனம், கனலி, யாவரும் மற்றும் வல்லினம் இணைய இதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன. 2020ம் ஆண்டு இவரின் சமகால ஆங்கில சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு – ‘இந்தக் கதையைச் சரியாகச் சொல்வோம்’ யாவரும் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட புலம் பெயரிகளின் இக்கதைகளின் மூலமாக முதன்மையான சமகால ஆங்கில சிறுகதை ஆசிரியர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
தொடர்புக்கு: narendiran.m@gmail.com