“நான் அடையாளமற்றவள்”: எமிலி டிக்கின்சன்

அனுராதா ஆனந்த்

(எமிலி டிக்கின்சனின் கவியுலகையும் வாழ்வையும் முன்வைத்து)

எமிலி டிக்கின்சன்

‘மலை
அதன் மாறாத் தொல்லிருக்கையில்
இவ்வெளியில் அமர்ந்து
ஆட்சிப் புரிகிறது
சகலத்தையும் கவனித்தபடி
சகலத்தையும் விசாரித்தபடி’

கித்தானில் வரையப்படும் தைலவண்ண ஓவியம் போல, முதலில் ஒரு கரட்டு வரைவு, பின்பு ஒவ்வொன்றாக நுணுக்கமான வண்ணங்கள் என்று படிப்படியாக துலங்கும் சொற்றொடர்கள் மூலம் இக்கவிதையின் உட்பொருளை துலங்கச் செய்கிறார் எமிலி எலிசபெத் டிக்கின்சன்.

நமக்கு வழிகாட்ட வந்த ஞானமிக்க ஆசானாக , மன்னிப்பு கோர தகுதியுள்ள தகப்பனாக, இறைத்தன்மை மிளிரும் தலைவனாக, சுற்றி நடப்பதை அமைதியாகவும் ஆழமாகவும் கவனித்தபடி மோனித்திருக்கும் புத்தனாக, கருணை மிகு மீட்பனாக – இப்படி பலவாராக மலையைப்பற்றிய பிம்பத்தை மனதுள் சட்டென்று கொண்டு வந்து நிறுத்துகின்றன இவ்வரிகள். ஆனால் அடுத்த பத்தியில்தான் மலை ஒரு பிரபஞ்ச தந்தையைப் போல என்பதை வெளிப்படையாக வார்த்தைகளால் விவரிக்கப்படுகிறது . தூசி படிந்த ஆடி ஒன்றின் மங்கலான பிம்பம், துடைக்கத் துடைக, மெல்லப் பொலிவது போல இக்கவிதை வெளிப்படுகிறது .

தந்தையின் காலடியில் இயங்கும் 
பிள்ளைகளைப் போல
மழையில் காலடியில் காலங்கள் 
மண்டியிட்டுப் பிரார்திக்கின்றன
மலை 
காலத்தின் பாட்டன் 
விடியலின் முப்பாட்டன்

இப்படியாக, தாம் அடுத்தடுத்து சொல்லப் போகும் கருத்தை உருவகமாக , இடையீடாக முதலிலேயே உணர்த்தி , நம் மனக்களத்தில் பதியனிடும் யுக்தி எமிலியின் தனித்துவமான தன்மையாக அவரது பல கவிதைகளில் காணக்கிடைக்கிறது . ஒரு தாலாட்டு போல அல்லது ஒரு ஒப்பாரி போல இசைமையும் தாளமும் உருக்கமும் கொண்ட பாடல்களாக எமிலியினது கவிதைகள் சில, மேலோட்டமான முதல் வாசிப்பில் வெளிப்பட்டாலும வாழ்வின் பொதுவான, நிலையான உண்மைகளையும் அதற்கு நேரெதிரான நிலையற்ற தன்மையையும் ஒரு சேர சொல்லாமல் சொல்லிச் செல்லும் கனமும் தீவிரமும் கொண்டவை. இவை எல்லாவற்றையும் அவர் மிகச் சொற்பமான சொற்களின் உதவியோடு சாத்தியப்படுத்துகிறார் .   

ஆங்கில கவிதை புலத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் ஒருவராக போற்றப்படும் எமிலி டிக்கின்சன் 1830 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள், அமெரிக்காவின் மாஸசுசெட்ஸ் மாகாணத்தில் ஆம்ஹர்ஸ்டில் பிறந்தவர். ஹோம்ஸ்டெட் என்ற அவரது தந்தையின் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணைவீட்டில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தவர். பள்ளியில் சிறந்த மாணவியாக விளங்கிய எமிலி ஆம்ஹர்ஸ்ட் அகாதமியில் ஆங்கிலம், செவ்வியல் இலக்கியம் , கணிதம், வரலாறு, தத்துவம், புவியியல், தாவரவியல் மற்றும் லத்தீன் மொழி ஆகியவற்றைச் சிறப்புப் பாடங்களாக படித்துத் தேர்ந்தார். 1838 ஆண்டு முதல்தான் அப்பள்ளி மாணவிகளை ஏற்க தொடங்கியிருந்தது . எமிலியும் அவரது தங்கை லிவீனியாவும் 1940 யில் ஒன்றாக பள்ளிப்படிப்பை தொடங்கினர்.

எமிலி டிக்கின்சனின் குழந்தைப் பருவம்

அப்போது அவருக்கு இருந்த தோழிகளான அபியா ரூட், ஏபி உட்ஸ் மற்றும் சூசன் கில்பர்ட் என்ற மூவருமே அவரது வாழ்நாள் தோழிகளாக தொடர்ந்தனர்.

பெண் கல்விக்கு முக்கியத்துவம் இல்லாத காலகட்டம் என்றாலும் எமிலியின் தந்தை எட்வர்ட் டிக்கின்சன், எமிலியும் அவரது தங்கை லிவீனியாவும் கல்லூரி முடிய படிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க பெண்களுக்கு கல்வியறவு அவசியம் என்று அவர் நம்பியதாலும், எமிலியின் தாய் – எமிலி நோர்க்ராஸ் டிக்கின்சன்- அவர் காலத்திலேயே அவரது தந்தையின் முயற்சியால் வீட்டிலேயே கல்வியறிவு பெற்றவர் என்பதாலும் அவர்களின் வீட்டில் பெண் கல்வி என்பது மிக இயல்பாகப் பார்க்கப்பட்டது.

1847ஆம் ஆண்டு உயர் கல்வி பயில மௌண்ட் ஹோல்யோகே செமினரியில் சேர்ந்தார். ஆனால் தன் தாயின் உடல்நிலை காராணமாக அதை பாதியிலியே இடைநிறுத்தி தமது பண்ணை வீட்டிற்கு திரும்பினார். 

ராபர்ட் மற்றும் எலிசபெத் பேரட் ப்ரௌனிங்-இன் கவிதைகள் தன்னை தன் எழுத்தை பாதித்ததாக அவர் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார்.  ராபர்ட் ப்ரௌனிங்கின் நெடுங்கவிதைகள் பெரும்பாலும் கதைகளை சொல்லக்கூடியவை, ஆண்மைய கருத்தாக்கங்கள் உள்ளீடாக கொண்டவை . ‘My last duchess’ மற்றும் ‘Porphyrias lover’ இந்த இரண்டு கவிதைகளிலுமே மனைவியை அல்லது காதலியை கொலை செய்த ஆண்களைப் பற்றியன. பொறாமை காரணமாக, அதீத காதல் காரணமாக, அல்லது அப்பெண்களுக்கு பிற ஆண்களிடம் ஏற்பட்ட தொடர்பு காரணமாக அது நிகழ்ந்ததாக அதற்கான காரணங்களும் அக்கவிதைகளில் பொதிந்திருக்கும். அந்த காலகட்டத்தின் தவிர்க்க முடியாத கவிஞராக இவர் இருந்ததனால், பதின் வயதிலிருந்தே தன் தந்தையாலும் பிற ஆசான்களாலும் எமிலியிடம் பரிந்துரைக்கப்பட்டதனால் இவர் பெயரை குறிப்பிட்டிருப்பார் என்பதை எளிதில் அனுமானிக்கலாம். மற்றபடி எமிலியின் முற்போக்கு மற்றும் தனக்கே உரித்தான பெண்ணிய கருத்துகளுக்கு முரணான ரசனையாக தோன்றினாலும் அவரது சொலல் முறை மற்றும் வார்த்தை பிரயோகங்களால் அவரை தமது ஆதர்சமாக குறிப்பிட்டுள்ளார் என்றும் அனுமானிக்கலாம்.

எமிலியை உண்மையாக பாதித்தது எலிசபெத் ப்ரௌனிங்கின் கவிதைகள் என்பது இந்த இரு கவிஞர்களையும் படித்த எவருக்கும் எளிதில் விளங்கும். எலிசபெத், எமிலிக்கு பிடித்தமான பாலட் மற்றும் சொனட் வகைமைகளையே அதனது கவிதைகளின் சொலல் முறையாகக் கொண்டவர். ராபர்ட் ப்ரௌனிங்கின் மனைவி என்றாலும், ஆண்கள் நிறைந்த அந்த காலகட்டத்தின் இலக்கிய புலத்தில் ,எலிசபெத் ராபர்டை மணமுடிக்கும் முன்பே ஒரு கவிஞராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். அதனால் அவரது எழுத்துகளின் மேல் பெருமதிப்பு வைத்திருந்த எமிலி, அவரை ‘ராணி’ என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் திரும்ப திரும்ப படிக்கும் ஒரே கவிஞரும் எலிசபெத் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்

‘நான் உன்னை எப்படியெல்லாம் காதலிக்கிறேன்?
இதோ இங்கே பட்டியலிடுகிறேன்’

-எலிசபெத் பேரட் ப்ரௌனிங்

என்று சோனட் என்ற கவிதை வடிவின் வாயிலாக தன் காதலனான (பின்னர் கணவன்) ராபர்ட்டிற்கு எழுதிய கவிதையில் கடவுள் மீதான தனது அன்பையும் ஈடுபாட்டையும் காதலன் மீதும் கொண்டிருப்பதாக ..இரண்டையும் ஒப்பு நோக்குகிறார். காதலையும் பக்தியையும் ஒரே தட்டில் வைத்து எழுதுவது நம் இந்திய மரபில் வந்த பக்தி இலக்கியங்களை நினைவூட்டவதாக அமைந்திருக்கிறது .

 இதே போல எமிலியும்

‘மதிப்புமிக்கவரே! என்னிடம் இரண்டு சொத்துகளை 
விட்டுச் சென்றுள்ளீர்கள்
ஒன்று காதலின் சொத்து
பரலோகத்தின் பிதாவிற்கு தகுதியான 
மகோன்னதக் காதல்’

என்று கடவுளையும் காதலையும் ஒப்புநோக்கும் வரிகளை எழுதியுள்ளார்.

எலிசபெத்தின் magnum opus ஆக கருதப்படும் அரோரா லே என்ற 9 புத்தகளாக வந்த ஒரே கவிதை . 4 நகரங்களில் ( ஃப்ளோரன்ஸ்,லண்டன், பாரிஸ் மற்றும் மாவர்ன்) நடக்கும் கதையை ப்ளாங்க் வார்ஸ்( blank verse) என்ற நவீன வகைமையில் எழுதியிருப்பார். இயாம்பிக் பென்டாமீட்டரில்( iambic pentameter) அமைந்த இந்த பன்நெடுங்கவிதை எமிலியை பெரிதும் கவர்ந்தது. இதைப்போன்ற ஒன்றை தன்னால் எழுத இயலாது ( உடலாலும் ,மனதாலும் )அதற்கான வலிமை தன்னிடம் இல்லை என்று நம்பினார். இந்த நெடுங்கவிதை அரோரா என்ற கவிஞரைப் பற்றியது . இது தன்னிலையில் எழுதப்பட்டது . தான் ஒரு பெண்ணாகவும் கவிஞராகவும் ஒரே சமயத்தில் இருப்பது எவ்வளவு கடினமான ஒன்றாக இருக்கிறது என்று அரோரா தன் வாழ்வை பற்றிய சலிப்பதாக எழுதப்பட்ட பகுதியின் சில வரிகள்

‘பெண்களின் வேலைகள் யாவும் ஒரு குறியீடாக உள்ளது
ஊசிநூலால் தைத்து தைத்து விரல்களை புண்ணாக்கிக்கொள்கிறோம்
எங்கள் கண்கள் மங்கிப் போகின்றன
எல்லாம் எதற்காக? நீங்கள் வீட்டில் அணிவதற்கான
செருப்புகளை செய்வதற்காக
நீங்கள் உட்காருவதற்காக சிறு நாற்காலிகளை உருவாக்க
அதில் கால் தடுக்கி விழுந்து நீங்கள் எங்களை சபிப்பதற்காக
நீங்கள் உறுங்குவதற்கான சிறு தலையணைகளை உருவாக்க
அதில் படுத்துறங்கி பிற பெண்களைப் பற்றி கனவு காண்பதற்காக’

(அரோரா லே – எலிசபெத் பேரட்)

இப்படி தையலும், சமையலும் தோட்டப் பராமரிப்புமான வீட்டின் அன்றாட வேலைகளை மட்டுமே பார்த்து வரும் பெண்ணைப் பற்றி எமிலியும் பல கவிதைகளில் குறிப்பிடுகிறார்.

‘தேவதைகளை மட்டுமே துணையாகக் கொண்டவள்
வீசும் காற்று மட்டும் இல்லையென்றால்
வீட்டைவிட்டு அவளது மணம் கூட வெளியேறாது
பரந்த புல்வெளியின் ஒற்றைப் பனித்துளிப்போல
வண்ணத்தை பூச்சிகளைத் தவிர வேறு யாராலும்
பார்க்கப்படாதவள்.
ஆனால் ஆவளில்லையென்றால்
யாரோ ஒருவருக்கு
வெறுமையான இருத்தலை
அர்த்தமுள்ளதாக்கும்
முகமொன்று காணாமல் போயிருக்கும்’

-எமிலி டிக்கின்சன்

இப்படி எலிசபெத்தின் சாயல் கொண்ட சில கவிதைகளும் உண்டு. குறிப்பாக அவரது நெடுங்கவிதையான அரோரா லேயின் தத்துவ வரிகள் பலவற்றை தனக்கே உரிய சொற்சிக்கனத்துடன் சிறு சிறு கவிதைகளாக சமைத்துள்ளார் எமிலி என்று சில கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டது .

‘பிரியத்தின் அறிகுறிகளில் ஒன்று பேச்சு— இன்னொன்று 
அமைதி’
‘வாழ்விலிருந்து ஒரு மிடறு குடித்தேன்— அதன் விலை
என்ன தெரியுமா’

-எமிலி டிக்கின்சன்

இதற்கு ஈடான வரிகளை கதைசொல்லும் கவிதையான அரோராவிலும் காணலாம். எமிலியின் சமகாலத்தவர் என்றாலும் எலிசபெத் அவருக்கு நேர்மாரான ஆளுமையுடன் விளங்கினார். குழந்தை தொழிலாளர்கள், பெண்ணியம் போன்ற கருத்தைகளை தன் எழுத்தின் மூலம் மக்களுக்கு கடத்தினது மட்டுமல்லாது சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கினார். களத்தில் பணியாற்றினார், முன் நின்று போராட்டங்களை நடத்தினார் பரவலாக அறியப்பட்டவராக இருந்தார். எமிலியோ தனது சகொதரனின் மனைவியும், தன் காதலியுமான சூசனைத் தவிர வேறு யாரிடமும் தன் கவிதைகளை காண்பிக்காமல், தன் அறையிலேயே பூட்டி வைத்தவர். பல முறை திருத்தங்கள் செய்த அவரது கையெழுத்துப் பிரதிகள் அவரது இறப்பிற்க்குப் பின்னே காணக்கிடைத்தன. அவரும் ஒரு கட்டத்தில் வெளியே எங்கும் செல்லாமல் அந்த அறைக்குள்ளேயே வாழ்த் துவங்கினார்.1874 தனது தந்தையின் இறுதிச்சடங்கு வீட்டில் நடந்த போது, அதில் கூட பங்குகொள்ளாமல் தனது அறையில் அடைந்து கிடந்தார். இப்படிப்பட்ட உள்ளொடுங்கிய மனச்சிக்கல் கொண்டவருக்கு பிரபலமான, வெளிப்படையான போராளியாக விளங்கிய எலிசபெத் பேரட்டின் மேல் பிரியம் என்பதையும் தாண்டி ஒரு நாயகி வழிபாட்டு மனோபாவமும் ஏற்பட்டது வியப்பில்லை.

ரால்ஃப் வால்டோ எமெர்சனின் தோத்திரப் பாடல் வகை கவிதைகளும் எமிலியை பாதித்துள்ளன. குறிப்பாக அவரது கான்கார்ட் ஹிம் என்னும் கவிதை மற்றும் அவரது கவிதை மொழியில் காணக்கிடைக்கும் இயற்கையைப் பற்றிய விவரணைகள், இயற்கையை கடவுளோடு ஒப்பிடும் பார்வை இவையாயும் எமிலியின் கவிதை மொழியிலும் விரவிக் கிடக்கின்றன..

பனிப் புயல் 
‘விண்ணின் எக்காளங்கள் யாவும் முழங்க
பனி இறங்கி வருகிறது 
வயல் வெளிகளைக் கடந்து…
மலைகள், காடுகள், பெருகிப் பாயும் இந்நதியைக் கடந்து 
காற்றில் கரைகிறது ….
சொர்கங்களயே திரைக்குப் பின்
மறைத்துள்ள வெண்காற்றாய் மாறுகிறது
 


-ரால்ஃப் வால்டோ எமெர்சன்

‘சமுத்திரங்கள் யாவற்றையும் உயிரால் நிரப்பியவனும்
நிலங்கள் யாவற்றையும் மேலிருந்து காப்பவனும்..’


-எமிலி டிக்கின்சன்

1800 களில் அமெரிக்காவின் இலக்கிய புலத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்த எழுத்தின் சொந்தக்காரர் கவிஞர் வால்ட் விட்மென். அவர் கவிதையின் வடிவத்திலும் உள்ளீட்டிலும் செய்த புரட்சியின் தாக்கங்கள் தற்காலத்தில் எழுதப்படும் கவிதைகளிலும் பிரதிபலிப்பதைக் காணலாம். அது காரும் கவிதையின் பால் நிலவி வந்த இறுக்கத்தையும் தேய்வழக்குகளையும் உதறி புதிய யுக்திகளை புகுத்தியவர் . பேசத் தயங்கிய பேசுபொருட்களை அப்பட்டமாக பேசிய முற்போக்காளர். தம் காலத்தைத் தாண்டிய தொலைநோக்குடன் கவி புனைந்தவர். அவர் செய்த கட்டுடைப்புகளால் ஆங்கில கவிதையின் தன்மையும் போக்கும் வடிவமும் திசையும் வெகுவாக மாறின. 

 வால்ட் விட்மெனின் யதார்தவாத கவிதைகளின் பால் எமிலிக்கு பெரும் ஈடுபாடு இருந்தது.இவர் ஆன்மீகம் மற்றும் கடவுளை முழுதாக புறக்கனித்தது மட்டுமின்றி அதற்கு நேரெதிரான உடலை கொண்டாடிய கவிதைகளை எழுதியவர். மனித உடம்பும், அதன் அழகியலும், விலங்கினை ஒத்த அதன் வேட்கைகளும்,ஈர்ப்புகளும் புலனிம்பங்களையும் வெளிப்படையாக சொல்லும் ‘ஐ சிங் தி பாடி எலெக்ட்ரிக்’ என்ற கவிதையின் சாராம்சமாக விளங்குவன. அந்த காலகட்டத்தில் விட்மென் தடைசெய்யப்பட்ட கவிஞராக கருதப்பட்டவர் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் படிக்கக் கூடாத கவிதைகளாக இவரது கவிதைகளின் மேல் ஒரு பொது ஒவ்வாமை நிலவி வந்தது. இவரை எமிலி விரும்பிப் படித்தாலும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைப் பற்றி பேச தயக்கம் கொண்டது இயற்கையே . விட்மெனின் கவிதைகள் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்ற கட்டற்ற தன்மை கொண்டவை ஆனால் எமிலி ஒரு கட்டுக்கோப்பான வடித்தினுள் தன் எண்ணங்களை அடைக்கக் கூடியவர் என்றாலும் எமிலியின் காம இரவுகள் என்ற கவிதையின் பேசு பொருள் விட்மெனின் பாதிப்பினால் வந்தது என்பதைக் காணலாம்.

‘இவனது உடல் அழகும் ,வீர்யமும், அமைதியும் நிரம்பியது 
இவனது தலையின் வடிவம், பாதி நரைத்த முடிக்கற்றைகள்
ஆழம் காண முடியாத ,பொருள் தொனிக்கும் கரும் விழிகள்

பெண்களே ஏன் வெட்கம் கொள்கிறீர்கள்?
இவ்உலகின் அனைத்து உடம்புகளுக்கும் ஆன்மாக்களுக்கும் 
வாயிற் கதவு,
உங்கள் உடல் தான்

– வால்ட் விட்மென்

‘காம இரவுகளே! காம இரவுகளே!

கரை சேர்ந்த இதயத்திற்கு
காற்றெதற்கு ? திசைகாட்டி எதற்கு ?
வரைபடம் தான் எதற்கு ?

இன்றிரவு மட்டும் என்னை உன்னுள்
நங்கூரமிட்டுக் கொள்ளவாயா?’

-எமிலி டிக்கின்சன்.

ஜான் டாண் ( 1572- 1631) என்ற மெட்டாஃபிஸிகல் ( metaphysical) கவிஞரின் பெயரும் எமிலியின் கடிதங்களிலும் அவரது டயரி குறிப்புகளிலும் இடம்பெற்றிருக்கின்றன. இவர் காதல் கவிதைகள் எழுதியிருந்தாலும், பிற்காலத்தில் தேவாலயத்தில் பணியாற்றியதால் மத வழிபாட்டு பாடல்களையும் புனைந்துள்ளார். Holy sonnets என்ற தொகுப்பில் பதினொரு கவிதைகள் இதாலியன் சோனட் என்ற வகைமையைச் சேர்ந்த வழிபாட்டு பாடல்களாக விவிலியத்தின் அடியொற்றி எழுதப்பட்டவை.இதில் ஜான் டாண் கடவுளின் மீது முழுநம்பிக்கை வைத்திருந்தார் என்றாலும் இடையிடையே அந்நம்பிக்கை தேய்ந்து போவதையும் , தன் மனதில் சந்தேகங்களும் கேள்விகளும் எழுவதையும் , தான் போகும் பாதை சரிதானா என்ற ஐயம் ஏற்படுவதையும் குறிப்பிட்டிருப்பார். எமிலியின் நவீன யதார்த்த சிந்தனை போக்கிற்கு இதுவே மனித மனதின் உண்மையான தன்மை என்று தோன்றியிருக்கிறது 

‘நீரே எம்மை படைத்தீர்
உமது செயல் மக்கிப் போகலாமா?
இறப்பு என்னை நோக்கி விரைகின்றது
இப்போதே இந்நொடியே எம்மை சீர்படுத்தும்
எம் தேவனே

-ஜான் டாண்

‘இன்று உங்களிடம் கையளிப்பதற்கு 
இது மட்டுமே என்னிடம் உள்ளது
இதுவும் கூடவே என் இதயமும் ’

-எமிலி டிக்கின்சன்

 எமிலி வில்லியம் ப்ளேக்கின் எழுத்துகளையும் வெகுவாக சிலாகிக்கிறார் . கவிஞரும் ஓவியருமான ப்ளேகின் கவிதைகள் பெரும்பாலும் கடவுளின் இருண்மையான பக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தவை. உலகின் இத்தனை அவலங்களையும் அநீதிகளையும் அனுமதிக்கும் கடவுளின் நோக்கத்தை கேள்விக்கு உட்படுத்தும், சமூக அவலங்களை எடுத்தியம்பும் கவிதைகளை புனைந்தவர். ‘த லிட்டில் ப்ளாக் பாய்’ என்ற கவிதையில்

‘அம்மா என்னை வீசும் தென்றலில் சூல் கொண்டார்
நான் கருப்பானவன்தான்,ஆனால் என் ஆன்மா வெண்மையானது
தேவதையைப் போல வெள்ளையானது ஆங்கிலக் குழந்தை
வெளிச்சத்தை தொலைத்தவனைப் போல நான் கருப்பாக இருக்கிறேன்’

-வில்லியம் ப்ளேக்

இவ்வளவு வெளிப்படையாக எமிலிய தனது கவிதைகளில் சமூக அவலங்களை பேசியிருக்க மாட்டார் எனினும் பெண்ணியம் சார்ந்த கருத்துகளை வெகுவாக பேசியுள்ளார். மேலும் பூடகமாக சில இடங்களில் குறிப்பிட்டுள்ளார்

‘இங்கே நிகழ்ந்த வாதையின்
எச்சுவடுமின்றி இப்போது அமைதியாக 
இருக்கிறது …
அதன் வழி வருபவர்கள 
வயதான முப்பாட்டனொருவனின் 
தனித்து நிற்கும் கல்லறையில்
பொறிக்கப்பட்ட வாசகத்தை படிப்பார்கள்’

-எமிலி டிக்கின்சன்

எமிலியை பின்தொடரும் மரணத்தின் நிழல்

‘என் மூளையில் ஈமச்சடங்கொன்று நிகழ்வதை உணர்ந்தேன்
அதில் துக்கித்தவர்கள் மேலும் கீழும் நடந்தார்கள்
அவர்கள் நடக்க நடக்க ஏதோ ஒன்று
என் சிந்தையுள் உடைந்தது போலிருந்தது’

-எமிலி டிக்கின்சன்

இறப்பும், கல்லறைகளும் , கல்லறை தோட்டங்களும் சவப்பெட்டுகளும் , தீர்பு நாளும் எமிலியின் பெரும்பாலான கவிதைகளின் பேசுபொருளாக விளங்குகின்றன. ‘அவராலேதான் நமக்கு மீட்பும், உயிரும்,உயிர்ப்பும் உண்டு . அவராலேதான் நாம் ஈடேற்றமும் விடுதலையும் அடைந்தோம்’ என்ற விவிலிய வாசகத்தை பல கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார் என்றாலும் மரணம் பற்றிய தீராத பதற்றமும் , பயமும் கொண்டவராகவே அவரது கவிதைகள் மூலம் வெளிப்படுகிறார். மரணம் தன்னை ஏதோ ஒரு வகையில் பின் தொடர்ந்து வருகிறதென்று எண்ணி அந்தப் பயத்தை தீவிரமாக விசாரித்துள்ளார். அதனோடு சமரசம் செய்ய, மனதை அமைதியாக்க முயன்று தோற்றிருக்கிறார். அவரது வாழ்வில் மரணம் என்பது , முழுமையாக ஒப்புக்கொள்ளவும் முடியாத , புறம் தள்ளவும் முடியாத ஒன்றாக இருந்துள்ளது . இந்த பெரும் அச்சமே அவரை மன நோயில் தள்ளியிருக்கிறது. இதன் காரணமாகத்தான் பல வருடங்கள் தன் அறையில் அடைந்து கிடந்துள்ளார் . அவருக்கு இருந்த ஆன்மிக நம்பிக்கையின் காரணமாக இறப்பிற்கு பின் ஒரு வாழ்வு உண்டென்று நம்பியதாகவும் தெரிகிறது. ஆனால் அதையும் திண்ணமாக தீர்க்கமாக நம்ப முடியாமல், சந்தேகத்தில் தவித்திருக்கிறார்.

‘நாம் வாழும் இவ்வுலகு நம் மரணத்தோடு முடிவதில்லை
ஸ்தூல உடம்பைத்தாண்டி வேறெங்கோ
நம் அறிவிற்கு அப்பாற்பட்டதொரு புலத்தில் உயிர் இயங்குகிறது’

என்கிறார் எமிலி. 

தன் 14 ஆவது வயதில் உறவினரும் தோழியுமான சோஃபியா வின் இழப்பு எமிலியை பெரிதும் பாதித்துள்ளது . எமிலிக்கு நெருக்கமான லியோனார்ட் ஹம்ஃபரி என்ற பள்ளித் தலைமை ஆசிரியரும் தவறிப்போனார். இறப்பும், இழப்பும் அவரை எப்போதும் பின்தொடர்ந்து வருகிறதென்ற எண்ணம் எமிலிக்கு உருவாகத் தொடங்கிய காலம் அது .அந்நேரம் தன் பள்ளித்தோழி அபியாவிற்கு எழுதிய கடிதத்தில்,

“…. நான் தனிமையாக உணர்கிறேன், என் நண்பர்கள் சிலர் காணாமல் போய்விட்டார்கள்— அவர்கள் தேவாலயத்தில் துயில் கொள்கிறார்கள், அந்தியின் இந்த வேளை துக்ககரமானதாகி விட்டது . முன்னர் அது என் படிக்கும் நேரமாக இருந்தது— என் ஆசிரியரும் போய்விட்டார் —என் புத்தகத்தை திறந்து வைத்து ,அவர் கற்பித்த பாடங்களை படிக்கும் போது — கண்கள் நிரம்பி வழிகின்றன —என்னால் அதை துடைக்க முடியவில்லை— துடைக்கவும் விரும்பவில்லை — என்னால் என் பிரிய ஹம்ஃபிரிக்கு இதைவிட வேறு எப்படி அஞ்சலி செலுத்த இயலும்?” என்று தன்னுடைய பிரியமான ஆசிரியரின் பிரிவுக்கு வருந்தி எழுதியுள்ளார்.

 26 வயதான இளம் வழக்கறிஞரும், அவரது தந்தையின் மாணவருமான பென்ஜமின் எஃப் நியுடனுடன் எமிலிக்கு நட்பு மலர்கிறது . பரவலான வாசிப்புப் பழக்கமுள்ள, ஆழ்ந்த சிந்தனையாளனாக விளங்கிய நியுடனை எமிலிக்கு பிடித்து போனது. இலக்கியமும், வாசிப்பும் அவர்களை இணைத்தன. எமெர்சனின் முதல் கவிதை தொகுப்பு மற்றும் லிடியா மரியா சைல்டின் ‘லெட்டர்ஸ் ஃப்ரம் நியு யார்க்’, வோர்ட்ஸ்வோர்த்தின் கவிதை தொகுப்பு முதலிய புத்தகங்களை எமிலிக்கு பரிசளித்தார் நியுடன். 

எமிலி தான் எழுதிய கவிதைகளை அவரிடம் காண்பிக்கிறார். நியுடன்தான் எமிலியை கவிஞர் என்று முதன்முதலில் கண்டுக்கொண்டவர், அவ்வாறே விளித்தவர். எமிலிக்கு வார்த்தைகளின் பால்,எழுத்தின் பால், கவிதையின் பால் உள்ள காதலை அங்கீகரித்த முதல் மனிதர் பென் நியுடன். அவர் ஊரில் இல்லாத நாட்களில் கூட இருவரும் கடிதம் மூலம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். உரையாடல் முழுவதுமே இலக்கியம், கவிதை, கவிஞர்கள் மற்றும் எழுத்து சார்ந்தே இருந்ததுள்ளது. இருவருக்கும் இருந்த ஒத்த ரசனை இந்த உரையாடல்களை மேலும் அழகாக்கின. 

1853 ஆம் ஆண்டு எதிர்பாராவிதமாக காசநோயால் பென் நியுடன் இறந்துவிட, அது, எமிலியிடம் ஒரு பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியது .தனக்கு ஒரு தக்க ஆசான் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்தவருக்கு, இவ்விழப்பு பேரிடியாக இருந்தது. நியுடனைப் பற்றி ஒரு கடிதத்தில்,

“…..மென்மையான, என் உள்ளுணர்வுகளை சொல்லாமலே புரிந்துகொள்ளக்கூடிய உன்னதமானவன். என்ன படிக்க வேண்டும், யாரைப் படிக்க வேண்டும், எதைக் கொண்டாடவேண்டும், இயற்கையின் மேன்மை, நுண்மை பற்றி எல்லாம் எனக்குக் கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாது கண்களால் காண இயலாதவற்றின் மேல் நம்பிக்கை வைப்பது எப்படி என்று சொல்லாமல் செய்துகாட்டிய உன்னதன்…..” என்று தனது நண்பனைப் பற்றி மிக உயர்வாக எழுதியிருக்கிறார்.

‘என் வாழ்வு முடியும் முன்பே 
இருமுறை முடிந்துவிட்டது —
அமரத்துவம் மூன்றாவதை நிகழ்த்துமா
என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்’

ஒவ்வொரு இறப்பை அவர் எதிர்கொள்ளும் போதும் தன்னில் ஒரு பகுதியும் இறந்து விடுவதாக தனது டையரியில் குறிப்பிட்டுள்ளார். தாயாரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தனது கல்லூரி படிப்பை இடைநிறுத்தியவர். தன் சகோதர சகோதரிகளுடன் நெருக்கமாக இருந்த எமிலி ஏனோ தன் தாயுடன்அப்படி ஒரு உறவைக் கொண்டிருக்கவில்லை. அவரது தாயும் ஒரு விலகலுடனே இருந்துள்ளார் என்று பல முறை குறுப்பிட்டுள்ளார் என்றாலும் ‘தாயில்லாமல் அனாதையாக இருப்பதை விட இது மேலானது’ என்றும் எழுதிவைத்துள்ளார்.

இவ்வளவு சிக்கல் இருந்த போதும் அவரது தாய் உடல் பலவீனப்பட்டு படுக்கையில் கிடந்த போது அர்பனிப்புடன் அவரைப் பார்த்துக்கொண்டார், சிரத்தையாக பணிவிடைகள் செய்தார். அவரது பண்ணை வீட்டின் பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டார்.

‘அம்மா என்னிடம் பெரிதாக பாசம் காட்டியதில்லை . ஆனால் அவர்களே ஒரு குழந்தை போலான பின்பு என்னுள் பாசம் பீரிட்டு எழுகிறது. அவர்களை நன்றாக கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற உந்துதல் தன்னிச்சையாகத் தோன்றுகிறது . அதை தியாகமாகவோ, கடமையாகவோ எண்ணாமல் உளப்பூர்வ அன்புடன் செய்கிறேன்’ என்று தன் தங்கைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது தாயின் மறைவிற்கு பின் முழுமையான மனச்சிதைவு நோயால் பீடிக்கப்படுகிறார் என்று எமிலியின் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஒரு திரைக்கு பின்னாலிருந்தே எவருடனும் உரையாடியிருக்கிறார். தன்னை முழுமையாகத் தனிமைப் படுத்திக் கொண்டார்.

எமிலி டிக்கின்சன்

தனது 19 ஆவது வயதில் தனது பள்ளித்தோழி சூசனுடன் மிக நெருக்கமாக பழகத் தொடங்குகிறார் எமிலி. சூசனை ‘என் படைப்பாக்கத்திற்கான உயிரூற்று, என் ஆசிரியை, என் முதல் வாசகி, என் பதிப்பாசிரியர் ‘இவ்வுலகத்தின் ஒரே பெண்’ என்றெல்லாம் உருகி உருகி வர்ணிக்கிறார் எமிலி. அவரது டைரியில் பல நூறு பக்கங்களுக்கு தன் தோழிக்கான மகத்தான காதல் கவிதைகளை எழுதியுள்ளார்.

முதல் முறை சூசன் மேல் தான் மையல் கொண்டதை “காதல் முதலில் சூல் கொண்டது 1850 யில் ஒரு வேனில் நண்பகலில் எங்கள் முன்வாசற் கதவின் பக்கத்து படிக்கட்டில்” என்று தன் டைரியில் குறிப்பிட்டுள்ளார்.

சூசன் உடிகா ஃபிமேல் அகடமியில் ( பெண்களுக்காக அந்நாட்களில் உள்ள இரண்டு கல்லூரிகளில் ஒன்று ) பட்டம் பெற்றவர் . தனது அக்கா பிள்ளைப்பேற்றின் போது இறந்ததனால், முழு கறுப்பு உடைகளை அந்நேரம் அணிந்துவந்த ஸூசனின் மேல் , எப்போதும் வெள்ளை உடைகளையே தேர்ந்தெடுக்கும் எமிலிக்கு தீராக் காதல் ஏற்பட்டது.

“கம்பீரமாக , கறுப்பு அங்கியில், பெரிய உதடுகளுடன்,கறுத்த கண்களுடன், பூசினாற் போன்ற நீள்வட்ட முகத்துடன் பேரரசியை போல இருந்தாள்—
வடிவியல் ஒன்றே மறுக்கவியலாத வசியம்”
என்றெல்லாம் தன் காதலியை சிலாகிக்கிறார்.

“எனக்கே எனக்கென்று , ஒரு சூசனை கொண்டிருப்பதே பேரின்பம்.
கடவுளே ,எத்தனை உலகங்களை என்னிடமிருந்து பறித்துக்கொண்டாலும்
அவளிருக்கும் உலகத்தை மட்டும் என்னிடம் விட்டுவிடுவீராக”
என்று மனமுருக பிரார்த்திக்கிறார். 

இருவரும் தினமும் பண்ணைவீட்டின் பக்கத்தில் உள்ள புல்வெளிகளில் நீண்ட நடைப் பயணங்கள் மேற்கொள்கிறார்கள் . பிடித்த புத்தகங்களை பரிமாறிக்கொள்கிறார்கள், ஒருவருக்கு ஒருவர் கவிதைகளை உரக்கப் படித்துக் காண்பிக்கிறார்கள்( எமிலி எழுதியது , மற்றும் அவருக்கு பிடித்த கவிதைகள்) . “இவ்வுலகில் நாம் இருவர் மட்டுமே கவிஞர்கள். ஏனையோர் அனைவரும் உரைநடையாளர்கள்” என்று தங்களது காதலை கொண்டாடி தீர்க்கிறார்கள். எமிலி ஞாயிறுகளில் தேவாலயம் போவதை விடுத்து ஸூசனுக்கு இவ்வாறு ஒரு கடிதத்தில் எழுதுகிறார்

“நம் இதயத்தில் உள்ள தேவாலயத்திற்கு இன்று காலை செல்வோம் வா!
இங்கு ஆலயமணிகள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும்
காதல் என்ற பெயர் கொண்ட பாதிரியார் நமக்காக எந்நேரமும்
பரிந்து பேசுவார்”

இதற்கிடையில் 1851ல், சூசனுக்கு பால்டிமோரில் உள்ள பள்ளியில் கணித ஆசிரியையாக வேலைக் கிடைக்கிறது .எமிலி மனமுடைந்து போகிறார். இந்தப் பிரிவை தம்மால் தாங்க முடியுமா என்று புரியாமல் ஏங்கித்தவிக்கிறார். தன்னை கவிதையாகவும் தன் காதலி ஸூசனை அறிவியலாகவும் உருவகப்படுத்தி பல கவிதைகளை எழுதுகிறார். ஆனால் ஸூசனுக்கோ வேலை என்பது பெருங்கனவாக இருந்தது. தம்மை போலப் பெண்கள் வேலை பார்த்து சுதந்திரமாக இருப்பதே தன் வாழ்நாள் கனவென்று கூறி எமிலியை தற்காலிகமாகப் பிரிகிறார்.

இருவரது உறவும் கடிதம் மூலம் தொடர்கிறது . 1852ல், ஸூசனைப் பிரிந்த எட்டு மாதங்களில் 

“ஸூசி என்னிடம் கனிவாக இருக்க மாட்டாயா? ஆம், நான் மிகவும் மோசமான சிறு பிள்ளையைப் போல தான் நடந்துக் கொள்கிறேன்— நிரந்தரமான கோபத்துடன் இருக்கிறேன். என்னிடம் யாரும் அன்பு செலுத்துவதில்லை— நீயும் போய்விட்டாய். நான் கதவை சாற்றுவதைப் பார்த்தால் நீ பயந்து போவாய்— அப்படி அறைந்து மூடுகிறேன் —- ஆனால் அது கோபமில்லை . எவ்வளவு பெரிய பெரிய கண்ணீர் துளிகள் என் கன்னத்தில் விழுகின்றன தெரியுமா? கண்களையும் கன்னங்களையும் சுட்டுப்பொசுக்கும் நீர் —- சிறிதளவுதான் கோபம் — மீதி வருத்தம்தான்— எல்லாவற்றையும் விட்டு உன் மார்புக்குள் புதைந்துக் கொள்ள ஏங்குகிறேன்—உன் கடிதங்களை உயிர் தரும் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்…

சிறியதொரு சவுக்கை கையில் ஏந்தி இங்கு அமர்ந்திருக்கிறேன் . அதைக் கொண்டு காலத்தை அடித்துக் கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு மாதமாக, நாளாக, நிமிடமாக, நொடியாக.….நீ வரும் வரை இப்படியே அடித்துக் கொண்டிருக்கப் போகிறேன். நீ வந்த பிறகு— நீ இருப்பாய்— பேரின்பம் இருக்கும்— இப்போதும் எப்போதும்”

காம இரவுகள் என்ற அவரது கவிதை சூசனை மனதில் கொண்டு இந்த காலகட்டத்தில் எழுதியதாக இருக்கும் என்று கருதப்படுகிறது . ஆனால், பின்நாட்களில் சிலவற்றை பிரசுரம் செய்யலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்த போது எல்லா கவிதைகளிலும் திருத்தம் செய்கிறார், பெண்பாலாக, காதலியாக இருந்த வார்த்தைகளை காதலன் என்று திருத்தி எழுதுகிறார் . இதனால் முதலில் பெண்பாலாகவும் பிறகு ஆண்பாலாகவும் மாற்றப்பட்ட இரு பாங்காக இவரது கவிதைகள் உள்ளன. மேலும் சிலவற்றை பூடகமாக்குகிறார். அந்தக்காலத்தின் கட்டுப்பாடுகள் நிறைந்த சமூகத்தைக் கருத்தில் கொண்டால் இதைத்தவிர எமிலிக்கு வேறு உபாயம் ஏதுமில்லை என்பது புரியும்.

சிலவற்றில் தன்னையே ஆணாக ,சிறுவனாக, ட்யூகாக, இளவரசனாக பாவித்து எழுதியிருக்கிறார்.தன் பெண்தன்மையை நீக்கி பாலற்று இருக்க வேண்டிய இறைஞ்சுதலாக சில கவிதைகள் எழுதியுள்ளார்,

“என் பருக்கள் கொண்ட மார்பகங்களை வெட்டி நீக்கிவிடு— என்னை தாடியுள்ள
 ஆணைப் போல மாற்றிவிடு”

ஆனால், இது தற்பால் விளைபவர்களை குற்றவாளிகளாக பாவித்த சமூகத்தின் புரிதலற்ற போக்கின் காரணமாக, தன் காதலை ஒளித்தே வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தின் எதிரொலியாக இருக்கலாம். 

“இந்த பரந்து விரிந்த இரவினின்று 
ஒரே ஒரு நட்சத்திரத்தை தேர்ந்தேன்—
சூ(சூசன்) என்றென்றைக்கும் எனக்கானவள்
எனக்கவள் அவசியம் தேவை — கடவுளே! எவ்வாறாகிலும்
என்னிடம் அவளைக் கொடுத்துவிடு”.

என்று காதல் பித்தின் உக்கிரத்தில் எழுதியுள்ளார். எமிலிக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது என்றாலும் மத நம்பிக்கை இல்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது 

“எண்ணுதற்கரிய இன்பமான இக்காதலை 
ஏற்க மறுக்கும் கடவுள்
எத்தகையவர்?”

என்று மத கோட்பாடுகளை கேள்வி கேட்கும், புறம் தள்ளும் முற்போக்கான நம்பிக்கையைக் கொண்டிருந்தார் எமிலி .

சூசன் தன் பணிக்காலம் முடிந்து திரும்பி வந்த பொழுது, ஒரு சிறு விலகலை உணர்கிறார் எமிலி .அது அவரை நிலைகுலைய வைக்கிறது . சூசனது மனது தன் வேலை, படிப்பு இவற்றையே பெரிதாக விரும்புகிறது . தன்னை சுற்றியுள்ள 99 சதவிகித பெண்களுக்கு கிட்டாத ஒன்று தனக்கு வாய்த்திருப்பது பற்றி பெருமிதம் கொள்ளும் சூசன் , தன்னுடைய காதல் உட்பட மற்ற எதுவும் , தனது உயரிய நோக்கத்தில்லிருந்து தன்னை திசைமாற்றி விடக்கூடாது என்பதில் உறுதியுடன் இருந்திருக்கிறார். எமிலியின் கட்டுக்கடங்காத காதல் அவரை பயங்கொள்ளச் செய்தது.

எனினும் எமிலியின் பக்கத்தில் இருக்க வேண்டியே 1856 ஆம் வருடம் எமிலியின் அண்ணன் ஆஸ்டினை கல்யாணம் செய்கிறார் சூசன். இருவரும் குடியிருக்க தங்கள் பண்ணை வீட்டிற்கு பக்கத்திலேயே ‘எவர்க்ரீன்’ என்று பெயரிடப்பட்ட ஒரு வீட்டை எமிலியின் தந்தை மகனுக்காக கட்டித்தருகிறார்.

எமிலியின் அறையிலிருந்து புதர்கள் அடர்ந்த பகுதி ஒன்றைக் கடந்து சூசனின் ‘எவர்க்ரீன்’ வீட்டிற்கு செல்ல முடியும் . அவர்கள் இருவரும் மேலும் கீழும் நடந்து நடந்தே ஒரு பாதையை உருவாக்குகிறார்கள். இவ்வளவு பக்கத்தில் இருந்தும் கூட , நிறைய கடிதங்களை எமிலி சூசனுக்கு எழுதி தபாலில் அனுப்பியுள்ளார்.

எமிலி மாறாத தீவிரத்துடனும் , தீர்க்கத்துடனும் சூசனைக் காதலித்தார். சூசனோ ஒரு சிறிய விலகலோடு , சில வேளைகளில் இணைந்தும், சில வேளைகளில் மனதால் விலகியும் இருந்திருக்கிறார்.

(தனது அதிகாரப்பூர்வமான கணவரும் எமிலியின் சகோதரனுமான ஆஸ்டினுடனும் சூசனுக்கு எந்தவகையிலும் பிடிப்பில்லாத ஒரு உறவு தான் கடைசி வரையில் இருந்துள்ளது) .இப்படி அவர்களின் காதல் ,பல ஏற்ற இறக்கங்களை கடந்தாலும் இறுதிவரை தொடர்கிறது . 

அனுராதா ஆனந்தின் மொழிபெயர்ப்பு

மனச்சிதைவினால் பாதிக்கப்பட்ட போதும் அவரது கவிதைகள் ஒரு மைய நிசப்தத்தை நோக்கி நம்மை கொண்டுசெல்பவை. அலைபாயும் மனதும், தீராச் சலனங்களையும் கலையமைதி நிரம்பிய கவிதைகளாக மாற்றி நம்மிடையே கடத்தியதில் எமிலியின் மேதைமை புலப்படுகிறது. ஆங்கில கவிதை புலத்தில் பல உடைப்புகளை நிகழ்த்தியுள்ளார். பல இடங்களில் பாதி சந்தங்களை (half rhyme, slant rhyme) கையாண்டுள்ளார். சொனட் மற்றும் பாலட் என்ற இசைமை நிறைந்த வகைமைகளின் பால் அவருக்கு தனியான ஈடுபாடிருந்தது தெரிகிறது .

மேலும் இலக்கணத்தையும் தன் கவிதைக்கு தோதாக வளைத்தும் திரித்தும் பிரயோகப்படுத்தியுள்ளார். உடைந்த வாக்கியங்கள்( உடைக்கப்பட்ட வாக்கியங்கள்), முழுமையற்ற பாதியில் நிற்கும் சொற்றொடர்கள் என்று அவரது கவிதையின் பாணி அக்காலத்தவர் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளது . இன்று இவையணைத்தும் நவீன கவிதையில் சிறந்த யுக்திகளாக கருதப்படுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக நிறுத்தற்குறிகளை தனக்கே உரிய பிரத்யேக பாணியில் உபயோகப்படுத்தியருக்கிறார். Em dash என்று கூறப்படும் hyphen( இணைக்கும் கோடுகள்) ஐ விட நீளமான சிறு கோடுகளை பல இடங்களில் பிரயோகித்துள்ளார். இந்த கோடுகள் கவிதை வாசிப்பை வேறு தளங்களுக்கு இட்டுச் செல்கின்றன. இவை நம் வாசிக்கும் வேகத்தை மட்டுப்படுத்தும் வேகத்தடைகளைப் போலச் செயல்படுகின்றன. அவரது கவிதையின் குரலுக்கு ஒரு தயக்கத்தை, ‘இப்படியாகவும் இருக்கலாம இல்லை வேறு விதமாகவும் இருக்கலாம்’ என்பது போன்ற ஒரு தொனியை அளிக்கின்றன. இந்த தயக்கம் பொதிந்த குரலே, பல்வேறு கோணங்களில் பல்வேறு கண்ணாடி அணிந்து பார்க்கும்படியும், ஒரே சமயத்தில் பல்வேறு பொருட்களை வெளிபடுத்தும் உன்னத வரிகளாகவும் கவிதையை மாற்றியமைக்கின்றன.

இலக்கணத்திற்கு அப்பாற்பட்டு பெயர்ச்சொற்களை மனிதர்களாக உருவகப்படுத்தும் இடங்களிலெல்லாம் கேபிடல் எழுத்துகளை பயன்படுத்துகிறார். இவை அவரது கவிதைகளை படிப்பதற்கு மிகவும் ஆழமானதாக்குகின்றன . இவைதான் வார்த்தைகளின் பொருளைத் தாண்டி வேறொன்றையும் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. பல் வேறு விதமான , புரிதல்களுக்கும் பொழிப்புரைகளுக்கும் வழிகோலுகின்றன.

இறப்பு. இழப்பு, மரணம் மட்டுமல்லாது கடவுள் காதல், காத்திருப்பு இவையே இவரது கவிதைகளின் பாடுபொருட்களாக விளங்குகின்றன . இறப்பு என்பது நாம் இல்லாமல் போவது என்பதைத் தாண்டி, அதன் பிறகு நிகழ்வதாக அவர் நம்பிய இறுதித் தனிமையை பற்றிய அச்சமும், அலைகழிப்புமே அவரது மனதை பெரிதாக ஆக்கிரமித்திருந்ததென்று புரிகிறது.

‘சவப்பெட்டி என்பது ஒரு சிறு புலமே
ஆனால் இதுவே தேவலோகத்தின் 
பிரஜை ஒருவனை தன் குறுகிய உட்புறத்தில்
இருத்திக்கொள்கிறது’

என்று தான் இறுதியாக ஒரு குறுகிய பெட்டியில் தனியாக அடைகப்படப் போவதைப் பற்றி குறிப்பிடுகிறார்.

எமிலி மே 15, 1886-ஆம் ஆண்டு தனது 55 வது வயதில் ஆம்ஹர்ஸ்டில் அவரது பண்ணை வீட்டில் மறைந்தார். 1800 கவிதைகளை எழுதியுள்ளார் என்றாலும் அவர் வாழ்ந்த காலத்தில் பத்து கவிதைகள் மட்டுமே பிரசுரமாயின. அதுவும் அவரது வரிகள் சிதைக்கப்பட்டு, மாற்றியெழுதப்பட்டு, அவரது எழுத்தின் தனித்தன்மையை இழந்த ஒரு அவலமான வடிவத்தில், அவரது பெயர் கூட இல்லாமல் பிரசுரிக்கப்பட்டன. 

அவரது இறப்பிற்கு பிறகு தங்கை லவீனியா மீதி கவிதைகளை கண்டெடுக்கிறார். இந்த கையெழுத்துப் பிரதுகள் அழகாக (fascicles ) தனித்தனியான 40 தொகுதிகளாக பிரித்து நூலால் தைக்கப்பட்டு இருந்தன. மேலும் மாஸ்டருக்கு என்று எழுதப்பட்ட மூன்று அனுப்பப்படாத கடிதங்களும் இருந்தன. மாஸ்டர் என்ற அந்த மர்ம மனிதர் யாரென்பது இன்றுவரை புரியாத புதிராக உள்ளது.

 இலக்கியப் பரிச்சயம் பெரிதாக இல்லாததால் லவீனியா அதை முதலில் சூசனிடம் கொடுக்கிறார். அவர் பிரிசுரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வார் என்று நம்புகிறார். ஆனால் சூசன் அதில் ஆர்வம் காட்டாததால் இரண்டு வருடத்திற்கு பின் 1890 அவரே எமிலியின் கவிதைகளை அச்சில் கொண்டுவருகிறார்.

முதன்முதலாக எமிலியின் கவிதைகள் அவருடைய பெயரில் வெளிவருகின்றன. என்றாலும் 1950-ஆம் ஆண்டு வரை அவை எந்த இலக்கிய ஆய்விற்கும் உட்படுத்தப்படாமல் இருந்தன. அவரது தனித்தன்மையான வடிவமும், கடினமான சொற்றொடர்களும் புரியாததால் அங்கீகாரம் கிடைக்காமல் அவரது கவிதைகள் ஒதுக்கப்பட்டன.

எழுத்தாளர் அனுராதா ஆனந்த்

எமிலி தான் வாழ்ந்த காலத்தை மீறிய பண்பட்ட நோக்குடையவர், முற்போக்கானவர், இயல்பான பெண்ணிய சிந்தனையாளர், ஆன்மிகத்தையும், மதம் என்ற நிறவனமயமாக்கப்பட்ட ஒன்றையும் வேறுபடுத்திப் பார்க்கும் ஞானமும் தெளிவும் பெற்றவர், நவீனமானவர், அவர் காலத்து விழுமியங்களின் குறைபாடுகளை அறிந்திருந்தவர், அதை புறம் தள்ளி தன்னிச்சையாக சிந்தித்தவர், தன் அரசியலில் சமரசமற்று இருந்தவர், கம்பீரமாக நியாயத்தின் பக்கம் நின்றவர், தான் சரி என்று உணர்த்ததை பிடிவாதமாக கடைபிடித்தவர் என்பதை எக்காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் தன் எழுத்துக்களால் தன் வாழ்வால் நிறுவியிருக்கிறார்.

நான் இறுதி வரை காதலித்தேன்
நான் போதுமானவரை வாழவில்லை
நான் இனிமேலும் காதலிப்பேன்
காதலே உண்மையான வாழ்வென்று
உறுதியாக நம்புகிறேன்,
உங்களுக்கு இதில் ஏதும் 
சந்தேகம் இருந்தால்
அதை நிரூபிப்பதற்கு
வெறும் கைகளைத் தவிர 
என்னிடம் வேறேதும் இல்லை

-எமிலி டிக்கின்சன்

*

அனுராதா ஆனந்த்: தமிழ்விக்கி

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *