“முடிவிலிக் கணங்கள்” – ஐசக் டினேசன்

-பாலாஜி பிருத்விராஜ்

(ஐசக் டினேசனின் “Tales from ‘Albondocani” நாவலை முன்வைத்து)

The literature of individuals, is a noble art, a great, earnest and ambitious human product. But it is a human product. The divine art is ‘the story’. In the beginning was ‘the story’.

-Isak Dinesen in “Tales from ‘Albondocani’

ஐசக் டினேசன்

ஐசக் டினேசன் (Isak Dinesen) என்கிற பெயரை முதன்முறையாக அவரின் ‘வெற்றுப் பக்கம்’ என்கிற சிறுகதை மூலம்தான் தெரிந்து கொண்டேன். எழுத்தாளர் சுசித்ரா அதை மொழிபெயர்த்திருந்தார். அக்கதையில் இருந்த கவித்துவம் முதன்மையாக என்னை ஈர்த்தது. உதாரணமாக வெற்றுப்பக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய வரி ஒன்றில் ‘உலகின் அபூர்வமான புத்தகத்தில் உள்ள கச்சிதமான வரிகளை விட ஆழமான ஒன்றை ஒரு வாசகர் எங்கு படித்து விட முடியும்? அதன் வெற்றுப் பக்கத்தில்’ எனக் கூறுகிறார். அவர் இங்கு உணர்த்துவது வார்த்தைகள் தாண்டிய ஒன்றை. வார்த்தைகள் முடிவுற்றதும் தொடங்கும் மௌனத்தை. அம்மௌனம் கொண்டிருக்கும் ஆழத்தை. அவர் படைப்புலகம் நமக்குத் தரும் அடிப்படையான ஒன்றை சுட்டும் வரி இது.

அவரது கவித்துவத்தின் இயங்குதளம் மீபொருண்மை சார்ந்தது. நாம் காணும் மனித உறவுகளின் திட்டவட்டமான காரணகாரிய வலைப்பின்னலுக்கு அடியிலிருக்கும்  முடிவின்மையை நோக்கிச் செல்வது. அது வெற்றுப் பக்கத்தின் முடிவிலி. மௌனத்தின் முடிவிலி. அந்த முடிவிலி உருவாக்கும் கவித்துவம் அவருடையது.

ஒரு வயதானப் பெண் சொல்வதாகத் தொடங்கும் ‘வெற்றுப் பக்கம்’ (The Blank Page) என்கிற கதை பெண்கள் மீதான ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் அதன் மீறலையும் உணர்த்திச் செல்வது. போர்ச்சுகல் நாட்டின் ஒரு மலையுச்சியில் இருக்கும் கன்னியர்மடம்; அதன் அடிவார நிலத்தில் சணல் அறுவடை செய்யப்பட்டு லினன் துணி நெய்யப்படுகிறது. தூய்மையான வெண்ணிறம் கொண்ட அத்துணிகள் இன்னும் தூய்மையான கன்னிகளால் தயாரிக்கப்படுவதால் அவற்றை ஒரு புனிதப்பொருளாகக் கருதி அரசகுடும்பத்தினர் வாங்கிச்செல்கின்றனர். குறிப்பாக மணப்பெண்ணின் முதல்நாள் படுக்கை விரிப்புக்கு.

மறுநாள் அப்பெண்ணின் கன்னிமைக்கான சான்றாக அத்துணி அவர்களின் உப்பரிகையில் விரிக்கப்பட்டு அவளது களங்கமின்மை நிரூபிக்கப்படும். மேலும் அத்துணியின் பிரதான அடையாளப் பகுதி மட்டும் கத்தரித்து எடுத்து சட்டகமிடப்பட்டு அந்த கன்னியர் மடத்தில் மாட்டப்படும்.  அவ்வாறான ஒவ்வொரு சட்டகத்திற்குக் கீழும் அரசகுடி மணப்பெண்ணின் பெயர் எழுதப்படும். அவளின் கைரேகை போல ஒரு அடையாளமாக அச்சட்டகம் அங்கு இருக்கும்.

அவ்வப்போது மலையேறி வரும் வயதான அரசகுடிப்பெண்கள் ஒவ்வொரு சட்டகமாகப் பார்த்து வந்து தவறாமல் ஒன்றின் கீழ் மட்டும் நீண்ட நேரம் நிற்பார்கள். அங்கு மற்றவை போலின்றி அவர்களால் எதுவும் பார்க்கமுடியாத தூய வெள்ளை நிறத்தில் ஒரு சட்டகம் மாட்டப்பட்டிருக்கும். எதையும் படிக்க முடியாத வெற்றுப் பக்கம் போல. அல்லது அனைத்து வார்த்தைகளும் அர்த்தம் இழந்து உதிர்ந்த வெற்றுப் பக்கம். அப்போது தன் முகத்திரையைக் கீழே இழுத்துவிட்டு மௌனமாகச் அப்பெண்கள் நகர்ந்து செல்வார்கள்.

இக்கதையில் எங்கும் இரத்தமோ அல்லது சிவப்பு நிறம் என்கிற வார்த்தையோ குறிப்பிடப்படவில்லை. ஆனால் படிக்கும் நம் அனைவருக்கும் அது எவ்வகையிலோ வந்து சேர்ந்தும் விடுகிறது. வாசகனின் நுண்ணுணர்வை நம்பி செயல்படுவது அவரது படைப்புலகம். இக்கதைமட்டுமல்ல. அவருடைய பல கதைகள் அந்த எல்லையில் தான் நிகழ்கிறன. எவ்வளவு குறைவாகக் கூறமுடியுமோ அவ்வளவு தான் கூறுகிறார். சிலசமயம் விடுபடல் எனத் தோன்றும் அளவுக்குக் கூட அவர் கதைகள் முடிகின்றன. ஆனால் அந்த வெளியேற்றப் புள்ளிதான் அவரின் கதைகளை வசீகரமாக்குகின்றன.

இந்தக் கதையிலேயே அதற்கு சான்றாக ஒரு வரி வருகிறது. கதைசொல்லியான தன் தொழிலைப் பற்றி மூதாட்டி சொல்கையில் “கதைசொல்லி தன் கதைக்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில் முடிவில் ஒரு மௌனம் எழுந்து நம்மிடம் பேசத் தொடங்கும். அப்படி நேர்மையாக இல்லாத பட்சத்தில் அம்மௌனம் அர்த்தமற்ற வெறுமையை மட்டுமே கொண்டிருக்கும்.” இக்கதையில் அப்படியான மௌனம் நம்மிடம் பேசத் தொடங்குவது அந்த சரியான வெளியேற்றப் புள்ளியினால் தான். அங்கிருந்து முன்னேறி கதையை நாம் முழுமையாக்கிக் கொள்கிறோம். அந்தப் பொறுப்பு நம்மிடம் விடப்படுகிறது.

இவ்வகையான கதைப்பாணி வெறும் யுத்தியாக மட்டும் அவரால் முன்வைக்கப்படுவதில்லை. அதற்கான தேவை அக்கதையில் இயல்பாக உள்ளது. எங்கு வார்த்தை முட்டி நிற்கிறதோ அங்குதான் கதையும் முடிகிறது. கதை முடிவது வார்த்தைகளின் எல்லையால் அல்லது மொழிப் பயன்பாட்டிற்கு வெளியில் இருப்பதனால். ஆனால் அப்புள்ளி வரை சென்று சேர அனைத்து வகையிலும் மொழி கையாளப்படுகிறது.

“வெற்றுப் பக்கம்” (The Blank Page) என்கிற இந்தக் கதை உண்மையில் அவரது முற்றுப் பெறாத நாவலின் ஒரு அத்தியாயம். “அல்பொண்டோகனிக் கதைகள்” (Tales from ‘Albondocani’) என்கிற தலைப்பில் ஒரு நாவல் எழுத அவருக்குத் திட்டமிருந்திருக்கிறது. ஆனால் அதை முடிக்காமலேயே ஏழு அத்தியாயங்களை மட்டும் வெளியிட்டுவிட்டார்.

இந்த முடிவுறாத நாவல் அவரது “இறுதிக் கதைகள்”(Last Tales) என்னும் தொகுப்பில் உள்ளது. இதில் மேலும்  “புதிய குளிர்காலக் கதைகள்”(New Winter Tales) மற்றும் “புதிய கோதிக் கதைகள்”(New Gothic Tales) என்னும் தலைப்புகளின் கீழ் வேறு சில கதைகளும் உள்ளன.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவரான ஐசக் டினேசன் பரவலாக அறியப்படுவது அவரது கோதிக் கதைகள் வழியாகத் தான். அவரது முதல் நூலான “ஏழு கோதிக் கதைகள்”(Seven Gothic Tales) வெளியானவுடன் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது. கோதிக் கதைகளில் எப்போதுமே அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. அது ஒருவகையில் வாழ்வின் மர்மத்தை நோக்கிய ஈர்ப்பு எனலாம். மேலும் அபுனைவு நூலான “Letters from Africa” அவரது இன்னொரு பிரபலமான நூல். குறுகிய காலம் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த அவரின் அனுபவங்களை ஒட்டி எழுதப்பட்டது அந்நூல். அவரது “Babette’s Feast” என்கிற கதை திரைப்படமாக்கப்பட்டு ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.

இந்த நாவலின் ஏழு அத்தியாயங்களையும் ஏழு தனிக்கதைகளாக வாசிக்க முடியும். ஏழு கதைகளும் ஏழு வகையில் முடிவின்மையை எதிர்கொள்கின்றன. அவரது படைப்புலகின் நோக்கமே அந்த முடிவின்மை நோக்கிச் செல்வதுதான் எனக் கூறமுடியும். அதை வெவ்வேறு வாழ்க்கைகள் வழியாக வெவ்வேறு கதைமாந்தர்கள் மூலம் சென்று தொடுகிறார்.

உதாரணமாக முதல் கதையில், ஒரு மதகுருவிடம் பாவமன்னிப்பு கேட்கவரும் பெண் “நீங்கள் யார்?” எனக் கேட்கிறார். அவர் திடமான குரலில் “முதல்முறை இக்கேள்வியை எதிர்கொள்கிறேன். ‘நான் யார்!!’ என்னிடம் முறையிட வரும் பெரும்பாலானவர்களின் கண்ணீர் மற்றும் புலம்பலுக்கு அடியில் இருப்பது தான் யார் என்கிற கேள்வி தான். பாவம் செய்தவனா அல்லது பாவத்திற்காக வருந்துபவனா இரண்டில் தான் யார் என எண்ணி துடிப்பவர்களையே நான் தினமும் காண்கிறேன். இப்போது இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படுகிறது. ‘நான் யார்?’ அதற்கான பதிலாக உனக்கு ஒரு கதையைக் கூற முடியும்” என தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.

இந்தக் கதை இரட்டையர்களைப் பற்றியது. அல்லது இரட்டைத் தன்மை பற்றியது எனலாம். பிறப்பிலேயே அவர்களின் எதிர்காலம் பெற்றோரால் முடிவு செய்யப்படுகிறது. மூத்தவன் அதனாசியாவை இறைப்பணி நோக்கி செலுத்தவேண்டும் என தந்தை நினைக்க இளையவன் டயோனிசியாவை கலைரசனையுடன் வளர்க்க வேண்டும் என தாய் நினைக்கிறாள். இருவரும் ஒரே தோற்றத்துடன் இருப்பதனால் அவர்களை பிரித்தறிய இளையவனின் கழுத்தில் நீலரிப்பன் அடையாளமாக அணிவிக்கப்படுகிறது. ஆனால் மிகச் சிறிய வயதிலேயே தீ விபத்தொன்றில் ஒருவன் பலியாக ஒருவன் மட்டுமே மிஞ்சுகிறான். அவன் கழுத்தில் நீலரிப்பன் இல்லாததால் அவன் அதனாசியாதான் எனச் சொல்லி வளர்க்கிறார் தந்தை. ஆனால் தாய்க்கு அவன் கழுத்தில் இருக்கும் துணி கருகிய தீத்தழும்பின் மேல்தான் கவனம் இருக்கிறது. ஆனால் அவள் அதை வெளிக்காட்டாமல் இருக்கிறாள்.

அப்போதிருந்து அதனாசியா இரு குணங்கலங்கள் கொண்டவனாகிறான். ஆதுரத்துடன் நடக்கும் பாதிரியாரின் மனநிலையும், நுட்பமான ரசனை கொண்ட கலைஞனுக்கான குணமும் என இரு இயல்புகளும் மாறிமாறி அவனிடம் வருகின்றன. தன் கதையை முடிக்கும் மதகுரு எதிரே இருந்த அந்த இளம்பெண்ணிடம் “என்னிடம் பேச வருபவர்கள் சமயத்தில் திகைத்துப் போகின்றனர். அவர்கள் ஒருக்கணம் பாதிரியாரிடமும் மறுகணம் கலைஞனிடமும் பேசியிருக்கலாம்” என்கிறார்.

அமைதியாக அமர்ந்திருந்த அப்பெண் வருந்துவதைப் பார்த்து ஒரு நீதிக்கதையை சொல்கிறார். ஐசக் டினேசனின் முக்கியமான சிறப்புகளில் ஒன்று அவர் நீதிக்கதைகளை கையாளும் விதம். நீதிக்கதைகள் பொதுவாக ஒரு விழுமியத்தை நிறுவுவதற்காக சொல்லப்படுகின்றன. ஆனால் டினேசன் அதை சமகாலக் கதையுடன் பொருத்திக் காட்டுவதின் வழியாக அதன் பரப்பை பெரிதாக்குகிறார். அதன் மூலம் புதிய பார்வையில் அதை நோக்கும்படி செய்கிறார்.

இறைப்பணியாளராக விரும்பவரிடம் கடவுள் முன்வைக்கும் கேள்விகளாக அந்த நீதிக்கதை அமைகிறது. வாயிலில் காத்திருக்கும் அவ்விறைப்பணியாளரை நோக்கி இறைவன் கேட்கிறார் “நான் இந்த உலகை பழுதின்றி படைத்ததாக நினைக்கிறாயா?” அவன் “இல்லை” என்கிறான். “நான் இவ்வுலகை அனைவரும் அமைதியாக வாழும்படி படைத்திருக்கிறேனா?” மீண்டும் “இல்லை” என்கிறான். இறுதியாக “நான் இவ்வுலகின் அனைத்து உயிர்களுக்கும் அர்த்தம் கொண்டதாக படைத்திருக்கிறேனா? ஒரு உயிரைக் கூட விடாமல்!” எனக் கேட்கிறார். அவன் “ஆம்” என்கிறார். புன்னகையுடன் இறைவன் “அப்படியென்றால் என் முழக்கக்கருவியாக சான்றுரைத்துக் கொள்” என்கிறார். மதகுரு அப்பெண்ணை நோக்கி “அவ்வாறே நானும் இறைப்பணியாளன் ஆனேன்” என்கிறார்.

நான் முதலில் குறிப்பிட்ட மீபொருண்மைத் தளம் இங்கு அழுத்தம் பெறுகிறது. மனிதன் துயருறலாம், அமைதியிழக்கலாம், ஆனால் அவன் வாழ்வு அர்த்தம் கொண்டது என்கிற இறையியல் நோக்கு இக்கதையில் உள்ளது. இறைவனின் கதையில் மாந்தர்கள் அழியலாம் ஆனால் கதையோட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஏனெனில் ஆதியில் கதை மட்டுமேயிருந்தது வார்த்தைகளாக. அதில் மனிதர்கள் ஆறாம் நாளே இடம்பெறுகின்றனர். ஆகவே மனிதர்கள் எதிர்கொள்ள நேரும் இடையூறுகளெல்லாம் கதைக்காகவே நிகழ்கின்றன என்கிற கோணத்தை இங்கு நாம் கவனிக்க முடியும். அதன் மூலம் இங்கு நிகழும் பருவாழ்வின் பின்னால் அதன் சாரமாக இருப்பது எது என்கிற கேள்வியை எதிர்கொள்கிறது. அதைத் தான் மீபொருண்மைத் தளம் என்கிறேன்.

மரபான கதைசொல்லிகள் இங்கு கதையை முடிந்திருப்பார்கள். ஆனால் டினேசன் மேலும் முன் செல்கிறார். அமைதியாக கதையைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பெண் எழுந்து வெளியே செல்லும் முன்  “நீங்கள் சான்றுரைத்தது கடவுளிடமா அல்லது சாத்தானிடமா என உறுதியாக உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்கிறாள். பாதிரியார் திடமாக “அந்த நிச்சயமின்மை மேல் தான் எல்லா இறைப்பணியாளர்களும், இந்த உலகின் கதையும் நிற்கின்றன.” எனக் கூறுவதுடன் கதை நிறைவடைகிறது.

கதை தன் முடிவிலித் தருணத்தை இங்கு அடைகிறது. அங்கிருந்து மேற்சென்று விரிவாக்கிக் கொள்ளும் அனைத்துப் பொறுப்பும் வாசகனை நோக்கி விடப்படுகிறது. இரு அர்த்த விரிவாக்கங்களை இங்கு கூற முடியும்.

என் அவதானிப்பை இவ்வாறு கூறுவேன். தனி நபரின்றி ஆட்டத்தை முன்னிறுத்தி நிகழும் ஒன்றில் கடவுளுக்கும் சாத்தானுக்குமான வேறுபாடே அழிந்து விடுகிறது. நன்மை தீமையென பிரிவினை நீங்கி அங்கு விளையாட்டு மட்டுமே உள்ளது. இது ஒரு பார்வைக் கோணம்.  அதேபோல இன்னொரு பார்வைக்கும் இடமுள்ளது. உண்மையில் இங்கு உள்ளது அந்த நிச்சமின்மைதான். பகடைப் புரளலில் விழும் எண் போல சில அர்த்தமுள்ளதாகவும் சில வெறுமை கொண்டும் உள்ளன. அங்கு நிச்சயமின்மை அந்த இரண்டுக்கு மேலும் உயர்ந்து நிற்பதைக் காணமுடியும்.

இவ்வாறு பல கோணங்களைத் திறந்து காட்டும் சாத்தியம் கொண்டதாக இம்முடிவு உள்ளது. அதற்கான அத்தனை வலுசேர்ப்புகளையும் தன் மொழியால் கற்பனையால் கொண்டு சேர்க்கிறார் டினேசன். அவரது படைப்பாற்றல் என்பது அந்த எல்லை வரை கதையைக் கொண்டு செல்வது மட்டுமே. அங்கு நிகழும் பறந்தெழல் வாசகர் செய்து கொள்ள வேண்டிருக்கிறது. ஆனால் அதன் பின்னால் உள்ள ஆசிரியர் கொண்டுள்ள வேட்கையும் துடிப்பும் சாதாரணமானதல்ல. தன் கேள்விக்கு மரபின் அத்தனை சாத்தியங்களையும் எடுத்துப் பரிசீலிக்கிறார். அத்துடன் கூடவே ஒரு விரிசலையும் வைத்து வாசகனிடம் கொடுத்துவிட்டு நகர்ந்து விடுகிறார்.

ஐசக் டினேசன்

இதே போல மனிதர்களின் ஆளுமைகளை நோக்கி செல்லும் இன்னும் இரண்டு கதைகள் உள்ளன. அவை இருவிதமான பெண் கதாப்பாத்திரங்களை நோக்கி கவனத்தை குவிப்பவை. அதில் ஒன்றை மட்டும் பார்க்கலாம்.

“இரண்டு வயதான கனவான்கள் கூறும் கதைகள்” (Tales of Two Old Gentlemen) என்கிற கதை, பெண்களின் நடன அறை நோக்கி நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் இரு வயதானவர்களின் சம்பாஷனையாக தொடங்குகிறது. அதில் ஒருவர் தன் தாத்தா தனக்குக் கூறிய தத்துவ நிலைப்பாட்டை விளக்குகிறார். “வாழ்க்கையின் இடர்கள் அனைத்தும் நாம் இறைவனை ஆணாக உருவகிப்பதில் இருக்கிறது. அவரை மேய்ப்பன் என்கிறோம். அவர் நமக்கு தன் கண்ணீராலும் ரத்தத்தாலும் அருளுகிறார். அதற்காக நாம் அவரை வேண்டுறோம் பிரார்த்திக்கிறோம். ஆனால் அந்த மேய்ப்பர் பெண்ணாக இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். இப்போது மொத்த உறவும் மாறிவிடுகிறது. கண்ணீரும் ரத்தமும் பெண்ணுக்குப் பொருள்படும் விதம் முற்றிலும் வேறானது. மழையாக உருண்டு பொழிந்து உலகைப் புரக்கக் கொடுக்கப்படுபவதைப் போல அவளால் கண்ணிரைக் கொடுக்க முடியும். ரத்தமோ பெரும் கௌரவம் மற்றும் உன்னதக் கணங்களால் ஆனவை. ரத்தத்தைக் கொடுத்து கன்னிமையைப் பெறுவது போல. அதே உதிரத்தைக் கொடுத்து தாய்மையை பெறுவதைப் போன்றவை. அங்கு நமது வேண்டுதலுக்கும் இறைஞ்சுதலுக்கும் இடமில்லை.” என்கிறார்.

மேலும் “ஆண் இறைவனைப் புரிந்து கொளவதற்கும் பெண் புரிந்து கொள்வதற்குமான வித்தியாசத்தையும் என் தாத்தா கூறியிருக்கிறார். ஆணுக்கு அது ஆசிரியர் – மாணவர் உறவைப் போன்றது அல்லது ராணுவ அதிகாரி – படையாள் போல. அங்கு அவன் தன் தேடுதலையும் விசாரணையையும் முன் நிறுத்துகிறான். ஆனால் பெண்ணுக்கு அது காதலுறவை போல. அந்த உறவின் வீரியம் மூலமாகவே இறைத்தன்மையை அவள் புரிந்துகொள்கிறாள். அங்கு தேடலும் விசாரணையும் அபத்தமானவை. அதனாலேயே பெண்களில் நாத்திகவாதிகள் இல்லை எனக் கூறுவேன். அப்படி ஒருபெண் சொல்வாலேயானல், ஒன்று பொய் சொல்கிறாள் இல்லையென்றாலும் அந்த நிலைப்பாட்டினால் ஆண்களைப் போலல்லாமல் அவள் தன் வசீகரத்தை இழக்காமல் நேசிக்கப்படுபவளாகவே இருப்பாள்.” என்கிறார்.

மேலும் ஆணும் பெண்ணும் இப்புவியென்னும் புதிரை புரிந்துகொள்ள முனையும் முறைகளாக இரண்டு குறுங்கதைகள் சொல்லப்படுகின்றன. ஒன்று நீதிக்கதை. மற்றொன்று anectode வகைக் கதை. அதாவது தனக்கோ தனக்கு தெரிந்தவர்களின் வாழ்விலோ நடந்த நிஜத்தருணத்தை ஒட்டி சொல்லப்படும் கதை.

முதலாவது அலெக்ஸாண்டர் மன்னன் சிபிலா என்னும் குறிசொல்பவளிடம் தன் வாழ்வின் எதிகாலத்தைக் கேட்க வருகிறான். அதற்காக தன்னிடம் உள்ள அனைத்து உயர்ந்த மணிகளையும் தட்டில் வைத்து பரிசாகத் தருகிறான். அவள் அதை ஏற்றுக் கொண்டு அனைத்து சடங்குகளையும் செய்கிறாள். ‘நான் என்னுடைய ரகசியத்தின் முக்கிய கட்டத்திற்கு வந்துவிட்டேன். அதை உரைப்பதற்கு முன் என்னிடம் தராமல் மறைத்துவைத்த அந்த பெரிய ரூபி மணியைத் தந்தால் சொல்கிறேன்.’ என்கிறாள். அவனால் மறுக்க முடியவில்லை. தன் மனைவிக்காக தட்டில் வைக்காமல் தனியாக வைத்திருந்த அந்த ரூபியையும் கொடுத்து விடுகிறான். அவளுடைய சடங்குகள் தொடர்கின்றன. மன்னனைப் பார்த்து ‘இப்போது இந்தச் சடங்கில் எழும் புகையினைப் பார்க்கும் போது நீங்கள் ஒட்டகத்தின் இடது கண்ணை நினைக்கக் கூடாது. அது உங்களுக்கு பெரும் ஆபத்தைக் கொண்டு வரும். வலது கண்ணின் நினைப்போ உங்களை நரகத்துக்கு கொண்டு செல்லும்’ என்கிறாள். “இதைக் கூறும் போது அவளின் ஆழத்தில் ஒளிப்பொட்டுப் போல ஒரு புன்னகை வந்து சென்றது.” என்று கூறிய முதியவர் “அப்படியாக ஆண்கள் இவ்வுலகின் புதிரை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது” எனக் கூறி சிரிக்கிறார்.

ஆனால் பெண்களை பற்றிய கதைவேறுவிதமானது. ஒரு உன்னத மனிதன் தன் விருப்பத்திற்குரியவளை மணமுடித்து வீட்டிற்கு அழைத்து வருகையில் சொல்கிறான். ‘நான் என் சொத்துக்கள் அனைத்தையும் உனக்குத் தந்துவிடப்போகிறேன். ஒன்றை மட்டும் எனக்காக வைத்துக் கொள்வேன்.’ எனக் கூறி தன் வேலையாட்களை அழைத்து வீட்டிலுள்ள அனைத்து நகைகளையும், பொருட்களையும் அவளுக்குத் தந்து விடுமாறு சொல்கிறான். இறுதியில் தனக்கு வேண்டிய ஒன்றை மட்டும் காட்டுகிறேன் வா என அழைத்து மாடிக்கு செல்கிறான். அங்கிருந்த கண்ணாடி முன் நிறுத்தி அவளது அனைத்து அணிகலன்களையும் கழற்றிவிட்டு ‘இதை மட்டும் நான் வைத்துக்கொள்கிறேன்.’ எனக் கண்ணாடியில் தெரியும் அவள் உருவத்தைப் பார்த்து சொல்கிறான். “இப்படியான சூழலில் ஓர் ஆண் இருந்தால் உடனடியாக அவனுக்கு கோபம் எழும். அவன் அதை அவமதிப்பாகவே எடுத்துக்கொள்வான். ஏனெனில் அவர்களது குரு-சீட அல்லது  உயரதிகார்-படையாள்  உறவு மனநிலை அப்படித்தான் யோசிக்க வைக்கும். அறிவாலும் விசாரணையாலும் முன்னிறுத்தப்படும் உறவுநிலை. ஆனால் பெண்கள் இறைத்தன்மையை வேறு வகையில் எதிர்கொள்கிறார்கள். அவள் தன் கணவனைப் பார்த்து அவனைத் தழுவி ‘ஒரு இருபது நிமிடம் நான் கலங்கிவிட்டேன். இப்போது நீங்கள் கூறிய இந்தக் கடைசி வரிகளை மட்டும் நான் கேட்காமலிருந்தால் நான் முற்றிலும் கைவிடப்பட்டவலாயிருப்பேன். கடவுளே!’ என்கிறாள்.” எனக் கிழவர் கூறுகிறார்.

ஆணும் பெண்ணும் இரு முனையில் இருந்து இந்த உலகின் புதிர்த்தன்மையும் அதன் விளக்கமுடியா சிக்கலையும் கூடவே அதன் இறைத்தன்மையையும் அணுகுகின்றனர். ஆணுக்கு அது ஒட்டகத்தின் கண்கள் பற்றிய நினைவு போல அவிழ்க்கமுடியாத புதிர். பெண்ணுக்கோ அது உறவின் தீவிரம். அங்கு தன்னை விட அந்த தீவிரத்தையே முன்வைத்து அறிகிறாள். கண்ணாடியில் அவள் தன்னைப் பார்க்கவில்லை. தன் கணவன் கொண்ட காதல் தீவிரத்தையேப் பார்க்கிறான்.

ஆனால் வழக்கம் போல கதை அங்கு நிற்கவில்லை. மேலுமொரு அடி எடுத்து வைக்கிறார் டினேசன். கலங்கலான பகுதி நோக்கி; அதன் முடிவிலி நோக்கி செல்கிறார். அதுவே மூன்றாவது குறுங்கதை ஆகிறது.

அதுவரை கதையைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றவர் “நான் ஒரு கதை சொல்கிறேன். உன் தாத்தா தரப்பை அது வலு சேர்க்கும். ஒரு வேளை சேர்க்காமலும் போகலாம்” எனக் கூறத் தொடங்குகிறார்.

ஒரு கனவான் தன் திருமணத்திகாக ஒர் ஏழைக் குடும்பத்தின் கடைசிப் பெண்ணை மணந்துகொள்கிறான். அவள் அழகில் சிறந்தவள் இல்லையென்றாலும் அவளிடம் இருந்த படிப்பும் அது கொடுத்த நிமிர்வும் அவரைக் கவர்கிறது. மணமானபின் அவர் நினைத்தபடியே அவள் விரிந்து பிரம்மாண்டமாகிறாள். ஒரு ரோஜாச்செடி பூவை ஏந்தியிருப்பது போல நகைகளை சூடி இயல்பான உயர்குடிப்பெண்ணாக அச்சமூகத்தில் உலவுகிறாள். அவளது ஒளிவட்ட ஈர்ப்பில் அவரும் தன் சமூகவாழ்வில் உயர்கிறார். ஆனால் சில நாட்கள் கழித்து  அவளிடம் ஒரு கணத்த அமைதி குடிகொள்கிறது. சமயத்தில் அவர் சொல்லும் எதையும் அவள் சரியாக கேட்காதவாளாக ஆகிறாளோ என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றுகிறது. ஒரு கட்டத்தில் பதட்டமாகி அவளிடம் சீறுகிறார். “நீ எங்கிருந்து வந்தாய் என்பதை மறக்காதே. உன்னை மீண்டும் அதே நிலைக்கு அனுப்ப உடனே என்னால் முடியும்” என்கிறார். ஆனால் அவள் அதே அமைதியுடன் அவர் அருகே வந்து “என் கணவரே! கூடிய சீக்கிரம் உங்களால் உணர முடியும், ஒரு உயர்நோக்கம் கொண்ட பெண்ணுக்கு நடன அறையில் நுழைவது எவ்வளவு கடினமாக இருக்கும் என்று. ஏனெனில் அங்கு அவளைச் சூழ்ந்து அத்தனை கண்கள் உள்ளன. சோரம்போன பெண்களது கணவர்களின் கண்கள்.” என்கிறாள். அதைக்கேட்ட கனவான் பலநேரம் உறைந்து அமர்ந்திருக்கிறான். இவ்வுலகின் சிக்கல்தன்மையின் விந்தையை உணர்ந்தவாறு.

முந்தைய இரு குறுங்கதைகள் தனித்தனியாக அணுகியதை இது ஒன்றாக ஒருக்கணத்தில் தொடுகிறது. ஒரே கதைத்தருணம். அதற்கு ஆணும் பெண்ணும் எதிர்வினையாற்றும் முறை. ஆண் திகைக்கிறான். பெண் தன்னை உறையவைத்துக் கொள்கிறாள்.

அனைத்துக் கண்களும் அவளை எவ்வாறு பார்த்திருக்கக் கூடும் என்பதில் இந்த கதையின் ஆழம் உள்ளது. அவளும் மறைமுகமாக சோரம் போனவள் என்றோ அல்லது அவளை நிலையிறங்கக் காத்திருக்கும் கண்கள் என்றோ அல்லது அதற்கு முயலும் கண்கள் என்றோ அவை இருந்திருக்கக்கூடும். பல புதைகுழிகள் கொண்ட நிலம் போல. அங்கு தன் கண்ணியம் குறையாமல் இருக்க தன்னை முழுதாகத் திரட்டி இறுக்கிக் கொள்ளும் பெண். அதை உணரும் போது வாசகரான நமக்கு ஒரு நிலைகுலைவு ஏற்படுகிறது.

இந்த நிலைகுலைவு அவரின் அனைத்து கதைகளிலும் நாம் காண முடியும். அது மனிதரின் முடிவிலா ஆழத்தைக் காண்கையில் ஏற்படும் நிலைகுலைவு. இந்த நாவலில் மீதமுள்ள நான்கு கதைகளும் இதே உணர்வை ஏற்படுத்துபவை. ஒரு ருசிக்காக மூன்று கதைகளை மட்டும் இங்கு அறிமுகப்படுத்தியுள்ளேன். விருப்பமுள்ளவர்கள் மேல்சென்று மற்ற கதைகளையும் வாசிக்கலாம்.

ஐசக் டினேசன் அடிப்படையில் கதைசொல்லி. கதாப்பாத்திரங்களை வாழ்வின் எதிர்பாராத் தருணங்கள் நோக்கி மோதவிட்டு கதையோட்டத்தை முன்னெடுத்துச் செல்பவர். ஆனால் அம்மோதலின் மூலம் வலுவான விழுமியத்தையோ மையத்தோ நிறுபவர் அல்ல. அவ்வகையில் அவர் மரபான கதைசொல்லியில் இருந்து வேறுபட்டவர்.

மேலும் அவரிடம் ஒரு தொகுப்புத்தன்மை உண்டு. பண்பாட்டுச் சூழலின் அத்தனைக் கதைச்சரடுகளையும் தன் கதைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார். அது விவிலியம் சார்ந்த நீதிக்கதையாக இருக்கலாம். அல்லது anectode வகைக் கதையாக இருக்கலாம். இத்தொகுப்பிலேயெ அலிபாபா மற்றும் கலிவரின் பயணங்கள் முதலான சாகசக்கதைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு வகையில் அதன் பயன்பாடு முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது. ஒன்று அக்குறுங்கதைக்கு தன்னளவிலேயே ஒரு மறுவிளக்கம் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக கல்லிவரின் பயணங்கள் பற்றி ஒரு கதாப்பாத்திரம் குறிப்பிடுகையில் ‘உருவங்களை மாற்றியமைக்கும் வகையில் எழுத்தாளர் ஒரு சாத்தானியக் குறும்போடு செயல்படுகிறார். அதில் வரும் ராணுவ வீரர்களை குள்ளர்களாக்கி அதன் மூலம் மனிதர்களின் வீரத்தையும் தியாகத்தையும் அபத்தமாக்கிக் காட்டுகிறார்.’ எனக் கூறுகிறார். இவ்வாறு ஏற்கனவே சூழலில் புழங்கும் கதைக்கு இன்னொரு கோணத்தில் விளக்கம் அளிக்கிறார்.

இரண்டாவது, இவ்வகையான பல்வேறு கதைவகைமைகளை தன்னுடைய மையக்கதையுடன் தொடர்பு படுத்துவதன் மூலம் அதை விரிவாக்குகிறார். அதற்கான உதாரணமாக அலெக்ஸாண்டர் பற்றிய நீதிக்கதையை தொடக்கத்தில் பார்த்தோம். மையக்கதையின் பேசுபொருளான புதிர்த்தன்மையை அந்த நீதிக்கதையுடன் தொடர்புபடுத்தி அதன் பொருளை விரிவுபடுத்துகிறார். அதன் மூலம் அந்த நீதிக்கதை வெறும் ஒரு புதிர் எனும் மூளைச் செயல்பாடாக இல்லாமல் வாழ்வோடு ஒன்றிய உணர்வுகளின் வெளிப்பாட்டு வடிவமாக ஆகிறது.

இறுதியாக அவரிடம் ஒரு மீறல் அம்சம் உள்ளது. அந்த அம்சம் அவரை எங்கும் நிலைகொள்ளாதவராக எதிலும் திருப்தி அடையாதவராக்குகிறது. அதையே நாம் ஒவ்வொரு கதையின் இறுதியிலும் ஏற்படும் திகைப்பாக உணர்கிறோம். வாழ்வின் மனிதர்களின் முடிவிலையை நோக்கி அடையும் திகைப்பு. வாழ்வை அள்ளமுடியாமையின் திகைப்பு.

அந்தத் திகைப்பு வெறும் அதிர்ச்சி அல்ல. வாழ்வின் தவிர்க்கமுடியாத கூறு அது என்பதை நாம் உணர்வதால் தான் அத்திகைப்பு ஏற்படுகிறது. அதற்காகவே அத்தனை விதமான உரையாடல்களையும் குறுங்கதைகளையும் பயன்படுத்துகிறார். அனைத்தையும் தாண்டி வருவதனால் தான் அத்திகைப்பு வீரியமுள்ளதாக உள்ளது.

பாலாஜி பிருத்விராஜ்

எங்களூரில் ஒரு சொலவடை உண்டு. “வெட்டவெட்டத் தான் தழைக்கும்.” என்பார்கள். வீட்டின் முன்னிருக்கும் வேப்பமரம் அகன்று வளர்வதற்கு அதன் பக்கவாட்டுக் கிளைகளை தொடர்ந்து வெட்டுவார்கள். வெட்டப்படும் கிளை தன் இயல்பான எல்லை மீறி மேலும் வளரும். ஒரு கட்டத்தில் அவை நன்றாக படர்ந்து அடர்த்தியுடன் வளர்ந்திருக்கும். ஐசக் டினேசனின் படைப்புச் செயல்பாடும் அவ்வாறுதான். ஏற்கனவே இருக்கும் பண்பாட்டு-கதைச் சூழலில் ஒரு முறிவை ஏற்படுத்துகிறார். அம்முறிவிலிருந்து மேலும் செறிவான பல்வேறு அர்த்தத் தளங்கள் கொண்ட படைப்பை உருவாக்குகிறார். அதன் மூலம் அக்கதை நம் மனதில் கிளைவிரித்து இலைபெருக்கிக் காடாகிறது.

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *