மரபார்ந்த மனதின் நவீன இலக்கிய அனுபவங்கள் – கு.ப.சேதுஅம்மாள்

விக்னேஷ் ஹரிஹரன்

(கு.ப.சேது அம்மாளின் சிறுகதைகளை முன்வைத்து )

                     

கு.ப.சேதுஅம்மாள்

நீண்ட வரலாறும் தொடர் பயன்பாடும் கொண்ட எந்தவொரு மொழியின் இலக்கியம் சார்ந்த உரையாடலிலும் மரபிலக்கியம் x நவீன இலக்கியம் எனும் பிரிவினை நேரடியாகவோ மறைமுகமாகவோ செயல்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால் எந்த மொழியிலும் நவீன இலக்கியத்தின் தோற்றக் காலகட்டத்தில் அவ்விரு தரப்புகளுக்கு இடையிலான பிரிவினை அத்தனை தெளிவானதாக இருப்பதில்லை. தொடக்கத்தில் வடிவம் சார்ந்த வேற்றுமைகளாக மட்டுமே பொருள் கொள்ளப்படும் இவ்விரு தரப்புகளும், அவ்விலக்கிய வடிவங்களின் ஆதாரமான வரலாற்றுப் பின்புலம் சார்ந்த பிரக்ஞை அம்மொழிச் சூழலில் உருவாகும்பொழுதே தெளிவான தரப்புகளாக நிலைபெறுகின்றன. அவ்வகையில் பதினெட்டாம் நூற்றாண்டில் பொதுக் கல்வி, அதிகாரப் பரவலாக்கம், ஜனநாயகம், சமத்துவம் போன்ற விழுமியங்களின் வளர்ச்சியின் விளைவாக உருவான நவீன இலக்கியம் அவ்விழுமியங்களையும் அவ்விழுமியங்களின் அடிப்படையிலான சமூக விமர்சனத்தையும் வெளிப்படுத்தப் பொருத்தமான வடிவங்களையே தேர்வு செய்தது. வசன கவிதைகள் (Bible Psalms), நாவல்கள் (Tales of Genji), சிறுகதைகள் போன்ற வடிவங்களின் முன்வரைவுகள் குறைந்தபட்சம் பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்தே உருவாகத் தொடங்கியிருந்தாலும். அவ்வடிவங்கள் நவீன இலக்கியத்தின் விழுமியங்களையும் சமூக விமர்சனங்களையும் வெளிப்படுத்தப் பொருத்தமானவையாக அமைந்ததனாலேயே அவை நவீன இலக்கியத்தால் பயன்படுத்தப்பட்டன. இதனாலேயே நவீன இலக்கியம் என்பது நேரடியாகவோ மறைமுகமாகவோ சமூகத்தின் பொதுப்புத்திக்கு எதிரானதாக இருக்கிறது. எனவே ஒரு நவீன இலக்கியவாதியை மதிப்பிடுவதற்கான அளவுகோல் என்பது அந்த இலக்கியவாதியிடம் செயல்படும் வடிவப் பிரக்ஞை சார்ந்தது மட்டுமின்றி அந்த வடிவத்தின் பின் இயங்கும் மனம் சார்ந்ததும்தான்.

தமிழில் பாரதிக்கு முன்னும் நவீன உரைநடை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் பாரதியே தமிழ் நவீன இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக கருதப்படுவதற்கான காரணம், அவனிடம் செயல்பட்ட நவீன மனம்தான். அவன் வாழ்ந்த காலத்துடனான நெருங்கிய தொடர்பும் அதன் மீதான விமர்சனமும் அவனிடம் இருந்தபோதும் அவன் அச்சூழலில் ஒரு பகுதி அல்ல. அவ்வாறே பாரதியை தொடர்ந்து வந்த புதுமைப்பித்தன், கு.ப.ரா., நா. பிச்சமூர்த்தி போன்ற மணிக்கொடி எழுத்தாளர்கள் பெரும்பாலானோரிடம் அவர்கள் காலத்தின் சமூக பொதுப்புத்திக்கு எதிரான விமர்சனம் செயல்படுவதை காணமுடிகிறது. ஆனால் இத்தகைய சமூக விமர்சன மரபிற்கு மாற்றாக நவீன இலக்கியத்தை கைக்கொண்ட ஒரு மரபார்ந்த தரப்பும் மணிக்கொடி இதழில் செயல்பட்டிருக்கிறது. நவீன இலக்கியத்தின் வடிவம் சார்ந்த ஒழுங்குகளை அவர்கள் பின்பற்றியபொழுதும் அந்த வடிவத்தின் வழியே நவீன விமர்சனங்களுக்கு பதிலாக மரபின் தரப்பை அவர்கள் முன்வைத்தனர். அந்த தரப்பின் ஆண் பிரதிநிதிகளாக லா.ச.ரா., சுவாமிநாத ஆத்ரேயன் போன்றவர்கள் இருக்க, அதன் முதன்மை பெண் பிரதிநிதியாக முன்வைக்கத் தக்கவர் கு.ப.சேது அம்மாள்.

கு.ப.ரா.வின் சகோதரி என்பதை விடவும் அவரது மாணவியாகவே சேது அம்மாள் படைப்புகளில் வெளிப்படுகிறார். சிறுகதைகளின் கதைக்களங்கள், ஆண்-பெண் உறவு சார்ந்த சித்தரிப்பு, வடிவ ஒழுங்கு, சொற்சிக்கனம், உரையாடல்கள் போன்ற அம்சங்களில் கு.ப.ராவின் நேரடித் தாக்கத்தோடே சேது அம்மாள் செயல்படுகிறார். குறிப்பாக சிறுகதைக்கான வடிவ நேர்த்தி மிகச் சரியாக அமைந்த கதைகள் அவருடையவை. ஆனால் கு.ப.ரா.விடம் செயல்படும் “நவீனத்துவ” மனம் சேது அம்மாளிடம் வெளிப்படுவதில்லை. மாறாக அவரது கதைகள் முழுவதுமாக மரபார்ந்த மனத்தின் வெளிப்பாடாகவே உள்ளன. அவற்றுள் வெளிப்படுவது அன்றைய சூழலில் வாழும் நடுத்தர வர்க்கத்து பிராமணப் பெண்ணின் மரபார்ந்த மனம். ஆனால் அது கிருத்திகாவின் விமர்சனமும் அங்கதமும் கலந்த நோக்கின்றி முழுமையாக தன் சூழலை ஏற்றுக்கொண்ட ஒரு பெண்ணின் மனம். அவ்வகையில் நவீன சிந்தனைகளும் வாழ்வியல் மாற்றங்களும் ஒரு மரபார்ந்த மனத்தில் உருவாக்கக்கூடிய சஞ்சலங்களே சேது அம்மாளின் கதைகளில் வெளிப்படுகின்றன. பெண்களின் துயர்களையும் அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் சித்தரிக்கும் சேது அம்மாளின் கதைகள் அவற்றுக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்களும் தீர்வுகளும் முழுக்க முழுக்க மரபார்ந்தவை. அவை அந்த மரபார்ந்த மனத்தின் எல்லைகளுக்கு உட்பட்டவை. காதல், கற்பு, ஒழுக்கம், தியாகம் போன்ற நவீன இலக்கியத்தால் நிராகரிக்கப்பட்ட விழுமியங்களின்பால் நிற்பவை. ஆனால் அவற்றின் அறிவுத்தளங்களையோ தத்துவத் தளங்களையோ நோக்கி எழாததால் செவ்வியல் தன்மை பெறாதவை. இவ்விழுமியங்கள் பெரும்பாலும் சேது அம்மாள் சித்தரித்த நடுத்தர வர்க்கத்து பெண்களால் உணர்ச்சிப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக இருந்ததனால் அவை அவரது கதாபாத்திரங்களுக்கான யதார்த்தமான தன்மைகளாக பொருந்திவிடுகின்றன. ஆனால் கதாபாத்திரங்களின் யதார்த்தங்களுக்கு அப்பாலும் அக்கதைகளில் ஆசிரியரின் மரபார்ந்த மனம் தனித்து வெளிப்படவே செய்கிறது.     

இதனாலேயே அவை முழுமையான இலக்கியப் படைப்புகளாக நிலைகொள்வதில்லை. அவற்றின் வடிவப் பிரஞைக்கும் விழுமியங்களுக்கும் இடையிலான முரண்பாடே அவற்றின் முழுமையை தடுக்கின்றன. வடிவக் குறைபாடுள்ள கதைகள் மிகக் குறைவாகவே அவரது படைப்புகளில் காணப்படுகின்றன. உதாரணமாக சிறுகதையின் முடிவு அல்லது திருப்பம் சார்ந்த வலுவான பிரக்ஞை சேது அம்மாளிடம் செயல்படுகிறது. ஆனால் அவரது முடிவுகளின் எல்லைகள் அவரது மரபார்ந்த மனத்தால் முன்னரே நிர்ணையிக்கப்பட்டிருப்பதால் அவை வாசகனிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக அவை வெகுஜன ரசனைக்கு நெருக்கமான இடத்தையே சென்றடைகின்றன. குறிப்பாக கு.ப.ராவின் “மின்னற்பொழுது” போன்ற அந்த முடிவுகளை உருவாக்க சேது அம்மாள் முயன்றிருக்கிறார். ஆனால் கு.ப.ராவின் ஆண்-பெண் உறவு சார்ந்த நவீன பார்வையும், கலையமைதியும் சேது அம்மாளிடம் இல்லாத காரணத்தால் அவரால் அத்தகைய “மின்னற்பொழுதுகளை” சாத்தியமாக்க இயலவில்லை. ஆனால் “லட்சியக்காதல்” “பாசம்” போன்ற சில கதைகளில் அத்தகைய முடிவுகள் தன்னியல்பாக அமைகையில் அவை அவரது மனம் சார்ந்த சில அறிய திறப்புகளை வாசகனுக்கு அளிக்கின்றன.    

மேலும், சேது அம்மாளின் மரபார்ந்த மனம் லா.ச.ராவிடம் செயல்படும் கற்பனாவாத மனம் அல்ல. லா.ச.ரா. அவரது மொழி வழியே உருவாக்கும் மாயத்தன்மையும் அதன் பின்புலமாக அமையும் மரபும் சேது அம்மாளிடம் அமைவதில்லை. மரபின் அறிவுத்தளத்தின் மீதான எவ்வித விசாரணைகளும் சேது அம்மாளிடம் இல்லை. அதனாலேயே அவரது கதைகள் மரபின் மீதான ஆழ்ந்த தத்துவ விசாரணையையோ அல்லது கற்பனாவாதத்தையோ நோக்கி செல்வதில்லை. மாறாக சேது அம்மாள் தன்னை முற்றிலுமாக யதார்த்தவாதத்திற்குள் நிலை நிறுத்திக்கொள்கிறார். விதவை மறுமணம், பெண்களின் மீதான சமூக ஒடுக்குமுறை, பெண் கல்வி, சுதந்திரம், சமூக நவீனமயமாதல் போன்றவற்றின் தாக்கத்தை மரபார்ந்த ஒரு தரப்பின் பார்வையிலிருந்து அவர் முன்வைக்கிறார். அதனால் அவருடைய மரபார்ந்த பார்வை என்பது நடைமுறை ஆசாரங்கள் மற்றும் சமூகக் கட்டமைப்புகள் சார்ந்ததாகவே இருக்கிறது. அதன் மீதான அவரது விமர்சனம் அந்த மரபின் தரப்பிலிருந்தே முன்வைக்கப்படுகிறது. அவ்விமர்சனங்கள் புதுமைப்பித்தனிடம் வெளிப்படும் கடுமையான குரலில் இன்றி ஒரு மிதவாதக் குரலிலேயே சேது அம்மாளின் படைப்புகளில் முன்வைக்கப்படுகிறது.

மேலும், சேது அம்மாளிடம் செயல்படும் மரபார்ந்த மனம் அவரது சிறுகதைகளின் மொழி சார்ந்தும் வெளிப்படுகிறது. அவரது சமகால மணிக்கொடி எழுத்தாளர்களை விடவும் சேது அம்மாளின் மொழியில் சமஸ்கிருத தாக்கம் பன்மடங்கு மிகுந்திருக்கிறது. உரையாடல்களில் மட்டுமின்றி ஆசிரியரின் விவரணைகளிலும் அந்த தாக்கம் வெளிப்படவே செய்கிறது. உண்மையில் அம்மொழி அவரது சமகால எழுத்தாளர்களை விடவும் அதற்கு முந்தைய தலைமுறையின் மொழிக்கு நெருக்கமானதாகவே உள்ளது.‌ தமிழ் எழுத்து மொழி அதிதீவிரமாக நவீனமயமாகிக்கொண்டிருந்த சூழலில் சேது அம்மாளின் மொழி அவரது சமூகச்சூழலின் பிரதிபலிப்பாக மட்டுமின்றி அவரது மனத்தின் பிரதிபலிப்பாகவுமே வெளிப்படுகிறது.

எழுத்தாளர் விக்னேஷ் ஹரிஹரன்

மணிக்கொடி காலத்து பெண் எழுத்தாளர் எனும் எளிமையான அடையாளத்திற்கு அப்பால் நவீன எழுத்தை கைக்கொண்ட மரபார்ந்த மனத்தின் பிரதிநிதியாகவே கு.ப.சேது அம்மாளை மதிப்பிட வேண்டியிருக்கிறது. ஏனெனில் அவரிடம் வெளிப்படும் மரபார்ந்த தன்மை என்பது அன்றைய சூழலில் வெகுஜன எழுத்துக்களில் இயல்பாகப் புழங்கிய மேட்டுக்குடித் தன்மையோ போலி பாவனையோ அல்ல. அது ஒரு அசலான மரபார்ந்த மனம் தனக்கு நேர்மையாக இருப்பதன் வெளிப்பாடு. மரபின் அறிவுத்தளத்தையோ தத்துவத் தளத்தையோ கருத்தில் கொள்ளாத அந்த தரப்பின் விழுமியங்கள் இன்று பெரும்பாலும் சமூகத்தால் கடந்து செல்லப்பட்டுவிட்டன. அதனாலேயே அப்படைப்புகள் பெரும்பாலும் சமகால வாசிப்பிற்கு உகந்தவையாகவோ செவ்வியல் தன்மைகொண்டவையாகவோ இருப்பதில்லை.  ஆனால் அது ஒரு காலத்தின் பிரதிபலிப்பு. அப்பிரதிபலிப்பை பெரும்பாலும் மிகையில்லாமல் நேர்மையாக முன்வைத்ததே சேது அம்மாளின் பங்களிப்பு. அவருக்குப் பிறகான பெண் வணிக எழுத்தாளர்களின் நிறைகள் அவரிடம் இருந்த நேர்மையை நீர்க்கச் செய்துவிட்டு உணர்ச்சிகளையும் நாடகீயத் தருணங்களையும் மட்டுமே ஊதிப் பெருக்கி பெரும் வெற்றிகளை பெற்ற வரலாற்றை கண்ட பிறகு சேது அம்மாளை நடுநிலையாக மதிப்பிடுவது எந்தவொரு வாசகனுக்கும் சவாலானதுதான். ஆனால் எதுவாகினும் நவீன இலக்கியத்திற்கும் மரபார்ந்த மனத்திற்கும் இடையிலான அந்த சந்திப்பு முக்கியமானது. யுகசந்திகளில்தான் எத்தனை ரகம்?

*

(பி.கு: சிறுகதைத் தொகுப்புகள்: உயிரின் அழைப்பு, ஒளி உதயம், நினைவும் உருவும்)

கு.ப.சேது அம்மாள்: தமிழ்விக்கி

கு.ப.சேது அம்மாள்: சிறுகதைகள்.காம்

                 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *