யாத்வஷேமும் காந்தியதேசமும்: நேமிசந்த்ரா

(எழுத்தாளர் நேமிசந்த்ராவின் யாத்வஷேம் நாவலை முன்வைத்து V.S. செந்தில்குமார்)

எழுத்தாளர் நேமிசந்த்ரா

ஹிட்லர் என்பவன் யார் அல்லது யாது? ‘ஹிட்லர்’ என்பது ஒரு நிகழ்வு. ஏதோவொரு குறிப்பிட்ட அரசியல் பொருளாதார காரணிகளால் மட்டுமே உந்தப்பட்டு உருவாகி வந்த ஆளுமை அல்ல. ‘ஹிட்லர்’ என்ற ஆளுமை உருவாக அரசியல், பொருளாதார, வரலாற்று காரணிகள் உண்மையில் தேவையே இல்லை. மாறாக இரண்டே இரண்டு கூறுகள் அமைந்துவிட்டால் ‘ஹிட்லர்’ என்னும் நிகழ்வு உலகத்தில் எங்கும், எப்பொழுதும் ஏற்படும். அது நான்/அவன் – நாம்/அவர்கள் என்ற பிரிவினைவாதமும், அதைத் தொடர்ந்து அந்தப் பிரிவினையின் மேல் ஊற்றெடுக்கும் வெறுப்பும். இவ்விரண்டும் எங்கு தலை தூக்குகிறதோ அங்கு அதை தலைமையேற்க ‘ஹிட்லர்’ என்ற நிகழ்வு தோன்றும். இதுதான் நேமிசந்திராவின் யாத்வஷேமின் மையம்.

தீவிர இலக்கிய வாசிப்பு அளித்த மகத்தான பாடங்களில் ஒன்று – எந்த ஒரு சிந்தனையும் முழு முற்றான அறுதி உண்மையைக் கொண்டதல்ல. ஒன்று மற்றொன்றுடன் முயங்கி முரண்பட்டுதான் உருவாக முடியுமே தவிர அனைத்தையும் மறுத்து, தனித்த, அறுதியான உண்மையாக இருத்தல் இயலாது. ஒரு சிந்தனையை ஒட்டி தோன்றும் தத்துவங்களுக்கும், கருத்துகளுக்கும், கொள்கைகளுக்கும் அதன் தொடர்ச்சியாக அமையும் அனைத்துக்கும் அடிப்படை இதுதான். அவ்வாறின்றி இது மட்டுமே உண்மை, இது மட்டும்தான் உயர்ந்தது என்பது சிந்தனை குறைபாடு கொண்ட கருத்து மட்டுமின்றி அது அழிவை உண்டாகும் கருத்தும் ஆகும். ஒன்றே உண்மை, அதை நிலை நிறுத்த வேண்டும் என்பது அழிவைத் தவிர வேறொன்றையும் நிகழ்த்தாது. இந்தக் கூற்றைத்தான் நேமிசந்திராவும் தன் புனைவின் அடிப்படை அம்சமாகக் கொண்டுள்ளார்.

யாத்வஷேம் நூலின் ஆசிரியர் நேமிசந்திரா இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிடெட், பெங்களூரில் டிசைன் எஞ்சினீயராகவும், ஜெனரல் மேனேஜராகவும் பணியாற்றியுள்ளார். இலக்கியத்தின் மேல் பெரும் காதல் கொண்ட இவர் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ‘ஒளிக்கொரு கிரணம் மேரிக்யூரி’, ‘பெருவின் புனித பள்ளத்தாக்கில்’, ‘யாத்வஷேம்’ புத்தகங்களுக்கு கர்நாடக சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. மேலும் பல விருதுகளைப் பெற்றுள்ள இவர், இலக்கியம் போன்றே அறிவியலிலும், பெண்கள் பற்றிய ஆய்விலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். பயணத்தின் மேல் தீராக் காதல் கொண்டவர். யாத்வஷேம் புத்தகத்திற்காக மட்டுமே இந்தியாவில் பல இடங்களுக்குச் சென்று அலைந்ததோடு மட்டுமின்றி, ஜெர்மன், அமெரிக்கா, இஸ்ரேல் என்று பல நாடுகளுக்கும் பயணித்துள்ளார். குடும்பம், வேலை, இலக்கியம், பயணம், ஆய்வு என அனைத்திலும் மிகச் சிறப்பாக தனது பங்களிப்பைச் செலுத்தி ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

(தமிழில்: கே. நல்லதம்பி)

இரண்டாம் உலகப்போருக்கு முன் ஜெர்மனியில் நாஜி படைகளால் வேட்டையாடப்படுவதில் இருந்து தப்பிக்க முயலும் ஒரு யூத குடும்பத்திலிருந்து சூழல் காரணமாக தந்தையும் மகளும் மட்டும் பிரிந்து இந்தியா வந்து சேர்கிறார்கள். இந்தியா வந்து சில காலங்களிலேயே தந்தையையும் இழந்து விடுகிறாள் ‘ஹ்யானா’. பின்பு அருகில் இருக்கும் ஒரு மரபான கன்னட குடும்பத்தால் அரவணைக்கப்பட்டு அங்கேயே வளர்ந்து, திருமணம் செய்து, தாயாகி நிறை வாழ்வு வாழ்ந்து, தனது வாழ்வின் இறுதி கட்டத்தில் ‘ஹ்யானா’ என்ற அனிதா சிறு வயதிலிருந்து தன்னை அரித்துக் கொண்டிருக்கும் சில கேள்விகளுக்கான விடை தேடி செல்லும் பயணம்தான் இந்நாவல்.

தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட தாய், சகோதரி, தம்பி இன்னமும் உயிருடன் இருக்கிறார்களா? இருப்பின் எங்குள்ளார்கள்? எப்படி உள்ளார்கள்? என்று பிரிவின் வேதனையில் ஆரம்பிக்கும் கேள்விகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி மானுடரால் என்றும் விளங்கிக் கொள்ளமுடியாத பெரும் கேள்விகளாக உருக்கொள்கின்றன. ஒரு இனத்தின் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பும், துவேஷமும்? ஒரு இனம் ஏன் பல நூற்றாண்டு காலமாக துரத்தப்பட்டும், வேட்டையாடப்பட்டும் வருகிறது? மதங்கள் தோன்றுவது மக்களின் மேன்மைக்கு என்று கூறப்படுகையில் அந்த மதங்களின் பெயரால் மாபெரும் மக்கள் திரள் அழிக்கப்படுவது ஏன்? என்று தொடர்ச்சியான கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன. கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத மாபெரும் வதைகளையும், வேதனைகளையும் ஒரு இனம் எதிர்கொண்டதற்கு ஒரு சர்வாதிகாரி மட்டும் காரணமல்ல, அவனோடு துணை நின்ற மற்ற அதிகாரிகள், வீரர்கள், தொழிலதிபர்கள், அறிவியல் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், என்ஜினீயர்கள், மருத்துவர்கள், சமூகத்தின் உயர் மட்டத்தில் இருக்கும் பலப் பல ஆளுமைகள் என பலரும்தான். இவர்கள் அனைவரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனித இனத்தையே நடுங்க வைக்கும் இக்கொடூர குற்றச் செயலில் எவ்வாறு ஈடுபட்டார்கள்? இவர்களின் இந்த மனிதத்தன்மையற்ற இழி செயல்களை எவ்வாறு ஒரு சமூகம் அமைதியாக பார்த்துக் கொண்டு, ஏற்றுக் கொண்டிருந்தது? அந்த குறிப்பிட்ட தேசம் மட்டுமன்றி கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்தும் ஏன் இதைக் கண்டு மௌனம் சாதித்தன? இவைதான் அனிதாவின் மனதை அலைக்கழிக்கும் ஆகப்பெரும் கேள்விகள்.

நாஜி படைகளால் யூத இன அழிப்பு என செய்யப்பட்ட படுகொலைகளும், சித்திரவதைகளும்தான் இதுவரை பல்வேறு முறைகளில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகளாக இருக்கின்றன. மேற்சொன்ன கேள்விகளோடு நின்றிருந்தால் இந்த நாவலும் யூதர்கள் அடைந்த வலியை விவரிக்கும் ஒரு ஆவணமாக நின்றிருக்கும். ஆனால் யாத்வஷேம் நாவல் அதைத் தாண்டி பயணிக்கிறது. அதுதான் இதன் சிறப்பு. தனது இத்தனை ஆண்டு கால வேதனைகள் தீரும் வகையில் இஸ்ரேலில் தனது சகோதரியை கண்டடைகிறார். ஆனால் அங்குள்ள மக்களின் மனநிலையும், செயலையும் காணுகையில் அவரின் கேள்விகள் மேலும் அதிகமாகின்றன. இஸ்ரேல் நிலம் கடந்த காலத்தை ப்பற்றி இருந்த குழப்பத்தையும் ஏக்கத்தையும் நீங்குகிறது ஆனால் எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தை உருவாக்குகிறது.

உலகில் அதிகமாக வேதனைகளையும், வலிகளையும் அனுபவித்த ஒரு இனம், யாரைக்காட்டிலும் அதிகமாக வெறுப்பையும், வன்முறையையும் எதிர்கொண்ட ஒரு இனம், தனக்கான ஒரு சிறு நிலத்திற்காக தலைமுறை தலைமுறையாக ஏங்கிய ஒரு இனம் இன்று தான் எதிர்கொண்ட அனைத்து அவலங்களையும் அடக்குமுறைகளையும் தனது வலிமையைப் பயன்படுத்தி மற்றொரு இனத்தின் மேல் பிரயோகிக்கிறது. வேற்று இனத்தினர், மதத்தினர் என்ற ஒரே காரணத்திற்காக பல வேதனைகளை அனுபவித்த ஒரு இனக் குழு இன்று அதே காரணத்தைக் கூறி மற்றொரு மக்கள் திரளை கொன்று குவிக்கிறது. இதை ஒரு ஆட்சியாளரோ அல்லது அரசோ மட்டும் செய்யவில்லை. மாறாக, பெரும்பான்மை மக்களின் மனநிலையும் அக்கொடுஞ்செயலுக்கு உடந்தையாகவே உள்ளது. சித்ரவதைகளின் வலியையும், பிரிவின் துயரத்தையும் யாரைக் காட்டிலும் அதிகமாக அனுபவித்திருந்த ஒரு இனம் எவ்வாறு பிறருக்கு அதே வலியையும், துயரத்தையும் அளிக்க முடியும் என ஹ்யானா என்ற அனிதாவால் விளங்கிக் கொள்ளவே முடிவதில்லை.

இன – மத வெறுப்பும், அழிப்பும் கண்ட ஒரு பெண்ணிற்கு, பல்வேறு இனம், மதம், மொழி, கலாச்சாரம் என பலதரப்பட்ட மக்கள் இந்தியாவில் எந்த பெரும் வெறுப்பிற்கும் ஆட்படாமல் இணைந்து ஒரு தேசமாக வாழ்கிறார்கள் என்பது அதிசயத்திலும் அதிசயமாக உள்ளது. ஆம் எனது காந்திய தேசத்தில் பல்வேறு பிரச்சனைகளும், சிக்கல்களும் உள்ளன, ஆனால் இங்கு ஒரு இனம் மற்றொரு இனத்தை அழிக்க முயலாது, மதத்தின் பெயரில் மானுட கீழ்மை நடைபெறாது என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்கிறது இந்நாவல். இந்திய தேசத்தின் மாண்பை, மகத்துவத்தை விளக்கும் அதே நேரத்தில் இங்குள்ள கீழ்மைகளும் சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்த தேசத்தின் பெரும் தீங்கான ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளைப் பற்றியும் விரிவாகவே இந்நாவல் பேசுகிறது.

பெண் உடல் மேல் செலுத்தப்படும் வன்முறைக்கு முதல் காரணம் ஆதிக்கம். ஏதோ ஒரு வழியில் அதிகாரத்தை கைக்கொண்ட ஆண், பெண் உடல் மேல் அனைத்து வகையான தாக்குதல்களையும் தொடுக்கிறான். அதிலும் முற்றதிகாரம் பெற்ற ஒரு ஆண், எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ள பெண்களின் உடல்களை மிருகமென அணுகுகிறான். நாஜி முகாம்களில் நடக்கும் பல்வேறு சித்ரவதைகளை விவரித்தாலும், ஒரு அதிகாரியால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் நிலையை விவரிக்கையில் அக்கொடூரத்தின் தீவிரம் நேரிடையாகவே புலப்படுகிறது. தனது செயலுக்கு கைமாறாக ஒரு ரொட்டித் துண்டை தூக்கியெறியும் ஆண் ஆதிக்க மனநிலையை கூறும் அதே வேளையில், தனது கட்டுக்கடங்கா பசியால் அந்த ரொட்டித்துண்டை சாப்பிட்டுவிட்டு பின்பு தனது நெருங்கிய தோழிக்கு அந்த ரொட்டியை பகிராமல் தான் மட்டுமே உண்டு விட்டோமே என குற்றவுணர்ச்சி அடையும் பெண்ணின் தாய்மையையும் பதிவு செய்கிறார் நேமிசந்த்ரா. அதிகாரம் பெற்ற ஆணின் கீழ்மையையும், பெண்ணின் தாய்மையையும் ஒரு சேர விவரிக்கும் காட்சிகள் அவை.

நாஜிக்களின் அராஜகத்தைக் கண்டு உலகமே மௌனம் சாதித்த போதும், ஜெர்மனியில் சிறு பெண்கள் குழு அதற்கு எதிராக குரல் கொடுத்ததை பதிவுசெய்கிறார். எங்கு அநீதி நடப்பினும் அங்கு பெண்கள் முன்வந்து அஹிம்சை முறையில் போராடவேண்டும் என்பதை மிக அழுத்தமாக வலியுறுத்துகிறார். பெண்களிடம் உள்ள அடிப்படையான கருணையும், அன்பும் எப்போதும் அறத்தின் பக்கம் நிற்கும் என்பதை நம்புகிறார். தற்போதைய மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக டெல்லியில் பிரதம அமைச்சர் வீட்டிற்கு அருகில் மணிப்பூரைச் சேர்ந்த பெண்கள் இணைந்து “STOP VIOLENCE” என்ற வாசகத்தோடு, காந்தி படம் ஏந்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதை சமீபத்திய செய்தியில் பார்த்ததும் ஒரு சிறு நம்பிக்கை பிறக்கிறது.

கட்டுரையாளர் V.S. செந்தில்குமார்

மனித சமூகத்தின், வரலாற்றின் பல இழிநிலைகளை விவரித்தாலும், அது தொடர்பான பல விடை காண இயலாத கேள்விகள் இருந்தாலும், எதிர்காலத்தை நோக்கிய நம்பிக்கையை இந்நாவல் ஏற்படுத்துகிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையாக காந்தியத்தை முன்வைக்கிறது. அன்பின் மூலம் மட்டுமே ஒரு வளமான எதிர்காலத்தை உருவாக்கமுடியும் என உறுதிபட கூறுகிறது. இனம், மதம், மொழி என எங்கும் பிரிவினைக் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்நாவல் அன்பை, அறத்தை, மானுட சமத்துவத்தை முன்வைக்கிறது. அந்த வகையில் இது ஒரு முக்கியமான படைப்பு.

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *