”அனிச்சம்” – லோகமாதேவி
பண்டைய தமிழர்களின் வாழ்வு இயற்கையோடு மிக நெருங்கிய தொடர்பிலிருந்ததால் சங்கப்பாடல்களில் பல இயற்கையின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கின்றன. பலசங்கப்புலவர்களின் பெயர்களும் இயற்கையோடு தொடர்புடையதாகவே இருக்கின்றன. உதாரணமாக வெள்ளெருக்கிலையார், பொய்கையார், ஆகியோரை சொல்லலாம். நான்கு திணைகளையும் அந்தந்த நிலங்களுக்குரிய தாவரங்களை அடிப்படையாக கொண்டே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என பிரித்தார்கள். சங்கப்பாடல்களின் வழி பண்டைய தமிழர்களின் தாவரவியல் அறிவின் ஆழம் என்ன என்பதுவும் நமக்கு புலனாகும். சங்கப்பாடல்களில் மக்களின் வாழ்வியல் பயன்பாட்டு நிலையிலும் குறியீட்டுநிலையிலும் தாவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன..
மன்னர்கள் அவரவருக்குரிய பூக்களை சூடிக்கொண்டனர், போருக்கு செல்கையிலும் ஆநிரைகவர்கையிலும், போர் வெற்றிக்கும், முற்றுகைக்கும் என தனித்தனி பூக்கள் இருந்தன. பண்டைய தமிழரின் அக வாழ்வில் தாவரங்கள் மிக முக்கிய பங்கு வகித்தன. கன்னிப் பெண் பருவம் எய்தும் முன்பு வீட்டு வாசலில் முல்லைக் கொடியை நட்டுவைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. முல்லை பூக்கையில் அவளும் பூப்பது நிகழ்வதால் பூப்பது என்பது பெண் பருவம் எய்துவதை குறித்தது இன்றளவும் பருவம் எய்துதலுக்கு பூப்பு என்னும் சொல்லே புழக்கத்தில் இருக்கிறது.
உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், வாசனைப்பொருட்கள், கால்நடைத்தீவனங்கள், விழாக்கள், சடங்குகள், இறைவழிபாடு என பல்வேறு வகைகளில் தாவரங்களுடன் இயைந்த வாழ்வில் இருந்தவர்களால் பாடப்பட்டதால் சங்கப்பாடல்களில் பல்வேறு தாவரங்களும் தாவரபாகங்களும் அவற்றின் இயல்புகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
முதல் அதிகாரத்திலேயே மலர் என்னும் சொல் குறிப்பிடப்பட்டிருக்கும் சங்க இலக்கியவகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின்திரட்டில் இருக்கும் தொல் தமிழ் மொழி இலக்கியமான திருக்குறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு மலர்களில் அனிச்சமும் ஒன்று. மற்றொன்று குவளை.
இதில் முகர்ந்து பார்த்தாலே குழைந்துவிடும் அனிச்சமலரின் மென்மையை முகம் திரிந்து நோக்கினாலே வருந்தும் விருந்தாளிகளுடன் ஒப்பிட்டுச் சொல்லும் குறள் மிக பிரபலமானது.
அனிச்சம் மேலும் சில குறள்களில் பெண்களின் மென்மைக்கும் உவமையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்’’
அதிகாரம்:120 – [காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்]
மிக மென்மையான அனிச்சமலராயினும், அதற்கிணையான மென்மையை கொண்டிருக்கும் அன்னப்பறவையின் இறகாயினும் அவையிரண்டும் நெருஞ்சிக்கனியின் முள்ளைப்போல தைத்து, அவற்றைக் காட்டிலும் மென்மையான என் காதலியின் காலடிகளை துன்புறுத்தும் என்னும் இக்குறள் காதலியின் காலடிகளின் மென்மை அனிச்சத்தின் மென்மையைக் காட்டிலும் மேலானது என்கிறது.
” அனிச்சப்பூ கால்களையா பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை”
குறள்வரிசை: 1115 (காமத்துப்பால், களவியல்:நலம்புனைந்துரைத்தல்)
இந்தக்குறள் மிக அழகானது. காதலி மிக மென்மையான அனிச்சமலரை அதன் காம்பைக் களையாமல் அப்படியே கூந்தலில் சூடிக்கொள்கிறாள். அதை காணும் காதலன் அனிச்சப் பூவின் அடிக்காம்புப் பகுதியை களையாமல், கூந்தலில் அணிகிறாளே காம்புடன் கூடிய அனிச்சமலரின் எடைதாளாது அவளின் மென்மையான சிற்றிடை ஒடிந்துவிட்டால் பிறகு மங்கல நிகழ்வுகளில், ஒலிக்கப்படும் பறையா அடிக்க முடியும்? ஒடிந்து இறந்த இடைக்கு சாவுப்பறைதான் அடிக்கப்படும் என கூறுவதை சொல்கிறது இக்குறள்.
காதலி தன் மென்மையை அறியாது மெல்லிய அனிச்சத்தின் காம்பைக் களையாது அணிந்துவிட்டாள் என்கிறது இக்குறள்
’’நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்’’
குறள் 1111-[காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்]
நன்னீரில் வாழும் மெல்லிய அனிச்சமே! நீ வாழ்க! நீ மெல்லியமலராயினும் என்னால் விரும்பப்பட்ட உன்னைகாட்டிலும் மெல்லியவள் ஒருத்தி இருக்கிறாள் அவளிடம்தான் நான் வீழ்ந்திருக்கிறேன் என்கிறது இக்குறள்.
அனிச்சத்தின் தாவர அறிவியல் பெயர் Anagallis arvensis, இவ்விரண்டு பெயர்களில் Anagallis என்னும் கிரேக்க சொல்லிற்கு ’’மீண்டும் மீண்டும் மகிழ்விக்கிற’’ என்றும் இதன் அடுத்த பகுதியான சிற்றினப் பெயரான arvensis என்பதற்கு விளை நிலங்களில் காணப்படுகின்ற என்றும் பொருள். இவை பன்னெடுங்காலமாக விளைநிலங்களில் வளரும், அழகிய மலர்களை உடைய மருத்துவப் பயன்பாடுகளையும் கொண்டிருக்கும் களைச்செடிகள்.
அனிச்சத்தில் Anagallis arvensis var. coerulea என்பது நீல மலர்களை கொண்டிருக்கும். Anagallis arvensis var. arvensis என்பது ஆரஞ்சு மலர்களை கொண்டிருக்கும்.
காமத்துப்பாலில், தலைவியின் நலன்களை புனைந்துரைத்தலில் சொல்லப்பட்டிருக்கும் இம்மூன்று குறள்களுமே தலைவியின் குணநலன்களை காமத்தினாலும் காதலினாலும் மிகுதியாகக் கூறும் காதலனின் கூற்றை சொல்லுகின்றன..
-தொடரும்
லோகமாதேவி: தாவரவியல் பேராசிரியை. துறைசார் எழுத்தாளர், கட்டுரையாளர். தாவரவியல் தொடர்பான ஆறு புத்தகங்கள் எழுதியுள்ளார். விஞ்ஞான் ப்ரசார் வெளியிட்ட “தாவர உலகம்” முக்கியமான படைப்பு. தொடர்ந்து தாவரவியல்_இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை இலக்கிய, நாளிழ்களில் எழுதி வருகிறார். அரிஜோனா பல்கலைக்கழக வலைதளத்தில் அறிவியல் தகவல்களை தமிழ் மொழிமாற்றம் செய்யும் பணியில் மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். தற்போது தமிழில் தாவரவியல் அகராதியை உருவாக்கும் முயற்சில் உள்ளார்.
தொடர்புக்கு: logmadevi@gmail.com