உள்ளறைகள் – மதுமிதா

(உமாமகேஸ்வரியின் அஞ்சாங்கல் காலம் நூலை முன்வைத்து)

உமா மகேஸ்வரி

இலக்கியத்தில் வீடு என்ற படிமம் பொதுவாக இரு தளங்களில் கையாளப்படுகிறது, உன்னதமான ஒரு இலக்காகவோ அல்லது உதறப்பட வேண்டிய தளையாகவோ. உமா மகேஸ்வரியின் பெண்களோ வீட்டையே உலகமாகக் கொண்டவர்கள், முழு வீடு கூட இல்லாமல் காலத்திற்கேற்ப அதனுள் சில அறைகளை மட்டும் அறிபவர்கள். மூச்சு திணற வைக்கும் வாழ்வனுபவங்களை குறைவில்லாமல் கொண்டவர்கள். அவரின் எழுத்து இதில் கண்டடைவது அந்த வாழ்வை அவர்கள் ஏற்று கடக்கும் நிமிர்வை, துடுக்கை, சுயநலமும் அது இல்லாமலும் கலந்து உறையும் அன்பை, அதில் கசடாய்த் தங்கி விடும் வன்மத்தை.

காலம் முன்பின்னென விரிகிறது. விளைவுகள் முன் வந்து, காரணங்கள் பின் வருகின்றன. ஆனால் விடைகள் கண்டடையும் அந்த பாதை முழுக்க கவிதையென வழிந்து ஓடும் சொல்லடுக்குகள். வழியெங்கும் நிறைந்திருக்கிறார்கள் பெண் குழந்தைகள், சிறியவர்களும் சற்றே பெரியவர்களுமாய், கேள்விகளும் குழப்பங்களும் குறும்பும் வீம்பும் கொண்டவர்களாய். பள்ளித்தோழிகளாய் ஓரிரு பக்கங்களுக்கு மட்டுமே வரும் சிறுமிகளும் கூட தங்கள் சூட்டிகையாலும் தீரா கேள்விகளாலும் விளையாட்டாலும் கண நேரமானாலும் மின்னிவிட்டே செல்கிறார்கள். அவர்கள் கூடி விளையாடும் பொழுதுகளும், பெரியவர்களை புரிந்து கொள்ள முற்படும் உரையாடல்களும், குட்டி பவானியின் கேள்வி வரிசைகளும் புன்னகையோடு வாசிக்க வைப்பவை. சிறு பெண்களால் நிறைந்து, திளைத்து, இயல்பாய் அவர்கள் சித்தரிக்கப்பட்ட படைப்பாக உள்ளது.

பயந்த சுபாவம் கொண்ட ஜகி. சிறு கிண்டல்களுக்கு துவண்டுவிடுபவள், சட்டென்று நட்பு பாராட்டிக்கொள்ள தெரியாதவள். அவளுடைய மன உளைச்சல்கள் மிக நுண்மையாக விரித்தெடுக்கப்பட்டுள்ளன. மரப்பாச்சி பொம்மையிடம் சொல்ல விழையும் ரகசியங்களோடு, அதை அம்மாவிடம் சொல்லத் துணியாத சஞ்சலத்தோடு, அவளது மனச்சோர்வு சுமியிடம் தான் வெளிவருகிறது. அக்காக்கள் என்றுமே தாயுமானவர்கள். ஜகியின் உளச்சிக்கல்களை விவரிக்கும் கவிதை வரிகளின் உச்சம் அவள் தெளிவடைவதின் யதார்த்தத்தில், அதன் காரணங்களின் உள்ள அன்றாடத் தன்மையில் அழகு கொள்கிறது.  ஜகி மென் தூரிகையால் தீட்டப்பட்ட ஆழமான படைப்பு.

சுமி, பாவை, ராஜி என்று அடுக்கடுக்காக வரும் நேர்மறையான பெண்கள் கூட ஒற்றைத்தன்மையுடன் கொண்டு செல்லப்படுவதில்லை. அவர்களின் எரிச்சல்களும் அதை தீர்க்க அவர்களுக்கு இருக்கும் வழிகளின் இயலாமையும் சொல்லப்படுகிறது. ரேணுவை வீடு தேடிக் காணச்செல்லும் பாவை நிகழ்வு ஒரு உதாரணம். நாடகீயமான தருணங்களையும் நிதானமாகவே கடந்து செல்கிறது இந்த நூல்.

நுண்ணிய வாசிப்பையும் ஆழ்புரிதலையும் கோரும் படைப்பு தனராணியுடையது. அவளது கணவனிடமிருந்து மனத்தால் விலகி அதே வீட்டிலேயே குழந்தைகளுக்காக வாழ்கிறாள். இதோ உடையப் போகிறாள் என்று என்னும் கணம், மிக கவனமாய் தனது குழந்தைகளின் வாழ்கையை பத்திரப்படுத்தி தனது பாதைக்கு வழி செய்துகொள்ளும் சாமர்த்தியம் அசாதாரணமானது. ஆனால் அந்த வலி ரணமாகி நித்தமும் குழந்தைகள் மீது விழும் ஏசலாகவும் சஞ்சலமாகவும் மாறி கடுகடுத்த அம்மாவாக மாறச் செய்கிறது. பிள்ளைகளின் மிகச்சிறிய துடுக்கையும் மீறலையும் கூட சகிக்காதவளாக கண்டிப்பானவளாக ஆகிறாள். பொன்னியின் மீறலை தண்டிக்கும் அந்த மொட்டையும், பவானியின் துடுக்கை தண்டிக்கும் சூடும் அன்னைகள் மட்டுமே எட்ட முடியும் வன்மம் நிறைந்தது.

இதிலிருந்து மாறுபட்டு தன் வாழ்க்கையை இழுப்பார் கைக்கே விட்டுவிடும் ரேணு. அவளுக்கும் மகாவிற்குமான உறவின் மீறலிலிருந்து பாதை மாறத் தொடங்கும் வாழ்க்கை அவளது கணவனின் மரணத்தில் மேலும் குழப்பமுற்று கிருட்டிணப்பனை மணம் புரிவதில் நிலையுறும் என்ற மாயையை தோற்றுவித்து அவள் விட்டு வந்த நிகழ்வுகளின் நிழலிலிருந்து மீள முடியாமலேயே அவளது வாழ்க்கை முடிகிறது. அவள் ஏன் போராடவில்லை என்ற எண்ணம் நூலெங்கும் அரித்தெடுக்கிறது. அப்படி ஒரு பிடியில்லாமல் ஆகும் நிலை எப்படி வரும்?

இந்த ஆட்டிப்படைக்கும் பெரியவர்களின் இயல்பை இந்த அடக்குமுறையை வாழ்வின் ஓட்டத்தில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் எதிர் கொள்கிறார்கள். தனம் சூடு வைத்து, “தெய்வ நிந்தனை பண்ணனும்னு தோணும் போதும் பெரியவங்களை எதிர்த்து பேசணும்னு தோணும் போதும் இந்த சூட்டோட வலிய நெனச்சுக்க”, என்று சொல்லும்போதும் அதை நிமிர்வுடனும் எக்கச்சக்க மீறலுடனும், “ஏன் கேக்க கூடாது”, என்று கேட்கும் பவானியின் மீதுதான் பெண் குழந்தைகளின் எதிர்காலம் உள்ளது அந்த வீட்டில். இந்த நிகழ்வை நேராக கொண்டு செல்லும் உமா, அதே போன்ற பொன்னியின் நிலையை உதிர்த்து பல்வேறு இடங்களில் பல நிகழ்வுகளின் மத்தியில் சொல்லாமல் சொல்லிச்செல்வது ஒரு சுவாரஸ்யமான வகை. பொன்னி குட்டை தலைமுடியை மிக அலட்டலாக சுமியிடம் காட்டிக் கொள்வது முதலில் சொல்லப்பட்டு, அது ஏன் குட்டையானது என்ற விவரம் பின்னால் தனத்தின் வஞ்சமாக விளக்கப்படுகிறது. நாட்டிய போட்டியில் வாங்கிய பரிசை அம்மாவுக்கு தெரியாமல் எடுத்து வைக்க தெரிந்த பொன்னி தன் கூந்தல் குறித்த சூழ்நிலையையும் பக்குவமாக எடுத்து தனக்கு சாதகமாக ஆக்கிக்கொள்கிறாள்.

பெண்களுக்கு பொதுவாகவே எதிர்ப்பும் ஊக்கமும் சமநிலையில் சுகப்பட்டும் கஷ்டப்பட்டும் இருக்கும் பிற பெண்களிடம் இருந்தே வருகிறது. சகோதரிகளே ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறார்கள். திகைத்து அமர்ந்திருக்கும் ஜகியை அம்மாவின் கோபத்துக்கு ஆளாகாமல் தங்கைகள் தான் பார்த்து கொள்கிறார்கள். சூடு பட்ட பவானியை அக்காக்கள் மருந்திட்டு காக்கிறார்கள். அத்தனை பாகப்பிரிவினைக்கும், வன்மத்திற்கும் நடுவிலும் குழந்தைகள் விளையாடுவதை ஒரகத்திகள் ரசிக்கவே செய்கிறார்கள். கீழே விழுந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கேட்காமல் வருகிறாள் தனம், விஜயா அளவிற்கே துடித்து போய். செல்வத்தின் நடத்தையில் கதறி நிற்கும் தனத்தை ராஜியும் விஜியும் தான் தேற்றுகிறார்கள்.

இங்கே ஆண்களுக்கு இடம் என்பது அவர்கள் வன்முறையாளர்கள் என்ற வகையிலோ அல்லது வன்முறை நிகழ காரணிகள் என்பது மட்டுமே. சின்னஞ்சிறு பெண்ணின் மீது தீரா மையல் கொண்டு தன் காதலின் வண்ணம் பூசிய உலகையே உண்மை என்றெண்ணும் அசடன் அழகேசன், புண்ணே ஆகாத இடத்தை ஏதோ நெருடுகிறது என்ற கற்பனையில் விடாமல் சீண்டி சீழ் கட்ட வைப்பதைப் போல தனக்கு இருமுறை அளிக்கப்பட்ட அழகிய வாழ்க்கையை தானே அழித்து இரு பெண்களுக்கு இரு வேறு துரோகம் செய்யும் கிருட்டிணப்பன், தனது செய்கையால் தன் குழந்தைக்கு நேர்ந்த விளைவை கூட அறியாமல் காமத்தில் திளைக்கும் செல்வம், பெரிய இடத்தில் காட்ட முடியாத கோபத்தை பிஞ்சுக் குழந்தையிடம்‌ காட்டும் மயில்ராசு, அண்ணன் இறந்து குழப்பத்தில் இருப்பாள் என்று தெரிந்தும் ரேணுவுக்காக திரும்பி வராத மகா என்ற பட்டியல் மிக நீளம்.

இதில் முக்கியமானது ராஜா. அவன் இழைப்பது பெருங்குற்றம் என்பதை விட, அதனுடைய வக்ரம் எவ்வளவு எளிதில் சுமதியால் கடந்து செல்ல முடிகிறது என்பதிலும் அது கீழ்த்தரமான கோழைத்தனத்தின் விளைவு என்பதிலும் மேலும் தீவிரம் அடைகிறது. அதன் பின்னால் உறையும் ரத்தினம்மாவின் வன்மம் வாள்வெட்டில்லை, பல நூறு முறை விழும் கீறல், ஆற வாய்ப்பே அற்றது.

கிருட்டினப்பணின் மன ஓட்டங்களை விளக்கும் பகுதிகள் கொட்ட நிற்கும் தேளை கண்காணிப்பது போல, எவ்வளவு தான் அருவருப்பு அடைந்தாலும் கண்ணை விட்டு அகலத் துணியாது மேலும் வாசித்துக்கொண்டே இருக்க வைப்பது. தன் குரூரங்களையும் சஞ்சலங்களையும் தீற்றிக் கூர்படுத்தி தன்னையே தயார்படுத்திக் கொண்டு  தனது எண்ண ஓட்டங்களுக்கு ஒட்டாத ஒரு பெண்ணை எதுவும் செய்யலாம் என்று தன்னையே நம்ப வைத்து கொள்ளும் எண்ணங்கள்.

“நெருங்க முடியாதவள். அவளுடைய காமத் தவிப்புகளை என் வசப்படுத்த முடியாது ஒரு நாளும் – என்றெண்ணிணாரே ஒழியத் தம் பலவீனங்களை உள்ளூறக்கூட ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை” என்று தொடங்கும் எண்ணங்கள். “நீ வழக்கமான நியதிகள் அற்றவள். ஆம், நீ தெய்வம். உன்னை அடைய முடியாது. நீ பூஜைக்குரியவள். கூடலுக்கு உகந்தவளல்ல” என்று விபரீதமாக மாறும் போதே அது முடியப் போகும் இடம் புலப்படுகிறது. தெய்வம் என்று உரைத்து உயர் பீடத்தில் ஏற்றி தனியே அமர வைப்பதுதான் சட்டென கீழே போட்டு வெறுங்காலால் மிதித்தழிக்க சுலபமான வழி. அதுதான் நடக்கவும் செய்கிறது.

“வீட்டின் அசைவின்மையில் அவரது சந்தேகங்கள் சலனங்களை தீற்றலாயின. குரூரமான இருளின் உள்ளிருந்து வக்கிரங்கள் சொட்ட வீடு தன்னை இன்னும் இறுக்கிக் கொள்ளும்.” அந்த இறுக்கி முடிந்த வீட்டுக்குள் அவள் வாழ்வும் முடிந்தே போகிறது. அதன் பிறகான கிருட்டினப்பனின் எண்ணங்கள் விளக்கப்படுவதில்லை, ஆனால் பாவையை துச்சமென தூக்கியெறிந்து ரேணுவிடம் வரும் மனது பிறகு அவளையும் கடந்து போக அதிகம்  யோசிக்கப்போவதில்லை.

மகா, செல்வம், அழகேசன் பாத்திரங்கள் வெவ்வேறு பகுதிகளில் சிதறியது, அதுவும் கொஞ்சமாக. ஆனால் திரட்டியெடுத்து முழு சித்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடிகிறது.

இது தன்னளவில் நிறைவான நூல் என்ற போதும் இது பல வகையில் உமா மகேஸ்வரியின் முந்தைய நூலான யாரும் யாருடனும் இல்லை நாவலின் நீட்சியாகக் கொண்டால் இன்னும் ஆழமான வாசிப்பிற்கு வழி காட்டுகிறது. அஞ்சாங்கல் காலம் சரியாய் யாரும் யாருடனும் இல்லை முடிந்த இடத்தில் அதே மக்களிடம் (சற்றே பெயர்கள் மட்டும் மாற்ற பெற்ற) இருந்து தொடங்குகிறது.

வினோதினி/ரேணுவின் மனச்சோர்வு குணா/மகா அவளை விட்டு நீங்கியவுடன் தொடங்கியது, அதை விட முக்கியமாக கருவை கலைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உச்சம் கண்டது. அத்துடன் அவள் கணவன் இறந்து அவள் இருக்கும் அந்த சஞ்சல நிலையிலேயே அவள் நடுத்தர வயதில் முன்னே கல்யாணமாகி மனைவி இன்னும் இருக்கும் கிருட்டிணப்பனை மணம் செய்ய ஒப்புகிறாள். ஊர்ல உலகத்துல இல்லாததா என்றே எல்லோரும் சமாதானம் செய்கின்றனர். “சனியனுக்கு கெடச்ச வாழ்க்கையை பாரு!” என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. சந்தேகம் என்ற நஞ்சில் தோய்ந்த அவளது வாழ்வு அவளுக்கு அசூயையே ஏற்படுத்துகிறது. ஆனால் அவளுக்கு எதையும் குற்றம் சொல்ல உரிமை கொடுக்கப்படுவதில்லை. கணவனை இழந்த, அதுவும் மணம் மீறிய உறவு கொண்டவள் என்பதை யாருமே அவளை மறக்க விடுவதில்லை. அவளுடைய உறவு வெளிதெரிந்த போது முதலில் அந்த வீட்டு பெண்கள், அவள் அக்கா உட்பட அனைவருமே அது அவளுடைய தவறென்று மட்டுமே சொல்கிறார்கள். அந்த நிலை என்றும் மாறுவதில்லை அவளுக்கு. அவளுக்கு இதனாலேயே எதன் மீதும் பிடிப்பற்று போகிறது என்றும் சொல்லலாம். ஆனால், குணா விட்டு சென்ற பின் தன்னிலை அடைந்து தன்னை புழுவென மதிக்கிறது அந்த வீடு என்று உணரும் கணம், எல்லவற்றையும் உதறி பாகப்பிரிவினை வேண்டுமென உறுதியாக முடிவு எடுத்து அதை செய்து கொள்ளும் துணிச்சல் உடையவள் தலைகீழாக விதிக்கு தன்னை ஒப்பு கொடுப்பது நம்பகத்தன்மையை இழக்க செய்கிறது.

ஆனால் பெரிய ஐயா அதே செயலைச்  செய்தது ஒரு ஒற்றை வரி செய்தியாக மட்டுமே காணப்படுகிறது. அந்த வீட்டின் சின்ன குழந்தைகள் கூட, “தாத்தாவோட இன்னொரு வைஃப்” என்று எதார்த்தமாக பார்கவியை ஏற்கின்றன. கணவனை ஒரு கேள்வி கூட கேட்காமல் கண்டும் காணாது செத்தே போய் விட்ட அன்னம்மாவையே அந்த வீடு தெய்வமாக கொள்கிறது, அதை தனத்திடமும் எதிர்பார்க்கிறது. செல்வம் செவனம்மாவின் தொடர்பை தனம் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவருவது ஆகப்பெரிய விமர்சனமாக அவள் மீதே வைக்கப் படுகிறது, “கண்டும் காணாம நீக்குப்போக்காக இருக்க வேண்டாம்”, “நடந்தது நடந்து போச்சு, இப்ப ஆக வேண்டயத பாரு” என்றுதான் பேச்சுகள் எழுகின்றன. ஆனால் அவள் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தனியாக காசு கொடுத்து விட வேண்டும் என்று செல்வத்திடம் கேட்கிறாள். அதை தாண்டி “எனக்கு இந்த ஆளோட எந்த ஒட்டுறவும் இல்ல”, என்று முடிவெடுக்கிறாள். ஒரு கணம் தனம் அன்னம்மாவின் மாலையிட்ட புகைப்படத்தை நோக்கி விட்டு இதை சொல்கிறாள் என்று மட்டுமே கூறப்படுகிறது. அன்னம்மாவின் நிலை அவளை பாதித்தது வெறும் கண்ட துயர் மட்டுமல்ல, பெண் குழந்தைகள் மட்டுமே பெற்றுத்தருகிறாள் என்று செல்வத்தால் உதாசீனப்பட்ட போது அவளுக்கு இருந்த ஒரே ஆறுதலும் அன்னம்மா மட்டும் தான். அவளின் முடிவு கண்ட தனம் தன்னுடைய நிலையைப்பற்றி திடமாய் முடிவெடுப்பது சாத்தியமே. ஆனால் அதன் விளைவுகள் அவளுக்குள் கொண்டு வரும் ஏமாற்றங்கள் அவளை அதிதீவிர எச்சரிக்கை உணர்வு கொண்ட அம்மாவாய், அதன் உச்சத்தில் வன்மம் நிறைந்தவளாக ஆக்குகிறது. இதன் நேர் புள்ளியில், இன்றைய தனம் நாளைய ரத்தினம்மா ஆகக்கூடிய சாத்தியம் கூடியவள். வன்மத்திற்கு ஆட்பட்டவர்களே அதை அடுத்தவருக்கு மிக எளிதில் செய்பவர்களாக ஆகும் கொடுசுழற்சியில் வீழ்வதை காண முடிகிறது. இன்னும் சொல்ல மிச்சம் உள்ளதாகவே முடிகிறது தனத்தின் படைப்பு.

இரண்டிலும் உள்ள அறுபடா தொடர்பு  என்பது உமா மகேஸ்வரியின் மொழி. அதை அவர் கொண்டு செல்லும் அந்த கவிதை நடை. “வெய்யிலில் கமறும் தெரு”, “மற்ற அங்கங்கள் அனைத்தையும் விழுங்கும் வயறு”, “வாட்டம் என்பதையே அறியாத மலர்”, இன்னும் நூறு இதுபோல்.

மதுமிதா

இரண்டிலும் உள்ள ஆகப்பெரிய வேறுபாடு என்பது யாரும் யாருடனும் இல்லை எட்ட முற்படும் ஒரு வாழ்க்கை தரிசனத்தை அஞ்சாங்கல் காலம் வெறும் மேலோட்டமாக மட்டுமே அணுகுகிறது என்பது. நாவல் நீள, வேறு வேறு காரணங்களுக்காக மீண்டும் மீண்டும் அறைகளுக்குள் பூட்டப்படுகிறார்கள் பெண்கள். அதற்குள்ளாகவே அவர்களின் உலகம் சுறுங்கியும் நீண்டும் வளர்கிறது. அங்கே நின்று மிகுந்த கனிவுடன் இந்த நாவல் அவர்களை பதிவு செய்கிறது.

*

உமா மகேஸ்வரி: தமிழ்விக்கி

மதுமிதாவின் கட்டுரை: பத்தொன்பதாம் நூற்றாண்டு மறக்கப்பட்ட பெண் இலக்கியமேதைகள்- ஜெயமோகன் தளம்

2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *