உமாமகேஸ்வரி சிறுகதைகள் – இரு வாசிப்பனுபவம்

கவிஞர் கல்பனா ஜெயகாந்த்

1

எழுத்தாளர்கள் பால் அடையாளங்களைக் கடந்த ஒரு தளத்தில் இருக்க வேண்டும் என நினைப்பவள் நான். அப்போது தான் எல்லாப் பாத்திரங்களின் மன அவசங்களையும் அவர்களால் மிகச் சரியாக எழுத முடியும் எனத் தோன்றுகிறது. ஆயினும் சில நுட்பமான இடங்களில், அவர்களின் பால் அடையாளம் சார்ந்த அனுபவங்கள் இயல்பாக வெளிப்படும்போது, எழுத்தின் கலையழகும் நம்பகத்தன்மையும் வலுவும் கூடிவிடுகின்றன. ஆண் எழுத்தாளர்கள் பெண்களின் உணர்வுகளை எழுதுவதைக் காட்டிலும் பெண் எழுத்தாளர்கள் அவற்றை எழுதும் போது, அவற்றின் அடர்த்தியும் நுட்பமும் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கின்றன. முன்பு தொடப்படாத பல இடங்கள் அவர்களால் தொடப் படுகின்றன. இக்கதையிலும் அது நிகழ்ந்துள்ளது. சிறுமியிலிருந்து பெண்ணெனத் தன்னை உணரும் நுட்பமான ஒரு மாறுதலை உமா மகேஸ்வரி வெகு இயல்பாக, நேர்த்தியாக இதில் எழுதி விட்டார்; அப்பெண்ணின் கனவு அல்லது அவளின் ஆதாரமான ஒன்று உடைபடும் இடத்தையும், வாழ்க்கை முழுவதற்கும் அவளோடு தங்கப் போகும் ஒரு வடுவின் முதல் வலியையும் தான்.

‘மரப்பாச்சி’ சிறுகதையை இரு தவணைகளிலாக வாசித்தேன். அனுவின் அப்பா அவளுக்கு மரப்பாச்சியை கொடுத்ததிலிருந்து, அவள் அத்தை வீட்டிற்கு வண்டியேறுவது வரை என வாசித்து ஒரு முறை நிறுத்தினேன். பருவமடையப் போகும் சிறுமியின் மன ஓட்டங்களின் மிகச் சிறந்த வர்ணனை இது என எனக்குப் பட்டது. சமையல் பாத்திரங்களின் மாதிரிகள் அவளுக்கு களைப்பைத் தருகின்றன; ரயிலின் ஓசை சோகமாய் இருக்கிறது; கிளி மற்றும் குருவி பொம்மைகளின் ஒலிகள் விலக்கத்தை அளிக்கின்றன; மரப்பாச்சி அளிக்கிறது முடிவற்ற வாய்ப்புகள் உள்ள கனவுலகத்தை. இப்போது சொப்பு வைத்து விளையாடும் சிறுமி பெண்ணாகி விட்டாள். வயிற்றில் ஒன்றுடன், குழந்தைக்கு பாலூட்டும் அன்னையை ஏக்கத்தோடு பார்க்கும் முதல் குழந்தை, அன்னையெனும் பெண்ணிடமிருந்து தன்னை திரையிட்டு மறைத்துக் கொள்ள ஆரம்பிக்கிறாள். அதை உணரும் அன்னையின் ஆழ் மனம் அவளைத் தொட்டுத் தொட்டு தன் குழந்தையைத் தேடுகிறது. அவளின் மாற்றத்தை உணர்ந்து ஓயாத பதற்றத்தைக் கொள்கிறது.

பதின் பருவத்தில் சட்டென சிறுமிகள் கொள்ளும் தனிமையும் மௌனமும் விலக்கமும் மிக அருமையாக இந்தச் சிறுகதையில் பதிவாகியுள்ளன. முதன் முதலில் தாவணி அணியும் போது, இடுப்பைத் தழுவும் மென்காற்று தரும் குறுகுறுப்பைப் போன்ற ஒன்றை, இன்னதென்றறிய முடியாத ஒரு பதற்றத்தை, யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு கனவுலகை, நிலைகொள்ளாமையை ஆசிரியர் இயல்பாகச் சொல்லிச் செல்கிறார்.

மீண்டும் வாசிக்க ஆரம்பித்த போது, அனு காற்றின் உல்லாசத்தை அனுபவித்த படி மலைகளின் ‘நீல வீச்சைப்’ பார்த்துக் கொண்டு அத்தை வீட்டிற்கு சென்று சேர்ந்திருந்தாள். மாமாவின் தொடுதல் அளித்த ‘நச நசப்பை’யும் தான். ‘இதை எதிர்பார்க்கலையே’ என எண்ணிக் கொண்டேன். இரவில், கொல்லைப்புறத்துக் காற்றையும், பிச்சிப் பூவின் மணத்தையும், மருதாணிப் பூக்களின் சுகந்த போதையையும், நிலவின் மழலையொளியையும் அனுபவித்து விட்டு அவள் வீட்டிற்குள் திரும்ப நுழையும் போது நமக்கும் தான் இடி போல் தலையில் விழுகிறது மாமாவின் பேய்த்தனம். இந்த வல்லுறவில் கசங்கும், ‘அவளுள் தளிர் விடுகிற அல்லது விதையே ஊன்றாத ஒன்றை’ அனாயாசமாக எழுதிச் செல்கின்றன ஆசிரியரின் சொற்கள்.

மார்பெங்கும் முடியடர்ந்து, வளைந்த மீசையுடன், அம்புலி மாமாவில் அரசிளங்குமரிகளை வளைத்து குதிரையில் ஏற்றும் கைகளுடனும் இருக்கும் அவள் ‘மரப்பாச்சி’ கலைந்து விடுகிறது. ‘இதுவா? இதுவா அது? இப்படியா ?’ என்று அவளை அரற்ற வைத்து விடுகிறது. அவளிடம் கசங்கியது எது, தொலைத்தது எதை என்றறியாமல் ஜுரம் கொள்கிறாள். நமக்கும் தான் கடுங்கோபம் ஏற்படுகிறது. யார் தந்தார் இந்த மாமனுக்கு அதிகாரம், அவள் மரப்பாச்சியை உடைப்பதற்கு என உளம் கொதிக்கிறது. பேருந்தில் செல்லும் போது பின்னால் இடித்த ஏதோ ஒன்றும், திரும்பிப் பார்த்தால் குமட்டல் தரும் அந்த இளிப்பும், மொட்டைத் தலையும் என பலப்பல காட்சிகள் அவரவர் கண் முன் விரிவதையும் தடுக்க முடிவதில்லை தான்.

அம்மாவிடம் சென்று சேரும் போது, கீழே விழுந்த பளிங்குப் பாத்திரம் விரிசல் விட்டு விட்டதா என்று தடவித் தடவி பார்ப்பது போல் அம்மா அவளைப் பார்த்து பதற்றம் கொள்கிறாள். நாமும் தான். இனி இந்தக் குழந்தைக்கு இயல்பான வாழ்வு அமைய வேண்டுமே; மனதின் காயமும் வலியும் குணமாக வேண்டுமே என்றும் எண்ணிக் கொள்கிறோம்.

‘உடலுக்கு ஏற்படும் ஏதோ ஒரு காயத்தைப் போல வல்லுறவை எடுத்துக் கொள்ள வேண்டும், அதற்கு இவ்வளவு பதற வேண்டியதில்லை’ என்ற பிரபலமான ஆண்மையத் தரப்பு ஒன்று உண்டு. அதற்கு சரியான பதில் இந்தச் சிறுகதை. அத்துமீறல் அல்லது வல்லுறவு உடைப்பது எதை, எந்தக் கனவை என்பது இக்கதையின் வாசகர்களுக்கு புலப்படும். அது பெண்ணுக்கு நடந்திருந்தாலும் ஆணுக்கு நடந்திருந்தாலும், எதுவாயினும்

ஒரு பதின் பருவச் சிறுமியின் மென்னுணர்வுகளைச் சொல்லும் இக்கதை, அ.வெண்ணிலாவின் ‘இந்திரநீலம்’ என்னும் சிறுகதையை நினைவு படுத்துகிறது. பெண்ணின் காமத்தைச் சொல்லும், அதன் இயல்பைச் சொல்லும், அவள் உடலின் மாறுதல்களைச் சொல்லும், பெண் எழுத்தாளரே சொல்லும் முக்கியமான படைப்புகள் இவ்விரண்டும். வல்லுறவைப் பற்றி வரும் பகுதி, பெருந்தேவியின் ‘உடல், பால், பொருள்’ கட்டுரைத் தொகுப்பில் அமைந்திருக்கும் வல்லுறவு பற்றிய அவரின் பார்வையோடு இயைந்து இருக்கிறது. அந்தக் கட்டுரைத் தொகுப்பில் ஜெயகாந்தனின் ‘அக்னிபிரவேசம்’ சிறுகதையை மிக விரிவாக ஆராய்கிறார் பெருந்தேவி. சங்க காலத்தின் ‘மடலேறுதல்’ பற்றியும்.

உமா மகேஸ்வரியின் ‘மரப்பாச்சி’ என்னும் இச்சிறுகதை ஒரு அலாதியான, நுட்பமான தளத்தில் அமைந்துள்ளது. ஒரு சிறுமியின் உணர்வுலகின் குறுக்கு வெட்டுத் தோற்றமும், அவளின் கண்ணாடியில் ஏற்படும் விரிசலும் என அழகையும் அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தும் கதையாக இது அமைந்திருக்கிறது. எப்போதைக்குமாய் ‘மரப்பாச்சியையும்’ அதன் கலைதலையும் இது மனதில் இருத்தி விட்டது. உமா மகேஸ்வரி நுட்பமான உணர்வுகளை அனாயாசமாகவும் முதிர்ச்சியுடனும் கவிதை மொழியிலும் எழுதும் ஆசிரியராக இதில் வெளிப்படுகிறார்.

கல்பனா ஜெயகாந்த்: தமிழ்விக்கி

2

கவிஞர் தென்றல் சிவக்குமார்

உமா மகேஸ்வரி கதைகளை வாசித்துக்கொண்டிருக்கும்போதே சட்டென்று ‘எதற்கு இத்தனை ஒளி’ என்று எழுந்து சென்று ஒரு கதவையோ ஜன்னலையோ அடைத்துவிடத் தோன்றுகிறது. கறுத்த கோலிக்குண்டுகளைப் போல, லேசான இருளையும், அத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் மெல்லிய சில்லிப்பையும் தன் கதைகளில் இட்டு வைத்திருக்கிறார். அவை அதீத வெளிச்சத்தில் தென்படுவதில்லை. ஆனால், தொட்டுணரும் கணத்திலிருந்து கதை முடியும்வரை அவையே ஒளிர்கின்றன, பல சமயங்களில் கதை முடிந்த பிறகும்.

மிகக் குறைந்த உரையாடல்களுடன் பெரும்பாலும் அகவெளிக்குள் பாயும் கதைகள் இவை. அனுமதிக்கப்பட்ட ஜன்னலில் அனுமதிக்கப்படாத சில பொழுதுகளிலும் கன்னத்தைச் சேர்த்து வைத்துப் பார்க்கும், யோசிக்கும் அவளே அனேகமாக எல்லாக் கதைகளிலும் நாயகி. அவளுடைய தவிப்பை, தகிப்பை வரைந்து வரைந்து அழித்தபடி, சின்னஞ்சிறு சொற்களால் பகிர்ந்தபடி அவள் கைகளும் உடலும் அன்றாடத்தில் சுவாதீனமாகப் புழங்குகின்றன.

உமா மகேஸ்வரியின் எழுத்து நடை கெட்டியான சிமெண்ட் தளத்தில் விரைவதல்ல, பார்ப்பதற்கு வலிமையாகத் தெரிந்தாலும் ஒவ்வோர் அடிக்கும் தொய்ந்து பாதங்களைப் புதைத்துக்கொள்ளும் மணல் நடை அது. ஒரே ஒரு கதையை, அல்லது அதன் ஒரு விள்ளலை மட்டுமே வாசித்தாலும் காலில் பொறுபொறுக்கும் மணலுடனே அடுத்த வேலையை நோக்கி நடக்க வேண்டியிருக்கிறது. ‘குளவி கூடு கட்டினா நல்லதுதானே?’ என்று கேட்பவர்களிடம் ‘எனக்கு நம்பிக்கையில்லை’ என்று முறைப்பவளின் மனம், குளவிக்கூடு செந்நிறமா பொன்னிறமா என்பதைக் கொண்டு தரித்திருப்பது ஆணா பெண்ணா என்று யூகிப்பவர்களை முறைப்பவர்களின் மனத்துக்கு அன்புடன் அளிக்கும் மணற்பரல் அது.

கதைகளை வாசிக்க வாசிக்க, ஒரு கதைக்குள்ளிருந்து உருவிக்கொண்டு மறுகதைக்குள் தன்னைத்தானே செலுத்திக்கொள்ளும் அவளது சுவடுகள் மெல்லப் புலப்படுகின்றன. “அதீத சுத்தமே ஆடம்பரம்தான்” என்று மனதின் ஒரு மூலை இடிப்பதை ஒரு கதைக்குள் இருப்பவள் சொல்கிறாள். இன்னொரு கதைக்குள் அழுக்கற்ற அதீத சுத்தத்தைப் பெயராகவே பெற்றவள் அந்த ‘ஆடம்பரம்’ அற்றவர்களின் அசுத்தத்தை வெறித்துப் பார்க்கிறாள். கோயில் வாசலில் நிற்கும் சிறிய கல் யானைகளில் தன்னுடையதென்றும் தங்கையுடையதென்றும் பிரித்து வைத்துக்கொண்டு, தங்கை மாற்றி அமர்ந்துவிட்டால் ஆக்ரோஷம் கொள்பவள் அவள், தங்கையோ சுத்தமே அலுத்தவளாய், எதையும் இரண்டாய் வகிரும் தூய்மை சலித்தவளாய் அவளுடைய அவன் முன்னெடுக்கும் மீறலை அனுமதிக்கிறாள். அவன் ‘இனிமே இவளும்தான்’ என்று சொல்லும்போது இருவருமே அதிர்கிறார்கள். அவள் அழுக்கைத் தாங்கமாட்டாமல் தவிக்கிறாள், இவள் இதில் நான் கட்டுப்பட நினைக்கவில்லையே என்று குமைகிறாள். கோவிலில் ‘கற்கிளியின் சிறகு ஒருதரம் அசைந்து, கருமணிக்கண் ஒன்று தன்னை நோக்கித் திரும்புவதாகத்’ திடுக்கிடுகிறாள். ‘அது’ எனும் கதையில் இன்னொருத்தி, நேரம் தப்பாமல் பன்னிரண்டே முக்காலுக்கு மொட்டை மாடிக்கு வந்து பெயர் எழுதிய தட்டிலிருந்து உணவெடுத்து உண்ணும் காகத்தின் பார்வைக்கு அப்படி அஞ்சுகிறாள். கதைகளெங்கும் அவள் சொல்ல மறுப்பதை, விரும்பாததை, தவிர்ப்பதை, மறைப்பதை, கிளிகளும் காகங்களுமாக அமர்ந்தும் பார்த்தும் பார்க்காமலும், செத்து விழுந்தும், திரும்பி வராமல் பறந்தும், பேசாமால் பேசிக்கொண்டே இருக்கின்றன.

உமா மகேஸ்வரியின் சிறுகதைகளுக்கு அகம், புறம் எனும் பேதங்கள் இல்லை, வாழ்க்கையை அப்படி ஒரு பேதத்தைக்கொண்டு இரண்டாக வகிர்ந்துவிட முடியுமா என்பது அவ்வப்போது எழும் கேள்வி. ‘நெடி’ என்ற சிறுகதையில் கழிவுநீர்த் தொட்டியின் அடைப்பை அகற்ற வந்திருக்கும் பணியாளர்களுக்காக மனம் கனியும் ஒருத்தி நடமாடுகிறாள். ‘நீ ஏன் இங்கெல்லாம் வருகிறாய்?’ என்பது அதிகாரத்தின் கேள்வி. அதுவும் ஓர் அகத்தின் சிக்கலால் அல்லது சில அகங்களின் கூட்டுச் சிக்கலால் உருவாகும் கூக்குரல்தானே. எனில், அவளுக்கு அனுமதிக்கப்படுவது ஜன்னல் மட்டும்தான். ஜன்னலில் கன்னம் பதித்து, பார்வையை எக்கி வீசுபவளுக்கு முகங்கள் தெரிவதில்லை, ஆனால் அவள் கனிவு பெருகிக்கொண்டே இருக்கிறது. அந்த மனிதர்களை வீட்டுக்குள் அழைக்க, வீட்டுச் சொம்பில் நீர் எடுத்துக் கொடுக்க அவள் மனம் தவிக்கிறது, அதுவே அவளின் தாகம் ஆகிறது. சுத்தம் செய்யும் வேலை முடிந்து, அதற்கான பேரமும் படிந்தபின் அவள் தன்னைச் சுற்றி அந்த நெடியை உணர்கிறாள். இந்தக் கதை முடியும் இடத்தில் அவளைத் திகைக்க வைத்து, குணமாக்கும் ஒரு காட்சியைக் கண்டடைகிறாள்:

“மறுநாள் மருதாணிச் செடிக்கு நீர்விட்டு நிமிர்ந்தபோது கண்ணில் பட்டது அந்தக் கைகள்தான். ஒரே உள்ளங்கையில் இறைச்சிப் பொட்டலமும், இலையில் சுற்றிய மல்லிகையும் இருந்தன. நாற்றங்களையும், வாசனைகளையும் பேதப்படுத்தும் கோட்டைத் தாண்டியது போன்ற பாவனை கொண்ட அந்த முதிய முகத்தை காலை ஒளி அவளுக்குத் துலக்கிக் காட்டியது.”

சில சங்கடங்களுக்கு அன்றாடம் என்பதே அருமருந்து.

பெண்ணுடல் தொடர்பான சிக்கல்களைக் கையாளத் தனித்த மொழியைக் கொண்டிருக்கிறார் உமா மகேஸ்வரி. அவள் உடல் பூக்கவேண்டும், அதுவும் ‘இன்னுமா ஆகலை?’ என்ற கேள்வி எழுமுன் பூக்கவேண்டும், ஊரை அழைத்து மஞ்சள் நீரைச் சல்லடை வழியாக ஊற்றி, அடுக்கு அடுக்காகப் புட்டு அவித்துக் கொண்டாடவேண்டும். அதற்காக அவள் உடல் மேல் எந்த பயங்கரத்தையும் அனுமதிக்கலாம். பிறகு யாராவது கேட்டால், ‘ஆயிட்டேன்’ என்று சொல்லிக்கொள்ளலாம். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கத்தில், கல்யாணம் ஆனதும் சீக்கிரமே அவள் வீட்டு விலக்காக வேண்டும், அதையும் ஊரைக்கூட்டி புட்டு வழங்கி கொண்டாடவேண்டும், அவளுக்கு ‘குளியல் சேலை’ பட்டில் எடுத்துக்கொடுக்க வேண்டும். இதில் சுத்தம் எது, அசுத்தம் எது, தூய்மை எது? இவற்றை நிர்ணயிக்கும் கரம்தான் எது? இவற்றைப் போல, உமா மகேஸ்வரி எழுதியிருக்கும் பல கதைகளை முன்வைத்து, ‘இதெல்லாம் இன்னுமா நடக்கிறது?’ என்று புறங்கையால் தட்டிவிட ஆசைதான், ஆனால் அதுதான் முடியாதே! எதோ ஒரு மஞ்சள் பூசிய முகம், லொடலொடவென்று பொருந்தாத ரவிக்கை அணிந்த கூனிக்குறுகிய உடல், சங்கடம் மிதக்கும் கண்கள், திடமாகப் பற்ற முடியாத கரம் என்று எத்தனை எத்தனையோ குறுக்கிட்டு அந்த ஆசையை அமர்த்திவிட, மௌனமாக அடுத்த கதைக்கு நகரத்தான் முடிகிறது.

இன்னும் கொஞ்சம் நகர்ந்துகொள்ள, பேசிக்கொள்ள, அணைத்துக்கொள்ள, ஆரோக்கியம்கொள்ள விரும்பும் பெண்களின் சித்திரங்கள் தீட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன, கவனம் கோரும் சாயல் ஒற்றுமையுடன். பள்ளி செல்லும் ஒரு பிள்ளையும், பால்குடி மறவா சிறு பிள்ளையும் பெற்று, பேப்பர் படிக்கும் கணவனும், காலை பரபரப்பு முடியும்வரை உறங்கும் மாமியாருமாக எந்த உதவியும் இல்லாமல் வளைய வருபவளுக்கு, திடீரென்று கதை எழுதும் ஆசை பிறக்கிறது. அதன் கருவாக அவள் தேர்ந்தெடுப்பது கல்யாணமாகி ஒரு வருடத்திற்குள் கருவுறாத ஒருத்தியின் வாழ்க்கையை. இதன் பின்னியங்கும் உளவியல் கதையில் விளக்கப்படாததே இதன் வசீகரம். ‘கரு’ எனும் இந்தக் கதையில் கதை எழுதுபவளும் அந்தக் கதைக்குள் சிகிச்சைக்குச் செல்பவளுமாக மாறி மாறித் தென்படுவதும், பேசுவதும் குழப்பமே இல்லாமல் பின்னப்பட்டிருக்கின்றன. இருவேறு திசைகளிலிருந்து ஒரே புள்ளியை நோக்கி அவர்கள் நகர்ந்து நகர்ந்து வருகிறார்கள். அது. “நான் ஒரு சிறிய, பேரிக்காய் வடிவ, கிட்டத்தட்ட மூன்றங்குல நீளமும், இரண்டங்குல அகலமும் உள்ள வெற்றுப் பையாக மட்டும் மாறித் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்” என்று சொல்லப்பட்டிருக்கிறது, கனக்குமொரு வெற்றுப் பை, ‘மரப்பாச்சி’யின் பழமையே புதுமையானதைப் போல.

உமா மகேஸ்வரி தனிமையைச் சொன்னாலும், வெறுமையைச் சொன்னாலும் அவர் எழுத்தின் கவித்துவம் நிச்சயம் வாசிக்கையில் புன்னகையைத் தருவிக்கும். ‘அத்தை அம்மாவின் நைந்த பிரதியெனத் தோற்றம் கொள்கிறாள்’, ‘நான் ஒரு திசை ஞானசூன்யம்’, ‘அவள் சன்னலைச் சாத்தினாள், ஆனால் காதுகளுக்கு ஏது கதவு?’, ‘தங்கள் வெற்றிக்கொடிக் கம்பத்தைத் தம்பியின் மேல் ஆழமாய்ச் செருகி நட்டார்கள் அம்மாவும் அப்பாவும்’, ‘சிகரம். உச்சி. இதுவரை கண்ணில் மட்டுமே பட்ட உச்சியில் இப்போது கால்கள்’, ‘வா என்று அம்மாவைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு அவள் ஓடியபோது, ஊருக்குள்ளிருந்த வீடு அவர்களை அழைக்கவென்று எதிரிலேயே வந்து நின்றிருந்தது’, ‘வெளியில் இருள் அவள் முகத்தில் இடித்தது’, ‘உடன் ஒத்தவர்கள் எல்லார் சீட்டும் வரிசையாகவோ, இசகுபிசகாகவோ கிழிந்து கொண்டிருக்கிறது’, – இப்படி எத்தனை வரிகள்! விளையாட்டுப் போக்கில் வாசித்த பக்கங்களைக் கண்மூடிப் பிரித்து மீண்டும் வாசிக்கையில் இடறிய வரிகள் இவை. எனில், பக்கத்துக்கொரு வரியாவது ‘தாண்டிப் பார்’ என்று சவால் விடுகிறது.

இந்தக் கதைகளில் உடைகள், உணவு, பூக்கள் என்று எல்லாவற்றின் வண்ணங்களும் பொங்கிப் பெருகுகின்றன. ஆனால் ஒரு வரியும், அதில் குறிப்பிடப்படும் ஒரு நிறமும் உமா மகேஸ்வரி சிறுகதைகளின் அடையாளமாகத் தனிக்கின்றன. அவர், தன் கதைகள் நெடுகத் தீட்டியிருக்கும் அத்தனை சித்திரங்களுக்கும் அதுவே ஆதாரம். மேலும், அந்தக் கதையின் தலைப்பு ‘ஆண்’ என்பதன் முரணும் ஒரு தனித்த சுவாரசியம்.

“பெண் வாழ்வின் நிறமே போல் நெற்றியில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.”

ஆமாம், முழுக்கவும் பெண் வாழ்வை, குறிப்பாக அக வாழ்வைப் பேசும் கதைகள் இவை. ‘உமா மகேஸ்வரி சிறுகதைகள்’ என்று ஒட்டுமொத்தக் கதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் புத்தகத்தில், தன் அணிந்துரையை, ‘பெண் படும் பாடு’ என்றே தொடங்கியிருக்கிறார் எழுத்தாளர் பாதசாரி. ‘எப்போதும், எதாவது ஒரு கதையுடன் இருப்பது எவ்வளவு ஆசுவாசமானது!’ என்று தன்னுரையில் குறிப்பிடுகிறார் உமா மகேஸ்வரி. அந்த ஆசுவாசம் வாசிப்பவரிடமிருந்தும் குறைந்தபட்சம் ஒரு பெருமூச்சாக வெளிப்பட்டுவிடுகிறது, அதுவே இந்தக் கதைகளின், கதாசிரியரின் வெற்றி. இந்தப் புத்தகத்துடன் நடமாடுகையில் ஒரு பெருங்குழுவுடன் இணைந்திருப்பதான உணர்வு மேலோங்குகிறது, அதன் பக்கங்களில் இருப்பவர்களை நன்றாகத் தெரிகிறது – கண்ணாடியில்தான் என்றில்லை, அருகிலோ எதிரிலோ அமர்ந்திருப்பவளாக, கூட்டமான பேருந்தில் உடல் குறுக்கி ஒட்டி நிற்பவளாக, மரப்பாச்சியை நேசிப்பவளாக அல்லது வெறுப்பவளாகத் தட்டுப்படுகிறார்கள்.

தென்றல் சிவக்குமார்: கவிஞர், மொழிபெயர்ப்பாளர். 2019-ல் சந்தியா பதிப்பக வெளியீடாக எனில்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளியானது. தாமரைச் செல்வி என்ற பெயரில் மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். ‘ஆவியின் வாதை’, ‘சுரேஷ் ரெய்னா – அறுபத்து ஏழாவது அடி’ ஆகிய மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சாரு நிவேதிதாவுடன் இணைந்து ‘முகமூடிகளின் பள்ளத்தாக்கு’ மொழிபெயர்ப்பு செய்தார். தொடர்ந்து அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறார், இலக்கிய நிகழ்வுகளில் உரை நிகழ்த்துகிறார்.

*

உமாமகேஸ்வரி: தமிழ்விக்கி


Add a Comment

Your email address will not be published. Required fields are marked *