களிநெல்லிக்கனி – இசை

(அவ்வையின் புறப்பாக்கள் குறித்த இரண்டு கட்டுரைகள்)

கவிஞர்கள் ஒளவையாரும் இசையும்

1

பசியின் மலர்கள்

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்கிறது பழமொழி. விருந்தாளிகள் மேல் தலைநாள் உள்ள ஆர்வம் மறுநாள் இருப்பதில்லை. அது தேய்ந்து கொண்டே போகிறது. முதல் நாள் பரிமாறி விட்டு அழைப்பார்கள். மறுநாள் அமர வைத்துப் பரிமாறுவார்கள். மூன்றாம் நாளிலோ தட்டில் முகம் தெரிந்து விடுகிறது. நாம் அதிலேயே சீவிச் சிங்காரித்துக் கொள்ளலாம். அதியான் அப்படிப் பட்டவன் அல்ல.

“ஒரு நாள் செல்லலம்; இரு நாள் செல்லலம்;
பல நாள் பயின்று , பலரொடு செல்லினும்,
தலைநாள் போன்ற விரும்பினன் மாதோ” (புறம்; 101)

அவன் பரிசை இன்று தரலாம். அல்லது நாளை தரலாம். சில நாட்கள் கழித்து கூடத்தரலாம். ஆனால் அவன் பரிசு என்பது உறுதியானது. தப்பவே தப்பாதது. அவ்வை இதற்கு ஒரு உவமை சொல்கிறாள். “களிறு தன் கோட்டு இடை வைத்த கவளம் போல”. யானை தன் கொம்பிடையே வைத்த கவளம் எவ்வளவுக்கு எவ்வளவு அதற்கு உறுதியோ, அவ்வளவு உறுதி அதியனின் பரிசு என்கிறாள். இதற்குமேல் இன்னொன்றைச் சொல்ல முடியாத உவமை. இப்பாடல் பரிசில் பெறாது வருந்தும் நெஞ்சிற்குச் சொல்வது போல் புனையப்பட்டுள்ளது. ஆறுதலெனில் இதுதான் ஆறுதல். ஆறுதல் கூட இல்லை சத்தியம்.

பொகுட்டெழினியை விளிக்கும் ஒரு பாடலில் ” இசை விளங்கு கவிகை நெடியோய்!” என்கிறாள். ” கவிகை” அதாவது கொடுக்கக் கவிழ்த்த கை. கொடுத்துக் கொண்டே இருக்கும் கை. கவிழ்த்துக் கொண்டே இருக்கை கை. மூன்றெழுத்துச் சித்திரமன்றோ இச்சொல்! (புறம்; 102).

ஒரு விறலி இன்னொரு விறலியை அதியனிடம் ஆற்றுப்படுத்துகிறாள். “அவனை நம்பிப் போ. உன் உண்கலம் எப்போதும் ஈரம் காயாத வண்ணம், மெழுகு போன்ற இறைச்சியை அவன் தந்து கொண்டே இருப்பான்”

“பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப..” (புறம்; 103)

பரிசில் பெறாது பசியில் துவளும் அந்த விறலி ஒரு கேள்வி கேட்கிறாள்..
“கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?” அதாவது உணவு கிட்டாததால் கவிழ்ந்து கிடக்கும் எனது கலத்தை மலர்த்த வல்லவன் யார்? திருப்ப அல்ல ‘மலர்த்த’. எங்கெல்லாம் மனம் விரிகிறதோ அங்கெல்லாம் மலர் உதித்துவிடுகிறது. காட்டு நிலத்தினும் காதலர் முகங்களில் மலர்வதன்றோ மலர்? போலவே, பட்டினியில் எரியும் ஒருவனுக்குப் பசியின் மலர்கள் தெரியும்.

இப்பாடலில் விறலியின் சித்திரம் ஒன்று தெரிகிறது.

” ஒரு தலைப் பதலை தூங்க, ஒரு தலைத்
தூம்பு அகச் சிறு முழாத் தூங்கத் தூக்கி”

அவள் தோளில் காவடி போன்ற ஒன்று உள்ளது. அதன் ஒரு முனையில் பதலை என்கிற தோற் கருவியும், இன்னொரு முனையில் துளையுடைய சிறிய முழாவும் தொங்குகின்றன.

உலகமே வறுமையில் வாடும் போதும் கொடுக்க வல்லவன் அதியன்தான் அவனிடம் போ என்று இந்த விறலி ஆற்றுப்படுத்தப்படுகிறாள்..

“அலத்தற் காலை ஆயினும்
புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே! “

அதியனது நுண்ணிய திறமைகளை பலதையும் கணக்கில் கொள்ளாது அவனை இளையவன் என்று நினைத்து , அவன் நாட்டின் மீது போர் தொடுக்க வந்தால் நீங்கள் வெல்லவே முடியாது என்று பகை வேந்தர்க்கு அறிவுரை சொல்கிறாள் ஒரு பாட்டில்.

“ஊர்க்குறுமாக்கள் ஆடக் கலங்கும்
தாள் படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராத்து அன்ன…” (புறம் ; 104) (கராம்- முதலை)

சிறுவர்கள் கலக்கி விளையாடும் அளவு கொஞ்சமே நீருள்ள நீர்த்துறையாயினும் அதில் பதுங்கியிருக்கும் முதலைக்கு யானையைக் கொல்லுதல் எப்படி எளிதோ அப்படி எளிது அதியனுக்கு உங்களை வெல்லுதல்.

அவ்வை நாகர்கோவில் அருகில் உள்ள நாஞ்சில்மலையைச் சேர்ந்த நாஞ்சில் வள்ளுவன் என்னும் வள்ளலை ஒரு பாடலில் போற்றிப்பாடியுள்ளார். அவ்வை மட்டுமல்லது வேறு சில புலவர்களும் அவனைப் போற்றிப் பாடியுள்ளதை அறிய முடிகிறது.

அவ்வை அவனை “மடவன்” என்று விளிக்கிறாள். அவனது ஈகையை “தேற்றா ஈகை” என்கிறாள். அதாவது ஆராய்ந்து பாராது அள்ளித் தரும் ஈகை. அறிவு அழிந்து முற்றிய அன்பால் நிறைந்திருக்கும் நிலை ஒன்றுண்டு. மயிலுக்குப் போர்வை ஈந்த பேகனைப் போல. அது முட்டாள்தனமானது. ஆனால் ‘முட்டாள்’களால் நெருங்கவே முடியாதது. பேகனின் கொடையைப் பாடும் பரணர் அதை ” கொடை மடம்” என்கிறார். அந்த கொடை மடத்தைத்தான் அவ்வையும் பாடுகிறாள்.

நாஞ்சில் மலையில் உள்ள விறலியொருத்தி தான் பறித்துச் சமைத்த கீரையின் மீது தூவுவதற்கு அரிசியின்றி வருந்தினாள். அவளுக்காக நான் கொஞ்சம் அரிசியை வேண்டினேன். வள்ளுவனோ , மலையைப் போன்ற ஒரு யானையையே கொடுத்து விட்டான். எவ்வளவு பெரிய முட்டாளடா நீ? என்று கண்ணீருக்குப் பக்கத்தில் நின்று பாடுகிறாள். அவன் பாடியவரின் தகுதியைக் கண்டு மட்டும் பரிசில் அளிப்பவனல்ல. அளிப்பவனாகிய அவனுக்கும் ஒரு தகுதி உண்டல்லவா அதையும் கருதி அளிப்பவன்.

” தான் பிற வரிசை அறிதலின், தன்னும் தூக்கி…….
நல்கியோனே….”
( புறம்: 140)

“வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறையாக யாம் சில
அரிசி வேண்டினேமாக……
குன்றத்து அன்னது ஓர்
பெருங் களிறு நல்கியோனே; அன்னது ஓர்
தேற்றா ஈகையும் உளது கொல்?

“எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே..” ( புறம் 187) என்கிற வரிகள் மிகவும் புகழ்மிக்கவை. ஆனால் ஆடவர் நல்லவர் ஆகி புகழ் பெறுவது குறித்து உறுதியாக ஒன்றும் சொல்ல முடியவில்லை. அது அவ்வளவு பக்கத்தில் இருப்பதாகத் தோன்றவில்லை. இதை எழுதிக் கொண்டிருக்கும் போது மத்திய பிரதேச மாநிலத்தில் 12 வயதே ஆன ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அரைநிர்வாணக் கோலத்தில் , இரத்தம் சொட்டச் சொட்ட, வீதி வீதியாக உதவி கேட்டு அலையும் காட்சியொன்றை டிவியில் காட்டுகிறார்கள். ஒரு ஆடவர் “இங்கே வராதே , போ.. ” என்று விரட்டுவதையும் காட்டினார்கள்.

அதியன் அவ்வைக்கு நெல்லிக்கனி ஈந்த கதை பிரபலம். ஆனால் அவர்கள் இருவருக்குமிடையேயான சண்டைக் காட்சி ஒன்றும் புறநானூற்றில் உண்டு. அதியன் பரிசில் தராது காலம் நீட்டிக்க ” நீ என்ன பெரிய பருப்பா?” என்று கேட்டுவிட்டு விருட்டெனக் கிளம்பி விடுகிறாள் பாட்டி.

அதியனுக்கு என்னைத் தெரியாதா? அல்லது அவனுக்கு அவனுடைய தகுதியும்தான் மறந்து விட்டதா? அறிவும் புகழும் உடையோர் பட்டினியால் சாகும் அளவு அவ்வளவு வறுமையில் வீழ்ந்து விடவில்லை இவ்வுலகு. (புறம் 206)

“கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி!
தன் அறியலன் கொல்? என் அறியலன் கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்
காவினம் கலனே; சுருக்கினெம் கலப்பை”

அவ்வை தன் இசைக் கருவிகளை தூக்கிக் கொண்டு கிளம்புவதாக வருகிற வரியைக் கொண்டு அவள் பாணர் மரபைச் சார்ந்தவள் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அப்படிப் பாடுதல் ஒரு கவிமரபே என்று சொல்லி அதை மறுப்பவர்களும் உண்டு.

தச்சனுடைய மகன்கள் கோடாரியைத் தூக்கிக் கொண்டு காட்டிற்குள் புகுந்தால் அவர்கள் எப்படியும் பிழைத்துக் கொள்ள மாட்டார்களா என்ன? அதுபோல் நானும் என் சொற்களை ஏந்திக் கொண்டு கிளம்புகிறேன். எனக்கு எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே!

“மரம் கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே-
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே”

இப்பாடலுக்கு ஒரு கிளைக்கதை சொல்லப்படுவதுண்டு. உடனே பரிசில் வழங்கி விட்டால் அவ்வை தன்னை விட்டுச் சென்று விடுவாள் என்பதால், அவளை நெடுநாள் தன்னோடு தங்க வைக்கத்தான் அதியன் பரிசில் நீட்டித்தான் என்கிறது அக்கதை. அதியனுக்கு அன்று ” mood ” சரியில்லை என்று நானொரு தனிக்கதை சொன்னால் அதுவும் நம்பகமான ஒரு யதார்த்தக் கதையாகவே இருக்கும். மனிதர்கள் அவர்களின் ” mood” கள் தானே?

கி.வா.ஜகந்நாதன் அதியனோடே நேந்து கலந்து வாழ்ந்து பார்த்த பாணியில் ஒரு நூல் எழுதியுள்ளார். அந்நூலில் அவ்வை வந்த வேளையில் அதியன் தனது அமைச்சர்களுடன் போர் குறித்த ஒரு முக்கியமான ஆலோசனையில் இருந்ததாகவும் , அதனால் அந்த வாயில் காவலன் அவ்வையின் வருகையை அதியனுக்கு அறிவிக்கவேயில்லை என்றும் சொல்கிறார். “வாயிலோயே! வாயிலோயே!” என்கிற விளிப்பை கருத்தில் கொண்டால் இதுவும் ஒரு பொருட்படுத்தத் தக்க கதைதான்.

அதியன் இறந்து விட்டான். அவன் உடலில் சிதை மூண்டு எரிகிறது . தீ அவனது உடலை அழிக்காது அணைந்து போகலாம். அல்லது வான் முட்டி பற்றி எரியலாம். எப்படியாயினும் அதியன் “ஒண் ஞாயிறு “. எளிய நெருப்பில் எரிந்து போவதல்ல அவன் புகழ் ( புறம்; 231)

இல்லாகியரோ, காலை மாலை!
அல்லாகியர், யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி, நார் அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ-
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே? (புறம்: 232)

உயர்ந்த சிகரங்களையுடைய மலையுடன் கூடிய ஒரு நாட்டையே தானமாகத் தந்தாலும் கொள்ளாத மானமுடையவன் அதியன். அவனுக்கு ஒரு நடுகல் எழுப்பி, அதில் பீலி சூட்டி அதன் முன் கொஞ்சம் கள்ளைப் பலியாகப் படைத்தால் ஏற்றுக் கொள்வானா என்ன? இனி எனக்கு காலை மாலை என்கிற காலங்கள் இல்லை. அவனின்றி வாழும் நாட்களுக்கு ஒரு அர்த்தமும் இல்லை.

சங்கத்து கையறு நிலைப்பாடல்கள் சிலவற்றில் நமது நாட்டுப்புறத்து ஒப்பாரிப் பாடல்களின் கேவலோசை ஒலிப்பதைக் காண முடிகிறது. ” முல்லையும் பூத்தியோ..” என்பது போல. “இல்லாகியரோ காலை மாலை” என்பதிலும் அந்த அழுகுரல் கேட்கிறது அல்லவா?

ஒளவையாராக கே.பி.சுந்தராம்பாள்

2

மாமலர் சூடா மானிடர்

‘உண்டாட்டு’ என்பது பகைவரின் ஆநிரைகளைக் கவர்ந்து வரும் வீரர்களின் வெற்றிக் களியாட்டமாகும். களியாட்டம் எனில் மதுவின்றி எப்படி? கவரப் போகும் முன் மது அருந்தி உள்ளான். கவர்ந்து வந்த பிறகான வெற்றிக் கொண்டாட்டத்திலும் மது இருந்துள்ளது. மதுவருந்தி, ஊன் சோறு உண்டு, அந்த எச்சில் கையை வில்லின் புறத்தில் தடவியபடி களத்திற்குக் கிளம்பியுள்ளான் ஒருவன்.

அவ்வையிடமும் ஒரு உண்டாட்டுப் பாடல் உண்டு. ஆநிரை கவர்தல் ‘வெட்சி’ திணையாகும். அப்படி பகைவர் ஆநிரைகளைக் கவர விடாது முறியடிப்பது ‘கரந்தை’ எனப்படுகிறது. வெட்சிப் போரில் வென்ற ஒருவனின் வாளைப் போற்றிப் பாடுவதாக அவ்வை ஒரு பாடல் பாடியுள்ளாள்.

“கரந்தை நீடிய அறிந்து மாறு செருவில்
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர்
கொடுஞ்சிறைக் குரூஉப் பருந்து ஆர்ப்ப
தடிந்து மாறு பெயர்த்தது, இக் கருங்கை வாளே” (புறம்: 269)

கரந்தை வீரர்கள் வில்லோடு பதுங்கியிருப்பதை அறிந்தும், பின்வாங்காது போரிட்டு பருந்துகள் ஆரவாரிக்கும் படி அவைகளுக்கு விருந்து வைத்தது இந்த வாள்தான்.

வெட்சிப் போருக்கு கிளம்பும் காட்சியும் இப்பாடலில் உள்ளது.

“புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்
ஒன்று இரு முறை இருந்து உண்ட பின்றை
உவலைக் கண்ணித் துடியன் வந்தென
பிழி மகிழ் வல்சி வேண்ட, மற்று அது
கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்தி!….”

புதிய சட்டியில் நிரப்பப் பட்டிருந்த புலியின் கண் போன்ற மதுவை இரண்டு முறை அருந்தி, பசுந்தழைகளால் ஆன மாலையை அணிந்த துடியன் துடி கொட்டி முழக்க, பின்பும் உண்ணத் தரும் கள்ளை மறுத்து, ஆனால் அந்தக் கள்ளினை வாழ்த்தி விட்டு கிளம்புகிறான்.

இந்தப் பாடலில் இரண்டு மதுக்கள் உள்ளன. ஒன்று வெப்பமானது என்பது உறுதி.( வெப்பர்). “பிழி மகிழ் வல்சி” என்பதைக் கள் எனக் கொள்வதும் சரியாகவே உள்ளது. வீரன் அளவு கருதி போதும் என்றானா? என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. போருக்கு வெறி அவசியம் என்பது போலவே தெளிவும் அவசியம் அல்லவா?

“புலிக்கண் வெப்பர்” என்பதை பேராசிரியர் ராஜ்கெளதமன் புலியின் கண் போன்ற மஞ்சள் நிற மது என்கிறார். இந்த உவமை நிறம் குறித்ததா என்கிற சந்தேகம் எனக்கு உள்ளது. புலியின் கண்களில் கனலும் சீற்றமும், ஒளியும் குறித்த உவமையாக இது இருக்கவும் வாய்ப்புள்ளது. எப்படியாயினும் மதுவில் புலியைக் கண்டவள் நிச்சயம் பெருங்கவிதான். புலிக்கும் மதுவிற்கும் சிலேடை போட்டால் இரண்டும் பாய்வன. வார இறுதி நாட்களில் மது, புலியைக் காட்டிலும் பன்மடங்கு பாயக் கூடியது.

ஒளவையார்

சங்கப்பாடல்கள் சிலவற்றிற்கு நானாவித உரைகளும் காணக்கிடைக்கின்றன. சிரிப்பை வரவழைக்கும் உரைகளும் உண்டு. விதவிதமான உரைகளுக்கு நடுவே நம் உரை என்று ஒன்றை உறுதி செய்வதற்கு சமயங்களில் நாள் கணக்கில் ஆகிறது. அதுவரையில் மண்டைக்குள் ஓயாத கூச்சல். மனம் விரும்பும் உரை ஒன்றை தேர்வு செய்தால், ஊழல்! ஊழல் ! என்று கெக்கலிக்கிறது அறிவு.

“வெள்ளை வெள் யாட்டுச் செச்சை போலத்
தன் ஓர் அன்ன இளையர் இருப்ப
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால் கழி கட்டிலில் கிடப்பி
தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே!” (புறம்: 286)

(ஆட்டுச்செச்சை- ஆட்டுக் கிடாய், மண்டை-உண் கலம், அறுவை- ஆடை)

வெள்ளாட்டுக் கிடாய்களைப் போன்ற இளைஞர்கள் பலரும் இருக்க அனைவரினும் மேலாக என் மகனுக்கென்று விசேஷமாகத் தரப்பட கள் கலயம், அவனை இப்படி வெள்ளாடை மூடி, கால் இல்லாத கட்டிலில் கிடக்கச் செய்து விட்டதே!

போரில் இறந்த தன் மகனைக் கண்டு அலறும் ஒரு தாயின் குரல் இது. இப்படித்தான் இப்பாடல் சிலரால் பார்க்கப்படுகிறது. தமிழின் குறிப்பிடத்தக்க கவியும் விமர்சகருமாகிய மோகனரங்கன் முதற்கொண்டு பலரும் இப்பாடலை இவ்வாறே பொருள் கொண்டு எழுதியுள்ளனர். எனக்கும் உவப்பானது இதுவே. இப்பாடலை விடுதலைப் புலிகளின் சயனைடு குப்பி வரை இழுத்துச் செல்லும் உருக்கமான வாசிப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன. போரால் சீரழிக்கப்பட்டிருக்கிற நமது காலத்திற்கு உகந்த வாசிப்பு இதுதான். காவிய கர்ணன் முதற்கொண்டு நன்றிக்கடனின் வரலாறு அவ்வளவு மேம்பட்டதாக இல்லை. அன்பிலிருந்தும், பாசத்திலிருந்தும், நன்றிக் கடனிலிருந்தும்தான் நமது அனைத்து முறைகேடுகளும் துவங்குகின்றன. தேசபக்தியை ஊதிப் பெருக்காமல் இவ்வளவு பெரிய போர்களை மனிதனால் நடத்தி முடித்திருக்க முடியாது.

ஆனால், அரசனால் அவ்வளவு ஸ்பெஷலாக கவனிக்கப்பட்ட தன் மகனுக்கு போரில் உயிரை ஈந்து, நன்றிக் கடனை செலுத்தும் காலம் இன்னும் வரவில்லையே என்று ஒரு தாய் வருந்துவதான வாசிப்பும் இப்பாடலுக்கு உள்ளது. “போர்ப்பித்திலதே” என்கிற முடிப்பு இவ்வாசிப்புக்கு இட்டுச் செல்கிறது. போரில் புறமுதுகு காட்டாது விழுப்புண் வாங்கி மடிந்த ஒருவனைக் கண்டு தாய் ஒருத்தியின் வாடிய முலையில் பால் சுரந்தது என்கிற அவ்வையின் பாடல் ஒன்றும் இந்நேரத்தில் நினைவில் எழுகிறது. அப்படி மறம் பாடியவள் இப்படி கண்ணீர் வடிப்பாளா? என்று தோன்றாமலில்லை. இரண்டும் வேறு வேறு மனங்கள். வேறு வேறு அன்னைகள் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? நல்லது. இந்தக் கட்டுரையில் ஒரு பொன் மொழி சொல்ல இந்த இடத்தை விட்டால் எனக்கு வேறு இடம் சிக்காது. பொன் மொழியை மனிதன் என்று துவங்குவதுதானே மரபு?

“மனிதன் எப்போதும் தன் விருப்பமே உண்மை என்று நம்ப விரும்புகிறான். ஆனால் பாருங்கள், உண்மைதான் உண்மை”

அடுத்த பாடலும் நன்றிக்கடனின் சதித்திட்டம் தான். இவன் பாட்டன் உன் பாட்டனை போரில் மடியாமல் காத்து நின்றான். இவனும் உன்னை அவ்வாறே காத்து நிற்பான். ஆகவே கள்ளை முதலில் இவனுக்கு உற்று என்கிற தந்திராலோசனை வெளிப்படும் பாடல் இது.

“இவற்கு ஈத்து உண்மதி, கள்ளே…..
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை,
எடுத்து எறி ஞாட்பின் இமையான் , தச்சன்
அடுத்து எறி குறட்டின், நின்று மாய்ந்தனனே;
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்,
உறைப்புழி ஓலை போல
மறைக்குவன்- பெரும! நிற்குறித்து வரு வேலே” (புறம்: 290)

(ஞாட்பு- போர், உறைப்புழி- மழைத்துளி, குறடு- மரத்துண்டு)

வண்டிச் சக்கரத்தின் ஆரக்கால்கள் போரில் எறியப்பட்ட அம்புகளுக்கு உவமை சொல்லப்பட்டுள்ளது. சக்கரம் ஆரக்கால்களைத் தன்னுள்ளே வாங்கிக் கொள்வது போல, அரசனை நோக்கி எறியப்பட்ட எல்லா அம்புகளையும் தன் உடலில் ஏந்தி மடிகிறான் அவ்வீரன்.

“சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி,
வாடு முலை ஊறிச் சுரந்தன-
ஓடாப் பூட்கை விடலை தாய்கே”(புறம்: 295)

(பூட்கை- உறுதி)

வீரமரணம் எய்திய தன் மகனைக் கண்டு ஒரு தாயின் தளர்ந்த மார்பில் மீண்டும் பால் சுரக்கிறதாம். இப்பாடலின் துறை “உவகை கலுழ்ச்சி” எனப்படுகிறது. கலுழ்ச்சி எனில் கண்ணீர்.

போர்க்களம் கொலைக்களம்தான். அங்கு இரக்கத்திற்கு இடமில்லை
ஆனால் ஒரு மறவன் போர்க்களத்தில் தன் முகத்தை மறைத்துக் கொண்டு சண்டையிட்ட காட்சி ஒன்றைச் சொல்கிறாள் அவ்வை. ஏன்? அவன் கண்கள் நெருப்பு. அதைத் தாங்கும் வலிமை எதிரிகளுக்கு இல்லை. ஆகவே கேடயம் போன்ற ஒன்றால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு சண்டையிடுகிறான். எப்போதும் கண்களில் கனலெரியும் நமது ஆக்‌ஷன் ஹீரோக்கள் புறநானூற்றிலிருந்துதான் புறப்பட்டு வருகிறார்கள் போல?

மாண்புமிக்க அவ்வீரன் மடிந்த போது பாடிய பாடல்…

” ……. பலர் குறை செய்த மலர்தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ, செருவத்து ;
சிறப்புடைச் செங்கண் புகைய, ஓர்
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே..” (புறம்: 311)

(குறை செய்தல்- ஏவல் செய்தல்)

அவன் நோக்கம் போரில் எதிரியை வெல்வதுதான் கொல்வதல்ல என்று இப்பாடலை வாசிக்கலாமா? வாசியுங்கள்.

அதியனைக் குறித்த இன்னொரு அழகான பாடல். அவன் எப்போதும் தன்னைக் காட்டிக் கொண்டே இருப்பவன் அல்ல. காட்ட வேண்டிய அவசியம் இல்லாத போது அவ்வளவு அமைதியாக மறைந்திருபவன். காட்ட வேண்டிய தருணத்திலோ அனலாக எரிபவன்.

“… நெடுமான் அஞ்சி-
இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போல,
தோன்றாது இருக்கவும் வல்லன், மற்றதன்
கான்றுபடு கனை எரி போல
தோன்றவும் வல்லன்- தான் தோன்றுங்காலே”(புறம்: 315)

அவசியமற்ற காலங்களில் வீட்டின் எரவாணத்தில் செருகி வைக்கப் பட்டிருக்கும் தீக்கடைக் கோல் போல இருப்பான். தீ மூட்டும் நேரத்தில் அதே கோல் நெருப்பைக் கடைந்து கடைந்து முழங்கச் செய்வது போல, அவசியமான காலத்தில் கட்டாயம் தோன்றி அருஞ்செயல்கள் ஆற்றுவான்.

அரசனைப் புகழ்ந்து பாடப்பட்ட ஒரு பாடல் என்பதைத் தாண்டி எல்லா மனிதருக்குமான ஒரு செய்தி உள்ளது இப்பாட்டில். மறைந்திருக்க முடிவதில்லை என்பது மனிதனின் முக்கியமான சிக்கல்களில் ஒன்று. சும்மா இருக்கும் சுகம் அவன் அறியாத ஒன்று. சமூக ஊடகங்கள் பெருகி, மனிதன் நொடிக்கு நொடி வெளிப்படத் துடிப்பவனாக ஆகிவிட்ட இந்தக் காலத்தில், அவன் தன் நெற்றியில் பொறித்துக் கொள்ள வேண்டிய பாடலாக மாறிவிடுகிறது இது.

அதியனை “மடவர்மகிழ்துணை” என்கிறது இப்பாடல். அறிவுடையோர் மட்டுமல்ல அறிவற்ற எளியோரையும் அன்பு செய்யக் கூடியவன் என்றும், சிறுவர்களுடனும் மகிழ்ந்திருப்பவன் என்றும் இதற்கு பொருள் சொல்லப்படுகிறது. இச்சொற்கட்டை மட்டும் தனியே பிரித்தெடுத்துக் கொண்டு வெகுதூரம் போனது என் மனம். ஒரு கட்டத்தில் கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது. நான் என்னையும் ஒரு மடவராகவே உணர்ந்தேன். இவ்வளவு மூட்டமான வாழ்விற்கு முன் தன்னை மடவர் என்று உணராதவர் யாரும் இருக்க இயலுமா? ஆனால் இவ்வுலகு அவர்களுக்கும் ஆனது. மடவரும் வாழத்தான் வேண்டும். மகிழத்தான் வேண்டும்.

அவ்வை மூவேந்தர்களையும் ஒரு சேர வாழ்த்திய பாடல் ஒன்று உள்ளது புறநானுற்றில். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல் என்ற ஊரில்தான் மூவேந்தர்களும் அவ்வையின் அழைப்பின் பேரில் ஒன்று திரண்டார்கள் என்று ஒரு கதை உள்ளது. அவ்வை அவர்களை வானத்து மீனினும், மழைத் துளி அளவினும் நீடு வாழச் சொல்லி வாழ்த்துகிறாள்.

” ..……. வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கு மாமழை உறையினும்
உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக, நும் நாளே”. (புறம்: 367)

நிலையாமை பேசி, வாழும் வகை சொல்கிறாள் இப்பாட்டில்.

” பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நார்அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும்…”

மகளிர் பொற் கிண்ணங்களில் ஏந்தி அளிக்கும், பன்னாடையால் வடிகட்டப்பட்ட, தெளிந்த கள்ளை மாந்தி மகிழ்ந்திரு! இரவலர்களுக்கு அவர் கலம் காலியாகாத வண்ணம் வழங்கி வாழ்ந்திரு!

தேவ லோகத்தையே மண்ணில் சமைத்து வைத்திருந்தாலும் இறக்குங் காலை அது உடன் வரப் போவதில்லை. உன் நல்வினைகள் மட்டும் உடன் வர முடியும்.

” நாகத்து அன்ன பாகுஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா…….
வாழச் செய்த நல்வினை அல்லது
தாழுங் காலைப் புணை பிறிது இல்லை”

பண்டைத் தமிழகத்தில் கள் உணவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. இரவலர்க்கும், விருந்திற்கும் வழங்கப்படும் ஒன்றாக அது இருந்துள்ளது. கொண்டாட்டத்தின் தவிர்க்க இயலாத பகுதியாக விளங்கியுள்ளது. பிறகு மது துயரத்தின் ஒரு பகுதியாகி, வெறுமையின் பகுதியாகி, நீ பாதி நான் பாதி என்றாகி இன்று மனிதன் மதுவின் ஒரு ஓரத்தில் குத்த வைத்து அமர்ந்திருக்கிறான்.

பாணன் ஒருவன் அதியனின் விருந்தோம்பலைப் போற்றிப் பாடுவதாக அவ்வை ஒரு பாடல் புனைந்துள்ளாள்.

மலைக் கூட்டத்தைப் போன்ற மாடங்கள் உடையது அதியனின் நகரம். அம்மாடங்கள் அதிரும்படி நான் என் பறையை முழக்கி நின்றேன். அதியன் என்னை நெடுநாள் காக்க வைக்காமல் அன்றிரவே அழைத்து, எனது நைந்த பழைய உடைகளைக் களைந்து, புத்தாடை அணியச் செய்து, மகிழ்வு தரும் கள்ளையும், அமிழ்து போன்ற ஊன் சோற்றையும் எனக்கு அளித்தான். கூடவே ஊர் எல்லையில் காத்திருக்கும் எனது பெரிய சுற்றத்தின் கவலைகளையும் போக்கினான்.

” …. என் அரை
முது நீர்ப்பாசி அன்ன உடை களைந்து
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ
மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்
அமிழ்துஅன மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி
முன் ஊர் பொதியல் சேர்ந்த மென் நடை
இரும்பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற……” (புறம்: 390)

(புதுமடி- புத்தாடை, மட்டு- கள், ஒக்கல்- சுற்றம்)

அதியனின் முன்னோர் தகடூருக்கு கரும்பைக் கொண்டு வந்த வரலாற்றுக் குறிப்பு அமைந்த பாடல் ஒன்று உள்ளது. அதியனின் மகன் பொகுட்டெழினியைப் பாடிய பாடல். நெல் மட்டும் விளைந்து வந்த தகடூரில் கரும்பை விளைவிக்க விரும்பிய அதியனின் முன்னோர் சோழ தேசத்து விவசாயிகளை வரவழைத்து கரும்பை விளைவித்ததாகச் சொல்லப்படுகிறது

“அந்தரத்து அரும்பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே” (புறம் : 392)

இப்பாடலில் பாணனின் கிழிந்த ஆடைக்கு ஒரு உவமை சொல்லப்படுகிறது.

“ஊர் உண் கேணிப் பகட்டு இலைப் பாசி
வேர்புரை சிதாஅர் நீக்கி…” (சிதார்- கந்தைத் துணி)

ஊர் முழுதும் நீர் உண்ணும் பொதுக் கிணற்றில் எப்படி பாசி படியாது கிழிந்திருக்குமோ அது போல கிழிந்த என் ஆடையை நீக்கி நல் ஆடையை உடுத்தச் செய்து , தேள் கடுப்பன்ன நாட்படு தேறலை, விண்மீன் போன்ற ஒளிவீசும் பொற் கலத்திலே அளித்து ஒரு விருந்தினனைப் போல் என்னை நடத்தினான் என்கிறான் பாணன்.

அதியன் மரணத்திற்குக் காரணமாக வழங்கப்பட்டு வரும் வாய் மொழிக் கதையொன்றை கி.வா.ஜகந்நாதன் தனது “அதிகமான் நெடுமான் அஞ்சி” என்கிற நூலில் குறிப்பிடுகிறார்.

அதியனின் மனைவிக்கு துணி வெளுக்கும் இளம்பெண் ஒருத்தியின் மீது அதீத அன்பு இருந்து வந்துள்ளது. கோட்டையின் ரகசிய வழிகளையெல்லாம் சொல்லிவிடும் அளவு அன்பு. பேரழகியான இளம்பெண்ணை அரண்மனை அதிகாரி ஒருவன் வழிமறித்து ஆசைக்கு இணங்கச் சொல்கிறான். அவள் மறுத்து, கண்ணீர் விட்டபடி போய் நடந்ததை அரசியிடம் சொல்கிறாள். அரசி அதைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஏழையெனில் எங்களுக்கு கற்பு இருக்காதா? என்று இளம்பெண் சீற, அரசி இது குறித்து அதியனிடம் முறையிடுகிறாள். அதியனோ “இவளும்தான் காசிற்கு பல் இளித்திருப்பாள். இங்கு வந்து பாதியை மட்டும் சொல்கிறாள்” என்று அழகியின் காதுபடவே இழிவாகப் பேசி விடுகிறான். அந்த அழகிதான் வஞ்சினம் கொண்டு கோட்டைக்குள் பதுங்கியிருந்த அதியனை முற்றுகையிடுவதற்கான சுரங்கப் பாதையை சேரனுக்குக் காட்டி கொடுத்தாள் என்கிறது அக்கதை.

அதியன் போரில் வீழ்த்தப்படுகிறான். அப்போது அவ்வை பாடிய பாடலொன்று புகழ் மிக்கது.

சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே!
பெரிய கள் பெறினே,
யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே!
பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே!
என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும்; மன்னே!
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்; மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என் தலை தைவரும்; மன்னே!
அருந் தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளை உரீஇ,
இரப்போர் கையுளும் போகி,
புரப்போர் புன்கண் பாவை சோர,
அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று, அவன்
அரு நிறத்து இயங்கிய வேலே!
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ?
இனி, பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை; (புறம்: 235)

கள் குறைவாக இருந்தால் அதை எமக்கென்று தந்துவிடுவான். நிறைய இருக்கையில் அவனும் எம்மோடு சேர்ந்து அருந்தி, எம்மைப் பாட வைத்து மகிழ்வான். உணவு கொஞ்சமாக இருந்தாலும் அவன் முன் பல கலங்கள் இருக்கும். நிறைய இருப்பினும் அங்கு பல கலங்கள் இருக்கும். ஊன் சோற்றில் எலும்பும் கறியும் கூடிய பகுதிகளையெல்லாம் எமக்கே தந்துவிடுவான். ஆனால் அம்பும் வேலும் சீறும் போர்க்களத்திலோ அவனே நிறைந்து நிற்பான்.

ஒளைவையார்

நரந்தப் பூவின் மணம் வீசும் தன் கைகளால் புலால் நாறும் எம் தலையை மெல்லத் தடவித் தருவான். அவன் மார்பில் தைத்த வேலானது, பாணனின் உண்கலத்தை ஊடுருவி, இரப்போனின் கையுள்ளும் புகுந்து, பாணனால் பாதுகாக்கபடும் சுற்றத்தாரின் கண்ணெல்லாம் சோர்ந்து மயங்க, அழகிய சொற்களும், நுண்ணறிவும் கொண்ட புலவர்கள் நாவில் சென்று தைத்தது.

எம் தலைவன் எங்குதான் உள்ளான்! இனிப் பாடுநரும் இல்லை. பாடுவவோர்க்கு ஒன்றை ஈகுநனும் இல்லை.

இப்பாடலில் மன்னே! மன்னே! என்று எழும் ஒவ்வொரு அசையும் மாரடித்துக் கதறுவது போல் ஒலிக்கிறது. அசைச் சொற்களுக்கு தனியே அர்த்தமில்லை என்கிறார்கள் இலக்கண ஆசியர்கள். ஆனால் இங்கே ‘ மன்னே’ என்னும் அசை நம்மைக் கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது.

பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே!

குளிர்ந்த துறையில் தோன்றிய, தேன் ஊறும் பகன்றை மலர் யாராலும் சூடப்படாமலேயே அழிந்து போவது போல, பிறர்க்கு ஒன்றை ஈயாதே மடிந்து போகும் மனிதரும் பலர்.

“உள்தெறு வெம்பகை ஆவது உலோபம்” என்கிறான் கம்பன்.
“மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்……வீழ்ந்தவரேனும்
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரோ?” (கம்ப ராமாயணம் )

கொடையில் அடைவது என்று ஒன்றுண்டு. புகழல்ல. வீடு பேறல்ல. விண்ணுலகல்ல. வேறொன்று. இதயத்துள் இயங்குவது. இதயம் என்றே கூட சொல்லலாம். மகத்தான காதல் பாடல்களில் விளிக்கப்படும் இதயம்.

கவிஞர் இசை

“நான் உன் இதயத்தின் சுவையறிந்தவன்” என்று துவங்கும் பாடலொன்றை நமது ரூமி பாடிவிட்டாரா? அவர் பாடாப் பாடலென்று ஏதாவது உள்ளதா?

*

ஒளவையார்: தமிழ்விக்கி

கவிஞர் இசை: தமிழ்விக்கி

.

3 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *