முல்லை உதிர்ந்த மணம் – சக்திவேல்
(யாரும் யாருடனும் இல்லை நாவலை முன்வைத்து…)
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்த்திருக்கிறீர்களா ? இல்லாவிடில் ஹாட் ஸ்டாரில் இரண்டு எபிசோடுகள் பார்க்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது!
உமாமகேஸ்வரியின் யாருடனும் யாரும் இல்லை நாவலுக்கும் பிரபல தொலைக்காட்சி தொடருக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் ? இரண்டிற்கும் கதைக்களம் கூட்டுக்குடும்பம் என்பது தான். மேலே குறிப்பிட்ட தொலைக்காட்சி தொடர்கள் முன்பு குடும்ப நாவல்கள் வகித்த பங்கை சமூகத்தில் ஆற்றி வருகின்றன. இன்று அநேகமாக கூட்டுக்குடும்ப சூழலே காணாமலாகி தனிக்குடும்பங்கள் நிலைபெற்றுவிட்டன. அடுத்தடுத்த தலைமுறைகள் குடும்பம் என்ற அமைப்பை சுமையாக எண்ணும் மாறுதலும் நடக்கிறது. குறிப்பாக குடும்பத்தின் மையமான குழந்தை வளர்ப்பு முன்னெப்போதும் இல்லாத அளவு அழுத்தத்தை கொடுக்கிறது. தனிமனிதர்கள் என்ற அளவில் நாடோடி தன்மையுடன் அலையும் கனவுகளை சுமக்கும் ஒரு தலைமுறை உருவாகி வருகிறது.
இக்காலக்கட்டத்தில் நாம் ஒரு சமூகமாக குடும்பம் என்ற அமைப்பை மறுபரிசீலனைக்கும் சமகாலத்திற்கேற்ப தகவமைக்கும் முயற்சிகளிலும் ஈடுப்பட்டாக வேண்டி இருக்கிறது. ஆனால் தமிழ் பொது சமூகம் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்களுக்கு தரும் ஆதரவை காண்கையில் “அப்படிப்பட்ட உன்னதமான குடும்ப அமைப்பா இருந்தது” என்ற கேள்வி எழுகிறது. அப்படியில்லை என்ற யதார்த்த சித்தரிப்பை எண்பதுகளில் கூட்டுக் குடும்பங்கள் பிரிய தொடங்கிய காலத்தை முன்வைத்து திரும்பி செல்ல முடியாத வழிகளை காட்டி நிற்கும் தன்மையாலேயே சமகாலத்தில் வாசிக்கப்பட வேண்டியதாக யாரும் யாருடனும் இல்லை நாவல் அமைகிறது.
திருமலாபுரத்தின் பெரும் பணக்காரர் பொன்னையா. விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் செட்டியாரிடம் விற்பனையை கற்றுக்கொண்டு ஏல வியாபாரத்தில் இறங்குகிறார். தொழிலில் நல்ல லாபம் பெருக்கி பெரும் அறுபது நெருங்குகையில் செல்வந்தராக இருக்கிறார். பொன்னையாவின் மனைவி அன்னம்மா. தர்மராஜ் – ராஜேஸ்வரி, செல்வம் – தனமணி, நரேந்திரன் – விஜயா, நந்தகோபால் – வினோதினி என நான்கு பேர் மனைவிகளுடனும் கடைக்குட்டியாக குணாவும் என ஐந்து மகன்கள். இரண்டு பெண்கள். முதல் பெண் பூரணி நாவலின் தொடக்க அத்தியாயம் ஒன்றில் வருவது தவிர்த்து பிற இடங்களில் பெயராக மட்டும் குறிப்பிடப்படுபவர். இரண்டாவது பெண் இருக்கிறார் என்பதற்கப்பால் ஒரு மனிதராக நமக்கு அறிமுகமாவது இல்லை.
தர்மராஜிற்கு சரவணன், குமார், வாணி, லதா, சுபா என ஐந்து குழந்தைகளும் செல்வத்திற்கு அனு, பானு, வசந்தி, பையன் என நான்கு குழந்தைகளும் விஜயாவிற்கு கைக்குழந்தையும் என பெருத்த குடும்பமாக பொன்னையா கட்டிய வீட்டில் ஐந்து மகன்களும் நான்கு மருமகள்குளும் பேரப்பிள்ளைகளும் ஒன்றாக வசிக்கிறார்கள். ஊராரால் கொடி வீடு என்றழைக்கப்படும் அவ்வீட்டின் மாமியாரின் மருமகள்களின் பேத்திகளின் அகவாழ்வே நாவலாக விரிகிறது. ஆண்களில் குணா மட்டுமே முழுமையாக வெளிப்படும் பாத்திரம். குழந்தைகளின் உலகத்தில் நுழையும் அன்பு சித்தப்பாவாக, பின்னர் வினோதினியின் காதலனாக முழுமையான ஆளுமையாக நம் முன் விரிபவன். குணாவிற்கு அடுத்தபடியாக தனியாளுமையாக தெரிபவர் பொன்னையா. மற்ற ஆண்கள் அனைவரும் பெண்களின் பார்வையில் உருவாகி வரும் கோட்டுச் சித்திரமாகவே இருக்கிறார்கள்.
அந்த வீட்டில் எல்லோரும் ஒன்றாக வாழ்ந்தாலும் யாவரும் தனித்தனியாகவே இருக்கிறார்கள் என்ற மைய தரிசனத்தின் வழியாக ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மாற்றி மாற்றி சொல்லப்படுகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்களின் வழி குடும்பத்தின் வெவ்வேறு பெண்களின் வாழ்க்கை காட்டப்படும் போது இல்லத்தில் அமைந்த பெண்களின் வாழ்க்கையை வாசிக்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது.
நாவலில் ஐந்தாறு பெண்கள் இருந்தாலும் வாசித்து முடிக்கையில் முதன்மையாக எழுந்து வருபவர்கள் செல்வத்திற்கு முதல் மகளாக பிறந்து தந்தையின் புறக்கணிப்பையும் தாயின் கண்டிப்பையும் பெற்று வளரும் பலகீனமும் பயமும் கொண்ட அனு, சிறுமியில் இருந்து கன்னி பருவத்திற்குள் நுழைந்து கால்கள் கட்டப்பட்டு சின்னஞ்சிறு மகிழ்ச்சிகளை மட்டுமே அறிந்து திருமணமாகி செல்லும் தர்மராஜின் முதல் மகளான வாணி, வாணியை போலவே அறியா பருவத்தில் குடிக்கார நந்தகோபாலுக்கு மனைவியாகி உடலின் தாபங்கள் நிறைவேறாது கொழுந்தன் குணாவை தேடிக்கொள்ளும் வினோதினி, பெண் குழந்தையை முதல் குழந்தையாக பெற்றமைக்காக கணவனால் கசங்கிய துணி போல் உபயோகிக்கப்படும் தனம், மூத்த மகன் கிறிஸ்தவ பெண்ணை காதலித்து கரம்பிடித்து நிற்கையில் பெரிய மருமகள் என்ற செருக்கழிந்து நிற்கும் ராஜி. மருமகள்களை இணைத்து வைக்க இறுதி மூச்சு வரை போராடிய மாமியார் அன்னம்மா. தன் தனிமையின் கழிவிரக்கத்தில் சுழன்று ஒருநாள் பலாத்காரம் செய்யப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் சுப்பக்கா.
முதல் அத்தியாயத்தில் பச்சிளம் குழந்தையாக அழும் அனுவை சமாதானப்படுத்தும் ராஜியின் செயல்பாடுகளே அக்குடும்பத்தில் அன்பின் நெருக்கத்தின் இடம் என்ன என்று காட்டிவிடுகிறது. கணக்குகளின் எல்லையை கடந்து நாவல் முழுவதிலும் நேர்மறையாக இருப்பவர் அன்னம்மா மட்டுமே. ராஜியிடமிருந்து இளங்குழந்தை அனுவை வாங்கி ஆற்றுப்படுத்துவது தொடங்கி, தனத்திற்கு இரண்டாவது குழந்தை பிறந்தபோது ஆறுதல் சொல்வது, படுத்தப்படுக்கையான பின்னும் வீட்டை தன் குரலாலேயே பிணைக்க முயல்வது, ஆதரவற்ற சுப்புவை தன் வீட்டிற்கு அழைத்து வருவது, பொன்னையாவிற்கு பார்கவியுடன் இருக்கும் தொடுப்பை அறிந்தும் சண்டை வளர்க்காமல் இருப்பது என முற்றிலும் நேர்மறையான ஆளுமை. அன்னம்மா இறக்கையில் கணவனின் கரங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார். ஆனால் தனிமையே கிடைக்கிறது.
அனு என்ற குட்டிப்பெண்ணின் வளர்ச்சி நாவல் முழுக்க நடக்கிறது. ஏறத்தாழ நாவல் நடக்கும் ஏழாண்டு காலத்தில் மூன்றாம் வகுப்பு செல்கிறாள். முதல் பெண் குழந்தையாக பிறந்து வளரும் அவளடையும் தனிமையும் எச்சரிக்கைகளும் அங்கே எந்த செயலிலும் முதலில் நிற்கும் அத்தனை பெண்களுக்குமானதாக விரிகிறது. முதல் பெண்ணாக பிறந்தமையாலேயே தந்தையின் கசப்பையும் விலக்கத்தையும் அறிய வேண்டி இருக்கிறது. அனு மட்டும் பூமாட்டிடமும் கடவுளிடமும் அப்பாவை பற்றி கேட்கிறாள். முதல் பெண் என்பதாலேயே குதிரை வண்டியில் நடுவே இருளுக்குள் உட்கார வேண்டும். வயல்காட்டில் சென்றால் பல்லாங்குழியுடன் தனியே நின்று கொள்ள வேண்டும். ஆலமரத்தடிக்கு விளையாட போனால் தூசி ஏறி மூச்சடைக்கும். ஆற்றில் இறங்க கூடாது என அம்மாவின் தடைகளும் எச்சரிக்கைகளுமே அனுவின் வாழ்வாக இருக்கிறது. ஒருவகையில் முதலிடங்களை நோக்கி செல்லும் அத்தனை பெண்களுமே அனுவை போலவே நடத்தப்படுகிறார்கள். குதிரை மேல் பறந்து தாவ ஆசைப்படும் அனுக்கள் குதிரை வண்டியின் நடுவேயும் பஸ்ஸிலும் பத்திரமாக அடைக்கப்பட்டு தன்னந்தனியாக ஊர்வலம் செல்வதே நடக்கிறது. ஓட்டபந்தய வீரங்கனையாக விரும்பும் வாணிக்கு தங்க கொலுசுகள் பரிசளிக்கப்படுகிறது.
அந்த பெண் குழந்தைகள் அம்மாக்களின் எச்சரிக்கையை மீறி ஆற்றில் கால்நனைத்து நடந்து போகும் காட்சியொன்று உண்டு. செல்லும் வழியில் தலைச்சரத்தின் முல்லைகள் உதிர்ந்து போகின்றன. மீண்டு வந்த பெண் குழந்தைகளில் வாணியையும் லதாவையும் ராஜி வெளுத்து வாங்குவதில் அனுவும் பானுவும் திக்கித்து பார்க்கிறார்கள். அந்த குழந்தைகளின் கண்ணீரால் கரைவது முல்லையின் வாசனை. அது அவர்களின் கனவுகளின் வாசனையும் கூட.
அனுவின் கனவு நட்சத்திரமான வாணிக்கா என்னும் வாணியே நாவலின் ஆளுமைமிக்க பெண்குழந்தை. சிறுமியின் சுதந்திரத்தையும் கன்னிமையின் காற்றை உணர ஏங்கும் சிறை வாழ்வை அடைந்து திருமணமாகி செல்பவள். வாணியும் பிற பெண் குழந்தைகளும் விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் சரவணனின் பிரஸ்தாபத்தை மொட்டை மாடியில் கேட்கும் இடம் ஒன்றுண்டு. தான் எப்படியெல்லாம் ஆவேன் என சொல்லிவிட்டு நக்கலாக எந்த பெண்ணுக்கு எப்போது கல்யாணம் ஆகும் என சரவணன் கணிப்பான். படியில் கலங்கிய கண்களுடன் இறங்கி செல்லும் சிறுமியர் மலைகளை பார்த்து செல்வார்கள் – தங்களால் அணுகவே முடியாத மலைகளை. அந்த மலை ஆண்களாலும் சமூகத்தாலும் சக பெண்களாலும் தங்களுக்கு தாங்களேவும் உருவாக்கி வைக்கப்பட்ட மலை அல்லவா!
வாணி பூப்பெய்தும் பருவம் அடைந்தவுடன் அம்மா மெல்ல அவளது வெளிக்கதவுகளை சாத்தி விடுகிறாள். அவளது உடல் திறந்து கொண்டதுடன் அவளுக்கான வெளிக்கதவுகளை எப்போதைக்குமாக சாத்திவிட்டாள் என்பன போன்ற பல கூர்மையான வரிகள் நாவலில் வருகின்றன. பூப்பெய்தியவுடன் தாத்தா தங்க கொலுசு தருகிறார். தடகளத்தில் ஷுவுடன் ஓட வேண்டி கனவு காணு்ம் வாணிக்கு அணியறையை அலங்கரிக்கும் கொலுசுகள். அப்பா பரிசு என்று சொல்லி பள்ளிக்கு தடை விதிக்கிறார். கட்டுபாட்டையும் கணக்கையுமே அன்பென்று பெண் மேல் விதிக்கும் ஒரு சமூகம். அல்வா தட்டை விசிறியடிக்கும் வாணியின் தனிமை யாருக்கும் புரிவதில்லை. பள்ளி செல்ல வேண்டும் என்ற அவள் வேண்டுதல் கடவுளை எட்டுவதுமில்லை.அந்த தனிமையே வீட்டில் இருக்கையில் வளர்கிறது. பெரியவர்களின் உலகத்தில் நுழைய விருப்பமில்லாதவள், அதன் உராய்வின் வெப்பத்தை கண்டு விலகியபடி சுற்றிவர வேண்டி இருக்கிறது.
அம்மாவிடம் தனக்கு கிடைக்காத நெருக்கத்தை அனுவை தான் அம்மாவாக ஏந்தி கொள்கையில் பெறுகிறாள் போலும் வாணி. அந்த பகுதியில் மாடிப்படியின் அடியில் ஏலக்காய் புடைத்தெடுத்த குப்பை மூட்டையின் பக்கத்தில் தங்கள் உடல்களை தீண்டி விளையாடும் வாணியும் மங்காவும் லாதவும் சுபாவும் செயலை எழுதுவதே துணிகரமானது. சற்று பிசகினாலும் வெளிறி போய்விடக்கூடி பகுதி சேதமில்லாமல் காணக்கிடைக்கிறது. கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் எந்த இடத்திலும் ரகசிய மீறல்கள் இருந்தபடியே இருக்கின்றன. அந்த மீறலை வினோதினி அறிந்திருக்கலாம் என்பதே வாணியை உடலின் தாபங்களுக்கு பழக்கும் வினோதினியின் செயல்பாட்டின் வழி உணர முடிகிறது.
இந்த குறுகிய கால இடுங்கலான வழிகளின் இன்பம் விரைவிலேயே முடிந்து வாணிக்கு திருமணம் நடக்கிறது. பொன்னையா இறந்த நிகழ்வு சொல்லப்பட்ட அடுத்த அத்தியாயத்திலேயே வாணியின் திருமணம் சொல்லப்படுவது தற்செயல் என்று நினைக்க முடியவில்லை. அங்கே தாத்தா இறக்கிறார். இங்கே வாணிக்கும் தனக்குள் இருக்கும் மிக மென்மையான பகுதி ஒன்றின் இறப்பு தெரிகிறது. அதை குறித்து அஞ்சி அழுகிறாள். ஏனெனில் அதை தானே தன் அம்மாக்களிடமும் சித்திகளிடமும் பார்த்து வருகிறாள். இறுதியில் உடன்படுகிறாள்.
வாணியின் திருமணத்தின் போது 200 பவுன் நகையில் பத்து பவுன் குறைந்து அச்சத்திற்கு உள்ளாகி தங்கைக்கான நகையில் இருந்து எடுத்து வைக்கப்பட்டு கல்யாணம் கையமர்த்தப்படுகிறது. இதற்கு பின் நாவலில் வாணியை எங்கும் பார்க்க முடிவதில்லை. நாவலும் விரைவான தாளகதியில் முடிந்து விடுகிறது. ஆனால் வாணிக்கு நகை தேடும் படலம் ஒன்றை ஆழமாக சொல்கிறது. அங்கே பெண்ணின் மதிப்பு நகையினால் அளக்கப்படுகிறது. உணர்வுகளை உலோகங்களின் வலிய கரங்களால் நசுக்கப்படுகிறது. இன்றைக்கு நகைகள் மாறினாலும் வேறு பொருள்களால் நம் பெண்களை தராசில் அளந்தெடுத்து தொடர்ந்தபடியே தான் இருக்கிறது. இந்த நசுங்கலில் திணறும் வாணியின் உணர்வுகள் தனிமையில் படர்கின்றன.
வாணி தனக்கு ஏன் இவ்வளவு சீக்கிரம் திருமணம் என வினோ சித்தியை கேட்கும்போது தானும் அதே கேள்வியை கேட்டதை வினோதினி நினைத்து கொள்கிறாள். வாணி எந்த வலையை நினைத்து மருண்டு பின் இயல்பானாளோ அந்த வலையால் இரக்கமற்று விழுங்கப்பட்டவள் என்று வினோதினியின் வாழ்க்கையை பார்க்கலாம். ஒவ்வொருநாளும் தன் வயதொத்த ஓரகத்தி விஜயாவின் கொண்டாட்டங்களை நினைத்து பொருமலும் தன் குடிக்கார கணவனின் வல்லுறவுகளை நினைத்து கசந்தும் காலத்தை கழிக்கிறாள். படிப்படியாக உடலின் தாபங்கள் வெளிப்பட்டு குற்றவுணர்ச்சியை மழுங்கடித்து வேட்டை கண்களுடன் குணாவை பிடிக்கும் வினோதினியின் மாற்றம் மொழியில் நிகழ்கிறது.
அந்த உறவின் இளங்காதல் வெம்மையே ஆழமும் மர்மமும் கொண்டதாக மாற்றுகிறது. குணாவின் பார்வையில் இருந்து அவர்களுக்கிடையேயான உறவின் போது அவன் எப்போதும் கேட்கும் “என்னுடன் வருகிறாயா?” என்ற கேள்வியையும் வினோதினியின் மௌனத்தையும் நினைவு கொள்கிறான். அத்தகைய இடங்களே குற்றவுணர்ச்சிக்கும் மீறலுமான பாதையில் தத்தளிக்கும் மனத்தோடு பரவசங்களை பிடித்திட முயலும் மனித விருப்பத்தை காட்டுகின்றன.
வினோதினி கருவுற்றவுடன் கொள்ளும் மாற்றமும் குணாவிற்காக ஏங்குவதும் குற்றவுணர்ச்சி கொள்வதும் பொறுப்பை கண்டு விலகியோடும் மனநிலையின் வெளிப்பாடு எனவும் கொள்ளலாம். கருவை கலைக்க முடியாது தன் மூத்த ஓரகத்தியும் சொந்த அக்காவுமான ராஜியிடம் சொல்வதும் ராஜியின் இரக்கமற்ற தன்மையும் வினோதினியின் தனிமையை துலக்குகின்றன. கருக்கலைப்பின் வலியில் தன்னந்தனியாளாகிறாள். அடிப்படையில் எல்லா வலிகளும் நம்மை தனிமை சிறையில் ஆழ்த்துகின்றன. அல்லது உடலாலும் உள்ளத்தாலும் தனித்து விடப்படுதலையே வலி என்கிறோம். வினோதினியின் நடவடிக்கைகளை யாரும் புரிந்துகொள்ள தயாராயில்லை. ஏனெனில் ஒருவருடையதை புரிந்து கொள்ள நேரிட்டால் எல்லோருடையதையும் புரிந்து கொள்ள நேரிடும். சமூகத்தில் ஒவ்வொருவரும் அடுக்கி வைத்த பிம்பங்கள் கலைய நேரிடும். அக்காவில் தொடங்குவது குடும்பமாக விரிகிறது. வினோதினி நிரந்தர தனிமைக்குள்ளாக்கப்பட்டு தற்கொலை வரை செல்கிறாள். அவள் தற்கொலை செய்ய பாலிடலை அருந்தும் போது மேலே குழந்தைகள் நிலாச்சோறும் இரவுப்பாட்டுமாக இருப்பது அற்புதமான காட்சி. வினோதினியின் தனிமையின் தீவிரத்தை சட்டென காட்டிவிடுகிறது.
அங்கே குழந்தைகள் பாடும் இராம கதை வினோவின் கதையில் ஊடாடுவது கற்பு என பெண்ணுக்கிட்ட வரையறையை மறுவிசாரணைக்கு அழைக்கிறது.
தற்கொலை முயற்சியில் இருந்து மீண்டுவருபவள் மேலும் உக்கிரமான தனிமையையும் அதிலிருந்து குரோதத்தையும் இறுதியில் வீட்டையும் சொத்தையும் பிரிக்க கால்கோலிடுகிறாள். வினோதினியின் கதையில் கருக்கலைப்பிற்கு பின் அந்த உறவு தொடரும் தன்மை குறிப்புணர்த்தி காட்டப்படுகிறது. குற்றம் பொறுப்பாக மாறுகையில் குற்றவுணர்ச்சியும் அப்படியல்லாத போது மகிழும் மனநிலையும் வினோதினி – குணா உறவில் எழுந்து வருகிறது.. அவர்களின் உறவு பகிரங்கம் செய்யப்படும் போதும் பொன்னையா குணாவை பார்த்து கேள்வி எழுப்பவில்லை. அது வினோதினியை நோக்கியே எழுகிறது. ஆண்களால் பழிவாங்கப்படுபவள், தன் பங்கிற்கு கணக்கு தீர்த்து கொள்ளும்படியாக சொல்லி விடுகிறாள். ஆனால் எந்த பழிவாங்கலும் தப்பித்தலும் ஒரு குற்றம் என்பதால் அந்த உறவை புதுப்பிக்க விரும்புகிறாள். மாடியில் முல்லைக்கொடிக்கு கீழே குணாவும் வினோதினியும் இறுதியாக பேசி கொள்வது ஒரு காதலின் முறிவு. என்றென்றைக்குமான முறிவு. அதை மனம் சமனப்பட்டு வினோதினியே ஏற்றுக்கொள்வதை சொத்தை பிரித்தப்பின் ஒரு மாலையில் புடவை மடித்தப்படி மாலைப்பொழுதின் மயக்கத்திலே பாடலை முணுமுணுக்கையில் உணர்கிறோம்.
வினோதினியுடன் இணையும் குணாவே நாவலில் முழுமையாக வரும் ஆண். பிள்ளைகளின் மனம் கவர் சித்தப்பாவாக இருக்கிறான். அப்பாக்களுக்குரிய கண்டிப்புகள் இல்லாத பெண் பிள்ளைகளின் விருப்பமான தந்தை வடிவம். அனுவிற்கு கடிதம் எழுதும் கடவுளாகவும் பிள்ளைகளுக்கு கதைச்சொல்லும் வேடிக்கை காட்டும் இளம் தந்தையின் குறும்பும் சந்தோஷமும் பொங்கி வரும் ஆளுமை. குணாவின் பாத்திரமும் வினோதினியை நினைக்க தொடங்கும்போது தான் ஆழம் கொண்டதாக உருமாறுகிறது. ஏலக்காய் தோட்டத்தில் நின்றபடி அதன் பசுமை குளிரை காதலியின் குளிர் கரங்களாக எண்ணுவதில் தொடங்கி வினோதினியில் நினைவுகள் மூட்டி தவறிப்போன வாய்ப்பை நினைத்து பார்க்கையில் காற்றில் பறக்கும் தும்பை விதையின் தவிப்பை உணர்கிறோம். அந்த படப்படப்பு அன்னம்மா இறந்தவுடன் தடைகளற்று பரவுகிறது. நட்டநடு வீட்டில் குணா பிள்ளைகளுக்கு மத்தியில் வினோ கையில் தோசை ஊத்தும் பகுதி கச்சிதமானது. எல்லாம் ஒழுங்கில் செல்கின்றன என பிரமை கொண்டிருக்கும் வீட்டில் ஒரு ஓடம் தனித்து செல்கிறது. அதில் குணாவும் வினோதினியும் ஓசையெழாது துடுப்பு வலிக்கிறார்கள்.
காமத்தில் துளிர்த்த உறவு மெல்ல இறுகி காதலாக தன் அகத்தில் நிறைவதை குணா உணரும் அத்தியாயமும் பிரமாதமாக வந்த ஒன்று. தனக்கு அண்ணனின் மனைவியுடன் இருக்கும் உறவு குறித்த குற்றவுணர்ச்சியே இல்லை என்பதை உணர்கிறான். அதனாலேயே வினோவை பார்த்து என்னுடன் வருகிறாயா என்று கேட்கிறான். அவளுக்கோ நிலத்திலும் வானத்திலுமென இருகால்களாக அல்லாடுகிறாள். இறுதியில் வானத்து பிடிகள் முல்லை பந்தலின் கீழ் உதிர்ந்து விடுகின்றன.
அந்த விரக்தியில் குணாவும் வீட்டை கிளம்பி விடுகிறான். கடவுளில்லாத அனுவின் தனிமைகள் கூடுகின்றன. அம்மாவுடனும் அப்பாவுடனும் ஒட்ட இயலாத தன்மைகள் அவளை வருத்துகின்றன.
வினோதினி – குணா காதல் உறவில் ஒப்புநோக்க குணாவின் ஆளுமை சற்று மங்கியே இருக்கிறது. வினோதினியின் தனிமைகள் கொள்ளும் ஆழத்தை பார்ப்பது போல குணாவை காண முடிவதில்லை. இவர்களுக்கிடையில் நிற்கும் நந்தகோபால் குறித்த ஒரு அத்தியாயம் வருகிறது. தன் மது மயக்கை நினைத்து மகிழ்ந்தும் வினோவை பார்த்து சிரித்து பரிகசிக்கும் நந்தகோபால் வலு குறைந்த கதாப்பாத்திரமாகவே இருக்கிறான்.
வினோதினி நினைத்து ஏங்கும் விஜயாவின் அகவாழ்க்கை சார்ந்து நாவல் விரிந்து செல்லவில்லை என்பது ஒரு குறையே தான். ஏனெனில் அங்கிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் வெளி தெரியா தனிமை இருக்கிறது. அப்படிப்பட்ட தனிமையை உணர்பவர்களின் புறவாழ்க்கையில் தடயங்களை தேடி சேகரித்துவிட முடிகிறது. அப்படி புறத்தடயமே இல்லாத அந்த வீட்டின் பிற பெண்களால் பொறாமைப்படும் விஜயாவின் அகவாழ்க்கை விரிவது நாவலின் பரிமாணங்களை நகர்த்தும். விஜயா தனிமையை உணர்ந்தாலோ இல்லையென்றாலோ அவளது வாழ்க்கை பிறரின் தனிமைகளுடன் ஏற்படுத்தும் ஊராய்வும் உறவுகளில் மனிதர் உணரும் தனிமையின் ஆழத்தை அதிகப்படுத்தி வாசக பங்கேற்பிற்கு கூடுதல் இடத்தை வழங்கியிருக்கும்.
பிற இரண்டு மூத்த மருமகள்களில் தனத்தை நாம் அடிக்கடி பார்த்தோ கேள்விப்பட்டோ இருப்போம் நாவலின் மற்ற பெண்களை போலவே. பெண் பிள்ளையை பெற்றதால் மட்டுமே கணவனால் விலக்கப்படுபவள். அனுவிற்கு மூச்சு திணறல் வருகையில் விலகி செல்லும் செல்வமும் விக்கித்து நிற்கும் தனமும் கூரிய செதுக்கல்கள். அனுவை நினைத்து பயப்படுவதும் அதனாலேயே அவளிடமிருந்து தனம் விலக்கமும் கொள்கிறாள். நாவல் தொடக்கத்தில் இதே அனுவை நினைத்து உயிர்பிழைத்தும் வருகிறாள். குழந்தையை சுமந்து பெற்று வளர்க்கும் கருப்பையாக மட்டுமே பெண்ணை சுருக்கும் தன்மையின் உதாரணம் தனம். குறிப்பாக நான்காம் கருவின் போது தனம் கொள்ளும் வெறி, தன்னை கருப்பையாக மட்டுமே சுருக்குவதால் ஏற்படும் மன அழுத்தம் என்றே சொல்லலாம். நம் அம்மாக்களில் பெரும்பாலானோர் அப்படித்தானே.
மூத்த மருமகள் ராஜிக்கும் வீட்டிற்கும் ஓரளவு சுமுகமான உறவு உண்டு.. ஏனெனில் கொத்துச்சாவியுடன் பிடி அதிகாரம் கூடுதல் என்பதால். ஆனால் தர்மராஜின் சாப்பாட்டு ருசி குற்றத்தை வைத்தே அவளது அகத்தை புரிந்து கொள்ளலாம். அந்த சாப்பாட்டுக் கடையின் இறுதியில் அந்த வீட்டு பெண்கள் தங்கள் பொழுதுகளை மாற்றி மாற்றி நெருப்பிலிட்டு கொளுத்தி கொண்டிருப்பார்கள் என்ற கூரிய வரி ராஜியை மட்டுமல்ல, வீட்டு பெண்களின் அத்தனை பேரையும் குறித்து விடுகிறது. வாணி வயதுக்கு வருகையில் ராஜி கொள்ளும் விலக்கத்தை சொல்லலாம் இறுதியாக சரவணன் கிறிஸ்தவ பெண்ணை அழைத்து வருவது. அந்த இடம் சம்பிரதாயமாக முடிந்து விடுகிறது. அங்கே சற்று விரிந்திருக்கலாம்.
மேற்படி வீட்டு பெண்களை தவிர நாவலில் திருமலாபுரத்து கொடிவீட்டுடன் நெருக்கம் கொள்ளும் இரு பெண்கள் மகள் பூரணியும் அன்னம்மாவால் அழைத்து வரப்பட்ட சுப்பக்காவும். ஓரே ஒரு அத்தியாயம் மட்டும் முழுமையாக வரும் பூரணி மைய ஓட்டத்தில் இருந்து தனித்து இருந்தாலும் வீட்டை விட்டு சென்று வாழ்க்கை சரியாக அமையாத பெண்களை பிறந்த வீடு நடத்தும் விதத்தை காட்டுகிறது. யதார்த்த ரீதியான சித்தரிப்பில் முழுமை இருந்தாலும் பூரணி குறித்த அத்தியாயம் நாவல் ஆசிரியருக்குண்டான தனிப்பார்வை ஏதும் இல்லை என்பது குறையாக உள்ளது. எனினும் கணவனால் அடித்து தனியாக துரத்தப்பட்ட பூரணியின் உணர்வுகள் தன்மானமும் அதை இழத்தலின் துயரும் உணர்வுடன் கடத்தப்படுகிறது. சொத்தில் பங்கு கேட்க வரும்போது கொள்ளும் மிடுக்கும்..
நாவலில் சில அத்தியாயங்களே வருபவராயினும் தீபாவளி சக்கரம்போல சுழன்று அணையும் சுப்பக்கா அழுத்தமான பாத்திரம். உடற்குறை கொண்ட அன்னம்மாவின் கருணையால் அவ்வீட்டிற்கு வந்து அதன் மொசைக் தரையுடன் ஒட்டாத தன் ரப்பர் செருப்பணிந்த கால்களால் வலம் வரும் சுப்பக்கா முற்றிலும் தனித்துவிடப்பட்ட பெண்களின் பிரதிநிதி என்றே கொள்ளலாம். அவள் அணிந்திருக்கும் செருப்பு திடப்பொருள் என்பதற்கப்பால் வளர்ந்து அந்த வீட்டிற்கும் அவளுக்கும் இடையில் நிற்கும் சமூக விதிகளாக, உறவு முறைகளாக, சளைக்காத உடல் உழைப்பாக, குழந்தைகளுக்கு கதையாக, சுப்புவின் தன்னிரக்கமாக பல்வேறு அர்த்தம் கொள்ளும் படிம சாத்தியத்தை அடைகிறது. இறுதியில் சுப்புவின் மூலம் போலவே ஏனென்று தெரியாமல் தென்னந்தோட்டத்து மூத்துராஜாவால் பலாத்காரம் செய்யப்பட்டு, கனவுகளை இழந்தவள் ஆற்றில் தற்கொலை செய்து கொள்கிறாள். சுப்பு பலாத்காரம் செய்யப்படுவதற்கு முன்பு பொன்னையா தனக்கு பார்த்த திருமண பேச்சை வேண்டாம் என உறுதியாக மறுத்துவிடுகிறாள். எல்லோரும் உடற்குறையே காரணம் என நினைக்கிறார்கள். பெற்றுக்கொள்பவர்களுக்கு தெரியும் இரக்கத்திற்குரியவர்களாக இருப்பதன் வலி. நாமனைவரும் உணர்ந்தே இருந்தாலும் பிறருக்கெனில் மரத்து போய்விடும் தருணம். ஏனெனில் கொடுத்தலின் அகங்காரம் அது.
ஆண்களில் குணாவிற்கு அடுத்தபடியாக நமக்கு நன்றாக தெரிபவர், பொன்னையா மட்டுமே. பொன்னையா தன் வாழ்க்கையை நினைவுகூரும் அத்தியாயம் உலகியல் வெற்றிகளின் உள்ளீடின்மை, அடைந்தவுடன் பாதையில் கைவிட்டு வந்தவற்றின் மீதான ஏக்கம். தனித்து நிற்கும் நிலை. அடுத்து தன் காமத்தையும் தனக்கு பார்கவியுடன் உள்ள தொடர்பு, அதை தெரிந்தும் தெரியாததுபோல காட்டிக்கொள்ளும் அன்னம்மாவின் பெருந்தன்மை கொடுக்கும் குற்றவுணர்ச்சி. அதை குற்றவுணர்ச்சி என்பதைவிட வாழ்க்கையில் சுவாரஸ்யமாக பற்றிக்கொண்டு ஓட எதுவுமில்லாமல் போவதன் வெறுமை எனலாம். இறுதியில் தன்னை போன்றே இருக்கும் மகனின் தவறுக்கு தான் நீதி சொல்ல நேரும் அவலமும தலைக்குனிவும் என அன்றாடத்தில் வெற்றி பெற்ற ஒருவரின் தோல்வி கதை பொன்னையாவுடையது. மரணத்திற்கு பின் பொன்னையாவை பார்க்க வரும் பார்கவி நாவல் சொல்லும் யாரும் யாருடனும் இல்லையில் பொருந்தினாலும் தேய்வழக்கு தன்மையும் கொண்டிருக்கிறது.
பொன்னையாவின் இறப்பிற்கு பின் நாவல் துரிதகதியில் ஓடி வீடு பிரிக்கப்படுகிறது. நரேந்திரன் தன் பங்கில் இருந்து செல்வத்தின் வீட்டில் பூக்கும் முல்லை கொடியை வெட்டி வீழ்த்துகிறான். நாவல் முழுக்க வீட்டு பெண்களின் கனவுகளின் மணம் முல்லைகளாக உதிர்ந்து உலர்வதை காண்கிறோம். கணக்குகளையும் கட்டுபாடுகளையுமே அன்பே என அறிந்து தனித்திருக்கும் அவர்களுக்கு மத்தியில் குழந்தைகள் மட்டுமே மகிழ்வுடன் பாடுகிறார்கள்.
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும்
கல்யாணமாம்
சோளத்தட்டை பல்லக்கிலே
ஊர்வலமாம்.
நாவலில் வரும் ஒவ்வொருவரும் – முதன்மையாக பெண்கள் – புரிந்து கொள்ளப்படுவதற்கான அன்பின் ஏக்கத்தில் உலகத்தின் மூர்க்கமான கணக்குகளால் வெட்டித்தள்ளப்பட்டு தனிமை அடைகிறார்கள். அந்த கணக்கை அன்பென்று ஏற்று வாழப் பழகி கொள்கிறார்கள். அதனை கவிஞர் இசையின் பாதிசுத்தமான பரிசு என்ற கவிதையின் வரிகளுடன் நினைத்து கொண்டேன்.
அன்பும் கணக்கும் கலந்த
இந்தக் குழப்பமான உலகத்தின்
பிரதிநிதி போல
இங்கு வந்து அமர்ந்துள்ளது அது
அன்பை எப்படி அணைக்காமல் இருப்பது ?
கணக்கை எப்படி விரட்டாமல் இருப்பது ?
ஆயினும்
கணக்கைப் பார்க்கப் பார்க்க பாவமாக இருந்தது.
கடைசியில்
அந்தக் கணக்கையும்
ஒரு அன்பாக்கி அணிந்து கொண்டேன்
*
யாரும் யாருடனும் இல்லை நாவலின் கதைமாந்தர்களின் சித்தரிப்பு வழியாகவும், இயல்பாகவே இந்த களத்தின் ஒட்டுமொத்தத்தையும் நோக்கும் உங்கள் பார்வையின் வழியாக நாவலைப் பற்றிய நல்ல அவதானிப்புகளை வழங்கியிருக்கிறீர்கள்.