“அணை வெள்ளம் தானே அதிக வேகம்”: உமாமகேஸ்வரி
(உரையாடல்)
தொண்ணூறுகளில் எழுத ஆரம்பித்து 2000-களில் தீவிரமாக எழுதியவர் உமா மகேஸ்வரி. ஜெயமோகன், பா.வண்ணன், எம். கோபாலகிருஷ்ணன் என அவர் எழுத வந்த காலகட்டத்தைய எழுத்தாளர்களால் முன்வைக்கப்பட்டவரும் கூட. அதற்கு முந்தைய தலைமுறையில் விமர்சகரான வெங்கட்சாமிநாதன் இவருடைய படைப்புகள் பற்றிய கட்டுரையை எழுதியுள்ளார். சுனில் கிருஷ்ணன், சுரேஷ் ப்ரதீப் என இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் முன் வைக்கும் எழுத்தாளராக உமா மகேஸ்வரி உள்ளார். அவருக்கு சிறப்பிதழ் கொண்டு வரலாம் என முடிவு செய்த போது நண்பர்கள் அவரை வாசிப்பதற்கும், தொகுத்துக் கொள்வதற்கும் வாய்ப்பாக எடுத்துக் கொண்டோம். நீலி மின்னிதழ் வழியாக இந்த உரையாடல் அவரின் படைப்புகளை மேலும் புரிந்து கொள்ள உதவும்.
-ரம்யா
*
இன்றைய காலகட்டத்தை தனியர்களின் காலகட்டம் என்று சொல்லலாம். கூட்டத்திலிருந்து தனித்தலையும் ஒரு விலகல் தன்மையையே பெரும்பாலும் காணமுடிகிறது. ஒருவகையில் இந்த விலகல் உங்கள் நாவலில் வரும் ஆண்களைப் போலவே அல்லது நீங்கள் யாரும் யாருடனும் இல்லை என்று சொல்வதைப்போலவே கூட்டுக் குடும்பத்தில் ஆரம்பித்த அந்த தனித்த மனநிலையின் நீட்சி என்று சொல்லலாமா?
எல்லோரும் தனியர்களாக இருக்கிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எல்லோரும் கையில் ஒரு மொபைலோடு இருக்கிறார்கள். எங்கம்மா ஆச்சர்யமா சொல்லிட்டு இருப்பாங்க. ”வயல்ல வேலை செய்ய ஆளு கிடைக்க மாட்டிக்காங்க. எல்லாரும் ஏதோ ஒரு வயர் இல்லாத டப்பாவ காதில் வச்சிட்டு அதையே பாத்துக்கிட்டு பேசிக்கிட்டு இருக்காங்கன்னு.” அப்ப யாரும் தனியாகவெல்லாம் இல்லை. மீடியால்ல இருக்காங்க. ஃபேஸ்புக், வாட்ஸாப் இன்னும் நிறையா.. அதுல இருக்கவங்க கூட தொடர்பில இருக்காங்க. சுலபமா தொடர்பு கொள்ள முடியுது. அதனால அன்பு, காதல் எல்லாமே எளிதாக ஆகிடுது. யாரும் யாரோடையும் உண்மையான இணக்கத்தோட இல்லை. ஒருவகைல பார்த்தா நல்லது. காதல் அன்புன்னு நம்பிக்கை கொடுத்து ஏமாற்றினால் சாக வேண்டாம். ஆனா இன்னொரு வகைல இதையெல்லாம் எள்ளி நகையாடுவது வருத்தமாத்தான் இருக்கு. திருப்பரங்குன்றம் மலைல போனா அரவிந்தன் பூரணினு குறிஞ்சி மலர் நாவலோட கதாப்பாத்திரங்கள் பொறிச்சு வைச்சிருப்பாங்க. லைலா-மஜ்னு காதல், ஒளவை-அதியமான் நட்புன்னு சொன்னா இன்னைக்கு எல்லாரும் சிரிப்பாங்கல்ல. அது பாக்க கஷ்டமாத்தான் இருக்கு. அடுத்தடுத்துன்னு போய்ட்டே இருக்காங்க. இனியெல்லாம் “காதல் காதல் காதல்.. காதல் போயின் சாதல்..” வாய்ப்பில்லை. ஆனா இன்னைக்கும் எங்கையோ அதுக்காக இவர்களால் பாதிக்கப்படறவங்க சாகறதும் நடக்குது. அன்புக்கான வரையறைகள் காலகட்டத்துக்கு ஏத்தாப்ல, ஆட்களுக்கு ஏத்தாப்ல மாறிட்டே இருக்கு. இதெல்லாம் வெறுமே என்னால் பாக்க மட்டும் தான் முடியுது. வேற என்ன சொல்ல?
உங்கள் கதைகளில் பெண்கள் மட்டுமே அன்பு மேல் நம்பிக்கை உள்ளவர்களாக, ஏக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். உள்ளார்ந்து அன்பு என்பதற்கு ஒரு மாறாத வரையறை உண்டு தானே. உங்களைப் பொறுத்து அது என்ன?
நீங்க கேட்டதுக்கு பின்னால் தான் இதை யோசிக்கிறேன். இதையெல்லாம் வரையறுத்துக்கனுமா? என் வரையில் அன்பு என்பது ஒருவரை அவராகவே இருக்க அனுமதித்தல். ஏனெனில் என்னை யாரும் அப்படி இருக்கவிட்டதில்லை. யாரும் யாரையும் அப்படி இருக்க விட மாட்டார்கள். மனைவியாக, கணவனாக, அம்மாவாக, பிள்ளையாக ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உள்ளது. அது செய்தாக வேண்டியது. இதில் அன்பு என்பதை எப்படிச் சொல்வது… (யோசிக்கும் தொனியில்) தெருவில் யாரோ ஒரு அம்மாவும் பையனும் போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைக் கடந்து போகுபோது அந்தப்பையன் என்னைப் பார்த்துக் கொண்டே போனான். இரண்டு நிமிடங்களில் இருவரும் திரும்பி வந்தனர். என்னிடம் அந்த அம்மா “இவேன் உங்ககிட்ட இந்த பூவ குடுக்கனும்ன்றான் கா” என்றார். அந்தப்பையன் கைகளில் ஒரு சின்ன கொத்தாக பூ வைத்திருந்தான். அந்தத் தெருவில் நிறைய பேர் நடந்து போறாங்க. அங்க வாசல்ல நிறைய பேர் பெருக்கி, தெளித்து சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். அந்தப் பையனுக்கு வேறு யாரிடமும் தர எண்ணாத ஒன்றை ஏன் எனக்கு கொடுக்க வேண்டும்? என் மேல் ஏன் அவனுக்கு அந்த அன்பு வர வேண்டும். நான் எதுவும் அவனுக்கு பிரதிபலனாக செய்ய வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் அவனிடம் இல்லை. இது தான் அன்பு. நிபந்தனைகளற்று கட்டற்றதாக இருக்கனும் அது தான் அன்பு. அது நம்மை இயல்பாக வைத்திருக்க விட வேண்டும். எந்தவித அசெளகரியத்தையும் ஏற்படுத்தக் கூடாது. ரொம்ப சார்ந்தியங்குவதாக இருக்கக்கூடாது. அது போதும்னு நினைக்கிறேன். ”அன்பின் வழியது உயிர்நிலை”-னு வள்ளுவர் சொல்வார். அது உயிரோட இயல்பான தன்மை தான். கவிதை என்றால் என்ன என்று என்னிடம் கேட்பார்கள். “அதற்கு வரையறை என்று ஒன்று சொல்லிவிட முடியாது. காலத்துக்கு ஏற்றாற்போல் மாறும்” என்று சொல்வேன். அன்பும் கவிதையைப் போல தான்.
உங்களை வெளிப்படுத்தும் சிறந்த இலக்கிய வடிவமாக எது உள்ளது?
கவிதை தானா என் மடியில் வந்தமரும் குழந்தை. ஆனால் சிறுகதைகளை ஒரு கட்டிடம் கட்டுவது போல் செங்கல் செங்கல்லாக அடுக்கி என்னால் எழுதி விட முடியும். கதாப்பாத்திரங்கள், கரு, கதை முடிச்சு, கதையின் நாயகன், நிகழ்வுகளின் வரிசைகள் இதெல்லாம் சிறுகதையில் இருக்கனும்னு எட்கர் ஆலன் போ சொல்வார். ஆனா அதை ஓ ஹென்ரி ஒத்துக் கொண்டதில்லை. “short story is a slice of life” னு ஒரே போடாப் போட்டாரு. ஒரு சிறிய சம்பவம், ஒரு சொல், ஒரு காட்சி, ஒரு பிசகிய மனநிலை அல்லது ஒரு abstract thing நம்மை எழுத வைக்கலாம். ரொம்பப் பிடித்தது கவிதைதான்.
உங்க தங்கையோட மரணம் உங்களை மிகவும் உணர்வு ரீதியாக பாதித்ததாகச் சொன்னீர்கள். மரணம், பிரிவு இந்த இரண்டும் ஒரு மனிதரை மிக நீண்ட அகப்பயணங்களுக்கு உள்ளாக்குகிறது. அதைக் கடந்து வந்த பயணம் பற்றிச் சொல்லுங்க.
என் தங்கையோட பெயர் ரமா. இரட்டையர்கள் போலவே தான் இருப்போம். வீட்டில் என்னுடைய எழுத்தை கொஞ்சமேனும் நேசிப்பவர்களில் ஒருத்தி அவள். தோழி போன்றவள். இருபத்தியெட்டு வயதில், ரொம்ப சின்ன வயது. வீட்டில் அசட்டையாக விட்டதால் இறந்துவிட்டாளோ, இன்னும் கொஞ்சம் பார்த்திருக்கலாம் இப்படியெல்லாம் யோசிப்பேன். உணர்வு ரீதியா பாதித்தது. யோகா, தியானம் என பல வழிகளில் முயற்சி செய்து வெளிவந்தேன். சமீபத்தில் பெரியப்பா மகன் இறந்தான். அப்போது அவ்ளோ பாதிக்கவில்லை. அவன் அவ்வளவு நெருக்கமில்லை என்பதால் இருக்கலாம். எங்கள் குடும்பச் சூழல் ஆண் குழந்தைகளுடன் அதிகம் பேச வாய்ப்பில்லாதது என்பதாலும் அது அவ்வளவு பாதிக்கவில்லை என நினைக்கிறேன். இப்போதும் யாருடைய இறப்பு வீட்டுக்கும் என்னை வீட்டார் அழைத்துச் செல்வதில்லை. வெளியில் இறந்தவர்களைத் தூக்கிக் கொண்டு செல்வதைப் பார்த்தால் இப்போதும் கூட மனம் கணமாகிவிடும். ஆனால் முன்ன மாதிரி அழுவதோ, எழுதுவது, வேலை செய்வதை பாதிக்குமளவு இல்லை. நான் சிகிச்சை, மாத்திரைகள் வழியாகத்தான் குணமடைந்தேன். இன்னமும் என் கணவர் அந்த நாட்களைப் பற்றிச் சொல்லும் போது “நம் குடும்ப வாழ்க்கையைத்தானே பாதித்தது” என்பார். என் அம்மா கூட ”அவள் விதி முடிந்தது. அவ்வளவுதான்” என்று சொல்லி சரியாகிவிட்டார்கள். வருடாவருடம் அவள் இறந்த நாள் அன்று காக்காவிற்கு சாப்பாடு வைப்பதோடு அவர்கள் கடமை முடிந்தது என்று நினைத்தார்கள். தங்கையின் கணவர் ஒரு மாதத்தில் வேறொரு திருமணம் செய்து கொண்டார், குழந்தைகள் கூட புதிய அம்மாவால் ஓரளவு தேறிவிட்டார்கள். நான் தான் அவள் கால் வலிக்கு இன்னமும் நல்ல மருத்துவர்கள் பார்த்திருக்கலாமோ, பார்த்தால் உயிரோடு இருந்திருப்பாளோ என்று நினைத்துக் கொண்டே இருப்பேன். “எலிஜ்” (elegy) என்ற கவிதை வடிவத்தில் என்னுடைய வெறும்பொழுது கவிதைத்தொகுப்பில் ”ரமா கவிதைகள்” எழுதி இதைக் கடந்தேன்.
உங்கள் இலக்கிய வாசிப்பு எப்படி ஆரம்பித்தது?
ரொம்பச் சின்ன வயசிலிருந்தே பள்ளிப் பாடங்களைத் தவிர நிறைய படிப்பேன். எனக்கு யாரும் கதையெல்லாம் சொன்னதில்ல. பாரதியார் வீட்ல இருந்தார். சந்த மாமா, ரத்ன பாலா இப்படித் துவங்கியது. தாத்தா படித்த சரத் சந்திரர் புத்தகங்கள் இன்றும் என்னிடமுள்ளன. மஞ்சரி, அமுத சுரபி கெட்டி அட்டைப் புத்தகங்கள் அவரோட அழகான கையெழுத்தோட பரணில் கிடந்தன. அதெல்லாம் படிச்சேன். தீவிர இலக்கிய வாசகர்கள் வீட்டில் யாருமில்லை. கனவுகள், கற்பனைகள் , காகிதங்கள், மு.மேத்தா, மீரானு ஆரம்பிச்சு, குட்டிக்குட்டியா புதுக்கவிதைப் புத்தகங்கள், அன்னம் வெளியீடுனு நினைக்கிறேன், நூலகத்தில் எடுத்துப் படிப்பேன். இப்டியே “மழை, வானத் தறியில் மேகப் பஞ்சால் யாரோ நெய்த நூல்” -னு எல்லாம் எழுத ஆரம்பித்தேன். பள்ளியில் கவிதை வாசிப்பு, போட்டி, பரிசுனு ஒரு ஸ்டாராக இருந்தேன். ஆனால் நான் படித்த, எழுதிய நிறைய கவிதைகள் கவிதைகள் இல்லன்னு அப்பறம் புரிஞ்சுக்கிட்டேன் . பெரும்பாலும் கல்லூரி நூலகத்தில் தான் இருப்பேன். அப்போ கையெழுத்துப் பத்திரிக்கை கூட ஒன்று தொடங்கினேன். கணையாழி போன்ற பத்திரிக்கைகள் அறிமுகமாயின. அப்படியே தீவிர இலக்கியம்.
உங்களுக்கு அன்றாடம் வீட்டு வேலைகள், குடும்பக்கடமைகள் எல்லாம் முடித்துவிட்டு இரவில் அறையின் நடை விளக்கொளியில் தான் எழுதுவதற்கான வாய்ப்பமைந்தது இல்லயா? இன்னும் எளிதான சூழல் அமைந்து நினைத்த நேரத்தில் எழுதி, நினைத்த இடங்களுக்குச் சென்று, உரையாடல் செய்து… என இருந்திருந்தால்… என்பது பற்றி நினைத்ததுண்டா?
நான் இப்போது என்ன கிடைத்திருக்கிறதோ அதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கற்பனையா இதை விட நல்ல சூழல்… என்பது பற்றி… அமைஞ்சிருந்தா நல்லா நிறைய எழுதி இருப்பேன்னு எப்பவுமே நினைச்சதில்லை. நான் foot light-ல கவிழ்ந்து படுத்து எழுதும் போது கூட இவர்(கணவர்) நான் எழுதுவதை சென்று சேர்ப்பதில் உதவுவார். அப்பல்லாம் இப்ப மாதிரி மெயில்லாம் இல்ல. அதுவே போதும். அப்பறம் மனதிற்கு எந்த கேட்டும், பூட்டும் இல்ல. என்ன பொறுத்தவரை எழுதுவது என்பது மனமும், உணர்வும் சார்ந்தது. அதில் நான் முதன்மையாக மொழியையும், அழகுணர்ச்சியையும் மட்டுமே பார்க்கிறேன். அப்பறம் எனக்குத் தேவையானளவு பயணத்தையும், மரத்தையும், மலையையும், இயற்கையையும் பார்த்திருக்கேன். குடும்பம், அதிலுள்ள மனிதர்கள் எனக்கு ஒட்டுமொத்தமா மனம் சார்ந்த முரண்பாடுகளைப் பார்ப்பதற்கான வாய்ப்பை அளித்துள்ளது. கற்பனை போதுமே. அப்பறம் அணை வெள்ளம் தானே அதிக வேகம்.
2002இல் வெளியான முதல் நாவலான யாரும் யாருடனும் இல்லை நாவலில் அதிகம் துலங்கி வந்த கதாப்பாத்திரமான வினோதினி பத்து வருடங்களுப்பின் எழுதிய அஞ்சாங்கல் காலத்தில் எழுந்து ரேணுகாவாக நீண்ட பயணத்தை நிகழ்த்துகிறாள். வேறுயாரையும் விட ரேணுகாவின் வழியாக நீங்கள் நீண்ட பயணத்தை நிகழ்த்திப்பார்க்க விரும்பி இவற்றை எழுதினீர்களா?
ஆமா. எனக்கு தனம் மாதிரி ரொம்ப அடிபணிந்து போகக் கூடிய, தியாகியான பெண்ணை எழுதுவதை விட வினோதினி போன்ற மீறலான பெண்ணை எழுதுவது சுவாரசியமாக இருந்தது. எழுதிக் கொண்டே இருக்கும் போது என் பேனா எந்தப்பக்கமெல்லாம் போகிறது. எந்தெந்த வார்த்தைகளையெல்லாம் கொண்டு வந்து போடுகிறது என்று பார்ப்பதே ஆர்வமாக இருந்தது. குணாவிற்கு ஏற்கனவே வினோதினிமேல் ஒரு பரிதாப உணர்ச்சி உள்ளது. ஆனால் அவன் அண்ணனான கோபாலுடன் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். நான் இந்த உறவை நியாயப்படுத்தவில்லை. ”Nobody can live without relationships” என்பார்கள். சமூகம் நமக்கு வரையறுத்து வைத்திருக்கும் உறவைத்தாண்டி நிகழும் உறவுகளைப் பற்றி நான் சொல்லவில்லை. ஒரு சின்ன அன்புணர்ச்சி ஒருவர்மேல் வருவது. மாட்டிக்கொள்ளும்போது வினோதினி அவன் மேல தான் பழி சொல்றா பாருங்களேன். Anti Heroine தன்மைனு சொல்லலாம். இதை எழுதுவது எனக்கு பிடித்திருந்தது. ஷேக்ஸ்பியரின் லேடி மேக்பத், கம்பராமாயணத்துல சூர்ப்பனகை போன்ற கதாப்பாத்திரங்கள் சுவாரசியமா இருக்கும். இந்த தியாகமே உருவான அம்மாக்கள்லாம் ஒருமாதிரி போர் தானே. ஆனால் Adultry மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. அதற்காக அதைச் செய்பவர்கள் மேல் எனக்கு வெறுப்பும் இல்லை. குடித்து குடும்பம் நடத்தும் கணவர்களைப் பொறுத்துக் கொண்டு வாழனும்னு இல்லல்ல.
யாரும் யாருடனும் இல்லை நாவலில் உள்ள தன்வரலாற்றுத்தன்மைக் கூறுகள் போல அஞ்சாங்கல் காலத்தில் இல்லை. ஆனால் யாரும் யாருடனும் இல்லை பேசப்பட்ட அளவு அங்காங்கல் காலம் பேசப்படவில்லை. பேசப்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கவில்லை. அந்த முக்கோணக்காதல் மேல் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் தான். பதிப்புக்கு செல்லும் முன்வரை நமக்கு நாம் எழுதியது சார்ந்து மாற்றம் செய்து கொண்டே இருக்கச் செய்யச் சொல்லும். கவிதை நூலில் அப்படி ஒவ்வொரு வார்த்தையும் இன்னொரு வார்த்தையை முன் கொண்டு வந்து நிற்கும். ஆனால் அச்சிட்டபின் அவ்வளவு தான். இப்போது யோசித்தால் அஞ்சாங்கல் காலத்தில் ரேணுகாவை சாகடித்திருக்க வேண்டாம் என்று கூட தோன்றும். அப்போது அது தோன்றியது அவ்வளவு தான்.
உங்கள் நாவலில் பல வகையான ஆண்களைக் காண்பிக்கிறீர்கள். தன் உடல் இச்சையே பிரதானமாகக் கொண்ட பொன்னையா, தன் அழகான மனைவிக்கு உடல் சுகத்தை அளித்துவிட முடியாது என்று தெரிந்து குடித்துவிட்டு அவளுடன் ஒட்டுறவில்லாத வாழ்க்கையை வாழும் கோபால், மனம் சார்ந்து தன் மனைவிகளுக்கு உடனிருக்காத ஆண்கள், எப்போதும் வெளியில் இருக்கும், வெளிச்செல்லும் ஆண்கள் என பலதரப்பட்ட ஆண்கள். பெண்கள் மட்டுமே பிடியுடன் இருக்கிறார்கள். நீங்கள் எழுதிய காலத்திலிருந்து இன்று சமூகத்தைப் பார்த்தால் ஆண்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். பெண்களில் கனிசமானவர்கள் ஆண்கள் தரப்புக்குச் சென்று கொண்டிருக்கும் காலகட்டம். இது சமன்வயப்படாமல் இருக்கும் போது பெரிய பாதிப்பை அளிக்கலாம். இன்று எல்லோருமே ஒரு பிடிப்பில்லாமல் தனியாக வந்து விட்டார்கள். இது எதை நோக்கி போவதாக யூகிக்கிறீர்கள்?
சமூக ரீதியாக இன்னும் பயங்கரமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஒரே வீட்டில் திருமணமாகிச் சென்ற அக்கா தங்கையான ராஜேஸ்வரியும் வினோதினியும் (யாரும் யாருடனும் இல்லை) கூட பரஸ்பரம் இன்னொரு ஆணால் பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நிற்பதில்லை. சமூகத்திலும் அப்படித்தான். இதில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். பெண்கள் இப்ப பொருளாதாரம் சார்ந்து முன்னேறிவிட்டார்கள். விவாகரத்து வாங்கிக் கொண்டு “Single Parent” என போட்டுக் கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொள்ளலாம். பெற்றோர்களும் இப்போ அப்படி திருமணமாகி விட்டால் சேர்ந்து தான் வாழ வேண்டும் என வற்புறுத்துவதில்லை. ஆனா ஓரளவு பேசினால் சரிசெய்துவிடக்கூடிய ஆணவம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் உறவுமுறிதல் நிகழ்கிறது. கூட்டுக் குடும்பம் இல்லாமல் ஆனது இந்த வகையில் ஒரு சிக்கல் தான்.
அதற்கான தீர்வு என்னன்னு கேட்கல. ஆனா இது எங்க போகும்னு நினைக்கிறீங்க?
எனக்கும் தெரியல. அன்னம்மா (யாரும் யாருடனும் இல்லை) தன்னால பொன்னையாவ இனியும் உடல் ரீதியா திருப்தி படுத்த முடியாதுன்னு அதைக் கண்டுக்காம விட்டாலும், உணர்வு ரீதியா சாகும்வரை கஷ்டப்படறா தான். ஆண் ஆரம்பகாலத்துல மனித இனத்தைத் தக்க வைக்க பலதார மணம் கொண்டவனா இருந்ததாக தியரிக்கல்லாம் சொல்லுவாங்க. ஆனா நாகரீகம் அடைந்து இத்தனை ஆயிரம் வருடங்களுக்குப் பின்னரும் இப்படி இருப்பது புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு அப்பா மட்டும், எனக்கு அம்மா மட்டும் என்று சொல்லும் குழந்தைகள் அதிகமாயிருக்காங்க. அப்பா மட்டும்னு சொல்ற குழந்தைகள் ஒப்பு நோக்க குறைவு. பெண்களுக்கு இரண்டாவது திருமணம் இன்னும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அது என்ன மாதிரி பாதிப்பு ஏற்படுத்தும்னு இனி தான் தெரியும். எல்லோரும் விடுதலை, சுதந்திரம் என்று தனித்தனியாகப் போகிறார்கள். ஆனால் யாரும் கடமைகள், பொறுப்புகள் பற்றி யோசிப்பதில்லை. காதலித்து திருமணம் செய்து கொண்டால் இந்தப் பிரச்சனையெல்லாம் சரியாகிவிடும் என்று யோசித்திருக்கிறேன். ஆனால் அங்கு தான் நிறைய பிரிவுகள் நடக்கிறது. காதலிக்கும் போது காட்டப்படும் முகம் வேறு. இருபத்திநான்கு மணி நேரம் ஒருவருடன் இருக்கும் போது தெரியும் முகம் வேறு. என்ன சொல்வதென்று தெரியவில்லை.
விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் விந்தியா, சரோஜா ராமமூர்த்தி, குமுதினி, சூடாமணி, கி.சரஸ்வதி அம்மாள் போன்ற பெண் எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அதில் பலரும் நீங்கள் எடுத்தாண்ட களம் சார்ந்து தான் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இன்று பெரும்பாலும் பேசப்படுவதில்லை. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நீங்கள் சொன்ன விந்தியா, சரோஜா ராமமூர்த்தி போன்றவர்களை நானும் படித்ததில்லை. அதனால் அதைப்பற்றி எதுவும் சொல்லமுடியாது. கால ஓட்டத்தில் பல வகைக் காரணங்களால் படைப்பும், படைப்பாளனும் மறைந்து போகிறார்கள்.
பெண் எழுத்து என என்னைப் பிரிப்பது எனக்கு பிடிக்கவில்லை என பலர் சொன்னாலும், உயிரியல் சார்ந்து அப்படி ஒன்று உள்ளது எனக் கொண்டால் உங்களுக்குப் பிடித்த பெண் எழுத்தாளர்கள் யார்?
பெண் எழுத்து என்று பிரிப்பதை நான் தாழ்வாக நினைக்கவில்லை. பெண்ணால் தான் தன் உடல் சார்ந்து, உணர்வுகள் சார்ந்து சரியாக எழுத முடியும் என்று நினைக்கிறேன். சில ஆண்கள் எழுதலாம். ஆனால் பெண்ணால் இவை சார்ந்து கற்பனை செய்து கொண்டு செல்லும் தொலைவு வேறு தான். ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, அனுராதா ரமணன், இந்துமதி போன்ற பெண் எழுத்தாளர்களையெல்லாம் படித்து தான் நான் வளர்ந்தேன். ஆனால் இவர்கள் எழுதியவற்றை என்னால் எளிதாகக் கடக்க முடிந்தது. ஆஷாபூர்ணாதேவி, கமலாதாஸ், மஹாஸ்வேதாதேவி பிடித்துள்ளது. எமிலி மிகவும் பிடிக்கும். ஆனால் ஒரு வாசகர் எதைப் படிக்கவேண்டும் என அவர் தான் தீர்மானிக்க வேண்டும். ரமணிச்சந்திரன் மிக அதிகமாக வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர். நான் வாங்கி வாசித்துப் பார்த்திருக்கிறேன். இரண்டு வரி கூட என்னால் வாசிக்க முடியவில்லை. யாரை வாசிக்க வேண்டும் என்பது அவரவர் தேர்வாக இருக்க வேண்டும். அப்பறம் எனக்கு ஷேக்ஸ்பியர், டி.எச். லாரன்ஸ், மார்க்கஸ், ஓரான் பாமுக் பிடிக்கும்.
பழைய தலைமுறைகளில் இலக்கியத்தில் மைய ஓட்டச் சூழலோடு உரையாடுவதற்கான வாய்ப்பு பெண்களுக்கு குறைவாக அமைந்தது. அது அமையாததாலேயே இன்னும் மைய ஓட்டத்துடன் இணையும் படைப்புகள் பெண்களிடமிருந்து அதிகம் வெளிப்படவில்லையா?
அப்படி சொல்லிட முடியாது. மையச்சூழல் என்பதை விட பெண் எழுத்தாளர்களுக்குள்ளேயும் ஒரு உரையாடல் இல்லாமல் தான் உள்ளது. காழ்ப்பான சூழல் தான். என் காலகட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் என்னைப் பாராட்டும் போது கூட எனக்கு அவர்களிடமிருந்து வெறுப்பு தான் கிடைத்தது. ஆனால் வெறும் உரையாடல் நிகழ்ந்தால் தான் ஒரு பெண் கிளாசிக் எழுத முடியும் என்பது இல்லை என நினைக்கிறேன். இது மனது சம்மந்தமானது. ஏற்கனவே படித்த இலக்கியம், நம்ம மனதிற்குள் நடக்கும் உரையாடல்கள், அப்பறம் விளக்கிவிட முடியாத ஒன்று இதனால தான் எழுதுகிறோம்.
ஒருவேளை நீ சொல்வது போல அமைந்திருந்தால் கூட அஞ்சாங்கல் காலம் தவிர வேறு எதையும் எழுதியிருக்க மாட்டேன். என் படைப்புகளில் ஒரு வரியைக் கூட நான் மாற்ற அனுமதிக்க மாட்டேன். ஒரு உரையாடல் வழியாக ஒருவருடைய படைப்பு மேம்படாதுன்னு நினைக்கிறேன். நான் சொல் பேச்சை எப்போதும் கேட்க மாட்டேன். எனக்கு வழிநடத்த ஆசிரியர்கள் இல்லை தான். ஆனால் இருந்திருந்தாலும் இதைத்தான் எழுதியிருப்பேன். எழுத்திலேயாவது நான் நினைப்பது நடக்கட்டுமே. எவ்வளவு உரையாடினாலும் ஒரு எழுத்தாளர் என்ன எழுத வேண்டும் என உள்ளதோ அது தான் வெளிப்படும்.
நீங்க பெண்கள் சூழ வளர்ந்தவங்க. உங்க வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் மிகவும் விரும்பும், வியந்து பார்க்கும் பெண் அல்லது பெண் தன்மை என்ன?
எங்க தாயம்மாவ ரொம்ப பிடிக்கும். எங்க அப்பா வழி பாட்டி. எங்க தாத்தாவ எல்லாரும் பள்ளிக்கூடத்தண்ணேன்னு தான் கூப்பிடுவாங்களாம். அவர் தான் அந்த ஊர்ல முதல்ல போய் பள்ளிக்கூடத்தில் படித்தவர். அந்த ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கனும், கோயில் கட்டிக்கொடுக்கனும்னு தாயம்மா தான் சொன்னாங்க. தாத்தா தான் செஞ்சாங்கன்னாலும் அத சொன்னது தாயம்மா தான். பணம் இருக்குன்னா அத நம்ம மட்டுமே அனுபவிச்சுட்டு போகாம ஊர்க்காரியங்க செய்யனும்னு தோணியிருக்குல்ல அது மாதிரி பிடிக்கும். அம்மாவோட தைரியம் பிடிக்கும். அவங்களுக்கு மாமியார் இல்லை அதனாலயா இருக்கலாம் (சிரிக்கிறார்). ரொம்ப கட்டுப்பாடா வளர்த்தாங்க. அவங்களுக்கு உடம்புக்கு சரியாகாம போகிற வரை நான் சென்ற இலக்கிய நிகழ்வுகளுக்கெல்லாம் அவங்க தான் வந்தாங்க. அங்க வந்து என்னை பாராட்டுவதைப் பார்த்த பிறகு தான் நான் ஏதோ உருப்படியில்லாத வேண்டாத காரியமெல்லாம் செய்யவில்லை என்பதை நம்பினாங்க. ஆனா என்ன.. நாங்கல்லாம் பெண் குழந்தைங்கன்ற வருத்தம் அவங்களுக்கு இருந்தது. பெண்குழந்தைங்க பெத்தவங்க மலடின்னு தான் இங்க ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பக்கம் சொல்லுவாங்க. கொல்லக்கூட செய்வாங்க. இன்னும் கூட பெருசா மாறல. அவங்களுக்காக எதுவும் செய்து கொள்ளாமல் எங்களுக்காக எல்லாம் செய்தாங்க. எல்லா அம்மாவும் அப்படிதானே. அப்பறம் எங்க வீட்ல வேலை செய்தவங்க. இப்ப மாதிரி இல்ல, அப்பல்லாம் அவங்களும் குடும்பத்தில் ஒருத்தவங்க மாதிரி தான். என்ன வளர்த்த அம்மாங்க அவங்க. அப்பறம் எங்க சித்தி. பாசமானவங்க.
அப்பறம் இவங்கள தவிர்த்து என்னோட ஆசிரியர்கள். எதெல்லாம் வீட்டில் எனக்கு மறுக்கப்பட்டதோ, எதெல்லாம் புரிந்து கொள்ளப்படவில்லையோ அதெல்லாமும் ஊக்குவித்தவர்கள் என்பதால். அவர்கள் எல்லாம் இல்லையென்றால் நான் எழுதியதை பிரசுரிக்க வேண்டும் என்பது கூட தெரிந்திருக்காது. நான் நிறைய சேட்டை பண்ணுவேன், காலேஜ் கட் அடிச்சிட்டு ரூம்ல இருப்பேன். ஆனாலும் என்னை ஏதோ முக்கியமான மனுஷி போல உணரச் செய்தவங்க, அதனாலயும்.
இலக்கியம் தவிர பிற கலைகளில் ஈடுபாடு உண்டா?
கர்நாடக சங்கீதம் “லம்போதர லகுமிகரா” வரை கற்றேன். குடும்பச்சூழல் காரணமாக தொடரவில்லை. வீணை கற்க ஆரம்பித்தேன். அதையும் தொடரவில்லை. எம்பிராய்டரி கற்றேன். குழந்தைகள் துணிக்கு அதெல்லாம் போடுவேன். ஆனால் எழுத்து தான் என்னுடைய வெளிப்படும் ஊடகம்னு சீக்கிரமே தெரிந்து கொண்டேன். அதன்பிறகு எழுத்து மட்டும் தான்.
ஏன் எழுதறீங்க? அதன் வழியாக நீங்கள் அடைய நினைப்பது என்ன?
வேறு எப்படியும் நான் வெளிப்பட முடியல. உடம்பு சரியில்லாத குழந்தை நான், சிறுவயதிலிருந்தே. அதிகமும் சின்னச்சின்ன விஷயங்களை கவனிக்கும் குழந்தையாக, தவிர்க்கப்பட்ட குழந்தையாக இருந்தேன். புத்தகங்கள் மூலமாக வாழ்ந்தேன். எழுதுவது மூலமாக என்னை வெளிப்படுத்திக் கொண்டேன். கல்லூரியில் பாடம் நடக்கும் போது கவிதை எழுதிக் கொண்டிருப்பேன். பலமுறை அதற்காக வெளியேற்றப்பட்டிருக்கிறேன். எனக்கு வேற போக்கிடம் இல்லை. நெருங்கிய நண்பர்கள் அதிகம் இல்லை, இருந்தாலும் எதுவும் நெருக்கமாக மனதை உடைத்துப் பேசமாட்டேன். வார்த்தைகளில் விளையாடுவது எனக்கு பிடிக்கும். கவிதைகளை வண்ணத்துப்பூச்சிகளைத் துரத்தும் சிறுமியாக துரத்தினேன். அது ஒரு சோப்புநுரை விட்டு விளையாடுவது போல. அதிலுள்ள வானவில்லை சில சமயம் மட்டுமே வார்த்தைகளில் பிடித்து வைக்க முடியும். பல சமயம் உடைந்துவிடும். என்னோட தனிமையைப் போக்கிக் கொள்ளவே எழுதினேன். மற்றபடி எழுத்தால் இந்த உலகத்தைத் திருத்த வேண்டும், மிகப் பெரிய படைப்புகளைப் படைக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. குடும்பம் தான் எனக்கு முதலில். அதன்பிறகு எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதுகிறேன், எழுதுவேன். எழுத்து வணிகமல்ல. இத்தனை எழுதுவேன், இவ்வளவு எழுதுவேன், அது வழியாக இதை அடைவேன்னு சொல்ல. அது நம்மை அறியாமல் இழுத்துக் கொண்டு போகும் ஒன்று. இன்னும் இன்னும் என தாகத்தோடு நம்மால் முடிந்தவரை ஓடிக் கொண்டே இருப்பது தான். எந்தப் பாராட்டோ, விமர்சனமோ எதுவுமே வரவில்லையென்றாலும் நான் ஒரு ஓரமாக எழுதிக் கொண்டே இருப்பேன்.
(முற்றும்)
*
இணைப்புகள்:
அன்புடைய நீலி பத்திரிகை குழுவுக்கு,நன்றி இந்தச் சிறப்பிதழுக்கும், மிகச் சிறந்த கட்டுரைகளை எழுதிய எல்லோருக்கும்,ரம்யாவிற்கும் என் அன்பும்,நன்றியும் .பேட்டியில் முதல் கேள்வியில் என் அம்மாவின் ஆச்சர்யம் ” வயர் இல்லாமல் ஒரு டப்பாவை எல்லோரும் காதில் வைத்துக் கொண்டு பேசிட்டே போறாங்க.”. என்பதே .மாறிப் பதிவாகி உள்ளதை ஒரு தகவலாக மட்டுமே சொல்ல நினைத்தேன் .may be typoerror .மற்ற படி இக் கட்டுரைகளை வாசித்த து இனிய்அனுபவம்.மிக்க நன்றி .அன்பு,உமாமஹேஸ்வரி
மிக்க நன்றி உமாமகேஸ்வரி. உங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மாற்றி விடுகிறோம்.
நீலி இதழில் இந்த முறை உமா மகேஸ்வரியின் படைப்புலகம் பற்றி விரிவாக நண்பர்களின் கட்டுரைகள் மூலம் விவாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஜெ ஒரு எழுத்தாளரையோ சிந்தனையாளரையோ பற்றி எழுதும் போது அவரது நிறை குறைகள் என்னென்ன என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கும். விமர்சனங்கள் இருந்தால் கூட பொறுப்பற்ற ஒரு வார்த்தை கூட இல்லாமல் எதற்காக அந்த விமர்சனம் என்பது அந்த கட்டுரையிலேயே நிறுவப்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாகவே ‘மெல்லுணர்வுகள் கலையாதலின் தொடக்கம்’ என்ற உமா மகேஸ்வரியின் மொத்த படைப்புலகையும் மதிப்பிடும் ரம்யாவின் கட்டுரையை பார்க்கிறேன். மிகச்சரியாக உமா மகேஸ்வரியின் இலக்கிய இடத்தை இக்கட்டுரை வரையறுக்கிறது. ஆனால் தமிழில் பேசப்படாத அனைத்து பெண் எழுத்தாளர்களும் பேசப்படுவதும் விவாதிக்கப்படுவதும் எவ்வளவு தேவையோ அதே அளவிற்கு இந்தியாவிலும் உலக அளவிலும் முன்மாதிரியாக கருதப்படும் சிறந்த பெண் எழுத்தாளர்கள் கலைஞர்கள் அனைவரையும் இங்கே அறிமுகப்படுத்துவதையும் நீலி இதழில் செய்ய இடமிருக்கிறது. முயன்றவர்கள், கொஞ்சம் சாதித்தவர்கள் ஆகியவர்களை விட முன்மாதிரிகளாக கொள்ளத்தக்கவர்களின் விரிவான அறிமுகங்களே தேவை என்று தோன்றுகிறது.