சாளரங்களின் வழியே மின்னும் வான் நட்சத்திரங்கள்: எம்.கோபாலகிருஷ்ணன்
(உமா மகேஸ்வரியின் புனைவுலகை முன்வைத்து…)
மனிதனின் அவசியத் தேவைகளில் ஒன்றாகக் கருதப்படும் வீடு என்னும் பௌதீக அமைப்பு, ஆண் பெண் இருபாலருக்குமான ஒன்றாகவே பொதுவில் கருதப்படுகிறது. வீடு பாதுகாப்பானது, நமக்கான சௌகரியங்களை அனுமதிப்பது, நம்மை நாமாக இருக்க விடுவது என்பது போன்ற எண்ணற்ற சாதகமான கூறுகளை வீட்டுடன் பொருத்திப் பார்க்க முடியும். முக்கியமாக, வீடென்பதே குடும்பம். குடும்பத்தின் குறியீடு வீடுதான். இந்திய மரபின் முக்கிய அம்சம் குடும்பம். இந்தக் குடும்ப அமைப்பு ஆண்களால் உருவாக்கப்பட்டது. ஆண்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. இதில் பெண்களுக்கான இடம் என்ன? இந்த அமைப்பில் அவர்களது பங்கு என்ன? ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். உண்மையில் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது எது? ஒரு வெற்றிகரமான குடும்பத்தின் இலக்கணம் என்ன? மகிழ்ச்சி என்பதை எப்படி வரையறுக்கிறார்கள்? ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் வெற்றியும் மகிழ்ச்சியும் எதைச் சார்ந்தது? ஒவ்வொரு தனி மனிதனுக்குமான இடத்தை குடும்பம் எந்த அளவுக்கு அனுமதிக்கிறது? எல்லோரையும் கட்டி நிறுத்துவது பணமா, பாசமா?
இப்படி எண்ணற்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்த வண்ணமே உள்ளன. இந்திய அளவில் பல முக்கியமான புனைவுகளும் குடும்ப அமைப்பின் பல்வேறு கூறுகளைக் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. எஸ்.எல்.பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’, விவேக் ஷான்பாக்கின் ‘காச்சர் கோச்சர்’, சீர்சேந்து மகோபாத்யாயவின் ‘அத்தைக்கு மரணமில்லை’ ஆகிய சில உதாரணங்களை இங்கு குறிப்பிடலாம். தமிழில் இவ்வாறான நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’, எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ ஆகியவற்றை உதாரணத்துக்குச் சொல்லலாம்.
வீட்டின் மாட்சியும் மாண்பும் பெண்கள் என்பது மரபான நம்பிக்கை. பெண்களே வீடு சமைப்பவர்கள், பெண்களே அதன் மேன்மையை கட்டிக் காப்பவர்கள், பெண்ணில்லாத வீடு மங்கலமற்றது என்பன போன்ற மரபுக் கூறுகளுக்கும் இங்கு பஞ்சமில்லை.
உமா மகேஸ்வரியின் புனைவுலகும் வீடுதான். நமது மரபில் பெண்களின் மாண்பாக, பொறுப்பாக, வெளியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘வீடு’ ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படுத்தும் எல்லாவிதமான சாத்தியங்களையும் தன் புனைவின் வழியாக பகுத்தும், அகழ்ந்தும் வெளிப்படுத்துகிறது உமா மகேஸ்வரியின் எழுத்து. அவரது புனைவுலகு வீட்டை களமாகக் கொண்டது. அது புறவுலகைக் காட்டும்போதுகூட வீட்டுக்குள்ளிருந்துதான் காட்ட முடிகிறது. ஒரு வீட்டின் நீள அகலங்களை, ஆழங்களை, அபத்தங்களை, ஓசைகளை, மணங்களை, அமைதியை, அலைகழிப்பை அது மிகத் துல்லியமாக விவரிக்கிறது. வீட்டுக்குள்ளிருந்தேதான் அது வானத்தைப் பார்க்கிறது. தொலைதூர மலைகளை வியக்கிறது. பறவைகளின் சிறகசைப்பையும், பூக்களின் எழிலையும் கொண்டாடுகிறது.
‘இரவின் ஆழ்ந்த அமைதியோடு வீடு ஒரு மாபெரும் கொள்கலனாகியிருந்தது’. உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை’ நாவலின் தொடக்க வரி இது. உமா மகேஸ்வரியின் புனைவுலகை மிகச் சுருக்கமாக, செறிவாக வரையறுக்கும் வரி இதுவே.
வீட்டை மட்டுமே தங்கள் உலகமாகக் கொண்ட பெண்களே உமா மகேஸ்வரியின் கதாபாத்திரங்கள். குழந்தையாகப் பிறந்து சிறுமியாக வளர்ந்து பருவமடைந்து மணம்புரிந்து மனைவியாகி கருவுற்று அன்னையாகி பிள்ளைகள் பெற்று இறுதியில் மூச்சடங்கும் வரையிலான மொத்த வாழ்வுமே வீட்டுக்குள்தான். பிறந்து, தவழ்ந்து, நடை பழகி வளரும்போது வீட்டின் எல்லைகள் விரிந்துகொண்டேயிருக்கும். தோட்டம், பின்கட்டு என்று புதிய வெளிகளை அறிமுகப்படுத்தும். பிறகு மேலும் வளருந்தோறும் அந்த எல்லைகள் மெல்லக் குறுகும். கட்டுப்பாடுகள் தலைகாட்டும். அப்போதுதான் வீட்டின் சுவர்களுக்கும் கதவுகளுக்கும் வேறொரு அர்த்தம் புலப்படும். ஒரு வீட்டின் வளர்சிதை மாற்றத்தையே வாழ்வாகக் கொண்ட பெண்களின் அன்றாடத்தையும் புழுக்கங்களையும் அலுப்பையும் மீறல்களையுமே மிக நெருக்கமாகக் காட்டுவதே உமா மகேஸ்வரியின் புனைவுலகு.
அதன் துலக்கமான ஒரு சித்திரம்தான் ‘யாரும் யாருடனும் இல்லை’ நாவல். ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாழும் பெண்களின் உலகம் அது. குடும்பத் தலைவி, அவரது மூன்று மருமகள்கள், பேரன் பேத்திகள், தங்கை, வேலையாட்கள் என்று பலர் சேர்ந்தும் விலகியும் நடமாடும் ஒரு பெரிய வீடு. மூப்புற்று உடல் சோர்ந்து கிடக்கும் நிலையிலும் ஓசைகள், வாசனைகளின் மூலம் நடப்புகளை அறிந்து குடும்பத்தின் அன்றாடங்களை கச்சிதமாக நிர்வாகம் செய்யும் குடும்பத் தலைவி. முறை வைத்து சமையல் செய்து, குருட்டுத் தாம்பத்யமும் பிள்ளைப் பேறுமாக புகுந்த வீட்டுக்குப் பெருமை சேர்க்கும் மருமகள்கள். அடுத்தடுத்து பிறந்து எண்ணிக்கை கூடும் பெண் குழந்தைகள். இந்த ஒட்டுமொத்த வீடும் பெண்களாலானது. பெண்களுக்கானது. ஆண்கள் இந்த வீட்டுக்கு இரவில் மட்டுமே வருகிறார்கள். இந்த வீட்டிலிருந்து எப்போதும் வெளியேறவே விழைகிறார்கள். பெண்களுக்கான இந்த வீடும் உலகமும் அவர்களுடையதுதான் என்றாலும் அதிலிருந்து அவர்கள் வெளியே செல்ல அனுமதியில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை உண்டு. பருவமெய்தும் வரை பள்ளிக்குச் செல்லலாம். தோட்டத்திலிருக்கும் மரத்தடியில் விளையாடலாம். கோயிலுக்கும் என்றேனும் தோட்டத்துக்கு பிள்ளைகளுடன் செல்ல வாய்க்கும். அவ்வளவுதான்.
இந்த சித்திரம் நாம் அறிந்த ஒன்றுதான். இது புதியவொரு களமும் அல்ல. புனைவுகள் வழியாக இவ்வாறான ஒரு பெண்களின் கட்டுப்படுத்தப்பட்ட உலகத்தை முன்பும் நாம் வாசித்திருக்கிறோம். ஏற்கெனவே சொல்லப்பட்ட ஒன்றை உமா மகேஸ்வரி எப்படி வேறுபடுத்திக் காட்டுகிறார் என்பதுதான் முக்கியமானது. பெண்களின் பாடுகளை, ஆணாதிக்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட அவர்களது வாழ்வை சொல்ல முனையும்போதே, ‘இது ஏற்கெனவே சொல்லப்பட்டதுதானே’ என்ற ஒரு சலிப்பு தலைகாட்டும். ஆனால், அவ்வாறான ஒரு முன்முடிவை விலக்கி அறிந்தவொரு உலகையும் வேறொரு உலகமாக அணுகுவதற்கான ஈர்ப்பை உத்தரவாதப்படுத்துவது உமா மகேஸ்வரியின் சித்தரிப்பு நேர்த்தி.
இரும்பு கிரில் கேட் திறக்கப்படும் சத்தம், விளக்குமாறு தரையில் உரசும் சத்தம், தொட்டியில் நீரிறைக்கும் ஒலி, கழுவிய வாளியில் பால் பீய்ச்சுகிற சீற்றம், மாடுகளின் செருமல் என்று வெவ்வேறு நுட்பமான ஓசைகளும் மெல்லிய ஏலக்காய் மணம், மாட்டுக் கொட்டிலில் எழும் சாணத்தின் மணம், வெல்லப்பாகில் ஏலக்காய் தூவும் மணம், போர்வையில் முகப்பவுடரின் வாசனை, கொடி முல்லையின் மணம், பிரசவ அறையின் விநோத நெடி என பலவிதமான வாசனைகளாலும் அந்த வீட்டை உயிர்ப்பித்து விடமுடிகிறது.
அவரது புனைவு மொழி கவிதையும் குழந்தைமையும் கலந்தவொன்று. வீட்டின் எல்லைக்குள் வரையறுக்கப்பட்ட பெண்களின் வாழ்வை, குழந்தைகளின் அல்லது சிறுமிகளின் பார்வை வழியே காட்டும்போது அதில் புதியவொரு கோணம் சாத்தியமாகிறது. வீட்டுக்குள் அடங்கியிருக்கும் பெண்களின் கதையில் உள்ள இறுக்கத்தை இந்தக் குழந்தைகளின் மொழி தளர்த்துகிறது. ஒவ்வொரு காட்சியையும் சொல்லையும் அசைவையும் தீரா வியப்புடன் நம் முன் நிகழ்த்திக் காட்டுகிறது.
சிறுமிகளின் விளையாட்டு உலகம் இணையாக விரியும்போது பெண்களின் துயருலகின் அழுத்தம் தணிந்துபோகிறது. அந்த வீட்டுப் பெண்களின் மன அழுத்தங்களுக்கும் துயரங்களுக்கும் நடுவில்தான் சிறுமிகள் விளையாடுகிறார்கள், பாடுகிறார்கள், வேடிக்கைப் புதிர்களில் திளைக்கிறார்கள். கடவுளுக்குக் கடிதம் எழுதுகிறார்கள். குழந்தைகளின் இந்த களங்கமின்மையும் ஆர்வமும் துறுதுறுப்புமே நாம் ஏற்கெனவே அறிந்த, பழக்கப்பட்ட துயர உலகினை வேறொன்றாக நமக்குக் காட்ட உதவுகிறது.
நாவலில் வருகிற ஆண்கள் அனைவரும் வெறும் கோட்டுச் சித்திரங்களே, குணாவைத் தவிர. இரவில் வீடு அடைபவர்கள். விளக்கணைத்த இரவில் உடல் தேடுபவர்கள். குழந்தைகள் அவர்களை நெருங்குவதில்லை. அஞ்சுகிறார்கள். ஆண்கள் குறித்த வழக்கமான இந்தச் சித்திரம் கூட விரிவாகச் சொல்லப்படவில்லை. சுருக்கமான மிகச் சில வரிகளில் குழந்தைகளின் மொழியில் அவர்களது இருப்பை வரையறுக்கின்றன. அவ்வாறு சொல்லப்படும்போது வழக்கமாக எழும் புகார் தொனியன்றி, இவர்கள் இப்படித்தான் என்பதுபோன்ற சாதாரணத்தன்மை மேலோங்குகிறது.
பெண்கள் மட்டுமே உலவும், பெண்களுக்கான இந்த உலகில் பெண்களுக்கிடையேயான உளமோதல்கள் வலுவாக அமைந்திருக்கும். எல்லா வசதிகளும் கொண்ட பெரிய வீட்டில், ஒவ்வொருவருக்கும் உரிய இடம் உண்டு என்றாலும் ஒப்பிடுவதையும் அதைக் குறித்து மனம் புழுங்குவதையும் தவிர்க்க முடியாது. அவ்வாறான உள மோதல்களையும் பொறாமைகளையும்கூட உரத்த குரலில் சொல்லாது இயல்பான நடவடிக்கைகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.
காமத்தின் பல்வேறு சாயல்கள், தழும்பல்கள், அலைச்சல்கள், அவஸ்தைகள் அனைத்தும் சிறிதும் கூடுதல் அழுத்தங்களின்றி வெகு இயல்பாகவும் செறிவாகவும் உரிய இடங்களில் கச்சிதமாக கையாளப்பட்டுள்ளன. காமத்தின்பால் பெண்களின் உளம் ஏற்கும் பாவனைகளையும் வேட்கையையும் துல்லியமாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன.
பெண்களுக்கான உலகைக் காட்டும்போது அவர்களின் ஆசைகள், ஆழ்மனக் கிளர்ச்சிகள், பொறாமை, போட்டி, சலிப்பு, அனுசரணை, தாய்மை, வேகம், ஆவேசம், குமுறல் என அத்தனை உணர்ச்சிகளுக்கும் இடம் தரப்பட்டுள்ளது. அவர்களது உடை நேர்த்தி, ஆபரணங்கள், அலங்காரம் எல்லாமே துல்லியமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அன்னம்மா தூக்கி முடிந்த கொண்டையோடு உல்லிஉல்லி சேலையில் சந்தைக்குப் போகும் காட்சியை உதாரணமாகச் சுட்டலாம். அதேபோல, அன்னம்மாவின் மூக்கில் சுடர்விடும் வைரம், கழுத்தில் படிந்த கெம்புக்கல் அட்டிகை, கனம் கனமான இரட்டை வடங்கள், மூன்று சரங்கள், முழங்கை வரைக்கும் வளையல்கள் என்று ஆபரணங்கள் பட்டியலிடப்படுவதையும் குறிப்பிடலாம்.
இத்தனை பெரிய வீட்டில், இத்தனை ஆட்கள் புழங்கும் வெளியில் உண்மையில் யாரும் யாருடனும் இல்லைதான். ‘அவள் வளையல்களின் பொன்னொலி லேசாக அசைந்து கொண்டேயிருக்கும் விடியும் வரை’ என்பது போன்று பெண்களின் தனிமையைச் சுட்டும் பல நுட்பமான வரிகள் நாவலில் உண்டு.
‘அம்மா அப்பாவின் வேட்டி நுனி போலத்தான். மடிப்பதும் இறக்கிவிடுவதும் அவிழ்த்தெறிவதும் அணிவதும் அவர் விருப்பம்’ போன்ற கூரிய சொற்கள் நாவலின் ஒட்டுமொத்த மையத்திலிருந்து அங்கங்கே மேலெழுந்து ஒலிப்பதுண்டு. கூடவே, பெண்ணிய சிந்தனையை உரக்கச் சொல்லும் இடங்களும் உண்டு.
ஒட்டுமொத்தமாக அந்த நாவல், வீட்டை விட்டு வெளியே செல்லும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவானவை. சுருக்கமானவை. அவ்வாறு வெளியே செல்லும்போதுகூட அது குழந்தைகளின் உலகமாகவே காட்டப்படுகிறது.
இந்த நாவலின் பேசுபொருள் காலங்காலமாக புனைவுகளில் கையாளப்பட்டிருக்கும் ஒன்றுதான் என்றாலும் குழந்தைகளின் களங்கமின்மையின், துறுதுறுப்பின் வழியாக காட்டப்படும்போது இது இன்னும் ஆழமான பொருளை ஏற்கிறது. துல்லியமான சித்தரிப்பும், நேர்த்தியான கதாபாத்திர வார்ப்பும், கச்சிதமான உரையாடலுமாக நகர்த்தப்படும் நாவலாக மட்டுமாக இது அமையவில்லை. அவை யாவற்றிலும் பெண்களுக்கேயுரிய தனித்தன்மையை இயல்பாகவே ஏற்றியிருப்பது நாவலை மேலும் பொருண்மையுள்ளதாக ஆக்கியுள்ளது. முன்பே குறிப்பிட்டதுபோல கவிதையின் சொல்நயமும் ஆழமும் குழந்தைமையின் களங்கமின்மையும் ஆர்வமும் துலங்கும் உமா மகேஸ்வரியின் புனைவுத்தியே இந்த நாவலை தனிச்சிறப்புடையதாக மாற்றித் தந்திருக்கிறது.
*
உமா மகேஸ்வரியின் கதைகளில் அதிகமும் பெண்களை மையமாகக் கொண்டிருப்பவை. இயல்பாகவே அவ்வாறு அமையக்கூடியதுதான். அவரது முத்திரைக் கதையாகக் கருதப்படும் ‘மரப்பாச்சி’யில் தொடங்கி ’ரணகள்ளி’, ’அம்ருதா’, ’அரளிவனம்’, ’கனகாம்பரத் திரைகள்’ என பல முக்கியமான கதைகளும் பெண் மையம் கொண்டவையே. பொதுவாக, பெண்களை மையமாகக் கொண்ட கதைகளில் எடுத்துக் கொள்ளப்படும் பிரச்சினைகளையே உமா மகேஸ்வரியின் கதைகளும் பேசுகின்றன. அம்மாவின் பிறழ் உறவு, அக்காவின் கணவனிடமே தன்னை இழக்கும் தங்கை, பூப்படையாத பெண், கணவனுக்காக தன்னை பணயம் வைக்கும் மங்கை, கணவனின் ஆதிக்கம் போன்றவற்றையே கதைக் கருக்களாகக் கொண்டுள்ளன. காலங்காலமாக தொடரும் பெண்களின் இந்தப் பிரச்சினைகளை உமா மகேஸ்வரியும் எழுதிக் காட்டியிருக்கிறார். ஆனால், இக் கதைகளை புனைவுகளாக தந்திருக்கும் நுட்பம்தான் பிறரது ஆக்கங்களிலிருந்து உமா மகேஸ்வரியைத் தனித்து நிறுத்துகிறது. ‘பொருள்வயின் உறவு’ கதையை உதாரணமாகச் சுட்டலாம்.
யாரும் மிக எளிதாக எழுதக்கூடிய கதைக்கருவைக் கொண்டது ‘நாற்பது பவுன் நகை’. ஆனால், திருட்டுப் போன நகைகளை அடையாளம் காட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு போகும்போது இந்தக் கதை வேறொரு பரிமாணத்தை அடைகிறது. ‘அம்மாவுக்கு முந்தானை நுனியை எப்படி வைத்துக்கொள்வதென்பது குழப்பமாக இருந்தது’ என்ற வரி இந்தக் கதையின் சாதாரணத்தன்மையை கலைத்துப் போடுகிறது.
பெண்களை மையமாகக் கொண்ட கதைகளுக்கு நிகராக குழந்தைகளை மையமாகக்கொண்ட கதைகளும் முக்கியமானவை. உமா மகேஸ்வரியின் பெண் கதாபாத்திரங்களுக்கு இணையானவை அவரது கதையில் வரும் குழந்தைகள். குழந்தைகளின் தனித்தன்மை மிக்க உலகின் அழகையும் தூய்மையையும் மிக எளிதாக கதைக்குள் அவரலால் கொண்டு வர முடிகிறது.
‘எலின்னா கொல்லணும், அணில்னா கொல்லக்கூடாது?’ (என்றைக்கு?), ‘ஏம்மா கோயிலுக்கும் போலிஸ் ஸ்டேஷனுக்கும் ஒரே பெயிண்ட் அடிச்சிருக்காங்க?’ (நாற்பது பவுன் நகை) போன்று குழந்தைகளால் வெகு இயல்பாக எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு நம்மிடம் தீர்க்கமான பதில் கிடையாது. உமா மகேஸ்வரியின் கதைகளினூடாக நமது குடும்பம், உறவுகள் ஆகியவற்றின் மீது இவ்வாறு எழுப்பப்படும் பல கேள்விகளுக்கும் நம்மிடம் பதில் கிடையாது. அவ்வாறான கேள்விகளை தொடர்ந்து எழுப்புவதுதான் அவரது புனைவுலகின் ஒரு முக்கியமான பணிபோலும்.
இவ்வாறான உலகிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதைகளல்லாத கதைகளையும் உமா மகேஸ்வரி எழுதியுள்ளார். இக்கதைகள் நீண்ட சித்தரிப்பாகவோ அல்லது சிந்தனைச் சரடுகளாகவோ அமைந்துள்ளன. பெண்களின் உளப் பாங்குகளை, கனவுகளை, நேரடியாகத் தகர்க்க முடியாத சில தடைகளை இவ்வாறான சரடுகடிளின் வழியாகக் கடக்கப் பார்க்கும் முயற்சிகள் இக்கதைகள். காற்றுக்காலம், கண்ணாடிச் சுவடுகள், வீடின்மை, இறகு என பல கதைகளையும் சொல்லலாம். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள குறியீடுகளும் படிமங்களும்கூட பெண்களது அகவேட்கையின் துலக்கமான அடையாளங்களாகவே அமைந்துள்ளன.
உமா மகேஸ்வரியின் கதைகளின் தனிச் சிறப்பு அவர் கதைகளை வார்க்கும் தன்மையும் கவிதையோடமைந்த கதை மொழியுமே. அவருக்கு முன்பு அவ்வாறான ஒரு புனைவுமொழி வேறெவரிடமும் இல்லை. உமா மகேஸ்வரியின் தீர்க்கமான முத்திரை. ‘மின் சித்திரம் போன்ற தேக அமைப்பு’, ‘இது நீரல்ல, நெருப்புதான். தன்னுள்ளேயிருந்து தழல்வதேயான தீத்தளிர்’, ‘கண்ணாடிக் கூடைபோல் அவள் மேல் கவிழ்ந்த ஆகாயம்’, ‘அருந்தி மீந்த கோப்பையின் அடியில் படர்ந்த காபி படலம்போல அவன் முகத்தோற்றங்கள்’ போன்ற வரிகள் எளிய கதையையும்கூட நேர்த்தியான வாசிப்பு அனுபவமாக மாற்றிவிடுகின்றன.
2003இல் வெளியான ‘யாரும் யாருடனும் இல்லை’ நாவலையும் அவரது ஆரம்பகாலத் தொகுப்புகளிலுள்ள கதைகளையும் இன்று வாசிக்கும்போது சில பகுதிகளில் பெண்ணியம் சார்ந்த குரல் சற்று உரக்க வெளிப்பட்டுள்ளது என்ற எண்ணம் எழுகிறது. பெண்களுக்கான உலகின் பொதுவான களங்களையே அவர் எழுதியிருக்கிறார் என்ற கருத்தும். அவ்வாறான குரல் இல்லாமலேகூட அந்தக் கதைகள் தம்மளவில் ஆழம் கொண்டிருப்பவையே. கடந்த சில ஆண்டுகளில், கல்வியின் வழியாக வேலை வாய்ப்பின் மூலமாக பெண்களுக்கான உலகில் பெரும் மாற்றங்கள் வாய்த்துள்ளன. பெண்களைக் குறித்தும் அவர்களது இடம் குறித்தும் நம்மிடம் உள்ள மரபான பல கருத்துகளும் சிந்தனைகளும் உடைபட்டு பலத்த மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளன. குடும்ப அமைப்பு, உறவுகள் சார்ந்த வரையறைகள் மறுபரிசீலனைக்கும், மறுவரையறைக்கும் உட்படுத்தப்படுகின்றன. இவ்வாறான பின்னணியில் உமா மகேஸ்வரியின் கதைகளில் சில பலவீனமானவையாகத் தோன்றக்கூடும். ஆனால், உமா மகேஸ்வரி உள்ளிட்ட எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் தங்கள் புனைவின், எழுத்தின் வழியாக எழுப்பிய கேள்விகளின் வழியாகவே இன்றைய மாற்றங்கள் சிலவேனும் உருப்பெற்றுள்ளன என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
உமா மகேஸ்வரியின் முதல் கவிதைத் தொகுப்பு ‘நட்சத்திரங்களின் நடுவே’. அவரது புனைவுலகில் நட்சத்திரங்களுக்கு தனித்த சிறப்பான ஒரு இடம் உண்டு. தொடர்ந்து நட்சத்திரங்கள் அவரை ஈர்க்கின்றன. வெவ்வேறு தோற்றத்துடன் பலவிதமான காட்சிகளை அவருக்குத் தருகின்றன. ‘பனி உதிர்வதும்கூட ஈர நட்சத்திரங்கள் போல’ தோற்றமளிக்கின்றன. ‘வான் விளிம்பில் தெரிந்த ஒற்றை நட்சத்திரத்தைப் பார்த்தாள். அது நிசப்தமான மலர்போல வாசனை பரப்பியது’, ’நட்சத்திரம் ஒரு மந்திரமலர் போல் அவள் மீது விழுந்தது’, ‘நட்சத்திரங்கள் இறைந்த வானம், அழகிய சின்னஞ்சிறு பொட்டுச் சுடர்த் தோரணம்போல’ என்று விதவிதமாக நட்சத்திரங்களின் ஒளியை, எழிலை சொல்லிப் பார்க்கிறார்.
உமா மகேஸ்வரியின் புனைவுலகும் ஒளிரும் நட்சத்திரங்களால் உருவான ஒன்று. அந்த நட்சத்திரங்கள் இருண்ட வானிலிருந்து பெண்களின் உலகமான வீட்டுக்குள் எட்டிப் பார்க்கிறது, சாளரத்தின் வழியே. தமது ஒளியையும் மினுமினுப்பையும் அந்த வீட்டுக்குள் நிறைக்கிறது. அந்த ஒளியின் வழியே மினுமினுப்பின் வழியே அந்த வீடும் வானின் ஒருபகுதியாகிறது.
*
குடும்ப அமைப்பைக் களமாகக் கொண்டு எழுதியவர்களின் அறிமுகத்தோடான இந்த ஒப்பிடலும், உமாமகேஸ்வரியின் படைப்புலகின் தனித்தன்மையாக நீங்கள் பார்ப்பது பற்றியதான அவதானிப்பும் அவர் படைப்புகளைப் பற்றிய ஒரு கோணத்தை எங்களுக்கு வழங்கியுள்ளது. நன்றி.