விஜயதசமி – மகத்தான அறிவுத்திருவிழா: நித்ய சைதன்ய யதி
(தமிழில் – கதிரேசன்)
உலகிலுள்ள அனைவரும் மரணபயம் உள்ளவர்களே. சிறிய விபத்துமுதல் பெரிய ஆபத்துவரை எல்லா ஆபத்துக்களும் மரணத்தின் திசைநோக்கியே விரல் சுட்டுகிறது. ஆபத்தில்லை என்று உணர்ந்ததும் நம்மிடமிருக்கும் பயம் விலகும். ஆபத்தை தவிர்க்கவே நாம் கோட்டைக் கொத்தளங்களை உருவாக்குகிறோம். கருங்கற்கள் கொண்டோ காங்ரீட் கலவை கொண்டோ வீட்டின் மதில் சுவர்கள் எழுப்புகிறோம்! வளமையான கதவில் பூட்டும் தாழ்ப்பாலும் வைத்து பூட்டுகிறோம். வீட்டைச் சுற்றி மதில் சுவர்கள், வாசலில் கடிக்கக்கூடிய நாயைக் கட்டி வைத்திருக்கிறோம். இவ்வாறு ஆபத்தை உள்ளுக்குள் புகமுடியாமல் தடுக்கும் அரண்களை சமஸ்கிருதத்தில் ’துர்க்கம்’ என்று அழைப்பார்கள்.
குழந்தைக்கும் பயம் ஏற்பட்டால் அன்னையின் கைகளை இறுக்கிப் பிடிக்கும். அன்னையின் பின்னால் ஒளிந்து கொள்ளும். குழந்தையின் துர்க்கம் (துர்க்கை) தான் அன்னை. இந்த துர்க்கைக்கு பூஜை செய்யத்தான் வருடத்தில் பத்து நாட்களை ஒதுக்கி வைத்திருக்கிறோம். அதனையே நவராத்ரி என்றோ தசரா என்றோ அழைக்கிறோம். இந்து நம்பிக்கையின்படி அன்னையை தெய்வமாகப் பார்க்கும் போது தாயில் நான்கு பாவங்கள் உள்ளன. இயற்கையோடு எல்லா வகையிலும் இணைந்திருக்கிற எந்தவொரு தயவுதாட்சண்யமும் பார்க்காத காளி. நன்மை தீமைகளை பரிசீலித்து நன்மைகளை பாதுகாக்கவும் தீமையை எதிர்க்கவும் செய்கின்ற துர்க்கை. அழகு, ஐஸ்வர்யம், கருணை, செல்வம் போன்றவற்றின் ரூபமாக இருக்கக்கூடிய மகாலக்ஷ்மி. ஆனந்த முழுமையை கலை வழியாகவும் அறிவின் வழியாகவும் வழங்கும் சரஸ்வதி. இந்த தேவதைகளுக்கும் முழுமையான பூஜை அற்பனிக்கின்ற நாட்கள்தான் இந்த தசராத்ரிகள்.
இந்துக்கள் தங்கள் ஒரு ஆண்டின் அன்றாடச் செயல்களிலிருந்து (கர்மங்கள்) விலகி கடவுளின் ஆசியைப்பெற பூசைகளிலும், கீர்த்தனைப் பாடல்கள் இயற்றியும், ஆராதனைகளிலும் ஈடுபடும் நாட்கள்தான் இந்த நவராத்ரிகள். மண்ணிலிருந்து விண்வரை செங்குத்தாக ஒரு கோட்டைக் கற்பித்துக் கொண்டால் அக்கோட்டின் அடிப்பகுதி எல்லாவற்றின் உற்பத்தியைக் குறிக்கும் மூல-ஸ்தானமாகும் (Alpha point). வானில் இது முடிவடையும் இடம் (Omega point) முழுமையைக் குறிப்பதாகும். அதில் உற்பத்தியைக் குறிக்கும் அடிப்பகுதியில் உள்ள புள்ளியில்தான் நாம் காளியை வைத்திருக்கிறோம். கோட்டின் உச்சமான முழுமைப் புள்ளியில் இருப்பது சரஸ்வதி. உலகியல் அம்சங்கள் இருக்குமிடத்தில்தான் துர்க்கை. கற்பனை முக்கியமாக இருக்கும் மண்டலத்தில் லட்சுமி.
தாய், தந்தை, தந்திரசாலி, மாயாவி என்ற நான்கையும் ஆழ்படிமங்களாக கருதினால் பிறப்பு, காதல், நிராகரிப்பு, அழிவு, வெற்றி இவையும் ஆழ்படிமங்களே. இந்த ஆதிரூபங்கள்தான் நம்முடைய நம்பிக்கைகளையும் எண்ணங்களையும் ஆட்சி செய்கின்றன. நேசிக்கப்படுபவற்றோடு சேர்ந்து செயல்படவும், அல்லாதவற்றை தடைசெய்யவும், வெற்றியை பரப்பவும், தோல்வியை மறைத்து வைக்கவும் மனிதர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். குரோதம், பொய், வஞ்சம், தீமை போன்றவற்றை எதிர்த்து நிற்க மனிதர்கள் துர்க்கங்களை (அரண்களை) உருவாகுகிறார்கள். நம்முள்ளே சமானமான இரு எதிரெதிர் சக்திகள் போட்டியிடும் போது தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்கான யுத்தம் தொடங்குகிறது. சமமான சக்தியுள்ள எதிரிடையீடுகள்தான் உண்மையும் பொய்யும், நன்மையும் தீமையும். சீனாவின் தாவோவில் உள்ள இன்-யாங் போன்றதுதான் இது, பொய்யை முழுமையாக வரையறுத்துவிட்டால் உண்மையைக் கண்டறிய முடியும். தீமையோடு எடைபோட்டு பார்க்கும்போதுதான் நன்மை என்னவென்று புரிகிறது. அதர்மம் நம்மில் ஏற்படுத்தும் துன்பநிலையை தவிர்ப்பதற்காகவே தர்மத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். அப்படிப்பார்க்கும்போது பரஸ்பர விரோத சக்திகள் ஒன்றை ஒன்று நிரப்பும் முழுமையான சக்தியும்கூடத்தான்.
குயவன் களிமண்ணை குழைத்து மிதித்து தன் சக்கரத்தில் அதற்கு உருவம் கொடுத்து தீயில் சுட்டி எடுக்கும்போது களிமண்ணின் ஆதிவடிவம் மறைந்து அதற்கு பதிலாக பயனுள்ள சட்டி உண்டாகிறது. அதுபோல, சமன்வயத்தின் வடிவமான அன்னை நம்மில் இணையாதவற்றை விலக்கி இணைபவற்றை தொடர்புபடுத்தி அதிலிருந்து ஒத்திசைவை உருவாக்குகிறாள். தீமையை எரித்து அதிலிருந்து யோகாக்னியை வெளிப்படுத்தி நன்மையை, ஒளியை உண்டாக்குகிறாள். இவ்வகையில் நாம் புரிந்து கொண்டோமானால் அன்னையின் குரூரம் போல் காணப்படுபவைகூட அவள் மறைவாக காத்து வைத்துள்ள கருணைதான். ஸ்ரீராமகிருஷ்ணர் அன்னையை பத்ரகாளி என அழைக்கும் போது அவர் காளியை குரூரத்தின் வடிவமாக பார்ப்பதில்லை. இருளை ஒளியாகவும், தீமையை நன்மையாகவும் அன்பின் ரூபமாகவே காண்கிறார். இணைவும் பிரிவும் இந்த உலகில் நிறைந்து இருப்பினும் அதில் ஒவ்வொன்றையும் தன்னளவில் வைத்துப் பார்க்கும்போது அவை முழுமையான சிருஷ்டி ரூபங்களே.
காட்டில் மானிருக்கிறது. மானை பிடித்துத் தின்னும் சிங்கமிருக்கிறது. முயலிருக்கிறது, முயலைக் கொன்று தின்கிற நரியும் செந்நாயுமிருக்கிறது. பறவைகளிருக்கிறது. அவற்றையும், அவற்றின் முட்டைகளையும் தின்கிற பாம்பிருக்கிறது. பாம்பைக் கொல்லும் கீரியும், கொத்தி விழுங்குகிற மயிலும் அதே வனத்தில் தானிருக்கிறது. பூச்செடிகளை தின்கிற புழுக்கள் புழுக்களை விழுங்கிற பறவைகள் இருக்கிறது என்றால் அற்புதமான வகையில் இவை ஒவ்வொன்றையும் பாதுகாத்து அவற்றின் வம்ச விருத்தியை உறுதிபடுத்துகின்ற பாதுகாக்கப்பட்ட கோட்டை போல இயற்கை பரஸ்பர விரோதமுள்ள இவற்றுக்கிடையில் ஓர் துர்க்கமாக இருக்கிறது. ஒரு இனத்தை வளர்ப்பதும் அழித்தொழிப்பதும் அதன் ஆட்சி சாதுர்யம்தான்.
நம்முடைய உடலில்கூட பரஸ்பரம் எதிரான ஹார்மோன்கள், என்சைம்கள், அமிலங்கள், காரங்கள் எல்லாம் நெருக்கமாக இருக்கின்றன. அவை ஒன்றுக்கொன்று கலந்து போய்விடாமல் மூச்சுக்குழாய், உணவுக்குழாய், ரத்தநாடிகள் போன்றவற்றை தனித்தனியாக வெவ்வேறு உறைகளில் பொதிந்து அவற்றின் தூய்மையை நிலைநிறுத்தும் துர்க்கங்களை இயற்கை உருவாக்கியிருக்கிறது. ஜீவனும் மரணமும் ஒரே உடலில்தான் பிறப்பு முதல் இறப்புவரை சேர்ந்து வாழ்கிறது. அவற்றுக்கிடையே அற்புதமான துர்க்கங்கள் உண்டு. பிரபஞ்சத்தில் ’துர்க்கம்’ என்ற உண்மையை காண்பதற்கு நாம் நமக்குள்ளேயோ அல்லது இந்த பிரபஞ்சத்தையோ சிறிது நேரம் கவனித்தால் போதும்.
வீட்டில் சமாதானம் உருவாக்க அன்னை ’துர்க்கமாக’ இருக்கிறாள். மகன் பற்றிய ஓர் உண்மையை தந்தை அறிந்தால் கையில் கதையெடுத்து அவன் தலையில் அடிப்பார் என்பதால் அன்னை அவ்வுண்மையை பொய் என்னும் திரைகொண்டு மூடுகிறாள். பின்னர் சந்திரகாந்த கல்லின் உரசல் மூலம் காரீயத்தை பொன்னாக்குவது போல தக்க தருணத்தில் உண்மையை எடுத்துரைத்து அவர்களுக்கிடையில் ஒத்திசைவை உருவாக்குகிறாள். என்றென்றைக்குமான, மகத்துவமான அம்சங்களை எல்லையில்லாத மங்கலமான குணங்களாக்கி, மனித இதயத்தையும், அவன் மாண்பையும், வழிபாட்டுணர்வையும் அந்த குணங்களுக்கு உரித்தானதாக ஆக்குவது இந்து மரபின்படி அன்னை ஸ்ரீதேவிதான். முடிவில்லாத வளங்களைப்பொழியும் லட்சுமிதேவி. பனித்துளியில் பிரதிபலிக்கும் சூரியவெளிச்சம் முதல் ஞானியின் தவத்தில் ஒளிரும் சுடர்வரை மகத்தானவை நிறைந்து கிடக்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் அதற்கான மாண்பும், மதிப்பும் நிலைநிறுத்தப்படுகிறது. அவற்றை எல்லாரும் பாதுகாக்கிறார்கள். யாரும் அதை சிதைப்பதில்லை. அதனால்தான் செல்வமளிக்கும் விஷ்ணுவை சர்வசம்ரக்ஷகன் (எல்லாவற்றிற்கு அரணாக இருப்பவன்) என்று அழைக்கிறோம்.
விலங்குகளில் உயிராற்றலாலும், விட்டுக்கொடுக்காத தன்மையாலும் மிகவும் கொடூரமானதாக கருதப்படுவது காட்டெருமை (மகிஷன்). அப்படிப்பட்ட மகிஷாசுரனைக் கூட அன்னை ஜெயிக்கிறாள். அந்த வெற்றியை விஜயதசமி என அழைக்கிறோம். போர்க்குணம் நம் ஆழ்படிமங்களில் ஒன்று. அதனால் போருக்கான குரூரமான ஆயுதங்களுடன் கலைஞர்கள் மகிஷாசுரமர்த்தினியை வடிவமைத்திருக்கிறார்கள். ஆனால் அன்னையின் கையிலுள்ளது மனிதர்களின் வாள் அல்ல. அன்னை மகிஷனை வெற்றிபெறுவது வாளால் கழுத்தறுத்தல்ல. அதற்குப் பதிலாக வாஞ்சையுடன் அவனுக்கு அழகான அக்ஷ மாலையை அணிவித்து அவள் வெற்றியடைகிறாள். அவள் வெற்றி பெறுவது பெரிய கதையெடுத்து அவனின் தலை பிளந்தல்ல. மனதைக் கவரும் புன்சிரிப்பினால்தான். இருட்டினை தள்ளி வீழ்த்த வெளிச்சம் முஷ்டி முறுக்க வேண்டியதில்லை. வெளிச்சம் வரும்போது இருட்டு தானாகவே மறையும். அன்னையின் இந்த வெற்றியின் ரகசியம்தான் சரஸ்வதியாக உருவகப்படுத்தப்படுகிறது. இந்த வகையில் புரிதல் நம்மிடம் இருந்தால் இப்போது நாம் ஓவியக்கூடங்களிலும் வழிபாட்டிடங்களிலும் உருவாக்கி வைத்திருக்கும் கோர உருவங்கள் எல்லாவற்றையும் நமது ரசனையின் குறைபாடுகளாகக் கண்டு அவற்றையெல்லம் காலத்தின் தவறுகளாக எண்ணி வியப்படைவோம். அன்னையின் உலகைவிட வேறு ஒன்றையும் அழகுடையதாக நாம் நினைக்க மாட்டோம். அறிவின் மகத்தான திருவிழாவாக நாம் விஜயதசமியை காண்போம்.
***
தமிழில்: கதிரேசன்
இலக்கிய வாசகர். தற்போது கேரளவிலுள்ள இடுக்கியில் வசிக்கிறார். சுயமாக மலையாள மொழி கற்று வருகிறார். இவரின் முதல் மொழிபெயர்ப்பு ஆக்கம் இது.
*
Comment வாழ்த்துகள் கதிரேசன். முதல் முயற்சியே அழகான ஆழமான கட்டுரை. வாழ்த்துகளும் அன்பும்
கதிரேசனுக்கு மனம் நிறைந்த அன்பும் பாராட்டுகளும். அபாரமான மொழியாக்கம்.
பண்டிகைகளை தன் ஒளியால் நமக்கு துலக்கி தருகிறார் குரு நித்ய சைதன்ய யதி.
குரு நித்ய சைதன்ய யதியின் மலர்த்தாள் என் சென்னியதே.
ஏதோ ஒன்று அரணாக நின்று, ஒரு மொழிபெயர்ப்பு கட்டுரையைத் தான் படிக்கிறோம் என்ற உணர்வை எழவிடாமல் தடுத்து விடுகிறது. கதிரேசனுக்கு வாழ்த்துக்கள்.
தசரா விழா குறித்து மேலதிக விளக்கம் தரும் சிறந்த கட்டுரை. குரு நித்யாவிற்கு வணக்கம். ஒரு உபரித் தகவல். யோகமரபில் உடலில் சூட்சமமாக உள்ள ஆறு சக்கரங்களில் முதலில் இருக்கும் மூலாதார சக்கரம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலம் சார்ந்தது. மனிதனை நிலம்/இருத்தல் சார்ந்து பிணைத்து , கர்ம வினை போன்றவற்றோடு இருகப்பற்றியிருப்பதும் அதுவே. அதிலிருந்து விடுதலை பெற, அதாவது மேலான சக்கரத்தை அடைய சரஸ்வதிக்கான பிஜ மந்திரம் புருவ மத்தியில் கவனம் செலுத்தியவாறு தியானத்தில் உச்சரிக்கப்படுவதுண்டு. இதை வைத்து குரு alpha , omega point பற்றி சொல்வதை புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் புற துவர்க்கம், அக துவர்க்கம் என்ற ரீதியில் காண்கையில் இக்கட்டுரை பலவாறாக பொருள் கொள்கிறது. மொழிபெயர்ப்பிற்கு நன்றிகள்
Very nice article. Great job. Kudos to the translator.
கட்டுரை மிகச்சிறப்பாக வந்துள்ளது..
வாழ்த்துகள் !!!
பின்னூட்டம் அளித்த நண்பர்களுக்கு நன்றி .இந்த மொழியாக்கத்தில் அழகிய மணவாளனின் முக்கிய பங்களிப்பு இருக்கிறது தட்டச்சு பிழைதிருத்தம் போன்றவற்றில் அவினாசி தாமரைக்கண்ணின் பங்களிப்பு இருக்கிறது. இருவருக்கும் நீலி இதழ் உருவாக்கத்தில் இருக்கும் நண்பர்களுக்கும் என் நன்றிகள்
இந்த அற்புதமான கட்டுரையுடன் இன்றைய தினம் துவங்குவதில் மிக்க மகிழ்ச்சி. கதிரேசன் அவர்களுக்கு நன்றி. உங்கள் மொழிபெயர்ப்பு பணி தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் உங்கள் வழியாக எங்களை வந்தடைய உங்கள் பணி அவசியம். மீண்டும் ஒரு நன்றி