மெல்லுணர்வுகள் கலையாதலின் தொடக்கம் – ரம்யா

(உமா மகேஸ்வரியின் படைப்புலகத்தை முன்வைத்து)

உமா மகேஸ்வரி

ணர்வுகள் உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானவை. தாம் கடந்து செல்ல உயிர்களை அவை ஊடகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. பெருகியும், நிறைந்தும், வழிந்தும், உமிழப்பட்டும் என பலவகை அலைவரிசைகளுடன் அவை வெளியேறிக் கடந்து எங்கும் நிறைந்துள்ளன. மனித உறவுகளுக்குளுக்குள் அவை முக்கியப்பங்கு வகிக்கின்றன. இலக்கியத்தில், கலையில் உணர்வுகள் ரத்தஓட்டம் போன்றவை. மனிதர்களில் உணர்திறனைப் பொறுத்து சிலருடைய மனம் மென்மையானது, அதீத உணர்திறன் கொண்டது. அதன் அதீதமே அவர்களைப் பாதிக்கிறது. சிலருடைய மனமோ தடித்த தோள்களால் ஆனது. அவை அங்கே உள்நுழைவதே இல்லை. உள்நுழைவதில்லை எனும்போது பாதிப்பும் ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால் உணர்ச்சிகரமானவர்கள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். நேர்மறையாகவும் எதிர்மறையாகவும். எதிர்மறையாக எனும்போது நடைபிணமாக வாழ்வது ஆரம்பித்து, பித்தாகி, உயிரை மாய்த்துக் கொள்வது வரை நடக்கிறது. ஒரு உரையாடலின் போது உமாமகேஸ்வரி தன் தங்கையின் இறப்பு அவரை பாதித்த விதத்தைச் சொல்லும் போது, “இருபது வருஷம் ஆயாச்சு. இன்னும் கூட அது மனதை விட்டு நீங்கவில்லை. சென்ஸிடிவ் மனிதர்கள் அப்படித்தான்” என்றார். இந்த வரியே இது சார்ந்து சிந்திக்கச் செய்தது. எழுத்தாளர்கள் ஒருவகையில் உணர்ச்சிவயம் மிக்கவர்கள் தான். தங்கள் உணர்வுகளைக் கடத்திச் செல்லும் ஊடகமாக மொழியை, எழுத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சுந்தரராமசாமி எழுத்தாளராவதற்கான முக்கியமான தேவையைப் பற்றி ஒரு நேர்காணலில் குறிப்பிடும்போது அழகுணர்ச்சி, மெல்லுணர்ச்சி, சூழலைக் கூர்ந்து கவனித்தல், தொடர்ச்சியான வாசிப்பு, ஒவ்வொரு நாளும் எழுதுதல், மொழியின் கூர்மை ஆகியவையே பிரதானம் என்கிறார். ”மெல்லுணர்வு தேவை” என்று சொல்லிய இடத்தில் ”தடித்த தோல் இருக்கக்கூடாது” என்று சொல்லிவிட்டு சிரிக்கும் இடம் அழகானது. ஆனால் எவ்வளவு தூரம் பயின்று வர வேண்டும்? என்ற இடத்திலேயே அது கலையாகிறது. உணர்வுக்கும் அறிவுக்குமான கலவைகளின் எந்த விகிதாச்சார நிகழ்த்தகவுகளில் அது கலையாக மாறுகிறது என்ற கேள்வி ஒரு படைப்பை மதிப்பிடும்போது எழுகிறது.

உணர்வுகள் எவ்வளவு மாத்திரை இலக்கியத்தில் பயின்று வந்தால் ரசிக்கும்படியானது அல்லது அழகியல் தன்மை கொண்டது என்ற கேள்வியை புதிய வாசகர் சந்திப்பில் ஜெ -விடம் எழுப்பியபோது அவர் அதை மிகை நாடகீய உணர்வுகள் (Melodrama), மெல்லுணர்வுகள் (sentimental), உணர்வுகள் (Emotion) என மூன்று வகையாகப் பிரித்தார்.

//மிகை நாடகீய உணர்வுகளை அளிக்கக்கூடிய எழுத்தாளர்கள் பார்வையாளர்களை இலக்காக்கிக் கொண்டு அவர்களை உணர்வு ரீதியான சுரண்டலுக்கு ஆளாக்குகிறார்கள். இந்த வகையான இலக்கியங்களில் ஊகிக்கக்கூடிய உரையாடல்கள், வசனங்கள் அதிகம் இருக்கும். மிகை உச்சங்களை ஏற்படுத்துதல், அசல் உணர்வை மழுங்கடிக்கக்கூடிய தேய் உணர்வுகளைப் பயன்படுத்தி அதை நீர்த்துப் போகச் செய்வது போன்றவை இவ்வகை இலக்கியத்தின் தன்மையாக இருக்கும். வணிக எழுத்துக்கள் இந்தவகை உணர்வுகளை வாசகர்களுக்குத் தந்து அவர்களைத் தங்கள் வசம் வைத்திருப்பவர்கள். இது ஒரு வகையான குறைவுபட்ட கலை நுகர்வு தான். மெல்லுணர்வுகள் (sentimental) சார்ந்த எழுத்து என்பது உணர்வு ரீதியான தீவிர பற்றுதல் காரணமாக இலக்கியத்தில் வெளிப்படுவது. இது பெரும்பாலும் எழுத்தாளர்கள் தங்கள் சொந்த நினைவுகள் சார்ந்து எழுதும்போது நிகழ்வது. தான் எடுத்துக் கொண்ட இலக்கிய வடிவத்திலிருந்து அகன்று சிதறி நினைவுக்குறிப்புகளாக மட்டுமே எஞ்சுவதற்கான சாத்தியங்களே இதில் மிகுதி. இத்தகைய ஒன்றும் ஒரு குறைவுபட்ட கலையே. ஆனால் உணர்வுகள் கலையின் தூய வடிவத்தை அடையும் ஒரு தளம் உள்ளது. படைப்புகளில் உணர்வுகளை அதன் பேசுபொருள் சார்ந்து மனிதம் (Humane), தத்துவார்த்தம்/தரிசனம், விழுமியங்கள், உளநுட்பங்கள் சார்ந்து என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.// என்றார். ஒவ்வொன்றிற்கும் படைப்புகளையே உதாரணம் காட்டி விளக்கினார்.

இவையெல்லாம் உணர்வுகள் கலையில் பயின்று வருவது பற்றிய அறிமுகத்தைக் கொடுக்கலாம். ஆனால் இவையாவற்றையும் தாண்டி அப்படைப்பின் வழிதான் அவை கலையாக நிகழ்ந்துள்ளதா என மதிப்பிட முடியும் என்பதையே அவரின் விளக்கம் உணர்த்தியது. உமாமகேஸ்வரியின் ஒட்டுமொத்த புனைவுலகையும் வாசித்தபின் அவற்றை உணர்வுகள் சார்ந்து உளநுட்பங்களைப் பேசிய கதைகள் என பிரித்துக்கொள்ளலாம்.

*

மாமகேஸ்வரி  தமிழ் இலக்கியத்தில் தொண்ணூறுகளில் கவிஞராக அறிமுகமாகிறார். தொண்ணூறுகள் தமிழ் இலக்கியத்தின் புதிய வீச்சான எழுத்தாளர்கள் எழுந்து வந்த காலகட்டம். இக்காலகட்டத்தில் நாவல் இலக்கியம் சார்ந்து தீவிர உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. தலித் இலக்கியத்தின் வீச்சு ஆரம்பித்த காலகட்டமும் கூட. பெண்ணியம், உடலரசியல் சார்ந்து ஒரு உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்தச் சூழலில் 2002இல் உமா மகேஸ்வரியின் முதல் நாவல் யாரும் யாருடனும் இல்லை வெளிவருகிறது. இந்நாவல் பரவலாக இலக்கிய கவனத்தையும், வாசக ஏற்பையும் பெற்றது.

கூட்டுக் குடும்பப் பின்னனியில் அதிலுள்ள பெண்களின் வாழ்க்கையை, அக உலகங்களை சித்தரித்த நாவல் இது. ஆண்களின் வெளி உலகமும், அக உலகமும் எதார்த்தத்தில் பெண்களின் உலகத்தில் வெளிப்படாதிருப்பதைப் போலவே வெளிப்படாதிருக்கும் நாவல். ஒரு லட்சிய ஆண் என பெண் விரும்பும் உணர்வுகளின் ஆணாக குணா சித்தரிக்கப்படுகிறார். அதுவும் நிதர்சனத்தில் கைகூட முடியாத உறவு முறைக்குள் நிகழ்கிறது. இந்நாவலில் எழுந்து வந்திருக்கும் முக்கியமான உறவு குணாவுக்கும், அவனின் அண்ணன் மனைவியான வினோதினிக்குமானது. எல்லா கள்ள உறவுகளின் முடிவைப் போலவே துன்பியலாக முடிகிறது. அடுத்த உணர்வு ரீதியான உறவு சிறுமியான அனுவுக்கும் அவளின் சித்தப்பாவான குணாவுக்குமான உறவு. அன்பு கிடைக்காத குழந்தையான அனுவை கடவுளுக்குக் கடிதம் எழுதச் சொல்லும் இடம் உணர்வுப்பூர்வமாக அமைந்துள்ளது. அதே போல் அன்னம்மா-பொன்னையா-பார்வதி என குடும்பத்தின் மூத்த தலைமுறையில் நிகழும் ஒரு உணர்வுப் போராட்டம். ஆண்களில் குணாவிற்குப் பிறகு அதிகம் எழுந்து வந்திருப்பது பொன்னையாவின் கதாப்பாத்திரம். இந்த கூட்டுக் குடும்பத்தின் தலையாக பொன்னையா உள்ளார். குழந்தைகள் பெற்று உடல் நலிந்துவிட்ட அன்னம்மாவிற்கு மாற்றாக பார்வதியை வைத்துக் கொள்ளும் பொன்னையா. அவரால் உணர்வு ரீதியா பாதிப்புக்குள்ளாகும் அன்னம்மா. ஊனமான சுப்பக்காவுக்கும், அந்த வீட்டிலுள்ள குழந்தைகளுக்குமான உணர்வு என இந்த இடங்களிலெல்லாம் ஆழமான அகமொழி வழியாக உணர்வுகள் கடத்தப்பட்டுள்ளது.

நாவல் வாசித்தபின் ”யாரும் யாருடனும் இல்லை” என்ற ஒற்றை வரியே யாவற்றையும் கோர்த்துவிடுகிறது. நவீன எழுத்தாளர்களில் ஜிட்டு, ஓஷோ ஆகியோரின் சிந்தனைகள் பாதித்திருப்பதை அவர்களே கூறுவதன் வழியாகவும், அவர்களின் படைப்புகளைக் கொண்டும் அறியலாம். குடும்ப அமைப்பு வலுவாக இருந்த காலகட்டத்தில் சமூகத்திலிருந்து தனித்த துண்டாக மனித மனத்தின் நுண்மைகளை அவர்கள் படைப்புகளில் வெளிக்காட்டியுள்ளனர். தனிவழிப்பாதையைத் தேர்ந்தெடுப்பவர்களாகவே பெரும்பாலும் இருந்திருக்கின்றனர். ஆனால் தொண்ணூறுகள் என்பது கூட்டுக் குடும்பங்கள் தனிக்குடும்பங்கள் ஆன காலகட்டம். புத்தாயிரம் என்பது அதுவும் நீர்க்கத் தொடங்கிய காலகட்டம். 21ஆம் நூற்றாண்டு தனியர்களின் காலகட்டம் என்று சொல்லுமளவு மனித மனம் சுருங்கியுள்ளது. இந்த வரலாற்றுப் பார்வையின் வழி 2002இல் வெளிவந்த யாரும் யாருடனும் இல்லை நாவலைக் கண்ணோக்கினால் அது தரும் செய்தி அளப்பறியது. உமாமகேஸ்வரியின் கவிதைகளில் தனித்த நட்சத்திரம் என்பது பல இடங்களில் படிமமாக வரும். சூரிய வெளிச்சத்தில் மினுங்கும் ஒற்றை நட்சத்திரம் என்ற படிமம் தரும் பரிதவிப்பை அடைய முடியும். பெண்கள் 21ஆம் நூற்றாண்டில் அல்ல, கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பிற்குள்ளேயே மனம் எனும் வெளியில் தனித்தலையும் உயிராக இருந்திருக்கிறார்கள் என்ற சிந்தனையை நாவல் அளிக்கிறது. ஆண்கள் புறமாகவும், அகமாகவும் எப்படி, எதன் நிமித்தம் விலகியிருப்பார்கள் என்பதை நாவல் அணுகவில்லை. ஆனால் பெண் உலகத்தின் வழி அவர்களை வேடிக்கை பார்க்க முடிகிறது.

இந்த நாவலின் பலம் அதன் மொழியும், தலைப்பும், அக உணர்வுகள் ஆழமாக வெளிப்படும் இடங்களும் தான். விடுதலைக்கு முந்தய தலைமுறையில் குடும்பம் சார்ந்த புனைவுலகை எழுதிய விந்தியா (ராஜேஸ்வரி), சரோஜா ராமமூர்த்தி(பனித்துளி, முத்துச்சிப்பி), கி. சரஸ்வதி அம்மாள் (ஒளியும் நிழலும்) போன்றவர்கள் பெண்-குடும்பம் சார்ந்த முரண்களை பேசுபொருளாகக் கொண்டு எழுதியிருக்கிறார்கள். அம்பை அங்கிருந்த பெண்ணுக்கான கேள்விகளை கருத்தியல் தளத்தில் புனைவாக்க முயன்றார். அந்த வகையில் அவர் விடுதலைக்கு முந்தைய தலைமுறைப் பெண்களிலிருந்து ஒரு தனித்த பாதையைத் தேர்ந்தெடுத்தவர். அங்கிருந்து விடுத்தலைக்குப் பிந்தைய தலைமுறையில் குடும்பம்-பெண் சார்ந்த பேசுபொருளில் அகவுலகம் சார்ந்து அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றவர்களில் உமாமகேஸ்வரி முதன்மையானவர்.

அவருடைய புனைவுலகத்தின் சிக்கலாக சிதறல் தன்மையும், ஒருமையின்மையையும் கூறலாம். கவிதை அதிக சிதறல் தன்மையுடன் இருக்கலாம். ஆனால் உரையாடல் அவ்வாறு அமைந்தால் வாசிப்பு தடைபடும். ஒரு படைப்பு தன் கணத்தால் வாசிப்புத்தடையை ஏற்படுத்தி அவனை சிந்தனை சார்ந்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தலாம். ஆனால் சிதறல் தன்மை காரணமாக அமையும் போது வாசிப்பில் சலிப்பு உருவாகிறது. எதார்த்தவாத நாவல்களில் அன்றாடத்தன்மையைக் கையாளும் போது கவனம் தேவைப்படுகிறது. உரையாடல்களின் தொடர் அன்றாடத்தன்மையே மேலும் சலிப்பாக்குகிறது. ”அத்தியாயங்கள்”, “பகுதிகள்” என நாவல்களில் பிரிப்பது அதன் காலத்தை வரையறுத்துக் கூறுவதற்கு அல்லது ஒரு ஒருமையை அளிப்பதற்குத்தான். உமாமகேஸ்வரியின் நாவலில் அத்தகைய திட்டவட்டம் இல்லாமல் காலத்தில் தாவல்கள் இருப்பதும் அதன் ஒருமையைக் குலைத்து சிதறலை அதிகப்படுத்துகிறது.

இரண்டாவது நாவலான அஞ்சாங்கல் காலம் 2013இல் வெளிவருகிறது. பத்துவருடம் கழித்து வரும் நாவலில் கதைமாந்தர்களின் பெயர்களைத்தவிர பெரிய மாற்றம் ஏதுமில்லை என்று வாசித்தபின் அறிவது ஏமாற்றம் தருகிறது. ஆனால் யாரும் யாருடனும் இல்லை நாவலில் நன்கு துலங்கி வந்த கதாபாத்திரமான வினோதினி-குணாவின் உறவை மையமாகக் கொண்டு எழுத முற்பட்டது நாவலின் ஆரம்பத்தில் தெரிந்தாலும் அது சிதறி விரிந்து பின் ரேணுகாவின்(வினோதினி) இறப்பில் முடிகிறது. சென்ற நாவலில் கை கொடுத்த நாவலின் தலைப்பு இந்தமுறை கை கொடுக்கவில்லை. அஞ்சாங்கல்காலம், யாரும் யாருடனும் இல்லை நாவலின் நீட்சி என்ற அளவிலும், கதைமாந்தர்களின் விரிவு, குழந்தை உலகின் ஆழமான, அழகான சித்தரிப்பு என்ற அளவில் நின்றுவிடுகிறது. ஆனால் குடும்பத்திலிருக்கும் ஒவ்வொருவரும் ஒரு தனி நிறுவனமாக மாறிவரும் ஒன்றின் ஆரம்பச் சுவடுகள் முன்னெப்போதோ ஆரம்பித்துவிட்டது என்ற சிந்தனையை இந்த இரு நாவலும் அளிப்பது இதன் பலமாக உள்ளது.

உமாமகேஸ்வரி படைப்புகள் (வம்சி பதிப்பகம்)

நாவலை விட ”சிறுகதைகள்” உமாமகேஸ்வரி சிறப்பாக வெளிப்பட்ட வடிவம். சிறுகதை தன் இலக்கிய வடிவத்திலேயே ஒற்றை முரணை, ஒன்றை, ஒரு கதாப்பாத்திரத்தை முன் வைப்பது என்பதால் நாவலில் காணும் சிதறல் தன்மையை இல்லாமலாக்குகிறது. இங்கும் அவர் குடும்பம்-பெண், அதன் உறுப்பினர்கள், பெண் உணர்வுகள், உளநுட்பங்கள் சார்ந்த பேசுபொருளையே கையாண்டாலும் தனக்கான தனி முத்திரையை அதன் பிறழ்வுத்தன்மை, கற்பனையின் மூலமாக எட்டிவிடுகிறார். வீடு அதில் காட்டப்படும் பெண்களின் அகம் வழியாக விரிந்து விரிந்து தன்னை பெரிதாக்கிக் கொள்வதை இங்கு உணரலாம்.

இங்கு கதைமாந்தர்கள் பெரும்பாலும் நாம் நம் நிகர் வாழ்க்கையில் ஈர்ப்புடன் அணுகாதவர்கள் தான். கதைமாந்தர்கள், அவர்களின் அன்றாடங்கள், சிக்கல்கள் வழியாக ஒரு கதைசொல்லல்தன்மை ஆரம்பித்தாலும் அதன் இறுதி வரிகளே அவற்றை இலக்கியத்தன்மை கொண்ட படைப்பாக மாற்றுகின்றன. ’இறந்தவளின் கடிதம்’ என்ற கதையில் இறந்த பானுவிடமிருந்து அவள் சகோதரிக்கு ஒரு கடிதம் வருகிறது. கட்டாயம் அது நிதர்சனத்தில் அவள் எழுதியிருக்க வாய்ப்பேயில்லை. கற்பனையின் வழியாக இறந்த பானு, அனுவிடம் அவளுடனான நினைவுகளை மீட்டுவதாக கதை அமைந்துள்ளது. அதன் இறுதி இவ்வாறாக முடிகிறது. ”எடுக்க எடுக்க உயரும் காகித அடுக்கு. அவசரமாய்க் குலைத்து அந்தக் கடிதத்தின் முடிவைத்தேடினேன். அதன் முற்றற்ற வினோதத்தை மட்டும் என் நினைவில் விரியவிட்டுக் கொண்டு அது இன்னும் எழுதப்பட இருந்தது”. இறந்தவளின் முடிவற்ற கடிதம் என்ற சித்திரமே கதையின் உச்சமாகிறது. ஆனால் அதற்கு முன் இறந்தவளுக்கும் கதைசொல்லிக்குமான சுவாரசியமற்ற நினைவுச் சித்தரிப்பைக் கடந்து வருவது சிரமமாகவே உள்ளது.

கரு” சிறுகதை முடிவில் “என் தலை கழன்று மூளைக்கு உருண்டு போனது” என்பதும்; ”ரணகள்ளி” சிறுகதையில் “என் அலமாரியில் எல்லாப் புத்தகங்களிலுமே எழுத்துக்கள் இல்லை” “முந்தா நாள் நீ தந்த புத்தகத்தில் மட்டும் இல்லை. என் அலமாரியில் எல்லாப் புத்தகங்களிலுமே எழுத்துக்கள் இல்லை” என்பதும்; அரளிவனம் சிறுகதையில் அவளின் தலையணை மறைவில் அவளுக்கு மட்டுமே தென்படும் அரளிக் காய்கள் பற்றியதும்; “அம்ருதா” சிறுகதையின் இறுதியில் அவளுக்கு மட்டும் கண்ணனாய்த் தெரியும் குழந்தையும்; ”மரணத்தடம்” சிறுகதையின் இறுதியில் அவளுக்கு மட்டுமே ஜன்னலில் தெரியும் கைத்தடமும் என சில வலுவான படிமங்களை வாசகர்களுக்கு அளிக்கிறார்.

இந்த சித்திரங்களிலெல்லாம் பெண் உலகின் துயர்களும், அன்பிற்கான ஏக்கங்களும், பரிதவிப்புகளும் புலப்படுகின்றன. ”ஆயிரம் வார்த்தைகள் தராத ஆறுதலை ஒரு சின்னத் தொடுகை கொடுத்துவிடும். மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல்தான். அதன் ப்வ்வொரு சதுர மில்லிமீட்டருக்கு அடியிலும் ஆயிரக்கணக்கான நரம்பு முனைகள் இருக்கின்றன. அவை மூளைக்கும் தண்டுவடத்திற்கும் ஓயாமல் செய்திகளை அனுப்ப உதவுகின்றன. மனிதப்பிறப்பின் போது முதன்முதலாகப் புலனாவது தொடுவுணர்வுதான். மரண நேரத்தில் இறுதியாக உடலிலிருந்து விடைபெறுவது அதுதான்” என்ற வரி “நிறைவின் உறைதளத்தில்” சிறுகதையில் வருகிறது. உமாமகேஸ்வரியின் புனைவுலகப் பெண்கள் யாவரும் ஏதோவகையில் புறமாகவும், அகமாகவும் அன்பின் ஏக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவ்வுலகின் ஆண்கள் தடித்த தோல் கொண்டவர்களாக அதீத வெளிச்சத்துடன் மினுங்கும் அந்த ஒற்றை நட்சத்தின் ஒளியைக் காணாமலாக்குகிறார்கள்.

உமாமகேஸ்வரியின் முத்திரைக் கதையான மரப்பாச்சி குழந்தையிலிருந்து கன்னியாக தன்னை இயல்பாக உணராமல் தன் குடும்ப உறுப்பினராலேயே பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு பரிதவித்து உணரும் அனுவின் கதை. அப்பா முதல்முதலில் மரப்பாச்சி பொம்மையை எடுத்துத் தருவதில் ஆரம்பித்து “மீண்டும் முளைக்கத் தொடங்கியிருந்த அதன் முலைகளை அனு வெறுப்போடு பார்த்தாள்” என முடியும் கதை. இதற்கு இடையில் நடக்கும் அனுவின் உணர்வுப் போராட்டத்தை தன் மொழியின் வன்மையாலும், உணர்வு நுடபத்தாலும் அழகாகக் கடத்தியிருக்கிறார்.

“தெரு மிகவும் குறுகியது; தன்னைக் கடப்பதில் எந்தச் சவாலையும் தராதது. வீட்டிற்கான பாதை சுருக்கமானது. அமைதியாகக் காத்திருந்த வீடு மெளனமாக விரிந்து எங்களை உள்வாங்கியது” என்ற வரி சிறுகதையில் வருகிறது. உமாவின் இந்த உலகில் அரசியலோ, பொருளாதாரமோ, வரலாறோ, சமூகமோ, குடும்பமோ எதுவுமே பொருட்டல்ல. வீடே கூட ஒரு பொருட்டல்ல. இங்கு பொருட்டாவது மனித உணர்வுகள் மட்டுமே. அதுவும் பெண்களின் உணர்வுகள், ஏக்கங்கள், கவலைகள், புலம்பல்கள். எதார்த்த உலகின் அன்றாடம் இப்புலம்பல்களால் நிறைந்தது தான். அது சலிப்பூட்டக்கூடியது. சலிப்பூட்டும் இப்புலம்பல்களை தன் எழுத்தால் ஓரளவு அது இல்லாமல் புனைவுகளாக்க உமாமகேஸ்வரியால் முடிந்திருக்கிறது. சிறுகதையின் சிக்கலாக கவிதை நடை உள்ளது. மொழியின் அழகை அது கூட்டினாலும் ஒருமையைக் குலைக்கும் வேலையைச் செய்கிறது.

சிறுகதைகளை விடவும் கவிதையில் இன்னும் ஆழமாக வெளிப்படுகிறார். ஏனெனில் கவிதை தன்னளவில் சிதறலை ஏற்றுக் கொள்ளக்கூடியது.

மங்கிய இருள் போர்த்த
பாழ் மண்டபமொன்றில்
ஒரு விண்மீன் ஒளிமுள்
சூரிய இரைச்சல்களின்
மத்தியில்
துடிதுடித்து இருக்கிறது
நினைவின் மறுப்பில்
மிக மௌனமாக
மிகத் திண்மையாக
மிக ரகசியமாக.

எனும்போது அந்தத்துண்டு நம் கற்பனைகளால் விரித்தெடுத்துக் கொள்ளப்படுகிறது. கவிதைகளில் வீடோ, வீட்டின் இறுக்கமோ பெரும்பாலும் இல்லை. வெறும் உணர்வுத்தளத்தில் அவை பிரிதொன்றை நோக்கி நகர்ந்துவிடுகிறது.

*

முப்பது வருடங்களுக்கும் மேலாக இலக்கியத்தில் இயங்கி வரும் உமாமகேஸ்வரியின் புனைவுலகை குடும்பம் என்ற அமைப்பிற்குள் இருக்கும் பெண்களின் நினைவுக்குவியல்கள் என்று மட்டும் வரையறுத்து விட முடியாது. வெற்றுப் புலம்பல்கள் என்றோ, ஏக்கங்கள் என்றோ சொல்லி முடித்துவிட முடியாது. ஒட்டுமொத்ததின் ஒரு முழுமையான கூறு என்றும் சொல்லிவிட முடியாது. இவற்றை எவ்வகையிலும் ஒரு காலகட்டத்திற்குள்ளும் அடைக்க முடியாது. குடும்பம், வீடு ஆகியவற்றை இப்புனைவுலகம் களமாகக் கொண்டாலும் அதன் பேசுபொருள் உளநுட்பங்கள் சார்ந்து அமைந்துள்ளது. அங்குதான் அது இலக்கியப்படைப்பாகிறது. ஆனால் அது கலையின் உச்ச சாத்தியத்தை அடைவதற்கு முன் எங்கோ நின்று விடுகிறது.

அண்டத்திலுள்ளதே பிண்டத்திலுள்ளது என்பார்கள். விரிந்து பரந்து முன் சென்று காணும் பிரபஞ்ச தரிசனத்தை, குறுகி, சுருங்கி அகழ்ந்து பிண்டத்தின் முழுமையை நோக்குவதன் வாயிலாகவே அடைய முடியும். குடும்பம், வீடு, அதன் மனிதர்கள், பெண்கள், பெண்களின் அகவுலகம் சார்ந்த படைப்புகள் என இவற்றைத் தனியாகப் பிரித்துக் கொண்டால் இவை ஒரு வகையில் பிண்டத்தின் வழியாக பிரபஞ்ச தரிசனத்தை அடைய முற்படுவதே. இந்தவகை எழுத்துக்களை எழுதிய ஆண், பெண் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறார்கள். ஆனால் அதன் முழுமையை இதை மட்டுமே எழுதி அடைந்த தமிழ் எழுத்தாளர்கள் என யாரும் இல்லை. ஆனால் இதன் வழியாக மட்டுமே எழுதி அடைய முடியும் முழுமை ஒன்றுள்ளது. இந்திய அளவில் ஆஷாபூர்ணாதேவியை உதாரணமாகச் சொல்லலாம். விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் எழுதிய பெண் எழுத்தாளர்களில் அதன் தொடக்கம் இருக்கிறது. அதன்பின் அம்பை அதை கருத்தியல் தளத்திற்குள் நுழைத்து வேறொரு பாதைக்கு அழைத்துச் சென்றார். நிரப்பபடாத இன்னொரு பாதையை தேர்ந்தெடுப்பதற்கான சூழலை பின்நவீனத்துவ அலை அளித்தது. வடிவம், பேசுபொருள் என யாவற்றையும் கலைத்துப் போட்டு பரந்த பரப்பை இலக்கியத்திற்கு அது அளித்தது. நிரப்பபடாத அந்தப் பாதையில் பயணித்த முதல் பெண்ணாக உமாமகேஸ்வரி அமைந்தார். தொடர்ந்து சூழலில் கவனிக்கப்பட்டவராகவும் இருந்தார். ஆனால் அவற்றின் வழியாக பிண்டத்தின் பிரபஞ்சத்தை தரிசிக்க முடியவில்லை என்பதே உண்மை. பெரும்பாலும் இந்த உலகத்தை எழுதும் எழுத்தாளர்கள் தங்கள் சொந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்தே தொடங்குகிறார்கள். அங்கிருக்கும் உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டு அதை எழுத்தாக்குகிறார்கள். எழுத்தாளர்கள் தேங்கிவிடும் இடம் கூட இது தான். நினைவுகளால், உணர்வுகளால் கட்டுண்டு கிடக்கும் அந்த இடத்திலிருந்து ரத்தத்தையும் சதையையும் காவு கொடுத்து பிய்த்து எரிந்து, பிரிந்து, அகன்று நின்று அதன் முழுமையை தரிசிக்க வேண்டியுள்ளது. அதற்கான பாதையின் தொடக்கப் புள்ளியில் உமாமகேஸ்வரி உள்ளார். இங்கிருந்து மீறிச் சென்று இவ்விடத்தின் முழுமையை தரிசிக்கும் ஒரு பெண்ணெழுத்து நிரை இப்பாதையில் இனி உருவாகி வர வேண்டும்.

*

உமாமகேஸ்வரி: தமிழ்விக்கி

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *