வேர்கள் – சைதன்யா

இந்த பிரபஞ்சத்தில் தனித்து விடப்பட்ட ஒரு மனிதனுக்கு உரிமைகள் என்று எதுவும் இருக்க முடியாது. ஆனால் கடமைகள் கண்டிப்பாக இருக்கும்.

-சிமோன் வெயில்

சிமோன் வெயில்

முதலாம் உலகப்போர், போல்ஷெவிக் புரட்சி, ஹிட்லரின் எழுச்சி, ஸ்பெயின் உள்நாட்டுப்போர், இறுதியாக இரண்டாம் உலகப்போர் என போரும், புரட்சியும் நிறைந்த வரலாற்று தருணங்களிலும், மானுடக் குலத்தின் பேரழிவுகளின் மத்தியிலும் வாழ்ந்த ஃப்ரான்ஸ் சிந்தனையாளர்களில் சிமோன் வெயிலும் (Simon Weil) ஒருவர். 

ஃப்ரான்ஸின் முக்கிய நவீன சிந்தனையாளர்களான சார்த்தர் (Sartre), காம்யூ (Camus), சிமோன் டி புவா (Simone de Beauvoir) இவரின் சமகாலத்தவர்கள். இதில் பெண்ணிய சிந்தனையாளரும், தத்துவாதியுமான சிமோன் டி புவா பாரிஸில் படித்த E.N.S. பல்கலைக்கழகத்தில் தான் சிமோன் வெயிலும் தத்துவ கல்வி பயின்றார்.

சார்த்தர், காம்யூ, சிமோன் டி புவா போல் அல்லாமல் ஃப்ரான்ஸில் அன்று பொதுவெளியில் பரவலாக அறியப்படாத தத்துவவாதியாகவே சிமோன் வெயில் இருந்தார். சிமோன் வெயிலின் இறப்புக்கு பின்னரே அவரது நூல்கள் பிரபலமாயின. 

சிமோன் வெயில் (1909 – 1943) வாழ்ந்த காலகட்டமான இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் உச்சகட்ட தேசியவாதம், நாசிசம், ஃபாசிசம், கம்மியூனிசம், சோஷியலிசம், ஸையோனிசம் என எல்லா விதமான கூட்டமைப்புவாத இயக்கங்களின் (Collectivism) வளர்ச்சியை கண்ட காலகட்டம். தத்துவவாதிகள்/சிந்தனையாளர்கள் அவற்றை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ குரல் எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அவர்களுள் பலர் போர்முனைக்கும் சென்றனர்.  

ஃப்ரான்சில் ஜெர்மானிய ஆக்கிரமிப்பு செய்த போது காம்யூ அதற்கு எதிராக French Resistance இன் பகுதியாக செயல்பட்டார். கடும் இடர்களுக்கு மத்தியில் நாளிதழ்களில் ஜெர்மனியை எதிர்த்து கட்டுரைகள் எழுதினார். நடைமுறையில் அவர்கள் இவ்வாறு ஏதோ ஒரு கூட்டமைப்புடன் ஒத்து செயல்பட்டாலும் எல்லா விதத்திலும் அமைப்புகள் மீதும், கட்சிகள் மீதும் நம்பிக்கை இழந்திருந்தனர்.

மனிதன் அவர்கள் உலகில் ஒரு தனியன் ஆனான். காம்யூவின் அந்நியன் (The Stranger) போன்ற படைப்புகளில் அவன் வேரற்றவனாக, வாழ்வின் அபத்தத்தை உணர்ந்தவனாக வருகிறான். இறுதியில் இவ்வுலகின் மென்மையான, அர்த்தமற்ற அலட்சியத்திற்கு தன்னை விட்டுக்கொடுப்பவனாக சித்தரிக்கப்படுகின்றான்.

இவ்வாறு எந்த சாராம்சமும் அற்ற அகம், சாராம்சம் அற்ற உலகு என்னும் தரிசனமே காம்யூ, சார்த்தர் ஆகியோரின் தத்துவம் வெளிப்படுத்துகிறது. இவர்கள் அடைந்த இதே அலைக்கழிப்புகளும் அறச்சிக்கல்களும் சிமோன் வெயில் அடைந்துள்ளார். ஆனால் அமைப்புகள் திரிந்து நஞ்சாகி  வெளியேற்றப்படும் தனிமனிதன் மேலும் பற்றுக் கொண்டு செயல்பட வேண்டும் என சிமோன் வெயில் அவரது The Need for Roots என்னும் நூலை குறிப்பிடுகிறார். இதில் கூட்டமைப்புவாத இயக்கங்களின் இடர்கள், எல்லைகள், போதாமைகள் குறித்தும், தனிமனிதனின் கடமைகள் குறித்தும் பேசுகிறார். 

காம்யூ தனது இறுதி காலத்தில் இவரது கட்டுரைகளை வெளியிட்டு “நம் காலகட்டத்தின் உன்மையான ஒரே ஆளுமை” என்று கூறியுள்ளார். 

சிமோன் வெயில் தனிமனிதனுக்கு தன்னளவில் இங்கு உரிமைகள் என்று எதுவும் இருக்கமுடியாது எனக் குறிப்பிடுகிறார். இங்கே ஒருவன் இயற்றவேண்டிய கடமைகள் (obligations) மட்டுமே உள்ளன என்கிறார். 

“இங்கே ஒருவன் தன் உரிமை எனச் சுட்டுவது அவனுக்கு பிறர் ஆற்ற வேண்டிய கடமைகளே” என்கிறார் வெயில். இங்கே ஒரு தனி மனிதனுக்கு தரப்பட்டிருப்பது அவன் ஆற்ற வேண்டிய கடமைகள் மட்டுமே. அதிலும் குறிப்பாக ஒருவன் தனக்கு, தன் அகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை முதன்மையானது என்கிறார். அதற்கு நிகரான முக்கியத்துவம் கொண்ட கடமை என ஒன்றில்லை என்கிறார் அவர். இந்த தனிமனித கடமைக்கு எந்த கூட்டமைப்புவாத கொள்கைகளும் தடையாக அமைய கூடாது எனக் குறிப்பிடுகிறார். இத்தரிசனத்திற்கு வேர் இங்குள்ள எதிலும் இல்லை. அது இவை அனைத்திற்கும் அப்பால் உள்ள ஏதோ ஒன்றில் உள்ளது என்கிறார். வெயிலின் சாராமசவாத சாய்வு இதில் புலப்படுவதை நாம் பார்க்கலாம். இது அவர் காலகட்டத்தின் பொதுவான தத்துவச் சிந்தனைக்கு முற்றிலும் வேறுப்பட்டதாக இருந்தது. 

ஒருவன் ஒரு விழுமியத்திற்காக செயல்படும்பொழுது அவன் அகம் நிறைவு கொள்கிறது. ஏறத்தாழ இதே காலகட்டத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது சத்யாகிரகன் ஒருவன் மனச்சோர்வுற்று காந்திக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலாக அவர்,  ”இந்தியாவின் விடுதலை குறித்தல்ல தன் தனிப்பட்ட விடுதலை குறித்து மட்டுமே ஒருவன் சிந்திக்க இயலும்”  என்கிறார். பிறருக்கும், நாட்டிற்கும் ஆற்றும் செயல்களின் வாயிலாக ஒருவன் தன் விடுதலையையே நாட வேண்டும் என்றும், அது மட்டுமே சாத்தியம் என்றும் குறிப்பிடுகிறார்.

சிமோன் வெயில் தன் நூலில் ஒரு மனிதனுக்கு வேர்கள் ஏன் தேவைப்படுகிறது என்ற கேள்விக்கு இதே பதிலையே அளிக்கிறார். வேர்கள் என்பது ஒருவன் தனக்கு, பிற மனிதர்களுக்கு, இவ்வுலகிற்கு ஆற்ற வேண்டிய கடமைகளால் ஆனது. அக்கடமைகள் ஒருவனை தன் மண்ணுடனும், அதன் வரலாற்றுடனும், இவ்வாழ்க்கையுடனும் பிணைக்க உதவும் என்கிறார்.  

இருபதாம் நூற்றாண்டின் எல்லா இயக்கங்களுக்கும் வேர் என்பது ஃப்ரெஞ்ச் புரட்சியின் (1789) விழுமியங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றில் உள்ளன எனலாம். தனி மனிதன் போராடி பெற்றுக்கொண்டவை அவை என்கையில் அவ்விழுமியங்கள் காலத்தில் உறைந்து போன ஒரு வரலாற்று தருணம் மட்டுமே என்றாகிறது. இவை அனைத்திற்கு பிறகும் ஐரோப்பிய சமூகத்திலிருந்து சர்வாதிகாரம் வளர்ந்து வந்ததற்கு இதுவே காரணம். 

அவ்விழுமியங்கள் “உரிமைகள்” என்னும் சொல்லில் உறைந்து போவதால் ஏற்படும் விளைவை சிமோன் வெயில் The Need for Roots நூலில் கூறுகிறார். அளவற்ற சுதந்திரம் உருவாக்கும் அச்சம் குறித்து கூறி இதை முன்வைக்கிறார். சுதந்திரம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவன் வாழ்வின் எல்லா சாத்தியங்களையும் திறந்து கொடுக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒரு சமூகம் எவ்வாறு முன்னகர வேண்டும் என்றும் அவன் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவனுக்கு அளிக்கிறது. ஒவ்வொரு காலடியையும் கவனத்துடன் எடுத்து வைத்து தன் இலக்கில் இருந்து கண் எடுக்காமல் பயணிக்கும் ஒரு தனியனாக அவனை மாற்றுகிறது. இந்த எல்லைக்கு சென்ற மானுடன் சுதந்திரத்தை அஞ்சுகிறான். அது சாமானியனுக்கு தேவையற்ற ஒன்று என்று கூறி சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கிறான்.

இதனால் சிமோன் வெயில் சுதந்திரம், சமத்துவம், பாதுகாப்பு, தண்டனை, சமூக பொறுப்பு, தனிஉடைமை, பொது உடைமை, உண்மையை அறிந்துக்கொள்ளும் உரிமை என ஆன்மாவின் தேவைகள் (needs of the soul) என்று அவர் கூறும் அனைத்தையும் “உரிமைகள்” எனும் வார்த்தைக்குள் சுருக்காமல் ஒரு தனிமனிதனை செயலுக்கு தூண்டும் கடமைகளாக  மறுவரையறை செய்கிறார். எந்த ஒரு விழுமியமும் காலத்தில் உறைந்திருக்க அவற்றில் கவனமில்லாமல் சமூகம் முந்நகரும் போது ஒரு மனிதனின் அடிப்படை  தேவைகளில் தொடங்கி அவனது தன்மானம், வரலாற்று தொடர்ச்சி என எண்ணற்ற விஷயங்களை இழக்க நேரிடும் என்கிறார்.

சிமோன் வெயில் இரண்டு வருடங்கள் தன் ஆசிரியர் பணியை விட்டுவிட்டு தொழிற்சாலையில் பணியாற்றி அடித்தள வர்க்க மக்களின் வாழ்க்கையை நேரடியாக கண்டறிந்தார். அவர் சமகாலத்தில் ஏற்பட்ட சமத்துவமின்மைக்கும் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் நிலைத்திருந்த சமத்துவமின்மைக்கும் பெரிய வேறுபாடில்லை என்பதைக் கண்டார். அடித்தள வர்க்கத்தினன் தன் நிலையில் இருந்து அவனுக்கு வெளியேற வழி உண்டு என்று கூறும் சமூகத்தையும் ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை என்னும் நிதர்சன உன்மையையும் கண்டு உருவாகும் கசப்பில் வாழ்கிறான். இது மாறுவதற்கு தொழில்களுக்கு நடுவில் ஊதியம், சமூகத்தில் மதிப்பு என்னும் இரு நிலைகளில் இருக்கும் சமத்துவமின்மை நீங்கவேண்டும் என்கிறார் வெயில்.

சிமோன் வெயில் ஒரு அமைப்பிற்கோ ஒரு கருதுகோளிற்கோ தன் ஒப்புதலுடன் அடிப்பணிவது என்பது மனித அகத்தின் தேவைகளில் ஒன்று என்கிறார். வலுக்கட்டாயமாக இது நிகழ்கையில் அவனது சுதந்திரம் மட்டுமல்ல ஒரு மனிதன் உயர்ந்தவற்றின் முன் “அடிபணிதல்” என்னும் தனது இயல்பையும் இழக்கிறான். உயிரற்ற ஒரு பிரஜையாக மாறிவிடுகின்றான். இந்திய சுதந்திர போராட்டத்தின்போது ”அஹிம்சை” என்னும் ஒரு விழுமியத்தை நம்பி அல்லது காந்தி என்னும் ஒரு மனிதனை நம்பி வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற பல்லாயிரம் மக்களின் அகப்பயணம் என்னவாக இருந்திருக்கும் என்பதை இந்த கருதுகோளின் மூலம் நாம் பார்க்கமுடிகிறது. மேலும் ஒருவன் தன் முழு உள்ளத்தோடு உயர்ந்த ஒன்றின் கீழ் அடிபணிதலும் ஆன்மாவின் தேவை என்பது தெளிவாகிறது. 

சிமோன் வெயில்

சிமோன் வெயில் எழுத்தோடு தன் சித்தாந்தம் எதுவும் நின்றுவிட கூடாது என்பதில் தெளிவுடன் இருந்தார். இவ்விதத்தில் காந்தியைப் போலவே சற்றே கிறுக்குத்தனத்துடன் செயல்பட்டுள்ளார். ஜெர்மனி சென்று அங்கே கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்த காலத்தில் நாசிசத்தின் வேகமான வளர்ச்சியையும், ஹிட்லரின் செல்வாக்கையும் நேரில் கண்டார். பின் ஜெர்மனியிலிருந்து வெளியேறி அங்கிருந்து தப்பி வரும் கம்யூனிஸ்ட்களுக்கு உதவினார். ஸ்பெயின் உள்நாட்டு போரில் கலந்து கொண்டு காயமடைந்தார். போர் களத்தில் பெரிதாக அவரால் உதவ முடியவில்லை. அவரது கண் பார்வை மிகவும் மோசமாக இருந்தது ஒரு காரணம். இரண்டாம் உலகப் போரின்போது போர் முனைக்கு சென்று மருத்துவ உதவிகளைச் செய்தார். 

ஐரோப்பா முழுக்க போர்கள் உச்சத்தை நெருங்க மனித அகத்தின் அனைத்து தேவைகளும் நிராகரிக்கப்படுவதை கண்டார். அவற்றுள் மிக முக்கியமாக அவர் கூறுவது உண்மைக்கான தேவை. உண்மையை சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வருவது என்னும் தனிமனிதனின் கடமை. பொய் பிரச்சாரங்கள் எல்லா முனைகளிலும் குவிந்துக் கொண்டிருந்த காலம் அது. அப்போது தனிமனிதனுக்கு மட்டுமே கருத்து சுதந்திரம் உள்ளது. கூட்டமைப்புகளுக்கு கட்டுபாடுகள் மட்டுமே உள்ளன என்றார். எந்த ஒரு கூட்டமைப்பிற்கும் தனிமனிதனுக்கான சுதந்திரங்களை அனுமதிக்க கூடாது. மனிதன் ஒருவனே முழு சுதந்திரத்திற்கான தகுதியைக் கொண்டவன். எந்த அமைப்பிற்கும் எந்த அரசியல் கட்சிக்கும் அது கிடையாது என்றார்.

ரஷ்ய கம்யூனிசத்தின் வீழ்ச்சியையும், நாசிசம் உருவாக்கிய பேரழிவையும் முன்னரே அவரால் கணிக்க முடிந்தது. ஒருபோதும் நாசிசத்தை பிற கருதுகோள்களால் எதிர்க்க இயலாது என்றும் கணித்தார்.  அதன் பின் நிகழ்ந்த உலகப்போரில் மக்கள் தங்கள் வரலாற்று தொடர்ச்சி அறுபடுவதை கண்டனர். கூட்டம் கூட்டமாக இறந்தனர். பயத்தில் வாழ்ந்தனர். மானுடத்திற்காக ஆற்றவேண்டிய கடமைகளால் மட்டுமே தன்னை உலகுடன் பிணைத்துக் கொண்டிருந்த சிமோன் வெயிலால் அப்போரை கடக்க முடியவில்லை. அந்த கடைசி சரடும் அறுபட அவர் உணவை முற்றாக நிறுத்தி 1943இல் தனது முப்பத்தி நான்காவது வயதில் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த விதத்திலும் காந்தியை ஒத்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். காந்தி அவரது இறுதி காலத்தில் மதக்கலவரங்களை நிறுத்துவதற்காக மரணத்தை நெருங்கும் தருவாய்க்கு சென்றே தன் உண்ணாவிரதத்தை முடித்தார். இது ஒரு வகையில் செயலில் ஈடுபடுபவர்கள் அடையும் வெறுமையாக இருக்கலாம். இனி ஆற்றுவதற்கு ஒன்றுமில்லை என்னும் எல்லையை அடைந்து விழைவறுத்து ஒடுங்குகிறார்கள். 

சைதன்யா

இறுதி காலத்தில் சிமோன் வெயில் ஆன்மீகம், மறைஞானம் போன்ற விஷயங்களில் ஈடுப்பட்டிருந்தார். அவர் யூதக் குடும்பத்தில் பிறந்து பின்னர் ”கிறிஸ்தவமே அடிமைகளின் மதம்” என்று கிறிஸ்தவத்திற்கு மாறினார். அவர் காலகட்டத்தில் யூதர்களிடையில் தங்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்னும் ஸையொனிஸ (Zionism) இயக்கம் துவங்கி வலுப்பெற்றது. ஜெர்மனியில் யூதர் படுகொலைக்குப் பிறகு இஸ்ரேல் நாட்டின் உருவாக்கத்துடன் அவர்களின் விருப்பம் நிறைவேற்றப்பட்டது. மொரோக்கோவில் தொடங்கி ரஷ்யா வரை ஐரோப்பாவின் எல்லா ஊர்களிலிருந்து யூதர்கள் இஸ்ரேலுக்கு சென்று குடியேறினர். அங்கு சென்ற பலரும் வெயில் தாளாமல் அல்லது அந்த புது நிலம் உவக்காமல் அமெரிக்கா சென்றனர். அங்கு சென்றவர்களும் இஸ்ரேலை கனவு கண்டனர். வரலாற்றில் என்றும் தங்களை வேரற்றவர்களாகவே யூதர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இஸ்ரேலிய கவிஞரான யெஹுடா அமிச்சாயின் Jews in the land of Israel என்னும் கவிதையில் “உதிர்ந்த இரத்தம் மட்டுமே நம் வேர்களாக கொண்டுள்ளோம்” என்கிறார்.

ஆனால் சிமோன் வெயில் தன் நூலில் சக மனிதனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செய்யாதவனே வேரற்றவன் என்று கூறுகிறார். ஒரு வரலாற்று நிகழ்வோ, எந்த வித அரசியல் அமைப்போ, மதமோ, பேரிழப்புகளோ எதுவும் ஒரு மனிதனின் வேர் என்று ஆக முடியாது. அப்படி அவன் பாவிக்கும் பொழுது பெரும் அழிவுகள் நிகழ்கின்றன. வரலாறு முழுக்க அது தான் நிகழ்ந்துள்ளது. ஒரு தனிமனிதன் தனியனாக இந்த உலகத்தில் நிற்கும்போது அவனை இங்கு பிணைக்கும் ஒரே வேர் அவன் பிற மனிதனுக்கு ஆற்ற வேண்டிய கடன். அதற்கு பின்னுள்ள ஆணை இங்குள்ள அனைத்தும் ஒன்றே என்பதிலுள்ளது. அதற்கு அப்பால் அங்கு தர்க்கங்கள் என ஏதுமில்லை.

*

சைதன்யா: தமிழ்விக்கி

எதிர்வினைகள்:

  1. கடமையும் உரிமையும்- ரம்யா- ஜெயமோகன் தளம்
  2. அறியப்படாத தத்துவசிந்தனையாளர் – கடிதம் – ஜெயராம்
3 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *