பெண் வாழ்வெனும் அப்பட்டம் – விக்னேஷ்ஹரிஹரன்

(உமா மகேஸ்வரியின் சிறுகதைகளை முன்வைத்து)

உமா மகேஸ்வரி

நீலி இதழில் எழுதத்தொடங்கிய நாள் முதல் நவீன பெண்ணெழுத்தாளர்களின் படைப்புகளை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். அரவிந்த் சுவாமிநாதன் தொகுத்த தமிழ் பெண்ணெழுத்தாளர்களின் படைப்புகளில் தொடங்கி தொடர்ச்சியாக பெண் எழுத்தாளர்களையும் பெண்ணிய சிந்தனையாளர்களையும் வாசித்திருக்கிறேன். இது வரையில் வாசித்த படைப்புகளை, தமிழ் செவ்வியல் இலக்கண முறைப்படியே, இரண்டு வகைமைகளாக பிரிக்க முடியும் என்று நினைக்கிறேன். பெண் வாழ்வின் தனித்துவமான புறவுலக அனுபவங்கள் சார்ந்த படைப்புகள் மற்றும் புறவுலகிற்கு நிகராகவே இயங்கும் பெண்களுக்கே உரிய அகவுலகம் சார்ந்த படைப்புகள். உடலரசியல், சமூகக் கட்டமைப்புகள், கல்வி, குடும்பம் என புறவுலகத்தையும் அது பெண் வாழ்வின் மீது செலுத்தும் தாக்கத்தையும் பேசுபொருளாகக் கொண்ட படைப்புகள் பெரும்பாலும் எதிர்க்குரல்களாக இருப்பதை காண முடிகிறது. வஞ்சிக்கப்பட்டவர்களின் குரல்களாகவோ விடுதலைக்கான பிரகடனங்களாகவோ அவை வெளிப்படுவது புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால் அக்குரல்களின் தார்மீக நியாயங்கள் அப்படைப்புகளின் அனுபவத்தளத்தில் ஒரு மாற்றுக்கோணத்தை உருவாக்குவதற்கு பதிலாக அவற்றின் திரிபுகளாகவே பெரும்பாலும் வெளிப்படுகின்றன. மிகக் குறைந்த அளவு படைப்புகளே பெண் வாழ்வின் புறவுலக அனுபவங்களை முழுமையாகவும் தனித்துவமாகவும் வாசகனிடம் கடத்துகின்றன. விர்ஜினியா வுல்ஃப், எலெனா ஃபெராண்டே, முதற்காலகட்ட அம்பை போன்ற படைப்பாளிகளின் படைப்புகளை இதற்கு உதாரணமாகக் கொள்ள முடியும்.

மாறாக பெண்களின் அகவுலகம் சார்ந்த படைப்புகளை பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் பிறழ்வுத்தன்மை கொண்டிருப்பதை காண முடிகிறது. ஃபெராண்டே சகோதரிகளின் “ஜேன் ஐர்”, “வுதரிங் ஹைட்ஸ்” போன்ற படைப்புகளில் தொடங்கி உலகம் முழுவதும் இதற்கான உதாரணங்களை பார்க்க முடியும். உண்மையில் அகவுலகம் சார்ந்த படைப்புகள் எதுவும் தனித்து அத்துவானத்தில் இயங்குபவை அல்ல அவையும் புறவுலகச் சூழலால் உந்தப்படுபவைதான். ஆனால் அங்கே காரணியைவிடவும் விளைவுதான் பிரதானத்தைப் பெறுகிறது. உடல் மீதான வன்முறை ஒன்று நிகழும் பட்சத்தில் அந்த வன்முறையை விடவும் அதன் அக விளைவுகளே அங்கு பிரதான இடம் பெறுகின்றன. அத்தகைய அகவுலகம் சார்ந்த பெண்ணெழுத்துக்களின் பிரதான சவாலென்பது அவை தங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்பதே. அத்தனை எளிதான காரியமல்ல அது. இவ்வுலகின் மீதான தனித்துவமான பார்வைக்கோணம் அது. அதனை அப்பட்டமாக முன்வைப்பதற்கு எதிரான ஆயிரம் கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கும் உலகத்திற்கு எதிரானது. ஆனால் மகத்தானது. எவரும் மறுக்க முடியாதது. அந்த மறுக்க முடியாத தரப்பிற்கு நான் அறிந்தவரையில் தமிழில் குறிப்பிடத்தகுந்த பெண்ணெழுத்து மரபென்று ஒன்றும் இல்லை. அங்கு தனித்து இருப்பவை எழுத்தாளர் உமா மகேஸ்வரியின் மகத்தான படைப்புகள் மட்டுமே.

தமிழ் நவீன பெண் இலக்கியத்தில் உமா மகேஸ்வரியின் முதல் தனித்துவமான பங்களிப்பென்பது அவர் உருவாக்கியிருக்கும் அகமொழிதான். பெரும்பாலும் நினைவுகளாகவும், அகச்சித்தரப்புகளாகவும் வெளிப்படும் கதைகைளில் உருவாகவேண்டிய பிரதான அம்சம் என்பது அதன் அகமொழிதான். யதார்த்தத்தை சித்தரிக்கும் சராசரி மொழிநடையில் அவை எழுதப்பட இயலாது. ஏனெனில் அவை நம் தர்க்கப் பூர்வமான மேல்மனத்தின் கெடுபிடிகளுக்கு அப்பால் நம் ஆழ்மன வெளியில் செயல்படுகின்றன. அவ்வாறு இருக்க அவற்றுக்கான தனித்துவமான அகமொழியின் உருவாக்கம் பிரதானமானது. உடனடியாகத் தோன்றக்கூடிய உதாரணங்கள் மௌனியும், லா.ச.ரா.வும் தான். ஆனால் இவ்விருவரின் அகமொழியிலும் உள்ள பிரதான அம்சமென்பது அவை முழுக்க முழுக்க ஒரு ஆண் மனத்தின் கனவுகள்/கற்பனைகளுக்கானவை என்பதே. அவற்றின் சொல் அடுக்கும் கவித்துவங்களும் முழுக்க முழுக்க அந்த கற்பனைகளால் உந்தப்பட்டவை. இதற்கு மாறாக உமா மகேஸ்வரி உருவாக்கும் பெண் மனத்தின் அகமொழியோ யதார்த்தத்தின் வன்முறைகளில் இருந்தும், அடக்கி வைக்கப்பட்ட அகக்கொந்தளிப்புகள், வலிகளில் இருந்தும் பீறிட்டு எழுபவை. அடிப்படையில் இம்மொழிகளுக்கு இடையிலான தோற்றுவாயில் ஏற்படும் இந்த வேற்றுமையே அவற்றின் மொழி அடுக்கிலும், விவரணைகளிலும் பாரதூரமான வேற்றுமைகளை ஏற்படுத்துகிறது. உதாரணமாக மௌனி, லா.ச.ரா.வின் மொழி ஒரு மிக விரிவான கனவை ஒவ்வொரு சொல்லாகக்கூட்டி அதன் ஒவ்வொரு நுண்தகவல்களையும் விவரிப்பது எனில் உமா மகேஸ்வரியின் மொழியோ சிதறுண்ட நினைவுகளையும் வலிகளையும் தன்னிச்சையாகத் தேர்ந்து அவற்றை கோர்த்து ஒரு புதிய நினைவடுக்கை கதையாக உருவாக்குவது. அந்த நினைவை கோர்க்கும் தர்க்கத்தின் இடைவெளிகளிலேயே அவரது பெரும்பாலான கதைகள் நிகழ்கின்றன. இந்த மொழியை ஒரு வகையில் பின் நவீனத்துவ எழுத்துமுறையின் ஒரு கூறாகக் கொள்ள முடியும். ஆனால் உமா மகேஸ்வரியை அவ்வாறு வகைப்படுத்துவதில் எனக்கிருக்கும் சிக்கலென்பது இந்த மொழியில் அவரது தேர்வு ஒன்று இருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்பதுதான். இயல்பிலேயே சிதறுண்ட ஒரு மனத்தின் வெளிப்பாடாகவே அம்மொழி வெளிப்படுகின்றதே தவிர அவை ஒரு எழுத்து முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கான சாட்சியங்கள் அவற்றுள் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் அது ஒரு கவி மனத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது. அது வலிந்து உருவாக்கப்படாதபோது நாமும் அதற்கு வலிந்து ஒரு வகைமையை போட்டுவானேன்? இதற்கு முன் இப்படித் தோன்றியது பிரான்சிஸ் கிருபாவின் “கன்னி”யை வாசித்தபோதுதான். அதில் வெளிப்படும் கவித்துவத்திற்கும் வலிக்கும் எந்த வகைமையையும் போட்டுவது சார்ந்த தயக்கமும் குற்றவுணர்ச்சியும் அதில் வெளிப்பட்ட மனத்தின் சத்தியத்தின் விளைவாக ஏற்பட்டது. அதுவே உமா மகேஸ்வரியின் மொழிக்கும் பொருந்தும்.

அவரது இரண்டாவது தனித்துவமென்பது அவர் முன்வைக்கும் பிறழ்வு சார்ந்த பேசுபொருள்களே. ஆண் எழுத்தாளர்கள், பிற உடலரசியலை மையமாகக்கொண்ட பெண் எழுத்தாளர்களின் பிறழ்வு சார்ந்த பேசுபொருள்களுக்கும், உமா மகேஸ்வரி முன்வைக்கும் பிறழ்வுகளுக்கும் இடையில் பாரதூரமான இடைவெளி உள்ளது. பிற எழுத்தாளர்களிடம் வெளிப்படும் பிறழ்வுகள் சார்ந்த கவர்ச்சி முற்றிலும் அற்ற ஒரு பார்வைக்கோணத்திலிருந்தே உமா மகேஸ்வரி பிறழ்வுகளை அணுகுகிறார். அவரது கதைகளில் கையாளப்படும் பிறழ்வுகள் எதிர் வெளிப்பாடுகள் அல்ல. அதனால் அவற்றின் மீதான எவ்வித சார்பும் உமா மகேஸ்வரியிடம் இல்லை. அப்பிறழ்வுகள் அந்த வாழ்வின் இயல்பிலேயே நேர்கின்றன. அந்த வாழ்வின் வன்முறை எத்தனை நிதர்சனமானதோ அத்தனை நிதர்சனமானது அப்பிறழ்வுகள். மேலும் அவரது பிரத்தியேகமான அகமொழியில் அப்பிறழ்வுகள் நிகழ்வுகளாவதில்லை. மாறாக அப்பிறழ்வுகளின் பிரதிபலிப்புகளே நமக்கு பெரும்பாலும் காட்டப்படுகின்றன. அந்த பிறழுவுகளின் அகக் காரணிகளும், அக விளைவுகளுமே பிரதானமாகின்றன. அப்பிறழ்வுகள் இரண்டாம் பட்சமாகவே இருக்கின்றன. இதன் விளைவாக அப்பிறழ்வுகளின் கவர்ச்சியில் சிக்காது பெண் உடலுக்கும் மனத்துக்கும் இடையில் உள்ள உறவையும் இடைவெளியையும் அதன் சிக்கல்களையும் உமா மகேஸ்வரியால் சுட்டிக்காட்ட முடிகிறது. அந்த இடைவெளியின் உருவாக்கமே அவர்கள் மீது நிகழ்த்தப்படும் பெரும் வன்முறை. அதன் விளைவாக அவர்கள் ஆளுமையில் ஏற்படும் சிதறல்களே அதற்கான சாட்சி.

(முழுத்தொகுப்பு: வம்சி பதிப்பகம்)

மூன்றாவதாக அவரது தனித்துவமான பங்களிப்பென்பது மேற்கூறிய அனைத்தையும் அவர் பெண் வாழ்வின் அனுபவங்களுக்கு உண்மையாக செய்திருக்கிறார் என்பதுதான். எந்த தளத்திலும் ஆண் எழுத்தாளர்களையோ அவர்களது சிந்தனை முறைகளையோ நகல் செய்யாமல் பெண் வாழ்வின் அனுபவங்களை தன்னளவில் உண்மையாகவும் முழுமையாகவும் உமா மகேஸ்வரி பிரதிபலித்திருக்கிறார். அதன் வழியே தமிழ் இலக்கியத்தில் ஓர் அசலான பங்களிப்பை அவர் ஆற்றியிருக்கிறார். குறிப்பாக அவர் அளவு விரிவான அகச்சித்தரிப்புகளை உருவாக்குகையில் பெண் வாழ்வின் அனுபவங்களுக்கு உண்மையாக இருப்பதென்பது மிகவும் சவாலானது. சமூகத்தின் கட்டமைக்கப்பட்ட நாசூக்குகளுக்கும் எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது அது. ஒரு எழுத்தாளராக மட்டுமின்றி ஒரு பெண்ணாகவும் அதற்கான அகத்தடைகளை அவர் கடக்க வேண்டியிருந்திருக்கும். அந்த போலி நாசூக்குகளை களைந்து அந்த அனுபவத்தின் உண்மையை அப்பட்டமாக முன்வைக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் அதை கடக்கும்பொழுதே ஒரு எழுத்தாளரின் அசலான வெளிப்பாடு அவற்றுள் கூடியிருக்கும். கடுமையான அழுத்தத்தை தரக்கூடிய அகச்சூழல் அது. அந்த இடத்தை உமா மகேஸ்வரி அடைந்திருக்கிறார் என்பதை எவ்வித தயக்கமும் இன்றி கூற முடியும். அவருக்கு முன்னும் அவருக்கு பிறகும் வந்த எத்தனையோ பெண் எழுத்தாளர்கள் தோற்றுப்போன இடமும் அதுதான். அந்த அழுத்தத்தை தாங்க முடியாததனாலேயே அவர்கள் மெல்லுணர்வுகளையோ, உரத்த குரலில் பேசப்படும் பெண்ணிய அரசியல் பிரகடன்களையோ, பிறழ்வுகளின் மீதான கவர்ச்சியையோ கையிலெடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த அப்படத்தை உமா மகேஸ்வரி யதார்த்தமாக எவ்வித பாவனைகளும் இன்றி கையாள்கிறார். அதனாலேயே தயக்கமின்றி அவரது கதைகளை அசலான பெண்ணிய கதைகள் என்று கூற முடியும். முதற்காலகட்ட அம்பையின் படைப்புகளை மட்டுமே அவ்வகையில் தமிழில் உமா மகேஸ்வரியின் படைப்புகளுக்கு நிகராக வைக்க முடியும் என்று நினைக்கிறேன்.

தமிழ் இலக்கியத்தில் அவரது படைப்புகள் தனித்துவமானவை என்றும் குறிப்பிடத்தகுந்தவை என்றும் கூறுகையில் அவற்றின் போதாமைகளை குறித்தும் விவாதிப்பது அவசியமாகிறது. அதுவே ஒரு முன்னோடி படைப்பாளியின் படைப்புகளுக்கான சரியான கௌரவம். அவரது படைப்புகளில் இருந்து உருவாக வேண்டிய அடுத்த தலைமுறைக்கான சரியான வழிகாட்டியும் அதுவே. ஏனெனில் தயக்கமின்றி உமா மகேஸ்வரியிலிருந்து தமிழில் ஒரு பெண்ணெழுத்து மரபு உருவாக வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது கதைகளின் முதல் போதாமை என்பது அவற்றுள் நிலவும் முழுமையின்மையே. அவரது கதைகளின் சிதறுண்ட வடிவத்திற்கான காரணங்களை அவை பொருந்தி வரும் கதைகளில் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்த சிதறல்கள் ஒரு கட்டத்திற்கு அப்பால் கதைகளின் அனுபவத்தளத்தை சிதைக்கின்றன. ஆயிரம் சிதறுண்ட கதைகளாக பிரிந்தபோதும் சிறுகதை எனும் வடிவம் அதன் குவி மையம் சார்ந்து உருவாவதுதான்.மையமற்ற வடிவமாக அதனை மாற்றிய போர்ஹே போன்ற முன்னோடிகளும் அதன் ஒருமையை சிதைப்பதில்லை. எனவே மரபார்ந்த சிறுகதை வடிவத்திற்கு மாற்றாக உருவாக்கப்படும் சிறுகதைகளும் அவற்றுக்கான மையமற்ற ஒருமையை கண்டடைய வேண்டியிருக்கிறது. சிதறுண்ட அனுபவங்களின் கூறுமுறை சார்ந்த பிரக்ஞை வழியாக நாம் அந்த ஒருமையை உருவாக்க முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் அத்தகைய ஒருமை அற்ற தருணங்கள் உமா மகேஸ்வரியின் கதைகளில் நிகழ்கின்றன. சிதறுண்ட அனுபவங்களின் தொகுப்பாக அவை இருக்கையில் அவற்றின் ஒருமையை வாசகனே உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இத்தகைய சிக்கலை நாம் மௌனியிடமும் பார்க்க முடியும் என்று உணர்கையில் அது அந்த அகமொழியின் வடிவம் சார்ந்த குறைபாடாகவும் இருக்கலாமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

அவரது அடுத்த குறைபாடாக நான் கருதுவது அவர் முனைந்து உருவாக்கும் கவித்துவ மொழி சார்ந்தது. ஒவ்வொரு பத்தியையும் கவிதையாக்குவதற்கான பிரயத்தனம் அவரது ஆரம்பகால கதைகளில் வெளிப்படுகிறது. அதுவே அவரது கதைகளை வாசிப்பதற்கு பெரும் சவாலாகவும் அமைகிறது. ஆனால் காலப்போக்கில் அந்த பிரயத்தனம் கணிசமாக குறைந்துவிட்டாலும் இன்னும் அவரது சித்தரிப்புகளில் அந்த பிரயத்தனத்தை நாம் காண முடியும். உரைநடைக்கான தனித்துவமான மொழியை அவர் உருவாக்கிக்கொள்ள ஒரு கணிசமான காலம் தேவைப்பட்டிருக்கிறது. அதனால் அந்த காலகட்டத்தின் கதைகளை அவற்றின் பேசுபொருள்களைக் கொண்டே மதிப்பிடவேண்டியிருக்கிறது. ஆனால் அந்த மொழி பொருந்தி வரும் கதைகளையும் அவர் எழுதி இருக்கிறார். அத்தகைய கதைகளில் அந்த மொழி அவர் முன்வைக்கும் அகச்சித்தரிப்புகளின் அடர்த்தியையும் கனத்தையும் பன்மடங்கு கூட்டுகின்றன.

மூன்றாவதாக அவரது பேசுபொருள்களின் எல்லைகள் சார்ந்தும் சில குறைபாடுகளை காண முடிகிறது. தொடக்க காலகட்டத்தில் புதிய பார்வைக்கோணத்தைக் கொண்டதாகவும் வாசகனை துணுக்குறச் செய்வதாகவும் இருக்கும் அவரது கதைகள் காலப்போக்கில் ஒரு வகையான அமைப்பு முறைக்குள் சுருங்கி விட்டனவோ என்று எண்ணத்தோன்றுகிறது. அவரது பேசுபொருட்கள் மீள் உருவாக்கமும் மீள் பயன்பாடும் அடையும்தோறும் அவை வாசகனுக்கு பரிட்சயமானதாகிவிடுகிறது. அது உமா மகேஸ்வரி போன்ற படைப்பாளி உருவாக்க வேண்டிய விளைவுக்கு நேர் எதிரானது. அவர் வாசகனிடம் உருவாக்க வேண்டிய பிரதான தாக்கம் என்பது அவனது விழுமியங்கள் சார்ந்த தொந்தரவுதான். அந்த தொந்தரவிலிருந்தே அவர் வாசகனுக்கு பெண் மனத்தின் யதார்த்தங்களை சுவாதீனமாக்க முடியும். அத்தகைய விளைவுகள் அவரை முதலில் வாசிக்கையில் மிக நிச்சயமாக எந்தவொரு வாசகனுக்கும் நிகழக்கூடும். ஆனால் அவரது கதைகள் பரிட்சயமாகும்தோறும் அந்த விளைவு குறைகிறது. காலம்தோறும் நிகழ்ந்த புறவுலக மாற்றங்களை சரியாகச் சித்தரித்தாலும். அவற்றின் பேசுபொருட்களில் அவை பெரும்பாலும் மாற்றத்தை உண்டாக்குவதில்லை. இதன் விளைவாக வாசகன் அவரது கதைகளின் கூறுமுறைக்கு மட்டுமின்றி பேசுபொருட்களுக்கும் பழகிவிடக்கூடும். இது எந்தவொரு முன்னோடி எழுத்தாளருக்கும் நிகழக்கூடியதே என்றாலும். அதை கடப்பது அவசியம். உமா மகேஸ்வரி போன்ற நம் சூழலின் முக்கியமான படைப்பாளிக்கு அது மிகவும் அவசியம்.

விக்னேஷ் ஹரிஹரன்

சமகால பெண்ணெழுத்தை மதிப்பிடுகையில் என்னிடம் உள்ள மிக முக்கியமான அளவுகோல் என்பது ஒரு பெண் எழுத்தாளரின் படைப்போ அந்த படைப்பாளியோ பெண்ணெழுத்தெனும் தனி வடிவத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக நவீன இலக்கியத்திற்கும் ஆற்றியிருக்கும் தனித்துவமான பங்களிப்பு என்ன என்பதுதான். அவ்வாறு இரண்டு தளங்களிலும் நிலைபெற்ற படைப்புகள் மட்டுமே இன்றளவும் பெண்ணெழுத்தின் செவ்வியல் படைப்புகளாக கருதப்படுகின்றன. அவ்வகையில் இவ்விரு தளங்களிலும் தங்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவிக்கொண்டவை உமா மகேஸ்வரியின் படைப்புகள். அவரது தனித்துவமான பங்களிப்பு எவராலும் மறுக்க முடியாதது. அவரது படைப்புகளில் இருந்து தமிழில் ஒரு பெண்ணெழுத்து மரபு இன்னும் உருவாகத் தொடங்கவில்லையென்றாலும் அவர் சந்தேகத்திற்கிடமின்றி ஒரு முன்னாடிதான். நம் காலத்தின் தனித்துவமான முன்னோடி.

*

உமாமகேஸ்வரி: தமிழ்விக்கி

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *