“நெருஞ்சி”: மலரும் முள்ளும் – ரம்யா

(சங்கப்பாடல்களில் பெண்பாற் கவிஞர்கள் எழுதிய தலைவி கூற்றை முன்வைத்து)

(படம்: இளையராஜா)

அன்பு கொண்டு உள்ளத்தாலும், உடலாலும் இணைந்துவிட்டபின் பிரிவு என்பது வெறுமையின் உச்சமென நிற்கிறது. பிரிவென்னும் உணர்வு நிலையைச் சொல்ல சங்கப்புலவர்கள் காட்டும் படிமம் அவ்வுணர்வை மிகத்தீவிரமாக கடத்தக் கூடியது. தலைவனின் பிரிவை எண்ணி ஏங்கும் தலைவி தன் நிலையை அணிலாடும் முன்றிலோடு ஒப்பிடுவதாகப் பாடியிருக்கிறார் அணிலாடு முன்றிலார். ’அணிலாடு முன்றில்’ என்பது ஒரு உணர்வு நிலை. பாலை நில சிற்றூர் ஒன்று மனிதர்களால் கைவிடப்பட்டபின் அங்கு அணில் விளையாடும் முற்றம் என்ற காட்சி தரும் வெறுமை அளப்பரியது.

“…அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.” 
(குறு: 41)

பிரிவின் குறியீடாக முல்லை மலரை ஒக்கூர் மாசாத்தியார் பயன்படுத்தியுள்ளார். மிகச்சாதாரணமாக பூத்து விரிந்த முல்லையைக் கண்டால் அது நம்மை நோக்கி இதழ்விரிய புன்னகைப்பதாகவே தோன்றும். ஆனால் பிரிவில், குறித்த காலத்தில் வராத தலைவனை எண்ணி ஏங்கும் தலைவிக்கு அக்காலமும், அது சூழ்ந்த இயற்கையும் பிரிவின் பொருளே படுகிறது. பருவங்களில் கார்காலம் தமிழ்ப்பண்பாட்டில் இணைகளைப் பிரிக்கும் காலம். பருவ மழையால் நனைந்து மணக்கும் மண்ணும், கழுவப்பட்ட தளிர்களின் பச்சையும், அதில் பூக்கும் முல்லையுமென பிரிவின் துக்கத்தை மேலும் மேலும் கடத்தக் கூடியதாகவே கார்காலம் அமைந்துள்ளது. காலம் காலமாக இணைகளைப் பிரித்து துக்கத்தின் நினைவுகளை தன்னுள் சுமந்து கொண்டிருக்கும் பருவமும் கூட.

அத்தகைய கார்காலத்தில் “வரைவிடை வைத்து பொருள்வயின் பிரிதல்” என்ற பொருளாதாரக் காரணத்திற்காக பிரிந்து சென்ற தலைவன், குறித்த காலத்தில் வரவில்லையாதலால் தலைவி கவலை கொள்கிறாள். இங்கு இளமையை கருத்தில் கொள்ளாமல் தலைவன் பொருள் தேடச் சென்றதாக தலைவி தோழியிடம் புலம்புகிறாள். மேலும் அவன் சென்ற சவாலான வழியை நினைத்தும் வருந்துகிறாள். ’வருவேன்’ என்று சொல்லிச் சென்ற தலைவன் வராததால், முல்லை தன்னை நோக்கி ஏளனமாக நகைக்குமே என தலைவி வருத்தமுறுகிறாள்.

…முல்லைத் 
தொகுமுகை இலங்கெயி றாக
நகுமே தோழி (குறு: 126)

என்கிறார் ஒக்கூர் மாசாத்தியார்.

முல்லை

பிரிந்திருக்கும் தலைவி, தலைவனின் நாட்டின் இயல்பை தோழியிடம் சொல்லும் பாட்டில் குறிஞ்சித்திணையின் காட்சியை ‘அஞ்சி அத்தைமகள் நாகையார்’ காட்சிப்படுத்துகிறார். முற்றிய பழுத்த பலாப்பழம் சிறு காம்பின் துணை கொண்டு தொங்கும் காட்சியை சங்ககாலம் காதலில், காமத்தில் முற்றிய தலைவியின் நிலையைச் சொல்லவே பயன்படுத்தியுள்ளது. காம்பை உயிராகவும், முற்றிய பழத்தை காதலாகவும் உருவகித்து “உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே” என்ற கபிலரின் வரியை ஒப்பு நோக்கலாம். முற்றிய பழம் உண்ணப்பட வேண்டியது. இனிமையானது. அதனைக் கையில் வைத்துக் கொண்டு தன் குரங்கு கூட்டத்தை அழைக்கும் குரங்கின் தலைவனைக் காணும் போது தலைவனுக்கு தலைவியின் நினைவேக்கம் வருமென அவள் நம்புகிறாள்.

‘முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்,
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின்,
ஆடு மயில் முன்னது ஆக, கோடியர்
விழவு கொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்படத் தழீஇ,
இன் துணைப் பயிரும் குன்ற நாடன்”  (அக:352)

பின்னும் காதலில் கனிந்திருக்கும் போது தலைவன் அவளிடம் காட்டும் பிம்பமே காதல்பித்து கொண்ட தலைவிக்கு அறுதியான சித்திரமாகிறது. தலைவன் களவு வாழ்க்கையில் தன்னை வெளிப்படுத்திய பிம்பத்தையே கைக்கொண்டு பிரிவு காலத்தில் ஏங்குகிறாள். நினைவேக்கத்தில் இருக்கும் காதலருக்கு தன் துணையின் பெயர் சொல்லிக் கேட்பதும், அவர்களின் பண்புகளை பிறர் புகழக் கேட்பதும் இனிமையை அளிக்கக் கூடியது. அத்தகைய தலைவி ஒருத்தி தலைவனின் இனிய பண்புகளை தோழியிடம் கூறி அவ்வாறே அவனைத் தன்னிடம் குறிப்பிடுமாறு வற்புறுத்துகிறாள். 

குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்;
கெடு நா மொழியலன்; அன்பினன்’ என, நீ
வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்;
நல்லை; காண், இனி காதல் அம் தோழீஇ!

தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன்
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும்,
புதுவது புனைந்த திறத்தினும்,
வதுவை நாளினும், இனியனால் எமக்கே.” 
(அக: 352)

தலைவனை, அவனைக் கைகொள்ளும் நாளை விடவும் சிறப்பானவனாகக் குறிப்பிடும் வரியான “வதுவை நாளினும் இனியனால்” என்பது உடலால் இணைந்திருப்பதை விடவும் அருவமான ஒன்றின் மேல் தன் காதலை ஏற்றி வைப்பதை உணர்த்தக்கூடியது.

*

காதலில் பிரிவு  ஏக்கமும் பித்துடையதும் அவலச்சுவை கொண்டதாகவுமே உள்ளது. களவு வாழ்க்கைக்குப் பின் இரு காரணங்களால் தலைவன் தலைவியை கை விடுகிறான். ஒன்று பரத்தைமை ஒழுக்கம், மற்றொன்று மனத்திரிபு கொள்ளல். இரண்டுமே வேறொரு காதலின் நிமித்தம் தலைவியைக் கைவிடுதல் என்றோ அல்லது ஒன்றுமற்ற காரணத்தினாலோ இப்பிரிவு நிகழ்கிறது என்றும் கொள்ளலாம். பிரிவின் அத்தனை வாயிலிலும் காதல் கொண்ட தலைவி உடலாலும், உள்ளத்தாலும் கொள்ளும் துயரம் பாடல்களில் பயின்று வந்துள்ளது. பரத்தைமை சென்ற தலைவன் திரும்பலாம், திரும்புதலில்லாமல் போகலாம். அத்தகையவன் திரும்பி வரும்போது அவனை ஏற்றுக் கொள்ளலும், தூற்றுதலும், வாயில் மறுத்தலும் என பலவும் நிகழ்கின்றன.

இங்கு பரத்தைமை சென்ற தலைவனைப் பழிப்பதாக பாடல் ஒன்று அமைந்துள்ளது.

“சேற்று நிலை முனைஇய செங்கட் காரான்
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!” (அக: 46)

ஒவ்வொரு தருணத்திலும் வெளிப்படும் மனிதர்கள் ஒவ்வொரு குணத்தை புனைந்து கொள்கிறார்கள். பரத்தையிடம் சென்ற தலைவனை எருமையின் குணத்தோடு புலவர் ஒப்பிடுகிறார். எருமை  சேற்றிலே கிடக்க விரும்பும். ஊரே உறங்கும் வேளையில் தன்னை கட்டியிருந்த கயிற்றை அறுத்துக்கொண்டு முள்வேலியைத் தன் கொம்புகளால் விலக்கிக்கொண்டு சேற்றில் இறங்கி வண்டு மொய்த்துக்கொண்டிருக்கும் தாமரை மலரை மேயும். அப்போது அங்குள்ள மீன்கள் ஓடும், வள்ளைக் கொடி மிதிபடும் என குறிப்பால் அவனை தலைவி பழித்துரைக்கிறாள். தான் காதலித்தவன் எருமைக்குணம் கொண்டவனென தன்னையே தேற்றிக் கொள்ளும் பாடலாகவும் கொள்ளலாம். எருமை அங்ஙனம் செல்லும் போது சுற்றத்தில் ஏற்படும் சமன்குலைவை பாடல் கடத்துகிறது.

களவு வாழ்க்கைக்குப் பின் தலைவனின் பிரிவின் நிமித்தம் தலைவி கொள்ளும் உடல் வருத்தம் அதிகமாக சங்கப்பாடல்களில் பயின்று வந்தள்ளது. ”கைவளைகள் நெகிழ்தல்”, “பசலை நோய் ஆர்த்தல்” என்பன அவைகளில் முக்கியமானவை. உடல் மெலிவின் போது, கழலும் முதல் அணியாக ”கைவளை” உள்ளது. பின் வருத்தத்தால் உடல் மெலிவுற்று பசலை நோய் ஆர்க்கின்றது.

”…யிறையிறந் 
திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப்
புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே” (குறு: 50: ஒளவையார்)

காதலில் முதல்கணம் அடையும் உச்ச மகிழ்ச்சியைப் போல் பின் எப்போதும் அடைய முடிவதில்லை. தன் இணையுடனான காதல் பயணமே அந்த ஒரு தருணத்தை மீண்டும் மீட்டெடுப்பதற்கான முயற்சிதான். மீண்டும் மீட்டெடுத்து அவற்றை பார்த்துக் கொள்ள முடியுமே தவிர அந்தத் தருணங்களை ஒரு போதும் போலச் செய்யவே முடியாது. அந்த ஒரு பரிதவிப்பே மேலும் மேலும் என காதலர்களை செலுத்துகிறது. உடலையும் மனதையும் மாறி மாறி செலுத்தி பரிதவிப்பது அதன் நிமித்தமே. அந்த உணர்வுதான் ஒட்டுமொத்த உலகத்தின் காதலில் மையமாக உள்ளது. அந்த மையத்தை நோக்கியே பிரம்மம் பலவாறாக, பல இணையர்கள் மூலமாக ஆடிப்பார்க்கிறது. இந்த சலிப்பின் ஆடலில் ஏக்கமும், பரிதவிப்பும், வருத்தமும், உடல் மெலிதலும், மனம் நொய்தலும் எல்லாம் உணர்வின் ஆட்டங்களே. அத்தகைய உணர்வு நிலைகளில் ஒரு தருணத்திலாவது இல்லாதவர்களுக்கு, உறவுடன் உணர்ச்சிகரமாக ஒரு தருணத்திலாவது ஈடுபடாதவர்களுக்கு இவை வெறுமே கடந்து செல்லக்கூடிய வெறும் கொந்தளிப்புகள் மட்டுமே. 

நெருஞ்சி

உறவுகளில் ஏற்படும் மன விலக்கத்திற்கு ஒன்று காரணம் இருக்கும் அல்லது இல்லாமலிருக்கும். சில சமயம் அந்தக் காரணம் விலகியவர் மட்டுமே அறியக்கூடியதாக உள்ளது. பொதுவாக சங்க காலச் செய்யுட்களில் இத்தகைய வருத்தங்கள் தலைவி கூற்றாக இடம் பெறும் செய்யுட்களிலேயே அதிகமுள்ளது. எல்லா உறவுகளும் ஒரே உணர்வு நிலைகளில் தங்கி விடுவதில்லை. சில உறவுகளை வலிந்து அது போல தக்க வைத்துக் கொள்ள அதிக பிரயத்தனம் தேவைப்படுகிறது. அது இருபாலரும் இருமுனைகளிலிருந்தும் செய்ய வேண்டியது. அப்படியல்லாது ஒன்று காரணமின்றி தனித்து விடப்படும்போது இன்னொன்றை விளங்கிக் கொள்ள முடிவதில்லை.

முன்பு தன்னை அன்பு செய்த தலைவன் தற்போது மனம் திரிபு ஏற்பட்டு தன்னைப் பிரிந்து வருத்தத்தை அளிப்பதை விளங்கிக் கொள்ள தலைவி அதை நெருஞ்சியுடன் ஒப்பிடுகிறாள். ‘சிறுமழை பெய்தவுடன் பூக்கும் மஞ்சள் நிற நெருஞ்சிப் பூக்கள் நெருங்கி அழகாகப் பூத்திருக்கும். பின் காயாகி, முட்களாக மாறும். அது வழியில் செல்வோரை மட்டுமல்லாது அவர்களுக்கு அடுத்து அருகிருப்பவரையும் வருத்தும். இதைப்போல உறவின் முதலில் இனிமையை வழங்கிய தலைவன் பின் பிரிந்து, மறைந்து, காண வராமலாகி தலைவியை முள்ளாகி வருத்துகிறான்.

”…சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முள்பயந் தாஅங்கு,
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் கோமென் நெஞ்சே” (குறு: 202)

நெருஞ்சி முள்

தலைவனுடன் களவு வாழ்க்கையில் கூடியிருக்கும் போது தங்களைப்  பிரிக்கும் ஒரு கூர்வாளாக காலத்தை, பொழுதை தலைவி கருதும் பாடல் ஒன்று உள்ளது.

”குக்கூ வென்றது கோழி அதன்எதிர்
துட்கென் றன்றென் தூய நெஞ்சம்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.” (குறு: 157)

இந்தப்பாடலில் உள்ள “காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தது” என்ற வரியை, “நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் நாளது உணர்வாப் பெறின் என்ற குறளோடு ஒப்பிடலாம். எழுத்தாளர் ஜெயமோகன் தன் குறளினிது உரையில் இக்குறளுக்கு விளக்கம் அளிக்கையில் “ஒவ்வொரு நாளும் ஒன்று என காட்டி உங்கள் உயிரை வெட்டி எடுக்கக் கூடியது. இதை யாரும் உணர்வதில்லை. தர்மன் யக்‌ஷனை சந்திக்கும்போது மாபெரும் அதிசயம் என்பது என்ன என்று வினவுகிறார். இந்த உலகத்தில் ஒவ்வொரு நாளும் மக்கள் இறந்து கொண்டிருக்கும்போது நான் மட்டும் நிரந்தரமாக இருப்பேன் என்று மக்கள் எண்ணுவது என்று பதிலளிக்கிறார். அது சரியான பதிலென யக்‌ஷன் கூறுகிறான். என் மனதிற்கு அணுக்கமான வானவன் மாதேவி, வல்லபி ஆகிய இரு சகோதரிகளும் அறத்தையே முழுவாழ்வாக்கி வாழ்ந்து நிறைவடைந்ததன் காரணம் என்ன? தசை இறுக்கம் இருக்கிறது என்று அறிந்த நாளினின்று நாட்கள் எண்ணி அவர்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது என்ற எண்ணம் வந்ததே அதன் காரணம். அவர்கள் நாளென ஒன்று போல் காட்டும் வாளை கண்ணால் பார்த்ததே ஆகும். வாழ்க்கை நிலையாமையைப் பற்றி கூறப்படும் குறள் யாவுமே பண்டாரத்தனமாகத் தெரியலாம். ஆனால் இறப்பென்னும் வாள் அவ்வப்போது தலைக்கு மேல் தெரிந்தால் வாழ்வென்னும் ஒவ்வொரு கனத்தையும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.” என்றார். இக் குறுந்தொகைப் பாடலில் வைகறையை காதலர் பிரிக்கும் வாள் என அள்ளூர் நன்முல்லையார் பாடியது மிகவும் நுட்பமானது. இது தலைவியின் காதலின் நுண்மையையும் ஒருங்கே எடுத்துரைக்கிறது. 

பருவங்களோடு காதலை தொடர்பு படுத்தலாம். முன்பனிக்காலமானாலும், மழைக்காலமானாலும், வேனிலானாலும், எப்பருவமானாலும் காதலிக்கு பொருள்படுவது தன் காதலனை மையம் கொண்டே. இங்கு முன்பனி காலத்தில் அவள் காதல் நோய்க்கு மருந்தாவது அவனின் மணக்கும் மார்புதான். அதை வாசிக்கையிலேயே அந்த வெம்மையும் அணுக்கமும் புலப்படுகிறது. 

“அரும்பனி அற்சிரந் தீர்க்கும்
மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே.”

 (அள்ளூர் நன்முல்லையார்: குறுந்தொகை- 68)

காதலில் இணையை இயற்கை அழிவுகள் பிரிக்கும் போது கொள்ளும் துயர் அளப்பரியது. ஆட்டன் ”அத்தியும்” ஆதிமந்தியும் சங்ககாலத்தில் புகழ்பெற்ற காதல் ஜோடி. அவர்களின் காதல் பற்றிய செய்திகள் சங்கத்தொகை நூல்களில் பல புலவர்களால் எடுத்தாளப்பட்டுள்ளது. 

காவிரியின் புதுப்புனலில் தொலைந்த அத்தியைத் தேடி காவிரிக்கரையோரம் செல்லும் ஆதிமந்தி அங்கு மற்போரும், துணங்கைக் கூத்தும் ஆடுபவர்களிடத்தில் “என் காதலன் அத்தியும் துணங்கைக்கூத்து ஆடுபவன், நானும் ஆடுபவள். என் கைவளைகள் கழன்று உகும் வண்ணம் அவன் இப்புதுப்புனலில் சென்று மறைந்தான். அவனை எங்கும் காணவில்லை” என அரற்றுவதாக பாடல் அமைந்துள்ளது.

“மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே.”

(ஆதிமந்தியார்: குறுந்தொகை – 31)

நானும் ஆடுகள மகள், அவனும் ஆடுகள மகனே என தன் காதலனை, தனக்கு இணையானவனை,  இயற்கை பிரித்த தன் இணையைத் தேடும் ஆதிமந்தியின் பரிதவிப்பு ஆதிமந்தியாரால் எடுத்தாளப்பட்டுள்ளது.

அதே சமயம் ’முன்னர் தன் மீது அன்பும் ஆர்வமும் கொண்டு பின்னர் மதியாமல் இருப்பவர் முன் அன்பிற்காக இறைஞ்சி மண்டியிட்டு வாழ்வதை விட அவனைக் காதலித்த அந்த இன்னுயிரை மாய்த்துக் கொள்ளலாம்’ என்ற பொருளிலும் ஏக்கத்தின் உச்சம் சொல்லப்படுகிறது. 

”நன்னலம் தொலைய நலம்மிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல்” 

(அள்ளூர் நன்முல்லையார்: குறு – 93)

பித்து நிலைக்காதலின் துக்கம் இட்டுச் செல்லும் வாயில் பெரும்பாலும் மரணமாகத்தான் இருக்கிறது. 

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *