நித்தியமானவள் – ஜினைடா கிப்பியஸ்
(தமிழில்: கீதா மதிவாணன்)
(ரஷ்ய இலக்கியத்தின் குறியீட்டுக் கவிஞர்களுள் முதன்மையானவராகக் கருதப்படும் ஜினைடா கிப்பியஸ் (1869 – 1945) எண்ணற்றக் கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், அரசியல் மற்றும் தத்துவார்த்தக் கட்டுரைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். தத்துவார்த்த சிந்தனைகள், புரட்சிகரமான கருத்துகள் மற்றும் துணிகரமான படைப்புகள் மூலம் இருபதாம் நூற்றாண்டுக்கு முந்தைய ரஷ்ய இலக்கியவாதிகளுள் ஆண்களுக்கு நிகராக அங்கீகரிக்கப்பட்ட ஒரே பெண் எழுத்தாளுமையாகக் கருதப்படுகிறார். தன்னை ‘ஜினைடா’ என்ற பெண் பெயரில் பெண்ணாக அடையாளப்படுத்துவதை விரும்பாமல் ஆண்களைப் போல ஜி.கிப்பியஸ் என்றே கையெழுத்திட்டார்.
ரஷ்ய இலக்கிய உலகில் முடிசூடா மகாராணியாக வலம் வந்த ஜினைடா கிப்பியஸ், கலை, இலக்கியம், ஆன்மீகம் அனைத்தையும் ஒன்றுக்குள் ஒன்றாகப் பார்த்தார். ‘கலை என்பது கலை மட்டுமன்று, அதற்குள் ஆன்மீகத்தின் சாரமும் அடங்கியிருக்கிறது’ என்றார். இலக்கியத்தையும் ஆன்மீக அனுபவமாகவே கருதினார் ஜினைடா கிப்பியஸ்.
‘மனிதகுலத்தை நியம விதிகளின்படி வாழ்விப்பதே இலக்கியத்தின் நோக்கம்’ என்ற கொள்கை உடையவர். அக்காலத்தில் இவரது முக்கோணத் தத்துவம் மிகப் பிரசித்தமானது. உலகம், மனிதகுலம், ஆன்மீகம் என வாழ்வின் கூறுகள் மூன்று. பழைய ஏற்பாடு, கடந்த காலத்தின் புதிய ஏற்பாடு மற்றும் எதிர்காலத்தின் மூன்றாம் ஏற்பாடு என வரலாறு மூன்று. அந்தரங்கமானது, பாலியல் சார்ந்தது மற்றும் சமூகம் சார்ந்தது என நெறிமுறைகள் மூன்று.
ஜினைடா கிப்பியஸின் கணவர் டிமித்ரி மெரெஸ்கோவிஸ்கியும் பிரபல குறியீட்டுக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இல்லறத்துக்காக அல்லாமல், இலக்கியத்துக்காக செய்துகொண்ட விசித்திரத் திருமணம் அவர்களுடையது. இருவரும் 52 வருடங்கள் இணைந்து வாழ்ந்ததோடு, இலக்கியம், ஆன்மீகம், அரசியல் மற்றும் சமூகவெளி சார்ந்த தங்கள் ஒன்றுபட்டக் கருத்துகளைத் துணிவுடன் வெளிப்படுத்தினர்.
கிப்பியஸும் அவர் கணவரும் 1905 ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு அவர்களுடைய கவனம் ஆன்மீகத்திலிருந்து, தீவிர அரசியலுக்குத் திரும்பியது. 1917 பிப்ரவரி புரட்சியை வரவேற்ற அவர்கள், அக்டோபர் புரட்சியை கலாச்சாரச் சீர்கேடு என்று பகிரங்கமாக அறிவித்தனர்.
ஆரம்பத்தில் போருக்கு எதிராகக் குரல் எழுப்பினார் ஜினைடா கிப்பியஸ். ‘போரை உருவாக்கியது கடவுளாக இருந்தால், அந்தக் கடவுளையும் எதிர்ப்பேன்’ என்று சூளுரைத்தார். பின்னாளில் போரைத் தவிர்க்க முடியாது என்று உணர்ந்த கட்டத்தில், போரில் உயிர்த்தியாகம் செய்வதன் மூலம் கடவுளை அடையலாம் என்று நம்பத் தொடங்கினார். போரின் மூலமே பூர்ஷ்வாக்களின் கொட்டத்துக்கு ஒரு முடிவு வரும் என்று நினைத்தார்.
காத்திரமான அரசியல் விமர்சனங்களால் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் அவருக்கும் அவர் கணவருக்கும் ஏற்பட்டது. ரஷ்யா அவரை ‘நெறி பிறழ்ந்தவர்’ என்று அறிவித்து, அவருடைய படைப்புகளை உள்நாட்டில் தடை செய்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார். ஜினைடா கிப்பியஸ் தனது 75-வது வயதில் பாரீசில் காலமானார்.
ஜினைடா கிப்பியஸின் ‘நித்தியமானவள்’ சிறுகதை, பெண்ணே பெண்ணைப் புரிந்துகொள்ள இயலாதிருக்கும்போது ஒரு ஆண் அவளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வதாக, ஒரு ஆணின் பார்வையிலிருந்து ஒரு பெண்ணால் எழுதப்பட்டது. உணர்வுகளை வெளிப்படுத்த இயலாத மனைவி, அன்பை வெளிப்படுத்த இயலாத கணவன் இருவருக்கும் இடையிலான இல்லற வாழ்வு சந்திக்கும் சிக்கலைச் சொல்லும் நுட்பம் இக்கதையில் மிக அழகாகப் பதிவாகியுள்ளது. பழமைவாதத்துக்கும் பழமையிலிருந்து வெளிவர விரும்பும் புதுமைவாதத்துக்குமான உரையாடல்களாலேயே கதை நகர்த்தப்படுகிறது. வாழ்க்கையில் விழுந்துவிட்ட முடிச்சை அவிழ்க்க இயலாவிடினும் மேற்கொண்டு இறுகாதிருக்க ஆவன செய்ய ஆயத்தமாக இருக்கும் நாயகனின் முடிவுதான் இக்கதையின் ஆன்மா.)
*
நித்தியமானவள் (சிறுகதை)
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் படித்துக்கொண்டிருந்த இவான் கோகோவ்ட்சேவ், முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் டெரியோகிக்கு அப்பால் இருந்த அவனது அம்மாவின் எஸ்டேட்டுக்கு வந்திருந்தான். திடீர் பனிப்புயலைப் போல் எதிர்பாராமல் வந்து அம்மாவையும் தங்கையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினான். அன்று மாலை, உந்து பனிச்சறுக்கு வண்டியில், சோர்ந்த மனதோடு வந்திருந்தான். அம்மாவுடனும் பதினைந்து வயது தங்கை லெனோச்காவுடனும் சேர்ந்து இரவுணவை கடமைக்கு முடித்துவிட்டு, அம்மாவை வரவேற்பறைக்கு அழைத்தான். நெடிய கால்களால் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக வேகநடை போட்டுக் கொண்டிருந்தவன், எடுத்த எடுப்பிலேயே எந்தப் பீடிகையும் இல்லாமல், சமீபத்தில் தன் மனைவி தன்னை விட்டுப் போய்விட்டாள் என்று அம்மாவிடம் சொன்னான்.
“கதவை இன்னும் கொஞ்சம் இறுக்கமாக மூடு” அவன் அம்மா இரகசியக் குரலில் கிசுகிசுத்தாள். இன்னும் வயோதிகத்தை எட்டவில்லை என்றாலும் அவளுடைய முகம் மெலிந்தும், களைத்தும், சுருக்கங்கள் விழுந்தும் காணப்பட்டது.
“நீ பேசுவது லெனோச்காவுக்குக் கேட்டுவிடுமோ என்று பயமாக உள்ளது. கடவுளே.. கடவுளே..”
இவான் கோகோவ்ட்சேவ் அறையின் கதவை மூடி திரையை இழுத்துவிட்டு வந்தான். பிறகு எதற்காகவோ ஜன்னல் பக்கம் சென்றான். ஆனால் ஜன்னல் திரைகளை மூடவில்லை. வெளியே கருநீலநிறத்தில் விரிந்த ஆகாயமும், உறைபனியும் கண்முன்னே தெரிந்தன. மங்கலான மாலைப்பொழுது, போக மனமில்லாமல் சுணங்கிக்கொண்டிருப்பதைப் போன்று இருந்தது.
“என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை” அவன் அம்மா சொன்னாள், “இதை நான் நம்ப மாட்டேன். நமக்கு அவளை நன்றாகத் தெரியும். அவள் பதினாறு வயதில் பெற்றோரை இழந்து அநாதையானவள். அப்போது முதல் என்னோடு தான் இருந்தாள். என்னை நம்பு, அவளுக்கு உன்னை மிகவும் பிடித்திருந்தது. உன்னை எப்படியெல்லாம் காதலித்தாள்?”
இவான் முகத்தைச் சுழித்து கேலியாகச் சிரித்தான்.
“இருக்கலாம்… அப்போது அவள் என்னைக் காதலித்திருக்கலாம்.”
“என்ன இருக்கலாம் என்கிறாய்? உனக்காக அவள் விஷம் குடித்ததை எல்லாம் மறந்துவிட்டாயா? அந்த சம்பவத்துக்குப் பிறகுதான் அவள் உன்னைக் காதலிக்கிறாள் என்ற விஷயமே எங்களுக்குத் தெரிந்தது. பிறகுதான் உனக்கும் அவளுக்கும் திருமணம் நடைபெற்றது.”
“எனக்கு ஞாபகமிருக்கிறது அம்மா. அவள் என்னைக் காதலித்தாள் என்பதை எப்படி நான் நம்பாமல் இருப்பேன்? நானும் அவளை எவ்வளவு தூரம் காதலித்தேன் என்பதும் அவளுக்காக நான் எப்படியெல்லாம் கவலைப்பட்டேன் என்பதும் உங்களுக்குத் தெரியும்.”
“ஐயோ வார்யா.. வார்யா! என்ன நடந்தது என்று எனக்குத் தெளிவாகச் சொல், இவான். போன விடுமுறையின்போது என்னைப் பார்க்க வந்தீர்களே, அப்போது கூட ஒன்றாகத்தானே இருந்தீர்கள்? அவளும் நன்றாகத்தானே இருந்தாள்? அவளிடம் நான் எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லையே. உங்களுக்குள் ஏதாவது சண்டையா அல்லது வேறேதுமா? நீங்கள் மூன்று வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறீர்கள். அப்படியிருந்தும் உங்களுக்குள் சண்டை வந்திருக்கிறது.”
“அம்மா, நாங்கள் சண்டையெல்லாம் போடவில்லை. கேளுங்கள். நான் அதை உங்களிடம் கட்டாயம் சொல்லவேண்டும். எல்லாமே விநோதமான முறையில் நடந்துவிட்டது.”
அவன் அமைதியாக இருந்தான். அவன் தொடர்ச்சியாக அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடைபோட்டபடி இருந்தான். அவன் தாய் பார்வையால் அவனைத் தொடர்ந்துகொண்டிருந்தாள். பொன்னிறக் கேசத்துடன் அழகும் இளமையும் கொண்டிருந்த தன் ஒரே மகனை வழக்கம்போல், கனிவு ததும்பும் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அவள்… வார்யா… ஒரு பாடகனோடு ஓடிப்போய்விட்டாள் அம்மா” இவான் சொன்னான்.
“என்ன சொல்கிறாய் நீ? பாடகனா? எந்தப் பாடகன்? என்ன இதெல்லாம்?”
“பாடகன் ஒருவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவான். அம்மா, நீங்கள் எப்போதாவதுதான் எங்கள் வீட்டுக்கு வருவீர்கள். நகரத்தில் இருக்கும் நாங்கள் சமீப காலமாக எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தோம் என்பது உங்களுக்குத் தெரியாது.”
“ஐயோ! அதிர்ஷ்டங்கெட்டவனாகி விட்டாயே, இவான்! அவள் உன்னை விட்டு ஒரு பாட்டுக்காரனோடு ஓடிப்போய்விட்டாளே. உங்களுக்கு குழந்தைகள் இருந்திருந்தால் இது நடந்தே இருந்திருக்காது. இப்போதுதான் உன் படிப்பு முடியும் நிலையில் இருக்கிறது. தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் உனக்கு இப்படி ஒரு துயர சம்பவம் நேர்ந்துவிட்டதே. போயும் போயும் ஒரு பாட்டுக்காரனோடு! அவன் ஒரு வெத்துவேட்டாகத்தான் இருப்பான். வார்யா இப்படிச் செய்வாள் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. அவளிடமிருந்து இப்படியொரு விஷயத்தை எதிர்பார்க்கவே இல்லை.”
தாயின் புலம்பலை இவான் செவிமடுக்கவில்லை. அவன் கவனமெல்லாம் வேறெங்கோ இருந்தது. அவன் தன்னிச்சையாகச் சொல்லத் தொடங்கினான்.
“அம்மா, என்ன நடந்தது என்று சொல்கிறேன். ஒருவேளை வார்யாவுக்கு நான் அலுத்துப் போயிருக்கலாம். மூன்று வருடங்களாக அவள் என்னுடன்தான் இருந்தாள். இது கடைசி வருடம் என்பதால் நான் படிப்பில் அதிகக் கவனம் செலுத்தினேன். நண்பர்கள் என்னைச் சந்திக்க வருவது அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் நான் வார்யாவிடம் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வேன். நான் பேசப் பேச அவள் கேட்டுக்கொள்வாள். இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் ஒன்று புரிகிறது, அவள் கேட்க மட்டுமே செய்தாள். வாயைத் திறந்து சொல்லும் ஒரே வார்த்தை, ‘எனக்குப் புரிகிறது’ என்பதுதான். நான் அவளைப் பற்றியோ, அவள் என்ன நினைக்கிறாள் என்பது பற்றியோ கேட்டால் எதுவும் சொல்ல மாட்டாள். ஆமாம், அவள் என்னைக் காதலித்தாள். அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அதைப் போலவே அவள் மீதும் எனக்கு இளக்கமான உணர்வு உள்ளூற அதிகரித்துக்கொண்டே இருந்தது. அவள் ஒரு உற்சாகமான பெண். எப்போதும் சுறுசுறுப்பாக, எதையாவது பேசிக்கொண்டு, பாடிக்கொண்டு, விளையாட்டாய் சீண்டிக்கொண்டு, குழந்தைத்தனமாக இருப்பாள். நிச்சயமாக அவள் ஒரு கவர்ச்சிகரமான பெண். என்னைக் காதலிப்பதாக எப்போதும் என்னிடம் சொல்வாள். எனக்காக விஷம் குடித்ததைப் பற்றிச் சொல்லும்போது, ஒருவருக்காக நாம் விஷம் குடிக்கவும் துணிகிறோம் என்றால் அதுதான் அவர் மீது நாம் வைத்திருக்கும் அன்பின் உச்சபட்ச அறிகுறி என்பாள்.
நான் அவள் மீது என்றுமே கோபப்பட்டதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவள் தனக்கென்று ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொண்டாள். அந்தப் பேச்சை விட்டுவிடுவோம். நான் அவர்களுள் யாரைப் பற்றியும் எந்தக் குறையும் சொல்லவில்லை. அந்த ஆடம்பர மற்றும் மேம்போக்கான வாழ்க்கைமுறைக்குப் பின்னால் ஏதோ தவறு இருப்பதாக எனக்கு உறுதியாகப்பட்டது. எது எப்படியோ, வார்யா அவனோடு மகிழ்ச்சியாக இருந்தால் போதும்.
கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் பின்தள்ளப்பட்டார்கள். நான் என்னுடைய நண்பர்களோடு இருந்தேன். அவள் அவளுடைய நண்பர்களோடு இருந்தாள். உயரதிகாரிகள் சிலர் அவளைப் பார்க்க வந்துபோவார்கள். நடிகர்கள் என்று சொல்லி சிலர் வருவார்கள். இசைக் கலைஞர்கள், அவர், இவர் என யார் யாரோ வந்துபோவார்கள். வார்யாவுக்கு இனிமையான குரல் இருப்பது இப்போதுதான் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதனால் அவள் பாட்டு கற்றுக்கொள்ளப் போவதாகவும் சொன்னாள். நான் அவளுடைய சுதந்திரப் பாதையில் குறுக்கே நிற்பதைப் போன்ற பயத்துடனேயே அவள் எப்போதும் வாழ்ந்தாள். நான் என்ன சொன்னாலும் அதை சந்தேகக்கண் கொண்டே பார்த்தாள்.
“நீங்கள் என்னை அனுமதிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.”
என்னை அறியாமலேயே நான் அவளுடைய விருப்பங்களுக்கு மறுப்பு தெரிவித்துவிடுவேனோ என்று நானே ஒரு கட்டத்தில் அவளைப் பார்த்துப் பயப்பட ஆரம்பித்துவிட்டேன்.
அவள் பாட்டு கற்க ஆரம்பித்தாள். அப்போதுதான் அந்தப் பாடகன் எங்கள் வீட்டுக்கு வரவும் போகவும் ஆரம்பித்தான். அவள் அடிக்கடி வீட்டை விட்டு வெளியில் போகத் தொடங்கினாள். எங்களுக்கு இடையிலான இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. நாங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது நான் அவளிடம் எப்போதும் போலவே பாசத்துடனும் பயத்துடனும் இருந்தேன். அவள் என்னிடம் அன்பாக இருந்தாள். அவளுடைய அழியாக் காதலைப் பற்றிப் பேசுவாள். அவளிடம் ஒரு நடிகையின் உள்ளமும், ஒரு படைப்பாளியின் ஆன்மாவும் முழுமையானதொரு பெண்ணின் உணர்வுகளும் இருப்பதாகச் சொல்வாள்.
கிறிஸ்துமஸ்க்கு நம்முடைய கிராமத்துக்கு வருவதற்கு அவளை மிகவும் கஷ்டப்பட்டுதான் சம்மதிக்க வைத்தேன். அவளும் வந்து கொஞ்ச நாள் தங்கினாள். ஆனால் நான் கிளம்புவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே அவள் கிளம்பிப் போய்விட்டாள். அது உங்களுக்கு அது ஞாபகமிருக்கிறதா? நான் விடுமுறை முடிந்து எங்களுடைய வீட்டிற்குச் சென்றபோது, பணிப்பெண், ‘எஜமானியம்மா இன்று காலையில் வந்தபோது, நீங்க நாளைக்குதான் வருவீங்க என்று சொன்னாங்க’ என்றாள். எனக்கு அவள் சொன்னது புரியவில்லை. நான் கேட்டேன், ‘இன்று காலையா? என்ன சொல்கிறாய்? அவள் ஒரு வாரத்துக்கு முன்பே வந்துவிட்டாளே’ சட்டென்று விஷயம் எனக்குப் பொறிதட்டியது. ‘ஓ.. ஒருவேளை அதனால் இருக்கும்’ என்று உளறி சமாளித்தேன்.
நான் நேராக வார்யாவைப் பார்க்கச் சென்றேன். அவள் ஒப்பனை அறையில் இருந்த மேஜைமீது வைத்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் அக்கடிதத்தைச் சட்டென ஒளித்துவைத்தாள், நான் என்னவோ எப்போதும் அவள் எழுதும் கடிதங்களை எல்லாம் வாசித்துவிடுவதைப் போல.
“நீ எங்கே போயிருந்தாய்? வீட்டிற்கே வரவில்லையா?” என்று கேட்டேன்.
அவள் பதற்றத்தோடு, “உங்களுக்கு யார் சொன்னது?” என்று கேட்டாள்.
என்னுடைய பதிலை எதிர்பாராமல், அந்த ஒரு வாரத்தில் என்ன நடந்தது என்று ஏதோ ஒரு கதையை அவசர அவசரமாகச் சொன்னாள். தான் நேராக சார்ஸ்கோய் செலோவுக்குப் போனதாகவும், ஒரு தோழியை சந்தித்ததாகவும், யாரோ பாடகிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் இன்னும் என்னென்னவோ சொன்னாள். என்னிடம் சொல்லக்கூடாத, எனக்குத் தேவையில்லாத சில பல சோகக்கதைகளும் அதற்குள் அடங்கியிருந்தன.
“நீங்கள் என்னிடம் கோபப்படக்கூடாது. இவான், நீங்கள் என்னை நம்பலாம். ஆனாலும் உங்களால் என்னைப் புரிந்துகொள்ள முடியாது. நாங்கள் எங்கள் உணர்வாலும் கலையின் மீதுள்ள பற்றாலும் வாழ்கிறோம். நீங்களோ எல்லாவற்றையும் பகுத்தறிவின் துணையோடு பார்க்கிறீர்கள். இரக்கம், கருணை என்பதெல்லாம் உங்களுக்குக் கிடையாது. ஆனாலும் நான் உங்களைக் காதலிக்கிறேன். உங்களை மட்டுமே காதலிக்கிறேன். உங்களால் சகித்துக்கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ முடியவில்லை என்பதற்காக என் நட்பு வட்டத்திலிருந்து என்னைப் பிரித்துவிடாதீர்கள்.” என்றாள்.
உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அது ஒரு விஷயமே கிடையாது. ஆனால் அந்த விஷயத்தைப் பொறுத்த வரை அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் என்னால் தாங்க இயலாததாகவும் அச்சுறுத்துவதாகவும் இருந்தது. பிறகும் எப்படி என்னால் மனிதத்தின் – தனிமனித சுதந்திரத்தின் வழியில் குறுக்கே நின்றுகொண்டிருக்க இயலும்? ஒருவேளை வார்யாவின் பால் எனக்கு அதீத உடைமையுணர்வு இருந்திருந்தால்… (சிலருடைய வாழ்க்கையில் பெண்களுடனான உறவில் இந்த உடைமையுணர்வு குறுகிய காலமோ அல்லது நீண்ட காலமோ பங்கெடுக்கிறதே) எனக்கோ அவளிடம் அப்படிப்பட்ட உடைமையுணர்வு எப்போதும் இருந்ததே கிடையாது.
எனவே நான் அறையை விட்டு வெளியே வந்தேன். அதன்பிறகான நாட்களில் அவள் பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதில்லை. என்னிடம் பேசுவதும் கிடையாது. அப்படியே பேசினாலும், உண்மையில் நடக்காத, ஒன்றுக்கும் உதவாத விஷயங்களையே பேசுவாள். நான் அவளை நம்பவில்லையோ என்ற சந்தேகத்தோடு ஓரக்கண்ணால் என்னைப் பார்ப்பாள். மினுங்கும் கண்களோடு, எப்போதுமே ஒருவிதப் பதற்றத்துடன் இருந்தாள்.
ஒரு நாள் அவள் விடியற்காலை ஐந்து மணிக்குதான் வீடு திரும்பினாள். அதற்குப் பிறகு ஒரு முறை இரண்டு பெண்கள் அவளைப் பற்றி மிக மோசமாகவும் தரக்குறைவாகவும் பேசிக்கொண்டதை தற்செயலாக நான் கேட்டேன். அது வார்யாவைப் பற்றியதுதான் என்பது எனக்கு மட்டும் புரியும் வகையில் அவர்கள் பேசினார்கள். என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை.
எங்கள் உறவு அதிக காலம் நீடிக்காது என்பது புரிந்தது. அது எங்கள் இருவருக்குமே அசாத்தியமானதாகவும் அசௌகரியமானதாகவும் மாறிக்கொண்டிருந்தது. அதைப் புரிந்துகொண்டவன் நானே என்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கையையும் நானே எடுக்கவேண்டியதாயிற்று. மொத்தத்தில், என்னுடைய அதீத முட்டாள்தனம் எனக்குப் புரிய ஆரம்பித்தது. எனக்கு எத்தனைப் பெண்களைத் தெரியும், வார்யா ஒருத்தியைத் தவிர? திருமணத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி, வேறெந்தப் பெண்ணோடும் நான் நெருங்கிப் பழகியதில்லை. அதிகம் ஆராயாமல், யோசிக்காமல், ‘வார்யாதான் என் வாழ்நாள் துணை’ என்ற சிந்தனைக்கு அநிச்சையாகப் பழகியிருந்தேன். அதை விடவும் நாங்கள் இருவரும் ‘சக மனிதர்கள்’ என்ற சிந்தனைக்குப் பழக ஆரம்பித்தேன். ஆனால் நான் வார்யாவை நெருங்கும் நோக்கில் செயல்பட, அவள் அதற்கு எதிர்த்திசையில் செயல்பட்டாள். அவள் எதற்காக, என்ன காரணத்துக்காக அப்படிச் செய்கிறாள் என்பது உண்மையில் எனக்குப் பிடிபடவே இல்லை. அவளுடைய ஆழமான கலையுணர்வைக் கொண்டும் கூட எதையும் புரிந்துகொள்ள இயலாது.
அவளைப் புரிந்துகொள்வது என்பது சாத்தியமில்லாமல் போயிற்று. இருப்பினும், எங்கள் உறவை பலப்படுத்த, எங்களுக்கு இடையில் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் இருக்க, நான் என்ன செய்ய வேண்டும்? அவள் என்னைப் பார்த்து பயப்படுவதை எப்படி நிறுத்துவது? அவளை இயல்பானவளாக மாற்றுவது எப்படி? யோசித்து யோசித்து நான் ஒரு முடிவுக்கு வந்தேன். சாதாரணமாக எதையும் மாற்றிவிட முடியாது. தந்திரமாகத்தான் அதைச் செய்ய வேண்டும். தந்திரம்தான். ஆனால் சூழ்ச்சி கிடையாது. அவள் மீதிருந்த பரிதாபத்தினால்தான் நான் அந்த முடிவை எடுத்தேன்.
நான் அவளுடைய அறைக்குச் சென்றேன். உள்ளே நுழையும்போதே, “எனக்கு எல்லாம் தெரியும்” என்றேன். அதுதான் நான் செய்த அடிமுட்டாள்தனம் என்று இப்போது உணர்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அவள் சட்டென்று முகம் வெளிறி, எழுந்தாள். தோள்களைக் குலுக்கியவாறு, “உங்களிடம் சொன்னவர் யாரென்று எனக்குத் தெரியும். சரி, அதனால் என்ன? அதனால் என்ன? உங்களால் எதுவும் செய்ய முடியாது. வீணாக என்னை மிரட்டாதீர்கள். யாராலும் எதுவும் செய்ய முடியாது. நான் அவனை விரும்புகிறேன்.”
நான் எழுந்து மீண்டும் அமர்ந்தேன். இன்ன காரணமாகத்தான் இருக்கும் என்ற என் யூகத்தை அந்த நிமிடம் வரையிலும் என் இதயம் ஏற்க மறுத்துக்கொண்டிருந்தது.
“என்ன சொல்கிறாய்? நீ அவனை விரும்புகிறாயா? என்ன மாதிரியான அன்பு அது?”
“அவனுக்கு (அவள் அந்தப் பாடகனின் பெயரைக் குறிப்பிட்டாள்) நான் மிகவும் தேவைப்படுகிறேன். உண்மையில் அதுதான் எனக்கு விதிக்கப்பட்டது. நான் நடிகையாவதற்கென்றே பிறப்பெடுத்தவள். அவனுடைய வீட்டில் ஒரு வாரம் நான் தங்க நேர்ந்தபோது…” அவள் சொல்லிக்கொண்டு போனாள்.
நான் அந்தப் பாடகனை நன்றாக அறிவேன். எப்படிப்பட்ட அன்பை அவனால் அவளுக்குத் தரமுடியும் என்பதும் எனக்குத் தெரியும். சட்டென்று எனக்குள் இருந்த குழப்பம் எல்லாம் நீங்கித் தெளிவானது. நான் எழுந்து வெளியில் வந்தேன். வார்யா என் பின்னாலேயே வந்தாள். நான் என் அறைக்குச் சென்றேன். கதவைத் தாழிட நினைத்தேன். ஆனால் வார்யா என்னைப் பின்தொடர்ந்து அறைக்குள் நுழைந்தாள். அப்போதும் கூட அவள் முகம் வெளிறி, பயத்துடனேயே இருப்பதுபோல் தோன்றியது. அவள் எப்போதுமே என்னைப் பார்த்து பயந்தாள். அதுதான் என்னால் தாங்கிக்கொள்ள முடியாத கொடுமையாக இருந்தது. நான் அவளைப் பார்த்தேன். அங்கே பழைய வார்யா இல்லை. இதற்கு முன்பு அவளுடன் பேசியிருக்கிறேன் என்பதே ஆச்சர்யமாக இருந்தது. என்னுடைய பழைய, வழமையான சிந்தனைகளைக் கண்டு எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவள் என்னிடம் என்னவோ சொல்லவந்தாள். ஆனால் நான் அவளைப் பேசவிடவில்லை.
“போய்விடு!” என்றேன்.
“உங்களால் எதையுமே புரிந்துகொள்ள முடியாது.”
“எதுவும் பேசாமல் போய்விடு. நல்லதுக்குதான் சொல்கிறேன்.”
“நல்லதுக்கு என்று எதைச் சொல்கிறீர்கள்?”
“நான் என்ன சொன்னேனோ அதைத்தான் சொல்கிறேன். மறுபடியும் திரும்பி வராதே.”
அவள் தோள்களைக் குலுக்கினாள், “நான் போகிறேன் என்று உங்களிடம் சொல்லத்தான் வந்தேன். இனிமேல் செய்வதற்கு இங்கு எதுவும் இல்லை. என்னால் இந்த இடத்தில் இனி வாழ முடியாது. வாழவும் நான் விரும்பவில்லை. நான் சுதந்திரமாக இருக்க நினைக்கிறேன். அவன் எனக்காக ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருக்கிறான்.’
“போய்விடு. போய்விடு.”
அவள் உடனடியாக அறையை விட்டு வெளியேறினாள். பரபரவென்று அவளுடைய உடைமைகளை எடுத்துவைக்கும் சத்தம் கேட்டது. பிறகு அவள் வீட்டை விட்டுப் போய்விட்டாள். மறுநாள் தன்னுடைய பொருட்களையும் பாஸ்போர்ட்டையும் எடுத்துவர ஒரு ஆளை அனுப்பினாள். முத்திரையிடப்படாத கடிதம் ஒன்றில், ‘என்னுடைய பாஸ்போர்ட்டை தரமாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் தரம் தாழ்ந்து போய்விட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.’ என்று எழுதி அனுப்பியிருந்தாள். மறுபடியும் அவள் என்னைக் குறித்துப் பயப்பட்டாள். உண்மையில் அப்படியொரு எண்ணம் எனக்கு இல்லை.”
இந்த இடத்தில் இவான் ஒரு நிமிடம் அமைதி காத்தான். அவன் அம்மா புலம்பத் தொடங்கினாள்.
“கடவுளே! கடவுளே! அவள் இப்படிப்பட்ட கேவலமான பெண் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா? என் மகன் பாவம்!”
இவான் அம்மாவை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.
“கேவலமானவளா? ஏன் அம்மா அவளை அப்படிச் சொல்கிறீர்கள்? வார்யாவை கேவலமான பெண்ணாக நான் பார்க்கவில்லை.”
“உனக்கு என்ன ஆச்சு? அவள் அவள் உனக்கு பதிலாக ஒரு பாட்டுக்காரனை…. ச்சே.. பயங்கரம்!”
தன் ஒரே மகனின் நிலையை எண்ணி அவன் அம்மா கவலையும் வருத்தமும் அடைவது நன்றாகவே தெரிந்தது.
“அம்மா, அவள் எனக்கு பதிலாக யாரையும் கொண்டுவரவில்லை.”
இவான் கோபத்தில் முகம் சுருங்கியவனாகச் சொன்னான். சொல்லிவிட்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தான்.
“ஆனால்…அவள் அந்தப் பாட்டுக்காரனின் வலையில் விழுந்துவிட்டாள் அல்லவா?”
“நீங்கள் அப்படி ஏன் சொல்கிறீர்கள்? எனக்கு அப்படித் தோன்றவில்லை. அவள் அந்தப் பாடகனின் எல்லா வசதிகளும் உள்ள வீட்டில்தான் வசிக்கிறாள் என்று பிறகு தெரிந்துகொண்டேன். ஆனால் அந்தப் பாடகன் தன்னுடைய தொழிலில் மும்முரமாக இருக்கிறான். அவள் மீதான அவன் ஆசை விரைவிலேயே வடிந்துவிடும். இப்போது வார்யாவுக்கு பெரிய உற்சாகமான நட்பு வட்டம் இருக்கிறது. அவள் சுதந்திரமாக இருக்கிறாள். என்னை விடவும் மற்றவர்கள் அவளை நல்லபடியாக நடத்துகிறார்கள், தாங்களும் நன்றாக நடந்துகொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவளுக்கு பிணி தாங்கா உடம்பு. ஏதேனும் நோய்வாய்ப் பட நேரிடும் என்பதுதான் ஒரே பிரச்சனை. ‘உடல்நிலை சரியில்லை என்றால் தயங்காமல் என்னிடம் வந்துவிடு’ என்று அவளுக்கு ஒரு கடிதம் எழுத எண்ணியிருக்கிறேன். அவளை நல்ல முறையில் கவனித்துக் குணப்படுத்திவிடுவேன்.”
“வான்யா, உனக்கு என்ன ஆச்சு? இது ஒரு ஒழுங்கீனம். அவள் செய்த எல்லாவற்றையும் மன்னிக்க விரும்புகிறாயா? என்னைத் தவறாக நினைக்காதே. இது இழுக்கு என்பதோடு ஒரு ஆண்மகனுக்கு அழகும் கிடையாது.”
இவான் மீண்டும் அம்மாவை ஆச்சர்யத்தோடு பார்த்தான்.
“அம்மா, நான் ஒரு ஆண் என்பதாலேயே எல்லாவற்றையும் ஆணின் கோணத்தில் சிந்தித்ததில்லை. அப்படி சிந்திக்கவும் எனக்குத் தெரியாது. நான் வார்யாவை எதற்காகவும் மன்னிக்க விரும்பவில்லை, ஏனெனில் மன்னிக்கும் அளவுக்கு அவள் எந்தத் தவறையும் செய்யவில்லை. மேலும், இது எப்படி ஒழுக்கக்கேடு ஆகும்? அதற்கும் மனிதர்களின் நல்லொழுக்கத்துக்கும் தீயொழுக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இப்போது எனக்கு எல்லாமே தெள்ளந்தெளிவாகப் புரிகின்றன. ஆரம்பத்தில் நானும் இப்படிதான், பழமைவாத அடிப்படையிலேயே எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்போது என் கவலையெல்லாம் வார்யா வசிக்கும், பார்க்கச் சகிக்காத, வீணாய்ப்போன, வெளிச்சம் இல்லாத சுற்றுப்புறத்தைப் பற்றிதான். மேலும் அந்தப் பாடகனும் அவ்வளவு நல்லவன் கிடையாது. அவள் அங்கு சோர்வுற்று மனம் தளர்ந்திருப்பாள். நோயுற்றும் இருக்கலாம். சுற்றுப்புறம் மிக அருமையானதாக இருந்திருந்தாலும் அவள் நிலைமை அப்படிதான் இருக்கும்.
இவ்வளவு காலம் நான் ஏன் வார்யாவைப் புரிந்துகொள்ளாமல் இருந்தேன் என்பதும் இப்போதும் ஏன் என்னால் அவளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் எந்த வகையிலும் வார்யா கீழ்த்தரமான பெண் கிடையாது. அவள் எப்படிப்பட்ட பெண் என்று எனக்குத் தெரியாது (நிச்சயமாக அவள் ஒரு மகிழ்ச்சியான பெண் என்றோ வெற்றிகரமான பெண் என்றோ சொல்லமுடியாது) ஆனால் அவள் ஒரு பெண் என்பதை அறிவேன். ஒரு பெண்ணை முழுமையாகப் புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெண்ணிடத்தில் கொஞ்சம் கூட அக்கறை காட்டாதவன், பின்னாளில் அவளை நினைத்து நினைத்து வருந்தத்தான் வேண்டும். நம்முடைய அன்புக்கு உரியவளாக ஒருத்தி இருந்தால், அவளுக்கு உடை, உறைவிடம் போன்றவற்றை நாம் வழங்க வேண்டும். அவள் நம்மை விட்டுப் போகிறேன் என்றால், போகவிடவேண்டும். அவள் திரும்பிவந்தால் மறுபடியும் நாம் அவளுக்கு அடைக்கலம் தரவேண்டும்.” இவான் சொன்னான்.
“அடக் கடவுளே, நீ எப்படிக் குழம்பியிருக்கிறாய்? வான்யா, ஐயோ, வான்யா! என் கண்ணே! இந்த விஷயம் உன்னை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது? அவளை விட்டுத்தள்ளு. தகுதியில்லாத அவளை மறந்துவிடு. அவளிடமிருந்து விவாகரத்து பெற்றுவிடு. நீ இன்னும் இளைஞனாகத்தான் இருக்கிறாய். உனக்கு ஏற்றப் பெண்ணாக, நேர்மையான ஒருத்தியைப் பார்த்து மணம் முடித்துக்கொள். இனிமேலும் உன்னால் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். உன்னுடைய மனமும் அமைதி அடையும்.”
“அம்மா, உங்களுக்குப் புரியவில்லையா? உண்மையிலேயே என்னை மறுமணம் செய்துகொள்ளச் சொல்கிறீர்களா? அவளுக்காக வருந்துவது, அக்கறை காட்டுவது, அடைக்கலம் தருவது, போனால் போக விடுவது எல்லாம் சரி. ஆனால் மறுமணம் செய்துகொள்வது? என்னைக் கேலி செய்கிறீர்களா?”
அவன் சொன்னதைக் கேட்டு அம்மா வேதனையுற்றாள். அப்போது அறைக்கு வெளியே ஏதோ மெல்லிய சத்தம் கேட்டது.
“அடக்கடவுளே.. வான்யா, கதவுக்குப் பின்னால் பார். லெனோச்கா நாம் பேசிய எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்று நினைக்கிறேன். அவள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டாள் என்றால் அது மிக பயங்கரம். அவள் இன்னும் குழந்தை” அவன் அம்மா கிசுகிசுப்பான குரலில் சொன்னாள்.
இவான் கதவைத் திறந்தான். அங்கே புத்திக்கூர்மை மிக்க, தெளிவான, அற்புதமான, ஆனால் மர்மமான அதே சமயம் மர்மம் பிடிபடாத அழகிய இரு கருவிழிகள் அவனை ஏறிட்டு நோக்கின. ‘மனித இனம்’ என்று எல்லோரும் ஒப்புக்கொள்ளப்பட்ட, ‘பெண்’ என்று எல்லோராலும் குறிப்பிடப்படக்கூடிய, அப்படிக் குறிப்பிடப்படுவதாலேயே வலியும் இன்ன பிற இன்னல்களும் அனுபவிக்கிற ஜீவன்களின் கண்கள் அவை. அந்தக் கண்கள் சட்டென்று ஒளிர்ந்து பின் இமைகளுக்குக் கீழே ஒளிந்தன.
லெனோச்கா நிதானமாக எழுந்து சத்தமின்றி அவ்விடத்தை விட்டு அகன்றாள். அவள் தற்செயலாகத்தான் அவர்கள் பேசுவதைக் கேட்டாளா அல்லது வலிந்து ஒட்டுக்கேட்டுக்கொண்டு இருந்தாளா?
உண்மையைக் கண்டுபிடிப்பதால் ஒரு பயனும் இல்லை. அவளுக்கும் அது தெரிந்திருக்குமா?
இவான் அமைதியாக அறைக்குத் திரும்பிவந்தான். சட்டென்று களைத்துப் போன முகத்துடன் அம்மாவைப் பார்த்தான்.
“அவள் அங்கே இல்லைதானே?” அம்மா கிசுகிசுப்பாய்க் கேட்டாள். பிறகு பெருமூச்சு விட்டவளாக உரத்தக் குரலில், “இல்லை, வான்யா, இல்லை மகனே. என்னை நம்பு. நான் உன்னைப் புரிந்துகொள்கிறேன். நீ இன்னும் அவளைக் கண்மூடித்தனமாகக் காதலிக்கிறாய், ஆமாம், அவளுடைய வாழ்க்கை முற்றிலும் அழிந்துவிடமால் அவளைக் காப்பாற்றுவது அவசியம்தான். நான் போய் அவளைப் பார்த்துப் பேசுகிறேன். அவளுக்கு ஒருவேளை உதவிகரமாக இருக்கலாம். ஆனால் நான் அவளை மன்னிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. என்னை நம்பு. அவள் உன்னை வெறுக்கவும் தொடங்கலாம். இந்த மாதிரி விஷயங்களில், மன்னிப்பு என்பது… அதாவது.. இந்த விஷயத்தில்… நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அழகும் இளமையும் கொண்ட உனக்குப் பதிலாக ஒரு பாட்டுக்காரன்! எவ்வளவு கொடூரம்! கொடூரம்தான் அது! என்னைக் கொண்டுபோய்க் கல்லறையில் வைக்க இது ஒன்று போதும். வான்யா, நான் பேசுவது கேட்கிறதா?”
இவான் கண்களை உயர்த்தி, அமைதியாகவும் குற்றவுணர்ச்சியுடனும் முறுவலித்தான். எதுவும் பேசவில்லை. அவன் தன் அம்மாவிடம் தனக்கு ஏற்பட்ட துயரத்தைப் பற்றியும் அவனுக்கு உண்டான புதிய ஞானத்தைப் பற்றியும் வெகுநேரமாகப் பேசிக்கொண்டிருந்தான். ஆனால் அவளும் ஒரு பெண் என்பதை மறந்துவிட்டிருந்தான். பிறப்பிலிருந்து அவனுக்கு உறவான, மூத்த, நெருங்கிய இரத்த சம்பந்தமான பெண் அவள். அவளும் இந்த உலகத்தில் பிறப்பெடுத்த, ஆனால் மற்றவர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஜீவன்களுள் ஒருத்தி. அப்படிப்பட்ட புரிதலுக்கு அப்பாற்பட்ட ஜீவன்களுள் ஒருத்தியான அவளாலும் புரிந்துகொள்ள இயலாத மற்றொரு ஜீவன் – பெண்.
***
குறிப்பு: வான்யா – இவானின் செல்லப் பெயர்.