ஒரு நண்பகல் சந்திப்பு – வைஷாலி ஹெகடே
–தமிழில்: கு. பத்மநாபன்
(கர்நாடக மாநிலம், உத்தர கர்நாடக மாவட்டத்தில் அங்கோலா என்ற ஊரில் பிறந்தவர் வைஷாலி. பொறியியல் பட்டதாரி. அமெரிக்காவின் மெஸசூச்செட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் பணிபுரிகிறார். இலக்கியம் தவிர யட்சகானத்திலும் ஈடுபாடு கொண்டவர். விஜய கர்நாடகா என்ற கன்னட இதழிலில் அவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. ப்ரீதி ப்ரணய புகார் [அன்பு காதல் புகார்] என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர். இந்தச் சிறுகதை பெண்களின் வாழ்வை முன்வைக்கிறது. அமெரிக்க வாழ்வை ஒரு இந்திய மனம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதைப் பற்றியது இந்தச் சிறுகதை)
*
ஒரு நண்பகல் சந்திப்பு (சிறுகதை)
கூட்டம் .. இன்னும் 15 நிமிடங்களில் என்பது போன்ற அழைப்புமணி அடையாளம் ஒன்று டக்கென்று கணினித் திரையில் வந்தபோது தன்மயிக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்று எந்த சந்திப்பும் இல்லயே, ஒரு மணிநேரம் முன்பு வந்த சந்திப்புக்கான அழைப்பு இதனுடயதா? இதுபோன்ற சந்திப்பு அழைப்பு வந்த போதெல்லாம் ஒப்புதல் அடையாளத்தை அழுத்துவது, ஒவ்வொருநாளும் காலை இன்று எந்தெந்த சந்திப்பு இருக்கிறது என்று பார்த்துக்கொண்டு அவசியம் இருப்பதற்குப் போவது, தலைவலிகளைத் தவிர்ப்பது தன்மயினுடைய அன்றாட வழக்கம். பொதுவாக இந்தச் சந்திப்புகள் எல்லாம் ஒருவாரம், இரண்டு வாரம், ஒரு மாதம் முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டு அழைப்புவந்து நாட்காட்டியின் நேரத்தைத் தள்ளியபடி உட்கார்ந்து காத்திருக்கும் துணுக்குகள். இன்று காலை பார்த்தபோது எந்த சந்திப்பும் இருக்கவில்லை. அப்படியென்றால் இப்பொழுது வந்த கூட்டத்துக்கான அழைப்பு இன்னும் பதினைந்து நிமிடங்களில் ஆரம்பமாவதற்குரிய ஒன்று. தன்மயிக்கு ஏதோ சரியில்லை என்பதாகப் பட்டது.
இந்த அவசரச் சந்திப்பு அழைப்புகள் என்றதும் மென்பொருள், இணையம்,சமகால தொழில்நுட்பங்களைப் பிறப்பித்து, கட்டி, இடித்து வளர்க்கும் நிறுவனங்களில் குறைந்தது மூன்று நான்கு வருடம் பணியாற்றியவர்கள் என்றாலும் போதும். மூளையில் வினோத அலைகளை எழுப்பி, அபாய சங்கேதங்களை பெற்றுக்கொள்ளும் அலைவரிசைக் கம்பிகள் மேலெழுந்துவந்து செயல்களில் கரைந்து இதயத்துக்கு அதிக இரத்தத்தைப் பாய்ச்சி, ஆஸ்தீகர் உள்ளத்தில் வீட்டுத்தெய்வங்கள் முதலாக ஊரிலுள்ள பத்தினிக்கல் நியாபகங்களைத் தெளிவாகத் தோற்றுவித்து , பத்து க்யூபிகல்களுக்கு அந்தப்பக்கத்திலிருந்து பேசப்படும் ரகசியச் சொற்களும் தெளிவாகக் கேட்குமாறு செவிமடல்களைக் கூர்மைப்படுத்தும் காரியம் துவங்கிவிடும். தன்மயி மண்டையும் சூடேறத் தொடங்கிற்று. ஆனாலும் இளநீர் போன்ற குளிர்ச்சியான எண்ண ஓட்டங்களைக் கொண்ட தன்மயிக்கு வெறுமனே வேண்டாதவற்றை ஊகிப்பது சாத்தியமில்லை. யாருக்குத் தெரியும், யாருடைய குழந்தைக்கோ முதல் நீராட்டு, பிறந்தநாள் போன்ற எதிர்பாராத கொண்டாட்டமாக ஏன் இருக்கக்கூடாது என்று மிகவும் நேர்மறையாக யோசித்தாள்.
பிறகென்ன கிளம்பவேண்டும் என்றநிலையில் பொன்வண்ணக் கூந்தலைச் சுருட்டி மேலெடுத்துச் செருகிய, நூற்றாண்டுகளாகச் சீப்பையே தொட்டிருக்கவில்லை என்றிருக்கக்கூடிய கூந்தல் வடிவமைப்பில் கண்களைப் பறிக்கும் ஸ்யாண்டி வந்தாள்.
“இந்த ஹேர்ஸ்டைல் இன்னும் எத்தன நாளுக்குடி ஸ்யாண்டி”
”ஐயோ தலைங்களே உருண்டுகிட்டு இருக்கறப்ப ஒனக்கு தலைக்கு மேல இருக்கறது பத்தின கவல”
”ஐயையோ.. அப்றம்….. ரியல்லி? என்ன இது வருஷத்துக்கு ஒருதடவ வர்ற மாரியம்மன் திருவிழா மாதிரி ஆய்டுச்சேடி-“
“வாட்? வாட் இஸ் மாரியம்மன் திருவிழா?”
“ஐயோ அது கிடக்கட்டும் அப்றம் சொல்றேன்”
கம்பெனி பில்டிங்கில் இருக்கும் மிகப்பெரிய சந்திப்பு அறை அது. அனைத்து அங்கத்தினர்களின் கூட்டம் போன்ற சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் ,கூடம் போன்ற அறை. எல்லோரும் தாங்கள் மூச்சுவிட்டால் ஒருவரின் மூச்சு இன்னொருவர் மீது எங்கே பட்டு தவறாகப் போய்விடுமோ என்பது போன்ற இறுக்கத்தில் உட்கார்ந்திருந்தார்கள். இன்ஜினியரிங் விபி கையில் ஒரு ஐபேட்-ஐப் பிடித்துக் கொண்டு வந்தான். இதெல்லாம் என்னோட புது ஜோக்குகளோட நோட்ஸ் என்று ஏதோ பழைய நகைச்சுவை சொல்லி அவனுக்கும் வராத சிரிப்பை அங்கிருந்தவர்களிடம் வரவழைக்கப் பார்த்தான். “சொல்ற ஒண்ணுரெண்டு ஸ்டாண்டர்ட் வாக்கியங்களுக்கு எதுக்கு இவனுக்கு நோட்ஸு என்றாள் ஸ்யாண்டி”.
“உஷ், ! அம்மா தாயே சும்மா இருடி”.
அவன் ஆரம்பித்தான் என்பதைவிட ஆரம்பித்த நிலையிலேயே முடித்தும் விட்டான். சாராம்சம் இவ்வளவுதான்.
“இங்கு நீங்கள் எல்லோரும் எதற்காக கூடியிருக்கிறீர்கள் என்றால், இன்று காலை நமது கம்பெனியில் சில நபர்களை நீக்க வேண்டியிருந்தது.நமது பிரிவின் இந்த –சிரச்சேத- நடவடிக்கை முடிவடைந்துவிட்டது. ஆனால் மற்ற பிரிவுகளில் இன்னமும் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. அதனால் தாங்கள் எல்லோரும் யாரிடமும் எந்தக் கேள்வியும் கேட்காமல் வாயை மூடிக்கொண்டு உங்கள் இருக்கைகளுக்குத் திரும்பி விசைப்பலகையை குத்தும் காரியத்தைத் தொடரலாம், தப்பித்திருப்பதற்கு ஒரு பெருமூச்சு விடலாம்.இந்த நடவடிக்கையில் தலை துண்டிக்கப்பட்டவர்களின் பெயர்கள் இவையிவை. இவர்கள் எல்லோரும் மிகச்சிறந்த இன்ஜினீயர்கள். யாரையும் அவர்களின் வேலைத்திறன் அடிப்படையில் நீக்கியிருக்கவில்லை. நிர்வாகக்குழுவின் முடிவு, அவ்வளவுதான்!
வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களின் பெயர் சொல்லியவாறு, மெலனி பீட்டர்சன்,பேட்ரிக் ப்ளெச்சர் பெயர்களைக் கேட்டதும் ஸ்யாண்டியும் தன்மயியும் கவலை தோய்ந்த வியப்பில் பரஸ்பரம் முகம்பார்த்துக் கொண்டார்கள். இந்த இரண்டு பெயர்களும் அந்தப்பட்டியலில் இருப்பது நியாயமல்ல என்றிருந்தன அவர்கள் இருவரின் முகபாவங்கள். கூட்டம் அங்கேயே முடிந்துவிட்டது.
“இன்னும் அரைமணிநேரம் கழிச்சு வரேன் வாக் போலாம்” என்று சொல்லி ஸ்யாண்டி புறப்பட்டபோது தன்மயி கேஃபேடிரியா பக்கம் போய், ஒரு கோப்பை சூடானத் தேநீர் தயாரித்துக்கொண்டு வந்து உட்கார்ந்தாள்.
உஃப் இப்போதைக்கு நாம் இல்லை அல்லவா என்ற ஒரு உணர்வுப் பெருமூச்சு வெளிவந்து கொண்டிருக்கும்போதே ஒருவகை குற்ற உணர்வு. பாவம் அவர்கள் எதற்காக? என்ற யோசனையும், கூடவே நாம் இல்லை அல்லவா என்ற பெருமூச்சுடன் அடுத்தமுறை நாமாக இருந்தால் என்ற மெல்லிய பதற்றமும் எங்கும் போவதாக இல்லை.
மெலனி பத்து வருடங்களுக்கு அதிகமான காலம் இங்கு வேலைசெய்தவள். இடையில் ஒருமுறை மேனேஜராக இருந்தவள். அந்த ஒரு வருடத்தில் தானே, பாவம் அவள் எவ்வளவு எல்லாம் அனுபவித்தாள்? மெலனிக்கு ப்ரெஸ்ட் கேன்சர் என்று தெரியவந்தது. அவளோ, இரண்டு குழந்தைகளின் பெருமைக்குரிய அன்னை. ஆனால் அவை சொந்தமாக வயிற்றில் பிறந்தவை அல்ல. கம்போடியாவிலிருந்து தத்தெடுத்த மகன், வியட்நாமிலிருந்து தத்தெடுத்த மகள்.அவர்கள் இரண்டுபேரின் நிழற்படங்கள் கூட எப்போதும் அவளது க்யூப் டெஸ்க் மீது இருக்கும். சிறியதான கண், சற்று எண்ணெய்ச் சிவப்புள்ள சிறிது சப்பட்டையான முகம் கொண்ட குழந்தைகள். மெலனியின் செக்கச்செவேர் என்ற சருமம், கூரான மூக்கு, செவ்வரக்கு கூந்தலுக்குப் பொருந்துவதாக இல்லை. முதலில் இதைப் பார்த்தபோது தன்மயி, “ஓ! யுவர் ஹஸ்பெண்ட் இஸ் ஏஷியன்?” என்று கள்ளம்கபடம் இல்லாமல் கேட்டுவிட்டாள். அவளும் கொஞ்சம்கூட வருத்தப்படாமல் கலகல என்று சிரித்துக்கொண்டே குழந்தைகள் இல்லாததையும் , எத்தனையோ வருடக் காத்திருப்புக்குப் பிறகு, குழந்தைகளை எப்படி இரு வெவ்வேறு தேசங்களிலிருந்து தத்தெடுத்துக்கொண்டது என்பது பற்றியெல்லாம் விவரித்திருந்தாள். அதன்பிறகு பலமுறை அவளுடன் தன்மயி அரட்டையடித்திருக்கிறாள். மெலனிக்கு வாழ்க்கை குறித்து ஒரு அந்தரங்கமான பிரியம் இருந்தது. அவளது உரையாடல்களில், இல்லாதவை பற்றி அவள் என்றைக்கும் முனகியதே கிடையாது. இப்படிப்பட்ட மெலனிக்கு அண்மையில் மார்பகப் புற்றுநோய் என்று தெரியவர உடன் பணியாற்றுபவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி. அது தெரியவந்ததும் கூட ஒரு வகையில் நாடகத்தனமாகவே இருந்தது. மதியச் சாப்பாட்டை சூடாக்கிக்கொள்ள என்று கிளம்பிய மெலனி இருந்தது இருந்தவாறே கூடத்திருப்பத்தில் தலைசுற்றி விழுந்துகிடந்தாள். இதுமாதிரி சந்தர்ப்பங்களில் , 911க்கு டயல் செய்வது , என்பது கம்பெனி கொள்கை. சரி,பாம்ப் பாம்ப் என்று அடித்துக்கொண்டு ஆம்புலன்ஸ், ஃபயர் ட்ரக், போலிஸ் கார் எல்லாம் வந்தன. இவள் கண்விழித்து பரவாயில்லை, காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடவில்லை, களைப்பினால் இப்படி ஆகிவிட்டது என்றாலும் கேட்காது அவளை மல்லாக்காக ஸ்ட்ரக்ச்சரில் படுக்கவைத்து, கைகால்களை உறுதியாகக்கட்டி, கழுத்து அசையாதவாறு ஆங்காங்கு முடிச்சிட்டு சர்ரென்று அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றாகிவிட்டது. மருத்துவமனையைச் சேர்ந்தவர்களோ ஆம்புலன்ஸில் கொண்டுவந்தவர்களைக் கட்டாயமாக இந்திந்த பரிசோதனைகள் செய்தே ஆகவேண்டும் என்ற ப்ரோடோகால் கலையில் நிபுணர்கள். எல்லாவகை இயந்திரங்களுக்குள்ளும் தள்ளி, நுழைத்து, 108 ஊசிகளால் குத்தி,எடுத்து ,இருக்கிற இல்லாத வித்தைகளை எல்லாம் பயன்படுத்தி, மைல் நீள அறிக்கை, மீட்டர் நீள காப்பீட்டு பில் கொடுக்காவிட்டால் அது மருத்துவமனை என்று தோன்றுவதே இல்லை. ஆனால் இந்த எல்லா கூத்துகளின் விளைவாக வெளிவந்தது வாழ்வின் புதியதான கழைக்கூத்துக்கு மெலனி தயாராகவேண்டிய அதிர்ச்சிகரமான தகவல். அவளது தலைசுற்றலுக்கு சம்பந்தமே இல்லாத தொடக்கநிலையில் இருந்த மெலனியின் மார்பகப் புற்றுநோய்.
தன்மயிக்கு நியாபகம் இருந்தவரை மெலனி ஒருநாளும் அது பற்றி தைரியம் இழந்து பார்த்தது கிடையாது. தைரியத்துக்கு, வாழ்க்கை மீதான உற்சாகத்துக்கு கலாச்சாரச் சட்டகம் இல்லை, நிஜம் ஆனால் இந்த அமெரிக்கர்கள் வாழ்வை எதிர்கொள்ளும் முறையே வேறு. அது எங்கே தங்களுக்கு வரப்போகிறது? அந்த அளவு மிகுந்த நடைமுறைசார்ந்த அணுகுமுறை,மிகவும் வித்தியாசமான நிலையில் கஷ்டங்களை எதிர்கொள்ளும் மக்கள் என்று மெலனியைக் கவனித்த போதெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தாள். சிகிச்சை, களைப்புக்கு இடையிலும் அவ்வப்போது தலைக்கு புதிய வேலைப்பாடுள்ள தொப்பி ஒன்றை அணிந்துகொண்டாவது, ஸ்கார்ஃப் கட்டிக்கொண்டாவது அலுவலகம் வந்துவிடுவாள். முடிந்தபோதெல்லாம் வீட்டிலிருந்தே லாக் இன். எப்டி இருக்க என்று கேட்க ஒருதடவைகூட வருத்தப்பட்டு வலியைத் தோண்டி எடுத்தவளல்ல. யாரிடமிருந்தும் ஒருதடவைகூட கருணையையும், இரக்கத்தையும் விரும்பியவள் அல்ல.
ரேடியேஷன் என்று சிறிதுகால விடுமுறைக்குப் பிறகு இடையிடையே வேலைக்கு வருவது,மறுபடியும் விடுப்பு இப்படி ஒரு வருடம் அனுபவித்த பிறகு குணமடைந்த மெலனி மீண்டும் வேலைக்குச் சேர்ந்து இன்னும் என்ன ஒருவருடம் ஆகியிருக்கும். அவளது வறண்டு கிடந்த முன்தலையில் மறுபடியும் தளிர்கூந்தல் தோன்றி, ஒரு அழகான பாப் ஹேர்ஸ்டைல் உருவாகிக் கொண்டிருந்தது. ஈர்க்குச்சி உடம்புக்காரி மெலனி புற்றுநோய் மருந்துகளின் பாதிப்பால் கொஞ்சம் ஆங்காங்கு பூசிக்காணப்பட்டாள். அதனால் புதுச் சோபையுடன் அழகியாகத் தெரிந்தாள். இல்லாத ஒரு மார்பகம் பற்றி தானே ஜோக் அடித்துக்கொண்டும் இருந்தாள் மெலனி. அப்போதுதான்.. இப்படி..
இனி ப்யாட்ரிக் ப்ளெச்சர், டைரக்டர் நிலையில் இருந்தவன். என்ன தற்செயல் நிகழ்வோ அவனுக்கும் குழந்தை கிடையாது. ஆனால் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளக்கூட இல்லை. ஐம்பதுக்கும் கூடுதலான வயதுள்ளவன். மனைவி மருத்துவமனை ஒன்றில் நர்ஸ். அவளது வேலையில் பதவி உயர்வு பெற்று, மருத்துவமனை மாறிய காரணமாக ப்யாட்ரிக் சுமார் ஒருவருடத்துக்குள் வீட்டை மாற்றியிருந்தான். நேரம் தெரியாத, கால அறிவுக்கு கஷ்டமான அவளது வேலை நெருக்கடியால், மருத்துவமனைக்கு பக்கத்திலிருந்த ஊர் ஒன்றில் புது ஜாகை அமைத்திருந்தார்கள். அப்படியாக இப்போது ப்யாட்ரிக் வேலைக்கு வர வேண்டும் என்றால் காலை சுமார் ஒன்றரை மணி நேரம், மாலை ஒன்றரை மணிநேரம் பயணப்பாதை. அவன் அதனால் உச்சகட்ட போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்துகொள்ள வெகுசீக்கிரமாக கதிரவன் கிழக்கில் உதயமலையில் ஏறிடும் முன்பே அலுவலக படிக்கட்டுகள் ஏறிக்கொண்டிருந்தான். சாயங்காலம் சூரியன் மேற்கு பக்கம் புறப்படுவதற்கு இல்லை, இவனது கார் கம்பெனியின் பார்கிங் லாட்டிலிருந்து கிளம்பிவிட்டது என்றே அர்த்தம். இந்த வசிப்பிட மாற்றம் காரணமாக முன்பெல்லாம் கட்டிடத்தின் விளக்குகளைப் போடுபவனும் அணைப்பவனும் இவன் தானோ என்பது போல எப்போதும் தென்படும் ப்யாட்ரிக் இப்போதெல்லாம் பல கம்பெனி பார்ட்டிகளில், மாலை நடைபெறும் கூட்டங்களில் இல்லாதது வாடிக்கையாக இருந்தது. ஆனால் அவன் ஏற்றிருந்த வேலைகளில் அதிக மாற்றங்கள் ஏற்படவில்லை. ஆனால் சிலபேருக்கு அவன் கண்ணில் படவில்லை என்பதே சலசலப்பை உண்டாக்கியது.
இந்த இரண்டுபேரையும் தன்மயி தனது மூளையில் தர்க்கம் என்ற தராசில் வைத்து நிறுத்துக்கொண்டு இருக்கும்போதே ஸ்யாண்டி வந்தாள். “சரி வா வாக்கிங் போலாம்.” நடந்துகொண்டு இருந்தாலும் பேச்சுகள் எல்லாம் நண்பகலில் நடந்தது பற்றியே திரும்பிக் கொண்டு இருந்தன.
“இங்க தெறமய காரணமா வெச்சு இல்ல ன்னு சொன்னாங்க. எடுக்கும்போது இவுங்க ரெண்டுபேர் மட்டும் ஏன் பலியானாங்க? நாம ரெண்டுபேரும் எதுக்காக இல்ல?
“கொஞ்சம் யோசிச்சுப் பாரு ஒண்ணும் இல்ல, கார்ப்பரெட் உலகம் இது,நாம ரெண்டுபேரும் செஞ்சுக்கிட்டு இருக்கற வேலைக்கு நாம சம்பாதிக்கிற பணம் கொறைச்சல் தான். அதனால தப்பிச்சோம்.”
“யூ நோ, வீ ஆல் ஆர் ஆஸ் குட் ஆஸ் அவர் லாஸ்ட் ப்ராஜெக்ட். இங்க நாம செய்ற வேல எவ்வளவு முக்கியமோ, அதச் செஞ்சதும் நாமதான் னுக் காட்டிக்கிறதும் கூட அதே அளவுக்கு முக்கியம் பாத்துக்க. ஒருவேள மெலனி ஒடம்பு சரியில்லாம லீவ்ல இருக்குறப்ப எடுத்திருந்தா அது எதிக்ஸ்-க்கு எதிரானதா, மனுஷத்தனத்துக்கு எதிரானதா இருந்திருக்கும். இப்பொ அவ திரும்பவும் வேலைய ஆரம்பிச்சு ஏறக்கொறைய ஒரு வருஷம் ஆய்டுச்சு இல்லையா. அதனால ஆரோக்யம் சம்பந்தப்பட்ட விஷயம் எல்லாம் இப்ப பொருந்தாது. ஆனா அவ வீக் லிங்க் இப்ப. மெலனி ,ப்யாட்ரிக் ரெண்டுபேரும் போன வருஷத்துல அவ்வளவா தென்படல, வயசும், அனுபவமும் கொஞ்சம் அதிகம்தான், அவுங்க வாரிக் கட்டிக்கிட்டிருந்த காசும் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும் போல, அந்த கணக்குல வச்சுப்பாத்தா, அந்த ரெண்டுபேரோட வேலய நம்ம ரெண்டுபேர் மாதிரி ஆளுங்க செய்ய முடியாதாடி?, அதுக்குத்தான் இந்த கணக்குவழக்கு. தன்மயியின் தலைக்குள் சுற்றிக்கொண்டிருந்த கணக்குகள் வெளித்துலங்கின.
“ம். இங்க பாரு, நம்ம வேலயில ரெண்டு விஷயங்கள நியாபகத்ல வெச்சுக்கணும். அப்டியே அந்த பக்கமா முயற்சி பண்ணனும்.1. எந்த பெரிய வியாதியும் வரக்கூடாது,2.வயசாகக் கூடாது, அந்த ரெண்டு மட்டும் கண்டிப்பா ஒண்ணா நடந்துடக்கூடாது”. ஸ்யாண்டி தனது நகைச்சுவைக்கு தானே கலகல என்று சிரித்தாள்.
தன்மயிக்குத் தெரிந்திருந்தது, அது நகைச்சுவை அல்ல, கார்ப்பரெட் உலகின் குரூரமான நிஜம்.
***
அதிர்ச்சியாக இருந்தாலும் ஒருவகையில் ப்யாட்ரிக்குடைய மனம் சலனமில்லாமல் இருந்தது. ப்யாட்ரிக் அப்போதே அடுத்த அடிவைப்பு குறித்து யோசனை செய்துகொண்டிருந்தான். நடந்தது எல்லாம் நன்மைக்கே, பாதிநாள் கார், சாலை எனக் கழிந்துபோய்க்கொண்டிருந்த அன்றாடப் பயண வழக்கத்தால் களைத்துப் போய்க்கொண்டிருந்தது. அதற்காக கை நிறைய சம்பளம் கொடுக்கும், முதலிலிருந்தே பழக்கப்பட்டிருக்கும் வேலையை விடுவது சுலபமாக இருக்கவில்லை. புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் கண்ணி ஏதாவது தவறிப் போயிருக்குமோ என்று தோன்றுகிறது. ஒருமுறை கற்றுக்கொண்டால் முடிந்துவிடும் வித்தை எல்லாம் இந்த வேலையில் கிடையாது. புதிய வெளியீட்டுடன் நாமும் புதிதாகத் தகவமைத்துக் கொண்டே இருக்கவேண்டும். இப்போது இன்றியமையாமல் அடுத்த நேர்முகத்தேர்வுப் பாதையின் அடிப்படையை அமைத்துக்கொள்ளவேண்டும். எப்படியும் மூன்று மாதம் உறுதியான சம்பளம், மீன் பிடிக்கும் சிறியதான ஒரு ட்ரிப் அடித்து நிதானமாக பொழுதைக்கழித்து கிறிஸ்த்மஸ் முடித்துவிட்டு மறுபடியும் வேலையைத் தேடிக்கொண்டால் ஆயிற்று, இந்த தடவை குறைவான ட்ரைவிங் இருக்கும்படி பக்கத்திலேயே பார்த்துக்கொள்ளவேண்டும். ஒரு ஐந்துவருடம் வீட்டு மார்கேஜ் கடன் தீரும்வரை வேலை செய்தால் போதும்.தனக்கென்ன குழந்தையா, குட்டியா, அப்றம் படகுதான், தூண்டில்தான் அடடா.. ச்ச இவுங்க இன்னும் ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு எடுத்திருக்கக் கூடாதா, வாழ்க்க செட்டில் ஆயிருக்கும். இருக்கட்டும், இப்ப என்னவாம்,வேற ஒண்ணு எங்கயோ கெடைக்கத்தான் போகுது என்று கணக்குபோட்டபடி தனது அன்றாட அலுவலகத்தைக் காலி செய்து கொண்டிருந்தான்.
மெலனி தனது நூறு சதுரடி க்யூபிகல்லில் உட்கார்ந்து நிதானமாக பழைய கோப்புகள் எல்லாவற்றையும் இழுத்து இழுத்து அட்டைப்பெட்டி ஒன்றில் வீசிக்கொண்டிருந்தாள். வேண்டியது வேண்டாதது என்றெல்லாம் பாகுபடுத்தும் மனம் இருக்கவில்லை. கண்கள் கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் மண்டைக்குள் யோசனை வேறொன்றாகவே இருந்தது. நேற்றுத்தான் வந்திருந்த ஆஸ்பத்திரி பில். காப்பீடு நீங்கலாக, கையிலிருந்து புரட்ட வேண்டியதே ஆயிரக்கணக்கான டாலர்கள் அளவுக்கு. மகள் இரண்டு மாதம் முன்பு ஆசைப்பட்டு சேர்ந்துகொண்ட பிரசித்திபெற்ற கல்லூரி, மகனது கல்லூரி முடிவடைய இன்னும் மூன்று வருடம் இருந்தது. இதை எல்லாம் சேர்த்தால் டாலர் அடையாளத்தின் முன்னால் வரும் இலக்கத்தில் சேர்க்கும் பூஜ்ஜியங்களின் எண்ணிக்கை நான்கோ ஐந்தோ, ஆறோ, எங்கிருந்து கொண்டு வருவது? வேறொரு வேலை கிடைக்கும் என்ற தைரியத்தின் மேலே ஆஸ்பத்திரி பில்லுடன் சேர்ந்து இருக்கும் அறிக்கை மடார் என்று ஓங்கி அறைந்துவிட்டது. வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் மற்றொரு மார்பகத்துக்கு கேன்சர் இப்போதுதான் பரவத் தொடங்கியிருக்கிறது, நரகவேதனையின் நிகழ்வுகள் மறுபடியும் ஆரம்பமாகவேண்டி இருந்தன. அதனை இன்னும் அவள் எங்கும் வெளிப்படுத்தி இருக்கவில்லை.
“ஒன்னோட இந்த ஈர்க்குச்சி ஒடம்புக்கு 36சி சைஸ் கொஞ்சம் ஜாஸ்திதான் பாத்துக்கோ ஆனா ஒன்ன பாக்கறவுங்க என்னோட அதிர்ஷ்டத்துக்காக மருகறத நெனச்சாத்தான் சிரிப்பா வருது” என்று ஸ்டீவ் எப்போதும் குத்திக்கொண்டிருப்பான். முதல்தடவை ரிபோர்ட்டைப் பார்த்த கணவன் ஸ்டீவ் கட்டிக்கொண்டு உச் உச் என்று முத்தம் கொடுத்தபடி பொலபொலவென்று அழ ஆரம்பித்துவிட்டான். தன்னைவிடவும் வெகுசீக்கிரம் தைரியம் இழக்கும் ஸ்டீவ் “சாரி டியர் சாரி” என்றபடி தன்னுடையது அல்லாத தவறுக்குச் சின்னக் குழந்தைபோல கட்டிலில் குப்புறக் கிடந்து அழுது கொண்டிருந்தான். இப்போது இரண்டாவது மார்பகத்துக்கும் பரவியிருக்கும் சாபச்செய்தி தெரியவர ஸ்டீவ் மறுவினையாற்றவும் அறியாது உறைந்து போயிருந்தான். அந்த நிலைமையில் இந்த மதியநேர அதிர்ச்சித் தகவலை ஸ்டீவிடம் எப்படிச் சொல்வது? ஸ்டீவ்-க்கு வந்துகொண்டிருப்பது தன்னுடையதை விடவும் குறைவான சம்பளம். சிகிச்சை, குழந்தைகளின் கல்விக் கட்டணம், வீட்டுக்கடன், அவன் மீது மேலும் விழப்போகும் அழுத்தத்தை நினைத்தால்தான் வேதனையாக இருக்கிறது. அவன் ஒருவனாக எப்படி நிர்வகிப்பான்? மற்றொரு மார்பகத்துக்கும் பரவியிருக்கும் கேன்சர் செய்தியைச் சொல்லியிருந்தால் வீசப்படும் கத்தியிலிருந்து தப்பித்து இருப்பேனோ என்று ஒரு வினாடி தோன்றியது. அடுத்து வரவிருக்கும் கீமோ, ரேடியேஷன் வலியைவிடவும் தற்போதைய சூழ்நிலையின் மன அழுத்தத்தின் வலியே ஒரு கைப்பிடி அதிகம் என்று தோன்றத் தொடங்கியது. மெலனிக்கு நிகரான மெலனியே தைரியம் இழக்கும்படி ஆயிற்று.
“ஹாய் இனி என்ன” உருளவிருக்கும் இரு கண்ணீர்த்துளிகளைப் பின்னுக்குத் தள்ளி அடக்கித் திரும்பிப் பார்த்தாள். பதற்றத்தில் ஆறடி விநய் மூன்றடிபோல முகத்தைச் சின்னதாக்கிக்கொண்டு நின்றிருந்தான். மேனேஜரா எனக்கு இஷ்டம் இல்லாட்டியும் வேலைல இருக்குற காரியங்கள முடிக்கவேண்டி இருக்கே, இப்டி ஒன்னயும் நீ தாண்டி வந்த கஷ்டங்களப்பத்தி எங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருந்தும் அனுப்பிவெக்க ரொம்ப வேதனையா இருக்கு, ஆனா கடம, மனசில்லாட்டியும் செஞ்சுதான ஆகணும். இவ்வளவு சொல்லும்போதே சங்கோஜம் தலைக்கேற ஆற்றாமையாக இருந்தது விநய்க்கு. இதுபோன்ற குட் பய்களை தனது பணிவாழ்வில் நிறையநிறைய பேருக்கு சொல்லியிருக்கிறான் விநய். ஆனால் இப்படிச் சொல்லும்போது செயற்கையான சிரிப்பை வரவழைத்துக்கொள்ளாமல் வேதனையை அனுபவிப்பது இதுவே முதன்முறையாக இருக்கலாம். தலைகளின் பட்டியல் அனுப்பியபோது பெயரைச் சுட்டிக்காட்டியது இவன்தான் என மெலனிக்கும் தெரியும், ஆனாலும் அது அவனுக்குத் தவிர்க்க முடியாதது கூட என்றும். இருந்தாலும் நான் ஏன் இவனிடம் மாட்டிக் கொண்டேன் என்று ஆத்திரம் பொத்துக்கொண்டு வராமல் போகவில்லை. வேலையின் பெயரில் அரட்டையடிப்பவர்கள், சும்மா ஜிம்முக்கு வருகிறார்களா, இல்லை வேலைக்குத்தானா என்று புரியாதபடி பாதிநாள் ஜிம்மில் கழிப்பவர்கள், சாப்பாட்டு இடைவேளை என்று சாப்பாடு முடித்து, காப்பி குடித்து, மாலை உணவுக்கு எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் போது திரும்பி வருபவர்கள், ஒருநாளில் 24 மணிநேரமும் இணையத்தில் அடைந்து கிடப்பவர்கள் எல்லோரும் இருந்தார்கள் இல்லையா, இவனிடம் நான் ஏன் அகப்பட்டேன் என்று கோபம் வந்தாலும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு சிரித்தாள்.”பரவாயில்ல விநய் வேற எங்கயாவது பாக்கலாம் விடு. நம்மோட இந்த வட்டம் சின்னது.சரி நீ கிளம்பலாம் என்பதுபோல மறுபடியும் கோப்புகளை ஒழுங்குசெய்யத் தொடங்கினாள்.
“உண்மதான் மெலனி. நம்மோட இந்த வட்டம் சின்னது. பாலிட்டிக்ஸ் மட்டும் பெருசு”. என்று சொல்லி துயரம் தோய்ந்த சிரிப்புடன் வெளியே நடந்தான்.
விநய்க்கும் தெரியும் இந்த வேலையின் நீர்க்குமிழி போன்ற பொருளாதாரப் பரப்பு. இன்று மெலனியின் மேலாளராக நான் இங்கு இருப்பேன், நாளையே அவளிடம் வேலை வேண்டி எனக்கும் போகவேண்டி இருக்கலாம். இது இந்த வேலையின் அடிப்படை விதி.யாரும் இங்கு நிரந்தரமில்லை.மேலும் அல்ல, கீழும் அல்ல. கார்ப்பரெட் விசைப்பலகையில் வடிவம்கொள்ளும் பட்டியலில் இடம் மாறும் கட்டங்கள் அவ்வளவுதான். அப்படிப் பார்த்தால் ஆறுமாதம் முன்பு இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெற இருக்கிறது உங்கள் பிரிவில் இந்த பட்ஜெட் குறைப்பு நடவடிக்கைக்கு பொருந்தும் ஊழியர்களின் பெயர்களைச் சுட்டிக்காட்டுமாறு கோரப்படுகிறது என்ற சுற்றறிக்கை வந்தபோது, விநய் பலியிட குறித்திருந்த பெயர்களின் பட்டியலில் மெலனியைச் சேர்த்திருக்கவில்லை. அதனை மாற்றியது அவனது மேலதிகாரி மார்க். ஐயோ எப்படிப்பட்ட வயிற்றைப் புரட்டிக் கொண்டுவரும் கூட்டம் அது. அது என்ன சந்தைக்கடைபோல , ஊழியர்கள் எல்லோரும் காய்கறிகள் என்பதாக எல்லோருக்கும் ஒவ்வொரு விலை. அவர்களது சம்பளம், அவர்கள் மீது கம்பெனி முதலீடு செய்திருக்கும் பணம், செலவுகளின் கூட்டல் கழித்தல் கணக்கு. கடைசியில் அவர்கள் சம்பளத்தோடு கம்பெனி அவர்கள் வழியாக ஈட்டிக்கொள்ளும் லாபத்தின் கணக்கு. அவரவர் மேலதிகாரிகள் வழங்கும் ஆதாரக்கடிதம், பாராட்டுதல், குறைசொல்லுதல் என்ற தராசில் ஊசலாட்டம். அப்போதே அல்லவா, மார்க் சிரச்சேதப் பட்டியலில் இருந்த எட்வர்ட் சாங்- க்கு பதிலாக மெலனியைச் சேர்த்தது. மெலனிக்கு எட்வர்ட்- ஐ விடவும் பத்தாயிரம் கூடுதல் சம்பளம், கடந்த ஒட்டுமொத்த ஆண்டுகளில் மெலனியைவிடவும் அதிகமான ப்ராஜக்ட்களில் எட்வர்ட் இருந்தான் என்பதுபோன்ற ஒரெயொரு வாதத்தை முன்வைத்து வெற்றிபெற்றிருந்தான் மார்க். எட்வர்ட் இருந்த ப்ராஜெக்ட்களின் எதிர்காலம் எல்லாம் என்ன ஆனது என்று விநய் க்கும் தெரியும் மார்க்- க்கும் தெரியும். அங்கெல்லாம் ஜெயித்ததை விடவும் தோற்றதே அதிகம். எட்வர்ட் பல வருடங்களாக கம்பனியில் சீனியர் என்று இருந்தாலும் வேலையில் ஆறுக்கும் ஏறாமல் மூன்றுக்கும் இறங்காமல் சிலரது சகவாசத்தால் கெட்டியாக எஞ்சியிருந்தான். ஆனால் அதை எல்லாம் வாயைத் திறந்து சொல்லுமாறு இல்லை. மெலனி எதிர்கொண்டு வென்ற சூழ்நிலையை ஒன்றும் அறியாதவன் அல்ல மார்க்.ஆனால் அவனுக்கு அடுத்த மாதம் கால்ஃப் வகுப்பில் எட்வர்ட்-க்கு முகம் காட்டவேண்டுமே! இவை அனைத்தும் பற்றிய நுண்ணறிவு விநய்க்கும் இருந்தது. அவனும் கூட குழந்தைகுட்டி இருப்பவன். இப்போது தானே பழைய வீட்டை விற்றுவிட்டு புதியதான பெரிய வீட்டை வாங்கிக்கொண்டான். விநய் இப்பொழுது ப்யாட்ரிக் இடம் இருந்து வெளிவந்த டைரக்டர் பதவிக்கு சரியாக உயர்த்தப்படும் நிலையில் இருந்தான். ப்யாட்ரிக்-குக்கு ரிபோர்ட் செய்துகொள்ளும் பிரிவுகள் எல்லாம் அவனது உள்ளங்கைக்குள் வரவிருந்தன. எவ்வளவுதான் வருத்தமாக இருந்தாலும் இதனைவிடவும் அதிகமாக மெலனிக்காகப் போராடுவதில் அர்த்தமும் இல்லை. சாத்தியமும் இருக்கவில்லை.
மெலனி அனைத்தையும் சுத்தப்படுத்தி, எத்தனையோ வருடங்களாக அங்கேயே ஆணி அடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் ஃபோட்டோக்களை மெதுவாக கத்தரித்து எடுக்கத்தொடங்கினாள். மகளுடைய ப்ராம் ஃபோட்டோ, மகனது சாக்கர் ஃபோட்டோ, கல்யாணநாள், ஹ்யாலோவின் ஃபோட்டோகள், மதர்ஸ்டே சந்தர்ப்பத்தில் சின்னக் கரங்கள் செய்த கலைப்படைப்பு, பெய்ண்டிங். எந்தத் தாய்க்குப் பிறந்த பிள்ளைகளோ, எனக்காக உருகும் தொப்புள்கொடிகள். ரொம்ப நாட்களுக்குப் பிறகு தாங்கள் தத்தெடுக்கப்பட்டவர்கள் என்று தன் குழந்தைகளுக்குத் தெரியவருவதாகத் தோன்றியது. வயிற்றைப் புரட்டிக்கொண்டு வந்ததாக பாத்ரூம் நோக்கி ஓடினாள் மெலனி. சமாளித்துக்கொண்டு பின்னால் திரும்பி காலி செய்யும் வேலை முடிப்பதற்குள் உடன் பணிசெய்யும் ஊழியர்கள் அதிக அளவில் வந்து இப்டி நடந்திருக்கக் கூடாது என உச்சு கொட்டிவிட்டுப் போயிருந்தார்கள்.
காரில் ஏற்ற நாங்கள் உதவிசெய்கிறோம் என்று சொல்லியபடி வழியனுப்ப வந்த தன்மயி, ஸ்யாண்டி இவர்கள் எல்லோரைப்போலவே பெருமூச்சுவிட்டபடி மெலனியைக் கட்டிக்கொண்டார்கள். ”தன்மயி டோண்ட் ஹக் மீ ஸோ ஹார்ட் யுவர் ப்ரெஸ்ட் வில் கன்ஃப்யூஸ் மை ப்ரெய்ன் என கலகல என்று சிரித்தாள் மெலனி. கார் ஏறும்போது மெலனி மாறுபாடு இல்லாத யோகினியைப்போல விளங்கினாள். தன்மயி, இது ஒரு இலக்கங்கள் இருக்குற பரமபத விளையாட்டு. இந்த ஆட்டத்துக்கு நீ இன்னும் புதுசு. இது நம்பருங்க இருக்கற நீளமான அகலமான ஒரு பட்டியல். நாம எல்லாம் இதுல நம்பருங்க அப்டிங்கிற அறிவு எனக்கும் இருக்கு. இங்க எடுத்து அங்க சேர்த்து அப்புறம் எங்கேயோ கூட்டி கடைசியா பில்லியன் மடங்கு இலக்கங்கள்ள பாதி முக்காலு சேக்குற நம்பர்களோட ஆட்டத்துல இருக்குறது ஒரே ஒரு விதிதான். காலேல ஒம்பொது மணிக்கு அடிக்கிர ஸ்டாக் எக்சேஞ்ச் மணிச் சத்தம். எல்லாம் இங்க காய்கள் மட்டும்தான். நானும் கூட காய்.ஸ்டாக் டிக்கருல ஏறிக்கிட்டு இருக்குற பச்சை கோட்டுக்கு என்னோட, ஒன்னோட, யாரோட ஒடம்பு வெளுப்பு, கருப்பு, பழுப்பு,செவப்பும் கூட தெரியறது கெடையாது. வாசனையும் உருத்தறது கெடையாது. இட்ஸ் ஜஸ்ட் அ நம்பர் கேம். இப்போ நான் என்னோட வாழ்க்கைல இருக்குற கடன், பில்லுங்களோட நம்பர் வெளையாட்டுக்கு நம்பருங்களச் சேத்துக்கணும். அவ்ளவுதான். இளம்கூந்தலின் மீது விரல்களை ஓட்டியபடி மெலனி பாய் என்றாள். தன்மயிக்கு நாடி நரம்புகளில் வண்ணவண்ண இலக்கங்கள் அசைந்தாடினவாம். அழுதாலும் எங்கே கண்ணீரில் எண்கள் உதிர்ந்து விழுந்துவிடுமோ என்பதாக பயம் ஏற்பட்டு கெட்டியாக கண்களை மூடிக்கொண்டாள்.
குறிப்புகள்:
ப்ராம்: குழந்தைகளை வைத்துத் தள்ளிக்கொண்டு செல்லும் சிறுவண்டி
ஹ்யாலோவின்: இறந்த உடல்களில் உள்ள ஆத்மாக்கள் வீடுகளுக்கு மீண்டும் வாராதிருக்கும்பொருட்டு கொண்டாடப்படும் பண்டிகை.
***
(கு. பத்மநாபன்: இலக்கியவாசகர், மொழிபெயர்ப்பாளர். ஆந்திரமாநிலம், சித்தூர் மாவட்டம் , குப்பத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்.)