அவ்வையின் தனிப்பாடல்கள் குறித்த இரண்டு கட்டுரைகள் – இசை

அவ்வை (கோவை இராமநாதபுரம் சித்தி விநாயகர் கோவில்)

          1. என்றும் கிழியாதுன் பாட்டு!

தனிப்பாடல்கள் என் மனதிற்கு நெருக்கமானவை. நான் பழந்தமிழ் பாடல்கள் கற்பதற்கு தனிப்பாடல்களின் வழியேதான் சென்றேன். புதியவர்க்கும் அந்த வழியையே பரிந்துரைப்பேன். தனிப்பாடல்களின் சொற்கள் அவ்வளவு பழையதல்ல. இன்றைய வாசகனுக்கு அகராதி தேவைதான் எனினும் ஒவ்வொரு வரிக்கும் அதைப் புரட்டிப் புரட்டி நோக வேண்டியதில்லை. தவிர அப்பாடல்கள் சுவாரஸ்யமானவை. அதன் பின்னணியில் சொல்லப்படும் கதைகள் அதைவிட சுவராஸ்யமானவை. சங்கப்பாடல்கள் யாரோ ஒரு தலைவனும் தலைவியும் காதலித்துக் கொண்டவை, பரிசுக்காக புலவன் அரசனைப் புகழ்ந்து பாடியவை என்கிற தோற்றத்தால் விலகித் தொலைவில் நிற்பவை. தனிப்பாடல்கள் காலத்தாலும், எளிமையாலும் பளிச்சென்று நாம் வாழ்விற்குப் பக்கத்தில் நிற்கின்றன. சொற்களைக் கொண்டு வித்தை காட்டும் அதன் இன்னொரு தன்மையால் காலப்போக்கில் எனக்குக் கொஞ்சம் சலிப்பு தோன்றி விட்டது உண்மைதான் என்றாலும், ஆர்வமும் ஒரு புறம் நீடிக்கவே செய்கிறது.

பெருமாள் முருகன் “தனிப்பாடல் எனும் தூண்டில் புழு” என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் மாணவர்களை இலக்கியத்தின் பால் ஈர்ப்பதற்கான ஒரு திட்டமாக “தனிப்பாடல்களை” பயன்படுத்தி வந்ததைக் குறிப்பிடுகிறார்.

“கற்போரின் தமிழன்பை உயர்த்தும் சுவைகளைக் கொண்ட தனிப்பாடல்களைத் தனி ஒரு தாளாகப் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும் என்பது என் அவா. அதுவும் இளங்கலைப் படிப்புக்குள் நுழையும் மாணவர்களுக்கு ஐம்பது முதல் நூறு பாடல்களைத் தேர்ந்தெடுத்து முதல் பருவத்திலேயே பாடமாக வைக்க வேண்டும். அவை தமிழ் இலக்கியப் பரப்புக்குள் அவர்கள் ஆனந்தமாக நுழைவதற்குப் பெரிதும் உதவும்”

உ..வே சா தனிப்பாடல்களை “புதையல்” என்று விளித்ததையும் அக்கட்டுரையில் குறிப்பிட்டு எழுதுகிறார்.

“அதைப் (தனிப்பாடல் திரட்டு) பார்த்தபோது எனக்கு ஏதோ ஒரு பெரிய புதையல் கிடைத்துவிட்டதுபோல இருந்தது. பல வகையான கருத்துகளும் பலவகையான சாதுரியங்களும் அமைந்த தனிப்பாடல்கள் என் மனத்தைக் கவர்ந்தன. காளமேகப் புலவர் சமயத்துக்கு ஏற்றபடி சாதுரியமாகப் பாடிய பாடல்களைப் படித்துப் படித்து உவப்பேன். அவர் பாடிய சிலேடைகளைச் சொல்லிச் சொல்லி மகிழ்வேன். பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் செய்யுள்களிலுள்ள பக்தியையும் எளிய நடையையும் கண்டு ஈடுபடுவேன். ஔவையார் முதலியவர்களுடைய பாடல்களின் போக்கிலே என் மனம் லயித்துவிடும். பலவகையான சுவைகள் உள்ள அப்பாடல்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரத்தினமாகவே தோன்றியது. ஓய்ந்த நேரங்களிலெல்லாம் அவற்றையே படித்துப் படித்துக் காலம் கழிப்பேன். பிறரிடம் சொல்லிச் சொல்லிப் பாராட்டுவேன். மிக விரைவில் பல பாடல்கள் மனனமாயின. எனது தமிழன்பு அப்பாடல்களால் எவ்வளவோ உயர்ந்துவிட்டது”.

வெவ்வேறு புலவர்களின் தனிப்பாடல்களைத் திரட்டி 1862 ல் சந்திரசேகர கவிராஜ பண்டிதர் என்பவர் “தனிப்பாடல் திரட்டு” என்கிற பெயரில் அச்சு நூலாக்கினார். பிறகு அது போல பல திரட்டுகள் வந்தன. ஒரு தொகுப்பிற்கும் இன்னொரு தொகுப்பிற்கும் பாடல்களிலும், பாடல் வரிகளிலும் வேறுபாடுகள் உள்ளன. புகழ் பெற்ற பல தனிப்பாடல்கள் பிற்கால சோழர்களின் காலமான 12ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கம்பன், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, பிற்கால அவ்வையார் போன்றவர்கள் இக் காலத்தின் கவிகளாக சொல்லப்படுகிறார்கள். கம்பனுக்கும் அவ்வைக்குமிடையே நிகழ்ந்த சொற் போராக சில பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் இடம்பெற்றுள்ளன .பெருமாள் முருகன் தனிப்பாடல்களின் காலத்தை 16 ம் நூற்றாண்டும் அதற்குப் பிறகும் என்று வகுக்கிறார். அவ்வையின் தனிப்பாடல்கள் குறித்த என் இரண்டு கட்டுரைகளும் புலியூர் கேசிகன் தொகுத்த “அவ்வையார் தனிப்பாடல்கள்” நூலை கருத்தில் கொண்டவை.

அவ்வையின் தனிப்பாடல்களை அறிவுரைகள், கூர்த்த மதி கொண்டு சொல்லப்பட்ட உண்மைகள், அவர் வாழ்வில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வுகளின் போது பாடப்பட்ட பாடல்கள், இன்றைய முற்போக்காளர்களுக்கு உவக்காத சில வரிகள் என்பதாகத் தொகுக்கலாம். எல்லாப் பாடல்களும் நவீன மனதின் நெஞ்சோடு பேசுபவை அல்ல. ஆயினும் கட்டாயம் காதுகளைக் கொஞ்சுபவை. அதனால் வாசிப்பின்பத்தில் குறை வைக்காதவை. “என்றும் கிழியாதென் பாட்டு” என்கிற அவ்வையின் வரியை இன்றைய கவியும் கண்ணீர் புரள நெஞ்சு விம்மிக் கூவ முடியும்.

அவ்வை என்கிற பெயரைச் சுற்றி ஆயிரம் கதைகள். அதில் ஒரு கதை இது. ஆதி, பகவன் இருவருக்கும் மகளாக, அவர்கள் ஒரு பாணர் வீட்டில் தங்கியிருந்த போது பிறக்கிறாள் அவ்வை. பகவன் அக்குழந்தையை பாணர் வீட்டிலேயே விட்டுவிடச் சொல்கிறான். அன்னை மனம் கலங்குகிறது. அப்போது அக்குழந்தையே ஒரு வெண்பா பாடி அன்னையின் கலக்கத்தைப் போக்குகிறது.

இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி
விட்ட சிவனும் செத்து விட்டானோ- முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரம் அவனுக்கன்னாய்
நெஞ்சமே அஞ்சாதே நீ

சிவன் எழுதிய விதி. ஆகவே அவனுக்கேதான் எல்லாப் பொறுப்பும் என்கிறாள். ” சிவன் செத்தாலன்றி மண் மேற் செழுமையுண்டு’ என்று பாரதி அவ்வளவு அடித்துச் சொல்லும் ஒரு வரி உண்டல்லவா?

சிவன், தலை எழுத்து, பிறந்த குழந்தையின் வெண்பா போன்ற கதைகளை விட்டு விடுங்கள். எனக்கு இப்பாடலில் “முட்ட முட்டப் பஞ்சமேயானாலும்” என்கிற வரி போதும். “முட்டமுட்ட வருகிற பஞ்சத்தை” எண்ணிப் பாருங்கள். தனிப்பாடல்களை நாம் வாசிக்க வேண்டிய முறை இதுதான்.

கம்பன் சோழனின் வணக்கதிற்குரியவராக இருந்தார் அவரிடம் செல்வமும், புகழும் நிறைந்திருந்தது. அவரைப் பற்றி அவ்வை பாடிய பாடலாக சொல்லப்படும் பாடல் ஒன்று…

விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும்- அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர் கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று

செல்வம் எல்லாக் காலத்திலும் ஜொலிக்கவே செய்யும். விரகர் வளைய வளைய வருவதும் நிகழவே செய்யும். ஆனால் “நஞ்சென்றும் வேம்பென்”றும் சொல்லவும் சிலர் இருக்கவே செய்வார்கள். அந்தச் சிலரை விழுங்கி விட முடியவில்லையே என்பதுதான் செல்வத்தின் தீராத வருத்தம். அதிகாரத்தோடு ஒட்டிக் கொண்டே இருப்பது ஒருவித விரகம். அவர் விரகர்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிது என்று மனிதனின் அகந்தையை நோக்கிப் பாடும் அவள், எறும்பும் தன் கையாலெண் சாண் என்கிறாள் இன்னொரு பாட்டில்.

வெவ்வேறு அழகுகளை ஒரு பாட்டில் பட்டியலிடுகிறாள். விரதம் இருந்து இளைத்த மேனி ஒரு அழகு; நித்தமும் அள்ளியள்ளிக் கொடுத்து இளைத்துவிட்ட வள்ளல் ஒரு அழகு ; கொடிய போர்களத்தில் வீரன் வாங்கிய வடுவும், வீழ்ந்துபட்ட வீரர்களுக்கு நடப்படும் நடுகல்லும் அழகானவை; ஆமாம் அழகுதான் என்று நாமும் அவளோடு சேர்ந்து சொல்லுகிறோம். அவ்வை இப்பாடலை இப்படித் துவங்குகிறாள் “சுரதந்தனில் இளைத்த தோகை”. அதாவது புணர்ச்சி முற்றிய களைப்பில் கிடக்கும் பெண்ணின் அழகு. ஏக்கத்தின் அழகு எல்லோரும் சொல்வதுதான். அவ்வை நிறைவின் அழகைச் சொல்கிறாள். ஓய்வின் அழகைச் சொல்கிறாள். இது புதிது.

சுரதந்தனில் இளைத்த தோகை; சுகிர்த
விரதந்தனில் இளைத்த மேனி;- நிரதம்
கொடுத்திளைத்த தாதா; கொடுஞ் சமரிற்பட்ட
வடுத்துளைத்த கல் அபிராமம்.

(சுரதம்- புணர்ச்சி, சுகிர்தம்- நன்மை, அபிராமம்- அழகு, நிரதம்- நித்தம், தாதா- வள்ளல்)

அன்பில்லாத பெண்களைக் குறித்து பல பாடல்களில் பாடுகிறாள். அன்பில்லாதவள் பெண் அல்ல. அவள் இடும் உணவு உணவல்ல.

… என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது

அதனினுங் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினுங் கொடிது
இன்புற அவள் கையில் உண்பது தானே

அன்பற்ற உணவின் முன் நின்று “அய்யய்யோ” என்று பதறுகிறாள் பாட்டி! அன்பை ஓரிடத்திலும், சோற்றை இன்னொரு இடத்திலும் பெற்றுக் கொள்ள வேண்டியதுதான். அனைத்தும் ஒரே குடையின் கீழ் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஆகுமா?

அவளுக்கு உணவு வேண்டும் ஆனால் அது பிச்சை போல் அல்ல . உணவு எளிதெனினும் அது விருந்து போல் வேண்டும்..

….உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்…

“பத்தாவிற்கேற்ற பதிவிரதை வாய்க்கவில்லையெனில் கூறாமல் சந்நியாசம் கொள்”

எதிர்பேசும் மனையாளில் பேய் நன்று

நேசமற்ற பெண் அவ்வையின் தனிப்பாடல்களில் வந்து கொண்டே இருக்கிறாள்.

அவ்வையார்

இரந்து நிற்பவன் எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்வான். அவனுக்கு வேறு வழியில்லை. ஆகவே எதையாவது கொடுத்து விடக்கூடாது. கொடுப்பவர் தாம் யார்? தம் கொடையின் சிறப்பென்ன என்பதை ஆராய்ந்து தர வேண்டும்.

….இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாமறிவார் தன்கொடையின் சீர்

கவிஞன் தன் கவிதையைத் தலைக்கு மேல் உயர்த்திக் காண்பிக்கையில் அது வித்யாகர்வமா? அல்லது தன்னிரக்கமா? என்கிற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. பொருளால் எல்லாவற்றையும் எடைபோடும் ஒரு சமூகத்தில் கவிதையின் இடம் என்ன ? அதுவும் பொருளுக்கு இரந்து நின்ற புலவர் மரபில் ஒருவர் தன் பாட்டைத் தானே உச்சிமுகர்கையில் அதில் கொஞ்சம் கண்ணீர் ஒட்டிக் கொள்கிறது. சோழனின் அவையில் அன்று அவ்வையும் இருந்தாள்.ஒரு துணிவணிகனும் இருந்தான். மன்னன் கவனம் அவ்வையின் சொற்களை விடுத்து ஆடைகளின் ஆடம்பரம் மீதே குவிந்து கொண்டிருக்க அப்போது அவ்வை பாடிய பாடலென்று கதை சொல்கிறது…

நூற்றுப் பத்தாயிரம் பொன்பெரினும் நூற்சீலை
நாற்றிங்கள் நாளுக்குள் நைந்துவிடும்- மாற்றலரைப்
பொன்றப் பொரு தடக்கைப் போர்வேல் அகளங்கா
என்றும் கிழியாதென் பாட்டு!

இப்படி உறுதிபடப் பாடுபவளின் இன்னொரு பாடலில் கேட்கிறது ஒரு சோர்ந்த குரல்..

உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை
ஒப்பிக்கும் என்றன் உளம்

உணவிற்கும் பிறரைச் சார்ந்து வாழ்ந்த நாடோடி வாழ்க்கை என்பதால் உணவின் ருசி இறங்கியுள்ளது அவ்வையின் சொற்களில்.

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்து – பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகஞ் செறியாதோ கைக்கு

பொய்யாகக் கீரை என்று சொல்லி அமுதத்தை இட்டு விட்டார்களாம்!

முரமுரெனவே புளித்த மோரும் என்று எழுத சொற்கள் இருந்தால் மட்டும் போதாது. பசியும் , பசியில் எழும் ருசியும் இருந்தாக வேண்டும்.

ஓயாத அறிவுரைகள் முழங்கும் இடத்தில் கசப்பு திரண்டு எழுவதும் இயல்பு தானே?

வாழ்விலாச் சங்கடத்தில் சாதலே நன்று

சாவு அதுவாய் வரட்டும் பாட்டி. அதுவரை சங்கடத்தில் உறங்கி சங்கடத்தில் விழிக்கிறேன்.சங்கடத்தில் உழல்கிறேன். பாவம் உன் தெய்வம்! தொடர்க அதன் திட்டம்! பாதியிலே ஆட்டத்திலிருந்து விலகிக் கொண்டால் அது ஏமாந்து போகாதா என்ன?

மனிதன் அறிவுரைக்குள்தான் பிறக்கிறான். செவிலியும், அன்னையும் அவனை அறிவுரையோடுதான் பூமிக்கு எடுத்து வருகிறார்கள். அவனுக்கு நன்று தெரியும், தீது புரியும். தெரிந்தால் அதில் சென்றுவிட முடியுமா என்ன? அவனுக்கு நன்றாகப் புரிகிறது. அதனால்தான் அவ்வளவு வேகமாகத் தலையாட்டுகிறான். துளி கூட சந்தேகம் வேண்டாம், தலையாட்டும் கணத்தில் “செந்நெறிச் செல்வன்” தான் அவன். கர்த்தரின் கூடாரத்திற்கு வெளியே பிசாசு தயார் நிலையில் காத்திருக்கிறது. அது ஏன் அங்கு குந்தியிருக்கிறது? அதன் பணியிடம் அதுதான். அதனால் அங்கு அமர்ந்திருக்கிறது. பிசாசு பிசாசை அழைத்துச் சென்று விடுகிறது.

காலையிலொன்றாவார் கடும்பகலில் லொன்றாவார்
மாலையிலொன்றாவார் மனிதரெல்லாம்…

அ.முத்துலிங்கம் எனக்குப் பிடித்த சிறுகதையாசிரியர். அவர் ” ஒரு மணி நேரத்திற்கு முன்பு” என்று ஒரு கதை எழுதியுள்ளார். அந்தக் கதையைக் குறித்து நான் ஒரு தனிக்கட்டுரையே எழுதியுள்ளேன். அந்தக் கதையின் நெற்றியில் மேற்காணும் கவிதை வரிகளை தயக்கமின்றிப் பொறித்து விடலாம்.

வருந்தினர்க் கொன்றீயாதான் வாழ்க்கையும், தளர்ந்தோர்க் கொன்றீயாதான் தனமும் எப்படி நாசமாகும் என்பதைத் திருப்பத் திருப்ப தன் பாடல்களில் பாடுகிறாள்.

இல்லறத்தில் இணையும் இருவரை யார் சேர்த்து வைப்பது? முன்பு புரோக்கர், இன்று மேட்ரிமோனியல்கள் என்று சொல்லாதீர்!. இது தத்துவார்த்தமான கேள்வி. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்றும், இன்னார்க்கு இன்னாரென்று இறைவன் எழுதியுள்ளான் என்றும் சொல்லப்படுகிறது. எழுதும் போது வேண்டுமென்றே ஏறுமாறாக எழுதிவிடுகிறான். சண்டைக் காட்சிகளை வேடிக்கை பார்க்க யாருக்குத்தான் பிடிக்காது. வீட்டில் ஆபாசக் கூச்சல்கள் எழுகின்றன. இரத்தம் சிந்துகிறது. கொலை விழுகிறது. படைத்தவன் “ஹை..ஜாலி’ என்று குதூகலிக்கிறான். அவன் தலையை திருகி எறிய வேண்டும் என்கிறாள் அவ்வை. வற்றல் மரம் போல் வறண்டிருக்கும், உறுதியற்ற , அன்பற்ற ஒருவனுக்கு மானைப் போன்ற ஒருத்தியை இணையாக சேர்த்து வைத்த பிரம்மனின் நான்கு தலைகளையும் கிள்ளி எறிய வேண்டும் என்று ஆவேசம் கொள்கிறாள். பிரம்மனின் ஒரு தலை ஏற்கனவே சிவபெருமானால் அறுக்கப்பட்டுவிட்டது என்கிறது புராணக் கதை.

அற்றதலை போக அறாததலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ- வற்றன்
மரமனையானுக்கு இந்த மானை வகுத்த
பிரமனை யான் காணப்பெறின்

வீட்டை நரகம் என்று தூற்றும் எல்லோராலும் அதைவிட்டுவிட்டு ஓடிவிட முடிவதில்லை. ஒருவருக்கொருவர் குமட்டிக் கொண்டு கூடவே வாழ்ந்து வருகிறார்கள்.

வாழ்வின் உறுதிப்பொருள்களாகச் சொல்லப்படும் நான்கினையும் ஒரு பாட்டில் வைத்து பாடுகிறாள்…

ஈதலறம் தீவினை வீட்டீட்டல் பொருள் எஞ்ஞான்றும்
காதலிருவர் கருத்தொருமித்- தாதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு

தீவினையை விட்டு ஈட்டல் பொருள் என்கிறாள். நவீன மனிதன் கொஞ்சம் தயங்கி நிற்கும் ஒரு இடம்.

நம் உறவு ஒன்று மரணிக்கையில் அதோடு நம்முடைய ஒன்றும் சேர்ந்தே மடிகிறது.

தாயொடு அறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம் போம்- மாயவாழ்வு
உற்றாருடன் போம் உடன்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலியோ டெவையும் போம்.

முருகனின் வினாக்களுக்கு அவ்வை பாடியதாக சொல்லப்படும் பாடல்கள் திரைப்பாடலாக பிரபலமானவை. ‘கே.பி.சுந்தராம்பாள் தானே கண்டறிந்த உண்மைகள் என்பது போல அவ்வளவு உறுதியாக அதைத் திரையில் பாடிவைத்தார். அவ்வையின் கொடியது, இனியது, பெரியது , அரியது ஆகியவற்றோடு தன் பங்கிற்கு ‘ புதியது’ என்கிற ஒன்றையும் சேர்த்து அதை அழியாத காவியமாக்கினார் கண்ணதாசன்.

“பெரியது” எது என்கிற முருகனின் கேள்விக்கு அவ்வையின் பதில் “இறை அடியார்களின் உள்ளம் ” என்பதுதான். சாதாரண விடை போல் தொனிக்கும் இந்த விடையைச் சொல்ல அவள் மேற்கொள்ளும் பயணம் ஆச்சர்யமானது. எதையோ தொட்டு, எதையோ பிடித்து, எங்கோ உதைத்து , எங்கெங்கோ பறந்துவிட்டு பத்திரமாக தன் விடையுள் தரையிறங்குகிறாள். ஒவ்வொரு முறை இந்தப் பாடலைக் கேட்கும் போதும் முதல் முறை அஞ்சியது போலவே “பார்த்து…பார்த்து..” என்று நான் பதறுகிறேன்.

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒரு தலைப்பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே

உலகிலேயே பெரியது என்று மெச்சப்படும் தொண்டர் உள்ளத்தோடுதான் இறைவன் அடிக்கடி விளையாடுகிறார். சமயங்களில் அதைச் சுக்கு நூறாக கிழிந்த்தெறிந்தும் விடுகிறார்.

இனிதைக்கேட்டால் அதனினும் இனிது அறிவினர் சேர்தல் என்கிறாள்

கொடிது கொடிது வறுமை கொடிது என்பது எல்லோரும் அறிந்ததே. “அதனினும் கொடிது இளமையில் வறுமை” என்று சொல்லத்தான் வாழ்வறிந்த ஒரு கவி வேண்டியுள்ளார். பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுத் தேர்வாகி, கல்லூரிக் காலத்தில் பூட்ஸ் வாங்கித் தரவில்லை என்பதற்காக படிப்பை விட்டே ஓடி வந்துவிட்ட ஒருவனை எனக்குத் தெரியும். அது வெறும் பூட்ஸ் பிரச்சனைதானா என்பது அவன் மட்டுமே அறிந்தது. பின்னாளில் அவனைப் பெருங் குடிகாரனாகப் பார்த்தேன். இளமை பறப்பது ஆனால் அது ஊன்றியெழ காலடி நிலம் வேண்டுமல்லவா?

மதம் பிறவியைப் பிணி என்று திரும்பத் திரும்பப் பேசுகிறது. பிறப்பே பாவம் என்கிறது. மாயப்பிறப்பறுக்க வேண்டி இறைவனிடம் மன்றாடுகிறது. நம் பாட்டி பாடுகிறாள்…

அரிது அரிது மானிடராதல் அரிது

*

கவிஞர்கள் அவ்வையும் இசையும்

        2.   பெண்ணைத் துரும்பாக்குவது எப்படி?

அரசிளங்குமரியொருத்தி  இளைஞன் ஒருவன் மேல்  காதல் கொள்கிறாள். அவனை இரவில் ஊருக்குப்  புறத்தே உள்ள மண்டபத்தில் காத்திருக்குமாறு எழுதி ஓலை அனுப்புகிறாள். இளைஞனோ எழுத்தறிவற்றவன். அவன் அந்த ஓலையைக் கொண்டு போய் ஒரு கயவனிடம் காட்டுகிறான். உன் உயிருக்கு பெரிய ஆபத்திருக்கிறது. உடனே ஊரைவிட்டு போய்விடும் படி  அதில் எழுதியுள்ளதாக கயவன் பொய்யுரைக்கிறான். இளைஞன் அஞ்சி நடுங்கி  ஊரைவிட்டு ஓடி விடுகிறான். கயவன் இளைஞனின் வேடமணிந்து இரவில் இளவரசியை அனுபவித்து விடுகிறான். உண்மை அறிய வருகையில் இளவரசி தற்கொலை செய்து கொள்கிறாள். பின் அவள் பேயாகி அந்த மண்டபத்திலேயே இருந்து அவ்வழியே செல்வோரைத் தாக்கத் துவங்குகிறாள். அப்படி  அவ்வையாரையும் தாக்க அவளைப் பார்த்து அவ்வை பாடியதாக சில பாடல்கள் தனிப்பாடலில் உள்ளன. கல்வியறிவை வலியுறுத்தி, ஈகையை வலியுறுத்தி, உழைப்பை வலியுறுத்தி, இல்லறத்தை வலியுறுத்தி பாடல்கள் பாடுகிறார்.  கற்றோர் கயவர்களாக இருப்பது கதையும் வரலாறும் ஆகும்.

சில பாடல்களை வாசிக்கையில் இது அவ்வை பாடியதா என்கிற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. 

கூசி நிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய
வேசியும் கெடும்

என்கிறது ஒரு பாடல் வரி.  குலக்கொடி கூசி தன் கற்பில் நிலைத்து நிற்கவில்லையென்றாலும், வேசி கூசி நின்றாலும் கெட்டொழிவார்கள் என்பது கருத்து. கடைசி வரியில் உண்மை இருக்கிறது. ஆனால் இவ்வளவு அறிவுரைகளை வாரி வாரி வழங்கிய வாயில் இருந்து வந்த சொல் என்பதை நம்ப மறுக்கிறது மனம். கவிகளுக்கு சமயங்களில் சத்தம் ஜம்மென்று விழுந்து விட்டால் போதும். கவிதையை சத்தம் இழுத்துப் போய்விடும் தருணங்களும் இருக்கவே செய்கின்றன. ” கூசிய வேசியின்”  சத்தத்தில் அவ்வையும் மயங்கியிருக்கலாம். அவ்வரியில்  ‘ முரண்’ என்னும் இன்னொரு மயக்கமும் தொழிற்பட்டிருக்கிறது.

 ஆகும் காலம் என்று ஒன்று வந்துவிட்டால் மனிதனுக்கு எல்லா செல்வங்களும் தேங்காயுள் இளநீர் சேர்வது போல வருத்தமின்றி  வந்து சேரும்.  போகும் காலம் வந்துவிட்டாலோ யானை உண்ட விளாங்கனி போல போனதே தெரியாமல்  போய்விடும்.

ஆங்காலம் மெய்வருந்த வேண்டாம் அஃதே தென்னில்
தேங்காய்க் கிளநீர்போற் சேருமே- போங்காலம்
காட்டானை  யுண்ட கனியதுபோல் ஆகுமே
தாட்டாளன் தேடும் தனம்

விளாங்கனிக்கு ஒரு நோய் வருமாம் அதன் பெயரே ‘யானை’.  மேலுள்ள ஓடு அப்படியே இருக்க உள்ளே எதுமே இல்லாமல் போய்விடுமாம்.

‘நிந்தாஸ்துதி’ என்பது இறைவனை நிந்தனையில் துதிப்பது.  காளமேகம் நிந்தாஸ்துதி பாடுவதில் வல்லவர். கடவுளே கையெடுத்துக் கும்பிட்டு நீ துதிக்கவே வேண்டாம் என்று கெஞ்சிடும் அளவு பாடுபவர். நிந்தாஸ்துதி எப்படி வந்திருக்கும்? புகழ்ந்து ஒரு பயனும் இல்லாத எரிச்சலிலிருந்து எழுந்து வந்தததா? வெளிப்படுத்த முடியாத கடவுள் வெறுப்பு வேறு வேடம் புனைந்து வந்ததா? நாயக, நாயகி பாவங்கள் சலித்துப் போன யாரோ ஒருவர் துவங்கி வைத்த தோழமை பாவமா அது? விளையாட்டில்லாத தோழமை ஏது?

அவ்வையும்  நன்னிலத்து ஈசன் மேல் ஒரு நிந்தாஸ்துதி பாடியுள்ளார். அதில் விளையாட்டுண்டு. ஆனால் முழு விளையாட்டல்ல. அதன் கடைசி வரியில் அவ்வை அவ்வையாகி விடுகிறாள்.

மேற்பார்க்க மைந்தரும் மூவா எருதும் விளங்கு கங்கை
நீர்பாய்ச்சலும் நன்னிலமும் உண்டாகியும் நின்னிடத்தில்
பாற்பாக்கியவதி நீங்காதிருந்தும் பலிக்குழன்றாய்
ஏற்பார்க்கு இடாமலன்றோ பெருங் கோயில் இறையவனே!

உழவுத் தொழிலை மேற்பார்க்க உனக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. ஏர்பூட்ட காளை உண்டு. பயிர்களைச் செழிக்க வைக்கும் கங்கையும் உன் வசம் உண்டு. உலகிற்கே அமுதூட்டும் உமையவளும் உன்னில் பாதியாக கூடவே இருக்கிறாள். இவ்வளவு இருந்தும் நீ பிச்சையேற்று அலைந்தது ஏன் தெரியுமா?  உன்னிடம் இரப்போர்க்கு இல்லையென்று மறுத்துவிடும் இரக்கமின்மையால்தான்.

கடவுளின் முன் மனிதனின் மன்றாட்டம் அநேகம்.  கையேந்தி, முழந்தாளிட்டு, தாரை தாரையாய் கண்ணீர் வடித்து , உருண்டு, பிரண்டு, ஊயிரை வருத்தி ,ஊனைச் சிதைத்து…. சமயங்களில் எதற்குமே இரங்குவதில்லை இறை.  நாக்கை அறுத்து உண்டியலில் இடும் போதும் எதுவும் பேசுவதில்லை அது.

உங்களுக்கு ‘தலைக்குறை கமலம்’ தெரியுமா? கமலத்தின் தலையெழுத்தை நீக்கி விட்டால் கிடைப்பது. 

இலக்கணக் கவிஞர் சொல் இன்பம் தேடுவர்
மலக்கு சொற் தேடுவர் வன்க ணாளர்கள்
நிலத்துறுங் கமலத்தை நேரும் வண்டது ஈ
தலைக்குறை கமலத்தைச் சாரும் தன்மைபோல்

வண்டு அழகிய  கமலத்தையே நாடிச்செல்லும். ஈயோ தலைக்குறை கமலத்தில்தான் எப்போதும் சென்று அமரும். அப்படித்தான் இலக்கணம் கற்ற கவிகள் இனிய சொற்களைத்  தேடுவதும்,  மூடன் கலக்கமூட்டும் சொற்களையே நாடிச்  செல்வதும்.

 அவ்வைக்கு அதியமான் நெல்லிக்கனி அளித்த கதை சங்கப் பாடல்களில் உண்டு. இந்த அவ்வையும் அதியன் நெல்லிக்கனி அளித்ததை ஒரு பாட்டில் பாடியுள்ளார். கொடிய எமனின் நாக்கை அறுத்துப் போட்டாய் உன் கொடை குணத்தால் என்கிறார்.

வாளதிகா! வன்கூற்றின் நாவை
அறுப்பித்தாய் யாமலகந் தந்து

  (ஆமலகம்- நெல்லிக்கனி)

 இறைவனை வழிபட   தாய்மொழியே உகந்தது என்று அவ்வை வற்புறுத்தும் பாடலொன்றும் தனிப்பாடலில் காணக்கிடைக்கிறது.

முழுமையெல்லாம் முழுமையல்ல. அழகெல்லாம் அழகல்ல. முழுமை போல் தெரிவது சமயங்களில் குறை.  குறை போல் தோன்றுவது சமயங்களில் குணம். ஒன்றுமில்லாத இடத்தில் நிறைந்திருக்கும் ஒன்றை காட்டுகிறாள் அவ்வை

ஒரு உலோபியின் வாழை இனித்துப் பழுத்து நிற்கிறது.  திருக்குடந்தையில் வாழும் மருதன் என்பவனின் வாழையைப் பாருங்கள்!  அதில் இலையுமில்லை, பூவுமில்லை, காயுமில்லை.

திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கும்
மருத்தன் திருக்குடந்தை வாழை – குருத்தும்
இலையுமிலை பூவுமிலை காயுமிலை என்றும்
உலகில் வருவிருந்தோடு உண்டு.

ஒருவரைப் புகழ்பாடிப் பரிசில் பெற்று வாழும் புலவர் வாழ்வில் பொய் பேசத்தான் வேண்டியிருக்கும். பசி வந்தால் யாவும் பறந்து போய்விடும். உண்மை, நேர்மை , உறுதி  எதுவும் அதன் முன் நிற்காது. தகுதியற்ற ஒருவனைப் பாட மாட்டேன் என்று ஒரு பாடலில்  கர்வம் காட்டும் அவ்வை இன்னொரு பாடலிலோ தன் தவறுகளாகப்  பலவற்றைப் பட்டியலிடுகிறாள். ஒருவர் தன் நெஞ்சிற்கு மறைந்து எங்கு போய் ஒளிந்து கொள்ள முடியும்?

கல்லாத ஒருவனை யான் கற்றாய் என்றேன்
காடேறித் திரிவானை நாடா என்றேன்
பொல்லாத ஒருவனையான் நல்லாய் என்றேன்
போர் முகத்துக் கோழையை யான் புலியே றென்றேன்
மல்லாரும் புயமென்றேன் தேம்பற்  தோளை
வழங்காத கையனை யான் வள்ளால் என்றேன்
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே!

அவனிடம் இல்லாத பலவற்றையும் நான் அவன் மேல் ஏற்றிப் பாடினேன் எல்லாவற்றையும் கேட்டு விட்டு அவனும் ‘ இல்லை’ என்று சொல்லி என்னை திருப்பி அனுப்பிவிட்டான் .

பொய்யிற்கும் புலவருக்குமான உறவை அவ்வையே ஒரு பாடலில் பாடுகிறார்.

 பொய் ஆயத்துறையில் பிறக்கிறது. அந்தணர் பால்குடித்து அது வளரத் துவங்குகிறது. மாயக்கண் வேசையிடம் மேலும் வளர்கிறது. வண்ணாரிடம் போய் மேலும் வளர்ந்து, புலவரின் நாவில் அது  தொடர்ந்து வளர்கிறது. செட்டியிடம் வெகுகாலம் வளர்ந்துவிட்டு பிறகு  அக்க சாலையில் போய் புகுந்து கொள்கிறாள் பொய் மகள்.

அக்கசாலை என்பதற்கு உலோக வேலைகள் செய்யும் இடம், பொன் வேலை செய்யும் இடம், தானிய சாலை, மருத்துவமனை , நாணயச் சாலை என்று பல்வேறு பொருள்களைச் சொல்கிறது அகராதி. பொய் இல்லாத இடமில்லை என்பதால் எல்லாமும் பொருந்திப் போகிறது.

ஆயத் துறைப்பிறந்து அந்தணர் பால்குடித்து ஐயிருநாள்
மாயக்கண் வேசை யிடத்தே வளர்ந்து வண்ணானொரு நாள்
ஏய புலவரிடத் தெட்டுநாள் செட்டி ஏன் என்றபின்
போய் அக்கசாலை புகுந்தனள் காண் அந்தப் பொய் மகளே .

‘ஐவேல் அசதி’  என்கிற வள்ளலைப் போற்றிச் சில பாடல்களை பாடியுள்ளாள். அவனது நிலத்தில் நிகழும் காதல் காட்சிகளாக அவை விரிகின்றன.  ஒரு தாய் ‘ உடன் போக்குப்’ போன தன் மகள் நடந்து சென்ற  பாதையின் கொடுமையை எண்ணி வருந்திப் பாடுவதாக அமைந்துள்ளது ஒரு பாடல்.

அற்றாரைத் தாங்கிய வைவேல் அசதி அணிவரைமேல்
முற்றா முகிழ்முலை யெவ்வாறு சென்றனள் முத்தமிழ் நூல்
கற்றார் பிரிவுங் கல்லாதவர் ஈட்டமும் கைப்பொருள்கள்
அற்றார் இளமையும் போலே கொதிக்கும் அருஞ்சுரமே

 கதியற்றவர்களைத் தாங்கிப் பேணும் அசதியின்  மலைமேல் வாழும் முகிழ் முலையுடைய எம் இளமகள்,  ஐயோ! இந்தப் பாலை வழியிலா நடந்து சென்றாள்?  இது கற்றறிந்த சான்றோரின் பிரிவைப் போல, கல்லாத மூடர்களின் பெருக்கம் போல, கைப்பொருள்கள் ஒன்றுமற்ற இளமையைப் போல கொதி கொதிப்பதல்லவா?

ஒரு காதலி காதலனோடு ஊடிக் கொண்டு அவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருக்கிறாள். புணர்ச்சி ஆவலில் தகிக்கும் காதலன்  அவள் ஊடல் தீர்க்கப்  பாடியது…

அறங்காட்டிய கரத்து ஐவேல் அசதி அகன் சிலம்பில்
நிறங்காட்டுங் கஞ்சத் திருவனையீர் முக நீண்ட குமிழ்த்
திறங்காட்டும் வேலும் சிலையும் கொல்யானையும் தேருங்கொண்டு
புறங்காட்டவும் தகுமோ சிலைக் காமன் தன் பூசலிலே?

(நிறம்- முதுகு,  கஞ்சத் திருவனையீர்- தாமரையில் தங்கியிருக்கும் திருமகளைப் போன்றவ முக வடிவுடையவளே )

உன்னிடம் என்ன இல்லை? கண்ணில் வேல் இருக்கிறது. புருவத்தில் வில் இருக்கிறது. முலைகளில் கொல்லும் யானை இருக்கிறது. அல்குலில் தேர் இருக்கிறது. இவ்வளவு இருந்தும் இந்தக் காமனின் பூசலில் தோற்று நீ புறமுதுகு காட்டுவது தகுமோ?

யார் யாருக்கு எது எது துரும்பு என்று ஒரு பாடலில் பாடுகிறாள் அவ்வை..

போந்த ஊதாரனுக்குப் பொன் துரும்பு சூரனுக்குச்
சேர்ந்த மரணம் சிறுதுரும்பு- ஆய்ந்த
அறவோர்க்கு நாரியரும் துரும்பாம் இல்லத்
துறவோர்க்கு வேந்தன் துரும்பு

கவிஞர் இசை

வள்ளலுக்குப் பொன் துரும்பு. வீரனுக்கு மரணம் சிறு துரும்பு. இல்லறத்தைத் துறந்து விட்ட துறவிக்கு நாடாளும் வேந்தனும் துரும்பு. ஆயந்து தெளிந்த அறவோர்க்கு அழகிய பெண் கூட துரும்புதான்.

கடவுளே! நீர் மட்டும் என்னை ஒரு “ஆய்ந்த அறவோனாகப்” படைத்திருந்தால், அந்த மன்மதனை நான் விரட்டி விரட்டிக் கொன்றிருக்க மாட்டேனா?

கட்டுரையின் தலைப்பை வாசித்துவிட்டு கடைசியில் நமக்கும் ஒரு நல்வழி கிடைத்துவிட்டது என்கிற நம்பிக்கையோடு இதுவரையும் வந்துவிட்ட வாசகா! வந்த வழியே திரும்பிச் செல்!

*

ஒளவையார்: தமிழ்விக்கி

கவிஞர் இசை: தமிழ்விக்கி

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *