தடயங்கள் – கமலதேவி

(அம்பையின் துப்பறியும் கதைகளை முன்வைத்து)

அம்பை

துப்பறியும் கதைகளை வாசிக்கும் போது நமக்கு உலகம் முழுவதுமே தடயங்களால் ஆனது தானோ என்று தோன்றும். தொல்படிமங்கள், எச்சங்களில் இருந்து பாறை ஓவியங்கள், நடுகற்கள் ,கோவில்கள் என்று அனைத்தும் ஒருபார்வையில் தடயங்களும் கூட. தனியளவில் நாமே கூட ஒரு தடயம். நம் மரபணு எவ்வளவு பெரிய உயிரியல் தடயம். தடயம் என்பது அடையாளம் காணுதல் என்றும் பொருள்படுகிறது.

இலக்கியத்தை உளவியல் தடயங்களாக உயிரியல் துறை எடுத்துக்கொள்ளும். விட்டுச்செல்லுதல் ஒரு முனையில் கலையாகவும், அடையாளமாகவும், நிலைநிறுத்திக் கொள்ளுதலாகவும் இருக்கும் போது இன்னொரு முனையில் அதுவே குற்றப் பின்னணியில் தடயங்களாக ஆகிறது. நான் முதன்முதலில் வாசித்த க்ரைம் நாவலின் வரி இன் னும் நினைவில் இருக்கிறது. பம்பாய்க்கு பத்தாவது மைலில் என்று அந்தக்கதை தொடங்கியது. என்னளவில் சிறுவயதில்  க்ரைம்புத்தகங்கள் ஒரு வரண்ட தன்மையை கொண்டதாகத் தோன்றும். வீட்டில் ஒருகட்டத்தில் குவிந்த க்ரைமிலிருந்து ஒதுங்கிக்கொண்டேன். கொரானா ஊரடங்கின் போது மறுபடியும் நிறைய துப்பறியும் கதைகளை வாசித்தேன்.

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு, சாரஸ் பறவையின் மரணம் என்ற இரண்டு துப்பறியும் கதைத்தொகுப்புகளை அம்பை எழுதியுள்ளார். சுதா குப்தா என்ற துப்பறியும் கதாப்பாத்திரத்தின்  துப்பறியும் அனுபவங்களின் கதைகள் இவை. இரண்டு தொகுப்புகளையும் சேர்ந்து வாசித்தால் ஒரு துப்பறியும்நாவல் போன்ற வாசிப்பனுபவத்தை தருகிறது. தனித்தனி கதைகளாகவும் முழுமையான கதைகள்.

சுதாகுப்தா அவர் உதவியாளர் டெய்சி, கணவர் மகள் அருணா, சமையல் வேலை செய்யும் செல்லம்மாள் ,அவரின் மகள் மல்லிகா, காவல் துறை அதிகாரி கோவிந்த் செல்க்கே, சுதா குப்பதாவின் எண்பது வயது குரு வித்யாசாஹர் ராவ்தே மற்றும் பம்பாயின் தாராவி, அந்தேரி மேம்பாலத்து ரயில் நிலையம், சுற்றியுள்ள சில கிராமங்கள், லவங்கப்பட்டை தேநீர் போன்றவையே அனைத்துக் கதைகளின் மையமாக உள்ளன. இரண்டு கதைகள் வாசித்தப்பின்  நமக்கு கதைக்களம், கதாப்பாத்திரங்கள்  இயல்பாகி விடுகிறார்கள். வேறுபட்ட சமூக மனிதர்கள்,அவர்களின் பழக்கவழக்கங்கள் இந்தக்கதைகளில் பலம். கதை வர்ணனையில் மும்பையின் பழைய ஓவியம் போன்ற காட்சியனுபவங்கள் மனதிற்கு நெருக்கமாகிறது. உதாரணமாக மும்பையின் சேபல் தெருவை வர்ணிக்கும் இடம் இலக்கியத்திற்குரியது.

குடும்பத்தில் உள்ள சக குடும்ப நபர்களை வேவு பார்ப்பது, வியாபாரக்கூட்டாளிகளை வேவு பார்ப்பது, காதலர்கள் தங்களுக்குள் ஒருவரைப் பற்றி இன்னொருவர் வேவு பார்ப்பது,கணவன் மனைவி பரஸ்பரம் வேவு பார்ப்பது என்று இந்த அனைத்துக்கதைகளிலும் உள்ள துப்பறிதல்கள் குடும்பங்களுள் உறவுகளுள் நெருக்கியவர்களுள் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிப்பதாக உள்ளது. சில கதைகளுக்கு குற்றங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தமுடியாது. புதிரான நடவடிக்கைகளை பின் தொடர்தலாக இருக்கிறது.

முதல் கதையான மைமல் பொழுது கடற்கரையில் காணாமல் போன மூன்று சிறுமிகளைப் பற்றிய கதை. காகித கப்பல் செய்பவன் என்ற கதை கவித்துவமான கதை. துப்பறியும் கதையில் எப்படி கவித்துவம் வர முடியும் என்று கேட்கலாம். ஆனாலும் அது அப்படியான வாசிப்பு அனுபவமாகவே இருந்தது.

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு என்ற கதை அறுபது வயது மௌசிஜீயின் சிக்கல் பற்றியது.250 சதுர அடி அறை என்ற கதை பெண்தன்மை சார்ந்த உளவியலை அடிப்படையாகக் கொண்டது. இந்தக்கதையில் வரும் விட்டலா பற்றிய பாடல்கள் வாசிப்பர்களை  குழையச்செய்பவை. பூவடிச்செதில் என்ற கதையும், மைமல் பொழுதும் வக்கிர உளவியலை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

அனைத்து கதைகளிலும் இருந்தும்  பன் மஸ்காவுடன் இரானி சாய் என்ற கதை விலகி நிற்கிறது .

இந்தக்கதைகளில் சாகசங்கள் எதுவும் இல்லை. கலைந்த நூல் கண்டின் நுனியை தேடிப்பிடித்து சீராக சுற்றி அடுத்த நுனியை கண்டுபிடிப்பது போல கதைகள் நிதானமாக நகர்கின்றன. முன்னர் குறிப்பிட்ட இரண்டு கதைகளைத் தவிர மற்றக்கதைகளில் குற்றத்தை விட மனித இயல்புகள் சார்ந்த கவனம் உள்ளது. குற்றத்திற்கு பின்னுள்ள உளவியல் அனைத்துக் கதைகளிலும் உள்ளது. எல்லா குற்றவாளியும் ஒரு காரணம் வைத்திருப்பான்[ள்]. மைமல் பொழுது மற்றும் ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம் என்ற இரு கதைகளுக்கும் பின்னுள்ள குற்றமனம் மன்னிக்கமுடியாத பிறழ்வாக உள்ளது. மற்றக் கதைகளில் சந்தர்ப்பவசத்தால் செய்யப்படும் பிழைகளும் அதன் பின்னணியும் விசாரிக்கப்படுகிறன.

ஒரு குடும்பத்தில் ஒருவர் திருநங்கையாக மாறிவிடுகிறார். அவரை வீட்டை விட்டு வெளியேற்றியப்பின் அதை மறைக்க தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எய்ட்ஸ் உள்ளது என்ற புறளியை குடும்பத்து பெண் பரப்புகிறார்.  திருநங்கையரில் மற்றொரு பிரிவாக ஜோகப்பாக்கள் என்பவர்கள் இருக்கிறார்கள்.  அந்த மாறுபட்ட பாலுணர்வுடன் இருக்கும் குடும்ப நபரை ஏற்று கொள்வதற்கு தயங்கும் அம்மா அதற்கு பதிலாக ஒழுக்கம் சார்ந்த பிறழ்வால் ஏற்படும் எய்ஸ்ட்ஸ் நோய் என்ற புரளியை ஏற்றுக்கொள்கிறார். இலக்கியம் சார்ந்த ஈடுபாடு கொண்ட வரனை வேவு பார்க்கும் கதை ஒன்றுள்ளது. கடைசியில் அவனை வேவு பார்த்து அறிக்கை தயாரிக்கும் ஸ்ட்டைல்லாவிற்கே அவனை பிடித்துவிடுவது அழகிய திருப்பம்.

அறுபது வயது மௌசிஜி தன் பிறந்த ஊருக்கு சென்று வாழ விரும்புகிறார். அதற்காக தன் நகைகளை விற்று வாங்கிய வீட்டில் தன் பங்கு பணத்தை கேட்கிறார். அதை மறுக்கும் மகன்கள் அவரை ஒரு மனநோயாளியாக சித்தரித்து மருத்துவசான்றிதழ் வாங்க முற்படுகிறார்கள். இந்தக்கதையில் மனித மனத்தின் புரிதலின்மையும் சுயநலமும் வேவு பார்க்கப்படுகிறது. இறுதியில் மௌசிஜி‘ஒருவர் குடும்பத்தை வெறுத்து உறவுகளை வெறுத்து தான் விலக வேண்டும் என்று எதாவது இருக்கிறதா..கடமைகள் முடிந்தப்பின் தன் கனவுகள் நோக்கி செல்லக் கூடாதா’ என்று கேட்பார். குடும்ப சொத்துகளில் உண்டாகும் குற்றநடவடிக்கைகள் மூன்று நான்கு கதைகளில் உள்ளன. கணவனுக்கு தெரியாமல் மனைவி ,அம்மாவுக்கு தெரியாமல் பிள்ளை என்று சொத்தை அபகரிக்கும் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதன் மூலம் ஒரு ஜனத்திரளின் அடிப்படை மனப்பான்மை, நம்பிக்கையின்மையை அம்பை எடுத்து வைக்கிறார்.

குழந்தை வன்முறை இரண்டு கதைகளில் புலனாய்வு செய்யப்படுகிறது. இரண்டுமே கூடுதலான வன்மம் கொண்ட குற்றங்கள் உள்ளக் கதைகள். ஒன்று சொந்த வீட்டாரால் செய்யப்படும் வன்முறை. அது குழந்தைகளை தற்கொலைக்கு தள்ளுவதையும், வெளியில் யாரிடமும் சொல்லத்தெரியாத குழந்தைகளின் மனஅழுத்தம் சார்ந்த அணுகுமுறை கதைகளில் உள்ளது. மேலும் அந்த குற்றவாளியின் ஆதார குணஇயல்பை சென்று தொடுகிறது. அவன்[அவள்] திடீரென்று உணர்ச்சி வயப்பட்டு செய்யும் குற்றங்கள் அல்ல அவை. அவர்களின் குணஇயல்பே ,பிறப்பின் சாரமே குற்றம்புரியும் இயல்பாக இருக்கிறது. திட்டமிட்டு தெரிந்தே செய்யப்படுபவை. சுயநலமானவை. மனத மனங்களின் இருளில் பயணிக்கும் கதைகளாக இவற்றை சொல்லலாம்.

இந்த அனைத்துக்கதைகளிலும்  அழகான ஒரு பெண் உலகம் உள்ளது. சுதா குப்தா, உதவியாளர் ஸ்ட்டெல்லா , செல்லம்மாள், சுதாவின் மகள் அருணா என்று ஒரு குழு. அனைத்துக் கதைகளிலும் இவர்கள் இருக்கிறார்கள்.

 பதட்டங்களோ, பெரிய அவசரங்களோ இல்லாமல் சுவாரஸ்யமாக அம்பையால் கதை சொல்ல முடிந்திருக்கிறது. கதைகள் இறுதியில் நம் மனதை கனக்க செய்பவை. காவல் அதிகாரி கோவிந்த் செல்கேவின் தோளில் சாய்ந்து அழும் திருநங்கை நம்மை கேள்வி கேட்பவளாக இருக்கிறாள். குற்றம் எங்கே தொடங்குகிறது என்பதற்கான கதையாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். ஒருவரை ஒதுக்குவதும்,தனிமைப்படுத்துவதும் எத்தனை பெரிய குற்றச்செயல்.

இந்தக்கதைகளில் வழியே பழங்குடி பெண்களின் கல்விசார்ந்த சிக்கல்கள்,கிராமத்து விவசாய வாழ்க்கை,பம்பாயின் தாராவி வாழ்க்கை,அந்தரி மேம்பாலத்து பகுதி வாழ்க்கை என்று பலவித வாழ்க்கை முறையில் உள்ளவர்கள் சுதா குப்தாவின் அறிக்கைகளில் பதிவாகிறார்கள். இந்தக்கதைகளில் பதிவாகியுள்ள மும்பை சித்திரம் அழகானது. சுதாகுப்தா பள்ளி வயதில் தன் தோழியை பின் தொடர்ந்து சென்று அவள் கல்லூரிக்கு அடிக்கடி வராமல் என்ன செய்கிறாள் என்பதை கண்டுபிடிக்கிறாள். எதற்காக அதை செய்கிறாள்? என்ன காரணம்? என்பது அவளை ஏற்றுக்கொள்ள வைக்கிறது.

சிறுவயதில் இருந்தே சுதா குப்தாவிற்கு புலனாய்வு செய்வது இயல்பாகவே மிகவும் பிடித்துள்ளது. அவளிடம் மனிதர்களின் நடவடிக்கைகள் பற்றிய ஆர்வம் எப்போதும் இருக்கிறது. தன்னிடம் வரும் வேலைகளை செய்யவே நேரம் போதாத போது ரயில் நிலையத்தில் தனியே அமர்ந்திருக்கும் ஒரு அறுபது வயது பெண்ணை கவனித்து இங்கே அவளை தனியே விட்டு செல்லக்கூடாது என்ற கவனம் உள்ளவளாக இருக்கிறாள். மனிதர்கள் பற்றிய அந்த கவனமே அவளின் பலமாக இருக்கிறது. சுதா குப்தாவிற்கு குற்றங்கள் மீதான கவனத்தை விட மனிதர்கள் நடவடிகைகள் மீதான கவனமே அவள் ஒரு டிடெக்டிவ்வாக இருக்க காரணமாக இருக்கிறது.

சுதா குப்தா தன்னை காதலிப்பவனைக்கூட அப்படித்தான் கண்டுபிடிக்கிறாள் என்பது சுவாரஸ்யமானது. அவளின் உதவியாளரும் தன் உளவு வேலையில் ஒரு பகுதியாக வந்து சேரும் ஒருவனையே மணந்து கொள்கிறாள்.

இந்தப்புலனாய்வுக்கதைகளில் இறுதியாக உள்ள பன் மஸ்க்காவுடன் இரானி சாய் என்ற கதை முக்கியமானது. எவ்வளவு புலனாய்வு செய்தும் சில சமயங்களில் மனித மனங்களில் ஆழத்தை கண்டுபிடிக்க முடியாது ஒரு டிடெக்டிவ் அயரும் தருணம் கொண்ட கதை இது. இந்தக்கதை மனித மனதினன சுயநலத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது. குற்றங்கள் தொடங்கும் இடங்களில் ஒன்று.

நாம் புனிதப்படுத்தும் உறவுகள் இந்தப்புலனாய்வுக் கதைகளில் சிதறிப்போகின்றன. முக்கியமாக பெற்றோர் குழந்தைகளுக்குள் உள்ள உறவின் சிதைவுகள் மையமாக உள்ளன. கைவிடுதல்,அபகரிப்பு இரண்டு பக்கமுமே நடக்கிறது. குற்றத்திற்கான சாத்தியங்கள் எங்கும் நுண்ணுயிர்கள் போல நிறைந்துள்ளன. இவையும் குற்றங்கள் தான் என்று அம்பை சுட்டும் இடங்கள் முக்கியமானவை.

எழுத்தாளர் கமலதேவி

துப்பறியும் கதைகள் காலத்தால் பழையதாகிவிடும் தன்மை கொண்டவை. படிக்கப்படிக்க சுவாரஸ்யம் குறைவதும் அதனால்தான். ஆனால் புலனாய்வு கதைகள் மனிதநேயத்தை,மனித இயல்புகளை ஆராயும் போது அவை காலத்தால் பழையதாகாமல் இலக்கியத்தன்மை பெறுகின்றன.

*

எழுத்தாளர் அம்பை: தமிழ்விக்கி

எழுத்தாளர் கமலதேவி: தமிழ்விக்கி

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *