சரஸ்வதியும் அவளது இணைத்தோழிகளும் – ஸ்ரீ அரவிந்தர்
(தமிழில்: தாமரைக்கண்ணன் அவிநாசி மற்றும் அனங்கன்)
நீலி இதழில் வெளிவரும் பெண் தெய்வங்கள் கட்டுரைத் தொடர் வரிசையில் ஆனந்தகுமாரசாமியின் ஸ்ரீலஷ்மி, நித்ய சைதன்ய யதியின் துர்கை கட்டுரைகளைத் தொடர்ந்து இக்கட்டுரை வருகிறது.
ஸ்ரீ அரவிந்தர் எழுதிய “The Secret of Veda” நூலில் உள்ள “Saraswati and Her Consorts” பகுதியில் இருந்து சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வேதத்தில் உள்ள தெய்வங்களை புறவயமாக மேற்கத்திய அறிஞர்கள் அணுகினர். இவைசார்ந்த நூல்களே பெரும்பாலும் நமக்கு கிடைக்கிறன. அரவிந்தர் அவற்றை அகப்படிமமாக அணுகுகிறார். இந்த கட்டுரையில் சரஸ்வதி தேவியை அவ்வாறு அணுகுவதைக் காணலாம். மேற்கத்திய பார்வையை அரவிந்தர் முழுக்க நிராகரிக்கவில்லை. தன்னுடைய பார்வையை துணைக்கருதுகோளாக முன்வைக்கிறார். இதை விரிவாக இந்த நூலின் முதல் நான்கு பகுதிகளில் விரிவாகப் பேசுகிறார். முதல் பகுதியின் மொழிபெயர்ப்பு ‘புதிரும் தீர்வும்’குருகு இதழில் வெளிவந்துள்ளது. இதையும் வேதக்கடவுள்கள் பற்றிய பொதுவான அறிமுகத்திற்கு மோனியர் வில்லியம்ஸின் நூலில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட ‘வேதக் கடவுள்கள்’ கட்டுரையை வாசிக்கலாம்.
– தாமரைக்கண்ணன் அவிநாசி
*
சரஸ்வதியும் அவளது இணைத்தோழிகளும் – ஸ்ரீ அரவிந்தர்
வேதத்தின் குறியீட்டு அமைப்பு சரஸ்வதி தேவி மீது கொண்டுள்ள தெள்ளத்தெளிவான தன்மையால் தன்னைத்தானே காட்டிக் கொடுத்துவிடுகிறது. பிற கடவுள்களில் அவற்றின் மனிதஅகம் சார்ந்த பண்புக்கும், புறஇயற்கை சார்ந்த வடிவிற்கும் இடையில் வேறுபாடு நன்கு பேணப்பட்டிருக்கும். சில சமயம் அவை இரண்டிற்குமான வேறுபாடு மிக மெல்லியதாக இருக்கும். வேதப்பாடல்களின் வரிகளை மிகச்சாதாரணமாக கேட்கும் ஒருவரே அந்த வேறுபாட்டை உணர்ந்துகொள்ளும் வகையில் இருக்கும். எனினும் அந்த வேறுபாடு முழுவதுமாக நீக்கப்பட்டிருக்காது. உதாரணமாக, அக்னி வேள்வித்தீயின் மனிதப் பண்பேற்றப்பட்ட உருவகமா அல்லது வஸ்துக்களில் இருக்கும் வெப்பம் மற்றும் ஒளி ஆகிய புறவயத்தன்மைகளா என ஒருவருக்கு சந்தேகம் ஏற்படலாம். இந்திரன் வான் மற்றும் மழையின் கடவுளா அல்லது புறவயமான ஒளியா என்றும், வாயு காற்றிலுள்ள தெய்வீகத்தன்மையா அல்லது வாழ்விற்கு அவசியமான புறவய சுவாசமா என்றும் குழம்பாமல் இருக்க முடியாது. இரண்டாம்நிலை தெய்வங்களுக்கும் இது பொருந்தும். உதாரணமாக, வருணன் ரோமின் நெப்டியூன் போல கடலின் தெய்வம் மட்டுமல்ல, அறச்செயல்பாடுகள் புரிபவரும் கூட. மித்ரனும் பகாவும் இதே அகவயப்பண்புகள் கொண்டவர்கள். ரிபுக்கள் உளத்தால் வஸ்துக்களை உருவாக்கி அழியாமையை கட்டமைப்பவர்கள். இவை எல்லாவற்றிற்கும் ஒற்றைப்படையாக புறஇயற்கை சார்ந்த தொன்மத்தை மட்டும் பொருத்தி, ப்ரோக்ரஸ்டஸ் (Procrustes) அளவீட்டை போட்டு அவற்றை நசுக்கிவிடமுடியாது. இதை அறிந்து கடக்கவில்லை என்றால், வேதப்பாடல்களில் குழப்பமான கருத்துக்கள் உள்ளது என அவற்றை எழுதிய கவிகள் மீது குற்றம்சாட்டிக்கொண்டேதான் இருக்கவேண்டி வரும். எனினும், சரஸ்வதி இந்தவகையான குழப்பத்திலோ குற்றச்சாட்டிலோ சிக்கிக்கொள்ளமாட்டாள். அவள் மிகத்தெளிவாகவே வாக்’கின் தேவி, தெய்வீகமான படைப்பூக்கத்தின் இறைவி.
இதிலிருந்து, ”வேத ரிஷிகள் புறஇயற்கை சார்ந்த பண்படாத மக்கள் அல்ல. அவர்கள் ஆழமான அகவயமான கருத்துக்களை கொண்டிருந்தனர். அவற்றைக் கொண்டு தொன்மக் குறியீடுகளை படைத்துள்ளனர். அந்த குறியீடுகளில் அவர்களின் விவசாயம், மேய்ச்சல், திறந்தவெளி போன்றவை அடங்கிய இயற்கைசார் வாழ்க்கை மட்டும் பிரதிபலிக்கவில்லை, மனம் மற்றும் ஆன்மாவின் இயக்கங்களும் உள்ளன” என்ற வெளிப்படையான உண்மையை அடைய வெகுதூரம் செல்லவேண்டியதில்லை. மேலும் இது ”தொல்மத சிந்தனைகளின் வளர்ச்சி புறத்தில் இருந்து ஆன்மீகம் நோக்கிய வளர்ச்சி, அதாவது முழுக்க முழுக்க புறஇயற்கையில் இருந்து படிப்படியாக இயற்கை, உலகம், கடவுள்கள் என அறம் மற்றும் அகம் நோக்கிய வளர்ச்சி” என்ற பார்வை அவ்வளவு உறுதியானதல்ல என்பதையும் காட்டுகிறது. வேத கவிகள் ’புறஇயற்கை சார்ந்த கடவுள்கள்’ என்பதில் இருந்து ’ஆன்மீகமாகவும் அறரீதியாகவும்’ சற்றேனும் முன்னேறியுள்ளனர் என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆனால் சரஸ்வதி படைப்பூக்கத்தின் கடவுள் மட்டுமல்ல. அவள் ஏழு நதிகளில் ஒருவள். இப்போது ஒரு கேள்வி எழுகிறது. எவ்வாறு சரஸ்வதி நதியுடன் அடையாளப்படுத்தப்பட்டாள், அதன் தோற்றுவாய் எது? எவ்வாறு அந்த இரண்டு கருத்துக்களுக்குமான தொடர்பு வேதப்பாடல்களிலேயே காணப்படுகிறது? இன்னொன்றும் உள்ளது, சரஸ்வதி முக்கியமானவள் தான், அதேசமயம் அவள் தன் இணைதோழிகளுடன் கொண்டுள்ள தொடர்பும் அதே முக்கியத்துவத்தை உடையது.
ஒரு நதிக்கும் கவித்துவமான படைப்பூக்கத்திற்குமான தொடர்பு கிரேக்க தொன்மத்திலும் உள்ளது. ஆனால் ’மியூஸ்’கள் என்ற அந்த பெண் கடவுள்கள் நதிகளாக கருதப்படவில்லை. அவர்கள் ஒரு குறிப்பிட்ட மண்ணுலக ஒழுக்குடன் சற்று தெளிவிலாத வகையில் இணைந்துள்ளனர். அந்த ஒழுக்கு ஹிப்போக்ரீன் (Hippocrene) நதி ஆகும். அது புரவி ஊற்று என்றும் அழைக்கப்படுகிறது. தெய்வீக குதிரையான பெகசஸ்சின் குளம்பிலிருந்து ஊற்றெடுத்தது என்ற தொன்மத்தால் இந்த பெயர் பெற்றது – ’பெகசஸ் தன் குளம்பால் மலையிலிருந்த ஒரு பாறையை அடித்தது. அடித்த இடத்திலிருந்து படைப்பூக்கத்தின் நீர் பீறிட்டு வெளியேறியது.’ இது வெறுமொரு கிரேக்க கதை மட்டும்தானா அல்லது குறிப்பிட்ட அர்த்தம் எதாவது உள்ளதா? இதற்கு அகம்சார்ந்த அர்த்தம் உள்ளது. ஏனென்றால் இது படைப்பூக்க நீரின் பிறப்பு என்ற அகவயமான நிகழ்வை தெளிவாக சுட்டுகிறது. இது நிச்சயமாக புறவய வடிவங்களை அகவய உண்மைகளுக்கு போட்டு விளக்கிப்பார்த்த முயற்சியாக இருக்க வேண்டும். ’பெகசஸ்’ என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். அதை ஆரிய மொழி ஒலிப்பில் ஒலிபெயர்ப்பு (transliterate) செய்தால் ’பாஜஸ’ (Pajasa) என வருகிறது. இது வெளிப்படையாகவே சமஸ்க்ருதத்தின் ‘பாஜஸ்’ என்ற சொல்லுடன் தொடர்புடையது. ‘பாஜஸ்’ என்றால் விசை, ஆற்றல், இயக்கம் என்று பொருள். சிலசமயம் நிலையானது, அடிப்படையானது என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. கிரேக்கத்தில் அது ’பேகீ’ (pege) என்ற வார்த்தையுடன் தொடர்புடையது. இதற்கு ஒழுக்கு (Stream) என்று பொருள். ஆகவே இந்த தொன்மம் படைப்பூக்கத்தின் ஆற்றல்மிக்க இயக்கம் அல்லது ஒழுக்கு என்ற படிமத்தை காட்டுகிறது.
வேதத்திற்கு வந்தால் அங்கு அஶ்வம் கணப்பொழுதும் மாறும் மகத்தான வாழ்வாற்றல் மற்றும் உயிராற்றலின் படிமமாக உள்ளது. மேலும் பிரக்ஞையை குறியீடாக்கும் படிமங்களுடனும் அஶ்வம் எப்போதும் இணைந்திருக்கும். அத்ரி என்ற மலை அல்லது பாறை இயல்பான இருப்பின் குறியீடு, குறிப்பாக புறஇயற்கையின் குறியீடு. அந்த மலை அல்லது பாறை மீதே சூரியனின் புரவிகள் கட்டவிழ்க்கப்பட்டு, நீரொழுக்கம் ஊற்றெடுக்கிறது. மது, தேன், சோமம் ஆகியவையும் அந்த மலை அல்லது பாறையில் இருந்தே ஊற்றெடுத்து ஒழுகுகின்றன. ஆகவே புரவிக்குளம்பால் அடிக்கப்பட்ட பாறையிலிருந்தே படைப்பூக்கத்தின் நீர் ஊற்றெடுக்கிறது என்பது மிகத்தெளிவாகவே ஒரு அகவய படிமமாகும். ஆகவே தொல் கிரேக்கர்களும், இந்தியர்களும் அகவய அவதானிப்புகள் செய்யவதற்கு அல்லது அவற்றை கவித்துவமான மற்றும் மறைஞான படிமங்களாக பயன்படுத்துவதற்கு திறனற்றவர்கள் என சொல்வதற்கு எந்த காரணமும் கிடையாது. இவைகளே தொல் அறிதல்களும் ரகசியங்களும் நிகழ்ந்த உடல்.
பெகசஸ் மீதேரி சவாரி செய்பவனும் பெல்லரஸைக் கொன்ற வீரனுமான பெல்லெரோஃபோனுக்கும், வேதத்தில் ஒளியை தனக்கா மறைத்து வைத்துக்கொண்ட வலா’வை கொன்ற இந்திரனுக்கும் தொடர்பில்லையா என்று நாம் நிச்சயம் பார்க்கவேண்டும். ஆனால் இது இந்த கட்டுரைக்கு வெளியே சென்றுவிடும். பெகசஸ் தொன்மத்திற்கு அளிக்கப்பட்ட இந்த விளக்கம் பண்டைய மனிதர்களின் கற்பனையில் நிகழ்ந்த இயல்பான திருப்பத்திற்கும், எவ்வாறு அவர்கள் படைப்பூக்கத்தின் ஒழுக்கை நீரின் ஒழுக்குடன் இணைத்தார்கள் என்பதற்கும் நம்மை இட்டுச்செல்கிறது. சரஸ்வதி என்றால் ஒழுக்கால் ஆனவள், ஒழுகும் தொடர் இயக்கம் என்று பொருள். ஆகவே இயல்பாகவே சரஸ்வதி என்பது ஒரு நதிக்கும், படைப்பூக்கத்தின் இறைவிக்குமான பெயராகிறது. ஆனால் எந்த சிந்தனை அல்லது இணைவு முறையால் படைப்பூக்கத்தின் நதி என்ற பொதுவான கருத்து ஒரு குறிப்பிட்ட மண்ணுலக ஒழுக்குடன் இணைந்தது? இயல்பாகவும் தொன்மரீதியாக பார்த்தாலும்கூட அந்த மண்ணுல நதி வேறெதையும் விட புனிதமான கருத்தான படைப்பூக்கத்துடன் துல்லியமாக இணைவதைக் காணலாம். எனினும் வேதத்தில் இந்த கேள்வி அந்த ஒரு நதிக்கு மட்டுமானதல்ல, ஏழு நதிகளுக்குமானது. ஏழு நதிகளும் எப்போதும் ரிஷிகளின் மனதில் ஒன்றாக இணைந்தே இருந்துள்ளது. இந்த ஏழு நதிகளுடைய ஊற்றின் மீது சுருண்டு படுத்து அவற்றின் ஒழுக்குக்கு தடையாக இருந்த பாம்பை இந்திரன் தன் மின்னாலால் தாக்கிய போது அவை ஏழும் ஒரேசமயம் விடுவிக்கப்பட்டன. இந்த ஏழு நதிகளில் ஒன்றின் ஒழுக்கு மட்டுமே அகவயமான முக்கியத்துவத்தை அடைந்து என கருத முடியாது. சரஸ்வதியின் வேதத்தில் வரும் நீர்கள் அனைத்திற்குமான ஒட்டுமொத்த குறியீடாக உள்ளது.
சரஸ்வதி பிற நதிகளுடன் மட்டும் இணைந்திருக்கவில்லை. முழுக்க முழுக்க அகவய குறியீடாக மட்டுமே உள்ள பெண் கடவுள்களுடனும் இணைத்துள்ளாள், குறிப்பாக பாரதி மற்றும் இளை. பிற்கால புராணங்களில் சரஸ்வதி சொல், கல்வி மற்றும் கவிதையின் கடவுள். பாரதி அவளின் பெயர்களில் ஒன்று. ஆனால் வேதத்தில் பாரதியும் சரஸ்வதியும் தனித்தனி தெய்வங்கள். பாரதி மகத்தானவள் என்ற பொருளுடைய மஹி என்ற பெயராலும் அழைக்கப்பட்டாள். கடவுள்களை அழைத்து அக்னியை எழுப்பும் வேள்வி பாடல்களில் இளை, மஹி அல்லது பாரதி, சரஸ்வதி ஆகிய மூவரும் இணைந்தே வருகின்றனர்:
இளா ஸரஸ்வதீ மஹீ திஸ்ரோ தேவீர் மயோபுவ | பர்ஹிஸ் ஸிந்தந்த்வ ஸித்ருத |
என்றும் இன்பத்தை அருள்பவர்களும்
அழியாத தேவியுமான
இளா,
ஸரஸ்வதி,
மஹி (பாரதி)
மூவரும் தர்பையின் மீது
எழுந்தருள்வார்களாக
– ரிக் 1.13.9
அஸ்த்ரிதோ தேவீர்: குன்றாதவர்கள், இடறாதவர்கள், தவறாதவர்கள், ஊறு விழைவிக்காதவர்கள். இவர்கள் இவ்வாறு அழைக்கப்படுவதற்கான அர்த்தமாக நான் கருதுவது தீய விளைவுகள் உண்டாக்கும் தவறான செயல்பாடுகள் அற்றவர்கள், பிழைகள் தவறுகளில் சிக்கி தடுமாறாதவர்கள். இதையே ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்திலுள்ள பாடலிலும் காணலாம்.
ஆணோ யஞ்யம் பாரதீ தூயமேத்விளா மனுஷ்யத்வதிஹ சேதயந்தி | திஸ்ரோ தேவீர் பர்ஹிரேதம் ஸ்யோனம் ஸரஸ்வதீ ஸ்வபஸஸ் ஸதந்து ||
பாரதி எங்கள் வேள்விக்குத்
துரிதமாய்
எழுந்தருளட்டும்
இளையும் மனிதனைப்போல் எதை
செய்ய வேண்டுமென்பதை சிந்திக்கிறாள்
ஸரஸ்வதியும்,
கருணையுள்ள மூன்று தேவிகளும்
இந்த இனிய தருப்பையின் மீது எழுந்தருள்வார்களாக
– ரிக் 10.110.8
இந்த மூன்று தேவிகளின் செயல்பாடுகளும் மிக நெருக்கமாக சரஸ்வதியின் படைப்பூக்க ஆற்றலுடன் இணைந்துள்ளன என்பது தெளிவாகிறது. சரஸ்வதி என்ற சொல் ரிதத்தில் இருந்து வருகிறது. பாரதி மற்றும் இளை ஆகிய சொற்களும் அந்த சொல்லின் அல்லது அறிவின் வேறுபட்ட வடிவங்களாகவே இருக்க வேண்டும். ரிஷி மதுச்சந்தஸ வைஶ்வாமித்ரரின் எட்டாவது பாடலில் பாரதி மஹி என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறாள்.
ஏவாஹ்யஸ்ய ஸூந்ருதா விரப்ஸூ கோமதீ மஹீ | பக்வா ஶாகா ந தாஶுஷே ||
கதிர்கள் நிறைந்த இந்திரனுக்கான
மஹி
நிரம்பி வழியும்
அவளது இயல்பு
வேள்வி வேட்டுபவருக்கு
கனிந்த
பழக்கிளை
– ரிக் 1.8.8
வேதத்தில் வரும் கதிர்கள் அனைத்துமே சூரியனின் கதிர்கள். வேள்வியில் சரஸ்வதியின் தோழியும், படைப்பூக்க தேவியின் சகோதரியுமான இறைவி மஹி இந்த பாடலில் ஒளிக்கதிரின் கடவுளாக வருகிறாள். இந்தப் பண்பு பிற்கால புராணங்களிலும் அவளுக்கு கொடுக்கப்படுகிறது. வேதத்தில் ஒளி என்பது அறிவின், ஆன்மீக பிரகாஷத்தின் குறியீடு என்பதைக் காட்டும் நூறு உதாரணங்களில் ஒன்று இது.
சூரியனின் ஒளிக்கதிர்களால் நிறைந்தவள் மஹி, அந்த பிரகாஷத்தை தன்னுள் கொண்டவள். அவள் ஸுந்தரிதா (1.22.3), ஆனந்தமயமான ரிதத்தின் சொல் (சரஸ்வதியும் ஆனந்த ரிதத்தை எழுப்புபவள், சோதயித்ரி ஸூன்ருதானாம், 1.3.11). அவள் விரப்ஷி (1.8.8), பெரும் வளம் நிறைந்தவள். ரிக்வேத பாடல் ஒன்றில் (1.22.10) இவள் ‘வருத்ரீம் திஷணா’ என வர்ணிக்கப்படுகிறாள், பரந்துவிரிந்த சிந்தனை-ஆற்றல். மஹி ரிதத்தின் பிரகாஷமான பெருவிரிவு; அவள் பிரம்மாண்டத்தை (ப்ருஹத்) குறிப்பவள், ரிதத்தை தன்னுள் கொண்டு நம்முள் இருக்கும் மஹா-பிரக்ஞையின் (superconscient) பிரம்மாண்டத்தை (ப்ருஹத்) குறிப்பவள். ஆகவே வேள்வி வேட்டுபவர்களுக்கு இவள் பழுத்த கனிகள் நிரம்பிய பழக்கிளை (ரிக் 1.8.8) போன்றவள்.
இளை’யும் ரிதத்தின் மற்றொரு வார்த்தையாகும். பிரக்ஞையை எழுப்புபவளான (சேதயந்தி ஸுமதினாம், 1.3.11) சரஸ்வதி போலவே இளையும் வேள்விக்கு வந்து பிரக்ஞையை எழுப்புபவள் (சேதயந்தி). ஆற்றலால் நிரம்பியவள், ஸுவீரா. அறிவை தருபவள். இவளும் சூரியனுடன் அக்னியுடனும் தொடர்புபடுத்தப்படுகிறாள்.
ஜுஷஸ்வாக்ன இளயா ஸஜோஷா யதமாநோ ரஸ்மிபிஸ் ஸூர்யஸ்ய | ஜுஷஸ்வநஸ் ஸமிதம் ஜாதவேத ஆச தேவாந் ஹவிரத்யாய வக்ஷி ||
அக்னியே
இளாவின் இன்பத்தை பகிர்ந்துகொள்
சூரியனின் கதிர்களைக் கொண்டு
எங்கள் அவிஸால் திருப்தியடைந்து
ஓளியில்
பங்கு கொள்ளச் செய்யுங்கள்
– ரிக் 5.4.4
இளை சூரிய கதிர்களின் அன்னை, சூரியனின் புரவிகள். அவளது பெயருக்கான பொருள் ‘ரிதம் மற்றும் ரிஷி ஆகிய சொற்களுக்கு பின்னுள்ள கருத்தை நாடுபவள், அடைபவள், பெற்றிருப்பவள்’ என்பதாகும். ஆகவே இளை என்பவள் ரிதத்தை நாடுபவர்கள் அடையும் தரிசனமாக இருக்கலாம்.
சரஸ்வதி ரிதத்தின் ஒலியைக் குறிப்பவள், ஸ்ருதி, வாக்’கை தருபவள். இளை த்ருஷ்டி, ரிதத்தின் தரிசனம். த்ருஷ்டியும் ஸ்ருதியும் ரிஷிகளுக்கும், கவிகளுக்கும், ரிதத்தை நாடுபவர்களுக்குமான இரு ஆற்றல்கள். இதிலிருந்தும் இளை மற்றும் சரஸ்வதிக்குமான நெருங்கிய தொடர்பை நாம் புரிந்துகொள்ளலாம். பாரதி அல்லது மஹி ரிதத்தின் பெருவிரிவானவள், பேராற்றல் மிக்க தன்னுடைய இரு சகோதரிகளையும் உடன் கொண்டிருப்பவள், மனிதர்களின் எல்லைக்குட்பட்ட மனதில் உதிப்பவள். இவ்வளவு நேர்த்தியான, உயிர்ப்புமிக்க இந்த வேறுபாடு பிற்காலத்தில் வேத அறிவு சரிவடையும் போது எவ்வாறு இல்லாமல் ஆகியது என்பதையும், பாரதியும் சரஸ்வதியும் இளையும் ஒருவராகின்றனர் என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம்.
இவைகளே சரஸ்வதியின் மனித உளவியல் சார்ந்த அகப்பண்புகளும், செயல்பாடுகளும், அவளுக்கும் நெருங்கிய பிற தெய்வங்களுக்குமான தொடர்புமாகும். ரிக்வேதத்தின் ரிஷி மதுச்சந்தஸ வைஸ்வாமித்ரரின் மூன்றாவது பாடலில் சரஸ்வதி இவ்வாறு எழுப்பப்படுகிறாள்:
மஹோ அர்னஸ் ஸரஸ்வதீ ப்ரசேதயதி கேதுநா | தியோ விஸ்வா விராஜதி ||
தூய்மையை
ஆற்றலை
செல்வத்தை வழங்குபவளான
ஸரஸ்வதி
எங்கள் வேள்வியிலே அளிக்கப்படும்
அவிஸை
விரும்புவாளாக
ஸத்தியத்தில் நாட்டமுடையவர்களை
வழிநடத்துபவளும்
ஸத்தியத்தை
கற்பிப்பவளுமான
ஸரஸ்வதி
எங்கள் வேள்வியை ஏற்பாளாக
ஸரஸ்வதி
தன் செயல்களால் மகத்தான
நதியைப்
புலப்படுத்துகிறாள்
தன்
சொந்த வடிவத்திலே எல்லா
ஞானங்களையும் ஒளிரச்செய்கிறாள்
ரிக் 1.3.10-1
குறிப்பு: ரிதம் – உண்மை, ஒழுங்கு, உயர்வு, மேல்நோக்கிச் செல்லுதல். “ऋ” என்ற சம்ஸ்க்ருத வேர்ச்சொல்லிருந்து வந்தது. இதை செயலில் உள்ள உண்மையின் வெளிப்பாடாக கருதலாம், அக மற்றும் அண்டத்தின் ஒழுங்கு (ஒழுக்கு) என்றும் சொல்லலாம். “தர்மம்” என்ற கருதுகோலின் அடிப்படை “ரிதம்” என்ற சொல்லிருந்து வந்துள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். வேதங்களில் ‘ரிதம்’- ‘ஸத்யம்’ இவை இரண்டும் அடுத்தடுத்து சொல்லப்படும் இரட்டையர். இவை இரண்டும் இணையான பொருளையும் தருபவை. எழுநூறுக்கும் மேல் ‘ரிதம்’ வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது.
*
மொழிபெயர்ப்பாளர்கள்:
- தாமரைக்கண்ணன் அவிநாசி: எழுத்தாளர், மொழிபெயப்பாளர். குருகு இணைய இதழின் ஆசிரியர். இவரின் முதல் மொழிபெயர்ப்பு ஆக்கம் “இந்தியக்கலையின் நோக்கங்கள்” அழிசி பதிப்பகம் வெளியீடாக 2024-இல் வெளியானது. இணைய இதழ்களில் கலை, பண்பாடு, தத்துவம் சார்ந்த கட்டுரைகள், புனைவுகள் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார்.
- அனங்கன்: இந்தக் கட்டுரையிலுள்ள வேத வரிகளின் மொழிபெயர்ப்பு, சம்ஸ்க்ருத சொற்களுக்குக்கான உச்சரிப்பு மற்றும் விளக்கம் ஆகியவற்றை அளித்தவர் அனங்கள். எழுத்தாளர், குருகு இணைய இதழின் ஆசிரியர். இணைய இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார்.