சாரா ஜோசஃபின் ஆலாஹாவின் பெண் மக்கள் – ரம்யா

சாரா ஜோசஃப்

எழுத்தாளர் பால்சக்காரியாவிடம் இன்று எழுதிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன என்று கேட்டபோது, “அரசியல் கருத்துவாதங்கள், மதம் சார்ந்த அடிப்படைவாதம் அல்லது எவ்வகையிலும் பிற அடிப்படைவாதம், கருத்துவாதம் சார்ந்து இலக்கியத்திற்குள் இயங்காதீர்கள் என்பதையே சொல்லுவேன். ஒருவகையில் அது இலக்கியத்தின் அழகியலை இல்லாமலாகச் செய்யும். மலையாளத்தில் அவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மிகக் குறைவானவர்களே அப்படியல்லாமல் செயல்படுகிறார்கள்” என்றார். தமிழ்ச்சூழலை விட மலையாளச் சூழலில் ஒரு எழுத்தாளருக்கான மதிப்பு அதிகம். ஒரு திரைப்பட நாயகன், நாயகிக்கு இணையான கவனத்தைக் கொண்டுள்ளார்கள். ஒரு வகையில் அது தழையும் கூட. கட்டாயம் எழுத்தாளர்களுக்கு சமூகத்தில் பெருமதிப்பு உருவாக வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது தரக்கூடிய அரசியல் தொடர்புகளால் இயல்பாக எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய குழந்தைமையை இழக்கச் செய்துவிடக் கூடாது.

எழுத்தாளர் சுகதகுமாரியும், கமலாதாஸும் கேரள அரசியலில், தலைவர்களில் செலுத்திய செல்வாக்கு அதிகம். லலிதாம்பிகா அந்தர்ஜனம், சுகதகுமாரி, கமலாதாஸ் ஆகியோர் சாராஜோசஃப் -க்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்கள். பெரும்பாலும் பெண்ணியம், அரசியல் சார்ந்த அமைப்புச் செயல்பாடுகளில் இருந்தவர்கள். பெண்ணியக் கருத்துக்கள் வெளிப்படும் படைப்புகளைப் படைத்திருக்கிறார்கள். இவர்களுடைய கருத்தியலின் தாக்கம் கேரளச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கமலாதாஸ் தன் படைப்புகளைவிட பெண் விடுதலை, உடல் சுதந்திரம் ஆகிய கருத்துக்களை உரக்கப் பேசியதற்காகவே அறியப்படுகிறார். பெரும்பாலும் பெண்களின் முதல் படைப்புகளில் வெளிப்படும் ஒரு கள்ளமின்மை இக்கருத்தியல்களால் அடித்துச் செல்லப்பட்டு கெட்டித்தன்மை அடைவதை அவர்களின் பிற்காலப் படைப்புகளில் காண முடிகிறது. சாரா ஜோசஃபின் தொடர்ச்சியாக கே.ஆர்.மீராவைச் சொல்லலாம். ஆனால் எங்கோ இலக்கிய அழகியலைப் பற்றி மதிப்பிட முடியாதளவு அவர்களைச் சுற்றி ஒரு கருத்தியல் சுவர் எழும்பியிருப்பதை நம்மால் உணர முடிகிறது.

ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலைச் சமூகம் சார்ந்த மக்களைப் பற்றிப் பேசுகிறது என்பதால் அந்தப் படைப்பிலுள்ள அழகியல் குறைபாடுகளைப் பேசாமல் போவது இலக்கியத்திற்கு செய்யும் துரோகமே ஆகும். சமீபத்தில் கவிஞர் இசை விடுதலைச் சிகப்பியின் கவிதையிலுள்ள அழகியல் குறைபாடு பற்றிய வெளிப்படையான மதிப்பீட்டிற்காக கடிந்து கொள்ளப்பட்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளைச் சொல்ல வேண்டும் தான். ஆனால் எவ்வகையிலும் படைப்பு ரீதியாக அது இலக்கிய மதிப்பீட்டின் அளவுகோளுக்கு முன் துணிந்து நிற்க வேண்டும். பெண் படைப்புகளுக்கும் இதையே சொல்லலாம். பெண்ணியக் கருத்துக்கள் பேசப்பட்டிருக்கும் நாவல் என்பதால் அதன் இலக்கிய இடத்தைப் பற்றிச் சொல்வதை அந்தக் கருத்துவாதத்திற்கான எதிர்க்குரலாக எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படவேண்டும். பெரும்பாலும் தீவிர இலக்கியச் செயல்பாடுகளைப் பற்றி அறியாமல் இலக்கியத்தை அரசியல் அல்லது கருத்துவாத நோக்கத்திற்காக, சுயலாபத்திற்காகப் பயன்படுத்துபவர்களால் உருவாகும் சிக்கல் இது. அதைத் தீவிர வாசகர்கள் புறந்தள்ள வேண்டும்.

சாரா ஜோசஃப் 1999-இல் மலையாளத்தில் எழுதிய நாவல் ”ஆலாஹாயுடே பெண்மக்கள்”. இதனுடன் மாட்டாத்தி, ஒதப்பு ஆகிய நாவல்களையும் சேர்த்து முத்தொகுப்பு (Trilogy) என்று சொல்லக்கூடிய நாவல்களை எழுதினார். ஆலாஹாயுடே பெண்மக்கள் பேசப்பட்ட அளவிற்கு பிற நாவல்கள் பேசப்படவில்லை. அவரின் படைப்புகளில் ஆலாஹாயுடே பெண்மக்கள் நாவலே இலக்கியத்தரம் வாய்ந்ததாக முன்வைக்கப்படுகிறது. பிற நாவல்களில் பெண்ணியக் குரல் அதிகமாக ஒலிப்பதே இதற்கான காரணம்.

சாரா ஜோசஃப்

சாரா ஜோசஃப் எழுத்தாளர் மட்டுமல்லாமல் பெண்ணியப் போராளியும் கூட. பட்டாம்பியில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் மனுஷி என்ற மகளிர் குழுவை 1980-களில் நிறுவியவர். அங்கு மலையாளம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றைக் கற்பிக்கும் ஆசிரியராக இருந்தார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக தொடர்ந்து களத்தில் நின்று செயல்படுபவர். 2014-இல் ஆத்மி கட்சியில் சேர்ந்து 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக கட்சியால் நிறுத்தப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.என் ஜெயதேவனிடம் தோல்வியடைந்தவர். அதனால் அவரின் பிற்காலப் படைப்புகளில் அரசியலும், கருத்துவாதமும் ஓங்கி ஒலிக்கும் ஒன்றாக ஆனது ஆச்சரியமளிக்கவில்லை.

சாகித்ய அகாதாமியின் விருது அறிவிக்கப்படும் முன்னரே மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா சாரா ஜோச்ஃபின் ஆலாஹாயுடே பெண்மக்கள் நாவலால் ஈர்க்கப்பட்டு அவரிடம் பேசி மொழிபெயர்க்க ஆரம்பித்திருந்தார். விருது அறிவிக்கப்பட்ட பின்னர் சாகித்ய அகாதமி வேறு ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமித்தபோது அதை திட்டவட்டமாக மறுத்து நிர்மால்யா தான் அதை மொழிபெயர்க்க வேண்டும் என்று உறுதியாக நின்றவர் சாரா ஜோசஃப். அதன்பின்னரே தமிழில் 2009-இல் ”ஆலாஹாவின் பெண்மக்கள்” சாகித்ய அகாதமி வெளியீடாக நிர்மால்யா மொழிபெயர்ப்பில் வந்தது. மொழிபெயர்ப்பு செய்யும் போது எந்த வார்த்தைகள் எல்லாம் கட்டாயமாக அப்படியே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற பட்டியலைத் தனக்கு அனுப்பியதாக நிர்மால்யா கூறுகிறார். அந்த வகையில் ஒரு விளிம்பு நிலைச் சமூகத்தின் ஆன்மாவுடன் சேர்த்து மொழியின் ஆன்மாவும் தமிழுக்கு அறிமுகமானது சிறப்பானது.

தன்வரலாற்றுத் தன்மையாக சொல்லப்பட்ட இந்நாவல் தமிழில் பாமாவின் கருக்கு நாவலை நினைவுபடுத்தக் கூடியது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு துண்டு வாழ்க்கையை சொல்லும் யதார்த்தவாதக் கதை கருக்கு. அதிலுள்ள சுய வரலாற்றுத்தன்மையால், நினைவுகளின் அழுத்தத்தால் பெரிய ஒன்றுடன் தொடர்பு படுத்த இயலாமல் விரியாமல் ஆனது. பெரிய ஒன்றுடன் என நான் சொல்வது சரித்திரம் சார்ந்து, உளநுட்பம் சார்ந்து விரியாத தன்மையை. 1992-ல் வெளிவந்த கருக்கு நாவல் அதன் அப்பட்டமான மொழி, உணர்வு வெளிப்பாட்டுத்தன்மைக்காக அறியப்பட்டது. அதற்குப் பின் ஒடுக்கப்பட்ட பெண்களின், விளிம்பு நிலைச் சமூகத்தில் பெண்கள் படும் பாட்டை விரிவாக முழுமையாக எடுத்துச் சொன்ன நாவல்கள் வெளிவரவில்லை. 2003-ல் வெளிவந்த உமாமகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை நாவலும் தன்வரலாற்றுத்தன்மையுடன் கூடிய நாவல் தான். நான்கு சுவருக்குள் அமையும் அந்த வாழ்க்கை நினைவுகளாலேயே அமிழ்த்தப்பட்டு அது அடைய வேண்டிய விரிவை முழுமையை அடையாமல் ஆனது.

அந்தவகையில் சாரா ஜோசஃபின் இந்த நாவல் முழுமையானது. அவரின் வேறு எந்தப்படைப்புகளையும் விட இந்த நாவல் இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியதற்கு பல காரணங்கள் உள்ளது. முதலாவது காரணம் இந்த நாவல் முழுமையும் சிறுமியான ஆன்னியின் பார்வையில் சொல்லப்பட்டது. இந்த நாவலில் பேசப்படும் சிக்கலான துன்பமான பல விஷயங்களும் ஆன்னியின் வழியாக குழந்தைமையுடன், கள்ளமின்மையுடன் அணுகப்படுவதால் எளிமையாகிறது. எளிமையின் அழகு நாவல் முழுவதும் வருகிறது.

இரண்டாவதாக இந்த நாவல் முடித்த பின் மனதில் நிற்கும் படிமங்கள். பாட்டியும் ஆன்னியும் கள்ளச்சந்தையில் புழுத்த அரிசி வாங்க இருளில் செல்லும் பயணம் அவள் மனதில் வடுவாக எஞ்சுப் போகும் ஒன்றாகிறது. அந்த இருளும், திருட்டுத்தனமும், அரிசி பிடிப்பவர்களின் மிரட்டலும் என ஆன்னி நடுக்கத்தையும், பயத்தையும் முதன்முதலாக உணர்கிறாள். அடக்கமுடியாத அழுகை பீரிட்டுக் கொண்டு வருவது இங்கு தான். இப்பயணத்தின் ஆரம்பத்தில் தனக்கு அளிக்கப்பட்ட விளக்கை, “அரிக்கான் விளக்கு! கரிக்குட்டிச் சாத்தானாட்டம் இருக்கற இந்த அரிகான் விளக்கு யார் கண்ணுக்கு வெளிச்சம் காட்டுறதுக்கு? பிசாசுங்களுக்கா?” என ஆனியின் பாட்டி கேட்கிறாள். வறுமை, பசி, நோய்மை, துன்பம், இழப்பு என அத்தனை வரோதனா என்ற சாத்தானுக்கு மத்தியிலும் சிறு கரி படர்ந்த ஒளியுடன் பயணிக்கும் ஓர் அறியாக் குழந்தையின் கதையிது என ஒட்டுமொத்த நாவலையும் சொல்லுமளவு இந்தக் காட்சி மனதில் நிற்கிறது.

தான் தோன்றிப் பயிரான ”அவரை” இந்நாவலின் முக்கியமான படிமம். ஆன்னியின் வீட்டில் பூக்கும் காலத்துடன் ஆரம்பிக்கும் அவரை மெல்ல மெல்ல உருமாறி இல்லாமலாகும் ஒன்றாகிறது. பெரும்பாலான விஷயங்களை ஆன்னி அவரையுடனேயே ஒப்பிட்டு அறிந்து கொள்ளுமளவு அவரைச் செடி அவள் வாழ்வின் மையமாக உள்ளது. அவரைக் கொடிகளைப் பிடித்து மேலேறி அதிசய உலகத்திற்குச் சென்று விளையாடும் சிறுமியாகத் தன்னை புனைந்து கொள்கிறாள். கோக்காஞ்சறவு மக்களை நினைத்தபடி அஸ்தமன சூரியனின் முன் நிற்கும் ஆனியின் ஒரு கையில் பெரியதோர் அவரை இலையும் மற்றொரு கையில் நீளமான காய்ந்த கம்பும் இருப்பதாகக் கற்பனை செய்கிறாள். தன்னை மந்திரவாதியாக நினைத்து மலிவாக பிறரால் கருதப்படும் கோக்காஞ்சறவு மக்களை மாணிக்கக் கற்களாக மாற்றுவதாகக் கனவு காண்கிறாள். தன் ஊரின் பெயரைச் சொல்லி அடித்து அவமானப்படுத்திய டீச்சர்களின் வசைச் சொற்களைக் கேட்டு முதன் முதலில் ஊரின் பெயரை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறாள். செல்லத்தை விரித்து கதைகளைப் பரப்பி அடுக்கும் பாட்டி வழியாக தன் ஊர் சார்ந்த தொன்மக் கதைகளை, கோக்காஞ்சறவும் கொடிச்சியும் உருவான கதையை, பசியின் முன் அவர்கள் பெற்ற தைரியக் கதைகளை, தன் தாத்தா பட்ட பாடுகளை, புனைவா என்றறியாத வெளுத்தேடன் சங்கரனின் புலியாட்டத்தை, பாட்டிக்குப் பிள்ளைகள் பிறந்த கதையை, அந்தக் குடும்பத்தின் ஒவ்வொரு நபர்களின் ஆதியையென அனைத்தையும் கேட்கிறாள். தோட்டிகளின் வழியாக சொல்லப்பட்ட உண்மைக் கதைகளையும், குட்டிப்பாப்பன் வழியாக சொல்லப்பட்ட சரித்திரத்தின் வழியாகவும் ஓரளவும் தன் ஊரைப் பற்றி அறிகிறாள். அதன் பின் அவளுக்கு ஊர் பெயரை மாற்ற வேண்டும் என்று தோன்றவில்லை. சரித்திரத்தை விட்டு ஓடி ஒளியக்கூடாது என்பதை தீர்க்கமாகப் பற்றுகிறாள். அதன்பின் அங்குள்ள மக்களை மீட்க அவரையையும் கற்பனைகளால் மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறாள்.

ஆலாஹாவின் பெண் மக்கள் (நாவல்)

”ஆலாஹாவின் ஜெபம்” என்ற மாயமான ஒரு ஜெபத்தைப் பற்றிய சித்தரிப்பும் இந்நாவலின் முக்கியமான படிமம். பாட்டிகளிலிருந்து பேத்திகளுக்கு காலம்காலமாக கடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றுண்டு. இங்கு பிசாசை விரட்டும் ஆலாஹாவின் ஜெபம் ஒன்று ஆன்னியின் பாட்டியிடம் உள்ளது. அது பாட்டியின் பாட்டியால் இறக்கும் தருவாயில் பாட்டிக்கு கற்பிக்கப்பட்டது. அதுபோல இறக்கும் தருவாயில் பாட்டி அதை ஆன்னிக்கு கற்பிக்கலாம் என்று ஆன்னியால் நம்பப்படுகிறது. அது வேற்று மொழி ஜெபம். அதற்கு அர்த்தம் யாருக்கும் தெரியாது. அதைத்தெரிந்தவள் பாட்டி மட்டுமே. அம்மா அந்த ஜெபத்தைப் பற்றிச் சொல்கையில் “இரண்டு ஈசன்களுக்கு சேவகம் செய்ய முடியாது” என்கிறாள். சாத்தனை நோக்கிச் சொல்லப்படும் ஒன்று என்பதால் அது அவனுக்கான சேவகமாகவே அம்மா பார்க்கிறாள். ஆனால் ஆன்னிக்கு அதைக் கொண்டு இங்கு செய்ய வேண்டியவை நிறைய உள்ளதாக நம்புகிறாள். தத்துப் பூச்சிகளை விரட்டுவது, பிசாசுகளைத் துரத்துவது என பலவற்றைச் செய்ய முடியும் என நம்புகிறாள். இந்த நாவலின் இறுதியில் அந்த வலிமையான ஜெபம் சொல்லப்படுகிறது. கனமானது. அதன் அர்த்தம் ஆன்னியின் காதில் ஓதப்படுகிறது. ஆன்னிக்கு இப்போது தத்துப்பூச்சியை விரட்டுவதைத்தவிர பிற வேறு பல பொறுப்புகள் வந்து சேர்கின்றன. அவற்றை அவள் விதையாக மட்டுமே கையில் வைத்திருந்தாள் எனலாம்.

அதன்பின் நாவல் முழுவதும் உருமாறி வரும் ஆன்னியின் கம்மீஸ். அழுக்காகி, நனைந்து, கிழிந்து என பலவகை மாற்றங்களுக்கு உள்ளாகும் கம்மீஸ். அவளுடைய சுருட்டைத்தலையும், கம்மீஸும் என நாவல் முழுவதும் நிறைந்து கிடக்கிறாள் ஆன்னி. இத்தகைய படிமங்களால் நாவல் வாசக இடைவெளியை உருவாக்குகிறது. அதன் வழியாக சரித்திரத்திற்கான கோட்டையும், சமூக-அரசியலுக்கான கோட்டையும், கண்ணுக்குப் புலப்படாத ஒன்றுடனான முடிச்சையும் நாவல் இட்டு விரிவடைகிறது.

சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மனிதர்களின் வாழ்வை சித்தரிக்கும் கதையாக நாவல் உள்ளது. மதம், சாதி, பொருளாதாரம் என பலவற்றின் விளிம்பில் வாழ்பவர்கள் இவர்கள். பொருளாதார வசதி வாய்ப்புகளுக்கு முன் பணயம் வைக்கப்படும் வாழ்க்கைகளின் ஒரு கீற்று இந்த நாவல். நகரமயமாதலால் எங்கும் பட்டணங்களிலிருந்து வெளித்தள்ளப்பட்ட மனிதர்கள் அனைவரையும் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்த கதையிது. அந்தத்தன்மையால் திருச்சூர் நகரத்தின் வரலாற்றைப் பேசும் இந்த நாவல் இதில் பேசப்படும் பிரச்சனைகளைக் கொண்டு உலகின் எந்த நகர உருவாக்கத்தின் போது விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் பிரச்சனையோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்த ஒன்றாகிறது.

பெண்களின் பிரச்சனைகள் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலைச் சமூகங்களில் வேறொன்றாகவே உள்ளது. தலைப்பு சொல்வதைப் போலவே இது பெண் மக்களின் கதை தான். பெண் குழந்தையான ஆன்னியின் வழியாக சொல்லப்படும் கதை. ஆன்னியின் பாட்டி, அம்மா, சின்னம்மா, பெரிய அத்தை, சிய்யம்மா, கொச்சு மரியா, செறிச்சி, கருத்து குஞ்சாரம், வெளுத்த குஞ்சாரம் என பெண்களால் நிறைந்த நாவல். இந்த நாவலின் ஆண்கள் பெரும்பாலும் பெண்களைக் கைவிட்டவர்கள், பயன்படுத்திக் கொண்டவர்கள், அவர்களின் நினைவுகளாக மட்டுமே எஞ்சுபவர்கள், பெண்களுக்கு அநீதி இழைத்தவர்கள், கேலிக்குரியவர்கள், சுயநலமிகள். ஆனால் குட்டிப்பாப்பனையும் குஞ்சிக்கம்பவுண்டரையும் தவிர. ஆன்னியின் அப்பாவும் தாத்தாவும் நினைவுகளாகவே அவளில் இருக்கிறார்கள். எப்போதாவது அப்பா வந்தாரானால் அவர்தான் குடும்பத்தலைவர் என்று தெரிந்து கொள்ளட்டும் என ஆன்னியின் அம்மா கோக்காஞ்சறவு ஆலயம் கட்டுவதற்காக அப்பா, தாத்தா இருவரின் பெயரிலும் தான் காணிக்கை கொடுக்கிறாள். கதை நெடுக அவள் குடும்பத்திற்காக உழைக்கும் உழைப்பு மட்டுமே காட்டப்படுகிறது. குடும்பத்திலுள்ளவர்களுக்கு அவள் செய்யும் சேவை வழியாக, பெண் பிள்ளையான ஆன்னிக்கு அவள் கற்றுக் கொடுக்கும் நல்லவற்றின் வழியாக அவள் பிம்பம் எழுந்து வருகிறது.

பெரிய அத்தைக்கும், கொச்சுமேரியின் கணவனான குஞ்சன் காம்பவுண்டருக்கும் இடைப்பட்ட காதல் விவகாரம் ஆன்னியின் வழியாக நாவலில் வேறொன்றாகிறது. அப்ப கொச்சுமேரி என்னபண்ணுவாள்? என்ற கேள்வியே அவளுக்கு அபத்தமாகப் படுகிறது. ஊருக்கே தவறாகத் தெரிந்த ஒன்று ஆன்னிக்கு தவறாகத் தெரிவதில்லை. நேசிப்பது நல்லதுதானே என்பதைத்தவிர மனிதர்களின் ஏற்பாடுகளை அறியாதவளாக இருப்பது கொணரும் புன்னகையுடன் கூடிய கண்ணீரை வரவழைக்கிறது. அவள் இந்த நேசத்திற்கு தடையாக இருக்கும் கொச்சுமேரியையே கோபித்துக் கொள்கிறாள். மிகுந்த நோயாளியின் கடைசி ஆசைக்காக சில நாட்கள் பெரிய பணக்கார குடும்பத்திற்கு திருமணமாகிச் சென்று திரும்பி வந்தவள் பெரிய அத்தை. திருமணமான ஏழு நாட்களில் இறந்து போன அவளின் கணவன் வீட்டிலிருந்து மீண்டும் கோக்காஞ்சறவுக்குத் திரும்பி வந்து ஆப்பக்கடையை நடத்தியவள். ஆப்பம் விற்கச் சென்ற நோனு என்ற அவளின் தங்கை ரெளடிகளின் பாலியல் சீண்டல்களுக்குப் பயந்து பாலத்திலிருந்து குதித்து இறந்தபின் ஆப்பக்கடையை நிறுத்திவிட்டு பிரசவம் பார்க்கக் கற்றுக் கொண்டு மிட்வொயிஃப் நர்ஸாக ஆனவள். அங்குள்ள மக்களுக்கு அடிப்படை மருத்துவம் பார்க்கும் குஞ்சனுடன் கொள்ளும் அவளின் நேசம் ஆன்னிக்கு துளியும் தவறாகப் படவில்லை. குஞ்சனின் மரணமும், பெரிய அத்தையின் அதற்குப் பின்னான வாழ்க்கையும் அவளில் ஒரு மாற்றத்தை நிகழ்த்துகிறது.

மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா

ஆன்னியின் குழந்தைமையுடன் மெல்ல மெல்ல கோக்கஞ்சறவும், குடும்பமும், மனிதர்களும், அவர்களின் செயல்களும் நிகழ்த்தும் மாற்றமாக இக்கதை வளர்கிறது. ஒரு பெண்குழந்தைக்கு முதல் ஹீரோ பெரும்பாலும் அப்பா. அப்பா இல்லாதவர்களுக்கு சித்தப்பா. சித்தப்பா இல்லையென்றால் மட்டுமே வேறுயாராவது இருக்க முடியும். ஆன்னிக்கும் அவள் சித்தப்பாவான குட்டிப்பாப்பன் என்ற பிராஞ்சிஸுக்கும் இடைப்பட்ட உறவு இனிமையாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆன்னி அவன் வழியாக விதவிதமான வார்த்தைகளைக் கற்றுக் கொள்கிறாள். முக்கியமான கடிதங்களை எழுதுகிறாள். ஆன்னி பாட்டி, வீட்டுப் பெண்கள் என பலர் வழியாக வார்த்தைகளைக் கற்றாலும் குட்டிப்பாப்பனின் வழி கற்கும் வார்த்தைகளே அவளுக்கு கிளர்ச்சியளிக்கின்றன. அவர்களுக்கு இடையே நடைபெறும் உரையாடல் அந்த இடத்தின் அரசியலை, சமூகத்தை பிரதிபளிக்கக்கூடியது. காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சிகள், அதன் சிந்தனைகள், அதன் போதாமைகள் வெளிப்படக்கூடிய இடமாக உள்ளது. காங்கிரஸ், காந்திய வழிமுறைகளின் நடைமுறைப் போதாமைகளை குட்டிப்பாப்பனின் கடந்த காலத்தின் வழி அறிய முடிகிறது. ஒரு லட்சியவாதியின்  சறுக்கலும், உடைவும், இயலாமையும் அவனிடம் வெளிப்படுகிறது. ஆனியைப் போலவே எல்லாவற்றையும் பார்க்க மட்டுமே விதிக்கப்பட்டவன். ஆனாலும் அந்தக் குடும்பத்தின், சமூகத்தின் மனசாட்சியின் குரலாக இருக்கிறான். அவன் வழியாக ஆன்னி மதத்தை, சமத்துவத்தை, போராடும் குணத்தைக் கற்றுக் கொள்கிறாள். இறுதியில் குட்டிப்பாப்பனின் மரணம் நிகழ்கிறது. அவள் உச்சமாக மதிக்கும் ஒன்றின் மரணமும் கூட. கற்றுக் கொடுத்த யாவற்றுடனும் சேர்த்து தன் காச நோயையும் அவளுக்கு தந்துவிட்டுப் போவதாக இந்த நாவல் முடிகிறது. வழிவழியாக கோக்காஞ்சறவு மக்கள் மேல் அல்லது முந்தைய தலைமுறையிலிருந்து அங்கு பிறந்ததைத் தவிர எந்தத் தவறையும் செய்யாத தலைமுறைக்கு கடத்தப்படும் சிலுவையாகவே அதைப் பார்க்க முடிகிறது.

கட்டியெழுப்பப்பட்ட அத்தனையின் இறுதியும் கதையில் நிகழ்ந்துவிடுகிறது. ஆலாஹாவின் ஜெபத்தைக் கற்றுக் கொண்டதன் வழியாக, மனிதர்களினூடாக, சம்பவங்களினூடாக கிடைத்த அனுபவத்தின் வழியாக ஒரு சிறு ஒளிக்கீற்று நாவலின் இறுதியில் எஞ்சுகிறது. இயற்கையாலும், மனிதர்களாலும் பிய்த்து எறியப்பட்ட அவரைச் செடியிலிருந்து பெரிய ஒற்றை இலையையும், மந்திரக் கோலையும் கைகளில் கொண்டு எளிய மனிதர்களை மாணிக்கக் கற்களாக மாற்றும் மந்திரவாதியாக அவள் இருந்து கொண்டிருப்பாள் என்றே அவளை நினைவுகளில் நாவலின் இறுதியில் சேமிக்க முடிகிறது.

ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் பாடுகளையும், வரலாற்றையும், பெண்ணியக் கருத்துக்களையும், அரசியலையும் பேசினாலும் அவை வெறுமே கருத்துத் தெரிப்புகளாக இல்லாமல் கதையாக இயல்பாக அழகாக நாவலில் படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சிறந்த நாவலாகிறது. தமிழ் இலக்கியத்தில் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலைச் சமூகத்தில் பெண்களின் பாடுகளை இலக்கியத் தரத்துடன் முழுமையாக பல கோணங்களில் சொல்லும் ஒரு கலைப்படைப்பு இன்னும் உருவாகவில்லை. அதனாலும் இந்த நாவல் தமிழ்ச்சூழலில் வாசிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

***

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *