க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகள் (1) – மதுமிதா
(பகுதி -1)

1860களில் ப்ரோன்டே சகோதரிகளின் ஆக்கங்களில் திளைத்திருந்த ரஷ்ய வாசகர்கள், பெரும்பாலும் க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகளை அறிந்திருக்கவில்லை. நடேஷ்டா, சோஃபியா, ப்ரஸ்கோவியா ஆகிய மூவரும் க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகள். நடேஷ்டா V.Krestovsky என்ற பெயரிலும், சோஃபியா Iv.Vesenev என்ற பெயரிலும் எழுதினர். ப்ரோன்டே சகோதரிகளின் குடும்பத்தினரின் முயற்சியால் வெளிவந்த Life of Charlotte Bronte, அவர்களது புகழை பல மடங்கு உயர்த்தியது. ஆனால் க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகள் அவ்வாறான முயற்சியை விரும்பவில்லை. அவர்கள் மீது பெருமதிப்பு கொண்ட பிற எழுத்தாளர்களும், அவர்களுடைய பதிப்பாளர்களும் அவர்களை அவர்கள் பெயரியலேயே எழுத பரிந்துரைத்தும் அவர்கள் அதை செய்யவில்லை.
ஜார் மிஹாயில் ஃபெடரோவிச், க்வாஷ்சின்ஸ்கயா குடும்பத்தினருக்கு அவர்களுடைய ராணுவ சேவைக்காக நிலம் வழங்கி மதிப்பளித்திருந்தார். சிறிது காலத்திற்கு பிறகு, அவர்களுடைய தந்தை பணம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டபெற்ற தவறான வழக்கில் அவர்கள் தங்களின் மதிப்பு, நிலம், வருமானம் அனைத்தையும் இழந்தனர். பதினான்கு வருட போராட்டத்திற்கு பின், வழக்கு அவர்கள் தரப்பு வென்றபோது தந்தைக்கு அளவாயராக வேலை கிடைத்தது. நடேஷ்டா அவரின் வேலைக்கு கணக்கராக, மேலாளராக, திட்டங்களை ஒருக்கி உதவி செய்தார். அப்போதே அவர் எழுதத் தொடங்கியிருந்தார். 1842 முதல் 1889 இல் அவரது மரணம் வரை அவரது எழுத்து தொடர்ந்தது. கவிதைகளில் தொடங்கி, நாவல்கள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், மதிப்பீடுகள் என்று அவரது களம் விரிந்து கொண்டே சென்றது.

அவர்கள் தந்தைக்கு ஐந்து சகோதரிகள், திருமணம் ஆகாதவர்கள். நடேஷ்டாவின் பல ஆக்கங்களில் இவர்கள் உருமாறி வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு அண்ணன், அவர் மனைவி இரு குழந்தைகள். 1856இல் அவர்கள் தந்தை மறைந்த பின், இவர்கள் அனைவரையும் பேணும் பொறுப்பு நடேஷ்டாவுக்கும் சகோதரர் பாஷாவிற்கும் வந்தது. பள்ளி ஆசிரியையாக செல்லவிருந்த சோஃபியாவை தனது எழுத்தை திருத்தி, பதிவிடும் பொறுப்பை பார்த்துக்கொள்ள சம்மதிக்க வைத்தார் நடேஷ்டா. “ஆலோசனைகளுக்கு சோஃபியா, முடிவுகள் எடுக்க பாஷா, நிதி அமைச்சர் நான்”, என்று தங்கள் குடும்பத்தின் பொறுப்புகள் பங்கிடப்படும் விதத்தை விவரிக்கிறார் நடேஷ்டா. அவர்கள் மாஸ்கோவில் இருந்து 120 மைல் தொலைவிலிருந்த ர்யாஜான் எனும் சிற்றூரில் வாழ்ந்தனர்.

சோஃபியாவும், நடேஷ்டாவும் அறிவார்ந்தும், இலக்கிய ஈடுபாட்டாலும், உறவின் பிணைப்பாலும் இணைபிரியா சகோதரிகள். நடேஷ்டாவை ஆசிரியராகக் கொண்டு “little star” என்ற வார இதழைத் தங்கள் தந்தைக்காகவே நடத்தினர். அவர்களின் தாயை போலவே நிரம்பக் கற்றவர்கள். முதலில் வீட்டிலேயே ரஷ்யம், லத்தீன், இலக்கியம், ஓவியம் கற்றனர். அதன்பின் சோஃபியாவையும், நடேஷ்டாவையும் அவர்களின் தாய் வழி உறவினர் ஒருவர் உயர்கல்வி கற்க உதவினார். பன்மொழி கற்கவும், கல்விக்கூடங்கள் நடத்துவதற்கான தொழில்முறை தேர்ச்சியும் பெற்றனர்.
கல்வி முடிந்து திரும்பி வந்த சோஃபியா 1843இல் தனது இலக்கிய ஆக்கங்களை தொடங்கினார். அதை அச்சிடுவதை பற்றிய ஒரு விவாதத்தில், “நம் கருத்துகளை நம் எழுத்தை அச்சிடப்படப்பட்டு வாசிப்பதை போன்ற கொடூரம் வேறு ஒன்றில்லை. அச்சிடப்பட்ட மை ஈரம் கூட உலரா ஒரு நூல் பதிப்பகத்தை விட்டு வெளியே செல்லும் போதுதான் உண்மையிலேயே அதன் பிழைகளை தெளிவாகக் காணமுடிகிறது” என்று கூறியுள்ளார். 41 வயதில் காசநோயினால் அவர் இறக்கும் முன் தனது நூல்களை மறுமுறை அச்சிட வேண்டாம் என்று நடேஷ்டாவைக் கேட்டுக்கொண்டார் . ஏழு வருடங்களே நீண்ட அவரது இலக்கிய வாழ்வில் இரண்டு நாவல்களும் பத்து குறுநாவல்களும் எழுதியுள்ளார். இதில் city folk and country folk மட்டுமே அவர் மறைவிற்கு பின் மீள் அச்சிடப்படும் ஆக்கம்.
முதல்நிலை வாசிப்பில் இது சிற்றூர் மக்கள் நகர மக்களை விட மேலானவர்கள் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் கதையாகத் தோன்றினாலும், அதன் நுணுக்கங்கள் இன்னும் ஆழமான வாசிப்பைக் கோருபவை. ரஷ்யாவில் அடிமைமுறை ஒழிப்பு கொண்டுவரப்பட்ட கால பிண்ணனியில் விரிகிறது இந்த நாவல். அந்த ஆணையின் விளைவுகளை பிரச்சாரம் ஆக்காமல் விவரிக்கிறது. நஸ்டாஸ்யா தன் நிலத்துடன் பிணைந்த வேலையாட்களை தனது குடும்பம் என்றே கொள்கிறாள். மாறாக அவர்களை தன் பக்கம் கொண்டுவருவதற்காக மட்டுமே ஆன்னா அவர்களிடம் அன்பாகப் பேசுகிறாள். அதற்கு நேர் மாறாக, அவர்களிடம் தனக்கு உண்டான பிணக்கு தீர, நேரே அவர்களிடம் சமானமாக நடத்தி விவாதிப்பது நடாஸ்யா மட்டுமே. சட்டங்களும், ஆணைகளும் பிறப்பிக்கப்படலாம், ஆனால் பொது சிந்தனையில் அது தீவிரம் பெற்று, தனி மனித சிந்தனையில் அது நிலைபெறும் மட்டும் அது வெறும் சட்டம் மட்டுமே. ஆஷாபூர்ணா தேவியின் பிரதம் பிரதிஸ்ருதியின் சத்தியவதியை போல, நடாஸ்யாவும் சட்டத்தை நடைமுறையாக ஆக்க என்ன செய்வது என்று சிந்திக்கிறாள். இன்னும் இந்த சிந்தனையை விரித்தெடுத்தால், இந்த வகையான சட்டங்களை முதல் கட்டத்தில் நின்று ஏற்க வேண்டிய சூழ்நிலையில் உள்ள பெண்களே சத்தியவதி மற்றும் நடாஸ்யா போல, அதை நிஜமாக ஆக்குவதன் வேதனையையும் தேவையையும் முழுதுணர்கிறார்கள்.

அதே போல, பெண்ணுரிமைகளை முன் வைக்கும் எராஸ்ட், பக்கம் பக்கமாக பெண்கள் அனைத்தையும் கற்க வேண்டும், எதையும் மிச்சம் வைக்காமல் அறிந்து கொள்ள வேண்டும் என்று எழுதுகிறான். ஓல்கா அவனை மறுப்பதை அவனால் ஏற்க முடியவில்லை. மேலும், செம்யோனை அவள் மறுக்க தான் காரணம் என்று நினைத்தது தவறு என்பதையும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளுக்கு அதற்கு மிக நியாயமான காரணங்கள் உண்டு என்று அறிந்தும், அவளது இடம் என்ன என்று தெரியாமல் செய்யும் மடமையாக அவன் கருதுவது அவனது போலியான சிந்தனைகளை வெளிக்கொண்டு வருகிறது. பெண் சுயசிந்தனை உள்ளவளாக இருக்க வேண்டும், ஆனால் அது தான் நினைத்த படியான சிந்தனையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற வெற்று அரசியல் தோரணையே அவன் செயல்களில் புலப்படுகிறது. ஓல்காவும், நடாஸ்யாவும் சிற்றூரில் இருக்கும் உலகறியா பெண்களாக இருக்கலாம், ஆனால் மனித அறத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். தங்கள் சுய சிந்தனையைக் கைவிடாதவர்கள். பெண்ணியம் என்ற கருதுகோளை அதன் நிறைநிலையில் கண்டவர்கள்.
தெளிவான, சீரிய சிந்தனைகளை முன்வைக்கும் சோஃபியா க்வாஷ்சின்ஸ்கயா ஏன் தனது எழுத்தை பிறர் வாசிக்க வேண்டாம் என்று எண்ண வேண்டும்? தனது சகோதரிகளின் மறைவிற்கு பின், ப்ரஸ்கோவியா, அவர்களை பேராசை நிரம்பிய சிறு வட்டத்திற்குள் பரிதாமாக வாழ்ந்தவர்கள் என்று சித்தரித்தரிக்கப்பட்டமைக்கு எதிர்வினையாக, ‘குடும்ப சரிதைகள்’ என்ற தலைப்பில் 1892இல் நடேஷ்டாவின் தொகுப்பு ஒன்றிற்கு முன்னுரை எழுதினார். பெண் எழுத்தாளர்களை பொதுவில் ஏற்காத ஒரு மனநிலையை அதில் அவர் குறிப்பிடுகிறார். இத்தகைய சிந்தனைகளை க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகளும், அவர்களது குடும்பத்தினரும் மைய சிக்கலாக உணர்ந்ததற்கு அவர்களின் குடும்ப பிண்ணனி காரணம். முக்கியமாக அவர்கள் உயர் குடியினர், பிரபுக்கள். அவர்களின் வாசகர்களும் பெரும்பாலும் அவ்வாறே. இந்த வட்டத்தின் நடுவில் கற்று, சிந்தனைகளை வளர்த்து, தாங்கள் கண்ட உலகை, அதன் போலித்தனங்களை, கருணையை அவ்வாறே எழுத ஒரு அடி பின் வைத்து எழுத வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்திருக்கிறது. தங்கள் இருவரையுமே இந்த நூலில் மலினிகோவ் சகோதரிகள் என்ற கதாபாத்திரங்கள் மூலம் விவரிக்கிறார் சோஃபியா. அவர்களும் இரு சகோதரிகள், ஏழ்மையை முழுதாய் துறக்க முடியாதவர்கள், நிறைய கற்றவர்கள், தங்கள் தந்தையோடு நெருக்கம் கொண்டவர்கள், செருக்கு நிறைந்தவர்கள், வயல்வெளி நடுவில் வாழ்ந்தும் நாள் முழுக்க எழுதிக் தவிப்பவர்கள், வெயில் காணாதவர்கள், கொஞ்சம் காசு வந்தாலும் நாடகம் காண செலவழிப்பவர்கள், நிச்சயமாய் கல்யாணம் செய்துகொள்ள போகாதவர்கள். அங்கதம் மேலிடும் சுயசரிதை அது.

நகைச்சுவை, கறாராக நோக்கும் பார்வை, அதை எழுதும் நடையில் மனிதர்கள் மேல் கொண்ட அன்பு இவை எல்லாம் இணைந்தது சோஃபியா க்வாஷ்சின்ஸ்கயாவின் ஆக்கம். இழப்பு என்பது இவரின் ஒரே ஒரு நூல் மட்டுமே எஞ்சி நிற்கிறது என்ற நிஜம்.
*
பத்தொன்பதாம் நூற்றாண்டு மறக்கப்பட்ட பெண் இலக்கியமேதைகள் – மதுமிதா கடிதம் – ஜெயமோகன் தளம்