நூல் அறிமுகம் – மூன்று நூல்கள்

(1)

ஜா. தீபாவின் மறைமுகம் (சிறுகதை) – சக்திவேல்

மறைமுகம் (சிறுகதைத் தொகுப்பு)

சமூகம் பெண்ணை பார்க்கும் விதம், நடத்தும் விதம். அதனால் அவள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், கடந்து வருவதற்கான தீர்வுகள், எதிர்பாலின ஆண்களும் சக பெண்களும் கொடுக்கும் தாக்கங்களும் அவற்றில் இருந்தான விடுபடல்களும் என பெண்ணை குறித்து நவீன இலக்கியத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இன்று மேலுள்ள விஷயங்களினால் வரும் சிக்கல்கள் முற்றிலும் காணாமலாகவில்லை என்றாலும் பெருமளவு குறைந்துள்ளன. இந்நிலையில் ஜா.தீபாவின் மறைமுகம் சிறுகதை தொகுப்பை வாசித்த பின் இன்றைய பெண் சந்திக்கும் முதன்மை தடை, அவளது அகத்தில் படிந்திருக்கும் தயக்கங்களும் அச்சங்களும் என்றே சொல்ல தோன்றுகிறது. ஒருவகையில் சென்ற ஆண்டு வெளிவந்த ஜா.தீபாவின் மறைமுகம் தொகுப்பை பெண் குறித்தான எழுத்தின் அடுத்தக்கட்ட பரிணாமம் என்றே கொள்ள வேண்டும்.

இத்தொகுப்பின் தலைப்பு கதையான மறைமுகம், வாஞ்சி நாதனின் கிளர்ச்சியை பின்னணியாக கொண்டு, அவனது மனைவியின் பார்வையில் புனைந்து உருவாக்கப்பட்டது. மறைவிலேயே ஒளிர்ந்து காணாதே போன முகத்தை குழந்தையில் தேடி, அதுவும் மடிய தனித்துவிடப்பட்டவளின் கதை. மறைவில் தட்டுப்படாது மறைந்திருக்கும் பெண்களின் அக முகத்தை அலசும் கதைகளாகவே தொகுப்பில் உள்ள கதைகள் அமைந்துள்ளன.

ஆண்களின் பார்வைக்கு அப்பால் தங்களை நிறுத்தி கொள்ள விழையும் ஒற்றைச் சம்பவம், ஓராயிரம் பார்வையில் வரும் பெண்கள், புராணத்தில் இருந்து சமகாலம் வரை தொடரும் பெண் உள்ளத்தின் குமுறல்களை பேசும் ஊறா வறுமுலை, நிணம் ஆகிய கதைகள், எதிர்பாரா விபத்தின் அதிர்ச்சியிலிருந்து தன்னை மீட்க வேறொரு வாழ்க்கையை அமைத்து கொள்ளும் நியமம், வாடைக்காற்று கதையின் நாயகியர், வரலாற்று நிகழ்வொன்றை எளிய பெண்ணின் தரப்பில் நின்று பார்க்கும் மறைமுகம், இளம்பருவத்தில் ஏற்பட்ட ஈர்ப்பை ஒரு ரகசியம் போல தனக்குள் பேணிக் கொள்ளும் இன்றே கடைசியின் இல்லத்தரசி. கசந்து போன காதல் வாழ்க்கையில் விடுபடும் முயற்சியில் தத்தளித்து கரையேறும் உள்வயம் கதையின் நந்தினி என வெவ்வேறு பெண்களை சமகாலத்திலும் வரலாற்று புராண தொடர்ச்சியிலும் வைத்து அவர்களின் அகத்தின் தடுமாற்றங்களையும் மீட்புகளையும் பேசுகிறது மறைமுகம் தொகுப்பு. இவற்றில் இருந்து விலகி நிற்கும் ஓரே ஒரு கதை பழி. மனைவியின் இழப்பை உணரும் ஆணின் துயரமாக விரிந்து பெண்ணின் இடத்தை சுட்டும் கதை.

இக்கதைகளில் குதிரையை உருவகமாக்கி முடிவெடுக்கும் முன் பெண்கள் அடையும் தத்தளிப்புகளை சொல்லும் உள்வயம், இழப்பின் வாடையை வாழ்வின் ஒளி கொண்டு மீட்டுக்கொள்ளும் வாடைக்காற்று, பழம்பாடல்கள் வழியாக சென்று காரைக்கால் புனிதவதியின் தொடர்ச்சியாக தன்னை கண்டடையும் நிணம், மீபுனைவு வகைமையில் அமைந்து பெண் கொள்ளும் வெற்றியை சொல்லும் ஊறா வறுமுலை, வரலாற்றை மாற்று பார்வையில் நோக்கும் மறைமுகம் ஆகிய கதைகள் முக்கியமானவை. சிறப்பாக வெளிப்பட்டு நின்றவை.

மறைமுகம் (மயூ பதிப்பகம், 2023)

எழுத்தாளர் ஜா. தீபா

(சக்திவேல்: இலக்கியவாசகர். மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர். சென்னையில் வசிக்கிறார். இணைய இதழ்களில் மொழிபெயர்ப்புகள், ரசனை விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். )

ஜா. தீபா: தமிழ்விக்கி

(2)

அ. வெண்ணிலாவின் மீதமிருக்கும் சொற்கள் (தொகுப்பு) – டெய்ஸி

மீதமிருக்கும் சொற்கள் (சிறுகதைகள்)

“மீதமிருக்கும் சொற்கள்” எழுத்தாளர் அ. வெண்ணிலா தொகுத்த நூல். 1930-2004 வரை தமிழில் எழுதிய பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. வெண்ணிலாவின் ஒரு சிறுகதையையும் சேர்த்து மொத்தம் 45 சிறுகதைகள் அடங்கியது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக 2007ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் நான் படித்திருக்கிற லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, ராஜம் கிருஷ்ணன், அநுத்தமா, சூடாமணி, வாஸந்தி, திலகவதி போன்ற பெண் எழுத்தாளர்களோடு அறியாத எழுத்தாளர்களின் கதைகளும் உண்டு. அவர்களைப்பற்றிய குறிப்புகளும், அந்தக் கதைகள் எங்கிருந்து எடுக்கப்பட்டது போன்ற விவரங்களும் உள்ளன. சிலருடைய புகைப்படமும் இருக்கிறது.

பெண்களின் உலகத்தைப் பொறுத்து தமிழ் இலக்கியத்தில் இன்னும் சொல்லப்படாதவை அதிகமுள்ளதாகவே நான் நினைப்பதுண்டு. 2021 விஷ்ணுபுர விழாவில் ஜா. தீபா அவர்களின் அமர்வு இருந்தது. அவர்களிடம் எல்லாரும் ஏன் பெண்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறீர்கள். எழுதுவதில் ஏன் இந்த வேறுபாடு என்று கேட்கப்பட்டது. நாடகங்கள், திரைப்படங்களுக்கான ஷூட்டிங் நடைபெறும் இடங்களில் உணவு ஏற்பாடு செய்யும் பகுதிகளில் பாத்திரம் கழுவ என்றே சில பெண்கள் வருவார்கள். கம்பெனி மாறினாலும் எல்லா இடங்களிலும் இந்தப் பெண்கள் பாத்திரம் கழுவிக் கொண்டே இருப்பார்கள். இதைப்போல அநேகம் பெண்கள் சம்பந்தப்பட்ட காரியங்கள் இன்னும் எழுதி முடிக்கப் படவேயில்லை. முடித்தபிறகு எல்லாரையும் எழுதலாம் என பதில் கூறினார்கள்.

இந்தக் கதை தொகுப்பில் நிறைய கதைகள் மேலோட்டமான வரதட்சணை கொடுமை, பெண்கள் அடக்க ஒடுக்கமாய் சீதையைப் போல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றியே உள்ளன. கார்த்திகைச் சீர் என்னும் கதையில் ஒரு வீட்டிற்கு வந்த பணக்கார மருமகள் லக்ஷ்மி. அவள் திருமணம் முடித்து வரும்போது 5000 ரூபாய் பணம் வரதட்சணையாய் கொண்டு வருகிறாள். அவள் கணவனின் தங்கையின் மாமியார் இப்ப அவங்க கையில் பணம் இருக்கு என்று தன் மருமகளை 500 ரூபாய் வாங்கிக்கொண்டுதான் வீட்டிற்கு வரவேண்டும் என்று துரத்தி விடுகிறாள். இந்தப் பணக்கார மருமகள் நாத்தனாரின் கஷ்டம் தாங்காமல் தன் வீட்டிலிருந்து கார்த்திகைச்சீர்க்கு வந்த எல்லாப் பொருட்களையும் 500 ருபாய் பணத்தையும் கொண்டுபோய் கொடுத்து அவளை வாழ வைக்கிறாள். வெள்ளி கூஜாவும், தங்க வளையலும் கேட்டு மருமகளை துரத்தி விடும் இன்னொரு கதையும் உண்டு. அந்தக் காலகட்டத்தில் வரதட்சணை பெண்களுக்கு எதிரான மிகப் பெரிய ஒரு வாதையாய் இருந்திருக்கு. இந்தக் கதைகளில் பெண் எடுக்கும்போதே குடும்ப சூழ்நிலையை நன்றாய் அறிந்து கொண்டுதான் பெண் எடுக்கிறார்கள். திருமணம் முடிந்ததும் பற்களையும், நகங்களையும் நீட்டுகிறார்கள்.

ஆனால் இப்பொழுது பெண்கள் தங்களுக்கு என்ன தேவை என்று தெளிவாய் முன்வைக்கிறார்கள். திருமணம் முடிந்து போகும் வீட்டில் கல்யாணத்திற்கு காத்திருக்கும் பெண்கள் இருக்கக்கூடாது. வீட்டிற்கோ வாகனத்திற்கோ மாதம் கட்ட வேண்டிய தவணை இருக்கக்கூடாது. சொந்த வீடு இருக்க வேண்டும். இதில் எல்லாம் உச்சமாய் மாமனார் நன்றாய் படித்து எதாவது ஒரு நல்ல வேலையில் இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவங்க பழகும் சூழ்நிலை நன்றாய் இருக்கும் என்று. இது ஒருவேளை முன்னால் நம் முன்னோர் பட்ட துன்பத்திற்கு பழி வாங்குவது இயற்கையே செய்யும் ஏற்பாடு போல் இருக்கிறது.

இந்தத் தொகுப்பில் தனக்கு அடுத்துப் பிறந்த தன் தம்பியுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீதி போதனைக் கதையாக ”நந்துவின் தம்பி” என்று ஒரு கதை உண்டு. உபய களத்திரம் என்ற கதையில் சிறு வயதிலேயே இருதய நோயால் கஷ்டப்படும் ஒரு மனைவி தன் கணவனை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள். படுக்கையில் இருக்கும்போது சக்களத்தி வந்தால் எப்படி அவளிடம் அன்பாய் நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பனையில் இருக்கிறாள். கணவன் முதலில் மனைவியை கடிந்து கொள்கிறான். கொஞ்சம் கொஞ்சமாய் வழிக்கு வந்து பெண் பார்க்கச் செல்கிறான். ஊரில் இருந்து தந்தி அடிக்கிறான். நீ விரும்பும் காரியம் நடந்தது. காலை வீணாவுடன் வருகிறேன் என்று. மனைவி கொஞ்சம் உடல் நலம் தேறி இருந்தவள் இந்தத் தந்தியைப் பார்த்ததும் மறுபடி படுக்கையில் வீழ்ந்து அலறி அழுகிறாள். அவளால் தாங்கவே முடியவில்லை. ஆனால் காலையில் கணவன் மனைவிக்குத் தெரியாமல் தான் கற்றுக்கொண்ட ஒரு வீணையுடன் வந்து மனைவியை ஆச்சிரியப்படுத்துகிறான்.

முதல் கதையான “காலச்சக்கரம்” வை. மு. கோதை நாயகி அம்மாள் எழுதியது மிக ஏழ்மையான குடும்பப் பின்னணி உள்ள காதலர்கள், காதலன் அவனுடைய வெளி நாட்டில் படிக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றும் ஒரு பணக்காரப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறான். அதனால் செய்வதறியாது இருக்கும் காதலியின் அம்மாவை ஏமாற்றி ஒரு நோயாளிப் பையனுக்கு (மிகப் பணக்காரர்கள்) திருமணம் செய்து வைக்கிறார்கள். காதலன் கட்டிக் கொண்ட பெண் பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவள். அதை மறைத்து திருமணம் செய்கிறார்கள் என்பது இப்பொழுது நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“பால் மனம்” கோமகள் எழுதியது கிருஷ்ணா எனும் ஒரு சிறிய பெண்குழந்தை குழந்தையாய் இருக்கும்போது பெருங்கருணையும் பேரன்பும் உள்ளவளாகவும், தெருவில் உள்ள விலங்குகளைக்கூட தாயன்போடு நேசிப்பவளும், காய்கறி விற்க வருகிறவர்களுக்கும் உணவிடச்சொல்பவளும், வளரும்போது ஆடுகளை கல்லால் எறிந்து விரட்டி, பிச்சைக்காரியை துரத்தி கொஞ்ச கொஞ்சமாய் உலகிற்கு ஏற்ற பெண்ணாய் மாறி விடுகிறவளைப் பற்றியது. ஆனால் இதை கதை சொல்லியாய் வரும் சித்தப்பா கதாபாத்திரம் விளக்கிக் கொண்டே வருகிறது. கவிஞர் தாமரை “அழித்தலும் காத்தலும்” என்று ஒரு கதை. திருமணமாகி கைக்குழந்தையுடன் கணவனைப் பிரிந்து தாய் வீடு வந்த ஒரு பெண்ணை எல்லோரும் சேர்ந்து மறுபடியும் கணவனோடு சேர்ந்து வாழ வற்புறுத்துகிறார்கள். அவனும் ஒரு குடும்ப நண்பரிடம் போய் தான் திருந்தி விட்டதாகவும், மனைவியத் தவிர வேறு ஒன்றும் அவனுக்கு பெரியதில்லை எனவும் சொல்லி மனைவியை சேர்த்து வைக்கச்சொல்லி கெஞ்சுகிறான். எனவே மறுபடி மறுபடி அவளையே குற்றவாளியாக்குகிறார்கள். அவள் சொல்லும் பிரச்சனையை காது கொடுத்து கேட்க யாருக்கும் முடியவில்லை. அவன் அவளை அந்தரங்கமாய் அவமானப்படுத்தி பாலியல் ரீதியாய் சுரண்டுகிறான். இதை புரிந்து கொள்ளக்கூட ஒருவரும் இல்லை.

எழுத்தாளர் அ. வெண்ணிலா

இந்தத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை மாலதி எழுதிய “ஆடிட்டர் கல்யாணமே”. அலுவலகத்தில் ஆடிட்டிங் வருவதை நகைச்சுவையாக எழுதி இருப்பார். அலுவலகப் பெண்கள் ஆடிட்டிங் வரும் நாள் அன்று எல்லாரும் ஒரே மாதிரி புடவையோ, சுடிதாரோ போட்டுக்கொள்ளலாம் என்று திட்டம் போடுவதையும், “டிரை ப்ரூட் புலவ்தானே” ஆடிட் வருமில்ல அப்ப செஞ்சு கொண்டு வரேன்” என்று பேசிக் கொள்வதையும், அதை ஒரு திருவிழா போல் எதிர்பார்ப்பதும் மாலதியின் இயல்பான உரையாடலும் புன்னகைக்க வைக்கிறது. ஏறக்குறைய நிறைய கதைகளில் வரதட்சணை ஒரு பெரும் கொடுமை ஆகவும், பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதாகவும் இருக்கிறது. ஆனால் இந்தக் கதைகள் வெளி வந்த காலங்கள் அப்படிப்பட்டது. வரதட்சணையாய் வந்த 5000 ரூபாயில் ஒரு வீடு வாங்க முடியும் என்பது அந்தக் காலகட்டத்தின் பொருளாதாரத்தை சொல்கிறது.

ஒரு காலகட்டத்தின் பெண் எழுத்தைப் பற்றி அறிய அ.வெண்ணிலா தொகுத்த இந்த நூல் பயன்படும்.

மீதமிருக்கும் சொற்கள் (சிறுகதைகள்) (NCBH, 2014)

டெய்ஸி

(டெய்ஸி: இலக்கிய வாசகர். திருச்சி இறையியல் கல்லூரியில் நூலகப் பணியாளராக உள்ளார். ஜெயமோகன், அ. முத்துலிங்கம், யுவன் சந்திரசேகர், அசோகமித்திரன் ஆகியோரை இலக்கிய ஆதர்சங்களாகக் குறிப்பிடுகிறார். தொடர்ந்து எழுத்தாளர்களுடன் கடிதங்கள் வழியாக உரையாடலில் இருக்கும் தீவிர வாசகி.)

அ. வெண்ணிலா: தமிழ்விக்கி

(3)

யா க்யாஸியின் (Yaa Gyasi) ஹோம் கோயிங் (Home Going) – விக்னேஷ் ஹரிஹரன்

(நாவல்)

அமெரிக்க ஆங்கில இலக்கியத்தை பொருத்தவரை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் அங்கு ஒரு பொதுப் போக்கு இருக்கும். அந்த காலகட்டத்தில் அந்த பொதுப்போக்கை அனுசரித்து எழுதப்படும் புத்தகங்களுக்கு பெரும் மோஸ்தர் இருக்கும். ஆனால் அந்த பொதுப்போக்கு மாறியவுடன் அந்த படைப்புகளில் பெரும்பாலானவை சீண்டுவாரின்றி போய்விடும். இருத்தலியல், பெண்ணியம், பிறழ்வு, சூழியல் எல்லாம் அவ்வப்போது அப்படியொரு மோஸ்தரில் இருப்பது வழக்கம். அப்படியான மோஸ்தர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கருப்பின வாழ்வு சார்ந்த இலக்கியத்திற்கும் புலம்பெயர் இலக்கியத்திற்கும் உருவாகி இருக்கிறது. அந்த இலக்கிய மோஸ்தர் அமெரிக்காவின் வெள்ளையின பொதுச்சமூகத்தால் இன்று வெளிப்படும் இனத் தூய்மைவாதத்திற்கும், இன மேட்டிமைவாதத்திற்கும் எதிரான ஒரு செயல்பாடு. அதன் சரித்தன்மைக்கோ சரியின்மைக்கோ அப்பால் அது ஒரு அரசியல் நிலைப்பாடு மட்டுமே. அதன் பின்னணியில் எந்த வலுவான அழகியல் புரிதலும் கிடையாது. ஆனால் இன்று அமெரிக்க இலக்கியத்தில் அதுவே நிலை.  அந்த மோஸ்தரின் பகுதியாக அமேசானின் பரிந்துரையின் பேரில் நான் வாசித்த பெரும்பாலான புத்தகங்கள் பெருத்த ஏமாற்றத்தையே அளித்தன. ஆனால் சில புத்தகங்கள் அந்த மோஸ்தரின் ஒரு பகுதியாக இன்று முன்வைக்கப்பட்டாலும் அவற்றுக்கு அந்த மோஸ்தருக்கு அப்பாலும் ஓர் இலக்கிய இடம் இருப்பதை உணர முடிகிறது. அத்தகைய புத்தகங்களுள் ஒன்று காணிய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எழுத்தாளர் யா கியாஸியின் (Yaa Gyasi) “Homegoing” (வீடடைதல்). கருப்பின வரலாறு, அடிமை வணிகம், பெண் மையக்கதாபாத்திரங்கள், பற்றாக்குறைக்கு எழுதியிருப்பதும் ஒரு கருப்பின பெண் எழுத்தாளர் என அமெரிக்க பதிப்பகங்களும் இலக்கிய முகவர்களும் புளகாங்கிதம் அடையும் அனைத்து அம்சங்களும் பொருந்தி வந்த நாவல் இது. ஆனால் அவற்றுக்கு அப்பால் அந்த நாவல் தன்னளவில் ஒரு முக்கியமான முயற்சி என்பதை சொற்பமான அமெரிக்க இலக்கிய விமர்சகர்களைத் தவிர எவரும் கவனிக்கவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் ஆப்ரிக்காவிலிருந்து அடிமையாகவும், அடிமை வணிகனின் மனைவியாகவும் தனித்தனியே விற்கப்படும் இரண்டு சகோதரிகளையும் அவர்களது சந்ததியினரையும் சமகால அமெரிக்கா வரை தொடரும் நாவல், கடந்த இருநூறு ஆண்டுகளில் கறுப்பின மக்களின் வாழ்வையும், ஆப்ரிக்க அமெரிக்க கண்டங்களின் வரலாற்றையும், அதற்கு அப்பால் மனிதர்களின் சுதந்திரம், விடுதலை, அன்பு, வன்மம், இனவெறி போன்றவற்றையும் சித்தரிக்கிறது. அரசியல் சரித்தன்மைகளுக்கு அப்பாற்பட்டு கருப்பின மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட வரலாற்று அநீதிகளுக்கு கருப்பின மக்களும் எவ்வாறு காரணமாக இருந்தனர் என்று சித்தரிக்கும் நாவல் தன்போக்கில் இனபேதங்களுக்கு அப்பால் மனிதர்களுக்குள் நிலவும் ஆதி மிருக இயல்புகளையும் வன்மங்களையும் தொட முயற்சிக்கிறது. வலுவான கதாபாத்திரங்கள், அசலான நாடகீயத் தருணங்கள், தெளிவான வரலாற்றுப் பார்வை, வெற்று அரசியலுக்கு அப்பால் விரியும் உண்மையான மானுட அக்கறை என வலுவான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது நாவல். அடிமை வணிகனின் மனைவியாக மாளிகையின் மேல் தளத்திலும் அடிமையாக அதே மாளிகையின் நிலவறையிலும் வாழும் ஒரே தாயின் இரு மகள்களில் தொடங்கும் நாவல் முழுக்க வாழ்வின் முரண்களும் காலத்தின் விசைகளும் செயல்படுகின்றன. வரலாற்றின் அந்த பெரும் பொம்மலாட்டத்தில் மனிதர்கள் தங்கள் அளவில் காமத்தாலும், ஆசையாலும், குற்ற உணர்ச்சியாலும், சினத்தாலும் ஆட்டி வைக்கப்படுவதை நாவல் சித்தரிக்க முயற்சிக்கிறது. இத்தகைய சாத்தியங்களையும் சிறப்புகளையும் உடைய நாவல் முழுமையாக வெற்றி பெற்று செவ்வியல் தன்மை அடைந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை என்றாலும், அதன் தோல்விகளும்கூட மேற்கத்திய மில்லேனியல் சிக்கல்களையும் சராசரி அரசியல் பிரகடனங்களையும் கொண்டு தன்னை திருப்திப் படுத்திக்கொள்ளும் இன்றைய ஆங்கில இலக்கியத்தில் அறியவையே.

Home Going (Novel) (Penguin Random House, 2016)

யா க்யாஸி

(விக்னேஷ் ஹரிஹரன் – இலக்கிய வாசகர், கட்டுரையாளர். சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். இணைய இதழ்களில் ரசனை விமரசனக் கட்டுரைகள் எழுதிவருகிறார். இலக்கியக் கூட்டங்களில் உரை நிகழ்த்தி வருகிறார்.)

*

அ. வெண்ணிலா: தமிழ்விக்கி

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *