“மீள்”: அது தன்னை என் வழியாக நிகழ்த்திக் கொண்டது – விஷ்ணுப்ரியா

விஷ்ணுப்ரியா

திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழித்தல், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தல் ஆகியவற்றை முன்னிறுத்தி இந்தியாவில் “தூய்மை பாரதத் திட்டம்” 2014 தொடங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் முகமாக காந்தி துப்புறவு செய்யும் படம் இடம்பெற்றது. அரசியல், பொருளாதாரம், சூழலியல் உட்பட எல்லாத் துறைகளிலும் காந்தியச் சிந்தனைகளே 21-ஆம் நூற்றாண்டில் மீட்டு எடுத்து பரிசீலிக்கப்படவேண்டியதாய் உள்ளது. இந்தியா முழுவதும் அக்டோபர் 2, 2019-க்குள் திறந்த வெளியில் மலம் கழிப்பது முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு செயல்படுத்தப்பட்ட தூய்மை பாரதத் திட்டம் 2023-லும் எட்டப்படவில்லை. முன்னேற்றமடைந்த மாநிலமான தமிழ்நாட்டிலும் கூட இன்னும் முழுமையாக திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழித்தல் சாத்தியப்படவில்லை என்பதே ஆச்சர்யமளிக்கிறது.

உலக அளவில் எழுபதுகளில் சுழலியலில் அழிந்து போகும் உயிரினங்கள், காடுகள் சார்ந்த பாதுகாப்பு என ஆரம்பித்த விழிப்பு தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் புவி வெப்பமடைதல், காலமாற்றம் சார்ந்து உலக அளவில் மானுடம் கூட்டாகச் செயல்பட வேண்டிய தேவையை முன்வைக்கும் ஒன்றாக வந்து நின்றது. இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் பெரும்பான்மை அறிவு ஜீவிகள் எல்லாத்துறைகளிலும் இன்று நீடித்த நிலையான வளர்ச்சி என்பதைப் பற்றியே வலியுறுத்தி வருகிறார்கள். 2000-2015 -களில் உலக அளவில் கூட்டாக செயல்படுத்தப்பட்ட இலக்குகள் வெறுமனே “வளர்ச்சி இலக்குகள்” (Millennium Development Goals)என்ற தலைப்பையே கொண்டிருந்தது. அதில் உறுப்பு நாடுகள் தத்தம் நாடுகளில் செயல்படுத்த வேண்டிய எட்டு அடிப்படையான வளர்ச்சி இலக்குகள் முன்வைக்கப்பட்டன். ஆனால் ஐக்கிய நாடுகளின் அடுத்த இலக்கு காலகட்டமான 2015-2030-களில் “நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள்” (Sustainable Development Goals) என மாற்றம் பெற்று பதினாறு விரிவான இலக்குகள் முன்வைக்கப்பட்டன. அதில் “சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம்” (SDG 6: Drinking Water & Sanitation) ஆறாவது இலக்காக உள்ளது. ஆரோக்கியமாகவும், உடல் நலனுடனும் வாழ அடிப்படைத்தேவை இவை இரண்டும். நீர் நிலைகளைப் புதுப்பித்தல், சூழலியல் சார்ந்த மாற்றுக் கழிப்பறைகள், கழிவு மேலாண்மை ஆகியவை இந்த இலக்கிற்குக் கீழேயே வருகிறது. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் வறுமைக்கு இணையாகவே கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய இலக்கு இது. குடிநீர்ப்பற்றாக்குறை, காலமாற்றம், புவி வெப்பமாதல், கழிவு மேலாண்மை, திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுத்தல், வறுமை என யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ள இக்காலகட்டத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி என்பது முக்கியமான சிந்தனை.

அவ்வகையில் விஷ்ணுப்ரியா நண்பர்களுடன் இணைந்து இயக்கிய ”மீள்” என்ற ஆவணப்படம் மாற்றுக் கழிப்பறை சார்ந்த தேடலில் ஆரம்பித்து கழிவு மேலாண்மை சார்ந்த பல புள்ளிகளைத் தொடக் கூடியது. ஏழு வருடத்திற்கும் மேலான உழைப்பு இதிலுள்ளது. மலைக்கிராமமான நெல்லிவாசலில் குறைந்த நீரைப் பயன்படுத்தி உபயோகப்படுத்தும் கழிவறைகளைப் பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கியுள்ளார். இது ஒரு ”மாதிரி கழிப்பறை”. தமிழ் நாட்டின் எல்லா இடங்களிலும் எடுத்துச் செல்லப்பட வேண்டிய திட்டமும் கூட.

2015-2022 காலகட்டங்களில் பல வகையான முன்னெடுப்புகளின் வழியாக உலக அளவில் பாதுகாப்பான குடிநீரைப் பெறும் மக்களின் எண்ணிக்கை 69% -இருந்து 73 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தப் புள்ளி விவரம் இத்தகைய கூட்டுச் செயல்பாட்டின் நேர்மறையான மாற்றத்தைக் குறிக்கிறது. உலகம் முழுவதும் பல வகையான சூழலியல் சார்ந்த செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தொடர்ந்து பேசியும் எழுதியும் என சூழலியல் சார் அறிஞர்கள் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் பொதுவான தீர்வுகளான சூழலியல் மாற்றுக் கழிப்பறை, கழிவு மேலாண்மை ஆகியவற்றை முன்வைக்கும் மீள் ஆவணப்படம் முக்கியமானது. அதன் முகமான விஷ்ணுப்ரியாவுடன் நீலிக்காக ஒரு உரையாடல்.

-ரம்யா

விஷ்ணுப்ரியா நெல்லிவாசல் மாணவர்களுடன்

*

பொதுவாகவே செயல் மனிதர்கள் அனைவரிலும் அந்த செயலை தேர்ந்தெடுக்கும் முன் அவர்களுக்கு இருந்த கனவிற்கும் அதற்குப்பின் இருக்கும் கனவிற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதைப் பார்த்திருக்கிறேன். உங்களுக்கும் அப்படித்தானா?

நான் கட்டிடக்கலையில் மேற்படிப்பு முடிந்திருந்தேன். திருமணத்திற்கு முன் எப்படியாவது சொந்தமாக வீடு கட்ட வேண்டும், ஒரு கட்டிடக்கலை சார்ந்த நிறுவனம் சொந்தமாக வைக்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. இப்போது அந்த எண்ணங்கள் துளியும் இல்லை. முழுவதுமாக இந்த ஆவணப்படமும் அதன் பேசுபொருள் சார்ந்த சிந்தனைகளே என் மூளையை ஆக்கிரமித்துள்ளது.

கட்டிடக்கலையில் படிப்பு முடித்தபின் பொதுவாக பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு அமையும் இல்லயா. சூழலியல் சார்ந்து இயங்க வேண்டுமானால் அதற்கான வாய்ப்பும் அங்குள்ளது தானே?

கட்டிடக்கலை படிப்பு முடிந்ததும் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும், பெரிய கட்டிடங்களை வடிவமைக்க வேண்டும். ஒரு பெரிய கட்டிடக்கலை நிபுணராக வேண்டும் என்று நினைத்தேன். படிப்பு முடிந்ததும் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தேன். நல்ல சம்பளம். ஆனால் வேலை பெரிதாக இல்லை. சும்மா உட்கார்ந்து கொண்டே இருப்பது போல தோன்றியது. கற்றுக் கொள்ள ஏதுமில்லாததால் வேலையை விட்டுவிட்டு பென்னி குரியகோஸிடம் பணிக்கு சேர்ந்தேன். அந்த சமயம் அவர் கேரளாவில் முசிரிஸ் என்ற திட்டத்தை எடுத்து செய்து கொண்டிருந்தார். அது நல்ல அனுபவமாக இருந்தது. எட்டு மாதங்கள் கேரளாவில் இருந்தேன். அங்கு பழங்கால கட்டிடங்களைப் புதுப்பித்து அருங்காட்சியகமாக மாற்றும் திட்டத்தில் உடனிருந்தேன். பழைய கட்டிடத்தை ஆவணப்படுத்துதலில் ஆரம்பித்து புதியதாக மாற்றுவது வரை உடன் இருந்து பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. அதன் பின் பெங்களூரில் சில மாதங்கள் பணிபுரிந்தேன்.

பென்னி குரியகோஸ் அவர்களிடம் பணிக்குச் சேர குறிப்பிட்ட காரணம் எதுவும் இருந்ததா?

பென்னி சாரை நான் என் கல்லூரி காலத்தில் ஒரு வொர்க்‌ஷாப் -ன் போது சந்தித்தேன். என் ஆழத்தில் சூழலியல் சார்ந்த கட்டிடக்கலை, பாரம்பரிய கட்டிடக்கலை சார்ந்து விருப்பம் இருந்திருக்கிறது. பணி மாறலாம் என்று முடிவெடுத்தபோது பென்னி சார்தான் நினைவுக்கு வந்தார். அவருடன் எட்டு மாதங்கள் பணி செய்தேன். இந்த காலகட்டங்களில் நேரடியாக அவருடன் அதிக நேரம் செலவிட்டதில்லை. ஆனால் அவர் வேலை செய்யும் முறைமைகள் வழியாக நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டது அதிகம். ஒரு திட்டத்திற்கு எவ்வளவு நுணுக்கமாக விரிவாக பின்புல ஆய்வு செய்கிறார் என்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு அருங்காட்சியகப் பணி ஆரம்பிக்கும் முன் அதனையொத்த உலகிலுள்ள அருங்காட்சியகப் பணிகளை நேரில் சென்று பார்வையிடுவது, கட்டிடப்பணிக்கான மூலப் பொருட்கள் தேர்வு சார்ந்து நேரில் ஆய்வு செய்வது, பணியை ஆரம்பிக்கும் முன் ஒட்டுமொத்தத்திற்கான வரைபடத்தையும் கையில் வைத்திருப்பது போன்றவைகளே அவரை ஒரு வெற்றிகரமான கட்டிடக்கலை நிபுணராக ஆக்குகிறது எனக் கண்டேன். இப்படி அவர் செயல்முறைகள் வழி நிறைய கற்றுக் கொண்டேன்.

இங்கிருந்து “மீள்” நோக்கி எப்படிச் சென்றீர்கள்?

நான் பெங்களூரில் இருந்தபோது தனியாகவே சில திட்டங்கள் வர ஆரம்பித்திருந்தது. அதன் பின் அலுவலகம் செல்வதை நிறுத்திக் கொண்டேன். சுதந்திரமாக சில திட்டங்களை எடுத்துச் செய்ய ஆரம்பித்ததும் என் கனவு சார்ந்த இலக்கு நோக்கி சென்று கொண்டிருப்பதாகவே நினைத்தேன். பொருளாதார ரீதியாக நல்ல வருமானமும் வந்தது. ஆனால் இதற்கு இணையாகவே பாரம்பரிய, மண், மரபு சார்ந்த கட்டிடக்கலையின் மேல் இருந்த ஆர்வம் குறையவில்லை. தனியாக பணிபுரிய ஆரம்பித்தபோது ஓய்வு நேரம் அதிகம் கிடைத்தது. அப்போது அது சார்ந்த வாசிப்பை விரிவுபடுத்திக் கொண்டேன். அந்த சமயத்தில் பெங்களூரில் கட்டிடக் கலைஞர் வருணின் பயிற்சிப்பட்டறையில் சேர்ந்தேன். அதன் வழியாக அவரின் பதினைந்து நாள் குக்கூ ”மண் கட்டிடம்” சார்ந்த நேரடிப் பயிற்சிப்பட்டறைக்குச் சென்றேன். அங்குதான் சிவராஜ் அண்ணாவைச் சந்தித்தேன். அதன்பிறகு எல்லாமும் மாறிப்போனது (சிரிக்கிறார்). அங்குள்ள மனிதர்கள், அவருடனான தொடர் உரையாடல் என்னை முற்றிலுமாக மாற்றியது என்று சொல்லலாம்.

ஒட்டுமொத்தத்தையும் மாற்றக்கூடிய ஒரு சந்திப்பு என்று சொல்லலாமா?

நிச்சயமாக. இப்படி மனிதர்கள் இருப்பார்கள் என்பதே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு புதிய உலகத்திற்குள் நான் நுழைந்தேன் என்று சொல்லலாம். பணம் சம்பாதிக்க முடுக்கிவிடப்பட்ட ஒரு பாதையில் தான் நான் என் வழிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்பதை என்னைத் திரும்பிப் பார்க்கும் போது கண்டேன். பெரும்பாலும் நம் சமூகத்தில் அப்படித்தானே. எதில் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்பதை நோக்கித் தானே நம் இலக்குகளைத் தீர்மானிக்கிறோம். ஆனால் இங்கு நான் குக்கூவில் பார்த்த நபர்கள் வித்தியாசமானவர்கள். பீட்டர் அண்ணாவைப் பார்த்தபோதெல்லாம் இப்படி ஒரு மனிதரால் உழைக்க முடியுமா எனுமளவு உழைத்துக் கொண்டே இருப்பார். அவர் ஒரு கலைத்தன்மை கொண்டவர். பண்படாத நிலமாக இருந்த குக்கூ நிலத்தை அந்த ஜவ்வாது மலையுடன் சேர்த்து ஒரு காடாக மாற்றிவிட வேண்டும் என கனவு காண்பதைப் பார்த்திருக்கிறேன். அங்கிருந்து அது இன்று எப்படி மாறியிருக்கிறது என்று பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். இவர்களுடனான சந்திப்புகள் நான் முன்பு நம்பிய அனைத்தையும் உடைத்து வேறு திசை நோக்கிச் செலுத்தியது எனலாம்.

மீள் ஆவணப்படத்தின் துவக்கப் புள்ளி எது?

ஆஸ்திரேலியாவில் எனக்கு கட்டிடக்கலை சார்ந்த மேற்படிப்புக்கான வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவை விட்டு கிளம்பும் முன் சிவராஜ் அண்ணாவை பார்க்கலாம் என்று குக்கூ வந்தேன். பொதுவாக அவருடன் தனியாகப் பேச வாய்ப்பமையாது. எப்போதும் கூட்டமாக இருக்கும். அந்த சமயங்களில் எல்லோருக்குமானதையே பேசுவார். இந்த முறை தனியாக பேச வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ”நீ படித்த கல்வி யாருக்காவது பயன்படனும்” என்று ஒரு வார்த்தை சொன்னார். அது அப்படியே மனதில் தங்கிவிட்டது.

காஞ்சிபுரத்தில் ஒரு சிறுமி கழிப்பறை வசதி இல்லாததால் மலத்தை அடக்கி வைத்து இறந்து போனதைப் பற்றி அன்று எதார்த்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென என்ன காரணம் என்று தெரியாமல் மஞ்சள் படர்ந்து  இறந்து போன அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவள் திசுக்களிலும் மலக் கழிவுகள் இருந்ததாகச் சொன்னார்கள். இதைக் கேட்டபோது எனக்கு வந்த முதல் கேள்வி எப்படி ஒரு வீட்டில் கழிப்பறை இல்லாமல் போனது என்பது. அதுவும் இந்த காலகட்டத்தில், தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில் என ஆச்சர்யமாக இருந்தது. அவள் படித்த பள்ளியிலும் கழிப்பறை வசதி இல்லை என்பதும் என்னை பாதித்தது.

இந்த சந்திப்புக்குப் பின் ஆஸ்திரேலியா செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தேன். மனதிற்குள் இந்த எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருந்தது. இதற்கு என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். ஓய்வு நேரங்களில் அது சார்ந்த தேடுதலில் இருந்தேன். ஒரு விஷயத்திற்குள்ளேயே உலழும்போது நம் மண்டை ஒரு மாதிரி வினோதமாக யோசிக்கும். அப்படி மாற்றுக் கழிப்பறை சாத்தியங்களை யோசித்துக் கொண்டிருந்தேன். பல வகையான காரணங்களால் கட்டப்பட்ட கழிப்பறைகளும் பயன்படுத்தப்படாமல் ஆகிறது. முதலாவது தண்ணீர் பற்றாக்குறை. தண்ணீர் குறைவாக செலவு செய்யும் கழிப்பறைகள் கட்டினால் இதற்கான தீர்வு கிடைக்கும் என்று எண்ணி அது சார்ந்து தேடும்போது தான் உலகம் முழுவதும் அப்படியான மாற்று கழிப்பறைகள் இருப்பதைக் கண்டேன். அப்போதெல்லாம் யாரைப்பார்த்தாலும் இது பற்றி பேசிக் கொண்டிருபேன். அணத்தி எடுத்துவிடுவேன். பெரும்பாலும் சுற்றியிருக்கும் யாருக்கும் இதுபற்றி தெரியவில்லை. ஏன் இதை கட்டிடக்கலையில் சொல்லிக் கொடுக்கவில்லை என்று யோசித்தேன். எப்படி அழகாகக் கட்டுவது என்று தானே சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. திருச்சி முசிறியில் நம்மாழ்வார் அய்யா ஒரு மாற்றுக் கழிப்பறை திறந்து வைத்த தகவல் கிடைத்தது. அதைப் பார்த்து வரலாம் என்றும் அதை ஆவணப்படுத்தி யூடியூபில் போடலாம் என்ற நோக்கத்துடன் நானும் அயலு குமரனும் சென்றோம். மூன்று நாட்கள் பயணத்திட்டத்துடன் அங்கு சென்றால் அது வேறொரு பெரிய உலகத்தையும், மனிதர்களையும் நோக்கித் திறந்துவிட்டது. அதுதான் ஏழு வருட தொடர் பயணமாக அமைந்து ஒரு ஆவணப்படமாக மாறியுள்ளது. சிலசமயம் தோன்றும் அது தன்னை என்வழியாக நிகழ்த்திக் கொண்டது என்று. இந்த புவிக்கு, அதன் சூழல் நன்மைக்கு என்ன தேவையோ அதைச் செய்ய சில மனிதர்களை அது தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. அப்படியான மனிதர்களை இந்த ஆவணப்படம் வழியாகக் கண்டேன்.

கழிப்பறை வசதி இல்லாதவர்களுக்கும் வறுமைக்கும் மிக நெருங்கிய தொடர்புள்ளது. இது ஒரு வகையில் ஒடுக்கப்பட்ட மக்கள், விளிம்புநிலை சார்ந்த மக்கள், நகரத்தின் வளர்ச்சி காரணமாக புறந்தள்ளப்பட்டவர்கள், துப்புறவுப் பணியாளர்கள் ஆகியவர்களைப் பற்றிய ஆவணப்படுத்தலும் தான் என்று சொல்லலாமா?

ஒரு வகையில் ஆம் எனலாம். ஆனால் அதற்கு இணையாகவே மாற்றுக் கழிப்பறை சார்ந்து இயங்கிய ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், சூழலியல் ஆர்வலர்கள் என பலரைச் சந்தித்தோம். தாங்கள் கவனிக்கப்படுவோம் என்றோ அல்லது ஏதோவொரு பிரதிபலன் எதிர்பார்த்தோ அல்லாமல் செயல் செய்து கொண்டிருக்கும் மனிதர்களைக் கண்டபோது தான் ஆவணப்படுத்தவேண்டும் என்று தோன்றியது. அப்படியான எண்ணம் திருச்சி முசிறி பயணத்தின் போது தான் தோன்றியது.

சுப்புராம்

முசிறி பற்றி சொல்லுங்கள்

காவிரிக்கரையில் உள்ள ஊர் அது. நதிக்கரை பல வழிகளில் அவர்களுக்கு உதவுகிறது. காலைக்கடன், குளித்தல், துணி துவைத்தல் எனப் பலவும் அங்கு நடக்கிறது. இங்கு மிகக் குறைந்த ஆழத்திலேயே நிலத்தடி நீர்மட்டம் வந்துவிடும். அதனால் செப்டிக் டேங்க் வசதியோடு கழிப்பறை என்பது சிரமம். அதனால் மக்கள் பெரும்பாலும் வெளியில் தான் காலைக்கடன் கழிப்பார்கள். இங்கு தான் மாற்றுக் கழிப்பறை வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்தது. அது கழிப்பறை போலவே இல்லை. பூங்காவிற்குள் செல்வது போல இருந்தது. மிகப்பெரிய கட்டிடம்.

எங்கள் ஆர்வத்தைப் பார்த்து சுப்புராம் ஐயா முசிறியில் செயல்படும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்யும் இடத்திற்கு கூட்டிச் சென்றார். குப்பைகள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது அங்கு குறைவாக இருந்தது. குப்பைகள் உரமாக மாற்றப்பட்டன. கழிவு மேலாண்மை சார்ந்து இத்தனை சிறப்பாக செயல்படும் ஒரு திட்டம் ஏன் பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை என்று தான் இதைப் பார்த்தபோது தோன்றியது.

V. கணபதி

இந்த திட்டத்திற்குப் பின்புலத்தில் இருந்தவர்கள் யார்?

எக்ஸ்னோரா (Exnora), ஸ்கோப் (SCOPE) போன்ற அரசு சாரா அமைப்புகள் இதன் பின்புலத்தில் இருந்தன. திருச்சி, முசிறி அரசு நிர்வாகம் இதில் முழுமையாக ஈடுபட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு பின் இருந்த அத்தனை அதிகாரிகள் பெயரையும் கூட கல்வெட்டில் பார்த்தேன். ஜெர்மனியில் இருந்தெல்லாம் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். பின்னர் ஏன் இவை நாடெங்கு அல்லது தமிழ்நாடு முழுவதுமாகவாவது செயல்படுத்தப்படவில்லை என்ற கேள்வி தான் வந்து எழுந்து கொண்டே இருந்தது.

சுப்புராம் ஐயா, தி ஹிண்டு நாளிதழில் ரிப்போர்ட்டராக இது சார்ந்து வேலை பார்த்த கணபதி ஆகியோரை முதலில் நேர்காணல் செய்தோம். முசிறியின் சுகாதரத்துறை சார்ந்த அதிகாரிகள், துப்புறவுத் தொழிலாளர்களைச் சந்தித்து உரையாடினோம். உறையூர், துறையூர் போன்ற பிற கிராமங்களில் சுப்புராம் ஐயா கட்டிக் கொடுத்த கழிவறைகளைப் பார்த்தோம். ஒவ்வொரு இடத்திலும் பல மாதிரிகளை சோதனை முயற்சியில் செய்து பார்த்திருக்கிறார். சில இடங்களில் அந்தக் கழிவின் மூலமாக வரும் மீதேன் வாயுவைக் கொண்டு சமயலுக்கான எரிபொருளைச் செய்வது என விரிவான பணிகள் செய்திருந்தார்.

சாந்தா ஷீலா நாயர்

சுப்புராம் ஐயா பால் கால்வர்ட் (Paul Calvert) என்பவரின் திட்ட மாதிரியைக் கொண்டு இவைகளைச் செய்திருந்தார்.  குப்பைகளை மேலாண்மை செய்வதற்கான மாதிரியை வேலூர் ஸ்ரீநிவாசன் அவர்களின் மாதிரியைக் கொண்டு செய்திருக்கின்றனர். திருச்சியின் கலெக்டராக இருந்த சாந்தா ஷீலா நாயர் பற்றி அப்போது தெரிந்து கொண்டேன். மழை நீர் சேகரிப்புத்திட்டம் அவரால் முன் மொழியப்பட்டது தான். நீர் மற்று சுகாதாரம் சார்ந்த துறையில் தான் அவர்கள் அதிகமும் வேலை செய்திருக்கிறார்கள். அவர் கேரளாவில் பால் கால்வெர்ட்டைச் சந்தித்திருக்கிறார்கள். அவர் வழியாக சூழலியல் சார்ந்த மாற்றுக்கழிப்பறை பற்றி அறிந்து கொண்டார். முசிறியில் ஒரு பொதுக்கழிப்பறை இடித்துக் கட்டும் வேலை ஆரம்பித்துக் கொண்டிருந்தபோது சாந்தா மேடம் பால்கால்வெர்ட் மாடலை பரிந்துரைத்திருக்கிறார்கள். அவர்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். சுப்புராம் ஐயாவின் உதவியோடு அவர்களைச் சந்தித்தேன். 2016-இல் அவரைச் சந்தித்தபோது பணி ஓய்வு பெற்றிருந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவரை மாநில திட்டக்குழு உறுப்பினராக சிறப்புப் பணியில் நியமித்திருந்தார்கள். தலைமைச் செயலகத்தில் அவர்களைச் சென்று சந்தித்து வந்தேன்.

ஸ்ரீநிவாசன் சார் வேலூரைச் சேர்ந்தவர். ஸ்வச் பார்த் மிஷனில் முக்கியமாகப் பங்காற்றியவர். அது சார்ந்து பயணங்களிலேயே இருப்பவர். அவரை நேர்காணல் செய்தோம். வேலூர் மிகவும் வெப்பமான பகுதி. ஒரு இடத்தின் காலநிலையை மரங்களை அதிகரிப்பதன் மூலம் அல்லது புதிய நீர் நிலைகளை உருவாக்குவதன் மூலம் 1-2 டிகிரி செல்ஷியஸ் வரை குறைக்கலாம். வேலூரில் மரங்களின் அடர்த்தியை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் இருந்தார். UNICEF திட்டம் அது. வேலூரின் மண் அத்தனை வளமானது இல்லை. அதனால் வீடுகளிலிருந்து மட்கும் குப்பைகளை பிரித்து வாங்கி உரமாகப் போட ஆரம்பிக்கிறார். மரம் வளர ஆரம்பிக்கிறது. அதன் வழியாக கழிவு மேலாண்மைக்குள் வந்து சேர்ந்தார். ஒன்று இன்னொன்றுடன் இணைந்து விரிந்து கொண்டிருப்பதை இங்கு கண்டேன்.

பால் கால்வெர்ட்டுக்கு மெயில் அனுப்பி அவரையும் சந்தித்து உரையாடினோம். இந்தியா முழுவதும் இது சார்ந்து பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போது வந்தது. அப்படித்தான் சுனிதா நரேய்ன், ராஜேந்திர சிங், விஸ்வனாத் ஸ்ரீகாந்தய்யா, இந்துகாந்த் ரகாடே ஆகியோரை சந்தித்தோம்.

பால் கால்வெர்ட்டை எங்கு சந்தித்தீர்கள்?

அவர் ஆறு மாதம் இங்கிலாந்திலும், ஆறு மாதம் கேரளாவிலும் இருப்பார். அவரோட கதையும் சுவாரசியமானது. இங்கிலாந்திலிருந்து கேரளாவிற்கு மீனவர்களுக்கு படகு கட்டிக் கொடுக்கும் பணிக்காக தொழில்முறையாக வந்தவர். அங்கு பெண்கள் உட்பட யாவரும் வெளியில் மலம் கழிக்கச் செல்வதைக் காண்கிறார். பெண்கள், குழந்தைகள் அவ்வாறு பாதுகாப்பின்றி செல்வது அவரை சலனப்படுத்தியது. அவருக்கு ஏற்கனவே சூழலியல் சார்ந்த அறிவு இருந்தது. மலம் கழிக்க ஒரு மூடப்பட்ட வெளி இவர்களுக்கு தேவை என்பதை உணர்ந்து பல வகையான வழிமுறைகளை யோசித்தார். கடற்கறைப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆழம் குறைவாக இருக்கும். சாதாரண கழிப்பறைகள் கட்டினால் அருகிலுள்ள கால்வாய்கள், நீர் நிலைகள் பாதிக்கும் என்று கருதி தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் “ECOSAN” கழிப்பறையை வடிவமைத்தார். ஒரு கழிப்பறையில் மூன்று கம்மோடுகளை வைக்கிறார். ஒன்று சிறுநீர் கழிக்க, இரண்டாவது மலம் கழிக்க, மூன்றாவது கழுவிக் கொள்ள. குறைவான தண்ணீர் பயன்பாட்டில் கழிப்பறைகள் வெற்றிகரமாக உருவாகின்றன. மலத்தை உரமாக மாற்றும் வழி செய்கிறார்.

பால் கால்வெர்ட்

உலக சுகாதார நிறுவனத்தில் பல வருடங்களாக இது போன்ற பாதுகாப்பும், சுகாதாரமும் கூடிய மாற்றுக் கழிப்பறைகள் வடிவமைப்புக்கான பல வருடத் தேடல் இருப்பதை தன் நண்பரின் மூலமாக அறிந்து அங்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துகிறார். அப்படி உலக அளவில் “ECOSAN” கழிப்பறைகள் பிரபலமாகின்றன.

உங்கள் நோக்கில் நீங்கள் பிரச்சனை என நினைப்பது எதை?

ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து லிட்டர் தண்ணீர் நம் கழிவை சுத்தம் செய்ய நாம் செலவு செய்கிறோம். வீணாக அவை கழிவு நீராக மாறிக் கொண்டிருக்கிறது. உண்மையில் நமக்கு அவ்வளவு தண்ணீர் இல்லை. குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்குவது, கழிவுக்குழாய் சுத்தீகரிப்பில் நடைபெறும் மனித மரணங்கள், கழிவு மேலாண்மை, குப்பைகளை உரமாக்குவது, குப்பைகளை அதன் ஆரம்பப் புள்ளியிலேயே சரியாகப் பிரிப்பது, கையாள்வது என பல பரிமாணங்களாக விரிந்து செல்லும் ஒன்று இது. எங்கிருந்து இத்தனை கழிவுகள் என்று போய் இக்கேள்வி நிற்கும். என்ன வகையான கலாச்சாரத்தில் இருக்கிறோம்? நுகர்வு சார்ந்து வரம்பில்லாமல் நாம் செய்யக்கூடியவைகளுக்கான மாற்று என்ன? என்ற ஆழமான கேள்வி நோக்கி வருவதைக் காணலாம். “நீடித்த நிலையான வளர்ச்சி” என்பது ஒவ்வொரு செயலிலும் நாம் கவனிக்க வேண்டியது என்பது புரிய வரும். நாம் மீள் வழியாகச் செய்வது அதன் ஒரு கூறு தான்.

உலக அளவில் காலமாற்றம் சார்ந்த கருத்து பேசப்பட ஆரம்பித்த காலத்திலிருந்து இதை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சொல்வது ஏதோவகையில் திரும்பவும் பிரச்சனைகளையே பேசுகிறது இல்லயா? இவற்றை ஆவணப்படுத்துவதால் மட்டும் என்ன என்ற கேள்வியே எஞ்சுகிறது?

ஆம். இதே வார்த்தையை சிவராஜ் அண்ணா சொன்னார். அதனால் தான் “மீள்” என்ற பெயர் வைத்தோம். பிரச்சனைகளைப் பேசிக் கொண்டே இருப்பது சோர்வை அளிக்கும் தான். ஏற்கனவே அவநம்பிக்கை அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் நம் செயல்பாடுகள் ஏதோவகையில் நம்பிக்கை அளிப்பதாகத்தான் இருக்க வேண்டும் என்றார் அண்ணா. மீள் என்றால் ”மீண்டு வருவது”. எனக்கும் எல்லா வகையிலும் இது மீண்டு வருவது தான்.

ஆவணப்படத்திற்காக நான் பல மனிதர்களைச் சந்திக்கும் போது இவர்கள் வழியாகவெல்லாம் இந்த இயற்கை தன்னை எப்படி மீட்டுக் கொள்கிறது என்பதையே ஆச்சரியமாகப் பார்த்தேன். நான் உட்பட அதன் ஒரு பகுதி தான் என்று தோன்றியது. இந்தப் பேட்டியும் கூட.

இங்கு நான் குறிப்பிட்ட மனிதர்கள் தங்களை முன் நிறுத்திக் கொண்டவர்கள் அல்ல. மாறாக சின்னச்சின்னதாக தங்களுடைய எல்லைக்குட்பட்டு ஏதோவொரு விஷயத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பவர்கள். இவர்கள் முன் வைக்கும் தீர்வுகளை, இவர்களின் சிந்தனைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரலாம் என்று நினைத்தோம். சிந்திக்கும் ஒரு சிலருக்காவது இது சென்று சேர வேண்டும்.

இது ஏதோவகையில் தனி மனிதனின் செயல்பாடு சார்ந்து மாற்றத்தைக் கோருவது தான் இல்லயா? இன்றைய காலகட்டத்தின் அறிவு ஜீவிகள் பெரும்பாலும் அதையே வலியுறுத்துவதைப் பார்க்க முடிகிறது.

ஆம். இவையாவும் சென்று நிற்பது தனிமனிதனின் நுகர்வு சார்ந்து தான். அவனுடைய பழக்கவழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே முதன்மையான தேவையாக வந்து நிற்கும். எல்லா மட்டத்திலும் இது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பொருட்களைப் பயன்படுத்தியவுடன் தூக்கி எறிய வேண்டும் என்ற சந்தை மனநிலையே பிரதானமாக உள்ளது. நான் பயன்படுத்திவிட்டேன் என் கையிலிருந்து, என் வீட்டிலிருந்து, என் தெருவிலிருந்து, என் கண் பார்வையிலிருந்து வெளியேறினால் போதும் என்று நினைக்கிறார்கள். இது தனிமனித உளவியலையும் உள்ளடக்கியது. மனிதர்களையே சந்தையாகப் பார்க்கும் காலகட்டம் ஆரம்பித்ததிலிருந்து ஆரம்பித்த ஒன்று.

கட்டிடக் கலைஞர் நீல்கந்த் சாயாவுடன் விஷ்ணுப்ரியா

”பயன்படுத்து தூக்கி எறி” என்ற வரியை ஆழமாகப் பார்த்தால் திடுக்கிடச் செய்வது. சுயம் சார்ந்த அந்தப் போக்கு இன்று இன்னும் அதிகமாகியுள்ளது. இத்தகைய காலகட்டத்தில் தனிமனித மாற்றம் சார்ந்த தீர்வு சாத்தியம் என்று நம்புகிறீர்களா?

உண்மைதான். நுகர்வுக்கலாச்சாரத்திற்கு முன்னான காலகட்டத்தில் நாம் ”தேவை” (Need) என்ற விஷயம் சார்ந்து தான் பணத்தை செலவு செய்தோம். “வேண்டும்” (Want) என்பதற்காக நாம் எதையும் வாங்கிக் குவித்துக் கொண்டதில்லை. உதாரணமாக நமக்கு வீடு ஒன்று வசிப்பதற்கு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதைத் தாண்டி பணம் அதிகம் வருகிறது என்பதற்காக முதலீடாக நிறைய வீடுகளை வாங்கி வைத்துக் கொள்ள ஆரம்பிக்கும் போக்கு அதிகரித்தது. இப்படி எண்ணற்றவைகளை சும்மா வேண்டும் என்பதற்காக வாங்கி வைத்துக் கொள்ளும் போக்கு அதிகரித்தது. ஒரு தனி மனிதனின் மதிப்பு அவர் வைத்திருக்கும் பொருட்களால் மதிப்பிட ஆரம்பித்தபின் இது மேலும் அதிகரித்தது. எனக்கு போதும் என்று எளிமையாக இருக்கும் நபரை நாம் குறைவாகவே மதிப்பிடுகிறோம். நானும் அதை அனுபவித்திருக்கிறேன். முன்பெல்லாம் ஊரில் பெரியவர்கள் யார் என்று கேட்டால் அவர் செய்த செயல்கள் வைத்தே மதிப்பிடப்படுவார். இன்று யாரிடம் எவ்வளவு பணம் உள்ளது, அதிகாரம் உள்ளது என்பதைப் பொறுத்தே மதிப்பிடப்படுகிறார்கள். இப்படி சேர்க்கும் பொருட்கள், வீடுகள், சட்டைகள், வண்டிகள் என எல்லாமும் குப்பையாகப் போகிறவை தானே. ஒரு போதும் மாயமாக மறைந்து போகப் போவது கிடையாது இல்ல?

அப்பறம் “பயன்படுத்து தூக்கி எறி” என்பது திடுக்கிடச் செய்வதாகச் சொன்னீர்கள். உண்மைதான். மனிதர்கள் இன்னொரு மனிதருடன் பேசினாலே உணர்வு சார்ந்த சிக்கல்கள் சரியாகிவிடும். இன்று யாரும் யாருக்காவும் இல்லை. இன்று உள சிகிச்சைக்காக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மனிதர்கள் மனிதர்களை பயன்பாடு கருதி மட்டுமே பார்ப்பதும் அதிகரித்திருக்கிறது. எந்த குற்றவுணர்வும் இல்லாமல் தூக்கி எறியும் போக்கு அதிகரித்துள்ளது. தனிமனித இன்பமே பிரதானமாக உள்ளது. தன்னைத்தாண்டி மட்டுமே பிறரை யோசிக்கும் பெரும்பான்மை மனிதர்களைக் கொண்டிருக்கிறோம் என்பதை முதலில் உணர்ந்திருக்கிறேன். அதனால் தான் ஏற்கனவே இப்படி இருப்பவர்களை மாற்றுவதைச் செய்வதை விட குழந்தைகள், மாணவர்களிடம் மாற்றத்தை எடுத்துச் செல்வதேயே பிரதானமாக சூழலியல், சமூகவியல் ஆர்வலர்கள் நம்புகின்றனர். அவர்கள் வழியாக வயது வந்தவர்களிடம் கேட்கும் கேள்வி ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனாலும் இந்த சிந்தனைகளை சூழலில் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருப்பதன் வழியாக பெரியவர்களிடமும் மாற்றம் உருவாவதை அனுபவத்தின் வழியாகக் கண்டிருக்கிறேன். எதுவும் இங்கு உடனேயே நடந்து விடாது. அதைப் பற்றிய சிந்தனையைக் கைவிட்டு விட்டு தொடர்ச்சியாக நீண்ட காலமாக செயல்படுவது மட்டுமே நாம் செய்ய வேண்டியது என்பதைப் புரிந்து கொண்டேன். என் நண்பன் அய்யலு குமரன் எப்போதும் சொல்லும் வரி ஒன்றுண்டு. “கண்ணுக்கு முன்னாடி உடனடியாக மாற்றத்தை எதிர்பார்த்து சோர்ந்து போகாத. உன் வேலையை நீ செய். அது வேலைய அது செய்யும்” என. அதை சோர்ந்து போகும்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்.

இது பல புள்ளிகளை இணைப்பதைப் பார்க்கிறேன்?

ஆம். இது வெறுமே கழிவு மேலாண்மை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல என்பதை பல தருணங்களில் உணர்ந்தேன். சுற்றுசூழல் சார்ந்த எந்தப் பிரச்சனையும் தனித்தது கிடையாது. இந்த ஆவணப்படம் நீர் மேலாண்மையையும் சென்று தொடுகிறது என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்தேன். தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிக ஆழத்தில் இருக்கும். நம் முன்னோர்களும் அதை உணர்ந்தே பல வகையான நீர் சேமிப்பு வழிமுறைகளை மேற்கொண்டிருக்கின்றனர். அவற்றின் பாதுகாப்பு, புனரமைப்பும் முக்கியம் என்பதை ஆவணப்படம் வலியுறுத்துவதைப் பார்த்தேன். கழிவுகளை சுத்தீகரிக்காமல் நீர் நிலைகளில் கலப்பதால் ஏற்படும் நீர் மாசு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கழிவுகள் யாவும் சென்று மாசுபடுத்தி நிற்பது நீர் நிலைகளையே. ஒருவகையில் இது நீருக்கான மீட்சியும் கூட. நிலத்திற்கான மீட்சி, காலமாற்றத்திற்கான தீர்வு என பலவும் இந்த ஆவணப்படம் தொட்டுச் செல்லும்போது சிலிர்ப்பாக உணர்ந்திருக்கிறேன். சிறிய ஒரு செயல்பாடு சென்று தொடும் பெரிய ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ளும் போது இதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன்.

விஷ்ணுப்ரியா களத்தில்

செயற்களத்தில் இயங்கும் பெண்கள் அனைவரிடமும் கேட்கும் கேள்வி பாதுகாப்பு சார்ந்தும், வீட்டிலுள்ளவர்கள் உடன் நிற்கிறார்களா என்பதுதான். அது பற்றி சொல்லுங்கள்.

பாதுகாப்பு சார்ந்து பிரச்சனை இல்லை. சமூகவலைதளங்களில் முகம் தெரியாத நபர்கள் ஆரம்பத்தில் வரம்புமீறி நடந்து கொள்வதை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் செயல் சார்ந்து தீவிரமாக இயங்க இயங்க அது இல்லாமலானது. நமக்கான மனிதர்களையே நாம் கண்டுகொள்வோம். இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறேன். நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் உறவினர்கள் வீட்டில் தங்கியபடி தான் ஏழு வருடங்கள் ஆவணப்படம் முடித்துள்ளோம். ஒரு முறை ஒரு நண்பரின் உறவினர் வீட்டில் தங்கியிருந்தோம். அவர்கள் பயணம் செல்வதாகச் சொன்னபோது ஒரு கணம் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் போல என்று நினைத்து அடுத்து என்ன செய்வது என்று சிந்திப்பதற்குள் சாவியை எங்கள் கைகளில் கொடுத்தார்கள். தேவையான எல்லா பொருட்களும் வீட்டிலேயே உள்ளது வெளியில் சாப்பிட வேண்டாம் என்று அறிவுரைகள் சொல்லி கிளம்பிச் சென்றார்கள். மனிதர்கள் இன்னொரு மனிதரின் மேல் வைக்கும் நம்பிக்கை ஊக்கம் தந்திருக்கிறது. அப்படி இந்த ஏழு வருடங்களும் பல வகையான நல்ல நினைவுகளால் தான் நிறைந்துள்ளது என்பதை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

வீட்டைப் பற்றிக் கேட்டீர்கள். அப்பா தான் எனக்கு எல்லாமுமே. அப்பா ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணி செய்தார். எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் எங்களையும் கூட்டிச் சென்றார். நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என மெனக்கெட்டவர். அவருடைய அலுவலகம் சிவகாசியில் இருந்த போது மதுரையில் தான் எங்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும், வாழ்வும் மேம்பட்டதாக இருக்கும் என்று சொல்லி எங்களை மதுரையில் குடியமர்த்திவிட்டு அவர் தினமும் அங்கிருந்து அலைந்து அலுவலகம் சென்று வந்தவர். மும்பை, கென்யா, தான்சானியா என அவர் வேலை பார்த்த பல இடங்களில் தங்கிப் படித்திருக்கிறேன். அது உலகைப் பற்றி, மனிதர்களைப் பற்றிய விசாலமான பார்வையை அளித்திருக்கிறது. படிப்பு சார்ந்து நான் எடுத்த எல்லா முடிவுகளுக்கும் உடனிருந்தார். என் உடன்பிறந்தவர் ஒரு அக்கா. இப்போது ஆஸ்திரேலியாவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். நாங்கள் இருவரும் சுதந்திரமாக இயங்க அப்பா தான் காரணம். தனிவாழ்க்கை சார்ந்தும், வேலை சார்ந்தும் எந்தப் பிரச்சனையானாலும் அவர் எங்களுடன் நிற்பார். இந்தச் செயல்பாடு சார்ந்தும் அவர் உடன் நிற்கிறார். அம்மாவும் அப்படித்தான்.

நெல்லிவாசலில் கட்டப்பட்ட மாற்றுக்கழிப்பறைகள்

இந்த நீண்ட பயணமெல்லாம் நெல்லிவாசலில் நீங்கள் ஒரு மாற்றுக் கழிப்பறை அமைக்க வேண்டும் என்று ஆரம்பித்தது தானே? அது நிறைவடைந்ததா?

(சிரிக்கிறார்..) ஆமா. பின்னே! நெல்லிவாசல் இந்த பயணத்தை முழுமைப்படுத்தும் ஒரு வட்டம் எனலாம். 2016-இல் கட்டலாம் என ஆரம்பித்து அது சார்ந்து தேடி அலைந்து ஆவணப்படம் எடுத்து மீண்டும் வந்து இங்கு அந்த கழிப்பறையைக் கட்டி முடித்தபோது தான் இந்தப்பயணம் முழுமையடைந்தது. கட்டும்போதே அதன் மீது ஆர்வத்தைத் தூண்டுவதும் முக்கியம் என்று நினைத்தேன். அதனால் தான் வித்தியாசமான கட்டுமான அமைப்பில் கட்டினோம். சிறுவர்களை அது தூண்டியது. கட்டும்போதே வந்து நின்று பார்க்க ஆரம்பித்தார்கள். கட்டி முடித்ததும் அவர்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டு பயன்பாட்டுக்காக விடப்பட்டது. பல வகையில் அது அவர்கள் கூடும் இடமாக அழகான ஒரு இடமாக இன்று மாறி நிற்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற மாதிரிகளை தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக எனக்கான நினைவூட்டல் நெல்லிவாசல்.

எதிர்காலத்திட்டம் பற்றி சொல்லுங்கள்?

இந்த ஏழெட்டு வருடங்களாக மீள் தவிர நான் எதையும் யோசிக்கவில்லை. இப்போது இதை சர்வதேச திரைப்பட விழாக்கள், சூழலியல் சார்ந்த திரைப்பட விழாக்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் உள்ளோம். அகமதாபாத்தில் 40 நிமிடங்கள் கொண்ட ஆவணப்படத்தைத் திரையிட்டோம். நல்ல வரவேற்பு. சென்னையிலும் திரையிட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைப் பார்க்க வேண்டும். ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும். அதன்வழியாக மட்டுமே இது முழுமையடையும். மேலும் பரவலாக இதை மாணவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. மாற்றம் என்பதை அந்தத் தலைமுறையிலுள்ளவர்கள் வழியாகவே எடுத்துச் செல்ல முடியும்.  

பின்ன நெல்லிவாசல் திட்டம் சார்ந்து தொடர்ச்சியாக அவர்களிடம் சென்று அதை உபயோகிக்க ஊக்கப்படுத்துவது. இது போன்ற மாதிரி சூழலியல் கழிப்பறைகளை பல இடங்களுக்கு எடுத்துச் செல்வது போன்றவை தான் இப்போதைக்கு மனதில் உள்ளது. இதுவே நம்மை வழி நடத்தும் என்று தோன்றுகிறது. இப்போது எல்லாமுமே “மீள்” தான் எனக்கு.

இதற்கான செலவு எவ்வளவு ஆகிறது? போதுமானவையாக உள்ளதா?

இல்லை. பெரும்பாலும் குக்கூ நண்பர்களிடமிருந்து தான் வாங்குவோம். 2016-இல் ஆரம்பித்த பணியை இப்போது தான் முடித்தோம் என்றால் அதற்கு ஒரு வகையில் பொருளாதாரமும் காரணம். ஆவணப்படம் அதற்கான தயாரிப்புகள் தான் தாமதத்திற்கு காரணம் என்றாலும் புரவலர்கள் கிடைக்காததும் ஒரு முக்கியக் காரணம். ஆவணப்படம் எடுக்கும் போதும் இந்தச் சிக்கல் இருந்தது. பதிவுக்கருவி எல்லாமுமே நண்பர்களிடம் கடன் வாங்கியது தான். இந்தியா முழுவதும் பயணம் செய்தோம். கட்டாயமாக வெளியில், வசதியான இடங்களில் தங்கக் கூடாது என்று முடிவெடுத்தோம். பெரும்பாலும் நண்பர்களின் வீடுகளில் தங்கினோம். உணவு மற்றும் பிற விஷயங்களில் ஆடம்பரத்தைக் குறைத்துக் கொண்டோம். நடுவில் க்ரெளட் ஃபண்டிங்காக சமூக வலைதளத்தில் பதிவிட்டபோது சில முகம் தெரியாத நண்பர்கள் உதவினார்கள். பணம் இல்லாதபோது படப்பிடிப்பை தள்ளிப்போட்டு அது சார்ந்த பிற வேலைகளைப் பார்ப்போம்.

இன்னும் தேவை உள்ளதா?

ஆம். உள்ளது. ஆவணப்படம் ஆங்கிலம் சார்ந்த ஒலிப்படத்தொகுப்பு வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது. ஆவணப்படத்தை திரையிடுவதற்கான வேலைகள் பயணங்கள், அடுத்தகட்ட பணிகள் என பலவற்றுக்கும் புரவல் தேவையாக உள்ளது.

நெல்லிவாசல் பள்ளிக் குழந்தைகள் (படம்: வினோத் பாலுச்சாமி)

மீள்” செயல்பாடுகளுக்கு உதவ:

  • Gpay No: 9677749511

Bank of Baroda
Chokkikulam Branch, Madurai 
Vishnu Priya S
Account No. 05540100017230
IFSCode: BARB0MADAKU
(Fifth character in IFSC is zero)

இணைப்புகள்:

மீள் ஆவணப்படம் முன்னோட்டம் 1

மீள் ஆவணப்படம் முன்னோட்டம் 2

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *