ஹன்னா அரென்ட் – சைதன்யா

“நீதி தனிமையைக் கோருகிறது. அது துயரை அனுமதிக்கிறது, கோபத்தை அல்ல.”

-ஹன்னா அரென்ட்

1961-ல் ஜெருசலேமில் நிகழ்ந்த ஐக்மனின் குற்ற விசாரணை உலகமே அன்று கவனித்துக் கொண்டிருந்த ஒரு நிகழ்வு. அடால்ஃப் ஐக்மென் (Adolf Eichmann) என்பவர் நாசி ஜெர்மனியில் முக்கியமான அதிகாரப் பொறுப்பில் இருந்தார். அவரது உதவியுடன் லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டனர் என்பதே அவர் மீது இஸ்ரேலால் சாட்டப்பட்ட குற்றமாக இருந்தது. அந்த குற்ற விசாரணைக்காக அர்ஜென்டினாவில் பதுங்கி வாழ்ந்துக் கொண்டிருந்த ஐக்மன் அர்ஜென்டினா அரசுக்கே தெரியாமல் இஸ்ரேல் உளவுத்துறையால் கடத்தி கொண்டுவரப்பட்டார். இஸ்ரேல் அப்பொழுது மூர்க்கமான தேசப்பற்றையும் யூதர்களின் ‘வாக்களிக்கப்பட்ட நிலம்’ குறித்த விரிவான வெற்றிப் புராணங்களையும் சமைக்கத் தொடங்கிய காலம். அதற்காகவே இப்பொது விசாரணையை ஜெருசலேமில் நிகழ்த்தினர். 

அன்று நியூ யோர்கர் (The New Yorker) பத்திரிகையின் சார்பாக அவ்விசாரணையை நேரடியாக பதிவு செய்ய ஹன்னா அரென்ட் (Hannah Arendt) ஜெருசலேமிற்கு சென்றார். ஹன்னா அரென்ட் அக்காலகட்ட சிந்தனையாளர்களுள் முக்கியமானவர். 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் கோட்பாட்டாளராக அறியப்படுபவர். அரென்ட் ஐக்மனின் விசாரணையை நேரில் காண நியூ யோர்கரை அணுகி பத்திரிகையின் சார்பாக ஜெருசலேம் சென்றார். பின்னாளில் அவ்விசாரணையை முன்வைத்து அவர் எழுதிய ஜெருசலேமில் ஜக்மன் (Eichmann in Jerusalem: A Report on the Banality of Evil) நூல் பல வருடங்களுக்கு அறிவுத்தளத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஹன்னா அரென்ட்

ஹன்னா அரென்ட், 1906 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தார். அவரது குடும்பம் ரஷ்யாவிலிருந்து குடியேறியவர்கள். அன்று ரஷ்யாவில் யூத எதிர்ப்பு அதிகமாக இருந்த காரணத்தால் அன்றைய ஜெர்மனிக்குள் குடிபுகுந்தனர். சிறு வயதில் இருந்தே ஹன்னா தனது யூத அடையாளத்தை பெரிதாக உணரவோ பொருட்படுத்தவோ இல்லை. அவரது கவனம் முழுக்க தத்துவ விசாரணையிலே இருந்தது. 

அரென்ட் ஹெகல், ஷுமன் போன்ற முக்கியமான தத்துவவாதிகள் பயின்ற புகழ்பெற்ற ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் (Heidelberg University) தத்துவக் கல்வி பயின்றார். உளவியல் தத்துவவாதியான கார்ல் யாஸ்பர்ஸின் (Karl Jaspers) கீழ் ஆய்வுப்பணியை மேற்கொண்டார். மேலும் ஃப்ரைபர்க் பல்கலைகழகத்தில் (Freiburg University) அன்று பிரபலமாக இருந்த தத்துவவாதிகளான ஹுஸர்ல் (Husserl), ஹைடகரின் (Heidegger) வகுப்புகளிலும், சொற்பொழிவுகளிலும் கலந்துகொண்டார். ஹைடகரின் ‘இருத்தல்‘ குறித்த சிந்தனைகள் அரென்டை பெரிதும் ஆட்கொண்டன.

மார்ட்டின் ஹைடகர்

ஹைடகர், தனிமனிதனின் உலகியல் இருப்பு என்பதை ‘டாஸைன்’ (Dasein) என்னும் தத்துவ குறிச்சொல்லால் விளக்கினார். ஹைடகரின் டாஸைன் உலகியலுக்குள் வீசப்பட்ட ஒரு இருப்பு. கார்ல் யாஸ்பர்ஸ் இந்த இருப்பு இருத்தலின் துயர் அல்லது பதற்றத்தை அணுகியறியும் போது தான் உண்மையான இருப்பாக மாறுகிறது என்கிறார். இவர்கள் இருவரின் தத்துவ சிந்தனைகளின் தாக்கம் அரென்ட் எழுதிய ‘காதலும் புனிதர் அகஸ்டினும்’ (Love and Saint Augustine: On the concept of love in the thought of Saint Augustine: Attempt at a philosophical interpretation) என்னும் ஆய்வு கட்டுரையில் உள்ளது. ஹைடகரும் யாஸ்பர்ஸும் கூறும் உலகியல் மீதான பதற்றம் மற்றும் அது உருவாக்கும் பற்று அரென்டின் மொழியில் உலகின் மீது புனிதர் அகஸ்டின் கொண்டிருந்த காதலாக மாறுகிறது. 

“உலகின் காதலனே, இப்புவியின் மீது காதல் கொள்ள ஏன் இவ்வளவு கடினமாக உள்ளது.”

புனித அகஸ்டின்

அரென்டின் வாழ்வில் தத்துவ சிந்தனை மீது காதல் கொண்டு அலைந்த காலம் அது. ஹைடகரின் மீதும். அவர் திருமணம் ஆனவர் என்பதால் இருவரும் பெரும் உள நெருக்கடியிலும் இருந்தனர். இதே காலகட்டத்தில் யாஸ்பர்ஸின் வழிகாட்டலில் ஜெர்மன் ரொமாண்டிசிஸம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தீவிர உணர்ச்சி மிகுந்த கவிதைகளை எழுதினார். ஹைடகரின் மீது அவர் அப்போது கொண்டிருந்த உணர்வை ‘ஒரு தனித்துவமான ஆளுமை மீதான ஆழ்ந்த ஈடுபாடு’ என்று பின்னாளில் விளக்குகிறார் அரென்ட். 

கார்ல் யாஸ்பர்ஸ்

1930 களில் ஜெர்மனியின் அரசியல் சூழல் அரென்ட்டை நாசிசம் நோக்கி திருப்பியது. அதற்கு முன்பாகவே பல்கலைக்கழக சூழல்களில் பரவியிருந்த யூதர்களுக்கு எதிரான மனநிலையை அணுக்கமாக அறிந்திருந்தார் அரென்ட். அன்றைய அறிவியக்கத்திலிருந்து ஹைடகர் உட்பட பல முக்கியமான நபர்கள் நாசி  கட்சியை ஆரம்பகட்டத்தில் ஆதரித்தனர்.  ஹைடகர் நாசி கட்சி மாநாடுகளில் சென்று சொற்பொழிவுகளை ஆற்றியது ஹன்னா அரென்டிற்கு பெரும் அடியாக இருந்தது. அத்துடன் அவரிடமிருந்து தன்னை முழுவதுமாக  விலகிக் கொண்டார். 

அதன் பின் ஹைடகரின் மற்றுமொரு மாணவனரான குண்டர் ஸ்டெர்ன் (Gunter Stern) என்பவரை காதலித்து மணந்தார். குண்டருடன் இணைந்து ரீல்கவின் (Rilke) கவிதைகளைக் குறித்து ஒரு நூலை இயற்றினார். பயணங்களும் எழுத்தும் நிறைந்து அவர் மகிழ்ச்சியாக ஜெர்மனியில் இருந்த கடைசி நாட்கள் அவை. 

1933-ல் ஹிட்லர் ஜெர்மனியின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றி மூன்றாம் பேரரசை (Third Reich) நிறுவிய ஆண்டு. அதற்கு நான்கு வாரங்கள் கழித்து தனது ஆட்சியை கைப்பற்ற கம்யூனிஸ்டுகள் சதி செய்கிறார்கள் என்ற பெயரில் ரைக்ஸ்டாக் என்ற கட்டிடம் தீவைக்கபட்டது (Reichstagsbrand). இந்நிகழ்வு ஹன்னா அரென்டின் நினைவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று ஒரு நேர்காணலில் அவர் கூறுகிறார். அதன் பின் ஜெர்மனியில் நிகழ்ந்த கொடூரங்கள் ரைக்ஸ்டாக்கை மக்கள் நினைவிலிருந்து நீங்க செய்தது. ஆனால் பின்னாளில் நடக்கவிருக்கும் பேரழிவின் துவக்கமாக அந்நிகழ்வை அன்றே அரென்ட் கண்டார். வெகு விரைவிலேயே யூதர்களை நோக்கி நாசி அரசு திரும்பியது. முதலில் நாட்டிலிருந்து வெளியேற்றுவது பின் வதை முகாம்களுக்கு அனுப்புவது இறுதியாக முற்றாக யூதர்களை அழிப்பது என்று “யூத பிரச்சினை”க்கான ஹிட்லரின் தீர்வுகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டன.

இப்பெரும் வரலாற்று நிகழ்வில் தன் இடம் ஒரு அறைக்குள் அமர்ந்து தத்துவ விசாரணை செய்வதல்ல என்ற எண்ணத்தை ஹன்னா அரென்ட் அடைந்தார். மேலும் ஒரு யூதராக ஒடுக்கப்படும் போது யூதராகவே அதை எதிர்க்க வேண்டும் என்று கூறினார். அப்போது இயங்கி கொண்டிருந்த யூத இயக்கங்களில் சென்று சேர்ந்து களப்பணிகளை ஆற்றினார். யூதர்களுக்கு எதிரான வன்முறையை பதிவு செய்து எழுதினார். இதனால் அவர் நாசி ஜெர்மனியைவிட்டு தப்பிச்செல்ல வேண்டியிருந்தது. ஜெர்மனியில் இருந்து பிரான்ஸிற்கு பின் அங்கிருந்து அமெரிக்கா சென்றார். தன் இறுதி காலம் வரை அமெரிக்காவில் வாழ்ந்தார். 

ஐரோப்பாவில் இருந்த காலம் முழுக்க யூத இயக்கங்களுடன் இணைந்து பல பணிகளை ஆற்றினார். ஜையனிசம் (zionism) மீது நம்பிக்கை இருக்கவில்லை என்றாலும் அந்த காலத்தின் தேவை அது என்ற எண்ணத்தில் அவ்வாறு செயல்பட்டார். பின்னாளில் இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்களை ஒடுக்குவது குறித்து கடுமையாக கண்டித்து எழுதியுள்ளார். 

உலகப் போரை அடுத்து தான் செயல்பட்ட களத்தை ப்ராக்ஸிஸ் (Praxis) என்று அரென்ட் வகுக்கிறார். அது அரிஸ்டாட்டில் உருவாக்கிய சிந்தனை. அரிஸ்டாட்டில் மனித செயல்பாட்டை கோட்பாடு (Theoria), உருவாக்க செயல்பாடு (Poiesis), நடைமுறை செயல்பாடு (Praxis) என்று மூன்றாக வகுத்தார். இதில் ப்ராக்ஸிஸ் அன்றைய அறிவுத்தளத்தால் கைவிடப்பட்ட நிலையில் இருந்ததாக ஹன்னா அரென்ட் எண்ணினார். பின் நவீனத்துவ சிந்தனைகளால் நிரம்பியிருந்தது அன்றைய அறிவுத்தளம். எந்த வித செயல்பாட்டிலும் இறங்காமல் சுழல் சிந்தனைகளில் தேங்கியிருந்தது. இதனால் தன்னை ‘தத்துவவாதி’ என்ற அடைமொழியிலிருந்து ஹன்னா அரென்ட் விலக்கிக்கொண்டார். அதன் பின் அவர் சர்வாதிகாரத்தின் தோற்றுவாய் குறித்தும் நவீன சூழலில் மனிதனின் இருத்தல் சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் முக்கியமான நூல்களை எழுதத் தொடங்கினார். 

அவற்றுள் மிகவும் பரவலாக விவாதிக்கப்பட்ட நூல் ஜெருசலேமில் ஐக்மன். அரென்ட் தன் நூலில் குற்ற விசாரணையின்போது ஐக்மனை ஒரு கொடூரனாக சித்தரிக்க அங்கிருந்த வழக்கறிஞர்கள் முயற்சித்தனர் என்று எழுதுகிறார். ஆனால் அதற்கு நேர்மாறாக ஐக்மன் ஒரு சாதாரண அரசு அதிகாரியின் பாவனையும் தோற்றமும் கொண்டிருந்தார். “ஒரு அதிகாரியாக என் கடமையை ஆற்றினேன். எனக்கு எந்த வித யூத வெறுப்புணர்வும் இல்லை” என்று தன்னை முன்வைத்தார். மேலும் தன் கடமைகளை மிகவும் சிறப்பாக தன்னால் மட்டுமே ஆற்ற முடிந்தது என்ற பெருமிதமும் அவரிடம் வெளிப்பட்டது என்கிறார் ஹன்னா அரென்ட்.  

அடால்ஃப் ஐக்மென்

ஐக்மனுக்காக வாதிட்ட வழக்கறிஞர் அவர் எந்த தருணத்திலும் யாரையும் கொல்வதற்கு ஆணை பிறப்பிக்கவோ, கூறவோ இல்லை என்று வாதிட்டார். ஒரே ஒரு தருணத்தில் ஐக்மன் யூதர்களை கொல்ல நேரடியாக கூறியுள்ளார். 1941-ல் சேர்பியாவை ஜெர்மனி கைப்பற்றியபோது அங்குள்ள மக்கள் எதிர்ப்பை சமாளிக்க ஒரு ஜெர்மன் வீரனை அவர்கள் கொன்றால் ஆயிரம் யூதர்களையும் ஜிப்ஸிகளையும் கொல்வதற்கு அங்கிருந்த நாசி அதிகாரிகள் தீர்மானித்திருந்தனர். அதற்கான ஒப்புதலை ஐக்மன் கொடுப்பதற்கு முன்பே ஒரு சில அதிகாரிகள் அத்தீர்மானத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டிருந்தனர். ஜக்மன் அதற்கு “சரி” என்று பின்பு கூறியதும் கூட அக்கைதிகளை கொல்லவில்லை என்றால் அவர்களை நாடுகடத்த வேண்டியிருக்கும் அதற்கான ரயில் பெட்டிகளோ வாகனங்களோ இல்லை என்பதால் தான். இவ்வாறு ஒரு சாதாரண அரசு ஊழியனின் மனநிலையே ஐக்மனிடம் காண முடிகிறது என்று கூறுகிறார் அரென்ட். ஏதோ ஒரு இயக்கத்துடன் இணைந்திருக்க வேண்டும் ஆணைகளை சிரமேற்கொண்டு செய்துமுடிக்க வேண்டும் என்பதை தவிர  வேறு எண்ணங்கள் அவருக்கு இருக்கவில்லை என்கிறார். 

ஐக்மன் போர் முடிந்து தலைமறைவாக இருந்த காலத்தை தன் வாழ்வில் ஒழுங்கற்ற நிச்சயமில்லாத பதற்றம் அளிக்கக்கூடிய காலமாக நினைவுகூறுகின்றார்.

‘ஜெருசலேமில் ஐக்மன்’ நூலில் ஹைடகரின் இருத்தலியல் தத்துவ சிந்தனைகளின் தாக்கத்தை காணமுடியும். இந்த உலக யந்திரத்திற்குள் வீசப்பட்ட ஒரு தனிமனிதன் தன் முழு இருத்தலாலும் அந்த யந்திரத்தின் ஒரு பற்சக்கரமாக மாறி சுழல்வதையே ஐக்மனின் வாழ்க்கை காட்டுகிறது. ஒருவன் அனைத்து காரணிகளையும் ஆராய்ந்தறிந்து சிந்தித்து எல்லா செயல்களையும் செய்வதில்லை. பெரும்பாலும் செயலில் தடங்கல் ஏற்படும் போது தான் அதன் காரணிகளும் அதன் பின்புலமும் துலங்கி வருகிறது என்பது ஹைடகரின் தத்துவ சிந்தனையில் உள்ள கருத்து. ஒரு செயலை ஏன் செய்கிறோம் என்பதற்கு அச்செயல் அவ்வாறு தான்  செய்யப்படுகிறது என்பதை தவிர வேறு விடை சாதாரண மனிதர்களிடம் இருப்பதில்லை. அவ்வாறான இருத்தலை பொய்யிருப்பு (Inauthenticity) என்கிறார் ஹைடகர். இதற்கு அடுத்தகட்டமாக தன்  சாராம்சம் என்ன என்ற கேள்வியை ஒருவன் எட்டும்போது அவன் அடையும் உணர்வை இருத்தலியல் பதற்றம் (Existential Angst) என்கிறார் அவர். அந்த பதற்றத்தை புறக்கணிக்காமல் தழுவிக்கொள்பவனே உண்மையான இருப்பை எட்டுகிறான். 

ஆனால் அந்த  பதற்றத்திலிருந்து தப்பி ஒரு அமைப்புக்குள்ளோ நடைமுறை ஒழுங்கிற்குள்ளோ புகுந்து செயல்படும் மக்களே பெரும்பாலானோர். நாசி அரசின் மத்தியில் பல யூத வெறுப்பாளர்கள் இருந்தனர். ஆனால் ஐக்மன் போலவும் பலர் இருந்தனர். அவர்களின் அற உணர்வை புரிந்துகொள்ளவே ஹன்னா அரென்ட் தன் நூலில் முயற்சித்துள்ளார். தீமையின் நடைமுறைத்தன்மை (Banality of Evil) என்னும் கருத்தின் மூலம் அதை விளக்குகிறார். மேலும் முழுமுதல் தீமை  (Radical Evil) என்னும் காண்டின் தத்துவ கொள்கையையும் அரென்ட் பயன்படுத்துகிறார். முழுமுதல் தீமை என்பது மனித மனம் சட்டங்களை அதன் ஊற்றுக்கண்ணான நன்மையுடன் சேர்த்து புரிந்துகொள்ளாமல் தன்னளவில் தனி இருப்புகளாக பார்ப்பதாகக் கூறுகிறார். இந்நிலையில் சட்டங்களை மீறாத வரையில் ஒருவன் அறத்தோன் என்றாகிறது. சட்டங்களுக்கு கீழ் உறையும் நன்மையை உணர வேண்டியதில்லை என்றாகிறது. இப்படி சென்றால் மனித இனம் வேர்வரை சென்று பரவும் தீமை ஒன்றை காண நேரும் என்றார் காண்ட். 

ஐக்மனின் தரப்பாக வைக்கப்பட்ட வாதம் அவருக்கு எதிரான “குற்றசாட்டு கூறும் அர்த்தத்தில் அவர் குற்றவாளி அல்ல” (Not guilty in the sense of the Indictment). எதிர்தரப்பு வழக்கறிஞர் “வேறு எந்த அர்த்தத்தில் அவர் குற்றவாளி?” என்று இறுதிவரை கேட்கவில்லை என்று தன் நூலில் அரென்ட் கூறிகிறார். அதற்கான விடையையே அவ்விசாரணை வழியாக தேடிச்செல்கிறார். 

ஐக்மன் சட்டங்களின் ஊற்றுக்கண்ணை சென்று சேரவில்லை என்பதே அவரது  குற்றம். அவற்றை பிரக்ஞை இல்லாமல் செய்து முடிப்பதன் ஆபத்தை அவர் அனுபவம் மூலம் காணமுடிகிறது. மேலும் நாசி ஜெர்மனியில் அந்த அரசுக்கு துணை சென்ற பெரும்பான்மையான ஜெர்மானியர் செய்த குற்றமும் இதுவே. சட்டம் ஒழுங்கு அறம் அனைத்தும் அதன் ஊற்றாக சக மனிதன் மேலுளுள்ள அன்பை  கொண்டுள்ளது. அதை உணராமல் இருக்கையில் முழுமுதல் தீமையை நோக்கி மானுடத்தை செலுத்த முடியும். 

ஹன்னா அரென்ட் அவரது நேர்காணலில் தன்னை இளமையிலிருந்து செலுத்திய விசை என்பது ‘புரிந்துகொள்ள வேண்டும்’ என்னும் வேட்கை தான் என்கிறார். தன் வாழ்க்கை முழுவதும் மனிதனின் வெவ்வேறு முகங்களை கண்டு அவற்றின் சாரத்தை தொட முயன்றிருக்கிறார். அவர் கிட்டத்தட்ட வழிபட்டு வந்த தத்துவவாதியான ஹைடகர் கடைசியில் நாசிசத்திற்குள் சென்று விழுவதையும் புரிந்துகொள்ளவே முயன்றிருக்கிறார். ஹைடகரின் குற்றவிசாரணையின் போது அவர் நாசி ஆதரவாளர் என்று இறுதிவரை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.

சைதன்யா

மனித வரலாற்றின் மாபெரும் இனப்படுகொலையைக் கூட ஒற்றைப்படையாக அவர்கள் அனைவரும் கொடூரர்கள் மிருகங்கள் என்று அல்லாமல் அதன் நுட்பங்களையும் புரிந்துகொள்ள அரென்ட் முயன்றார். இதனால் அவர் யூதர்கள் மீது கருணையற்றவர் என்று குற்றமும் சாட்டப்பட்டார். நீதி என்பதை ஆழ்ந்த புரிதலுக்கு பின் நிகழும் ஒன்றாக அவர் காண்கிறார். இறுதியாக மானுடருக்கு என்ன சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு மனிதம் மீது நம்பிக்கையுடன் இருங்கள் என்று கூறி அந்த நேர்காணலை முடிக்கிறார். நாம் இன்னொரு படிச்சென்று மனிதனை நேசிக்கவேண்டும் என்று அவர் கூறுவதாக எடுத்துக்கொள்ளலாம். 

இப்புவியை அதிலுள்ள மானுடரை நேசிக்க ஏன் இவ்வளவு கடினமாக உள்ளது என்ற புனித அகஸ்டினின் கேள்விக்கு பதிலளிப்பதாய் இருந்தால்  “உலகை புரிந்து கொள்வது அவ்வளவு கடினமாக இருக்கிறதே அதனால் தான்” என்று ஹன்னா அரென்ட் கூறுவார்.

*

சைதன்யா: தமிழ்விக்கி

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *