களிநெல்லிக்கனி (வாயில்) – இசை
(ஒளவையார் பாடல்களை முன்வைத்து கவிஞர் இசை எழுதும் தொடர்: அறிமுகம்)
பழந்தமிழ் இலக்கியம் சார்ந்த என் எழுத்துக்களெல்லாம் நவீன இலக்கிய வாசகர்களை முன்னிலைப் படுத்தியதே. அவர்களில் நமது தொல் இலக்கியங்களின் மீதும் ஆர்வம் உள்ளவர்களின் எண்ணிக்கை சமீபமாக கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. அவர்களுக்கே இந்தப் புதிய தொடர்.
அவ்வையார் பாடல்களை மொத்தமாக தொகுத்து சில நூல்கள் வெளியாகி உள்ளன. அவ்வையின் பிறப்பு, அவரது பங்களிப்புகள், பாதிப்புகள், அவர் குறித்த புராணக் கதைகள், அவ்வை கோயில்கள் என பல்வேறு விசயங்களும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஆனால் நவீன இலக்கிய வாசகர்களில் சிலருக்கு அவ்வையார் என்கிற பெயரில் எட்டுக்கும் மேற்பட்டோர் பாடல் புனைந்துள்ளனர் என்கிற செய்தியே புதிதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வை என்னுள் விடாது வினைபுரிந்து வருபவள். பட்டியலைக் கருதாமல் தரத்தைக் கருதி நோக்கினால் “உறுமீன்களற்ற நதி” என்பதே என் முதல் கவிதைத் தொகுப்பு. அவ்வையின் வரியிலிருந்து துள்ளி விழுந்த தலைப்புதான் இது. என் முதல் உரைநடை நூல் “அதனினும் இனிது அறிவினர் சேர்தல்” அதுவும் அவள் அருளியதே. சமீபத்தில் நான் எழுதி முடித்திருக்கும் கட்டுரைத் தொடரின் தலைப்பு “நாட்படு தேறல்“. “தேள் கடுப்பன்ன நாட்படு தேறல்” என்கிறாள் அவ்வை. என் கவிதை, கட்டுரைகளுள் நுனிகித் தேடினால் மேலும் சில இடங்களில் அவ்வை தென்படக்கூடும். இப்படி ஏதோ ஒரு வகையில் என்னோடு இருந்து கொண்டே இருக்கிறாள் அவள்.
வாசிக்க வரும் முன்னே அவ்வையின் மீது பெரிய ஈர்ப்பு இருந்தது. அதற்குக் காரணம் கே.பி. சுந்தராம்பாள். தமிழர்க்கு அவரே அவ்வை. அவரன்றி இன்னொரு உருவில் அவ்வையைக் காண நம்மால் முடிவதில்லை. அவர் பாடும் சினிமாப் பாடல்களையும் அவ்வையின் பாடல்களாகவே நாம் கற்பித்துக் கொள்வதுண்டு. நானும் இளங்கோவும் எத்தனையோ முறை “உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு” என்கிற வரிக்கு அரற்றிக் கொண்டு அழுது திரிந்திருக்கிறோம். கடவுளையே அதட்டும் ஒரு மொழியிலிருந்து பிறந்து வந்திருக்கும் கவிகள் நாம் என்கிற இறும்பூதின் கனம் தாளமாட்டாத கண்ணீர் அது.
“எத்திசை செலினும் அத்திசைச் சோறே” என்கிற அவ்வையின் கோபத்தை இவ்வரியில் பன்மடங்காகப் பெருக்கியுள்ளார் கண்ணதாசன். என் வாத்தியார் சுகுமாரனுக்கு நான் அனுப்பிய முதல் குறுஞ்செய்தி இது… “உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கம் தளர்ச்சியில் விழலாகுமா , மகனே! சந்தனம் சேராகுமா?”. பதட்டமும், பரவசமும் நிறைந்த குரலில் அவரிடம் இருந்து உடனடியாக வந்த அழைப்பு இன்னும் நினைவில் இருக்கிறது. ” தருவதற்கொன்றுமில்லை.. தலைவனே எனை ஆதரி!” என்று கே.பி.எஸ் உடையும் தருவாயில் நான் ஒரு பூரண பக்தன்.
அவ்வை என்கிற சொல்லில் கே.பி.எஸ் இருப்பது போலவே என் பாட்டியும் இருக்கிறாள். பெயர் பேச்சியம்மாள். அவளுக்கு கொஞ்சம் கே.பி. எஸ்ஸின் சாயல். இல்லை, அப்படியில்லை அவள் ரொம்ப குள்ளம். ஆனாலும் அவள் கே. பி. எஸ் தான் எனக்கு. “யாருக்கும் வாழ்வுண்டு, அதற்கொரு நாளுண்டு அதுவரை பொறுப்பாயடா, மகனே! என் அருகினில் இருப்பாயடா..!” என்று பாடுவது என் பாட்டியேதான். பாட்டிகளுக்கெல்லாம் ஒரே சாயல் தான் என்று நினைக்கிறேன். வாழ்வை ஒரு சுற்று பார்த்து வந்துவிட்ட ஆசுவாசம் அவர்கள் மடியில் உண்டு. பெற்றோர்கள் ஓட்டப் பந்தயத்தில் மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருப்பவர்கள், நம்மையும் அவர்களோடு ஓடி வர நச்சரிப்பவர்கள். அவர்களிடம் இல்லாதவைகள் பாட்டிகளிடம் உண்டு. கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த கிழத்தரு நிழல்கள் அவர்கள்.
இத்தொடரில் நாம் காண இருப்பது என் பாட்டியை அல்ல. சுந்தராம்பாளை அல்ல. அவ்வையைத்தான். அவளது வியக்கச் செய்யும் கவித்துவத்தைத்தான். ஆயினும் அவ்வை என்றால் எனக்கு இவ்வளவு உணர்ச்சிகளும் பொங்கியடிக்கவே செய்கின்றன. பிற இருவரும் கூட ஏதோ ஒரு வகையில் இத்தொடருக்கான காரணங்கள்தான்.
தமிழ் மரபில் எட்டுக்கும் மேற்பட்ட அவ்வைகள் வாழ்ந்து மறைந்ததாக சொல்லப்படுகிறது. சங்கப்பாடல்களைப பாடியவள் முதல் அவ்வை. தனிப்பாடல்களில் கம்பனோடு பூசல் செய்பவள் இரண்டாம் அவ்வை, ஆத்திசூடி , கொன்றை வேந்தன், மூதுரை , நல்வழி என்று நீதி சொல்லிப் பாடியவள் மூன்றாவது. விநாயகர் அகவலும், திருக்குறளைப் போல் அவ்வைகுறளும் பாடியவள் நான்காவது. நிகண்டுகள் செய்தவள் அடுத்தவள். ஆறாமவள் அசதிக் கோவை, பந்தன் அந்தாதி, பெட்டகம் போன்ற நூல்களை யாத்தவள் . கல்வி ஒழுக்கம், கணபதி ஆசிரிய விருத்தம், வேழமுகம் ஆகிய நூல்களை எழுதியவள் ஏழாமவள். எட்டாம் அவ்வை நீதி ஒழுக்கம், தரிசனப்பத்து எழுதியவள். இப்படி எட்டு அவ்வையரை முன்வைக்கிறது தமிழறிஞர் தாயம்மாள் அறவாணன் எழுதிய “அவ்வையார் படைப்புக் களஞ்சியம்” என்கிற நூல்.
புகழ்பெற்ற ஒரு கவிஞரின் பெயரை பின்னால் வந்தவர்கள் சூட்டிக் கொண்டிருக்கலாம் அல்லது தனது பாக்களை புகழ் மிக்க ஒருவரின் பெயரால் உலவவிடும் உத்தியிலும் இவ்வளவு அவ்வைகள் பிறந்திருக்கலாம். அவ்வைகளின் பிறப்பு குறித்த தகவல்கள் ஏதும் உறுதி செய்யப்பட்டிராத நிலையில், பின்நாளைய அவ்வைகளில் ஓரிருவர் ஆண்களாக இருக்கவும் வாய்ப்புண்டு என்று சந்தேகிக்கவும் இடமுண்டு. “பெட்டகம்” என்கிற நூல் ‘பெண்களை நம்பாதே’ என்பதையே வலியுறுத்திச் சொல்கிறது
அவ்வை குறித்த ஆய்வு நூல்கள் சில இன்று வாசிக்கக் கிடைக்கின்றன. அவள் குடி பாணர் குடியா? என்பது துவங்கி அவை ஆராய்கின்றன. அவ்வை பெயரில் பெண்கள் நோன்பு நோற்கிறார்கள். செல்வம் பெருக்கித்தரும், குழந்தை வரம் அருளும் தெய்வமாகிவிட்டாள் அவள். இது போன்ற தகவல்களுக்குள் அதிகம் நுழையாமல் அவள் கவித்துவத்தில் இன்புறுவதையே முதன்மை நோக்கமாகக் கொள்கிறது இத்தொடர்.
“சங்கத்தமிழ் மூன்றும் தா..” என்கிற பிரார்தனையில் ஒரு தமிழ் மாணவனாக எனக்குச் சிக்கல் ஒன்றுமில்லை. ஆனால் பிற்காலத்து அவ்வைகளிடம் காலத்திற்கு ஒவ்வாத பிற்போக்கு வரிகளும் சில உண்டு. இன்று அவற்றை ‘களிப்பா’ என்று மெச்சிவிட முடியாதுதான்.
முடிந்த வரை அவ்வை சொல்லின் அத்தனை அழகுகளையும் அள்ளி எடுத்துவிட வேண்டும் என்பதே என் விருப்பம். சங்க இலக்கியத்தில் அவ்வை பாடியுள்ள அகப்பாடல்களிருந்து நமது பயணத்தைத் தொடங்குவோம்…
( தொடரும்..)
*
VERY NICE INTRO.