விண்ணினும் மண்ணினும்: ”பெண்ணெழுத்து – ஓர் உலகளாவிய பார்வை” : சுசித்ரா

பகுதி 1: இணைக்கும் கயிறுகள்

மனிதவரலாற்றின் எழுதப்பட்ட வரலாற்றுக்கு முந்தய காலக்கட்டத்தை கற்காலம் என்று நாம் அறிவோம். இந்த காலத்தில் மனிதன் பயன்படுத்திய விதவிதமான கற்கருவிகள் இன்று அந்த யுகத்தின் எச்சங்களாக நமக்கு கிடைக்கின்றன. மானுட ஆதி வரலாற்றின் 3.5 மில்லியன் ஆண்டு காலத்தை மொத்தமாகவே ‘கல்’ என்ற ஒற்றைப் பொருளில் நாம் சுருக்கிவிடலாம். இன்று நம் அருங்காட்சியகங்களில் ஆதி மனிதனைப் பற்றி அறியும் நோக்குடன் ஓர் உலா வந்தால் கிடைக்கும் உணர்வு – கற்குவியல்! நெருப்பு மூட்ட கல். உணவருந்த கல். கருவிகளும் ஆயுதங்களும் கல். எங்கோ ஆதி மனிதனுக்கு கல்லே ஓர் உருவகமாக மாறுகிறது. அவனையும் கடுமையானவனாக, திண்மையானவனாக, கூரியவனாக நாம் உருவகிக்கிறோம். கல் போல் மென்மையற்றவனாக, நாகரீக நவிசுகள் இல்லாதவனாக கற்பனை செய்கிறோம். ஊடகத்தில் குகைமனிதன் இவ்வாறே சித்தரிக்கப்படுகிறான்.

ஆனால் இந்த சித்திரம் முழுமையானதல்ல. கற்காலத்தை கற்காலம் என்றே அழைக்கலாமா என்னும் அளவுக்கு சந்தேகம் எழுப்பக்கூடிய ஓர் ஆய்வு 2018-ஆம் ஆண்டு ஃபிரான்சில் நடைபெற்றது. நியாண்டர்தால் மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகளின் கரகரப்பான மேல்பரப்பை நவீன நுண்ணோக்கிகளைக்கொண்டு சோதித்த ஆய்வாளர்கள், கல்லில் சணல் மற்றும் பருத்தி நாரின் சிறு துகள்கள் ஒட்டியிருப்பதை கண்டனர். மேலும் ஆராய்ந்தபோது நார் மட்டும் அல்ல, சணலையும் பருத்தியையும் திரித்து செய்யப்பட்ட மெல்லிய கயிறுகளின் எச்சங்களும் கற்களில் இருந்ததை கவனித்தார்கள். கல்லுடன் இணைந்து கயிறும் கிடைத்தபடி இருந்தது. இதன் பிறகு கற்காலத்தின் சித்திரம் மாறியது. கற்காலம் கற்களாலான உலகம் மட்டும் அல்ல. கல் அளவுக்கே சணலும் பருத்தியும் நூலாக கயிறாக உபயோகிக்கப்பட்ட ஓர் உலகம் அது என்று தெரியவந்தது. கற்காலம் கற்காலம் மட்டும் அல்ல, அது கயிறுகாலமும் கூட என்ற முடிவுக்கு வந்தார்கள்.

இப்படி முழுமைப்படுத்தும் ஆய்வு நோக்குகளில் ஒரு விவேகம் உள்ளதென்று நினைக்கிறேன். மனிதனை மேலும் முழுமையாக உணர்ந்துகொள்ள அவை வழிவகுக்கின்றன. கல் அளவுக்கே கயிறும் மானுட நாகரீக முன்னேற்றத்துக்கு முக்கியமான பொருள். கல் அளவுக்கே வலுவானது. ஆனால் கல்லைப்போல் அல்லாமல் நெகிழ்வானது. மனிதனால் கல்லை எரிய முடியும். ஆனால் மேலும் தூரமாக, மேலும் துல்லியமாக குறிநோக்கி எரிய நெகிழ்வான கயிறு கொண்ட கவண் தேவையாகிறது. கயிறுஉற்பத்தியே மனிதனிடம் மிகுந்த புத்திகூர்மையை, விரல் நுணுக்கத்தை கோரியிருக்கும். மனிதர்கள் கூடி வாழ்ந்த ஒரு பின்னணியில்தான் விரிவான கயிறு உற்பத்தி சாத்தியமாகியிருக்கும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கயிறையும் கல்லையும் கொண்டு மனிதன் மேலும் பலவகையான கருவிகளை உருவாக்கியிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். ஆனால் அந்த காலத்தின் சான்றாக கல் மட்டுமே எஞ்சுகிறது. கற்களை இணைத்த, கல்லெனும் பண்பாட்டை இணைத்த கயிறு, காலத்தில் மட்கி மறைந்துவிட்டது.

இந்தச் செய்தி மானுட வரலாற்றை புரிந்துகொள்ள ஒரு நல்ல உபமானம். வரலாற்றில் எஞ்சி வரும் குரல்கள் கற்கள் போன்றவை. திண்மையானவை, வலுவானவை, கூர்மையானவை. அவற்றை இணைக்கும், வரலாற்றின் ஊடுபாவை உருவாக்கும் கயிறுகளைப்போன்ற குரல்களும் இருக்கின்றன. காலத்தில் மறக்கப்பட்டுவிட்டாலும், மானுடத்தை முழுமையாக புரிந்துகொள்ள நாம் அந்தக் குரல்களுக்கும் செவி மடுக்க வேண்டும். 

பெண்களின் எழுத்தின், சிந்தனையின் வரலாற்றை ஒரு கட்டுரைத்தொடராக எழுதச்சொல்லி நண்பர் ரம்யா கேட்டுக்கொண்ட போது இந்த இணைவையே எழுதிப்பார்க்க வேண்டும் என்று தோன்றியது. 

கல்லிலிருந்து கயிறுகளின் எச்சங்களை கண்டடைந்து கல்லும் கயிறுமான ஒரு முழு நாகரீகத்தை  உருவகிப்பதுபோல், ஒவ்வொரு காலகட்டத்திலிருந்தும் பெண்களின் குரல்களை எழுப்பிக்கொண்டு மைய வரலாற்றுடன் தொகுத்து அதன் வழி மானுடச் சிந்தனை தொகுப்பை மறு உருவாக்கம் செய்வதென்பது பெரும் பணி. அந்தப் பெருமுயற்சியில் ஒரு சிறு நகர்வாக இந்தக் கட்டுரைத்தொடர் அமையவேண்டுமென்று விழைகிறேன்.

*

இந்தத் தொடரை தொடங்குவதற்கு முன், சில ஆரம்பகட்ட வரையறுத்தல்களை செய்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

இந்தக் கட்டுரைத் தொடரின் வாயிலாக ‘மானுடப் பண்பாட்டில் பெண்களின் சிந்தனையின் பங்கு என்ன?’ என்ற கேள்வியை எழுப்பிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மையப் பண்பாடு, பெண்களின் பண்பாடு என்று இரண்டு பண்பாடுகள் இருப்பதாக நான் எண்னவில்லை, அப்படி ‘பெண்களின் உலகை’ தனியாக எழுதுவதில் எனக்கு அதிக ஆர்வம் இல்லை. மனிதனின் சிந்தனை என்பது மானுடப்பொதுவானது. அந்த ராஜ பாதையின் சித்திரத்தை மேலும் முழுமையாக்க முடியுமா என்றே நான் முயற்சிக்கப் போகிறேன். 

இந்தத் தொடரில் ‘பெண்’ என்று சொல்வது யாரை? நகைப்புக்குரிய கேள்வியாக இருக்கலாம். ஆனால் நாம் வாழும் பின் நவீனத்துவ காலகட்டத்தில் ‘பெண்’ என்றால் சமூகம் உருவாக்கிய ஒரு வெளிப்பாட்டு நிலைக்கு மொழி சூட்டும் பெயர் மட்டுமே என்று வாதாடுபவர்கள் இருக்கிறார்கள்.  இந்தத் தொடரை பொறுத்தவரை பெண் என்பவளை நான் ‘குழந்தை பெற்றுக்கொள்ள சாத்தியமுடைய மானுட உயிர்’ என்றே வரையறை செய்கிறேன். பெண்ணின் தனித்துவத்தை குறிப்பது மட்டுமல்ல அவள் சமூக இடத்தையும் தீர்மானிக்கும் பண்பு இது. வரலாற்று ரீதியாக பெண்களின் சிந்தனையை ஆராய இந்த வரையறை அவசியமாக இருக்கிறது.

*

இன்றிலிருந்து 5500 ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது பொ.மு. 3400 வாக்கில், மனிதர்கள் முதன்முதலாக எழுத்து வழியாக மொழியை கடத்த ஆரம்பித்தார்கள். இதையே பதிவுசெய்யப்பட்ட வரலாற்றின் தொடக்கம் என்கிறோம். மெசொப்பொடேமியாவிலும், எகிப்திலும், பின்னர் சீனாவிலும் சிந்து சமவெளியிலும் எழுத்துருக்கள் உருவானதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. 

மனிதர்களின் ஆரம்பகட்ட எழுத்துகளில் நமக்கு கிடைப்பவற்றில் கணிசமானவை கணக்கெழுத்துக்கள். பதிவேடுகள். அலுவல் தொகுப்புகள். எழுத்து உருவானதைப்பற்றி ஒரு பழைய சுமேரிய கதைப்பாடல் இவ்வாறு சொல்கிறது – ‘செய்தி கொண்டு போனவனின் வாய் சொற்களை உள்ளே போட்டுப்போட்டு கனமாகிவிட்டது. ஆகவே கடவுள் அவனுக்கு ஒரு களிமண் பலகையை கொடுத்தார். அவனால் சுமக்கமுடியாத வார்த்தைகளை அதில் இறக்கி வைத்தான்’. மனிதன் மனத்தில் மட்டுமே சுமக்கமுடியாத கணக்குகளை இறக்கி வைக்கவே எழுத்து உருவாக்கப்பட்டது போல. 

லௌகீக கணக்குகளை மட்டும் அல்ல, மனிதன் தெய்வங்களுடனான தன் கணக்குகளையும் எழுத்தாகத்தான் எழுதி வைத்தான். நெறிகளை வலியுறுத்தும் கட்டளைகளை, தெய்வத்தை நோக்கிய பாடல்களை, துதிகளை. இவற்றின் ஆசிரியர்களில் மானுட நாகரீகத்தின் விடியலில் நாம் முதன்முதலாக சந்திக்கும் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் கண்டுகொள்கிறோம். இந்த நிரையில் குறிப்பிடத்தக்க பெண் படைப்பாளிகள் இடம்பெறுகிறார்கள். அப்படி அவர்கள் இடம்பெறுவது மட்டும் ஆச்சரியத்துக்குரிய விஷயம் அல்ல. அந்தக்குரல்களில் ஒரு குறிப்பிட்ட வகையான விசித்திரக் கனவு இருக்கிறது. நாம் இன்று இங்கே நின்றபடி சுவீகரிக்கக்கூடியது அந்தக் கனவைத்தான்.

மானுட வரலாற்றில் நமக்கு பெயர் தெரிந்த முதல் எழுத்தாளராக கருதப்படுவது மெசொபொட்டேமியாவின் சுமேரிய நாகரீகத்தைச் சேர்ந்த என்ஹெடுவான்னா (Enheduanna) என்ற பெண். பொ.மு. 2270-ஐ ஒட்டி வாழ்ந்தவரென்று கருதப்படுகிறார். இவர் ஓர் இளவரசி, அக்காட் சார்கோன் என்ற வலுகொண்ட சுமேரிய மன்னனின் மகள். சுமேரியாவின் தெய்வங்களில் ஒன்றான நின்னா என்ற நிலா தெய்வத்தின் முதன்மை பூசகியாக இவர் இருந்தார். சுமேரியாவின் முதன்மையான பெண் தெய்வமான இன்னானாவை போற்றி இவர் ஒரு துதிகவிதையை இயற்றியதாக நம்பப்படுகிறது.  ஒருவேளை நமக்கு பெயர் தெரிந்த முதல் கவிஞராக என்ஹெடுவான்னா இருக்கக்கூடும்.

இன்னானாவின் போற்றல் (Exaltation of Inanna) என்ற அந்தப்பாடலுக்குப் பின்னணியாக ஒரு சிறிய கதைக்களம் உள்ளது. அது வரலாற்று உண்மையை இன்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது, ஆனால் பாடலுக்கு மிகவும் வலு சேர்க்கிறது. என்ஹெடுவான்னா வகித்த உயர்ந்த இடத்தின் மீது பொறாமை கொண்டு அவர் எதிரிகள் அவருக்கு எதிராக அரசியல் சதி நடத்துகிறார்கள். அவரை அவமதித்து நாடுகடத்துகிறார்கள். வஞ்சமும் சீற்றமும் கொண்டு தன் எதிரிகளை பழிவாங்க வேண்டி என்ஹெடுவான்னா இன்னானா தேவியை நோக்கி இந்தப் பாடலை எழுதுகிறார். ‘போற்றுதலுக்குரிய பெரியவளே, குழந்தையை அன்னை பெறுவது போல் இந்தப் பாடலை நான் உனக்காக பெற்றெடுத்துள்ளேன்,’ என்கிறாள். ‘தொழுநோயாளிகளுக்கிடையே என்னை கடத்திவிட்டார்கள். என் ஒளியெல்லாம் மங்கிவிட்டது. இனிய பாடல்களைப்பாடும் என் நா குழறுகிறது’ என்று தன் நிலையை பாடுகிறார். இன்னானாவின் மாபெரும் வெற்றியை சித்தரித்து அவர் எதிரிகள் அடையப்போகும் துன்பங்களையும் அணு அணுவாக விவரிக்கிறார். ‘உன் சாபத்தை பெறப்போகும் இந்நகரத்தில் வீறிட்டு அழும் குழந்தை கூட தன் அன்னையால் ஆற்றுப்படுத்தப்படாமல் போகட்டும்!’ என்ற பயங்கரமான வரி இடம்பெறுகிறது. பிறகு இன்னானாவின் அருளால் என்ஹெடுவான்னா தான் அடையப்போகும் வெற்றியை கொண்டாட்டத்துடன் சித்தரிக்கிறாள். இந்தக்கவிதையின் முடிவில் நம்முடைய ‘போற்றி போற்றி’ என்று முடியும் துதி பாடல்களைப்போன்ற ஒரு பகுதி இடம்பெறுகிறது. இந்த இடத்தை கடக்கும் போது அது தேவி இன்னானாவை போற்றுகிறதா, என்ஹெடுவான்னாவை போற்றுகிறதா என்ற கலக்கம் நமக்கு ஏற்படுகிறது. 

நீ விண்ணினும் உயர்ந்தவள் – என்று அறியப்படட்டும்

நீ மண்ணினும் பெரியவள் – என்று அறியப்படட்டும்

நீ எதிரிகளை அழிப்பவள் – என்று அறியப்படட்டும்

அவர் பிணங்களை நாய்போல் உண்பாய் – என்று அறியப்படட்டும்

      உன் பார்வை பயங்கரமானது

      உன் பார்வையை நீ உயர்த்திவிட்டாய்

      உன் கண் துடிக்கிறது – 

என்று அறியப்படட்டும்

          அறியப்படட்டும்

         அறியப்படட்டும்!

எழுத்தாளர் சுசித்ரா

பொதுப்பார்வையில் பெண்கள் வீட்டுக்குகந்தவர்களாக, லௌகீகத்தை வழி நடத்துபவர்களாக பார்க்கப்பாடுகிறார்கள். ஆனால் என்ஹெடுவான்னாவில் தொடங்கி வரலாறு நெடுக பெண்களுக்கு பூசகிகளாக, குறிசொல்லிகளாக, தீர்க்கதரிசிகளாக (priestess, soothsayers, oracle) ஒரு இடம் இருந்துவந்துள்ளது. இந்த இடத்தில் அவர்கள் நடைமுறையை விட பல மடங்கு பெரிய ஆளுமைகள் கொண்டவர்களாக, அதீதமானவர்களாக வெளிப்படுகிறார்கள். தெய்வத்தின் பூசகிகளான அவர்களும் கிட்டத்தட்ட தெய்வங்களாகவே வணங்கப்படுகிறார்கள். இவர்கள் தெய்வங்களின் சொற்களை பூமிக்குக் கொண்டு வருபவர்களாக கருதப்படுகிறார்கள். தெய்வமும் சுயமும் எல்லைகளிழந்து கலக்கக்கூடிய இடத்தின் ஆவேசம் இவர்களுடைய சொற்களில் கைகூடுகிறது. சுயத்தின் சரடுகள் அறுபட்டு அப்பால் எங்கேயோ நிற்கிறார்கள் இக்கவிஞர்கள். 

வேத மரபில் இபப்டிப்பட்டவர்களுக்கு ஒரு பெயர் உண்டு, ரிஷி. ரிஷி என்றால் காண்பவர், கண்டு பரவசமடைபவர் என்று அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. இந்திய சமநிலத்தில் வேத காலம் பொ.மு. 1500 வரையறுக்கப்படுகிறது. வேதகால ரிஷிகளின் வாக்கு எழுத்து வடிவமாக கடத்தப்படவில்லை. உச்சாடனமாக கடத்தப்பட்டது, இன்று வரை கடத்தப்படுகிறது. 

இன்று வேதம் என்று சொல்கையில் இரண்டு அர்த்தங்கள் தொனிக்கின்றன. ஒன்று அதை வழிபடுபவர்கள் சொல்வது போல் தெய்வீகமான, மானுடப் பங்கு இல்லாத ‘அபௌருஷேயமான’ நூல். அல்லது வரலாற்றின் போக்கில் உறைந்துவிட்ட அதிகாரத்தின் பிரதி. இருவகை முன்முடிவுகளும் இல்லாமல் வேதங்களின் மந்திரங்களை சூக்தங்களை இன்று நாம் திறந்த மனத்துடன் எடுத்துப் படித்தால் அவை கவித்துவ எழுச்சியுடன் இயற்கையை நோக்கி சொல்லப்படும் துதிகள் என்றே பொருள் படுகின்றன. சாரத்தில் இன்னானாவை போற்றும் பாடலுக்கு நெருக்கமானவை.

ரிக்வேதத்தில் பல ரிஷிகள் பெயர்களால் குறிப்பிடப்படுகிறார்கள். அதில் பல பெண் பெயர்கள் காணக்கிடைக்கின்றன. அவற்றுள் முக்கியமான பெயர் வாகம்பிரிணி என்ற ரிஷியினுடையது. அம்பிரிண ரிஷியின் மகளான வாக் என்பது இவர் பெயரின் பொருள். இவள் ஒரே ஒரு பாடல் எழுதியவள். ரிக் வேதத்தின் பத்தாம் மண்டலத்தின் 125-ஆம் பாடலான இது வாக் சூக்தம் என்று அழைக்கப்படுகிறது. 

வாக் சூக்தமும் ஒரு துதிப் பாடல். ஆனால் இதில் மிகத் தனித்துவமான விஷயம், இந்தப் பாடல் மொத்தமும் தன்னிலையில் எழுதப்பட்டது. இதில் ஆசிரியர் தன்னைத்தானே துதித்துக்கொள்கிறார். என்ஹெடுவன்னாவின் கவிதையில் தெய்வமும் சுயமும் எல்லைகளிழந்து கலக்கக்கூடிய ஆவேசம் உள்ளது; வாகம்பிரிணியின் கவிதையில் சுயமே தெய்வமாகிறது.

நான் ருத்ரர்களுடனும் வசுக்களுடனும், ஆதித்தியர்களுடனும் விஸ்வதேவர்களுடனும், மித்ர-வருணனோடும் இந்திர-அக்னியோடும் உலவுபவள்’ என்ற சற்று அதீதமான கூற்றுடன் பாடல் தொடங்குகிறது. ஆனால் கூற்று மேலும் மேலும் அதீதமாகிப்போகும் வார்ப்புடைய கவிதை இது. ‘நான் அரசி, மங்களங்களும் செல்வங்களும் திரட்டுபவள், பிரக்ஞை வடிவானவள், முதன்மையாக வணங்கத்தக்கவள்,’ என்று சொல்லிச்செல்லும் ஆசிரியர், ஒரு கட்டத்தில் பெரும் சமரில் பொருதி ருத்ரனின் வில்லை வளைத்து வெற்றியடைகிறாள். அதன் பிறகு சொல்கிறாள் – 

நான் விண்ணையும் மண்ணையும் நிறைத்துவிட்டேன்.

மலைச்சிகரத்தில் என் தந்தையை நான் பெற்றெடுக்கிறேன்

என் பிறப்பிடமோ கடலாழத்தில்.

அங்கிருந்து நான் வளர்ந்து வளர்ந்து

உலகிலெல்லாம் இவ்வுயிர்களிலெல்லாம்

பரவிப்பரவி

வானுயர ஓங்கி நின்று

தொட்டுவிட்டேன் அந்த உச்சத்தை.

வாடையென வீசும் என் மூச்சுக்காற்றினால்

நான் மட்டுமே

இவை அனைத்தையும் வடித்தெடுக்கிறேன்.

ஆகவே விண்ணையும் மண்ணையும் மீறிய பெரியோளாக,

பெருமாண்பு பொருந்தியோளாக திகழ்கிறேன்.

*

என்ஹெடுவான்னாவின் கவிதையிலும் வாகம்பிரிணியின் கவிதையிலும் சில பொதுவான அம்சங்களை காணலாம். ஒன்று, வலிமை பொருந்திய அதீத கூற்று. இரண்டு, ஆசிரியரின் சுயம் அந்த அதீதங்களுடன் இணையும் புள்ளி. மூன்று, விண்ணும் மண்ணுமென அவர்கள் ஆகி நிற்பது. ‘நீ விண்ணினும் உயர்ந்தவள் என்று அறியப்படட்டும், நீ மண்ணினும் பெரியவள் என்று அறியப்படட்டும்’ என்று என்ஹெடுவான்னா இன்னானாவை நோக்கி பாடுகிறாள். ‘நான் விண்ணையும் மண்ணையும் நிறைத்துவிட்டேன், கடலாழத்தில் பிறந்து மலைச்சிகரத்தில் என் தந்தையை பெற்றெடுக்கிறேன்’ என்று வாகம்பிரிணி கூறுகிறாள். மனித நாகரீக விடியலிலிருந்து நமக்கு இத்தனை காலம் தாண்டி வரும் இந்தப் பெண் குரல்கள் நம் முன் வைக்கும் சாத்தியம் என்ன?

மானுட வரலாற்றின் தத்துவ சிந்தனைப் போக்கை எடுத்துப் பார்த்தால் இரண்டு வகையான தத்துவங்களை காணலாம். இவ்வுலக வாழ்க்கையை, இம்மையை, மையப்படுத்தும் தத்துவங்கள். விண்ணுலக வாழ்க்கையை, மறுமையை மையப்படுத்தும் தத்துவங்கள். இந்தக் கவிஞர்கள்

மண்ணை நிறைப்பவர்கள் மட்டும் அல்ல. விண்ணுக்கு எழுந்து செல்பவர்கள் மட்டும் அல்ல. மண்ணென்றும் விண்ணென்றும் ஆகின்றவர்கள், மண்ணிலிருந்து விண்ணுக்கு ஒளிமிக்க பாலம் அமைப்பவர்கள். ஆம், விண்ணினும் மண்ணினும் பெரியவர்களாக உணர்வதன் வழியாக மண்ணையும் விண்ணையும் இணைக்கும் கயிறுகளாகவும் ஆகிறார்கள். 

பெண்ணெழுத்தின் உச்ச சாத்தியங்களில் ஒன்றாக நான் காண்பது, அதன் தொடக்கத்திலேயே வெளிப்பட்ட விண்ணையும் மண்ணையும் இணைத்துப்பார்க்கும் இந்தப் பெரு நோக்குதான். இது தொடர்ந்து பெண்ணெழுத்தில் எவ்வாறெல்லாம் வெளிப்பட்டுள்ளது? வரலாற்றில் மற்ற சிந்தனைகளோடு எப்படி இயங்கி வந்துள்ளது? என்பவை சுவாரஸ்யமான கேள்விகள்.

(…தொடரும்)

எழுத்தாளர் சுசித்ரா: சுசித்ரா: தமிழ் விக்கி பக்கம்

3 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *