களிநெல்லிக்கனி – அயோத்திதாச பண்டிதரும் ரா.ராகவையங்காரும்

ஒளவை (ஓவியம்: அருண்)

அவ்வையின் ஆத்திசூடிக்கு ஆறுமுக நாவலர் உட்பட பலரும் உரை செய்துள்ளார்கள். இங்கு அயோத்திதாசபண்டிதர், ரா.ராகவையங்கார் (1870- 1946) இருவரின் உரைகளும் ஆராயப்படுகின்றன. அய்யங்கார் உரை  அவர் இறக்கும் வரை அச்சாகவில்லை. ஆகவே அவர் எழுதிய காலத்தை அறிய முடியவில்லை. ஒன்றுக்கொன்று எதிர்வினை போல் அமைந்த உரைகளா என்பதை அறிஞர்கள் ஆராயலாம்.  சில பாடல்களுக்கு வெவ்வேறு பார்வைகளை முன் வைக்கும் உரைகள் இவை.

ஆத்திசூடி –  ரா. ராகவையங்கார்

அவ்வையின் ஆத்திசூடி அதன் ஒற்றை வரிகளால் பிரபலமானது. சிறுவர்களைக் கருதி, அவர்கள் எளிதாக மனனம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டது.  உபதேசிக்கிற தொனியில்,  உறுதியான கருத்துக்களால் ஆக்கப்பட்டது என்பதால்  இயல்பாகவே இலக்கியச் சுவையற்றது.

இதற்கு ஆறுமுகநாவலர் எழுதியுள்ள உரை காலத்தால் முற்பட்டது என்று சொல்கிறார்கள். அரும்பதவுரையுடன் கூடிய அதிக பட்சம் நான்கு வரிகளால் ஆன உரை இது. எளிமையானது. சிக்கலற்றது. ஆத்திசூடிக்கு ரா.ராகவையங்கார் ஒரு உரை எழுதியுள்ளார். தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. நீங்கள் இதைத் தேடி காடு மலை கடக்க வேண்டியதில்லை. 6 MB செலவில் இணையத்தில் கிடைக்கிறது.  ஒவ்வொரு செய்யுளுக்கும்   விரிவாக உரை எழுதி இருக்கிறார். உதாரணமாக “அறம் செய்ய விரும்பு” என்பதில் இவர் ” விரும்பு” என்கிற சொல்லின் மேல் குவிக்கிற கவனத்தைச் சொல்லலாம்.

பொதுவாக பழந்தமிழ் கவிதையின் வரிகளுக்கு உரை சொல்வோர் அந்த வரியை விளக்குவதற்காக, பிற இலக்கியங்களிலிருந்து அதை ஒத்த  வரிகளைச்  சொல்வது வழக்கம். அப்படிச் சொல்லிச் சொல்லி  உரை சொல்ல வேண்டிய  வரியை  துலக்கமாக்கிக் காட்டுவர். இது மரபுதான். ஆனால் இங்கு உரை சொல்லும் அளவு கடினமாக வரிகள் அவர் முன் இல்லை. ஆனாலும் அப்படிச் சொல்வதன் மூலம் அவர் ஆத்திசூடிக்கு சுவையூட்டுகிறார். அதை  இலக்கியமாக்குகிறார் என்று எனக்குத் தோன்றியது. அவரது பரந்துபட்ட வாசிப்பு அவரது உரையில்  தெரிகிறது. மொழிதான் கல்வெட்டை வாசிப்பது போல் உள்ளது.

ரா.ராகவையங்கார்

அறம் செய்ய விரும்பு (1)

“நீ அறஞ்செய்தற் பொருட்டு அறத்தை யன்பு செய்வாய் என்றவாறு”

இங்கு சில ஆத்தி சூடிகளையும் அதற்கு ராகவையங்காரின்  உரையில் காணப்படும் சில இணை வரிகளையும் பார்க்கலாம்.  அந்த இணை வரிகளை உறுதியாக ‘இன்புறுத்தல்’ என்று சொல்லாம்.

தெய்வ அச்சம் காரணமாகவும், புகழ் காரணமாகவும் அறம் செய்யாது விரும்பிச் செய்ய வேண்டும் என்று “விரும்பு” என்கிற சொல்லை அழுத்தி உரை சொல்கிறார்.

“திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும் சிதையா அறம்”

             -கம்பர்

இயல்வது கரவேல் (3)

உன்னால் இயன்றை உதவாது ஒளிக்காதே! என்பதே இதன் பொருள்.

“இயல்வது கரவேல்” என்பதற்குள்  இயலாததை முன்பே இல்லை என்று சொல்லி விடு’  என்பதும் உள்ளது.  இரப்பவர் நெஞ்சில் நம்பிக்கையை விதைக்காதே! தன்னால் இயலாத ஒன்றை இயலும் இயலும் என்று சொல்லித் திரிவது  ஒருவித சுயமோகம் என்று இழித்துரைக்கிறார்.

“இயலாததனை உண்டு என்றலும் ஒருவற்குத் தன்கணுள்ள அவாக் காரணமாகவே நிகழுமென்பது உய்த்துணர்ந்து கொள்க”

“இசையா ஒரு பொருள்  இல்லென்றல் யார்க்கும்
வசை அன்று வையத்து இயற்கை”

-நாலடியார்

உடையது விளம்பேல் (5)

தற்புகழ்ச்சி கூடாது.
இருந்தால் என்ன?

“…மருந்தின் தணியாத
பித்தென்றே எள்ளப்படும்”

 -நாலடியார்

ஏற்பது இகழ்ச்சி (8)

இரந்து ஏற்பது இகழ்ச்சி

“பரப்பு நீர் வையகந் தேரினும் இல்லை
இரப்பாரை எள்ளா மகன்”

                     -தகடூர் யாத்திரை

ஐயம் இட்டு உண் (9)

ஐயம் என்கிற சொல்லிற்கு ஆறுமுக நாவலர் “பிச்சை” என்று  அகராதி சொல்லும் பொருளைச் சொல்கிறார். ராகவையங்கார் “ஐயம்”  எனில் பாத்தூண் என்கிறார் அதாவது பகுத்துண்டல். பகுத்துண்டலை ‘அறச்சோறு ‘என்றும் குறிப்பிடுகிறார். இந்த வரிக்குள் பசியின்றி நல்வாழ்வு  வாழச்சொல்லும் வாழ்த்தும் ஒளிந்துள்ளது என்கிறார்.

“உண்பதன் முன் ஈவான்
எண்பதின் மேலும் வாழ்வான்”

-சிறு பஞ்ச மூலம்

ஒளவியம் பேசல் (12)

ஒளவியம் – பொறாமை

அழுக்கு சேறும் வழி என்பதால் “அழுக்காறு” என்றும் சொல்லப்படுகிறது.

“அழுக்காறெனும் ஒரு பாவி…”

-திருக்குறள்

ஒளவை

கண்டொன்று சொல்லேல் (14)

ஒன்று கண்டு ஒன்று சொல்லாதே

“சீராம மூர்த்தி சத்தியத்தானே உலகங்களை வெல்கின்றான்”

-வான்மீகி

ஞயம் பட உரை (17)

“நாவன்றோ நட்பறுக்குந் தேற்றமில் பேதை”

-நான்மணிக் கடிகை

வஞ்சகம் பேசேல் (27)

   “சொல்லான் அறிப ஒருவனை..”

-நான்மணிக் கடிகை

குணமது கைவிடேல் (36)

குணமே மதுகை. ஒருவற்கு வலியாவது அவன் குணமே.

“குணமென்னும் குன்று..”

         -திருக்குறள்

தையற்சொற் கேளேல் (63)

“தையல்பால் வைத்த அன்பின் மேலீட்டால் அவளுடைய சொல்லிற் குற்றம் தோன்றாது ஒழுகுவான் என்பது கருதி அதனை விலக்கினார். இது பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மகனையே நோக்கிற்று”

நீர் விளையாடேல் (69)

ஆறுமுக நாவலர் ஆழமான நீர் நிலைகளில் ஆபத்தாக நீராடாதே என்பது போல உரை சொல்கிறார்.

ராகவையங்கார் உரை இது..

“பிறருடைய நீர்மையாகிய செளலப்பிய குணத்தின்கண் நீ விளையாடுதல் செய்யற்க”

“செளலப்பியம்”  என்கிற சொல்லிற்கு எளிமை, எளிவந்த தன்மை என்று பொருள் சொல்கிறது அகராதி.

தமிழ் எழுத்து வரிசை நீண்டு கொண்டே செல்வதால் அவ்வையின் உபதேசமும் நீண்டு கொண்டே செல்கிறது. ‘ந’ க்கு பிறகு ‘நா’ வந்தாக வேண்டிய கட்டாயம்.

உண்மையில் அடிப்படையான சில உபதேசங்களுக்குப் பிறகு உபதேசம் தீர்ந்து விடுகிறது. பிறகு உள் உபதேசங்கள், கூறியது கூறல்கள் என சலிப்பு படரத் துவங்குகிறது. ராகவையங்காரின் உரையும் மெல்ல மெல்ல உற்சாகம் குன்றித் தேய்ந்து செல்வதைக் காண முடிகிறது.

  “இயல்பலாதன செயேல்”  என்னும் ஆத்திச்சூடிக்கு ‘உன் வருணத்திற்கும் , நிலைக்கும் இயல்பல்லாதனவற்றைச் செய்யற்க என்றும்,  “சனி நீராடு” என்னும் செய்யுளுக்கு ‘கடுந்தீக் கோளான சனி கிரகத்தின் நீர்மைக்குத் தக்க ஒழுகுக’  என்றும் விளக்கம் சொல்கிறார். “மேன்மக்கள் சொற் கேள்” என்பதற்கு ” உயர்குடிப் பிறந்தாருடைய சொல்கைக் கேட்க” என்று உரை சொல்கிறார். இது போன்ற சில இடங்களில் அவர் பெயரின் பின்னொட்டு வேலை செய்கிறது. அங்கெல்லாம் புதுயுகத்தின் மனம் எரிச்சல் அடையவே செய்கிறது.

*

ஆத்திசூடி- அயோத்திதாச பண்டிதர்

ஒளைவை (ஓவியம்: அருண்)

அவ்வையின் ஆத்திசூடிக்கு அயோத்திதாச பண்டிதர் ஒரு உரை எழுதியுள்ளார். ஆனால் அவர் அதை ஆத்திசூடி என்கிற தலைப்பில் அழைப்பதில்லை. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நறுந்தொகை ஆகிய மூன்று நூல்களையும் உள்ளடக்கி ” திரிவாசகம்” என்றழைக்கிறார்.  திரிவாசகம் பெளத்த நெறிகளை உரைக்கும் திரட்டு. ” ஞானத்தாய் ஒளவையார் அருளிய திரிவாசகம்” என்பதே அவர் விளிப்பு. இதில் நறுந்தொகை என்கிற நூலை அதிவீரராம பாண்டியர் எழுதியதாகத்தான் பலரும் சொல்கிறார்கள். பண்டிதர்  “பலருக்கு” அஞ்சுபவர் அல்ல.

பண்டிதரைப் பொறுத்த மட்டில் அவ்வை ஒரு தெய்வம். சக்தி வடிவம். நமது கிராமங்களில் வேப்ப மரத்தடியில் அமர்ந்து அருள்பாலிக்கும் அம்மன்கள் யாவும் அவ்வைகள்தான்.

“புத்தரது போதனையையும், அவருவத்தையும் சிரசிற்றாங்கி வேப்ப மரத்தடியில் வீற்று ஞானோதயம் பெற்ற அம்பிகாதேவியை உலக நாயகியென்றும், உலக மாதாவென்றும், அறச்செல்வி என்றும், ஒளவை என்றும், அருகி என்றும், அம்மை என்றும், தரும தேவதை என்றும் வாலி என்றும், பகவதி என்றுங் கொண்டாடி வந்தார்கள்”

” ஒளவை என்னும் அம்பிகா தேவியோ எனின் ஓரரச புத்திரியாயிருந்தும் தாய்மாமன் கையால் கழுத்தில் பொட்டுக் கட்டிக்கொண்டு பிக்குணிகள் வாழும் இஸ்திரீகள் சங்கத்திற் சேர்ந்து புத்தபிரனாம் அருகனது ஞானசாதன உருவம் போல் ஓர் விக்கிரகஞ் செய்து தனது முடியில் தரித்துக் கொண்டு ஞானசாதனம் முதிர்ந்த பின்னர் வேம்பு மரமென்னும் பூக மரத்தடியில் வீற்று உலக மக்களுக்கு அறநெறி விளக்கி அரசர்கள் முதல் குடிகள் வரை அறச்செல்வி என்றும் அம்மையென்றும் பெளத்தர்கள்  கொண்டாடப் பெற்றவள் நமது ஞானத்தாய் என்னும் ஒளவையாகும்”

“அறம் செய்ய விரும்பு” அல்ல அது “அறன் செயல் விரும்பு ” என்கிறார் பண்டிதர். “அறன்” எனில் புத்தன். அவனது செய்லகளை விரும்பு என்பதாக உரை சொல்கிறார். இது போன்று பல இடங்களிலும் பெளத்தம் சார்ந்தே உரை சொல்லியுள்ளார். சில உரைகளைப் பார்க்கலாம்..

அயோத்திதாச பண்டிதர்

ஊக்கமது கைவிடேல் (6)

“வித்தையிலேனும், கல்வியிலேனும் ஊக்கமாயிருந்து அவற்றைக் கைவிடுவதாயின் எடுத்த முயற்சி ஈடேறாமல் போம்”

“எடுத்த முயற்சியைக்  கைவிடாது சாதித்துக் கைகண்ட தொழில்களாகும் இரயில்வே, டிராம்வே, டெல்லகிறாப், போனகிறாப், லெத்த கிறாப் முதலியத் தொழில்கள் யாவும் கைவிடா ஊக்கத்தினால் விருத்திப் பெற்றக் காட்சிகள் எனப்படும்”

சனி நீராடு (16)

“உலோக ஊற்றில் தேக முழுவதும் மழுந்த குளித்தெழுஉம்.”

பாலி மொழியில் சனி நீர் என்பதற்கு உலோக ஊற்று என்று அர்த்தமாம். இதில் நீராடினால் சர்வ ரோகமும் குணமாகுமாம்.  இந்த உலோக ஊற்றுகள் திருவேங்கடமென்னும் திருப்பதியிலும், கொரிய தேசத்திலும் இன்ன சில இடங்களிலும்  இருப்பதாக சொல்கிறார். 

இயல்பலாதன செயேல் (24)

“அதாவது தன்னாலியலாததும், தான் முன் பின் பாராததும், தன் அனுபவித்தில் வாராததுமாகிய செயலைச் செய்வதனால் தேகத்தைக் கஷ்டப்படுத்துவதன்றி திரவியத்தையும் நஷ்டப்படுத்தி விடுமென்றுணர்ந்து ஞானத்தாய் இயல்பில்லாதச் செயலை செய்யேல் என்று கூறியுள்ளாள்”

தையல் சொற் கேளேல் (62)

கொடூர வார்த்தைகளுக்கு செவி கொடாதே

எதிரிகள் சொல்லும் கொடூர சொற்களைக் கேட்காதிருப்பதே ஆனந்தமென்றும், கேட்டால் பகை மூண்டு, போர் செய்து, நிம்மதி இழக்க நேரிடும் என்றும் சொல்கிறார்

பண்டிதரை ஒரு அரைமணி நேரம் வாசித்து விட்டு வீதியில் இறங்கி நடந்தால் உலகமே தலைகீழாகத் தெரிகிறது. அவரது வாக்குத்திறம் அசர வைக்கிறது. பழந்தமிழ் இலக்கிய வாசிப்பின் சிக்கல் என்னவென்றால் அதைச் சென்று தொட நமக்கு உரையாசிரியர் உதவி தேவை என்பதுதான்.  உரைகள் பெருமளவு உண்மையேயொழிய முழு உண்மையல்ல. எழுதியவன் மனத்தை அப்படியே படம் பிடிப்பது இயலாத  ஒன்று. அவ்வை கொரியாவில் உள்ள உலோக ஊற்றில் நீராடச் சொல்கிறாள்  என்று பண்டிதர் சொல்லும் போது நமக்கு சிரிப்பு வருகிறது எனில்  ராகவையங்கார்  இயல்பு என்பதை “வர்ணம்”  என்று சொல்லும் போது நமக்கு எரிச்சலும் வந்தாக வேண்டுமல்லவா? எந்த உரையாசிரியர்களிடமும் இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்காத போது பண்டிதரிடம் மட்டும் கேட்பது சரியா என்பது குறித்த குழப்பம் எனக்கு இருகிறது. ” ஏற்பது இகழ்ச்சி” என்பதற்கு பண்டிதர் உரை இது…

“அதாவது ஒரு மனிதன் முன்னில்வந்து நான் பிரமா முகத்திலிருந்து வந்தவன் நானே பெரிய சாதியினனென்று கூறுவானாயின் அவன் வார்த்தையை மெய்யென்று ஏற்றுக் கொண்டு யாதொரு விசாரணையுமின்றி அவனைப் பெரிய சாதியோன் பெரிய சாதியோனென்று உயர்த்திக் கொண்டு தன்னைத் தாழ்ந்த சாதியாக ஒடுக்கி சகலத்திலும் முன்னேறுவதற்கில்லாமல் ஒடுங்கி தானே சீர் கெட்டு இழிவடைந்து போகின்றான்”

இந்த உரை எனக்குப் பிடித்திருக்கிறது. இதற்கு முந்தைய பாடல் ” எண் எழுத்து இகழேல்”. எழுத்தை இகழாதே ஆனால் யார் என்ன எழுதி வைத்தாலும் சரியென்று தலையாட்டி விடாதே என்பதில் ஒருவித  தர்க்க ஒழுங்கும் கூடியுள்ளது

அறிஞர் ஸ்டாலின் ராஜாங்கம் “பண்டிதரும் அய்யரும்” என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் ஒரு பெளத்த அன்பரின் புத்தர் சிலை குறித்த புரிதலுக்கு அய்யரின் கேலியைப்  பதிவு செய்துள்ளார். ” எனக்கு சுளுக்கென்று சிரிப்பு வந்து விட்டது” என்கிறார் அய்யர். “இவர் பெளத்த சமயத்தில் தீவிரமான ஆராய்ச்சிடையவர். அந்த ஆராய்ச்சியில் இவர் தம்மையே இழந்துவிட்டார். தாம் காணும் பொருள்களைப் புறம்பே நின்று பற்றின்றிக் காணுவதை விட்டு அந்தப் பொருள்களின் வசப்பட்டு மயங்குகிறார்”. ஸ்டாலின் இந்த நீளமான கட்டுரையில் அய்யார் வலியுறுத்தும்  “தான்” கலக்காத ஆய்வு முறையை அவராலேயே முழுமையாக பின்பற்ற முடியவில்லை என்று நிறுவ முயல்கிறார்.  எனக்கு இந்த “தான்” கலக்காத ஆய்வு முறைதான் சரி என்று படுகிறது. ஆனால் ஒரு மனிதனால் அவ்வளவு முழுமையாக தன்னைக் காலி செய்து கொண்டு விசயங்களை அணுக முடியுமா என்பது குறித்த சந்தேகமும் உள்ளது. அவனது உறுதிகளும், விருப்பங்களும் கொஞ்சமேனும் அவனோடு ஒட்டிக் கொண்டிருக்கும்  என்றே நினைக்கிறேன். 

பண்டிதர் பலமாக அடிக்கிறார். பந்துகள் எல்லைக் கோட்டிற்கு வெளியே, மைதானத்துக்கு வெளியே கிடக்கின்றன. ஆனால் இது முறையான ஆட்டமல்ல என்கின்றனர் சில அறிஞர்கள். இந்த விசயத்தில் கருத்து சொல்லுளவு  நான் அறிஞன் அல்ல.  பெரும்பான்மை தரப்பிற்கு மாற்றாக இன்னொரு வலுவான தரப்பும் உள்ளது என்பதை முன் வைப்பது மட்டுமே என் நோக்கம். ஆனால் ஒன்று உறுதி எத்தரப்பாக இருந்தாலும் வரலாற்றுத் திரிபென்பது உண்மைக்குக் கேடுதான்.

ஒளைவை

ஆத்திசூடியின் கடவுள் வாழ்த்தாவது…

“ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே”

ஆத்தி மாலை அணிந்த சிவபெருமானின் விருப்பத்திற்குரிய விநாயகப் பெருமானைப் போற்றி வணங்குவோம் என்பதே இதற்கான பெரும்பான்மை உரை. பண்டிதர் பாட வேறுபாடு சொல்கிறார்.

“ஆத்தி சுவட்டில் அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே”

இனி பண்டிதரும் நானும்..

“இசை, ஆத்தி என்றால் அரசமரம்”

“அப்படியா? ஆத்தி என்றால் ஆத்தி மலர் இல்லையா?”

“ஆத்தி என்றால் அது கல்லாத்தி. கல்லாத்தி என்றால் அது அரசமரம். அரசமரம் என்றால் அது ” அரசன் அமர்ந்த மரம் ” அரசன் என்றால் அது புத்தர்”

“ஓ!..சரி…”

“சுவட்டில் “எனில் நீழலில்”

“அது “சூடி” இல்லையா?”

“இல்லை ” சுவட்டில் ” தான்”

“சரி அய்யா”

“அமர்ந்த தேவனை – தேவன் எனில் ஆதிதேவன் அது புத்தனின் ஆயிரம் நாமங்களில் ஒன்று”

“அப்படியா?”

“அரசமர நிழலில் அமர்ந்த புத்த தேவனை தொழுது ஏத்துவோம்’

“அப்ப  அது விநாயகன் இல்லையா”

“விநாயகன் என்றாலும் புத்தர் தான்”

“அதுவுமா?”

“பிங்கல நிகண்டை பிரித்துப் பார்…”

“பார்க்கிறேன் அய்யா…பார்க்கிறேன்…  அப்படி ஒன்றும் இல்லையே அய்யா..”

“என்ன.. இல்லையா?”

“என்னிடம் இருக்கும் பிங்கல நிகண்டில் இல்லை அய்யா..”

“என்னிடம் இருந்ததில் இருந்ததே”

“இல்லையே அய்யா?”

“ இருந்ததே!”

இன்னொரு முறை நன்றாக பார்க்கிறேன் அய்யா… அய்யா இங்கு உள்ளது.. இதில்… சூடாமணி நிகண்டில்..

“ஏதோவொரு நிகண்டில் இருக்கிறதா இல்லையா…?

புருவத்தை நெரித்து குரலை உயர்த்துகிறார்.

“பாருங்கள் பண்டிதரே, நான் கவிதையைத் தேடி வந்தவன் என் அங்கராக்கையெல்லாம் இழுத்துப் பிடிப்பதால் ஒன்றுமே ஆகப் போவதில்லை”

கவிஞர் இசை

(நீலி இதழில் வெளியாகி வந்த ” களி நெல்லிக்கனி” கட்டுரைத் தொடர் இந்த இதழுடன் நிறைவடைகிறது. பிற்காலத்து ஒளவையார்களின் படைப்புகள் குறித்த கட்டுரைகளும் அடங்கிய முழு நூல் காலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக விரைவில் வெளிவரும்.)

*

கவிஞர் ஒளவையார்: தமிழ்விக்கி

கவிஞர் இசை: தமிழ்விக்கி

அயோத்திதாச பண்டிதர்: தமிழ்விக்கி

ரா.ராகவையங்கார்: தமிழ்விக்கி

2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *